Search This Blog

28.5.08

புரட்சிக் கவிஞரும், தந்தை பெரியாரும்





(தஞ்சை தமிழ்ப் பல் கலைக் கழகத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அறக் கட்டளை சார்பில் மொழிப் புலக் கருத்தரங்கக் கூட்டத்தில் நடைபெற்ற பாரதிதாசன் கருத்தரங்கில் தந்தை பெரியாரும் - புரட்சிக் கவிஞரும் எனும் தலைப்பில் துரை சந்திரசேகரன் படித்தளித்த கட்டுரை)

பாரதிதாசன் - இருண்டு கிடந்த தமிழ்நாட்டு இலக்கிய வானில் ஒளிச்சுடர் என இருளைக் கிழித்துக் கொண்டு வெளிக் கிளம்பிய ஞானசூரியன் மருண்டு வாழ்ந்திருந்த தமிழ் மக்களை மடமைகளிலிருந்து வெளிக்கொணர்ந்த விடி வெள்ளி தன்மான உணர்வின்றி தளர்ந்து கிடந்திட்ட தமிழர் தம் நீடு துயில், நீக்கப் பாடிவந்த - நிலா பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைப்போருக்கு சங்காரமே நிசம் என்று போர்ச்சங்கு முழங்கிய புரட்சிப் பாவலர் 'புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்! என்று ஆர்ப்பரித்து போர் முரசு கொட்டிய புதுமைக் கவிஞன்.

'போர் வெறி கொண்டலையும் பேதை உள்ளத்தினர் இன்றைக்கும் இருக்கத்தானே செய்கின்றனர் உலகில்! இன்றைக்கும் தேவைப் படும் கவிஞன் புரட்சிக் கவிஞனே! இவரின் பாடல் வரிகள் உலகினை வழி நடத்தும் ஒப்பற்ற லட்சிய கீதங்கள்! பழைய கால புலவர்கள், பண்டித சிரோன்மணிகள் என்போரின் மரபுகளை உடைத்தெறிந்தவர் பாவேந்தர்

கைலாயம் சேர்ந்து கதி மோட்சம்பெற கடவுளைப் பாடியோர் உண்டு. பொன்னும் பொருளும் பெற மன்னரை வாழ்த்தியோர் உண்டு. பரிசில்கள் பல பெற்று வளத்தோடும் நலத்தோடும் வாழ்வு அமைய வள்ளல்களைப் பாடிப் போற்றியோர் உண்டு.

இப்படி பாரம்பரிய புலவர்களின் குணாம்சத்தை உதறித் தள்ளி மக்களின் அடிமை வாழ்வு அகல - அறியாமைப் பிணி நீங்க அறிவுப்பசி அடங்க - தக்கநெறி, பெரியார் தம் பகுத்தறிவு நெறியே 'சரி" என உணர்ந்து, தேர்ந்து தமது பாட்டுத் திறத்தை வெளிப்படுத்தியவர் பாரதிதாசன்.

சாக வேண்டிய தமிழர் சாகிலர்! வீழவேண்டிய தமிழர் வீழ்கிலர்! வறள வேண்டிய தமிழகம் வறண்டிலது. காரணம் பெரியார் கண்காணிப்பே! என்று பெரியாரை அடையாளப்படுத்தி - மொழி நலன், இன நலன் பேணிடப் பெரியாரை துணை கொள்வீர் என மக்களுக்கு புதுவழி காட்டியவர் புரட்சிக் கவிஞர்.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளரான தந்தை பெரியார் எந்த ஒரு கருத்தை பின்பற்ற வேண்டுமெனிலும், அமைப்பை - தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றாலும், எந்தவொரு லட்சியத்தை ஒழுகிடுவதென்றாலும், அதனை அறிவு - ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, ஆய்ந்து - தேர்ந்து - தெளிந்த பின்பே, அதாவது சொந்த பகுத்தறிவுக்கு சரி எனப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும், பின்பற்றி ஒழுகிடவேண்டும் என்பார்

"அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதற்காகவோ, 2000 ஆண்டுகட்கும் முந்தைய பழைமையானது என்பதற்காகவோ, மகான்களால், மகாத்மாக்களால் பேசப்பட்டது என்பதற்காகவோ, கடவுள்களால் அருளப்பட்டது என்பதற்காகவோ எந்தவொரு கருத்தையும் ஒத்துக்கொள்ளக்கூடாது" என்று பெரியார், பகுத்தறிவின் சிறப்பை வெளிப்படுத்தினார். இக்கருத்தினை அப்படியே வழிமொழிந்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதையாக்கிய விதம் நம்மை வியக்க வைக்கிறது.

"பழைய நூற்கள் இப்படிப் பகர்ந்தன என்பதால் எதையும் நம்பி விடாதே! உண்மை என்று நீ ஒப்பிவிடாதே! பெருநாளாகப் பின் பற்றப்படுவது வழக்கமாக இருந்து வருவது எதையும் நீ நம்பி விடாதே! உண்மை என்று நீ ஒப்பிவிடாதே! பெரும்பான்மையினர் பின்பற்றுகின்றனர் இருப்பவர் பலரும் ஏற்றுக்கொண்டனர் என்பதால் எதையும் நீ நம்பிவிடாதே! பின்பற்றுவதால் நன்மையில்லை! ஆண்டில் முதிர்ந்தவர் அழகியர் கற்றவர் இனிய பேச்சாளர் என்பதற்காக எதையும் நம்பிடேல் எதையும் ஒப்பேல்! ஒருவர் சொன்னதை உடன் ஆராய்ந்து பார் அதனை அறிவினாற் சீர்தூக்கிப்பார்! அறிவினை உணர்வினால் ஆய்க! சரி எனில் அதனால் உனக்கும் அனைவருக்கும் நன்மை உண்டெனில் நம்பவேண்டும். அதையே அயராது பின் பற்றி ஒழுகுக!

வள்ளுவப் பெருந்தகையின் வாக்கான, "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண் பதறிவு! எப்பொருள் எத்தன் மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்னும் குறட்பாக்களுடன் புரட்சிக் கவிஞர் தம் பாடல் வரிகளை பொருத்திப் பார்த்தலும் ஈண்டு சிறப்பே ஆகும்.

மக்களின் சிந்தனையறிவாம் பகுத்தறிவை பயன் படுத்தவொட்டாமல் தடுத்திட்ட சூதுமதியினர் யார்? தமிழர் அறிவை பாழ்படுத்தி மூளைக்கு விலங்கு மாட்டிய கூட்டம் எது? அக்கூட்டத்தின் சூழ்ச்சிக்கான ஆயுதம் எது? ஒடுக்கப்பட்ட மக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்திட்ட கற்பனை வடிவம் எது? 'கடவுள்.. கடவுள்...! ஆம்! மூடநம்பிக்கைகளின் தலைமையான மூடநம்பிக்கையே 'கடவுள்'தான் என்பது தந்தை பெரியாரின் கணிப்பு. கடவுள் கொள்கை தகர்க்கப்படும் அன்றேதான் கட்டற்ற சிந்தனையின் பிறப்பிடமாக இருக்கமுடியும் என்றார் பெரியார்!

கடவுள் இல்லை.. இல்லவே இல்லை.. என சாகும்வரை பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்திட்டார் பெரியார்! இல்லை என்போன் நானடா? அந்த தில்லை கண்டு தானடா! தீட்சதரின் சொல்லில் செயலில் - கடவுள் இல்லை என்பேன் நானடா? தில்லை கண்டு தானடா? கடவுள் கடவுள் என்றெதற்கும் கதறுகின்ற மனிதர்காள் கடவுள் என்ற நாம தேயம் கழறிடாத நாளிலும் உடைமை யாவும் பொதுமையாக உலகு நன்று வாழ்ந்த தாம் 'கடையர்" 'செல்வர்" என்ற தொல்லை கடவுள் பேர் இழைத்ததே.

இப்படி பல்வேறு பாக்கள் மூலம் கடவுளை மறுத்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், கடவுள் கொள்கையை உருவாக்கி மக்களின் அறிவு மேம்பாட்டை தடுத்திட்டவர்கள் பார்ப்பனர்களே என்றும் பறைசாற்றி பெரியாரின் கருத்துக்கு வலுவூட்டுவதைப் பாருங்கள்.

தென்கலைப் பார்ப்பான் வடகலைப் பார்ப்பான் சைவப் பார்ப்பான் எப்பார்ப்பாரும் தமிழர் தலை தடவப் பார்ப்பாரே!

பார்ப்பான் பால் படியாதீர் சொற்குக் கீழ்ப் படியாதீர்! உம்மை ஏய்க்கப் பார்ப்பான் தீதுறப் பார்ப்பான் கெடுத்துவிடப் பார்ப்பான் எப்போதும் பார்ப்பான் ஆர்ப்பான் உம் நன்மையிலே ஆர்வமிக உள்ளவன் போல் நம்ப வேண்டாம்..

தமிழர் கடன் பார்ப்பானைத் தரைமட்டம் ஆக்குவதே!

அடடா.. என்ன ஆவேசம்! ஊர்ப்பானை திருடுகின்ற கூட்டத்தை அம் பலப்படுத்துவதில் கவிஞருக்கு எத்துனை ஆர்வம்! பெரியார்தம் ஈரோட்டு கண்ணாடியை அணிந்து சமுதாயத்தைப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆவேசம் சாத்தியம்!

மதம் யானைக்குப் பிடித்தால் காடே அழியும், மனிதனுக்குப் பிடித்தால் நாடே அழியும் என்பது புதுமொழி அண்மைக் காலமாக இந்திய துணைக் கண்டத்தில் மதம் பீடித்த மனிதர்களின் குருதி வெறியை குவலயமே கண்டு நாணிடவில்லையா? நகைத்திடவில்லையா? ஒரிசாவில் ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரிக்கப்பட் டதும், கன்னியாஸ்திரிகள் மத்திய பிரதேசத்தில் பாலி யல் பலதாத்காரம் செய் யப்பட்டதும், குஜராத்தில் மதக்கலவரத்தால் குருதிப் புனல் கொந்தளித்ததும் எதனால்? மதத்தினால் தானே!

அதனால்தான் பகுத் தறிவுப் பகலவன் பெரியார் சொன்னார்- "மதம் அற்ற இடத்திலேதான் மனித சமத்துவம் காணமுடியும் என்று! அக்கருத்தை வர வேற்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்-

"மத ஓடத்தில் ஏறிய மாந்தரேபலி
பீடத்திலே சாய்ந்தீரே!"


என்று அன்றே அடையாளப்படுத்தினார் போலும்!

மதம் ஏற்படுத்திய கேடு களில் மிகப்பெரிது ஜாதி, 'ஜாதி என்ற சொல்லே தமிழ்ச்சொல் அல்ல, 'ஜாதி ஆதியில் தமிழனுக்கு இல்லை ஜாதியைப் புகுத்தி மக்கள் ஒற்று மையை சிதைத்தது மதமே! வளர்ந்திட வேண்டிய தமி ழினம் வளராமல்தமக் குள்ளே பேதா பேதம் காட்டி அடித்துக் கொண்டு அவலத்தில் ஆழ்திடுவதற்கு 'ஜாதி தானே காரணம்!

எனவேதான் சிந்தனை யின் ஊற்றான பெரியார், ஜாதி ஒழிப்புப் போராட் டத்தை நடத்திபல்லாயிர வரை சிறை பெரியார் நெறியை பின்தொடர்ந்த பாவேந்தர் பாரதிதாசன்-

இருட்டறையில் உள்ள தடா உலகம்-ஜாதி
இருக்கின்ற தென் பானும் இருக்கின்றானே
மருட்டுகின்ற மதத் தலைவர் வாழ்கின்றாரே
சுருட்டுகிறார் தம் கையில் கிடைத்தவற்றை
சொத்தெல்லாம் தம தென்று சொல்வார்தம்மை
வெறுட்டுவதே பகுத் தறிவு இல்லையாயின்
விடுதலையும் கெடு தலையும் ஒன்றேயாகும்.


என்று ஜாதியை, மதத் தலைவரை, சுரண்டல் காரர்களை சாடினார் நம் அடிமைத்தனம் அகல வேண்டுமாயின் ஜாதி, மதம் ஒழிந்திட வேண்டும் என்றும் அறிவுறுத்துவதை பாருங்கள்.

"சாதிஅற்ற இட மல்லவோ அன்பு வெள் ளம்
அணைகடந்து விளை நிலத்தில் பாயக் கூடும்!
சர்க்கரைப்பந் தலிலே தேன் மாரி பெய்யும்
சாதிவெறி சமய வெறி தலைக விழ்ந்தால்"



"வென்று சாதிமதம் கான்றுமிழ்ந்தால்
அந்த நொடியே நமது மிடி பறக்கும்


எனப் பாடியவர் பாவேந்தர்.

பகவத்கீதையும், மனுஸ் மிருதியும் மக்களை நான்கு வர்ணத்தவர்களாகவும், பலநூறு கோத்திர குலங்களாகவும் பிரித்துதமிழர் அய்க்கியம் சாத்திய மற்றது என ஆக்கியது

பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர் பிராமணர், தோளில் பிறந்தவர், சத்தி ரியர், இடையில் பிறந்தவர் வைசியர், காலிற் பிறந்த வர்கள் சூத்திரர் என்று நான்கு வர்ணத்தவர்களாக அடையாளப் படுத்தியது டன் வர்ணத்தவர்களுக்கு அப்பாற்பட்ட 'அவர் ணஸ்த்தர்களாக தாழ்த்தப் பட்டவர்களை சுட்டின வேத சாத்திரங்கள் வெகுண்டெழுந்த பெரியார்'சூத்திரன்" என்றால் ஆத்திரங்கொண்டு அடி என சுயமரியாதை உணர்ச்சியை சூடேற்றினார்.

பெரியாரின் தன்மான உணர்வினை உள்வாங்கிக் கொண்ட பாரதிதாசன்

முகத்தில் பிறப்பதும் உண்டோ முட்டாளோ?
தோளிர் பிறப்பார் உண்டோ தொழும்பனே?
இடையிற் பிறப்பார் உண்டோ எருமையே?
காலிற் பிறப்பார் உண்டோ கழுதையே?
நான்முகன் என்பான் உளனோ நாயே?
புளுகடா புகன்றவை எல்லாம் போக்கிலியே!


என்று குமுறும் எரிமலையாய் வெடித்தார்.

உலக அளவிலேயே தந்தை பெரியார் அளவுக்கு பெண்ணுரிமை பற்றி சிந் தித்து தொண்டாற்றி யவர்கள் இல்லை என்பது அண்மைக்கால மதிப்பீடு பெண்கள் உரிமைக்கு பெரிதும் தடையாய் அமைந்திட்ட அடிமைத் தனங்கள் அனைத்தையும் சாடினார் பெரியார்.

பெண்கள் ஆண்களின் போகப் பொருளா?
பிள்ளை பெறும் எந்தி ரமா?
நகை மாட்டும் ஸ்டேண்டா?
வீட்டு சமையல் காரியா?

என்று கேள்விமேல் கேள்வி கேட்டு ஆணின் அனைத்து உரிமைகளும் பெண்களுக்கு உண்டு என சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார் பெண்களே! உங்கள் உரிமைக்கு நீங்களேதான் போராட வேண்டும்.- ஆண்களை நம்பி இருக்கக் கூடாது என்றார் ப+னைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? என்றும் கேட்டார்? பெண்கல்விக்கும், பெண்ணுரிமைக்கும் பெரியார் கொடுத்த குரலின் தாக்கமே பெண்களே மாநாடு கூட்டி 'பெரியார்" எனும் பட்டத்தை பெரியார் ஈ.வெ.ரா அவர்களுக்குக் கொடுக்க வைத்தது.

கோழி குஞ்சு பொரித்தால் -மாடு கன்று போட்டால் ஆடு குட்டி போட்டால் பெண்ணை வரவேற்கும் சமுதாயம், பெண் குழந்தையை மட்டும் வெறுத்து கள்ளிப்பாலும், பச்சை நெல்லும், பாழும் குப்பைத் தொட்டியும் தேடிச் செல்வது சரியா? என்று பெரியார் எழுப்பிய கேள்வியில்தான் எத்தனை நியாயம்!

மண்ணுக்கும் கீழாய் மதித்தீரோ பெண்ணினத்தை
பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்
மண்ணடிமை தீர்தல் என்பது முயற் கொம்பே!


என்றும்,

அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்
அழகிய தமிழ்நாட்டின் கண்கள்
நாணமும் அச்சமும் வேண்டுமெனில்
ஆணுக்கும் பெண்ணுக் கும் வேண்டும்


என்றும்

ஆண் உயர் வென்பதும் பெண் உயர்வென்பதும்
நீணிலத் தெங்கனும் இல்லை வாணிகம் செய்யலாம்
பெண்கள்நல் வானூர்தி ஓட்டலாம் பெண்கள்
ஏணை அசைத்தலும் கூடும்-அதை யார் அசைத் தாலுமே ஆடும்


எனவும்

பெண்கட்கு கல்வி வேண்டும்.. ஏனெனில்
உலகத்தைப் புரிந்து கொள்ள
குடும்பத்தை நடத்திட
குழந்தைகளை வளர்த் திட

என்றும்,

பெண்ணுரிமை பற்றிய புரட்சிக் கவிஞர் தம் பாடல்கள் உண்மையிலேயே புரட்சிகரமானவைதான் அந்நாளில்! பிள்ளைப்பேறு என்பதை கட்டுப்படுத்தி குடும்ப நலம், நாட்டு நலம் காக்க வேண்டும்.. பெண்ணடி மைத்தனத்துக்கு துணை சேர்ப்பது பிள்ளைப் பேறே அதனை கட்டுப் படுத்திட அரசே சிந்திக்காத வேளையில் பெரியார் சிந்தித்தார்! பல ஆண்டுகட்கு முன்னரே 'கர்ப்ப ஆட்சி" என்ற நூலினை வெளியிட்டு குடும்பநலம் பேணினார். பெரியார் புரட்சிக் கவிஞர் பெரியாரை அடியொற்றி ஒரு பெண்ணைப் பேசவிடுவதை பாருங்கள்.

'"இருக்கும் பிள்ளைகள் எனக்குப்போதும் அம்மா - என்
கருக்கதவை மூடிவிடுங்கள் அம்மா பெருத்த
வருமானம் எனக்கில்லைஇனிப் பிள்ளைபெறும் வலிவும் உடம்பில் இல்லை
மக்கள் தொகை பெருக் கத்தால் வரும் பஞ்சம் இங்கு
வரும் பஞ்சத்தால் ஒழுக் கக்கேடே மிஞ்சும்...
தோன்றியுள்ள மக்கள் நலம் யாவும் - இங்குத்
தோன்றாத மக்கள் தந்த தாகும்...."


என்ன அற்புதமான சிந்தனை வரிகள்! 5 ஆண்டுகட்கு முன்னமேயே மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் தனக்கு குடும்பநல அறு வைச் சிகிச்சை செய்யுமாறு தனக்குள்ள நியாயத்தைக் கூறி பேசுவதாக பாவேந்தர் கவிதை ஆக்கிய திறன் முன்னோக்கியச் சிந்தனை யின் வெளிப்பாடே எனலாம்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் அன்னைத் தமிழும் அர்ச்சனை மொழியாக வேண் டும் என்று நீண்ட கால மாக பெரியார் போராடி னார் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு நடத்திகோவில் கருவறை நுழைவுக் கிளர்ச்சியை அறிவித்தார் (தற்போது அரசின் ஆணைப்படி தமிழிலும் அர்ச்சனை செய்யலாம் என்றும், ஆகமக் கல்லூரியில் படித்துத் தேறிய எவரும் அர்ச்சகராகலாம் என்றும் ஆக்கப்பட்டுள்ளது.)

கோயில்களில் சமஸ்கிருதம் தேவையில்லை தாய்த்தமிழிலேயே வழிபாடு நடத்திடலாம் என்பதை பாவேந்தர்-

தெற்கோதும் தேவாரம்
திருவாய் நன்மொழி யான தேனிருக்கச்
செக்காடும் இரைச்ச லென
வேத பாராயண மேன்
திருக்கோயில் பால்?"


என்று கேட்டார்.

மடிகட்டிக் கோயி லிலே
மேலுடையை இடுப் பினிலே
வரிந்து கட்டிப்
பொடிகட்டி இல்லாது
பூசியிருகைகட்டிப்
பார்ப்பானுக்குப்
படிகட்டித் தமிழ ரெனப்
படிக்கட்டின் கீழ் நின்று
தமிழ் மானத்தை
வடிகட்டி அவன் வட சொல்
மண்ணாங்கட்டிக் குவப்பீர்
மந்தரம் என்றே!

வேற்றுவரின் வட மொழியை
வேரறுப்பீர் கோயி லிலே!"

என தமிழ்மக்களுக்கு ஆணையிடுகிறார் புரட்சிக் கவிஞர் தமிழ் வளர்ந் தால்தான் தமிழன் வளரு வான்.. பிறமொழி ஆதிக் கம் தமிழை அழிப்ப தோடுதமிழனையும் அழித்து விடும் அதனால் தமிழரை இப்படி வேண்டுகிறார் பாவேந்தர்.

தமிழனே இது கேளாய் - உன்பால்
சாற்ற நினைத்தேன் பல நாளாய்
கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு
காணும் பிற மொழி களோ வெறும் வேம்பு
நமையெல்லாம் வட மொழி க்கிடும் தாம்பு
நம் உரிமைதனைக் கடித்ததப் பாம்பு.


என்று சொல்லிவிட்டு

வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்
வாழ்வினில் உயர்ந்த பின் தமிழையே பழித்தார்


என இன்றைக்கும் வாழும் சில இனத் துரோ கிகளை அடையாளப் படுத்துகிறார் புரட்சிக் கவிஞர் தாய்மொழிக் கல்வி தமிழ்வழிக் கல்வியே தூய்மையை, நலத்தை, வீரத்தை, இன்பத்தை அளித்திட வல்லது என்பதனையும்,

இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
துன்பங்கள் நீங்கும் சுகம்வரும் நெஞ்சினில்
தூய்மை உண்டாகி விடும்வீரம் வரும்


என அற்புதமாக வெளிப்படுத்தினார்.

கவிதை உலகில் ஷெல் லியால் பிரிட்டன் பெருமை பெற்றது போல, புஷ்கினால் ருசியா புகழ டைந்து போல, ஹீகோ வால் பிரான்சு வெற்றி யடைந்ததுபோல வால்ட் விட்மனால் அமெரிக்கா சீர் உற்றதுபோல புரட்சிக்கவிஞர் பாரதிதாசனால் நம் நாடும் பெருமை உற்றது.

உலகமானுடம் உய்விக்கவந்த உத்தமக்கவிஞன் பாரதிதாசன் தமிழரும் ஞாலம் முழுவதும் வாழும் மாந்தர்களும் ஏற்றத் தோடும், எழுச்சியோடும் புரட்சி மணங்கமழ வாழ வேண்டும் என்று விரும்பி யவர் அவர் பெரியாரின் கொள்கை மட்டுமே மனித சமுதாயம் மாண்புபெற வழிகாட்டும் கலங்கரை விளக்கு என்பது அவரின் கருத்து.

"தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்
!

என தந்தை பெரியாரை அழகாக தம் கவிதை வரிகளால் படம் பிடித்துக் காட்டியதும் அதனால் அன்றோ! பெரியாரின் மண்டைச் சுரப்பையான அவரின் கொள்கையை இந்த உலகமே ஏற்றுபின் பற்றும் என்பது கவிஞரின் முன்னோக்கிய சிந்தனை!

சாதி, மதம் கடவுள் கருத்துக்களை எதிர்த்துப் பாடியதிலும், பெண் ணடிமை நீக்கி பெண் உரிமைக் கீதங்களை இசைத்ததிலும், தமிழ்தமிழர் எழுச்சிப் பண் பாடியதிலும், தொழி லாளர் துயர் போக்கிட சமத்துவப் பாடல்கள் புனைந்ததிலும் வேதியர்தம் சூதுமதியினைச் சாடிய திலும், சுயமரியாதை உணர்வினை சுடர்விடச் செய்ததிலும் பாரதிதாசனுக்கு அடிப்படையாய் அமைந்தது பெரியாரின் லட்சியங்களே! புதுவையில் பிறந்து சுப்புரத்தினமாய் மலர்ந்துபாரதி தாசனாய் சுடர்முகம் காட்டிய பாவேந்தர் புரட்சிக் கவிஞராய் உலா வர தந்தை பெரியாரின் தத்துவப் பாட்டையே வழியாய் அமைந்தது என்பதை எவர்தான் மறுப்பர்? தந்தை பெரியாரை தத்துவ வழி காட்டியாய் வரித்துக் கொண்டு வலம் வந்த காரணத்தால் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாய் இன்றும் திகழ்கிறார் பெரியார், புரட்சிக்கவிஞர் கொள்கை வழியில் தமிழர் சமுதாயம் விழித்தெழுவ தாகுக.

---- நன்றி: "விடுதலை"

மநுதர்மத்தை பின் தொடர்ந்து செல்லும் பிராமணீயம்

மத உரிமைகளுக்காக. அவற்றை நிறைவேற்றுவதற்காக கன்னியாகுமரி முதல் கராச்சி வரை, அலைந்து.. பல்வேறு மடங்களையும் நேரில் அடைந்து, மடாதிபதிகளையும் மாநாட்டுக்கு அழைத்த கஷ்டமான காரியத்தை விளக்கினேன்.

டெல்லியில் இந்துமகாசபை என்ற இடத்தில் மாநாடு நடந்தது.

யார் யார் கலந்து கொண்டனர்? கல், காடு, மலை, வெயில் என கடந்துபோய் நாங்கள் சந்தித்த பாரதத்தின் நூற்றுக்கணக்கான மடங்களிலிருந்து எவரும் கலந்து கொள்ளவில்லை கராச்சி சிந்துநகர மடப்ரதிநிதியை தவிர.

சின்ன வருத்தம்தான் அதற்காக என்ன செய்வது? பேருக்குக் கூடிய அந்த மாநாட்டில்.

'‘Freedom of religion and maintaining religious institutions " வேண்டும் என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு கலைந்தோம் எங்கே? கலைவதற்குக்கூட ஆட்கள் இல்லை.

இதன் பிறகும் சளைக்காமல் மடங்களுக்கான தனியுரிமை குறித்து..Parliament Bill கொண்டுவர ஏற்பாடு செய்தோம். புது பார்லிமென்ட் வந்த பிறகு அந்த பில்லை யாரும் கண்டு கொள்ளவில்லை.

ஸ்வதந்த்ரம் பெற்று பாகிஸ்தான் - இந்தியா என தேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்தியாவான நமது தேசத்தில் 'All are equal. All religions are equal" என்று பிரகடனப்படுத்தப் பட்டது. அதாவது Secular Srate அரசமைப்பு சாசனம் அறிவித்தது.

அதாவது எத்தனை மதங்கள் எத்தனை தர்மங்களை பின்பற்றினாலும் இந்த தேசத்தின் பொதுதர்மம் All are equal என்பதுதான்.

நமது மதாசாரப்படி தர்மம் எல்லார்க்கும் ஒன்றுதான் அரசனும் தர்மத்துக்கு கட்டுப்பட வேண்டும் ஏன் பகவானேகூட தர்மத்துக்கு, தர்ம நெறிமுறைகளுக்கு எதிராக நடந்தால் பகவானையே தண்டிக்கவும் நமது மதக்கலாச்சாரம் கற்றுத்தருகிறது.

இதனைத்தான் 'தர்மவிகிக்ரமம்" என்கிறோம் அதாவது தர்மம் எல்லார்க்கும் ஒன்றுதான் யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு தண்டனை உண்டு.

இதனை விஸ்தாரமாக விவரிக்கும் ஒரு புராணக் காட்சியைப் பார்க்கலாமா?

இந்த காட்சி நிகழும் இடம் இன்றைய பஞ்சாப் மாநிலத்தில் ஓர் இடம் கதையைப் படிக்கும்போதே அந்த ஊரின் பெயர்க் காரணம் உங்களுக்கு விளங்கும்.

அந்த ஊரில் ஜலந்தர்-பிருந்தா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். நல்ல கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இவர்களுடையே ஒரேயொரு விஷயத்தில் மட்டும் கருத்து வேறுபாடு. என்ன விஷயத்தில் என்றால் கடவுள் விஷயத்தில்.

அப்படி என்ன கருத்து வேறுபாடு? பிருந்தா விஷ்ணுவை தவிர வேறு கடவுளே இல்லை என்னும் அளவுக்கு விஷ்ணு பக்தை. அவளது ஆம்படையான் ஜலந்தருக்கோ சிவன் மீது அபார நாட்டம்.

இந்த விசித்திரமான விஷயத்தை கேள்விப்பட்ட நாரதர், அந்த குடும்பத்தில் சிறிது விளையாடிப் பார்க்க நினைத்தார்.

ஒருநாள் ஜலந்தர் தனியாக இருக்கும்போது அவனை சந்தித்தார்.

என்ன ஜலந்தர்?.. நீயோ சிவனை வழிபாடு செய்கிறாய். உன் மனைவியோ விஷ்ணுவை வழிபடுகிறாள். நீ பின்பற்றும் சிவபக்தியால் சிவனுடைய மனைவி பார்வதி தேவியையே நீ அடையலாமே? எதற்கு இந்த பிருந்தாவுடன் போராடிக் கொண்டிருக்கிறாய்? இந்த பிருந்தாவை விட அந்த பார்வதி எவ்வளவு அழகு தெரியுமோ? என ஜலந்தரின் மனதில் பற்றவைத்து விடுகிறார் நாரதர்.

உடனே ஜலந்தரும்.. 'நான் பார்வதி தேவியை அடையமுடியுமா?’...எப்படி? என கேட்கிறான்.

அதற்கு நாரதரே யோசனையும் கொடுக்கிறார்.

சிவனுக்கு சாமவேதம் என்றால் உயிர் எங்கே சாமவேதம் ஒலித்தாலும் மயங்கி அந்தப் பக்கம் போய்விடுவார் நீ என்ன பண்ணு.. சாமவேதம் பாராயணம் செய்பவர்களை பிடித்து நல்ல சத்தமாக சாமவேதம் ஒலிக்கச் செய்.

அதனைக் கேட்டு சிவபெருமான் மயங்கியிருக்கும் வேளையில் கைலாயத்துக்கு சென்று காரியத்தை முடித்துவிடு சிந்திக்கத் தெரியாத ஜடமாகிவிட்ட ஜலந்தரும் நாரதரின் கலகயோசனையை காதுகொடுத்து கேட்டபின்,

அப்படியே.. சாமகானம் பாட ஏற்பாடு பண்ணினான் இதைக் கேட்டு சிவன் லயித்திருக்க.. அவர் இல்லாத நேரமாய்ப் பார்த்து கைலாயத்துக்குள் காலடி எடுத்து வைத்தான் அங்கே பார்வதி தேவி தனிமை அழகில் தத்தளித்துக் கொண்டிருக்க, நாரதர் கொடுத்த யோசனைப்படி பார்வதியை போய் கட்டிப்பிடித்து விட்டான் ஜலந்தர், பார்வதி.. தன் மேல் சிவன் அல்லாத ஒருவன் சில்மிஷம் செய்கிறான் என்பதை அறிந்து 'ஸ்வாமீ என ஏழுகடல் கொந்தளிக்க கத்துகிறாள் கைலாயத்தில் இப்படி...

ஜலந்தரின் வீட்டுத்தோட்டத்தில்? கணவனைக் காணாது மனைவி பிருந்தா தனித்துத் தவித்திருக்கிறாள் தனது பரம தெய்வமான விஷ்ணுவிடம் தன் கணவன் எங்கே என வேண்டுகிறாள்.

இதைப் பார்த்த விஷ்ணு.. 'நமது பக்தைக்கு நாம் ஏன் சந்தோஷம் தரக்கூடாது? தன் கணவனை காணோமே என பாவம் தேடிக்கொண்டிருக்கிறாள் நாமே ஜலந்தராக உருவெடுத்து அவனை மகிழ்ச்சிப்படுத்துவோம் என முடிவெடுத்து.. கணவன் ஜலந்தர் போலவே உருவம் எடுத்து பிருந்தாவை நெருங்கினார் விஷ்ணு.

'ஆஹா.. என் கணவர் வந்துவிட்டார் என சந்தோஷம் பொங்கிய பிருந்தா.. தன் கணவர் ரூபத்தில் வந்திருந்த விஷ்ணுவை கட்டிப்பிடித்துக் கொண்டாடினாள் இருவரும் தோட்டத்தில் ரொம்ப இஷ்டமாக இழைந்து கொண்டிருக்கும் நேரத்தில்...

'நெருக்கமாக இருக்கும் அவர்களுக்கு நெருக்கமாக வந்து பொத்’தென வந்து விழுந்தது ஒரு தலை ரத்தம் கொட்ட கழுத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட அந்தத்தலை, ஜலந்தரின் தலை.

ஆமாம்.. சாமவேதத்தில் சிவனை மயக்கிய ஜலந்தர்.. பார்வதியை கட்டிப் பிடிக்க இதனால் பார்வதி ஏழுகடல் அதிர சத்தம் போட்டாள் இல்லையா? வேதத்தின் மயக்கத்தை.. பார்வதியின் கூக்குரல் கலைக்க, ஓடிப்போய் பார்த்தார் சிவன் தன் மனைவியை இன்னொருவன் பலாத்காரப்படுத்துவதா?.. என ஜலந்தரின் தலையை சீவியெறிந்தார்.

அந்த ஜலந்தரின் தலைதான்.. பிருந்தாவும் ஜலந்தர் போல் ரூபம் எடுத்து வந்த விஷ்ணுவும் இழைந்து கொண்டிருந்தபோது இடையில் வந்து விழுந்தது.

பார்த்தாள் பிருந்தா.. உடலோடு விழுந்தவன் கணவனா? இல்லை தலைமட்டும் விழுந்தவன் கணவனா? சந்தேகம் அதிகரிக்க...

அப்போது திடுக்கென உடலோடு கூடிய ஜலந்தர் மறைந்து விஷ்ணுவாகிறார் 'நான்தான் பக்தையே... என அறிமுகம் கொடுக்கிறார்.

இதைக்கேட்டு பொங்கியெழுந்த பிருந்தா...’அடப்பாவி.. பக்தையை இப்படி பண்ணிவிட்டாயே? என் கணவன் ரூபத்தில் வர நீ யார்? தவறு செய்துவிட்டாய் பகவானாக இருந்தாலும் தவறு தவறுதான் உனக்கு சாபமிடுகிறேன் கடவுளாக இருந்தாலும் நீ கல்லாய் போவாயாக பிருந்தாவின் சாபம்தான் பகவானை சாலக்ராமம் என்ற சிலையாக்கிவிட்டது என்பது புராணம்.

அதாவது கடவுளே தர்மத்தை மீறி தவறு செய்திருந்தாலும் தண்டனை உண்டு என்பதுதான் இக்கதை சொல்லும் நீதி.

இப்போது நம் தேசத்தில் சட்ட பூர்வமாக தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது.

ஆனால் ஆகமரீதியாக இன்னும் இது உயிர் வாழ்ந்து வருகிறது.

ப்ராமண்யத்தின்படி பிராமணன்தான் தெய்வம். இது இப்போதைய நமது தேச தர்மத்துக்கு முரணானது If you follow Bhraminism, there is Sutra and Punchamas. So according to constituion Brahminsm is antistate .

அதனால்.. மநுதர்மத்தை பின் தொடர்ந்து செல்லும் பிராமணீயம் (நன்றாக புரிந்து கொள்ளவேண்டும் நான் சொல்வது கொள்கை தத்துவத்தை மட்டும்) என்பது நமது அரசியல் தர்மத்துக்கு அப்பாற்பட்டது.

---------- அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார் - நூல்: "இந்து மதம் எங்கே போகிறது?"
---------- நன்றி : "நக்கீரன்" - 30.11.2005

பகுத்தறிவுவாதியின் கொள்கை


பேய் இருக்கிறது என்பது எவ்வளவு பொய் சங்கதியோ அவ்வளவு பொய் சங்கதி கடவுள் இருக்கிறது என்பதும் தேவர்கள் என்பதும் பெரும் பொய்யேயாகும். மேல் உலகம் என்பதும் மகா மகா பொய்யேயாகும்.

ஏனெனில் இந்த உலகத்தில் இருந்து ஆகாய மார்க்கத்தில் சுமார் மூன்று கோடி மைல் தூரத்தில் சூரியன் இருக்கிறது. அதுவரை தூரதிருஷ்டிக் கண்ணாடியால் ஆகாயம் பார்க்கப்பட்டாகி விட்டது. எங்கேயும் உஷ்ணம் தவிர எந்த உலகமும் தென்படவில்லை. இது வான சாஸ்திரிகள் கண்டுபிடித்த செய்தி. இராட்சதர் என்பதும் சுத்தப் பொய். ஏனென்றால் இராட்சதர், அசுரர் என்போர் எல்லாம் இந்த பூமியில் இருந்ததாகத்தான் சொல்லப்படுகிறது. இதற்கு பாட்டி கதைகளை, புராணங்களைத் தவிர எந்த ஆதாரமும் இன்னமும் இல்லை. இவர்கள் கடவுள்களுக்கு எதிரிகளுக்கு இருந்து கொல்லப்பட்டார்கள் என்றால் `கடவுளுக்கு' எதிரி இருக்க முடியுமா?

ஜோசியம் என்பதும் பெரும் பொய், வெறும் ஏமாற்றுதலே ஆகும்.இராகு, காலம், குளிகை, எமகண்டம், நல்ல நேரம், கெட்ட நேரம் எல்லாம் பொய், பட்சி சாஸ்திரமும் பச்சைப் பொய்; நட்சத்திரப்பலன், கிரகப் பலன், வாரப் பலன், மாதப்பலன், வருடப்பலன் என்பவை யாவும் பொய். பல்லி விஷம் பலன், கனவு காணும் பலன், தும்மல் பலன் எல்லாம் பொய், கழுதை கத்துதல், ஆந்தை அலறுதல், காக்கை கரைதல், நாய் ஊளையிடுதல் ஆகியவற்றிற்கு பலன் என்பதெல்லாம் பொய். மந்திரம், மந்திரத்தால் அற்புதம் செய்தல் முதலிய எல்லாம் சுத்த பித்தலாட்டம் பொய். ``தெரியாத புரியாத கடவுளை மனிதன் நம்பித்தான் ஆக வேண்டும்'' என்பதான கட்டாயம் ஏற்பட்டு, மனிதன் நம்ப ஆரம்பித்ததன் பலனே இவ்வளவு பொய்களையும் மனிதன் நம்ப வேண்டியவனாகி விட்டான். நம்பினதன் பலனாக பலன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலைப்படாமல் அவற்றிற்குத் தன்னைச் சரிப்படுத்திக் கொள்ளுகிறான். பஞ்சேந்திரியங்களுக்குத் தட்டுப்படாத விஷயம், பொருள், நடப்பு எதுவானாலும் அது பொய். இதுதான் பகுத்தறிவுவாதியின் கொள்கை.



-------------------தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் - "விடுதலை", 9.2.1970

27.5.08

மக்களை ஏய்த்துவிட்டான் கம்பன்


திருவள்ளுவர் படத்தைத் திறக்க
தந்தை பெரியார் கூறிய இலக்கணம்


ஈரோடில் 1948 இல் நடைபெற்ற திராவிடர் கழக 19 ஆவது மாநாட்டில் திரு.வி.க. தலைமையில் தந்தை பெரியார் அவர்கள் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து திருக்குறள்பற்றி அரிய உரை ஆற்றினார்.

திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைப்பதற்கு இலக்கணம் வகுத்துக் கூறிப் பேசிய பேச்சின் சிறு பகுதி:

"உண்மையாகவே ஒரு உணர்ச்சியுடன் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைப்பதாயிருந்தால், முதலில் கம்பனுடைய படம் ஒன்றைக் கொளுத்திச் சாம்பலாக்கிவிட்டுப் பிறகுதான் திருவள்ளுவரைப்பற்றிப் பேசத் தொடங்கவேண்டும். திருவள்ளு வருடைய கொள்கைகளையும், அவருடைய பாட்டின் அருமையை யும் அவற்றால் திராவிட நாடு பெற்றிருக்கவேண்டிய பலனையும் கம்பனது ராமாயணம் அடியோடு கெடுத்துவிட்டது. பார்ப்பன சூழ்ச்சிக்குப் பலியான கம்பனால் இந்நாட்டில் நிலவியிருந்த திராவிட கலாசாரமே பாழாக்கப்பட்டுப் போய்விட்டது. ஆரியப் பண்புகளையும், ஆரிய நடைமுறைகளையும் போற்றிப் புகழ்ந்து அவற்றை திராவிட மக்கள் ஏற்கும்படி அழகுற தமிழில் பாடி மக்களை ஏய்த்துவிட்டான் கம்பன்."

("விடுதலை", 5.11.1948)

முதல் பெண்ணியவாதி



இன்றைய பெண்கள் ரொம்பவே கொடுத்து வைத்தவர்கள்! நல்ல வாய்ப்புகள், வசதிகள், உரிமைகள், சமூக அந்தஸ்து என்று ஓரளவுக்கு மேன்மையாகவே இருக்கிறது. அவர்கள் வாழ்க்கை தரம். ஆனால், இந்த வளம் எல்லாம் ஆகாயத்திலிருந்து தானாய் வந்துக் குதித்துவிடவில்லை. எத்தனையோ மனிதர்களின் தொடர் போராட்டம் மற்றும் பிரச்சாரத்தின் விளைவாய்தான் இன்றைய பெண்கள் கொஞ்சமேனும் தன்மானத்தோடு இருக்கமுடிகிறது.
இப்படிப் பெண்களுக்காகப் போராடியவர்களில் பல பேர் பெண்கள். இவர்கள் தங்களுக்காகத் தாங்களே குரல் கொடுத்துக்கொண்டவர்கள். ஆனால், தனக்காக என்று இல்லாமல், தான் ஒரு ஆணாக இருந்தபோதும் மிகத்தீவிரமாக பெண்களின் உரிமைக்காகப் போராடிய ஒருவர் இருக்கிறார். அவர் தான் ராமசாமி!


ஆனால், ராமசாமி என்றால் யார் என்று இன்று யாருக்கும் தெரிவதில்லை. சாதாரண மனிதர்களைத் தான் இயற்பெயரால் அழைப்போம். செயற்கரிய செய்த பெரும் மனிதர்களை பிரத்தியேகச் சிறப்புப் பெயரால் தானே அழைப்போம். இப்படிச் சிறப்புப் பெயர் பயன்படுத்தியே பழகிவிட்டால் காலப்போக்கில் அன்னாரின் இயற்பெயரே மறந்துபோய், சிறப்புப் பெயரே நிரந்தரமாகி விடுகிறது. திருவாளர் ராமசாமியும் அப்படிப்பட்ட மகான் தான்! இயற்பெயரே மறந்துபோகும் அளவிற்குப் பிரசித்தமான அவரது சிறப்புப் பெயர் தான் தந்தை பெரியார்!
யோசித்துப் பார்த்தால், புத்தர், கிறிஸ்து, நபி, மஹாத்மா என்ற வரிசையில் தனக்கென்று ஒரு நிரந்தரச் சிறப்பு பெயர் பெற்றவர் பட்டியலில் தந்தை பெரியாரும் ஒருவர். மற்ற நால்வரை விட பெரியார் வித்தியாசமானவர், அவர்கள் எல்லாம் கடவுளின் பெயரால் பணியாற்றியவர்கள்; பெரியாரோ கடவுளே இல்லை என்று பகிரங்கமாய்ப் பிரச்சாரம் செய்ததற்காகப் பிரசித்திபெற்றவர். ஆனால், இந்தப் பெரியார் என்னும் மாமனிதனின் பாடல் பெறாத இன்னொரு முகம் ஒன்று உண்டு. இவர் தான் இந்தியாவின் முதலும், மிக மும்முரமுமான பெண்ணியவாதி.


இன்று ஆணுக்குப் பெண் சமம் என்பது எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு சமூகக் கருத்து. இன்றைய பெண் ஆணுக்கு அடிமை இல்லை. அவளுக்குஆணைப் போலவே எல்லா சுதந்திரமும் உண்டு தான். இந்தப் பெண் விடுதலை எல்லாம் சென்ற நூற்றாண்டில் பெரியார் முன்பு நடத்திய பெரும் போராட்டத்தின் நேரடி விளைவு தான். கடந்த காலத்தின் கேவலங்களை ஒரு முறை நினைவு கூர்ந்தால்....அந்தக் காலத்தில் பெண்கள் பூப்பெய்வதற்கு முன்பே பால்லிய விவாகம் செய்யப் பட்டுவிடுவார்கள். இந்தக் குட்டி மாட்டுப்பெண்ணின் குட்டிக்கணவன், பாம்பு கடித்தோ, காலரா தாக்கியோ, வேறு எப்படியோ அற்ப ஆயுளில் மாண்டுபோனான் என்றால், இந்தக் குட்டி விதவைக்கு எல்லாச் சம்பிரதாயங்களையும் செய்வித்து, அவளை அமங்கலி ஆக்கி, முடிந்தால் உடன் கட்டை ஏற்றி, கணவனின் சிதையில் தள்ளிவிடுவார்கள். அப்படி இல்லை என்றால், அந்தக் குட்டிப்பெண் தன் மீத ஜீவனத்தை முழுப் பிரம்மச்சரியத்தில் கழித்திட வேண்டியது தான். இந்தக் குட்டிப் பெண்ணுக்கு மறு வாழ்வு, அடுத்த திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பெண்களின் உரிமை என்ற ஒன்றே அபச்சாரமான சொல்லாகத்தான் கருதப்பட்ட்து. அமங்கலியான பெண்ணின் கதி தான் இவ்வளவு மோசம் என்று பார்த்தால், சுமங்கலியாக இருந்த பெண்ணின் நிலையும் மட்டமாகவே இருந்தது. அந்தக் காலத்துப் பெண்களுக்கு எத்தனையோ தடைகள் இருந்தன. அவர்கள் தனியே வெளியே செல்லக்கூடாது; கல்விகற்கக்கூடாது; வேலைக்குப் போக முடியாது; சுயமாய்ச் சம்பாதிக்க முடியாது; சொத்துரிமை கிடையாது; சுயசம்பாதியத்திற்கு வழி இல்லை; சுயமாய் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் கிடையாது. ஆக அவளுக்கு என்று எந்தச் சுதந்திரமும் கிடையாது. அவள் ஒரு தனிப் பிரஜையாகவே கருதப்படவில்லை. அவளின் அடையாளம் அப்பா, அண்ணன், கணவன், மகன், என்று ஒரு ஆணின் அடையாளத்தோடே எப்போதும் பிணைக்கப்பட்டிருந்தது... காரணம், பெண்கள் எல்லாம் பலவீனமானவர்கள்; அதனால் அவர்களுக்கு ஒரு ஆணின் பாதுகாப்பு எப்போதுமே அவசியம் என்கிற நம்பிக்கை இருந்து வந்தது.



அந்தக் காலத்து ஆண்களும் பெண்களைப் பற்றிப் பெரிதும் யோசிக்கவே இல்லை. உண்மையை சொல்லப்போனால், பெண்கள் இப்படி இழி நிலையில் இருப்பது தான் நம் கலாச்சார - பாரம்பரியம் என்று பெருமைப்பட்டுக்கொண்டார்கள். பால்லிய விவாகம் தான் சரி; அப்போது தான் பெண்ணின் கற்பு 100 சதவீதம் தூய்மையாய் இருக்கும் என்று பாலகங்காதர திலகரைப் போன்ற தேசதலைவர்களும் நினைத்தார்கள். ஆனால், பெரியார் ரொம்பவே வித்தியமான மனிதர். மதமெனும் மாயவலையில் மாட்டிக்கொள்ளாத சுயசிந்தனையாளர் அவர். புதிதாய் யோசிக்கத் தெரிந்த புரட்சியாளர் என்பதனால், ஜாதி, மதம், நிறம், பாலினம், போன்ற மாயைகளை எல்லாம் தாண்டி முதிர்ந்த பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட ஞானி அவர். என்னதான் வைணவச் சடங்குகள் வழிந்த குடும்பத்தை சேர்ந்ததவராய் இருந்தாலும், வாய் கிழிய சர்வம் பிரம்ம மயம் என்று அத்வைதத் தத்துவம் பேசிவிட்டு, அதே வாயால் ஜாதியின் பெயரால் பாரபட்சம் பேசும் பச்சோந்தித்தனத்தை சிறு வயதிலேயே சகித்துக்கொள்ள முடியாதவர் பெரியார்.

ஒரு சராசரி மனிதன் ஆகாயத்தில் பறக்கும் கலனை கற்பனை கூடச் செய்யமுடியாத காலத்திலேயே, ஹெலிகாப்டரை கண்டுபிடித்த லியோனார்டோ டாவின்சியைப் போல, பெரியாரும், தம் காலத்தை மீறி யோசிக்கும் தீர்க்கசிந்தனையாளராக இருந்தார். ஒரு சமூக விஞ்ஞானியாய், தம் சமகாலத்தவர் சிந்தித்துக்கூடப் பார்க்க முடியாத பல புதுமையான வாழ்க்கை முறைகளை முன்வைத்தார். பெண், இயற்கையிலேயே ஆணின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவள் தான் என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த காலத்திலேயே, பெண் எல்லா விதத்திலும் ஆணுக்குச் சரி நிகர் சமானம் என்று முதன் முதலில் பெண்ணியம் பேசியவரே தந்தை பெரியார் தான். இந்த மகளிர் சமத்துவத்திற்காகப் பல நூதனப் போராடங்களை மேற்கொண்டு, சமூக அமைப்புகளை எதிர்த்துத் தாக்கினார். அவர் காலத்தில் பெண் என்றால், அவள் உடல் அழகு, பிள்ளை பெறும் தன்மை, பணிவு, சமையல் திறன், கற்பு, ஆகியவையே போற்றுதலுக்கு உகந்தவை எனக் கருதப்பட்டன. பெரியார் இந்தப் பட்டியலில் இருந்த எல்லாவற்றையும் சாடினார்.

ஆணுக்குப் பெண் சமம் என்ற பின், பெண் மட்டும் தன் உடலை அழகுப்படுத்திக் காட்டி ஆணின் அங்கீகாரத்திற்குக் காத்திருக்க வேண்டியதில்லையே. எப்படி ஆண்கள் ஒரு காலத்தில் தாங்கள் அணிந்திருந்த கடுக்கன், குண்டலம், ஆகியவற்றைக் கழற்றிவிட்டு, குடுமிகளை வெட்டிக்கொண்டு, திலகம் அணிவதை நிறுத்திக்கொண்டு, இதற்காகச் செலவிட்ட காலத்தை உருப்படியாக உபயோகிக்கிறார்களோ, அது போலவே பெண்களும் ஒப்பனைக்காகச் செலவிடும் நேரத்தைக் கொஞசம் பிரயோஜனமாக பயன்படுத்தினால் மேல். உடை, ஒப்பனை, ஜடை, அலங்காரம் போன்ற வெட்டி வேலைகளில் செலவிடும் நேரத்தைத் தங்கள் அறிவை மேம்படுத்தப் பயன்படுத்தினால் தான் பெண்கள் முன்னேற முடியும் என்றார் பெரியார். அதனால், ஆண்கள் அணிகளைத் துறந்ததைப் போலவே பெண்களும் செய்ய வேண்டும், முழம் முழமாய், புடவையைச் சுற்றிக்கொண்டு தலைப்பு சரியாக இருக்கிறதா, கொசுவம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்ப்பதிலேயே நேரத்தை வீணடிப்பதை விட, பெண்கள் எல்லாம், ஆண்களைப் போல, மேலை நாட்டுப்பெண்களைப் போல, பேண்ட்-சட்டை அணிந்துகொண்டு, முடியை வசதியாக கிராப்பு வெட்டிக்கொண்டு, பொட்டு வைக்கும் வெற்து வழக்கத்தை விடுத்து நிம்மதியாக இருக்கலாமே! என்று அறிவுரை சொன்னார் பெரியார்.

பெரியார் பல வெளி நாடுகளுக்கெல்லாம் போய், அங்குள்ள மனிதர்கள் வாழும் விதத்தைப் பரிசீலனை செய்து பார்த்து, எது முன்னேற்றத்திற்கு உகந்தது என்று சீர்தூக்கிப்பார்த்தவர். வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த பெண்கள் குட்டி முடியும், இலகு உடைகளையும் அணிவதனால், சவுகரியமாக உணர்வதைக் கவனித்த பெரியார், தன் துணைவி நாகம்மையையும் அவ்வாறே உடை அணிய சிபாரிசு செய்தார். 1930களிலேயே பழையன கழித்து, பிரயோஜனமான புதுமைகளை ஸ்வீகரித்துக் கொள்வதில் ஆர்வமுள்ள முற்போக்குச் சிந்தனையுள்ளவர் பெரியார். இது போலவே பிள்ளைப்பேறு பற்றியும், கீழ்படிதலைப் பற்றியும் பெரியார் மாறுபட்ட கருதுக்களை கொண்டிருந்தார். அவர் பெண்களை வெறும் குட்டிபோடும் இயந்திரங்களாகப் பார்க்கவில்லை, அவர்களை அறிவாளிகளாக பார்க்கவிரும்பினார். அதனால், ஆண்களைப் போலவே பெண்களும் நன்றாகப் படிக்கவேண்டும் என்று ஊக்குவித்தார். இது பற்றி பெண் ஏன் அடிமையானாள்? என்கிற அவருடைய புத்தகத்தில், பெண்ணின் அறியாமை தான் அவளை அடிமைபடுத்துகிறது, ஆனால், அறிவு அவளைச் சுதந்திரப்படுத்தும். அதனால், பெண்களை கல்வி பெற்று, பகுத்தறிவோடு வாழ்வேண்டும் என்றார். பெண் என்பவள் அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டியவள் என்கிற போன தலமுறை எதிர்பார்ப்பை எல்லாம் ஏளனம் செய்தார் பெரியார். தன்னம்பிக்கை இல்லாத கோழைதான் பெண்ணை அடக்கி தன் வீரத்தைக் காட்டிக்கொள்ள முயல்வான், மற்றபடி நிஜமான வீர ஆண்மகன், பெண்களிடம் கரிசனத்தோடு தான் நடந்து கொள்வான் என்றார்.


பெண்கள் சமையல் அறையிலேயே முடங்கிக் கிடப்பதைப் பற்றியும் பெரியாரிடம் எதிர்ப்பு இருந்தது. பெண்கள் அடுப்பூதிக்கொண்டு, சதா சமையலே கதி என்று இருப்பதனால்தான் அவர்களது அறிவை உபயோகமாகப் பயன்படுத்த முடியாமல் போகிறது. அப்படி இல்லாமல், உணவுக்காக என்று தனி மையங்கள் அமைத்து, அங்கிருந்தே எல்லோருக்கும் உணவு வழங்க ஏற்பாடு செய்துவிட்டால், சமையல் எனும் செக்கிலிருந்து விடுபட்டு, பெண்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்குமே என்று யோசனை தந்தார் தந்தை பெரியார்.
தமிழ்ப் பெண்களின் உச்சக்கட்ட உணர்வான கற்பைப் பற்றியும் பெரியார் தெளிவான கருத்துக்களைக் கொண்டிருந்தார். கற்பு நெறி என்பதெல்லாம், பெண்களை காலாகாலத்திற்கும் ஆணின் அடிமைகளாக்கும் பெரிய சதி. இந்தக் குறுகிய வட்டத்தை விட்டு பெண்கள் வெளியேறி சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்றார் பெரியார். இதற்காக சுயமரியாதைத் திருமணங்களைத் தோற்றுவித்தார். சாதாரணத் திருமணங்களில், பெண் வெறும் ஒரு பொருள் மாதிரி தகப்பனால் கன்னிகாதானம் செய்து தரப்பட்டு, கணவனிடம் ஒப்படைக்கப்படுவாள். ஆணுக்குப் பெண் சமம் என்ற நிலை வந்த பிறகு, பெண்ணைத் தொடர்ந்து ஏன் ஒரு பொருளாகவே நடத்தவேண்டும்? தனக்குப் பிடித்த துணைவனை தானே தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு இருக்க வேண்டுமே. அத்தோடு, அவளைத் தானமாக தருவதெல்லாம், பெண்ணை அவமானப்படுத்தும் செயல் என்பதால், ஆணும் பெண்ணும் சரி நிகராய் சம உரிமையுடன் ஒருவரை மற்றவர் இல்வாழ்க்கைத் துணையாய் ஒப்பந்தம் செய்து-கொள்ளும் ஒரு கவுரவமான, கண்ணியமான, நவீன திருமணத்தை அறிமுகப்படுத்தினார் பெரியார். இந்த முறையில் ஆணும் பெண்ணும் தங்கள் சுய கவுரவத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடிந்ததால், இது சுயமரியாதைத் திருமணம் என்று பிரபலமானது. ஒன்றும் புரியாத, எப்படியும் பின் பற்றாத வேதங்களை எல்லாம் ஓதிக்கொண்டிருக்காமல், சுயமரியாதை முறையில் சமகாலமொழியில், எல்லோருக்கும் புரியும் விதத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டு இல்வாழ்க்கையில் இணைந்-தவர்கள் பலர். இன்று வரை தமிழ்ப் படங்கள் எல்லாம் தாலி செண்டிமெண்டைப் பற்றி ஆஹா-ஓஹோ என்று பிதற்றிக்கொண்டிருக்க, அன்றே பெரியார்: கால் நடைகளுக்குத் தான் ஓடிவிடக்கூடாதென்று ஒரு மூக்கனாங்கயிறு கட்டுவார்கள், பெண் என்ன விலங்கா? அவளுக்கு எதற்கு ஒரு கழுத்துக் கயிறு என்றார். அப்படியே கயிர் கட்டித்தான் ஆகவேண்டும் என்றால், ஆணும் பெண்ணும் சமம் ஆகிவிட்ட காரணத்தினால், பெண்ணுக்கு ஆண் தாலி கட்டுவதைப் போல, ஆணுக்கும் பெண் தாலி கட்டலாம், அல்லது, இருவருமே, தாலி கட்டும் அபத்தச் சடங்கைக் கைவிடலாம், என்றார்.

தாலி இன்றி, வேத மந்திரங்கள் இன்றி, திருமணம் செய்தால் அமங்கலம் ஆகிவிடுமோ என்று பயந்தவர்க்கெல்லாம் சீதையையும், தமயந்தியையும், பாஞ்சாலியையும் உதாரணமாய்க் காட்டினார் பெரியார். இந்தப் பெண்கள் எல்லாம் சாஸ்திரச் சம்பிரதாயப்படி மணம் முடித்தவர்கள் தாம். ஆனால், அவர்கள் திருமணம் செழித்துவிடவில்லையே!. இந்தச் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப் படி செல்லுபடியாகுமா என்ற சிக்கலும் இருந்தது. ஆனால், அறிஞர் அண்ணா தமிழ்நாடு முதல் அமைச்சரானதும் முதல் வேலையாக இந்தச் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கிவிட்டதால், பெரியாரின் இந்த நவீனத் திருமணம் மிகப் பிரபலம் ஆனது. அறிவாளிகள் மத்தியில் இந்தத் திருமணம் அமோக வரவேற்பைப் பெற ஒரு புதிய சமூகப் புரட்சியை ஏற்படுத்தியது.


இத்தகைய சுயமரியாதைத் திருமணத்திற்குப் பிறகும், ஒரு பெண்ணுக்கு தன் கணவனைப் பிடிக்கவில்லை என்றால், வெறுமனே கல்லானாலும் கணவன் என்ற வெற்று செண்டிமெண்ட் பார்த்து தன் வாழ்வை வீணடித்துக்கொள்ளாமல், அந்த விவாகத்தை ரத்து செய்து கொள்ளும் உரிமை பெண்களுக்கு இருக்க-வேண்டும் என்று பெரிதும் போராடினார் பெரியார். அந்தக் காலத்தில் பெண்களுக்கு விவாகரத்து கோரும் உரிமையோ, மறுமணம் புரியும் உரிமையோ இல்லை. இதை எதிர்த்து பெரியார் பல காலம் பிரச்சாரம் செய்து, அந்த உரிமைகளையும் பெண்களுக்காகப் பெற்றுக்கொடுத்தார். அதுவும் தவிர கணவன், மனைவி என்ற சொற்களை பெரிதும் சாடினார் பெரியார். இருவரும் சரிசமம் என்ற பின், பெண்ணை மட்டும் மனையோடு கிடப்பவள் என்று அர்த்தப்படுகிற சொல்லால் அழைப்பதை அவர் விரும்பவில்லை. அதனால் தம்பதியினர் இருவருக்கும் பொதுவான விளிச்சொல்லாய், துணைவர், இணையர் என்ற சம நிலை அர்த்தப்படுகிற பதங்களைப் பயன்படுத்த ஊக்குவித்தார். இதே போல எல்லாத் துறைகளிலும் மகளிர்க்காக அயராது உழைத்தார் பெரியார். சம உரிமை, சம வாய்ப்பு, சம கல்வி, சம ஊதியம், சம சொத்துரிமை என்பவை மட்டும் இன்றி, விபச்சார ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, பெண்களின் துஷ்பிரயோக ஒழிப்பு என்று பலப் பல சமுதாய மாறுதல்களை ஏற்படுத்தினார்.

அவரது சிந்தனைத் தெளியும், தர்க்கத் திறனும், எல்லாருடைய கண்களையும் திறந்து, மனதையும் விசாலமாக்க, படித்தவர்கள், புத்திசாலிகள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றார் பெரியார். அவரது கருத்துக்களைப் பல மேதாவிகள் பின்பற்ற ஆரம்பிக்க, படிப் படியாக, அதுவே நாகரிகத்தின் உச்சக்கட்ட வெளிபாடானது. பெண்களைக் கண்ணியமாய் நடத்துவதே நாகரிமானது.

பெரியாரின் நிழலில் பெண்கள் எல்லாம் புதுத் தெம்பும் தெளிவும் பெற்று, தங்கள் சுயமரியாதையை உணர்ந்துகொண்டு விழிப்-புற்றார்கள். பெரியாரும், பெண்களை ஊக்குவிக்கும் விதமாய், இந்தியாவிலேயே முதல் முறையாய், பெண்களின் மாநாடுகளை கூட்டினார். இப்படி 1938 ஆம் ஆண்டு அவர் கூட்டிய மாநாட்டில் தான், பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, தங்களின் முன்னேற்றத்-திற்காகப் பெரிதும் பாடுபட்ட அவருக்குப் பெரியார் என்ற சிறப்புப் பெயரைச் சூட்டினர். அன்று முதல் ஈ.வெ.ராமசாமியாக இருந்தவர் தந்தை பெரியாராக மாறினார். இதே மனிதர் தான் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு, கடவுள் நிராகரிப்பு என்று பலப் பல சமூகச் சீர்திருத்தங்களைச் செய்திருந்தார். ஆனால், மகளிர் நலனுக்காக அவர் ஆற்றிய சேவை தான், வெறும் ராமசாமியாக இருந்தவரை தந்தை பெரியார் என்கிற மாமனிதன் ஆக்கியது. பெரியாரும், தான் இந்தப் பெயருக்கு மிகப் பொருத்தமானவர் என்பதை நிறுவித்தார். அவர் தோற்றுவித்த திராவிடர் கழகம் என்கிற சமூக நல அமைப்பை தன் துணைவி திருமதி மணியம்மையிடம் விட்டுச்சென்றார். அது வரை எந்தத் தலைவரும் தன் நிறுவனத்தின் பொறுப்பை பெண்களிடம் ஒப்படைத்தாகச் சரித்திரமே இல்லை. ஒரு வேளை பெண்களால் பெரிய பொறுப்பு வகிக்கமுடியுமா என்று மற்றவர்கள் சந்தேகப்பட்டார்களோ என்னவோ? ஆனால், பெரியாருக்கு பெண்ணின் திறன் மீது எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. அவர் நம்பிக்கையைக் காப்பாற்றி, பெரியாரின் பெண்ணியக் கருத்துக்களை அமல்படுத்தும் விதமாகவே, இந்தியாவின் முதல் - முற்றிலும் பெண்களுக்கான பொறியியல் கல்லூரி, தஞ்சை அருகே உள்ள வல்லம் எனும் ஊரில் கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கெல்லாம் சீருடையே பேண்ட்-சட்டை தான். யோசித்துப் பாருங்களேன், இன்று வரை தமிழ்க் கலாசாரத்தின் பெயரால், பெண்கள் கல்லூரிகளுக்கு பேண்ட்-சட்டை போட்டுக்கொண்டே வரக்கூடாது என்று மெத்தப்படித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் எல்லாம் கறார் ஒடுக்குமுறை செய்வதைப் பார்த்தால் உடனே புரிகிறது, பெரியார், உண்மையிலேயே தன் காலத்தை மிஞ்சிய மாபெரும் முற்போக்குச் சிந்தனையாளர் தான். இந்தப் பெரிய மனிதருக்கு இன்றைய எல்லாப் பெண்களும் நன்றி சொல்லக்கடமைப் பட்டுள்ளோம், இன்று நாம் இந்த உயரத்தில் இருக்கக் காரணமே அவர் தான். பெண்களை அடக்குமுறைப் படுத்த முயலும் சாமானிய ஆண்களுக்கு மத்தியில் பெண்களின் மேம்பாட்டிற்காகப் போராடினாரே, அவர் தாம் பெரியார்! எப்பேர்ப்பட்ட பெரியார்!


--------- டாக்டர் ஷாலினி - மனநல மருத்துவர் - (மார்ச் 2008-The Ritz இதழில் வெளிவந்த "The male Feminist" கட்டுரையின் தமிழ் வடிவம்)

----- நன்றி: "உண்மை" மே 16-31