Search This Blog

19.3.18

பெரியார் : சரியாகப் பெயர் வைத்த பெண்கள்

பெரியார் : சரியாகப் பெயர் வைத்த பெண்கள்





தெய்வ பக்தர் ஒருவர் பெரியாரைச் சந்தித்தார். அவரும் அன்போடு வரவேற்றார். "சொல்லுங்க. என்ன சமாச்சாராமா வந்திருக்கீங்க” என்று கேட்டார். பக்தர் ரொம்பவும் ஆதங்கத்தோடு ஒரு கேள்வியை முன்வைத்தார். “கோடானு கோடி பேர் நம்புகிற கடவுளை வெறும் கல்லுன்னு சொல்றீங்களே. இது நியாயமா?" என்று கேட்டார். பெரியார் அவரிடம் நேரம் செலவழித்து எந்த தத்துவ விளக்கமும் தரவில்லை. அவர்தான்எதிலும் சிக்கனக்காரராயிற்றே!. மேலும் எதார்த்தமான  “வெளிப்படைச் சிந்தனையுள்ள பெரியார் அல்லவா? சித்த என்னோட வரீங்களா? கோயில் வரை போயிட்டு வந்துடலாம்” பெரியார் கேட்டார். வந்தவருக்கு ஆச்சரியம். பெரியாரா? கோயிலுக்கா? ஒன்றும் புரியவில்லை. "சரி போகலாம்” புறப்பட்டு விட்டார்.

இருவரும் கோயிலுக்குப் போனார்கள். கடவுள் சிலை இருக்கிறஇடம் வரை சென்றார் பெரியார். உடன் வந்தவருக்கு ஆச்சரியமோ ஆச்சரியம் . அங்கே பூசை செய்பவரிடம் பெரியார் கேட்டார்.

“இந்த சிலை தங்கமா?”
“அய்ம்பொன்னா?”
“செம்பா?”
“வெண்கலமா?”
பெரியார் கேட்டுக் கொண்டே வந்தார். பூசாரி இல்லை இல்லை என்று பதில் சொன்னார். கடைசியாக, “வேற எதுலதான் செஞ்சிருக்காங்க” என்றார். பூசாரி பட்டென்று "கல்லுல" என்றார்.
தன்னோடு வந்தவரைத் திரும்பிப் பார்த்து பெரியார் சொன்னார். “இதத்தான் நானும் சொல்றேன். பூசாரி சொன்னா பொறுத்துக்குறீங்க. நான் சொன்னா கோவிச்சுக்குறீங்க” என்று சொல்லிட்டு புறப்பட்டு விட்டார். உடன் வந்தவர் வாயடைத்து நின்றார்.
பெரியார் வாழ்க்கையில் இன்னொரு நிகழ்வு. ராமன் படத்தை செருப்பால் அடித்துவிட்டார் என்று பெரியார் படத்தை ராமர் பக்தர்கள்முச்சந்தியில் வைத்து செருப்பால் அடித்துக் கொண்டு இருந்தார்கள்.அடுத்த நாள் “குடிஅரசு” பத்திரிகையில் “செருப்பால் அடிக்க படம்தேவைப்பட்டால் முகவரியை அனுப்பிவையுங்கள் படம் இலவசமாக அனுப்பித்தரப்படும்" என்று குட்டி விளம்பரம்.
பெரியாரின் தோழர்கள் மனம் சங்கடப்பட்டு "என்னங்கய்யா இப்படி போட்டிருக்கிறீர்கள்” என்று கேட்டனர்.
“என்ன? சரியாத் தானே போட்டிருக்கேன். எதாவது அச்சுப்பிழை இருக்கா?” என்று பெரியார் கேட்டார். “அவங்க உங்களை அவமானப்படுத்துறாங்க அவங்களுக்குப் படம்அனுப்பித்தர்ரோம்னு சொல்றீங்க இது உங்களுக்கு நல்லாயிருக்கா” என்று தோழர்கள் கேட்டனர்.
“இத அப்டிப் பாக்கறது தப்பு. நிறைய பேர் என் படத்த செருப்பால அடிச்சா ஏன் அடிக்கிறாங்கன்னு நெறைய பேர் கேப்பாங்க. ராமன் படத்த இவர் செருப்பால அடிச்சாரு. ஆதனாலஅவர் படத்தை இவங்க செருப்பால அடிக்கிறாங்கன்னு சொல்லுவாங்க. ராமன் படத்த நாம செருப்பாலஅடிச்சதுக்கு அவங்களே விளம்பரம் குடுக்கறது நல்லது தானே” என்று பெரியார் எதிர் கேள்வி போட்டு விட்டு இயல்பாக இருந்துவிட்டார்.
இப்படி பெரியாரின் வாழ்க்கையில் எவ்வளவோ நிகழ்வுகள் இருக்கின்றன. எதையும் அவர் இழிவாக எடுத்துக் கொண்டதில்லை. எடுத்துக் கொண்ட செயலில் உறுதியாக இருந்ததால் எல்லாத் தடைகளையும் அவர் இனிதாகவும் பொறுமையாகவும் ஆத்திரப்படாமலும் எதிர் கொண்டார்.
எண்ணியர் திண்ணியராக இருந்தால் எண்ணிய எண்ணியாங்கு எய்துவார் என்பதுதான் வள்ளுவர் நூல் மொழி. இதையெல்லாம் நன்குணர்ந்ததால் தான் தமிழகத்துப் பெண்கள் ஈ.வெ.ராமசாமியாக இருந்தவரை “பெரியார்” என்று அழைத்தனர். அந்தப் பெயர்தான் இன்று தமிழகத்திற்குள் சாதிவெறி சக்திகள் மக்களை அண்டமுடியாமல் காக்கும் நெருப்பாக நீடிக்கிறது. அதனை அணையவிடாமல் பாதுகாப்பது நமது கடமை.
இப்போதைய பெரியார் போல் ஆதிகாலத்திலும் பெரியார்கள் தமிழ் மண்ணில் இருந்துள்ளனர். அவர்களின் அறிவுரையைக் கேட்டு மன்னர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை வள்ளுவர் இரண்டு அதிகாரங்களில் வலியுறுத்தி சொல்லியிருக் கிறார். ஒன்று பெரியாரைத் துணைக் கோடல் (அதிகாரம் - 45), மற்றொன்று பெரியாரைப் பிழையாமை (அதிகாரம் - 90).
இந்தி, சமஸ்கிருதம் என்ற இரு மொழி வெறி கொண்ட எச்.ராஜா போன்ற ஆர்எஸ்எஸ்., சங்பரி வாரம் தமிழ்நெறிகளை எங்கே அறிந்திருக்கப்போகிறது?
பெரியாரைத் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும் ( குறள்  892 )
பெரியாருக்கு மரியாதை கொடுக்காமல் தான் தோன்றித் தனமாகத் திமிரோடு நடந்து கொண்டால் அது பெரும் துன்பத்தைத் தரும் என்று வள்ளுவர் கி.மு. முதல் நூற்றாண்டிலேயே சொல்லியிருக்கிறார். கி.பி. இருபத்தோராம் நூற்றாண்டிலும் இதனைப் புரிந்து கொள்ளாதவர்களை என்னென்று சொல்ல! ஒருவனை நெருப்பு சுட்டுவிட்டால் ஒரு வேளை பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியாரைப் பின்பற்றாமல் தவறு செய்கின்றவர்கள் பிழைப்பதென்பதே இல்லை என்ற கருத்தினை,
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியாரைப் பிழைத்தொழுகுவார் (குறள் 896)
எனும் குறளில் வள்ளுவர் சொல்லிச் செல்கிறார்.
வள்ளுவரைப் பொய் வேடம் பூண்டு சிலர் தூக்கிச் சுமக்கலாம். அவர் யாத்த திருக்குறளில் இருக்கும் கருத்துகளை உள்வாங்காதவர்கள் போலிச் சாமியார்கள் போன்றோரே. அவர்களிடம் எல்லாத் தீச் செயல்களும் மண்டியிருக்கும். சொற்களையும் பயனற்ற சொற்களாகவே உதிர்ப்பார்கள். அப்படிப் பட்டவர்களை மனிதப்பதர் என்றார் வள்ளுவர் (குறள் 196).
இப்படிப்பட்ட பதர்கள் காற்றில் அடித்துச் செல்லப்படும். நெல் மணிகள்தான் களஞ்சியத்தில் இருக்கும். விதைநெல்லாய் என்றும் விளங்குவார் என்ற தொலை நோக்குப் பார்வையோடுதான் தமிழகப் பெண்கள் பெரியார் எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
அவரை இழிவுபடுத்துவதை, அவரது சிலைகள் உடைக்கப்படும் என்பதை, சாதி வெறியர் எனத் தூற்றுப்படுவதை மக்கள் கவனித்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவசரக்காரனுக்குப் புத்திமட்டு என்ற பழமொழியை அறிந்துள்ள மக்கள் புத்திசாலிகள். இதையெல்லாம் உள்ளுக்குள்ளே பொதிந்து வைத்திருப்பார்கள். வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் வெளிப்படுத்துவார்கள். இந்த அனுபவத்தைத்தான் -
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்
என்று வள்ளுவர் சாறாகப் பிழிந்து தந்துள்ளார்.
           --------------------------------நன்றி: மயிலை பாலு -“தீக்கதிர்” 19.3.2018

0 comments: