Search This Blog

17.6.12

மதமும் - மனித சமதர்மமும்

உலகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் பீடித்திருக்கும் ஒரு பெரும் வியாதி கடவுள்கள், மதங்கள் என்னும் இரு தொத்து நோய்களேயாகும். இவற்றுள் கடவுள்கள் நோயைவிட மதங்கள் நோய் என்பது மிகமிகக் கொடிய தாகும்.

உண்மை கடவுள் என்கின்ற தத்துவத்தால் மக்கள் பிரிக்கப்பட்டிருக்கவில்லை; ஆனால் எப்படிப்பட்ட மதத்தாலேயும் மக்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏன் இப்படிச் சொல்லுகிறோம் என்றால் கடவுளைப் பற்றிய ஒரு கருத்துள்ளவரும், மதத்தால் வேறுபட்டவராகப் பிரிக்கப்பட்ட வராக இருந்து வருகிறார்கள். ஆனால் கட வுளைப் பற்றிய வேறு வேறு கருத்துள்ளவர்களும் மதத்தால் ஒன்று பட்டிருக்கிறார்கள்.

உதாரணமாக, ஒரே கடவுள். அதுவும் உருவமற்ற கடவுள் என்கின்ற எண்ண முள்ள முஸ்லிம், கிறித்துவர், பிரம்ம சமாஜத்தார் முதலிய ஏகதெய்வக் கொள்கைக்காரர்களும் மதம் காரணமாக வேறுபட்டிருக்கிறார்கள். பலவிதமான கடவுள் தன்மை கொண்டவர்களும் கடவுளே இல்லை என்பவர்கள் மாயாவதி, சூனியவாதி, உலகாயதவாதி, இயற்கை வாதி, சார்வாகன், வேதாந்தி முதலிய பலரும் மதம் காரணமாக இந்துக்களாகவே இருந்து வருகிறார்கள். எனவே மக்களைப் பிரித்து வைத்திருப்பதற்குக் கடவுளைவிட மதமே முக்கிய காரண மாக இருந்து வருகிறது.

கடவுள் உணர்ச்சி வேறு பல காரணங் களுக்குக் கேட்டை விளைவிப்பதாக இருந்தாலும் உலக பொது நலனுக்கும் ஒற்றுமைக்கும் கேடு உண்டாக இடம் தந்து மக்களுக்கு ஒன்றுபோல் கேடு செய்து வருவது மதங்களேயாகும்.

கடவுள்கள் திருத்தத்திற்கு உட்பட்ட வையாகலாம். ஆனால் மதம் திருத்தப் பாட்டுக்கு இடம் கொடுப்பதில்லை. மதத்தின் அழிவுதான் திருத்தம் என்று சொல்ல வேண்டி இருக்கிறது.

மதம் பெரிதும் சடங்கையும், காரியத்தையுமே அடிப்படையாகக் கொண்டி ருக்கிறது. ஆதலால் மதம் என்பது ஒரு மனிதனின் செய்கை, நடப்பு ஆக இருக்க வேண்டி இருப்பதால் வெளிப்படையாக பிரிந்திருக்க வேண்டியதாகிறது.

கடவுளைப் பற்றிய கருத்து இரகசியமாக வேறு யாருக்கும் தெரியாததாக இருக்கலாம். ஆதலால் கடவுளைப் பற்றி ஒருவருக்கொருவர் மாற்று அபிப்பிராயம் கொண்ட வர்கள் ஒன்றாக இருக்கலாம். அதனால்தான் மனிதன் கடவுளை ஏமாற்றுகிறான். ஆனால் மதம் வெளிப்படையாய் வேஷம் போட்டு நடித்துத் தீர வேண்டியதாகவே இருக்கிறது. ஆதலால் ஒரு மனிதன் மதத்தை ஏமாற்ற முடியாது; ஏமாற்றினால் தெரிந்துவிடும்.

ஆகவே, மனித சமுதாயத்தை ஒன்றுபடுத்தவும், சமதர்மம் தழைத்து ஓங்கவும் மதங்களே முதலில் அழிக்கப்பட வேண்டும். ஏனெனில் கடவுள் முன்னிலையில் மக்கள் யாவரும் ஒன்று என்று சொல்லி எந்தக்காரியத்தையும் துவக்கலாம். ஆனால் மதங்களின் முன்னிலையில் எல்லா மதமக்களும் ஒன்று என்று சொல்லிவிட முடியாது. மதங்களாலேயே மக்கள் வேறு படுத்தப்பட்டு இருக்கிறார்கள். எனவே மக்கள் யாவரும் ஒன்று. சரிசமம் என்றால் மதங்கள் அழிய வேண்டி வந்து விடுமாதலால் மதங்கள் மக்களை ஒன்றுபடுத்தச் சம்மதியா.

இந்தியாவில் அநேக மதங்கள் இருக்கின்றன. அநேகமாக இந்தியாவின் பூர்வ குடிகளே இன்று எல்லா மதக்காரர்களாகவும் இருந்து வருகிறார்கள். ஆரியர்களும், மங்கோலியர்களும் சில மதங்களில் கலந்து இருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் மிகக் குறைந்த எண் ணிக்கையுடை யவர்களாகத்தான் இருக்கக் கூடும். ஆனாலும், இந்தியப் பூர்வகுடிகளுக்கு என்ன மதம்? என்ன கொள்கை? இருந்தது என்று காட்டும் ஆதாரம் எதுவுமே காணக் கிடைப்பதில்லை. விளக்கமாகச் சொல்ல வேண்டு மானால் ஆரியர் இந் நாட்டிற்கு வருவதற்கு முன் இங்கு என்ன மதம் இருந்தது என்பது இதுவரை யாராலும் தெளிவாக்கப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆரியர் இந் நாட்டுக்கு வரும் முன் நிலம், நீர், இடம் காரணமாக மக்கள் பழக்க வழக்க இயற்கைத் தன்மைகளில் பேதம் இருந்ததாகக் காணப்படுவதல்லாமல் மதம், மதத்தின் பயனால் ஏற்பட்ட வேஷம், சடங்கு ஜாதி என்பவை காரணமாகப் பேதம் பிரிவு இருந்ததாகச் சொல்லுவதற்கு அறிகுறிகளைக் காண முடியவில்லை.

மதங்கள் பிரிவினைக்கும், பேதத்திற்கும் காரணமாய் இருப்பது மாத்திர மல்லாமல் மடமைக்கும், மூடநம்பிக்கைக்கும் காரணமாக இருக்கின்றன. பயத்தின் அதிவாரத்தின் மீது கடவுள் இருக்கிறார் என்றாலும் மூடநம்பிக்கை, மடமை என்கின்ற அதி வாரத்தின் மீதே மதங்கள் இருக்கின்றன. இம்மாதிரி மதங்களே தான் கடவுளையும் சிறுமைப்படுத்திவிட்டன என்பது மாத்திரம் அல்லாமல், எதற்கு ஆகக் கடவுள் தேவை என்றும் சொல்லப்படுகின்றதோ, எதற்கு ஆகக் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று எண்ண மக்கள் செய்யப்படுகின்றார்களோ அதற்கு மாறாகப் பலன் உண்டாகும்படி மதங்கள் செய்துவிடுகின்றன.

மற்றும், எந்த மதமும் மக்களுடைய இயற்கைக் குறைபாடுகளைப் பரிகாரம் செய்யவில்லை என்பது மாத்திரமல்லாமல் மதங்களால் மக்களுக்குப் பல செயற்கைக் குறைபாடுகளும் உண்டு பண்ணப் படுகின்றன. எனவே, மனித தர்மவாதி, மனித சமதர்மவாதி, (மனித) ஜீவ காருண்யவாதி, மதங்களால் பாதிக்கப்படாதவனாகி மதங்களில் இருந்து வெளிவந்து அல்லது மதங்களுக்கெல்லாம் மேம்பட்டவனாக இருந்து கொண்டு தொண்டாற்ற வேண்டியவனாகிறான்.

(சொற்பொழிவாற்றிய இடம், நாள் ஆகியவை குடிஅரசில் குறிப்பிடப்படவில்லை. - பதிப்பாசிரியர்) --தந்தைபெரியார் - “குடிஅரசு” - சொற்பொழிவு - 27.07.1946

13 comments:

தமிழ் ஓவியா said...

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதே சரி அதனை மாற்றியது தமிழ் விரோத பார்ப்பனீய செயலே!

மலேசியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி கலைஞர் கருத்துரை


சென்னை, ஜூன் 17- தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதே சரி, அதனை மாற்றியது தமிழ் விரோத பார்ப்பனீய செயலே! என்று மலே சியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் அறிக்கையை சுட்டிக் காட்டி கலை ஞர் கருத்துரை வழங்கி யுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக் கையில் கூறியிருப்ப தாவது:

கேள்வி:- தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது சட்டம் செய் ததை, அ.தி.மு.க. ஆட்சி யில் மாற்றிய போதிலும், மலேசியத் தமிழ் இலக் கிய கழகம் போன்றவை அ.தி.மு.க. ஆட்சியினரின் செயலை தமிழர் விரோ தச் செயல் என்ற அறி வித்திருப்பது வரவேற் கத் தக்க ஒன்று அல் லவா?

கலைஞர்:- மலேசி யத் தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில், அதன் செய்தித் தொடர் பாளர் ந. பொன்னுசாமி அவர்கள் விடுத்த அறிக் கையில்,தமிழ்ப் புத்தாண்டு குறித்து பல காலக் கட்டங்களில் பல்வேறு அறிஞர் பெருமக்கள் கோரிக்கை விடுத்தும், ஆட்சியிலும் ஆலயங் களிலும் பார்ப்பனிய ஆதிக்கமே மேலோங்கி யிருந்த காரணத்தால், அறிஞர் பெருமக்களின் கோரிக்கைக்கு உரிய பலன் கிடைக்கவில்லை. இத்தகைய சூழ்நிலை யில், தமிழிய சிந்தனை யாளரும், தமிழ் இலக் கியக் கழகத் தலைவரு மான நினைவில் வாழும் மு. மணிவெள்ளைய னார் தலைமையில், மலேசியத் திராவிடர் கழகம், மலேசியத் தமிழ் நெறிக் கழகம் உள் ளிட்ட தமிழ் சார்ந்த இயக்கங்களின் துணை யுடன் 2001லும், 2008லும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற பரிந் துரை மாநாடுகள் மலே சியாவில் நடத்தப் பட்டன. தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற மலேசியத் தமிழ் இயக் கங்களின் பரிந்துரை மாநாடுகளின் தீர்மானங் களை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம் அனுப்பிவைத்தது. தமிழ்ப் புத்தாண்டு குறித்து தமிழ் அறிஞர் களின் ஆய்வுகளையும், மலேசிய இயக்கங்களின் அறிவு பூர்வமான கோரிக் கைகளையும் சீர்தூக் கிப் பார்த்து தலைவர் கலைஞர் 2008ஆம் ஆண்டில் தை முதல் நாளே தமிழ்ப் புத் தாண்டு என்று தமிழக அரசினால் அறிவிப்பு செய்து, உலகத் தமிழர் உள்ளங்களில் பால் வார்த்து பேருவகை கொள்ளச் செய்தார்.

ஆனால் தமிழகத்தின் இப்போதைய பார்ப் பனிய முதல்வரான ஜெயலலிதா, வெப்பம் தாங்காமல் தாவரங்கள் மாண்டு மடியும் சித்தி ரைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண் டாக அறிவித்து தமிழர் விரோதச் செயல்பாடு களில் ஈடுபட்டுள்ளார்.

22-2-2012இல் கோலாலம்பூர் கே.ஆர். சோமா அரங்கில் மலே சிய இலக்கியக் கழகத் தலைவர் அ. இராமன் தலைமையில் மலேசியத் திராவிடர் கழகம், மலேசியத் தமிழ் நெறிக் கழகம், மலேசியத் தமிழ்க் காப்பகம், மலேசிய சைவத் தமிழ்க் காப்பகம், மலேசிய சைவ நற்பணிக் கழகம் உள்ளிட்ட மலேசியா வில் உள்ள தமிழ் சார்ந்த இயக்கங்களுடன் இணைந்து, தை முதல் நாளே தமிழ்ப் புத் தாண்டு என்ற பரிந் துரை மாநாட்டினை மீண்டும் நடத்திட ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக் கிறார்கள் என்று தெரி வித்துள்ளார்.

தி.மு. கழக ஆட்சியில் தன்னிச்சையாக இந்த முடிவினை நான் எடுத்தேன் என்று இன் றைய ஆட்சியாளர்கள் பரப்பி வருகின்ற செய் திக்கு மலேசியாவில் உள்ள தமிழர்கள் எடுத் துள்ள இந்த முடிவே தக்க பதிலாகும் 17-6-12

Gopalakrishnan V said...

1. மற்ற ஜாதியினர் தம் வீட்டுப்பிள்ளைகளை அனுப்பவில்லையாம்.
2. பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வந்து தகராறும் செய்துள்ளனர்.
3. பெற்றோர்களின் ஜாதி வெறி கண்டிக்கத் தக்கது
4. மற்ற ஜாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் நெருக்கமாகப் பழகிட முடியுமா?
5. தாழ்த்தப்பட்ட மாணவர்களைச் சேர்க்கக்கூடாது என்று தகராறு செய்தவர்கள.

இப்படி விவரமாய் எழுதி மானத்தை வாங்கலாமா? பெரியார் ஸ்டைலில் எல்லாம் பார்ப்பன சதி என்று ஓங்கி குத்தவேண்டாமா. அதுதான் பெரியாரிசஸடுக்கு ஆழகு ஆண்மை.

தமிழ் ஓவியா said...

நாத்திகர் பெரியாரே அதிக நாள் வாழ்ந்தவர்


தலைவர்கள் வாழ்ந்த ஆண்டுகள்
இந்திய அரசியல் தலைவர்கள்

1. லாலா லஜபதிராய் 63
2. பாலகங்காதர திலகர் 64
3. பண்டித நேரு 75
4. அம்பேத்கார் 75
5. அரவிந்தர் 78
6. காந்தியடிகள் 79
7. ஜெயப்பிரகாசர் 79
8. தாகூர் 80
9. வினோபாவே 88
10. தாதாபாய்நெளரோஜி 92

தமிழகப் பெரியார்கள்

1. பாரதியார் 39
2. வ.உ.சிதம்பரனார் 64
3. திரு.வி.க. 71
4. காமராசர் 72
5. மறைமலை அடிகள் 74
6. ஜி.டி.நாயுடு 81
7. உ.வே.சாமிநாத அய்யர் 87
8. சர்.சி.வி.இராமன் 88
9. இராஜாஜி 93 ஆண்டுகள் 15 நாள்கள்
10. தந்தை பெரியார் 94 ஆண்டுகள் 97 நாள்கள்

உலகச் சமயங்களின் தலைவர்கள்

1. ஆதிசங்கரர் 32
2. இயேசுநாதர் 34
3. விவேகானந்தர் 39
4. இராமானுசர் 41
5. இராமகிருட்டினர் 50
6. முகம்மது நபி 51
7. இரமண ரிஷி 60
8. குருநானக் 70
9. மகாவீரர் 72
10. புத்தர் 80

உலகப் பெரியார்கள்

1. லெனின் 51
2. ஆப்ரகாம்லிங்கன் 56
3. ரூசோ 60
4. காரல் மார்க்ஸ் 65
5. இங்கர்சால் 66
6. ஏஞ்செல்ஸ் 75
7. டால்ஸ்டாய் 82
8. மா- சே துங் 83
9. வால்டேர் 84
10. சர்ச்சில் 90

டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் எழுதிய திராவிட இயக்க வரலாறு நூலில் இருந்து ...

தமிழ் ஓவியா said...

மீண்டும் நுழைவுத் தேர்வா?


கல்வி என்பது முன்பு மாநிலப் பட்டியலில் (State List) அரசியல் சட்டக் கர்த்தாக்களால் வைக்கப்பட்டது - நீண்ட ஆலோசனைக்குப் பிறகு.

ஆனால், எந்தவித கலந்தாலோசனைக்கும் இடம்தராது, நெருக்கடிகால நிலை அமுலில் இருந்தபோது, 1976 இல், இது திடீரென்று நாடாளுமன்றத்திலோ, மாநிலங்கள் கருத்தறிந்தோ - இது ஏதும் நடைபெறாமல், அது பொதுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப் பட்டது.

இப்போது இந்தியா முழுவதற்கும் ஒரே கல்விக் கொள்கை, ஒரே நுழைவுத் தேர்வு என்பது போன்ற கூட்டாட்சித் தத்துவத்திற்கே உலை வைக்கும் திட்டத்தை மத்திய மனித வள அமைச்சகம் செய்வது தவறான நிலைப்பாடாகும். மறைமுகமாக மாநிலப் பட்டியலை மத்தியப் பட்டியலுக்குக் கொண்டுவரும் மகாசூழ்ச்சியாகும்.

ஏற்கெனவே தமிழ்நாடு அரசு - தி.மு.க. அரசு எதிர்த்து அதை ஒழித்து தனி ஏற்பாட்டினை சட்ட ரீதியாக செய்தும், அது உச்சநீதிமன்றத்தால்கூட ஏற்கப்பட்டது.

இப்போது கபில்சிபல் பிடிவாதமாக இதை அறிவித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நுழைவுத் தேர்வை ரத்து செய்வதன் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்; கிராமப்புற மாணவர்களுக்கும், ஏழை, எளிய மாணவர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன!

மீண்டும் இந்த ஏற்பாட்டின்மூலம் ஒருவகை பன்முக கலாச்சாரம், மொழி, கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றம் இவைகளுக்கு ஆப்பு அடிக்கப்படுகிறது!

இதனை முழு மூச்சாக எதிர்த்து தடுத்து நிறுத்தவேண்டியது - கட்சி வேறுபாடுகளைத் தாண்டிய முக்கிய கடமையாகும்!

தமிழ்நாடு அரசுக்கும் இதில் முக்கிய கடமை உள்ளது. முதலமைச்சர் அவர்களும் இந்த நுழைவுத் தேர்வு ஏற்பாட்டை எதிர்த்துள்ளார் எனினும், இப்போது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.

எனவே, உடனடியாக அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும், கல்வியாளர்களும் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கும் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்து, தங்களது பலத்த எதிர்ப்பைக் காட்டி, இந்தப் புதிய சதித் திட்டத்தை ஒழிக்க முன்வரவேண்டும்!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

முப்பத்து முக்கோடி தேவர்களா?


- உடுமலை வடிவேல்

ஆன்மீகவாதிகளைப் பொறுத்தவரையில், அவர்கள் வழிபடும் கடவுள்கள் பற்றி எள்ளளவும் சிந்திப்பதில்லை. அவர்கள், அதற்காக பயன்படுத்தும் சொல்லாடல்களைப் பற்றியும் சிந்திப்பதில்லை. செக்கு மாடு போல சுற்றி சுற்றி வருவதைத் தவிர, வேறெதுவும் தெரியாது. மன்னிக்கவும் ஒன்றே ஒன்று தெரியும்.

பகுத்தறிவுக்காரர்கள் ஆன்மீகவாதிகளின் நம்பிக்கைகளை சமுதாய மேம்பாட்டின் பொருட்டு, ஆராய்ந்து உண்மைகளைச் சொல்லும்போது, ஆஹா... எங்களது மத நம்பிக்கை உணர்வை புண்படுத்துகிறாயே! என்று பொருளில்லாமல் புலம்பத் தெரியும். அவ்வளவுதான்.

இப்போது வழக்கத்திலிருக்கிற எல்லாவற்றையுமே ஆய்ந்தாய்ந்து சொல்லப்பட்டு வருகின்றன என்றாலும் அந்த வரிசையில் இந்த முப்பத்து முக்கோடி தேவர்கள் என்ற சொல்லாடலின் பொருள் என்ன? முப்பத்து _ என்றால் மூன்று பத்து. அதாவது மூன்று பத்து = முப்பது. சரி, இது நன்றாக விளங்கி விடுகிறது. முக்கோடி என்றால் மூன்று கோடியா? அவசரப்பட வேண்டாம்.

முக்கோடி _ என்பதற்கு தமிழ் எண்கள் வரிசைப்படி ஒன்று, ஆயிரம், பத்தாயிரம், இலட்சம், பத்து இலட்சம், கோடி, அற்புதம், நிகற்புதம், கும்பம், கற்பம், நிகர்பம், பதுமம், சங்கம், வெள்ளம், அந்நிலம், அர்ட்டம், பரர்ட்டம், ஊரியம், முக்கோடி, மகாயுகம் _ என்று போகிறது. இதில் நமக்குத் தேவையான முக்கோடி _ பத்தொன்பதாவது வரிசையில் வருகிறது.

இதை எப்படி எழுதுவது. அதாவது முக்கோடி = கோடி கோடி கோடி இதையும் விரிவாக்கிக் காட்டினால் எப்படி எழுதுவது?
அதாவது: 1,000,000,000,000,000,000,000 _ இதையும் 30ஆல் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

தலை சுற்றுகிறதல்லவா? முப்பதுக்குப் பின்னால் 21 சுழியம் எழுத வேண்டும். இதைத்தான் முக்கோடி என்று சொல்வது. அல்லது கோடி கோடி கோடி என்றும் சொல்லலாம்.

சரி, இப்போது விசயத்திற்கு வருவோம். பக்தர்கள், இன்று வரையிலும் கையாளும் சொல்லாடல், தனக்குத் தெரிந்த வரையிலும் கடவுள்களின் பெயர்களைச் சொல்லிவிட்டு, அதன்பிறகு, சகல முக்கோடி தேவாதி தேவர்களே! என்று முடித்துக் கொள்வார்கள்.

நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதை ஓரளவு புரிந்து கொண்டிருப்பீர்கள்!
இந்த வழிபாடு இந்துக்களுக்கு மட்டும்தான் என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைய உலக மக்கள் தொகை 700 கோடி. இந்த ஆண்டு மலையாள மனோராமா ஆண்டு மலரில் கொடுக்கப்பட்டிருந்த புள்ளி விபரப்படி இந்துக்களின் எண்ணிக்கை சுமார் 90 கோடி.

அப்படி என்றால்?

முப்பத்து முக்கோடியை, இந்துக்களின் எண்ணிக்கையான 90 கோடியில் வகுத்தால் வரும் விடையென்ன?
அதாவது,
30,000,000,000,000,000,000,000
90,0000,000
= 3.3 லட்சம் கோடி

ஆக, ஒரு இந்துவுக்கு, 3.3 லட்சம் கோடி கடவுள்கள்???
எப்படி இருக்கிறது கதை...

ஒரு பக்தனுக்கு ஒரு கடவுளே என்று சொன்னால் கூட பயனில்லை. காரணம் கடவுளே இல்லை. அப்படியென்றால், பக்தர்களின் கருத்துப்படி பார்த்தாலும் ஒருவருக்கு 3.3 லட்சம் கடவுள் என்றால், உடம்பிலிருக்கும் ஒவ்வொரு மயிருக்கும் ஒரு கடவுளா?

கடவுள் என்கிற கருத்தை பகுத்தறிவாளர்களா கொச்சைப்படுத்துகிறார்கள்? பக்தர்கள் சிந்திப்பார்களா?

தமிழ் ஓவியா said...

இந்துத் தரித்திரம்!

ஓசூர் நகர மன்ற தலைவர் அதிமுகவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் வித்தியாசமான ஒரு வேலையைச் செய்துள் ளார்.

இதற்குமுன் ஒசூர் நகராட்சித் தலைவராக இருந்தவர்கள் எல்லாம் சோபிக்கவில்லையாம் அந்த நிலை தமக்கும் வரக்கூடாது என்று எண்ணி என்ன செய் தாராம்?

வாஸ்து சாத்திரம் தான் இதற்குக் காரண மாம்! வாஸ்து சாஸ்தி ரப்படி புதிய அலுவலகம் கட்டி ஹோமங்கள் செய்து, நல்ல நேரம் பார்த்து புதிய அலுவலகத்துக்குச் சென்றுள்ளாராம்.

நாடு எங்கே போய்க் கொண்டு இருக்கிறது? ஒருவர் சோபிப்பதோ, சோபிக்காமலோ போவ தற்குக் காரணம் கற்கள், சிமெண்ட், மணல், மரம் இவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட கட்ட டம்தான் காரணமா?

அப்படி என்றால் அந்த அலுவலகத்தில் பணி யாற்றும் சம்பந்தப்பட்ட மனிதன் அதற்குப் பொறுப்புக் கிடையாதா?

மனிதனின் வெற்றிக் கும் தோல்விக்கும் வாஸ்துதான் வாஸ்தவ மான காரணம் என்றால் எதற்கு மனிதர்களைப் பாராட்டுவது - விருது கள் வழங்குவது - பாரத ரத்னா, பத்மஸ்ரீ போன்ற பட்டங்களைக் குடியரசுத் தலைவர் கொடுப்பது? உடனடியாக நிறுத்திவிட வேண்டும். அவர்கள் குடியிருந்த அல்லது பணிபுரிந்த கட்டடங் களின் வாயிலில் பாரத ரத்னா, பத்மஸ்ரீ என்ற குடியரசுத் தலைவர் அளித்த அந்த வாசகங் களைப் பொறித்து விடலாமே!

இந்தியாவில் மனித வளம் அடிமட்டமாகப் போனதற்கே காரணம் இந்த இந்து மனப் பான்மைதான்.

உலகக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்காக யாகங்கள் நடத்துகிறார் கள்; ஒரு விளையாட்டுக் காரர் ஆட்டத்தில் அதிக ஓட்டங்கள் குவிக்க வேண்டும் என்பதற்காக சாயிபாபாவிடம் ஓடோடிச் சென்று ஆசீர்வாதம் பெற்று, அவர் அளிக்கும் மோதிரத்தை அணிந்து கொண்டு விளையாடு கிறார் (அதிலும் தோல்வி தான்!)

இந்த இந்து சிந்தனைத் தரித்திரம் என்று ஒழியுமோ, அன்று தான் நாடு உருப்படும், இளைஞர்களும் உள்ள படியே சாதனை வீரர் களாக ஜொலிப்பார்கள்! - மயிலாடன் 18-6-2012

தமிழ் ஓவியா said...

தேசிய கல்வி, ஆராய்ச்சி நிறுவன பாடத்தையும் கேலிச் சித்திரத்தையும் நீக்க வேண்டும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் கடிதம்


சென்னை, ஜூன் 18- பாடத் திட்டத்தில் இந்தி எதிர்ப்புக் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் முனைவர் அ. இராமசாமி, செயலர் முனைவர் ந.க. மங்களமுருகேசன் ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர் கடிதம் வருமாறு: திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் பேராசிரியர் அ.இராமசாமி, செயலாளர் பேரா சிரியர் ந.க.மங்களமுருகேசன் ஆகி யோர் மய்ய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபல் அவர்களுக்கும், தேசிய கல்வி, ஆராய்ச்சி நிறுவன இயக்குநருக்கும் எழுதியுள்ள கடிதத்தில் தேசிய கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அரசியல் அறிவியல் பாடத்தில் திரா விட இயக்கம் என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள பாடத்தையும், கேலிச் சித்திரத்தையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

தங்கள் கடிதத்தில் பாடநூலில் கீழ்க்கண்ட முறைகேடுகள், பிழை களைச் சுட்டிக் காட்டியதோடு வன் மையான கண்டனத்தையும் தெரிவித் துள்ளனர். மேலே குறிப்பிட்ட பாடத்தில்,
1. மாணவர்களைப் போக்கிரி யாகச் சித்தரித்து இருப்பது கண்டிக் கத்தக்கது.

2. மாணவர்கள் வன்முறை யாளர்களாகச் சித்தரிக்கப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது.

3. கேலிச் சித்திரத்தில் மேலே தலைப்பில் மாணவனுக்கு ஆங்கில மும் வாசிக்கத் தெரியாது என்று ஆங்கிலத்தில் இருப்பது தமிழக மாணவர்களின் ஆங்கில அறிவைக் கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது.

உண்மையில் மேற்படி கேலிச் சித்திரம் குறும்புத்தனமானதாகவும், தமிழக மாணவர் சமூகத்தையே இழிவுபடுத்துவதாகவும், கொச்சைப் படுத்துவதாகவும் இருக்கிறது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட் டத்தின் உண்மையான நோக்கத்தை அது வெளிப்படுத்துவதாக இல்லை.

மேலும் திராவிட இயக்கம் என்று தலைப்பில் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று தொடங் கும் கட்டுரையில், 1953-54ல் நடைபெற்ற தி.மு.க.வின் மும்முனைப் போராட்டத்தைப்பற்றி எழுதப்பட் டுள்ளது. தமிழகத் தலைவர்களை நேரு இழிவுபடுத்தி முட்டாள்கள் என்று கூறியதைக் கண்டித்து நடை பெற்ற போராட்டத்தைத் தமிழகப் பண்பாட்டைப் பாடப்புத்தகத்தில் சேர்க்க நடைபெற்றதாகத் திரித்து உண்மைக்கு மாறாக எழுதியிருப்பதுடன், இராஜாஜியின் குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தைத் தமிழக அரசின் தொழில் கல்வியை எதிர்த்து நடைபெற்றதாகத் திரித்தும் எழுதப் பட்டுள்ளது. மேலும் திராவிடர் இயக்கத்திலிருந்து பிரிந்து உரு வானதாக பா.ம.க.வையும், தே.மு. தி.க.வையும் குறிப்பிட்டுள்ளது தவறானதாகும். இந்த இரண்டு கட்சி களுக்கும் திராவிட இயக்கத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்ற உண்மை திரித்துக் கூறப்பட்டுள்ளது.

எனவே, அடிப்படையில் தப்பும் தவறுமாகவும், இந்தித் திணிப்பு எதிர்ப்பைக் கொச்சைப்படுத்தும் விதமாகவும் உள்ள பாடம், கேலிச் சித்திரம் ஆகியன உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். 12-6-2012

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவரின் உரிமை மீட்புப் போராட்டம் அறிவிப்பு

சிறுவாணி குடிநீருக்கு ஆபத்தா? பவானி பாசனப் பகுதிக்கும் தடையா?
கேரள அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து கோவையில் ஜூன் 25-இல் ஆர்ப்பாட்டம்
சேலம் ரயில்வே கோட்டத்தை மீண்டும் பாலக்காட்டுக்கு மாற்றுவதா?
சேலத்தில் ஜூன் 26-இல் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன் 18- தமிழ்நாட்டு மக்களின் குடிநீர், விவசாயம் உள்ளிட்டவைகளுக்குக் கேடு விளைவிக்கும் கேரள அரசின் நடவடிக்கைகளை எதிர்த்தும், அதுபோலவே சேலம் இரயில்வே கோட்டத்தின் தலைமை இடத்தை சேலத்திலிருந்து மாற்றி மீண்டும் பாலக்காட்டுக்குக் கொண்டு போக எத்தனிக்கும் முயற்சிகளைக் கண்டித்தும் போராட்ட அறிவிப்புகளை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கேரள அரசின் வம்பும் வல்லடி நடவடிக்கைகளும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தொடர்ந்து கொண்டே உள்ளன. இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பவானி பகுதியில் புதிய அணையா?

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும், அதன் பகுதியில் மீறி மற்றொரு அணை கட்ட வேண்டுமென்றும் வீண் விதாண்டாவாதம் கிளப்பியது; உச்சநீதிமன்ற வல்லுநர் குழுகூட அதற்கு ஆதாரம் இல்லை என்றும் மறுத்து விட்டது. பிறகு கை பிசைந்து ஏதேதோ கூறுகிறது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலும் உள்ளது வழக்கு.

பவானியில் ஓர் அணை கட்ட புது நடவடிக்கை என்று திடீரெனக் கூறி, நடவடிக்கையைத் துவங்கப் போகிறோம் என்று கூறியுள்ளது. இது கோவை - பவானி பகுதியி லுள்ள விவசாயிகளின் நீர்ப்பாசனத்திற்குத் தடையை உருவாக்குவது மட்டுமல்ல; கோவைக்குத் தற்போது குடிநீருக்காகக் கிடைத்து வரும் சிறுவாணித் தண்ணீர் கூட கிடைக்காமல் தடுப்பதற்கான திட்டம் - முயற்சி என்ற குரல் கோவை மாவட்ட மக்களின் அவலக் குரலாக ஓங்கியுள்ளது.

கோவையில் ஜூன் 25 அன்று ஆர்ப்பாட்டம்

இதை உடனடியாகத் தடுத்து நிறுத்த அரசியல் கட்சி பாரபட்சமின்றி ஓர் குரலில் ஒலித்து, ஓரணியில் திரண்டு நிற்க வேண்டும். முதற்கட்டமாக வருகிற 25.6.2012 அன்று கோவை மாநகரில் சிறுவாணிக் குடிநீருக்கும் பெரும் ஆபத்தா? பவானி நீர்ப்பாசனப் பகுதிகளுக்கு தடையா? கேரள அரசின் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற மூவகை முழக்கங்களை முன்னிறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அதில் கோவை புறநகர்,மாநகர மாவட்ட திராவிடர் கழகம், பொள்ளாச்சி, திருப்பூர், நீலகிரி மாவட்டத் தோழர், தோழியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

சேலம் ரயில்வே கோட்டம் மீண்டும் பாலக்காட்டிலா?

அதுபோலவே, சேலத்தில் மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு பாலக்காடு டிவிஷனிலிருந்து தனி ரயில்வே கோட்டகம் சேலத்தை மய்யப்படுத்திட வேண்டுமென்று போராடி, (திரு. லாலுபிரசாத் (யாதவ்) ரயில்வே மந்திரியாக இருந்தபோது) தனியே வந்தது. மீண்டும் பழையபடி பாலக்காடு ரயில்வே டிவிஷனிலேயே இணைத்து விட வேண்டுமென்று பல்வேறு செல்வாக்குள் ளவர்கள் முயற்சி செய்கின்றனர் என்பதும் கண்டனத் திற்குரியது! இதை மீண்டும் பாலக்காடு டிவிஷனோடு இணைத்து விட ஒரு போதும் இசைவு தரக்கூடாது, தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும்.

ஜூன் 26இல் சேலத்தில் ஆர்ப்பாட்டம்!

எனவே சேலத்தில் கழகத் தோழர்கள் அனைவரும் சேலம் மாநகரம், மேட்டூர் மாவட்டம், தர்மபுரி மாவட்டம், ஆத்தூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம் உட்பட இதில் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை வரும் 26.6.2012 அன்று மிகவும் வலிமையுடன் நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு உரிமைகள் பறிக்கப்படுவதைப் பார்த்து நாம் சும்மா இருக்கலாமா?


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

குறிப்பு: ஆர்ப்பாட்டம் தலைமை மற்றும் தகவல்கள் - 8ஆம் பக்கம் காண்க

தமிழ் ஓவியா said...

தலைவர்களின் பெயர்களை இருட்டடிப்பதா?

இருட்டடிப்பது, திரிபு செய்வது என்ப தெல்லாம் பார்ப்பனர்களுக்குக் கைவந்த கலையாகும்.

இருட்டடித்துப் பார்த்து முடியாத கால கட்டத்தில், திரிபு செய்வது என்பதும் அவர்களின் குருதியில் முட்டையிட்டுக் குஞ்சுப் பொரிக்கும் சமாச்சாரமாகும்.

தியாகராயர் நகர் என்பதை எப்பொழுதுமே டி.நகர் என்றே குறிப்பிடுவார்கள். நீதிக் கட்சியின் மும்மூர்த்திகளில் ஒருவரின் பெயர் மக்கள் மத்தியில் புழங்கப்பட கூடாதாம்.

சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக இருந்தவரும் இராமநாதபுரம் மாவட்டத் தலைவராக (District Board President) இருந்து சாதனைகள் பல புரிந்தவரும் நீதிக் கட்சி ஆட்சி அமைச்சரவையில் கொறடாவாக விளங்கிப் பணியாற்றியவருமான பட்டி வீரன்பட்டி ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் அவர்களின் பெயரால் உள்ள கடை வீதியை அவர் பெயர் எப்படியும் வெளி உலக வெளிச்சத்துக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக, பாண்டி பஜார் என்று அறிவு நாணயமின்றி, கீழ்த்தரப் புத்தியுடன், பார்ப் பனர் அல்லாதார் மீது அவர்களுக்கே உரித் தான பகை உணர்வுடனும் (அவாளுக்குத் தொங்கு சதையாக இருந்து சேவகம் செய்யும் சூத்திரர்கள் நடத்தும் ஏடுகளும் உண்டு) எழுதி வருவதைப் பல நேரங்களிலும் இதனை விடுதலை சுட்டிக் காட்டியதும் உண்டு.

பூந்தமல்லி நெடுஞ்சாலை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்று மானமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது மாற்றிப் பெயர் சூட்டப்பட்டது. அதே போல மவுண்ட் ரோடு அண்ணா சாலை என்றும், கடற்கரைச் சாலை காமராசர் கடற்கரை சாலை என்றும் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் ஆணைகள் மூலம் அறிவிக்கப்பட்டன. பெயர்ப்பலகைகளிலும் அவ்வாறே பொறிக்கப்பட்டும் உள்ளன.

இந்த அரசு ரீதியான அறிவிப்புக்குப் பிறகும் ஏடுகள் மக்களால் மதிக்கப்படும் தலைவர்களின் பெயர்களுக்குப் பதிலாக பழைய பெயர்களை எழுதுவது போக்கிரித் தனம் அல்லாமல் வேறு என்னவாம்?

சில தொலைக்காட்சிகள் வேண்டு மென்றே பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று கூறி வருகின்றன. பல நேரங்களில் இது சுட்டிக் காட்டப்பட்டும் அவர்கள் திருத்திக் கொள்வதாக இல்லை.

பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையை பூந்தமல்லி நெடுஞ்சாலை என்றும், அண்ணா சாலையை மவுண்ட் ரோடு என்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதி இருப்பதை எதிர்த்து அவற்றை அழிக்கும் போராட்டத்தை திராவிடர் கழகம் அறிவித்து அதனைச் செயல்படுத்த எத்தனித்த நேரத் தில், சென்னைப் பெருநகரக் காவல்துறை ஆணையர் தலையிட்டு, உரிய மாற்றங்கள் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டம் ஒத்தி வைக்கப் பட்டது.

அதன் காரணம் பெரும்பாலான இடங் களில் மாற்றங்களைக் காண முடிந்தது. ஆனாலும் இன்னும் சில இடங்களில் பழைய பெயர்கள் இருக்கத்தான் செய்கின்றன.

சென்னை எழும்பூர் தொடர் வண்டி நிலைய (சுயடைறயல ளுவயவடி) கைகாட்டி விளம்பரங்களில் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அதனை நிருவாகம் மாற்றி எழுதும் என்று எதிர் பார்க்கிறோம். இல்லையெனில் நேரடியாக போராட்டத்தில் ஈடுபட நேரும் என்று எச்சரிக்கின்றோம்.18-6-2012

தமிழ் ஓவியா said...

இந்தி எதிர்ப்புப் போரில் மகளிர் பங்கு


திராவிடர் இனத்தின் உரிமை காக்கவும் இழந்த உரிமையை மீட்கவும் சமராடும் திராவிடர் கழகத்தின் வரலாற்று சிறப்புமிகு புத்துலக மகளிர் எழுச்சி மாநாட்டின் தலைவர் அவர்களே! மாநாட்டில் மகளிர் உரிமைப் போர் முழக்கம் செய்யவுள்ள தமிழர் தலைவர் அய்யா அவர்களே! கருத்தரங்க தலைவர் மற்றும் உரைவீச்சாளர்களே தோழர்களே தோழியர்களே வணக்கம். நாத்திக இயக்கத்தை தலைமையேற்று வழி நடத்திய முதல் பெண்மணி உலகம் வியக்கும் வீராங்கனை அன்னை மணியம்மையார் அவர்கள் பிறந்த மண்ணில் நடைபெறும் இம்மாநாட்டில் இந்தி எதிர்ப்புப் போர்க்களத்தில் மகளிர் ஆற்றிய பங்கினை எடுத்து சொல்லும் வாய்ப்பு, இந்தி எதிர்ப்பு களத்தில் பங்கு பெறும் வாய்ப்பில்லா எனக்கு கிடைத்த அரியவாய்ப்பாக கருதி பெரும் மகிழ்ச்சியடைகிறேன். அய்யாயிரம் ஆண்டுகளாய் அடிமைப் பட்டு பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பை - கடவுள் மத பக்தி போதையில் இருந்த திராவிடர் இனம் ஏமாந்து போய் ஏற்றதால் ஏற்பட்ட எண்ணற்ற சொல்லொணா விளைவுகளில் முதன்மையானது தமிழ் மொழி இரண்டாம் தரமாக்கப்பட்டதாகும். மேலும் தமிழைத் தாழ்த்தி தமிழர்களை வீழ்த்தி, திராவிடர் இன அழிப்பை செய்யவே கட்டாய இந்தியை திணித்தார் சென்னை இராஜதானியின் முதல்வர் இராஜகோபாலச்சாரியார். இந்தியைத் திணித்த பின் தொடர்ந்து சமஸ் கிருதத்தை நிலைப்பெறச் செய்து அனைத்து நிலையிலும் சமஸ்கிருதமய மாக்கப்பட்டு தமிழை தமிழனை திராவிடர் இனத்தை பூண்டோடு அழிக்கவே குல் லூகப்பட்டர் இராஜகோபாலாச்சாரியார் 21.04.1938 கட்டாய இந்தியை திணித்தார். ஆரியச்சூழ்ச்சி அறிவாசான் பெரி யாரிடமா செல்லும்? பெரியார் வரும் முன் காக்கும் சமுதாய மருத்துவர். கால மாற்றத்தைக் கணிக்கும் தொலைநோக்கு மனிதக் கணினி. ஆச்சாரியாரின் நோக் கம் அறிந்த பெரியார் இந்தி எதிர்ப்பு போர்ப் பிரகடனம் செய்தார். இந்தி எதிர்ப்புப் போர் 03.06.38 ல் ஆரம்பமானது. இந்தி எதிர்ப்பு போரின் தொடக்கம் பல்லடம் பொன்னுசாமி இராஜகோபாலச்சாரியார் வீட்டு முன் மேற்கொண்ட உண்ணா நோன்பாகும். அதனைத் தொடாந்து இந்தி எதிர்ப்பு சர்வாதிகாரிகள் 13 பேர் தலைமையில் அணி அணியாய் போர்க்களம் கண்டனர். மேற்கண்ட 13 இந்தி எதிர்ப்பு சர்வாதி காரிகளில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. போர்ப் படை தலைவர் பெரியார் கைது செய்யப்பட்டார். அவர் போல் 1271 பேர் கைது செய்யப் பட்டனர். இறுதியில் 21.02.1940 அன்று தமிழ் வென்றது. கட்டாய இந்தி ஒழிந்தது ஆரியம் பணிந்தது திராவிடர் மகிழ்ந் தனர். மொழி மானம் காக்க திராவிடர் இன எழுச்சி கொண்டு நடத்திட்ட இந்தி எதிர்ப்புப் போரில் மகளிர் பங்கு மகத்தானது. புறநானூற்றில் காணும் தமிழச்சியின் வீரத்திறத்தை மான போர்க்களத்தை மானுடம் மறுபடியும் இந்தி எதிர்ப்பு போரில் காணும் ஒரு வாய்ப்பு தமிழ் உலகுக்கு மீண்டும் கிடைத்தது என்பதே சரியான மதிப்பீடாகும்.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு

13.11.1938 அன்று தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு. சென்னை பெத்த நாயக்கன் பேட்டையிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் ஒற்றை வாடை நாடக கொட் டகையை சென்றடைந்தது வெகு எழுச்சியோடு மாநாடு தொடங்கியது. மாநாட்டில் தமிழ்கொடியை மீனாம்பாள் சிவராசு உயர்த்தினார்.

பண்டித நாராயணியம்மையார் மாநாட் டைத் திறந்து வைத்தார். வ.ப.தாமரை கண்ணியம்மையார் வரவேற்பு ரையாற்ற, தமிழறிஞர் மறைமலையடிகள் மகள் நீலம் பிகை அம்மையார் தலைமையேற்றார். நாகம்மையார் படத்தை பார்வதி அம்மை யார் திறந்து வைத்தார். மாநாட்டில் கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மாநாட்டில் சிறப்பு தீர்மானமும், முதல் தீர்மானமும் பின்வருவாறு

இந்தியாவில் இதுவரை தோன்றிய சீர்திருத்த தலைவர்களால் செய்ய இயலாமல் போன வேலைகளை நம் மாபெரும் தலைவர் ஈவெரா.அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும் - ஒப்பாகவும் நினைப்பதற்கு வேறு ஒருவரும் இல்லாமை யாலும் அவர் பெயரை சொல்லிலும் எழுத்திலும் வழங்கும்போது பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்களை விளக்கி பண்டிதை கண்ணம்மாள், இராமாமிர்தத்தம்மையார், கமலாம்மாள், சிறுமிகுஞ்சிதமணி நீலாயதாட்சி, ஆர். நாராயணியம்மையார், மலர்முகத்தம்மையார், இராணியம்மையார் (அறிஞர் அண்ணாவின் துணைவியார்) ஆகியோர் பேசினார்கள். இந்தி எதிர்ப்புப் போரின் களம் இறங்கிப் போராடிய வீராங்கனைகளின் சிறை வாழ்வு 14.11.38 அன்று முதல் தொடங்கியது. பெத்த நாயக்கன் பேட்டை காசி விஸ்வநாதர் கோயில் அருகிலிருந்து டாக்டர் தருமாம்பாள் தலைமையில் இராமமிருதத்தம்மையார், மலர்முகத்தம் மையார், பட்டம்மாள், சீதம்மாள் ஆகிய அய்ந்து தமிழ் வீர பெண்மணிகள் இந்தி தியாலாஜிக்கல் பள்ளியை நோக்கி புறப்பட்டனர். இடையே கைது செய்யப் பட்டு நீதி மன்றத்தில் ஆறு வாரம் சிறை வாழ்வு பெற்றனர். 21.11.38 ல் ஏழு பெண்கள் சிறை ஏகினர்.

28.11.38 ல் நான்கு பெண்கள் சிறை ஏகினர்.

05.12.38 ல் ஜெயலெட்சுமி அம்மையார் 18 மாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார்.

12.12.38 ல் ரோசாம்மாள் 2 வயது குழந்தையுடன் கைது சிறை.

16.12.38 ல் நான்கு பேர் கைது.

09.01.39 ல் சேலம் சேவகி அம்மாள் இரு குழந்தைகளுடன் கைதா னார்.

11.01.39 ல் ஈரோடு ரெங்கம்மாள், சென்னை லலிதாம்மாள் (இரு குழந்தைகளுடன்) கைது.

23.01.39 ல் பத்து பெண்கள் கைது இருவர் கைக்குழந்தையுடன் 30.01.39 ல் சென்னை கல்யாணி அம்மாள் கைது.

06.02.39 ல் அய்ந்து பெண்கள் கைது.

17.02.39ல் சென்னை நாராயணி யம்மையார் பெரியாரை விடுதலை செய் யக் கோரி கைதானர். 20.02.39 ல் மூன்று பெண்கள் கைது. 06.03.39 ல் மலர் கொடியம்மையார் கைது.

13.03.39 ல் நான்கு பெண்கள் கைது. 26.06.39 ல் இரண்டு பெண்கள் கைது.

17.07.39 ல் ஏழு பெண்கள் கைது.

24.07.39 ல் தாயாரம்மாள் இரு குழந்தைகளுடன் கைது. 21.08.39 ல் பனிரெண்டாவது சர்வாதி காரி கோபி மாரியம்மாள், நெய்வேலி பொன்னம்மாள் கைது.

04.09.39 ல் நாச்சியம்மாள் பத்து மாத கைக்குழந்தையுடன், நான்கு பெண் களுடன் கைது.

மொழியைக் காக்க தன் உயிரையும் பொருட்படுத்தாது குழந்தையோடு குடும்பத்தோடு சிறை சென்ற பெண்கள் மொத்தம் 73. பேர் குழந்தைகள். 32. பேர் உலக வரலாற்றில் தனது மொழியைக் காக்க இதுபோல் போரிட்ட பெண்களை உலகில் வேறு எங்கும் காண முடியாது. இந்தி எதிர்ப்பு போர்க்களத்தில் மகளிர் பங்கு மகத்தான வரலாற்றை உருவாக் கியுள்ளது என்றால் அது மிகையாகாது. மொழிகாக்க களம் கண்ட வீராங்கனைகள் வழி நடப்போம் - நாமும் புது வரலாற்றை உருவாக்குவோம். இவ்வாறு பேராசிரியை பர்வின் பேசினார்.

(குறிப்பு: 29.5.2012 அன்று வேலூரில் நடைபெற்ற புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநாட்டுக் கருத்தரங்கில் உரையாற்ற அனுப்பப்பட்ட எழுத்துரை இது)

தமிழ் ஓவியா said...

கலாம்மீது மதிப்பு கொண்டவன் நான் வீணாகக் கலாம் விளைவிக்காதீர்கள் செய்தியாளர்களிடம் கலைஞர்


சென்னை, ஜூன் 18- முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மதிப்பு கொண்டவன் நான், அவரை எப்போதும் மதிக்கக்கூடியவன் நான் என தி.மு.க. தலைவர் கலைஞர் நேற்று (17.6.2012) சென் னையில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கலைஞர் அவர்களது பேட்டி வருமாறு:-

செய்தியாளர் :- தி.மு. கழக ஆட்சி நடை பெற்ற போது, அந்த ஆட்சியின் திட்டங் களையெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்த பத்திரிகைகள், தற்போது அ.தி.மு.க. ஆட்சி நடைபெறும் நேரத்திலும், அந்த ஆட்சியின் திட்டங்களை விமர்சிக்காமல், தி.மு. கழகத் தையே தாக்கி விமர்சனம் செய்கிறார்களே?

கலைஞர் :- எங்களால் கொடுக்க முடியவில்லை - விளம்பரங்களை!

செய்தியாளர் :- தேசிய ஜனநாயகக் கூட் டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாளரை நிறுத்தப் போவதாக தகவல் வந்திருக்கிறதே?

கலைஞர் :- எனக்குத் தெரியாது.

செய்தியாளர் :- உங்கள் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் அவர்களின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

கலைஞர்:- பிரகாசமாக உள்ளது.

செய்தியாளர் :- புதுக்கோட்டை இடைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக போட்டி யிட்ட தே.மு.தி.க. வேட்பாளருக்கு டெபாசிட் கிடைத்திருப்பதைப் பற்றி?

கலைஞர் :- அதற்கு விளக்கம் சொல்ல விரும்பவில்லை.

அப்துல் கலாம் மீது நான் மதிப்பும், மரியாதையும் கொண்டவன்!

செய்தியாளர் :- கலாம் என்ற வார்த் தைக்கு தமிழிலே உள்ள பொருளைப் பற்றி நீங்கள் கூறியதைத் திரித்து, அப்துல் கலாம் பற்றி விமர்சனம் செய்ததாக சிலர் திசை திருப்புவது பற்றி?

கலைஞர் :- சில பேர், அதை திசை திருப்ப முயலுகிறார்கள். திரு. அப்துல் கலாம் அவர்கள் வகித்த உயர்ந்த பதவி மீதும், அவர் மீதும் நான் வைத்துள்ள மதிப்பு, மரியாதை எத்தகையது என்பதை அவரே அறிவார். அவரை எப்போதும் மதிக்கக் கூடியவன் நான்.

செய்தியாளர் :- கடந்த முறை குடியரசுத் தலைவர் வேட்பாளராக இருந்த திருமதி பிரதிபா பட்டீல் முதன்முதலாக தமிழகத்திற்குத் தான் வாக்கு கேட்க வந்தார். அதுபோல இந்த முறையும் பிரணாப் தமிழகத்திற்கு வருவாரா?

கலைஞர் :- வரும் 30ஆம் தேதியன்று சென்னைக்கு முதன்முதலாக வாக்காளர் களைச் சந்திப்பதற்காக பிரணாப் முகர்ஜி வருகிறார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து வாக்கு களைக் கேட்பார். அப்போது அவருக்கு வரவேற்பு அளிப்பதோடு - விருந்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

செய்தியாளர் :- குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து காங்கிரசில் குழப்பம் இருப்பதாக அத்வானி சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- நோ கமெண்ட்ஸ்.
இவ்வாறு கலைஞர் அவர்கள் கூறியுள்ளார். 18-6-2012