Search This Blog

26.5.18

நாயன்மார் முத்திபெற்ற விதம் - பெரியார்

நாயன்மார் முத்திபெற்ற விதம்!


பெரிய புராணத்தில் காணும் நாயன்மார்கள் பலர் அவர்களில் அறுபத்துமூவர் சிறந்தவர்கள்.

 
இவர்கள் "நற்கருமங்கள் செய்து கைலாயத்தை அடைந்தவர்கள்." இதில் "கடவுளே நேரில் வந்து முக்தி கொடுக்கப்பட்டவர்கள் பலர்."
 
முக்தி பெற இவர்கள் செய்த நற்கருமம் என்ன? என்பது பற்றி சிந்திப்போம்.

 
1.திருநீலக்கண்ட நாயனார்

 
இவர் ஜாதியில் குயவர். நடத்தையால் மிக்க இழி நிலை உடையவர். அதாவது காமக்காந்தகரராய் திரிந்தவர் என்பதை அறிந்து இவரது மனைவியார் தம்மை இனி தீண்டக் கூடாது என்றார்.
 
அதனால் இவர் எந்த மாதரையும் தீண்டாமல் இருந்தார். இவை அறிந்து பரமசிவன் வந்து முக்தி அளித்தார்.

 
2.இயற்பகை நாயனார்

 
அவர் தனது மனைவியை ஓர் அயோக்கியப் பார்ப்பான் விரும்ப, அவனுக்கு அளித்து விட்டார்! அதற்காக சிவபெருமான் வந்து முக்தி அளித்தார்.

 
3.இளையான்குடிமாற நாயனார்

 
இவர் மனைவி தனது வீட்டுக் கூரையைப் பிடுங்கி அடுப்பெரித்து ஒரு பார்ப்பானுக்கு சோறு சமைத்துப் போட்டார்.
 
அதற்காக சிவபெருமான் வந்து இருவருக்கும் முக்தி அளித்தார்.

 
4.மெய்ப்பொருள் நாயனார்

இவர் ஓர் அரசர். இவருக்கு ஞானாபதேசம் செய்வதாய், இந்த அரசரது பகைவன் சிவனடியார் வேடம் தரித்துக்கூற, இவர் மெய்யெனக்கருதி வணங்கும்போது இவரை சிவனடியான் கொன்று விட்டான். அந்த சிவனடியானை, அரசனின் ஆள் கொல்லுகையில் சிவன் வந்து தடுத்தார். இதனால் இவர் முக்தி பெற்றார்.
 
5.அமர்நீதி நாயனார்
 
இவரிடம் ஒரு பிரம்மச்சாரி கொடுத்து வைத்த கோவணம் காணாமல் போனதால் அதற்காக சரி எடையாக வேறு துணி கொடுப்பதாகக் கூறி, ஒரு கோவணத்துணிக்கு சரி எடை பார்க்கையில் தானும் தன் மனைவியும் திராசுத் தட்டில் உட்கார்ந்து சரி செய்து அந்த பிரம்மச்சாரிக்கு தங்களை அடிமைப்படுத்திக் கொண்டார்கள்.
அதனால் சிவன் இவர்களுக்கு முக்தி கொடுத்தார்.
 
6.எறிபத்த நாயனார்
 
இவர் வேறு ஒரு சிவனடியார் கடவுளுக்குப் பூசை செய்ய பூக்குடலை எடுத்து வருகையில் ஒரு யானை அந்தப் பூக்குடலையைப் பிடுங்கி நாசமாக்கிவிட்டது. அதுகேட்டு எறிபத்த நாயனார் அந்த யானையையும் யானைப் பானையும் வெட்டிக் கொன்றுவிட்டார். இதற்காக சோழராஜன் விசாரித்து அக்குற்றத்திற்குத் தன்னை கொல்லும்படி உடைவாளை எறிபத்தரிடம் கொடுத்தார். எறிபத்தர் அதை வாங்கி தன் கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றார். இதற்காக சிவன் வந்து முக்தி அளித்தார்.
 
7.ஏனாதி நாயனார்
 
இவரை இவரது பகைவன் கொல்ல நெற்றியில் விபூதி தரித்து வந்து விபூதிப் பையைக் காட்ட நாயனார் வணங்கி செயலற்று நிற்க உடனே பகைவன் கொன்றுவிட்டான். அதற்காக சிவபெருமான் முக்தி கொடுத்தார்.
 
8.கண்ணப்ப நாயனார்
 
இவர் தனது இரண்டு கண்ணையும் தோண்டி எடுத்து கடவுளுக்குப் புதைத்து தான் குருடனாக இருந்து கொண்டே கடவுளுக்குப் பூசை செய்தவர்.
 
இவரது இரண்டாவது கண்ணைப் பிடுங்கி கடவுள் கண்ணில் புதைக்கும் போது, கடவுளின் கண் இருக்குமிடம் தெரிவதற்காக தனது ஒரு செப்புக்காலை கடவுள் கண் இருக்குமிடத்தில் வைத்து அடையாளம் கண்டுபிடித்து கண்ணை ஒட்ட வைத்தார்.
 
பன்றி மாமிசத்தைச் சுவைத்து ருசி பார்த்து கடவுளுக்கு ஊட்டினார். அதனால் சிவபெருமான் இவருக்கு முக்தி அளித்தார்.
 
9.அரிவாட்ட நாயனார்
 
இவர் தனது செந்நெல் அரிசியைக் கடவுளுக்குப் படைத்துவிட்டு தாம் கார்நெல் அரிசி சாப்பிட்டு வந்தார். அந்த ஊரில் கார்நெல் அரிசி விளையவில்லை. அதனால் பசியோடு இருந்தே செந்நெல் அரிசியை கடவுளுக்கு படைத்து வந்ததால் ஒரு நாள் படைக்க எடுத்துக் கொண்டு கோவிலுக்கு போகும்போது பசி களைப்பால் கால் இடறி விழுந்து விட்டார். படைப்பு உணவு கீழே சிந்திவிட்டது. கடவுளுக்கு இன்று படைக்க உணவு இல்லையே என்று கருதி நாயனார் தன் கழுத்தை அறுத்துக் கொள்ள கத்தியை கழுத்தில் வைத்தார். இதனால் சிவபெருமான் இவருக்கு முக்தி கொடுத்தார்.
 
10.ஆனாய நாயனார்
 
இவர் புல்லாங்குழலில் பஞ்சாட்சரத்தை வாசிப்பார். சராசரங்கள் எல்லாம் ஸ்தம்பித்து நிற்கும். இதனால் சிவபெருமான் இவருக்கு முக்தி அளித்தார்.
 
இந்தப் பத்து நாயன்மார்கள் முக்தி பெற்ற சரிதம் இது. இதைத்தான் பெரிய புராணம் கற்பிக்கிறது. இன்னும் உள்ள நாயன்மார் சரித்திரம் பின்னால் வரும்.

இப்படித்தான் பக்தி செலுத்துவதா? இதற்குத்தான் சிவபெருமான் முக்தி கொடுப்பதா?
 
இதில் இருந்து பக்தர்கள் எவ்வளவு முட்டாள்களாக இருக்க வேண்டி இருக்கிறது?
 
கடவுள்கள் எவ்வளவு இழிதன்மை உடையவர்களாக இருக்க வேண்டி இருக்கிறது?
 
இவைகளை சிவபக்தர்களும், ஆஸ்திகர்களும், புலவர்களும், பெரிய புராணத்தைப் படிக்க வேண்டும் என்று கூறும் சர்.ஆர்.கே.சண்முகம் அவர்களும் மற்றும் கலைவாணர்களும் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்.


                -----------------------------சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தை பெரியார் அவர்கள் சொற்பொழிவு "விடுதலை" 06.05.1950

0 comments: