Search This Blog

8.8.12

ஜாதியைச்சாய்ப்போம்!சமத்துவம் பேணுவோம்!சமதர்மம் படைப்போம்!

முளையிலேயே கிள்ளி எறிக!


மதுரை மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர், இமானுவேல் ஆகியோர் தம் சிலைகள் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணமானவர்களை உடனடியாகக் கண்டுபிடித்து,  சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தர தமிழ்நாடு அரசு முனைப்புக் காட்டவேண்டும்.

வேறுவகையான வண்ணம் பூசப்பட்டு விசிறிவிடு வதற்குச் சில தீயசக்திகள் முயலக்கூடும். அதற்கு இடம் கொடுக்காமல், எவ்வளவு சீக்கிரம் குற்றவாளி களைப் பிடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக வேகத்தை இதில்  காவல்துறை காட்டவேண்டும்.


தென் மாவட்டங்களில் தலைவர்களின் சிலைகள் பாதுகாப்பாகக் கூண்டுக்குள் வைக்கப்பட்டு இருப்பதே அவமானகரமான ஒன்றுதான் என்றாலும், அதையும் மீறி சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பது எப்படி?

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக தலைவர்களாக ஆக ஆசைப்படுபவர்கள் எளிதாகக் கண்டு பிடித்துள்ள வழி ஜாதி சங்கத்தை உண்டாக்குவதே!

நாட்டு மக்களுக்கு உண்மையான தலைவர்களாக வரவேண்டும் என்றால் கொள்கைகளும், லட்சியங் களும் இருக்க வேண்டும். அவற்றை நிறைவேற்று வதற்கான செயல் திட்டங்கள் இருக்க வேண்டும். அவற்றை நிறைவேற்றும் போது உரிய விலையைக் கொடுத்தாகவும் வேண்டும்.

ஜாதி சங்கத்தின் மூலம் எளிதாகத் தலைவராகி விட முடியும்; கொள்கைக் கோட்பாடுகள் என்றெல்லாம் தேவைப்படாது; பழம் பெருமையைச் சொன்னாலே போதுமானது அல்லது சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள இன்னொரு ஜாதியினரை எதிரி என்று காட்டி சுயஜாதி மக்களிடம் செல்வாக்குத் தேடிக் கொள்வது - இதுதான் ஜாதித் தலைவர்கள் செய்யக்கூடிய காரியம்.

மற்றபடி அம்மக்களின் சூத்திரத் தன்மையைப் பற்றியோ, கல்வி, வேலை வாய்ப்புகளில் அவர்கள் முன்னேற வேண்டும் என்பது குறித்தோ சிந்தனையும் கிடையாது. செயல் திட்டமும் கிடையாது. புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் என்மேலே படுத்துக் கொள்ளுங்கள் என்று கூறும் தந்திரம் போலவே, அம்மக்களுக்கு வழி காட்டி தாம்தான் என்று காட்டிக் கொள்வது எல்லாம் ஏமாற்று வேலை மட்டுமல்ல. அம்மக்களை முற்போக்குத் திசைப் பக்கம் வந்துவிடாமல் தடுக்கும் பிற்போக்குத்தனமாகும்.

இப்பொழுது அடுத்த கட்டமாக தங்கள் ஜாதிக் காரர்கள் வேறு ஜாதிக்காரர்களைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று ஜாதித் தூய் மையைக் காப்பாற்றும் கடைந்தெடுத்த பிற்போக்குப் பாதையைக் காட்டத் தொடங்கியுள்ளனர். இதில் கொங்கு வேளாளர் அமைப்பும், வன்னியர் சங்கமும் முஷ்டியைத் தூக்குவது வேதனையைத் தரக்கூடிய தாகும்.

(அச்சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இதனை ஏற்றுக் கொள்கிறார்களா என்பது வேறு விஷயம்).


ஜாதிக்குள்ளோ, உறவினர்களுக்குள்ளோ திருமணம் செய்துகொள்வது கூட மருத்துவ ரீதியாகக் கூடாத ஒன்றாகும்.

சம்பந்தப்பட்ட சமுதாயத்தில் உள்ள இளைஞர்கள் படித்தவர்கள், பகுத்தறிவாளர்கள் ஆகியோர் முன்வந்து ஜாதி அடிப்படையின் ஆணிவேரைக் கெல்லி எறியவேண்டும்.

21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் - அறிவியல் கண்டுபிடிப்புகள் நாளும் வளர்ந்து நம்மை நாம் மேன்மைப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக, சக மனிதனை ஜாதிக் கண்கொண்டு பார்ப்பதும், உறுமுவதும் அறிவுடைமையானதுதானா? பண்புடையதுதானா?

ஜாதியை ஒழித்து சமத்துவ சமூகத்தை உருவாக்க தம் வாழ்நாளையே ஒப்படைத்து உழைத்த தந்தை பெரியார் பிறந்த மண்ணில் ஜாதிக் களைகளை வளர்க்கலாம் என்று நினைப்பது, நாட்டைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் பிற்போக்குத் தனமாகும்.

ஜாதியைச் சாய்ப்போம்!

சமத்துவம் பேணுவோம்!

சமதர்மம் படைப்போம்!

வாழ்க பெரியார்!

          -----------------------------------"விடுதலை” தலையங்கம் 8-8-2012

11 comments:

தமிழ் ஓவியா said...

தமிழன் என்றாலே துவேஷம்தானா?

கேள்வி: தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் ஏழாவது மணல் திட்டில் இலங்கைக் கடற்படையின் புதிய முகாம் அமைக்கப்பட்டுள்ளதுபற்றி?

- மு. பெரியசாமி, விட்டுக்கட்டி

பதில்: அங்கிருந்துதான் இலங்கைக் கடல் பகுதியின் எல்லை ஆரம்பிக்கிறது. ஆறாவது திட்டு வரை இந்தியாவின் கடல் எல்லை. நமது எல்லையில் ஒரு பாதுகாப்பு அரணும் இல்லை. தன் எல்லையைப் பாதுகாத்துக் கொள்வதில் இலங்கை முனைப்புடன் இருப்பதில் தவறில்லை. ஆனால், இந்திய மீனவர்களை அச்சுறுத்தக் கூடாது. காலம் காலமாக இருந்துவரும் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு எதையுமே சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை என்பதுதான் பரிதாப நிலை.

(கல்கி, 12.8.2012)

ஈழத் தமிழர்கள் பிரச்சினையாக இருந்தாலும், தமிழக மீனவர்கள் பிரச்சினையானாலும் இந்தப் பார்ப்பனர்கள் எதிரிகளின் பக்கம் நின்றுதான் வெண்சாமரம் வீசுவார்கள். நம் வீட்டுக் கச்சத் தீவைத் தூக்கிக் கொடுத்துவிட்டு, இப்படித் தொங்க வேண்டியுள்ளதே என்பதுபற்றி ஒரே ஒரு வரி எழுதமாட்டார்கள்.

எதிரிகளோடு சேர்ந்துகொண்டு துப்பாக்கியை நம் பக்கம் திருப்புவார்கள் - தமிழர்கள் என்றால் அவ்வளவுத் துவேஷ நஞ்சு இந்தப் பார்ப்பனர் களுக்கு! 8-8-2012

Kiruththikan Yogaraja said...

உங்கள் பதிவுகளை வாசித்தேன்..முக்கியமாக பகுத்தளிவாளிகளில் தளத்தில் இயங்கும் உங்களது கருத்துக்கள் சூப்பர்..நான் முதல் முதலில் எனது அம்மாவிடம் கடவுள் உண்மையிலேயே இருக்கின்றாரா என கேட்ட போது வாயிலே அடித்தார் அம்மா..அ..ஆ படித்த பின்னர் அடுத்து படித்தது சயன்ஸை அல்ல கடவுள் ஒருவர் இருக்கின்றார் கடவுள் எல்லாம் வல்லவர்..இப்படி சிறிய வயதிலேயே மனதால் மிகவும் வற்புறுத்தி பயப்படுத்தி வைத்திருக்கின்றார்கள் இதனால் பலரால் இதைத்தாண்டி வெளியில் வர முடிவதில்லை...அவர்களுக்கு தமது தோல்விகளை துக்கங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவற்றை பிறிதொன்றின் மீது திணிப்பதற்கு தேவைப்படும் ஒரு வார்த்தை கடவுள்...உங்களளவுக்கு முடியாது விடினும் இதை ஓரளவுக்கு எழுதியுள்ளேன் நேரமிருப்பின் வாசியுங்கள்...

http://www.venkkayam.com/2012/08/blog-post.html

Kiruththikan Yogaraja said...

http://www.venkkayam.com/2012/08/blog-post.html

DevendraKural said...

How many have fighthted for justices for paramakudi firing?

How many have frighted for justice for Tamiraparani Firing?

....I suffered in ramnathapuram kalavaram......no one have come forward to save us when we are targeted by government.

WE ARE ONLY SAVED BY SO CALLED CASTE.......AND WE DONT WANT TO TRUST ANY ONE>>>>>>CASTE IS NOTHING BUT A GROUPE OF FAMILYS.

தமிழ் ஓவியா said...

கிருஷ்ண ஜெயந்தியாம்...
அவதாரமா? ஆதிக்கடவுளா?

பிரம்மவைவர்த்த புராணம் என்றொரு ராஸிக புராணம் புளுகி வைத்திருக்கிறார்கள். வைவர்த்தம் என்றால் பரிணாம வளர்ச்சி எனப் பொருள். பிரம்மனின் உருமலர்ச்சிப் புராணமாகும் இது. சூத முனிவன் நைமிகாரண்யத்தில் பிற முனிவர் களுக்கு இப்புராணத்தைக் கூறினாராம். இதன் மூன்றாம் காண்டம் கிருஷ்ண அவதாரம், கிருஷ்ண லீலைகள் பற்றிக் கூறுகிறது.

பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்தபோது சொர்க்க லோகமும் அழிந்துவிட்டதாம் இவை இரண்டிற்கும் இடைப்பட்ட புவர்லோகம் அழிந்துவிட்டதாம். வைகுந்தமும் சிவலோகமும் காலியாகிவிட்டனவாம். (குடியிருந்தவர்கள் குளோஸ்) ஆனால், கிருஷ்ணனின் கோலோகம் பிரளயத்தின் போது எவ்வித மாற்றமும் இல்லாமலே இருந்ததாம்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் கிருஷ்ணனை விஷ்ணுவின் அவதாரம் என்கிறார்கள். ஆனால், வைகுந்தம் வேறு - கிருஷ்ணனின் கோலோகம் வேறு என்கிறார்கள். ஒருபடி மேலே போய்ப் பரப்பிரம்மமே விஷ்ணுவல்ல, கிருஷ்ணனே என்கிறது! பீம்சிங்! இது என்ன புதுக் குழப்பம்? துக்ளக் சோ விளக்கவேண்டும்.

விஷ்ணு இன்னும் எப்படிக் கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது பாருங்கள்! கிருஷ்ணனின் வலது புறத்தில் நாராயணன் தோன்றியதாம். கிருஷ்ணனைப் போற்றி புகழ்ந்து எதிரில் உட்கார்ந்ததாம் நாராயணன். கிருஷ்ணனின் இடது புறத்தில் சிவன் தோன்றியதாம் பிரம்மா, யமன், சரசுவதி, மகாலட்சுமி, துர்க்கை, சாவித்திரி மன்மதன், ரதி என கடவுள் பட்டாளமே கிருஷ்ணன் உடலிலிருந்தே தோன்றினவாம்.

விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணன் எனக்கூறி அவனுக்குக் காமக் களியாட்டங்களைக் கற்பித்துக் கடைசியில் ஜேரா என்னும் வேடன் விட்ட அம்பால் காலில் காயம்பட்டு (டெட்டனஸ் எனும் விறைப்பு நோயால்) இறந்து போனான் என்று பாகவதம் கூறுகிறது.

எதை ஏற்பது? எதன் அடிப்படையில் கிருஷ்ண ஜெயந்தி? விளக்குவார்களா? விளங்கிக் கொள்ளாமலே, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடலாமா? பக்தர்களே, புத்தி மீதி இருந்தால் சிந்தித்துப் பாருங்களேன்!

-----------------------நன்றி:- "விடுதலை" 4-8-2008

தமிழ் ஓவியா said...

கோகுலாஷ்டமியா?

இன்று கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாளாம். பிறப்பு இறப்பு அற்றவர் உருவம் அற்றவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் வாய்ப்பறை கொட்டுவோர் அதற்கு நேர் எதிராக அறிவு நாணயமற்ற முறையில் கடவுள் பிறந்தார் என்றும், இந்த உருவத்தில் உள்ளார் என்றும், அந்தக் கடவுளுக்கும் பெண்டாட்டிகள், வைப்பாட்டிகள், பிள்ளை குட்டிகள் உண்டு என்றும் கூறும் அபத்தத்தை ஆபாசத்தை என்னவென்று சொல்ல!

கடவுள் சண்டை போட்டார்; கொலை செய்தார் விபச்சாரம் செய்தார்; சூழ்ச்சி செய்தார்; தந்திரம் செய்தார் என்றெல்லாம் கடவுள்கள் இந்து மதத்தில் கற்பிக்கப்பட்ட திலிருந்து இந்து மதத்தின் சாக்கடை நாற்றத்தையும் இவ்வாறெல்லாம் தெருப்புழுதியாக எழுதி வைத்துள்ள ஆசாமிகளின் ஆபாச சேட்டைகளையும் ஆறறிவுள்ள மனிதர்கள் எண்ணிப் பார்க்கவேண்டாமா?

இன்றைக்குக் கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடுகிறார்களே இந்தக் கிருஷ்ணன் எப்படிப் பிறந்தானாம்?

தேவர்கள் எல்லாம் போய் உலகில் அதர்மம் அதிகமாகிவிட்டது; இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை; அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்கவேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம். கறுப்பு மயிர் கிருஷ்ணனாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் ஆயினவாம் இவ்வாறு கூறுவது இந்து மதத்தின் அபிதானகோசம்தான்.

எவ்வளவுக் காட்டுமிராண்டித்தனத்தில் கடவுளின் கீழ்த்தர உற்பத்தி நடந்திருக்கவேண்டும்?

கடவுள்தானே தேவர்களையும், ராட்சதர்களையும் படைத்தான் என்கின்றனர். அப்படி இருக்கும்போது கடவுளால் படைக்கப்பட்ட ராட்சதன், கடவுளால் படைக் கப்பட்ட இன்னொரு தேவர்களை எப்படித் துன்புறுத்துவான்? கடவுளின் வளர்ப்பு சரியில்லையா?

எந்த அவதாரம் எடுத்தாலும் ராட்சதனைக் கொன்றான் ராட்சதனைக் கொன்றான் என்று எழுதி வைத்துள்ளார் களே, அந்த ராட்சசன் வம்சம் அழிந்து போய்விட்டதா அல்லது தொடர்கிறதா?

வரலாற்று ஆசிரியர்கள் எல்லாம் பார்ப்பன பி.டி. சீனிவாசய்யங்கார் உள்பட, இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று விநியோகம் செய்து வந்த விவேகானந்தர் வரை ராட்சதர்கள் என்று இதிகாசங்களிலும், வேதங்களிலும், புராணங்களிலும் சொல்லப்படுபவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று எழுதியுள்ளார்களே இதன் பொருள் என்ன?

திராவிடர்களை இழிவுபடுத்த, மட்டந்தட்ட, கொன் றொழிக்க, இட்டுக்கட்டி எழுதப்பட்ட சரக்குகள்தான் இவை என்பது விளங்கவில்லையா?

நாட்டில் நடப்பது ஆரியர் திராவிடர் போராட்டம் என்று தந்தை பெரியார் சொன்னதும் தேவர்கள் அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை என்று சி. ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) 18.9.1953 அன்று திருவொற்றியூரில் பேசியதும் இதனை நிரூபிக்கின்றனவே!

பார்ப்பனர்களுக்காகப் போரிட்டவர்களுக்கு விழா கொண்டாடும்போது அவர்களை எதிர்த்துப் போரிட்ட திராவிடர்கள் என்ன செய்யவேண்டும்? அந்தக் கடவுள் களை வீதிக்கு வீதி போட்டுக் கொளுத்தவேண்டாமா?

தந்தை பெரியார் இராமன் படத்தை எரிக்கச் சொன்னதும், பிள்ளையார் பொம்மைகளை வீதிகளில் போட்டு உடைக்கச் சொன்னதும் இந்த அடிப்படையில் தானே?

புத்த மார்க்கத்தை ஒழிக்கத்தான் கிருஷ்ண அவதாரம் கற்பிக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

புத்தர் ஒழுக்க நெறிகளைப் போதித்தார் கட்டுப் பாடுகளை, நியதிகளை வரையறுத்தார். ஆரியர்களின் யாகங்களை எதிர்த்தார். அவர்கள் வகுத்த வருணாசிரம அமைப்பை நிர்மூலப்படுத்தினார்.

அந்த ஒழுக்க நெறிகளுக்கு மாறாக ஆபாச உணர்வையும், விபச்சாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் ஒரு கதாபாத்திரத்தை (கிருஷ்ணனை) உருவாக்கி கவர்ச்சியைக் காட்டி மக்களை மதிமயங்கச் செய்த ஏற்பாடுதான் இது.

சினிமாக்காரர்களைக் காட்டியும், பாலுணர்வைத் தூண்டும் சமாச்சாரங்களை ஒளிபரப்பியும் மக்களை இப்பொழுது திசை திருப்பவில்லையா? மதி மயக்கம் செய்யவில்லையா? இந்த ஒழுக்கங்கெட்ட விவகாரங்களை இந்து மதத்தின் கிருஷ்ணாவதாரத்திலிருந்து கற்றுக் கொண்டவர்கள்தான் இவர்கள்.

குளிக்கும் பெண்களின் ஆடைகளைத் திருடிச் செல்வதும், நிர்வாணமாகக் கரைக்கு வந்து இரு கைகளையும் உயரே தூக்கிக் கும்பிட்டால்தான் ஆடைகளைக் கொடுப்பேன் என்று அடாவடித்தனம் செய்ததும் தான் கிருஷ்ணக் கடவுளின் சிறப்பாம்.

இந்தக் கேவலமான கடவுளின் பிறந்த நாள் என்று கூறி அரசு விடுமுறை வேறு விடுகிறது. செல்வி ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த இந்த விடுமுறை இப்பொழுதும் தொடர்வது நியாயந்தானா?

--------------------"விடுதலை” தலையங்கம் 1-9-2010

தமிழ் ஓவியா said...

இரு கிருஷ்ணர்கள்!


டில்லியில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி என்கிற பண்டிகையின் போது தீண்டாதவர்கள் என்கிறவர்களை எல்லாம் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பத்திரிகையில் காணப்படுகிறது. புராணங்களின்படி கிருஷ்ணன் என்பதாக ஒரு சுவாமியோ, ஆசாமியோ இருந்ததாக நாம் ஒப்புக் கொள்வதனால் அது ஒரே சாமியாகத்தான் இருந்திருக்கலாமே தவிர, டில்லிக்கு ஒரு கிருஷ்ணனும், தமிழ்நாட்டுக்கு ஒரு கிருஷ்ணனும் இருந்திருக்க முடியாது.

அப்படியிருக்க டில்லி கிருஷ்ணனை "தீண்டாதவர்கள் கோவிலுக்குள் போனால் ஓடிப்போகாமல் கோவிலுக்குள்ளாகவே தைரியமாய் உயிருடன் இருக்கும்போது, நமது தமிழ்நாட்டிக் கோவில்களில் உள்ள கிருஷ்ணன் மாத்திரம் தீண்டாதவர்கள் உள்ளே கோவிலை விட்டு ஓடிப்போவதோ அல்லது ஒரே அடியாய் செத்துப் போவதோ!

ஆனால், இந்த மாதிரி கிருஷ்ணனை வைத்து பூஜை செய்வதால் நமக்கு என்ன பலன் அவரால் உண்டாகக் கூடும். ஒரு மனிதன் உள்ளே வந்தால் தாக்குப் பிடிக்காத கிருஷ்ணன் யாருக்கு என்ன செய்ய முடியும்.

ஆதலால், நாம் தமிழ்நாட்டு கிருஷ்ணனைத் தூக்கிவிட்டு இனிமேல் டில்லி கிருஷ்ணனைத் தான் தருவித்துக் கொள்ள வேண்டுமெயல்லாமல் இந்த மாதிரி சக்தியில்லாத கிட்டப் போனால் ஓடிப்போகிற கிருஷ்ணன் இனி நமக்கு அரை நிமிஷங்கூட கண்டிப்பாய் உதவவே உதவாது.

-------------"சித்திரபுத்திரன்" என்னும் புனை பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதியது – "குடிஅரசு" 28-08-1927.

தமிழ் ஓவியா said...

அவதாரமா? ஆதிக்கடவுளா?

பிரமவைவர்த்த புணம் என்றொரு ராஸிக புராணம் புளுகி வைத்திருக்கிறார்கள். வைவர்த்தம் என்றால் பரிணாம வளர்ச்சி எனப் பொருள். பிரம்மனின் உருமலர்ச்சிப் புராண மாகும் இது. சூத முனிவன் நைமிகாரண்யத்தில் பிற முனிவர் களுக்கு இப்புரணத்தைக் கூறினாராம். இதன் மூன்றாம் காண்டம் கிருஷ்ண அவதாரம், கிருஷ்ண லீலைகள் பற்றிக் கூறுகிறது.
பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்தபோது சொர்க்க லோகமும் அழிந்துவிட்டதாம் இவை இரண்டிற்கும் இடைப் பட்ட புவர்லோகம் அழிந்துவிட்டதாம். வைகுந்தமும் சிவ லோகமும் காலியாகிவிட்டனவாம். (குடியிருந்தவர்கள் குளோஸ்) ஆனால், கிருஷ்ணனின் கோலோகம் பிரளயத்தின் போது எவ்வித மாற்றமும் இல்லைமலே இருந்ததாம்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் கிருஷ்ணனை விஷ்ணுவின் அவதாரம் என்கிறார்கள். ஆனால், வைகுந்தம் வேறு - கிருஷ்ணனின் கோலோகம் வேறு என்கிறார்கள். ஒருபடி மேலே போய்ப் பரப்பிரம்மமே விஷ்ணுவல்ல, கிருஷ்ணனே என்கிறது! பீம்சிங்! இது என்ன புதுக் குழப்பம்? துக்ளக் சோ விளக்கவேண்டும்.

விஷ்ணு இன்னும் எப்படிக் கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது பாருங்கள்! கிருஷ்ணனின் வலது புறத்தில் நாராயணன் தோன்றியதாம். கிருஷ்ணனைப் போற்றி புகழ்ந்து எதிரில் உட்கார்ந்ததாம் நாராயணன். கிருஷ்ணனின் இடது புறத்தில் சிவன் தோன்றியதாம் பிரம்மா, யமன், சரசுவதி, மகாலட்சுமி, துர்க்கை, சாவித்திரி மன்மதன், ரதி என கடவுள் பட்டாளமே கிருஷ்ணன் உடலிருந்தே தோன்றினவாம்.

விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணன் எனக்கூறி அவனுக்குக் காமக் களியாட்டங்களைக் கற்பித்துக் கடைசியில் ஜேரா என்னும் வேடன் விட்ட அம்பால் காலில் காயம்பட்டு (டெட்டனஸ் எனும் விறைப்பு நோயால்) இறந்து போனான் என்று பாகவதம் கூறுகிறது.

எதை ஏற்பது? எதன் அடிப்படையில் கிருஷ்ண ஜெயந்தி? விளக்குவார்களா? விளங்கிக் கொள்ளாமலே, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடலாமா? பக்தர்களே, புத்தி மீதி இருந்தால் சிந்தித்துப் பாருங்களேன்!

---------------- நன்றி: "விடுதலை" 20-8-2008

தமிழ் ஓவியா said...

இணையத்தில் முதல் தமிழ் நாளிதழ்

தமிழ் மொழியில் இணையத்தில் வந்த முதல் நாளிதழ் விடுதலை. தமிழ்நாட்டில் முதன்முதலாக ஒருங்குறி (Unicode) பயன்படுத்திய முதல் இதழும் விடுதலையே.

முரசொலி நாளேட்டின் ஆசிரியர் செல்வம் சட்டமன்றக் கூண்டில் ஏற்றப்படுவதன் மூலம் அதிமுக அரசால் எழுத்துரிமை பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தலையங்கப் பகுதி வெற்றிடமாக அச்சிடப்பட்டது. (21.09.1992) விடுதலையின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்ட தேவநேயப் பாவாணருக்கு தபால்தலை வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோள் முதல்வர் கலைஞர் அவர்களால் கத்தரித்து டெல்லிக்கு அனுப்பப்பட்டு, அதன் விளைவாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

ஆசிரியர் கி.வீரமணி பொறுப்பேற்ற பின் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு படக்கதையாக விடுதலையில் வெளிவந்தது.

உலகின் ஒரே நாத்திக நாளேடான விடுதலை தனது இரண்டாம் பதிப்பை திருச்சியில் தொடங்கியது.

சென்னை ரிசர்வ் வங்கியின் பார்ப்பன அலுவலர்கள் தீட்டுக் கழிப்பது என்ற பெயரால் நடத்தவிருந்த யாகத்தைக் கண்டித்து விடுதலை எச்சரிக்கை செய்தி வெளியிட்டது. இதன் பலனாக வங்கி மேலாளர் ராமசந்திர ராஜூ அவர்கள் யாகம் நடத்த அனுமதி இல்லை என்று அறிவித்தார். (17.11.1993)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏ.மேட்டூரில் உள்ள தொடக்கப்பள்ளியில் சத்துணவுக் கூடத்துக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி மகேஸ்வரி என்பவர் நியமிக்கப்பட்டதை மக்கள் எதிர்த்ததால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதைக் கண்டித்து விடுதலை தலையங்கம் தீட்டியது. அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலையிட்டு அந்த உத்தரவை ரத்து செய்தார்.
1-15 2012

தமிழ் ஓவியா said...

விடுதலை வாசித்தால் திருப்தி


நினைவு தெரிந்த நாளில் இருந்தே தினமலர், தினமணி, துக்ளக், விகடன், கல்கி மற்றும் The Hindu இதழ்களையே படித்துக் கொண்டிருந்ததால், இணையத்தில் விடுதலை நாளிதழை வாசித்த போதோ பெரும் பிரமிப்பு !

இப்படியும் ஒரு நாளிதழ் இருக்க முடியுமா? இது சாத்தியமா? அல்லது காண்பது கனவா? எனும் நினைவே வந்தது.

பிரமிப்பு

க்கு காரணம்? வேறொன்றுமில்லை, இதுகாரும் தந்தை பெரியாரை பற்றியும், தந்தை பெரியாரின் கொள்கையைப் பற்றியும் அறியாத நிலையில் இருந்திருக்கிறோம் என்பதே பிரமிப்புக்கு ( வேதனைக்கு ) காரணம்.

இவ்வளவு நாளாக வாசித்து வந்த சராசரி இதழ்களில், தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏன் பகிரவில்லை? என்ற கேள்விதான் முதலில் வந்தது. தந்தை பெரியாரின் கொள்கைகளை விடுதலை மூலம் தெரிந்து கொண்ட பின்னரே புரிந்தது, இதுகாரும் வாசித்து வந்த சராசரி இதழ்கள், தந்தை பெரியாரின் கருத்துக்களை பரப்பவும் இல்லை; அதே வேளையில் மூட நம்பிக்கை கருத்துக்களை பரப்புகிறார்கள் என்பதும் புரிந்தது. அதாவது, பெரியாரின் கருத்துக்கள் இருட்டடிப்பு; தந்தை பெரியாரின் கருத்துகளுக்கு எதிர்மறையான செய்திகளைப் பரப்புவது. இப்படியாகத்தான் தமிழகத்தின் இதழ்கள் இருக்கின்றன.

எவ்வளவு காலம்தான் உண்மையை மறைத்து வைக்க முடியும் ? உண்மை ஒரு நாள் உலகத்தின் வெளிச்சத்திற்கு வந்தே தீரும். யாரெல்லாம் உண்மையை மறைத்தார்களோ அவர்களைப் பார்த்து காலம் கட்டாயம் கேள்வி கேட்கும்.

வலைப்பூ எழுதத் தொடங்கிய காலத்தில், செய்திகள் தேட விழைந்த போது, கூகுளில் வந்து விழுந்ததுதான் விடுதலை எனும் அறிவுச் சுரங்கம். அன்றிலிருந்து இஇன்றுவரை வாசித்து வந்த இதழ்களான தினமலர், தினமணி, துக்ளக், விகடன், கல்கி மற்றும் The Hindu போன்றவற்றை வாசிக்கும் ஈடுபாடு குறைந்து, தினமும் விடுதலை வாசித்தால்தான் திருப்தி எனும் நிலை வந்துவிட்டது.

எங்கிருந்தோ, தமிழகத்தில் உள்ள ஓர் ஆற்றங்கரையில் உள்ள குக்கிராமத்தில் இருந்து இங்கிலாந்தில் உள்ள பெரும் வங்கியில் மென் பொருள் நிபுணராகப் பணி புரியும் வாய்ப்பு அமையப் பெற்றது என்றால்? அதற்கு அடித்தளம் இட்டது திராவிடர் கழகம் ! திராவிடர் கழகம் ! திராவிடர் கழகம் !

தந்தை பெரியாரின், அன்னை மணியம்மையாரின், தமிழர் தலைவர் அவர்களின் தன்னலமற்ற தொண்டறமே தமிழகம் கல்வி நீரோடையில் தங்கு தடையின்றி பயணிக்கக் காரணம்.

தந்தை பெரியாரின் வாக்கின் படி, நன்றி என்பது பலனடைந்தவர்கள் காட்ட வேண்டிய குணமேயன்றி; பலனை விளைவித்தவர்கள் எதிர்பார்க்கக் கூடிய குணம் அல்ல, எனும் நிலையிலேயே திராவிடர் கழகம் தன்னலம் பாராது சமுதாய வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுகிறது.

சமூக நீதியினை நிலை நாட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 31% லிருந்து 50% ஆக உயர்ந்ததும்; பின்னர், 50% லிருந்து 69% ஆக உயர்ந்ததும் திராவிடர் கழகமே என்பதை அறியாத பலன் பெற்ற பலனாளிகள் பலரும் இருக்கிறார்கள்.

அப்படிப் பலன் பெற்ற பலரும் நன்றியைக் காட்டவில்லை. ஆனாலும் மறக்காமல், அதே வேளையில் தாங்கள் பெற்ற பலனை மட்டும் லாவகமாக மறைத்துக் கொண்டு, திராவிடர் கழகத்தை குறை கூற முனைகிறார்கள்.

அப்போதுதான் புரிந்தது, குறை கூறுவோர் பலன் பெற்றவர்கள் என்றும்; அவர்கள் நன்றியை காட்டவில்லை என்றும்; பலனுக்கு காரணமான திராவிடர் கழகமோ நன்றியை எதிர்பார்க்கவும் இல்லை என்று.

சரி போகட்டும்! குறை கூறுகிறார்களே; கூறுகிற குறையிலாவது நியாயம் நேர்மை பொது நலம் இருக்கிறதா? என்று பார்த்தால் அதுவும் இல்லை. இப்படிப் பட்ட பலன் பெற்ற படித்த மேதைகள் பலரும் இருக்கிறார்கள்.

இப்படிப் பட்ட பலன் பெற்ற படித்த மேதைகள் தங்களைப் பற்றி மட்டும் கவலைப்படும் அதே வேளையில், திராவிடர் கழகமோ, ஆசிரியர் அய்யா அவர்கள் தலைமையில், பலன் பெற வேண்டிய எண்ணற்ற மக்களின் கல்வி வளர்ச்சிக்காக, சமூக நீதிக்காக, பகுத்தறிவு வளர்ச்சிக்காக, ஜாதி ஒழிப்புக்காக, சமுத்துவ சமுதாயம் அடைய உழைத்துக் கொண்டிருக்கிறது என்பது கல்லின் மேல் எழுத்தாகும்.

- திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து, லண்டன்

தமிழ் ஓவியா said...

திரிபுவாதிகளுக்கு பதிலடி


- பரணீதரன் கலியபெருமாள்

பார்ப்பனியத்தின் அடிமைத்தனத்தில் இருந்து தமிழன் விடுதலை பெற, ஆண் ஆதிக்கத்திடம் இருந்து பெண் விடுதலை பெற, மூடநம்பிக்கையில் இருந்து மனிதன் விடுதலை பெற, பல மொழி ஆதிக்கத்தில் இருந்து தமிழ் மொழி விடுதலை பெற... என்று அனைத்து விடுதலைக்கும் அயராது பணியாற்றியது... இன்றும் பணியாற்றி கொண்டிருப்பது தந்தை பெரியார் ஆரம்பித்த விடுதலை நாளிதழ்....

தமிழர்களின் மூச்சுக் காற்றான விடுதலை நிறுத்தப்படாததற்குக் காரணம் நமது மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களே! என்று அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களே அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார் (விடுதலை, 10.8.1962). விடுதலை நாளிதழுக்கு பல சோதனைகள் வந்த பொழுதும் அதனை கடந்து தமிழனின் தன்மானம் காத்து சாதனை படைத்து கொண்டிருப்பது ஆசிரியர் வீரமணியின் விடுதலை நாளிதழ்.

எந்த ஒரு லாப நோக்கமும் இல்லாமல் மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு நடத்தப்படும் ஒரு பகுத்தறிவு நாளிதழ் 77 ஆண்டுகள் வீறுநடை போடுவது சாதாரண விசயமா? முதல் முதலில் இணையத்தில் வெளிவந்த தினசரி நாளிதழ் விடுதலை தான். ஒரு இணையத்தை நிர்வகிப்பது என்பது எவ்வளவு கடினம் என்பது எங்களை போன்று கணினி உலகில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும். அதற்கு ஆகும் செலவு என்ன என்பதும் தெரியும். அப்படி இருக்கும் போது, எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் கட்டணமும் இல்லாமல் இலவசமாக விடுதலையை மின்னிதழில் வாசிக்கலாம் என்ற நிலை உள்ளது. இது அனைத்தும் ஆசிரியர் அவர்களின் அயராத உழைப்பினால் நமக்கு கிடைத்தது.

பார்ப்பன ஆதிக்கம் நிறைந்த பத்திரிகை உலகில் விடுதலையும் கம்பீரமாக அதன் பகுத்தறிவு பணியை அருமையாக செய்து வருகிறது... எதிரிகளும், துரோகிகளும் திராவிடர் இயக்கம் பற்றி விமர்சனம் செய்யும் போதும், தந்தை பெரியாரை திரிபு வாதம் செய்யும்போதும்.... அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து அவர்களின் செவிளில் அறைவது விடுதலையும் அதன் ஆசிரியரும் தான்.... இன்றைய சூழலில் குழந்தைகளை சீரழிக்க ஆயிரம் வார இதழ், மாத இதழ்கள் உண்டு...நிலைமை இப்படி இருக்க, பிஞ்சுகள் சிந்திக்க எதாவது ஒரு இதழ் கிடைக்காதா என்று எங்களை போன்றவர்கள் ஏங்கிய நேரத்தில் தான்...

ஆசிரியரின் முயற்சியால் 'பெரியார் பிஞ்சு' மாத இதழ் உருவாகியது.....இந்த இதழின் மூலம் பிஞ்சுகள், பெரியார் பற்றியும், உலக பகுத்தறிவாளர்கள் பற்றியும் அறிந்து கொள்கிறார்கள். இப்படி பெரியார் விட்டுச் சென்ற பணியினை அவரது சீடர் ஆசிரியர் வீரமணி அவர்கள் பல வழிகளிலும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மக்களிடம் கொண்டு செல்கிறார்.

இருட்டில் இருக்கும் திராவிடர் நலம் காக்க பகுத்தறிவு மின்சாரம் பாய்ச்சுவது 'விடுதலை' நாளிதழ்.. அதன் பலம் ஆசிரியர் 'வீரமணி'.