Search This Blog

22.9.12

பார்ப்பனீய ஒழிப்புத் திருநாள்




சுயமரியாதை இயக்கத்தின் சுமார் 10 வருஷகால வேலையின் பயனாய் பார்ப்பனீயம் ஒரு அளவுக்காவது ஆட்டம் கொடுத்துவிட்ட விஷயம் நாம் எடுத்துக் காட்ட வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறோம்.

ஆன போதிலும், சமுதாய விஷயங்களில் பார்ப்பனீயம் எவ்வளவு பகிஷ்கரிக்கப்பட்டிருக்கின்றதோ, அதில் 8ல் ஒரு பங்கு கூட அரசியல் விஷயத்தில் பகிஷ்கரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்ல முடியாது.

அரசியலில் ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனர்களுக்கு விரோதமாய் வேலை செய்வது என்று பெயர் வைத்துக் கொண்டிருந்தாலும் அதன் தலைவர்கள் என்பவர்கள் பலர், தனிப்பட்ட முறையில் தங்கள் சுயநலத்திற்காக எதையும் விற்றுக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

தோழர் முத்தையா முதலியார் அவர்கள் வகுப்புவாரி பிரதிநிதித்துவத் திட்டம் அரசாங்க உத்திரவு மூலம் போட்ட காரணத்திற்காகவே பார்ப்பனர்கள் அவரை ஒழிக்கச் செய்த சதியில் சில ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களும் உள் உளவாய் இருந்ததோடு, பார்ப்பனரல்லாதார் கட்சியின் பயனாய் முதல் மந்திரி ஸ்தானம் பெற்ற தோழர் முனிசாமி நாயுடு அவர்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதமாய் இருந்து வந்ததுடன் தனது ஸ்தானத்தைக் காப்பாற்ற பார்ப்பனர்களுக்கு அடிமையாக வேண்டிய நிலையையும் அடைந்தார். அதன் பயனையும் அடைந்தார் என்றாலும், இப்போது ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளவும் ஏற்பாடாகி வருகிறது.

இது எப்படியோ இருக்கட்டும். தோழர் முத்தையா முதலியார் அவர்கள் ஏற்படுத்திய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்திரவை ஜஸ்டிஸ் கக்ஷி அரசாங்கம் இப்போது மறுபடியும் பிரசுரித்திருப்பது போற்றத்தக்கதேயாகும்.

இன்றைய தினம் எந்த ஊரில், டவுனில் எடுத்துக் கொண்டாலும் வாசல் கூட்டி, பியூன் ஆகியவர்கள் போன்ற உத்தியோகம் போக பாக்கி உத்தியோகங்களில் பார்ப்பனர்கள்தான் 100க்கு 80 பேர், 90 பேர்கள் இருந்து வருகிறார்கள். அதிலும் நீதி இலாக்காவாகிய முனிசீப்பு, சப் ஜட்ஜ், ஜில்லா ஜட்ஜ் முதலியவைகளும், நிர்வாக இலாக்காவாகிய போலீஸ் டிப்டி சூப்பிரண்டெண்ட், சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ஆகியவைகளிலும் பார்ப்பன ஆதிக்கமே தலைசிறந்து நிற்பதுடன் பார்ப்பனரல்லாதார் முயற்சியையும், முன்னேற்றத்தையும் ஒழிக்கவும், தடுக்கவும் அவைகளின் மூலம் எவ்வளவு காரியம் செய்ய வேண்டுமோ அவ்வளவு காரியங்கள் நெஞ்சில் ஈரமில்லாமல் வன்னெஞ்சத்துடன் ஆங்காங்கு செய்யப்பட்டு வருகின்றதானது எவரும் அறியாததல்ல.

அரசாங்கத்தார் ஒவ்வொரு இடத்திலும் உத்தியோகங்களில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் நிலைமை சரிவரக் காக்கப்படுகிறதா என்று பார்க்க வேண்டும். அதிகாரிகளைக் குறைந்த அளவாவது பார்ப்பனரல்லாதார் பிரதிநிதித்துவம் கவனிக்கப்பட இடமிருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு ஊரில் டிப்டி கலெக்டர் பார்ப்பனராயிருந்தால் தாசில்தார் பார்ப்பனரல்லாதாராய் இருக்கும்படியும், சப்இன்ஸ்பெக்டர் பார்ப்பனராயிருந்தால் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பார்ப்பனரல்லாதாராயும், ஜில்லா ஜட்ஜ் பார்ப்பனராயிருந்தால் சப் ஜட்ஜ் பார்ப்பனரல்லாதாராயும் மற்றும் இதுபோல் அதிகாரங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

அப்படி யில்லாதவரை, அரசியலிலானாலும், தேசியத்திலானாலும், வகுப்பு உணர்ச்சி தாண்டவமாடும் இக்காலத்தில் பல வகுப்பு மக்களுக்கு பந்தோபஸ்து இருக்குமென்று கருதமுடியாது.

அரசாங்கம் சம்மந்தமில்லாத வேறு பல விஷயங்களில் கூடியவரை பார்ப்பனரல்லாதார்கள் விழித்துக் கொண்டார்கள் என்றே சொல்லலாம்.

உதாரணமாக இப்போது நடைபெற்று வரும் முனிசிபல் எலக்ஷன்களில் பார்ப்பனக் கோட்டைகளாயிருந்த சேலம், திருப்பூர் முதலிய இடங்களில் ஒரு பார்ப்பனர் கூட வரமுடியாமல் போனதைப் பார்த்தால் அங்குள்ள காங்கிரஸ் ஆதிக்கமும், பார்ப்பன ஆதிக்கமும் எவ்வளவு என்பது விளங்கும்.

பெண்களும், ஆதிதிராவிடர்களும் ஒவ்வொரு முனிசிபாலிட்டியிலும் ஸ்தானம் பெற்றார்கள் என்றால், அது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் பெருமையாலேயே அல்லாமல் ஜனங்களுக்கு சமரச உணர்ச்சி ஏற்பட்டல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஈரோடு அர்பன் பாங்கி சமீபகாலம் வரை பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்தது என்றாலும் இந்த வருஷம் ஃ பாங்கு தேர்தலில் ஒரு பார்ப்பனருக்குக் கூட இடம் இல்லாமல் போய் விட்டது என்பதோடு ஒரு பெண் டைரக்டரும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறதானது மகிழ்ச்சிக்குரியதாகும். இவ்வளவு இருந்தாலும் சில இடங்களில் ஸ்தானங்கள் பெறப் பார்ப்பனர்கள் கையில் ஆகவில்லை என்றாலும் சிலர் சில பார்ப்பனரல்லாதாரைப் பல வழிகளில் தங்கள் வழிப்படுத்திக் கொண்டு கட்சிகள் தகரார்கள் உற்பத்தி செய்து தாங்கள் ஸ்தானத்தில் இருந்தால் என்ன நடக்குமோ அதுபோல் செய்து வருவது இன்னும் குறைந்தபாடில்லை.

நாட்டில் வகுப்பு உணர்ச்சி ஏற்பட்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. அதிலும் தங்களைப் பிறவியிலேயே உயர்ந்த ஜாதி என்று கருதிக் கொண்டு மற்றவர்களைத் தாழ்ந்த ஜாதியாக கருதிக் கொண்டிருக்கிறவர்களிடத்தில், தாழ்ந்த ஜாதிக்காரர்களாய் கருதப்படுகிறவர்கள் துவேஷமும் வெறுப்பும் இல்லாமல் இருக்கக் கூடும் என்று எதிர்பார்ப்பது மனித இயற்கைக்கு விரோதமானது.

உதாரணமாக ஒரு பிராமணன் என்பவனிடம் ஒரு சூத்திரன் என்பவன் துவேஷமாயிருக்கிறான் என்பது ஒரு நாளும் ஆச்சரியமான காரியம் ஆகாது. மற்றெது ஆச்சரியமான காரியம் ஆகுமென்றால் ஒரு பிராமணன் என்பவனிடம் கூட ஒரு சூத்திரன் என்று அழைக்கப்படுகின்றவன், தீண்டப்படாதவன் என்று அழைக்கப்படுகிறவன் துவேஷமில்லாமல், வெறுப்பு இல்லாமல் இருந்து வருவதுதான் ஆச்சரியப்படத்தக்கதாகும்.

ஆதலால் ஜாதிப்பிரிவு சம்பந்தமான உயர்வு, தாழ்வு இருக்கும் வரை நாட்டில் துவேஷம், வெறுப்பு, வகுப்பு உணர்ச்சி ஆகிய காரியங்களும் ஒரு வகுப்பாரால் ஒரு வகுப்பு கஷ்டமடையும் காரியங்களும் எதிர்பார்த்துத்தான் இருக்க வேண்டும்.

உதாரணம்

இதற்கும் ஒரு உதாரணம் கூறிவிட்டு இதை முடிக்கின்றோம்.

தோழர் எஸ். குஞ்சிதம் குருசாமி அம்மாளை யாவருக்கும் தெரியும். அந்தம்மாள் பி.ஏ., எல்.டி., பாஸ் செய்தவர்கள். அதிலும் யோக்கியதாபக்ஷத்தோடு உயர்ந்த வகுப்பில் பாஸ் செய்தவர்கள். அவர்களின் கல்வித் திறமை, போதிக்கும் திறமை, பிள்ளைகளிடம் அன்பாயிருக்கும் திறமை, சரீராப்பியாச விளையாட்டுகளில் உள்ள திறமை முதலியவைகள் அந்தம்மாள் வேலை செய்த பள்ளிக்கூட தலைமை உபாத்தியாயரின் நற்சாக்ஷிப் பத்திரத்தில் காணலாம். இப்படிப்பட்ட அம்மாள் மைலாப்பூரில் ஒரு பார்ப்பன ஆதிக்கமுள்ள பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயராக மாதம் 70 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு வந்தார்.

அந்தம்மாள் யாதொரு தப்பிதமும் செய்துவிடவில்லை. இரண்டொரு இடங்களில் பகுத்தறிவு பிரசங்கங்கள் செய்தது தவிர யாதொரு பாவத்தையும் அறியார். அப்படிப்பட்டவர்களைத் தோழர்கள் பி.எஸ். சிவசாமி அய்யர், டி.ஆர்.வெங்கிட்ட ராமசாஸ்திரி, சி.பி.ராமசாமி அய்யர், அல்லாடிக் கிருஷ்ணசாமி அய்யர் ஆகியவர்கள் போன்றவர்கள் நிர்வாக கமிட்டியாய் இருக்கும் பள்ளிக்கூடத்தில், அந்தம்மாளுக்கு இனி வேலை இல்லை என்று நோட்டீஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் என்றால், வகுப்பு உணர்ச்சியில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

இந்தப்படி ஒரு பார்ப்பனரல்லாதார் ஆதிக்கமுள்ள ஸ்தாபனங்களில் இருந்து, தகுந்த ஒழுக்கக் குறைவுள்பட ஒரு குற்றத்துக்காக ஒரு பார்ப்பனரை நீக்கிவிட்டால் அக்கிரகாரம் முதல் கொண்டு சர்க்கார் அதிகாரிகள் ஹைகோர்ட்டு வரை அந்த ஸ்தாபனத்தின் மீது பழி வாங்க நினைக்கிறார்கள். "பிராமணத் துவேஷம்" பிராமணத் துவேஷமென்று கூப்பாடு போடுகிறார்கள்.

பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தில் இருக்கிற எந்த ஸ்தாபனங் களிலாவது 100க்கு 10 வீதமாவது பார்ப்பனரல்லா தார்களுக்கு வேலை கொடுக்கிறார்களா? எனப் பார்த்தால் வகுப்பு துவேஷம் யாரிடத்தில் இருக்கிறது என்பது விளங்கும்.

ஆதலால் பார்ப்பனரல்லாத மக்கள் இனியாகிலும் இவ்விஷயங்களை உணர்ந்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள முயற்சிப்பதுடன் காந்தி ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஹரிஜன நாள், ஏகாதிபத்திய ஒழிப்பு நாள், மே டே என்பது போன்ற நாள்களை வருஷத்துக்கு ஒரு நாள் கொண்டாடுவது போல் "பார்ப்பன ஆதிக்கம் ஒழிப்பு நாள்" என்பதாக வருஷத்தில் ஒரு நாள் கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், அதை அடுத்து வரும் தீபாவளிக்கு அடுத்த நாளோ, அல்லது முந்திய நாளோ வைத்துக் கொள்வது நல்லது என்றும் அபிப்பிராயப்படுகின்றோம்.

இத்தினங்களில் ஆங்காங்கு கூட்டம் போட்டு பார்ப்பன ஆதிக்கக் கொடுமை, சமுதாயத்திலும், அரசியலிலும் இருப்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டி தீர்மானங்களை நிறைவேற்றி, அரசாங்கத்துக்கும் பத்திரிக்கைகளுக்கும் அனுப்ப வேண்டிய வேலையை அத்திருநாள் கொண்டாட்ட வேலையாக வைத்துக் கொள்ளலாம் என்றும் அபிப்பிராயப்படு கின்றோம். இன்ன நாள் என்பதைப் பின்னால் உறுதிப்படுத்துகிறோம்.

        -----------------தந்தைபெரியார் -”பகுத்தறிவு” துணைத் தலையங்கம் 30.09.1934

0 comments: