Search This Blog

17.1.12

உலகத் திராவிடர்களே! ஒன்று சேருங்கள்!

உலகத் திராவிடர்களே! ஒன்று சேருங்கள்!

இந்தத் தலைப்பு சிலருக்கு வியப்பையளிக்கும்.தமிழ்நாட்டிலே திராவிடர் என்ற சொல்லாட்சியையே கடிந்தொதுக்குபவர்கள் பெருகிவிட்ட இக் காலத்தில் உலகத் திராவிடர் எனல் எவ்வாறு பொருந்தும் எனவும் மறுப்பும் மருட்கையும் பலருள்ளத்தில் ஏற்படக் கூடும்.

தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் என்னும் சொல்லைத் திராவிடநில எல்லைக்குட்பட்டு வாழ்வோர் என்னும் பொருளில் பயன்படுத்த வில்லை. மனிதனின் இனம் என்ற பிரிவு என்று ஏற்பட்டதோ அன்றிலிருந்து திராவிடனும் இருந்துவருகிறான். என்று கூறும் பெரியார், இழிவுள்ள சகல மக்களும் ஒன்றுசேர அவ் வார்த்தையில் இடம் இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. என விளக்குகிறார்.

ஒடுக்கப்படுபவன் என்று பொருள் படும் தலித்து என்னும் சொலைக் காட் டிலும் ஆழ்ந்த நிலையில் பெரியார் திராவிடர் என்ற சொல்லைக் கருதியுள்ளார். ஒடுக்கப்படுபவன், பொருளாதார நிலையில், ஆட்சி அதிகாரத்தில், கல்விவாய்ப்பில், வேலைவாய்ப்பில் ஒடுக்கப்படுபவன் எனப் பொருள் தரலாம். ஆனால் மனிதநிலையே அளிக்கப்படாமல் மனிதனினும் கீழாக இழிவுபடுத்தப்படுபவன் என்று பொருள்தரும் திராவிடர் எனும் சொல்லாட்சி தந்தை பெரியாரின் அகன்றுவிரிந்த சமூகவியற்பார் வையைப் புலப்படுத்துகிறது.

அங்ஙனம் ஒடுக்கப்படுபவன் தன் விழுப்பமும் (Self-esteem) தன்மதிப்பும் (Self-respect) பெறும்வகையில் சமூக அமைப்பை மாற்றியாக வேண்டும் என்பதே பெரியாரின் குறிக்கோளாக இருந்தது.

வகுப்புவழிச் சார்பாண்மைக்கு அடித்தளம் அமைத்து நீதிக்கட்சி ஆட்சியிலேயே உயர்கல்வி வாய்ப்புக ளையும் உயர்பதவிகளையும் சூத்திர விலங்கு பூட்டப்பட்டுக் கிள்ளுக் கீரைகளாகக் கீழ்நிலைக்குத் தள்ளப் பட்டவர்கள் பெறும்வகையில் பெரியார் உழைத்தமையும் இந்திய விடுதலைக்குப் பின்னும் இந்திய அரசியற்சட்டத்தையே திருத்தி இந்த வாய்ப்புகள் தொடரும் வகை செய் தமையும் பழைய வரலாறு.

இன்னும் ஆரிய மேலாண்மையே!

இன்று அவர் உழைப்பின் பயனை நுகரும் நாம் இன்னும் ஆரிய மேலாண்மை நம்மைஅடிமைப் படுத்திக்கொண்டிருப்பதைப் பற்றிய தெளிவும் விழிப்புணர்வும் இன்றி நமக்குள்ளே பங்காளிச் சண்டையிலே ஈடுபட்டுவருகிறோம். இவ்வேளையில் பெரியார் நெறியில் தன்மதிப்புணர் வுடன் நாம் ஆற்றவேண்டிய பணிகள் இமயமலையினும் பெரிது என்பதை உணர்த்துவதே இக் கட்டுரையின் நோக்கம்.

நான் கற்றறிந்தவரையில், கேட்ட றிந்தவரையில், பட்டறிந்தவரையில் சமற்கிருதத்திற்கு வழங்கப்படும் முதன்மையும் சிறப்பும் உலகில் வேறெந்த மொழிக்கும் வழங்கப்படவில்லை என்பதே உண்மை. நூல்கள் என எடுத்துக்கொண்டால்,ஆங்கிலத்தில் சமற்கிருதம் குறித்த நூல்கள் மிகமிக அதிகம்.இணையதளத்திலும் சமற்கிருதம் பற்றிய வலைத்தளங்கள் மிகுதி.

இந்தியா என்றாலே சமஸ்கிருதம்தானா?

சமற்கிருதம் என்னு மொழியைப் பற்றியும் அம் மொழியில் அமைந்துள்ள வேதங்கள் முதலான சமயச் சார்பான நூல்களைப் பற்றியும் உலகெங்கணும் உள்ள அறிவுத்துறையினர் நன்கு அறிந்துள்ளனர். இந்தியா என்றாலே அதன் மொழியும் பண் பாடும் சமற்கிருதம் சார்ந்தவை என்னும் எண்ணமும் கருத்தும் உலகெங் கணும் நிலவிவருவது உண்மை. 1987இல் நான் அமெரிக்கா சென்ற போது நான் சென்றவிடங்களிலெல்லாம் அறிவுத்துறையினர் இத்தகைய ஒரு முற்சாய்வு கொண்டவர்களாக இருப்பதைக் கண்கூடாக அறிந்தேன்.

அமெரிக்காவின் மத்தியப்பகுதியில் அமைந்துள்ள, மலைகள் நிறைந்த ஊட்டா மாநிலத்தில் புரோவோ என்னும் நகரில் விளங்கிவரும் பிரிகாம் யுங் பல்கலைகழகத்தில் நடைபெற்ற உலக மொழியியல் மாநாடு ஒன்றில் ஆய்வுரை வழங்கச் சென்றிருந்தேன். மூன்று நாள்கள் நடைபெற்ற அம் மாநாட்டில் (1987) கலந்து கொண்ட வர்களில் நான் ஒருவன் மட்டுமே இந்தியன்; அங்கேயே ஆங்கிலத் துறையில் அப்போது பணியாற்றிய பேராசிரியர் மா.ஆரோக்கியசாமி மற்றொரு இந்தியர்; இவர்தான் என்னை அங்கே கலந்து கொள்ளுமாறு ஆற்றுப்படுத்தியவர்.

அம் மாநாட்டில் கலந்துகொண்ட அத்துணைப்பேரும் இந்தியா என்பது சமற்கிருத மொழி வழங்கும் நாடு; சமற்கிருத மொழியும் அதன் கிளை மொழிகளுமே அங்கே நிலவுகின்றன என்னும் கருத்து உடையவர்களாகவே இருந்ததனைத் தெளிவாக உணர முடிந்தது. அங்கே மொழியியல் துறைத்தலைவராகப் பணிபுரிந்த இராபர்ட்டு பிளேர் என்பவர் மட்டும் திராவிடமொழிகளின் தனித் தன்மையை உணர்ந்தவராக இருந்தார். எனினும் பேராசிரியர் பிளேர் அவர் களைப் போல் திராவிடமொழிகளின் தனித்தன்மையை அறிந்தேற்கும் மன முதிர்ச்சியும் தெளிந்த அறிவும் அங்கே வேறு பல்கலைக்கழகப் பேராசிரி யர்களிடம் காணமுடியவில்லை. நல்வாய்ப்பாகக் கலிபோர்னியாப் பல்கலைக்கழகம் சென்றேன்.அங்கே சார்சு கார்ட்டு எனும் அறிஞர் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிகிறார் என்பதைக் கேள்விப்பட்டு அவரைக் காணும் நோக்குடன் சென்றேன். அவர் அங்குத் தமிழ் பயிலும் மாணவர் களுக்குப் பயன்படுமாறு ஒரு சொற் பொழிவு நிகழ்த்தப் பணித்தார்.அந்தப் பெருந்தகை ஆர்வார்டு பல்கலைக் கழகத்தில் சமற்கிருதம் பயின்றவர் என்பதையும் சங்க இலக்கியங்களை ஒப்புநோக்கில் ஆய்வுசெய்தவர் என் பதையும் கேள்விப்பட்டிருந்தேன். அன்றிலிருந்து இன்றுவரை அவரைப் போல் நடுநிலையாகத் தமிழின் தனித் தன்மையையும் தனிச்சிறப்பையும் உலகுக்கு உணர்த்தும் நோக்குடன் பணியாற்றும் வேறொரு பேராசிரியரை அவருக்கு ஒப்பாகக் கூற இயலவில்லை என்பதே உண்மை.

தமிழ் இலக்கியப்பரப்பும் வட மொழி இலக்கியப்பரப்பும் மட்டு மின்றி இச் செம்மொழிகளின் இலக் கணங்களையும் ஆழ்ந்து கற்ற சார்சு கார்ட்டு கிரேக்கம்,இலத்தீன் என்னும் செம்மொழிகளிலும் பெரும்புலமை மிக்கவர்.உருசிய மொழி,பிரெஞ்சு மொழி முதலான ஐரோப்பிய மொழிகள், இந்தி, தெலுங்கு முதலான இந்திய மொழிகள் எனப் பதினெட்டு மொழிகளில் பெரும்புலமை வாய்ந்த இப்பேரறிஞர் தமிழின் தனித் தன்மையையும் தொன்மையையும் உலகுக்குணர்த்திய ஒப்பற்ற பணியைப் பன்னெடுங்காலமாக ஆற்றிவருகிறார். 1987-இல் கலிபோர்னியாப் பல்கலைக் கழகம் சென்று அவரைக் கண்டு உரையாடி மகிழவும் மாணவர் களுடன் கருத்துரையும் கருத்துப் பரிமாற்றமும் நிகழ்த்தும் வாய்ப்பும் நான் எதிர்பாராமல் எனக்குக் கிடைத்த இனிய வாய்ப்புகளாகும்.

1997-இல் கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழியல் இருக்கை நிறுவும் முயற்சியில் முனைந்த பேராசிரியர் சார்சு திரு. குமார் குமரப்பன் தலைமையில் செயற் பட்டுவந்த வளைகுடாத் தமிழ்ச் சங்கத்துடன் ஒருங்கிணைந்து அமெ ரிக்கத் தமிழர்களின் துணையுடன் வெற்றி கண்டார்.

இந்தியாவிலிருந்து ஒரு சிறப்பு வருகை தரு பேராசிரியர் வந்து பணியாற்றினால் நலமாக இருக்கும் என அமெரிக்கத் தமிழர்கள் விரும் பினர். 1997-இல் இப்போது உள்ளதைப் போன்று தனியார் தொலைக் காட்சிச் செயற்கைக்கோள் அலை வரிசைகள் அமெரிக்காவில் இல்லை. எனவே அங்ஙனம் வரும் பேராசிரியர் வார நிறைவு நாட்களாகிய சனி, ஞாயிறுகளில் அமெரிக்காவின் பல் வேறு மாநிலங்களிலும் செயற்பட்டு வரும் தமிழ்ச்சங்கங்களுக்குச் சென்று உரையாற்றவும் வாய்ப்பிருக்கும்; இதன்விளைவாக இலக்கிய ஆர்வம் மிக்கவர்களும் தமிழ்ப்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பு ஏற்படும் எனவும் அவர்கள் கருதினர்.

இங்ஙனம் பணியமர்த்தம் செய்யப் படுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் எனத் தெரிவுசெய்யப்பெற்ற பட்டி யலில் என் பெயரும் இருந்தது. அப் பட்டியலிலிருந்து நான் தெரிவு செய்யப்பெற்றமைக்கு தனிப்பட்ட யாரையும் காரணம் எனக் கூற இயலாது. இங்கே உள்ளதைப் போன்று பரிந்துரை, கொல்லைப் புறவழி முதலியவை அந்நாட்டில் கிடையாது.

எனினும் மொழியியலில் ஆய்வுப் பட்டம், சமற்கிருதக் கல்வி,நூல் வெளியீடு, கருத்தரங்கங்கள் (குறிப்பாக ஆங்கில மொழியில் நடை பெற்றவை) பலவற்றில் கலந்து கொண்டமை எனும் இவையே என்னை முன்னிறுத்தக் காரணமாயின எனலாம்.

அங்ஙனம் தெரிவு பெற்றாலும் மூன்று அறிஞர்களின் அறிந்தேற்பு தேவை; இதற்காக அந்த நேரம் அமெரிக்கா வந்திருந்த மூன்று தமிழ றிஞர்களிடம் என் தகவுடைமை குறித்து வினா எழுப்பப்பட்டுப் பதிவு செய்துகொண்டனர்.

இதன் விளைவாக நான் பணிய மர்த்தம் பெற்றமை சார்சு அவர் களுக்குப் பெருமகிழ்வே. இங்ஙனம் சென்று அங்கே ஆற்றிய பணிகள் பற்றிப் பின்னொரு கட்டுரையில் விளக்குகிறேன்.

இங்கு இதனை விரித்துரைக்கக் காரணம்,1987-இல் நான் வந்து சார்சு அவர்களைக் கண்டு இபடி ஒரு துறை அமைக்குமாறு வேண்டியதாகவும் சார்சு என்னைப் பணியமர்த்திய தாகவும் நாங்கள் இருவரும் இணைந்து இந்திய அரசுக்குப் பல வலியுறுத்துமடல்கள் அனுப்பித் தமிழைச் செம்மொழியாக அறிவிக்கு மாறு செய்துவிட்டதாகவும் தவறான ஒரு படப்பிடிப்பை இராசீவ் மல் கோத்ரா, அர்விந்தன் நீலகண்டன் என்னும் இருவர் இணைந்து எழுதி யுள்ள Breaking India என்னும் ஆங்கிலநூல் வழங்கியுள்ளது.நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க வெளியீடாக வந்த இந்நூல், சென்ற ஆண்டு இந்திய வெளி யீடாகவும் வெளிவந்தது.இந்த ஆண்டு, இப்போது உடையும் இந்தியா எனத் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. துண்டுதுணுக்காக நிகழ்ந்த சில நிகழ்வுகளை ஒன்றுகூட்டி ஒரு பூதத்தைப் படைத்துக் காட்ட இவர்கள் விழைகின்றனர். அப்படிப் பூச்சாண்டி காட்டித் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ள முனைந்தமையால் இதனை ஒரு மோசடிக்குற்றம் எனக் குறிப் பிடவேண்டும்.

1987-இல் பிரிகாம் யங் பல்கலைக் கழக்த்திற்கு நான் சென்றது மொழி யியல் ஆய்வுரை வழங்குதற்கே. எனினும் என் வலைப்பக்கத்தில் என் கருத்துரையாக மார்மன் விவிலியத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அந் நுலைப் படித்தபோது திருவாசகத்தை ஒப்பிடத் தோன்றியது. ஏனெனில் திருவாசகத்தில் எல்லாப் பாக்களிலும் தம் நெஞ்சை முன்னிலைப்படுத்தி மாணிக்கவாசகர் பாடியிருப்பார். மார்மன் விவிலியத்திலும் அத்தகு நிலையைக் காண்கிறோம். இறைவனைத் தேன் என மாணிக்கவாசகர் குறிப்பது போன்றே அமெரிக்க நூலிலும் குறிப்பு பலவிடங்களிலும் பயின்றுவருகிறது. இது தற்செயலான் ஒப்புமையெனினும் குறிப்பிடத்தக்க ஒன்று என் வலைப்பதிவில் குறிப்பிட்டி ருந்தேன். இக்குறிப்பு திருவாசகத்தை நன்கறிந்த நம்மவர்களுக்காக. ஆனால் நான் அப்ப்டி அமெரிக்காவில் பேசிய தாகவும் அதன்விளைவாகத் தமிழ்ப் பத்தியிலக்கியத்தின் தரத்தைத் தாழ்த்தி விட்டதாகவும் இந் நூலாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் நான் சார்சுக்கு வேண்டிக்கொண்டதால் சார்சு இந்திய அரசை வலியுறுத்தித் தமிழைச் செம்மொழி என அறிவிக்க வழிவகை செய்துவிட்டதாகவும் இவர்கள் புனைந்துரைத்துள்ளனர்.

ஆற்றாமையும், அழுக்காறும்

தேவபாடையாகிய சமற்கிருதத்திற்கு நிகராகத் தமிழ் செம்மொழித் தகுநிலையை அடைந்துவிட்டதே என்று ஆற்றாமையும் அழுக்காறும் இவர் களின் உள்ளத்தைக் குடைந்து கொண்டிருப் பதையே இவர்களின் புனைவுரைகள் எடுத்துக்காட்டுகின்றன.

ஆனால் உண்மைநிலை என்ன? இன்னும் தமிழ் தனக்குரிய தகுதியை அடையவில்லை. கணினித் துறையில் உல்ககச்சாதனை பெற்றுவிட்டதாக நம் இளைஞர்கள் பெருமையடித்துக் கொள்ளும் இவ்வேளையில் உண்மை யான நிலையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இணையதளத்தில் கூகுள் தேடு பொறிக்குச் சென்று Tamil என்று தட்டச்சு செய்தால் 61,300,000 வலைத் தளங்கள் ஓடிவரும்.அதே வேளையில் Sanskrit என்று தட்டச்சு செய்தால் 36,900,000 வலைத்தளங்கள் மட்டுமே வரும். இதனை வைத்துக்கொண்டு தமிழ் முதலிடம் பிடித்துவிட்டதாக மனநிறைவு அடைந்துவிடக் கூடாது. பின்வரும் விவரங்களைப் பாருங்கள்.

Hindu—115,000,000 results
Vedas-1,270,000 results
Hindu philosophy-1,490,000 results
Brahmin-13,800,000 results
Manu dharma shatra-13,800,000
results

இவற்றையெல்லாம் எந்தக்கணக் கில் சேர்ப்பது?

கூகுள் தேடுபொறிக்குச் சென்று Thirukkural என்று தட்டச்சு செய்தால் 483,000 வலைத்தளங்கள் வரும். ஆனால் பின்வரும் பட்டியலைப் பாருங்கள்.

Ramayanam- 1,610,000 results
Mahabaratham- 5,040,000 results

நாம் முன்னேறியிருக்கிறோமா இல்லை வெறும் ஏமாளித்தனமா என எண்ணிப்பார்க்கவேண்டும்.

என்னைத் திராவிடக் கல்விசார் தீவிரவாதி (Dravidian Academic–Activist) என அந்நூலாசிரியர்கள் குறித்திருப்பது என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும்சிறப்பு எனலாம். எனினும் அத்தகைய பெருஞ் சிறப்புப் பெறுமளவு நான் குறிப்பிடத் தக்க பணிகள் இதுவரை ஆற்றவில்லை. அங்கே மாணவர்கள் வேண்டுகோளுக்கிணங்கத் திரு முருகாற் றுப்படை, நாச்சியார் திருமொழி ஆகிய வற்றில் சிறப்புப் பயிற்சியளித்து அந்நூல் களை என் மேற்பார்வையில் மொழி பெயர்க்கச் செய்தேன்.

இதற்காக என்னை இந்துசமயவிரோதி என அழைத்துள்ளனர். இவர்களின் கூற்றில் உண்மை யில்லை எனத் திரு.குமார் குமரப்பன் அவர்கள் இணையத்தில் விடையளித்துள்ளார். பேராசிரியர் சார்சு கார்ட்டு அவர்களும் பல்கலைக் கழக இணைய தளத்திலேயே இக் கூற்றின் பொய்ம்மை யையும் பொருந் தாமையயும் விளக்கியுள்ளார். திராவிடக் கல்விசார் தீவிரவாதி (Dravidian Academic - Activist) என இவர்கள் பெருமைப்படுத்தியதற்கிணங்க நான் பெரும் பணியாற்ற வேண்டும். உலகப் பல்கலைக் கழகங்களுக்குச் சென்று பெரியாரியத்தின் பெருமையையும் அதன் உலகளாவிய பார்வை யையும் எடுத்துரைத்து மாணவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும். அவ் வகையில் எனக்கு ஊக்க மளித்த உடையும் இந்தியா நூலாசிரியர்களுக்கு என் நன்றி...

------------------மறைமலை இலக்குவனார் அவர்கள் 12-1-2012 “விடுதலை” பொங்கல் சிறப்பு மலரில் எழுதிய கட்டுரை

0 comments: