Search This Blog

5.2.11

உள்ளம்தோறும் பெரியார்-இல்லம்தோறும் பெரியார்

எடைக்கு எடை ரூபாய் நோட்டு வழங்கியது பெரியார் கொள்கையை மேலும் பரப்ப உற்சாகமூட்டியிருக்கிறது மேலவன்னிப்பட்டில் தமிழர் தலைவர் விளக்கமான உரை

எடைக்கு எடை ரூபாய் தந்திருக்கின்ற நீங்கள் பெரியார் கொள்கையை மேலும் பரப்ப என்னை உற்சாக மூட்டி யிருக்கின்றீர்கள் என்று கருதுகின்றேன் என தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவு ரையாற்றினார்.

உரத்தநாடுக்கு அருகில் உள்ள மேலவன்னிப் பட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 30.1.2011 அன்று ஆற்றிய உரை வருமாறு:

பெருநகரங்களில் கூட செய்யாத பணி

இரவு 10 மணியைத் தாண்டிவிட்டது. ஒரு பக்கம் பனி பெய்து கொண்டிருக்கிறது என்றாலும் நீங்கள் யாரும் கலையாமல், இன்னமும் இந்த உரைகளை எல்லாம் கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள். பெரும் நகரங்களிலே கூட செய்ய முடியாத ஒரு சாதனையை இந்த மேலவன்னிப்பட்டு கிராமத்திலே நம்முடைய இளைஞர்கள் முன் வந்து அற்புதமாக இந்த நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருக் கிறார்கள். அத்துணைப் பேருக்கும் என்னுடைய தலைதாழ்ந்த நன்றியைத் தெரி வித்துக்கொள் கின்றேன்-இயக்கத்தின் சார்பிலே. நீங்கள் சிறப்பான கட்டடத்தைக் கட்டியிருக்கின்றீர்கள். படிப்பகத்தை அமைத்திருக்கின்றீர்கள். நூலகத்தை அமைத்திருக்கின்றீர்கள்.

அய்யா அவர்களுக்குச் சிலை

எல்லாவற்றையும் விட, அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு சிலை வைத்தி ருக்கின்றீர்கள். இந்த இனம் நன்றிக்குரிய இனம். இந்த மண்ணைச் சார்ந்த மக்கள் நன்றியை மறக்கக் கூடியவர்கள் அல்லர் என்பதைக் காட்டுவதற்காக அய்யா அவர்களுக்கு சிலை அமைத்திருக்கிறீர்கள்.

இவ்வளவு சிறப்பான பணியைச் செய்ததோடு இல்லாமல், இன்னமும் மேலும் சிறப்பாக இங்கே எடைக்கு எடை ரூபாய் நோட்டுகளை தந்தி ருக்கிறீர்கள்.
யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்

யாராலும் முடியாதது, நம்மால் மட்டுமே முடியும்; நம்மால் முடியாதது யாராலும் முடியாது

என்பது நம்முடைய இளைஞர்கள் தெளிவாக செயல்படுத்தக் கூடிய ஒரு செய்தி-நடைமுறை. அதை இன்றைக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றீர்கள். அதற்காகவும் என்னுடைய இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தநேரத்திலே நான் நீண்டதொரு உரையை ஆற்றப் போவதில்லை. சுருக்கமாகத்தான் இந்தக் கருத்துகளை எடுத்துச் சொல்லவிரும்புகிறேன். நம்முடைய ரஞ்சித்குமார் அவர்களுடைய எளிய இல்லத்திறப்பு விழா நடைபெற்றிருக்கின்றது. அவர் ஓர் எளிய குடும்பத்தைச் சார்ந்தவர். அவருடைய உழைப்பாலே கட்டியிருக்கின்றார். எங்களுடைய தோழர்கள் வசதி வாய்ப்பைப் பொறுத்தவரையிலே அவர்கள் குறைவானவர்கள். பொருளாதாரக் கண்ணோட்டத்தோடு மற்ற வாய்ப்புகளிலே அவர்கள் மிகப்பெரியதாக வளர்ந்தவர்கள்.

பெரியார் தத்துவத்தை உலகமயமாக்கிட...

அவர்களுடைய உழைப்பினாலே வளர்ந்திருக் கிறார்கள். பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன், தந்தை பெரியாரின் லட்சிய முழக்கங்கள் என்னும் நூலை வெளி யிட்டார்.

எங்களுடைய துணைவேந்தர் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் ஓர் எளிய கிராமத்திலே பிறந்தவர். அமெரிக்காவிலே பிரபல டாக்டராகப் பணியாற்றியவர். அமெரிக்காவில் பெரியார் பன்னாட்டு மய்யத்தையே அமைத்து உலகம் முழுவதிலும் இருக்கின்ற பெரியார் தொண்டர்களை அடையாளம் கண்டு. இந்தப் பணியை அவர்கள் ஊக்கப்படுத்தி, பெரியாரை உலகமயமாக்கக் கூடிய பெரியார் தத்துவத்தை உலக மயமாக்குவதற்கு அவர்கள் காரணமாக இருக்கிறார்கள்.

அதேபோலத்தான் பெரியார் தத்துவத்தை உலகமயமாக்குவதற்கு பல்கலைக் கழகத்தின் மூலமாக உழைப்பினாலே உயர்ந்தவர். இந்தப் பகுதியிலே ஓர் எளிய கிராமத்தைச் சார்ந்தவர்தான் நம்முடைய துணைவேந்தர் நல்.இராமச்சந்திரன் அவர்கள். அவர் வளர்ந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

அதே போலத்தான் டாக்டர் ராமசாமி அவர்கள் இங்கே சிறப்பாகக் சொன்னார்கள். ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னார்கள். தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால் எதற்காக இந்தச் சிலை இங்கேயிருக்கிறது?

தன்மானம் பீறிட்டுக்கொண்டு வரவேண்டும்

அந்தச் சிலையைப் பார்க்கும்பொழுதெல்லாம் நமக்குத் தன்னம்பிக்கையும், தன்மானமும் பீறிட்டுக் கொண்டு வரவேண்டும். அதற்காகத்தான் கிராமங்கள் தோறும் பெரியார் சிலை வைத்திருக்கிறோம்.

மூடத்தனத்தை முறியடித்தார்

பெரியார் சிலையைச் சுற்றி வந்தால் நமக்கு வேண்டுதல் பலிக்கும் என்பதற்காக அல்ல. அல்லது நாம் நினைப்பது நடக்கும் என்பதற்காக அல்ல. அப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளே கூடாது என்று சொன்னவர் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். எதை மிகப்பெரும்பாலான மக்கள் நம்புகிறார்களோ அது மூடத்தனம் என்று ஓங்கி அடித்தவர் நம்முடைய அய்யா அவர்கள்.

தலைவர் பிறந்திருக்காவிட்டால்.....!

எனவே அப்படிப்பட்ட அந்தத் தலைவர் பிறந்திருக்காவிட்டால் நாமெல்லாம் இந்த மேடையிலே பட்டதாரிகளாக, பேராசிரியர்களாக அல்லது பெரும் நிலையிலே இருக்கக்கூடியவர் களாக, தொழில் அதிபர்களாக மற்றவர்கள் மதிக்கக்கூடிய வகையிலே இருந்திருக்குமா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்னும் கேட்டால் முழங்காலுக்குக் கீழே வேட்டி தொங்கக் கூடாது என்ற ஒரு காலம் இருந்தது. தோளிலே துண்டு போடக்கூடாது என்று இருந்த காலம் உண்டு.
கிராமங்களில் எல்லாம் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது
இன்னும் கேட்டால் நம்முடைய தாய்மார்கள் ரவிக்கை அணியக்கூடாது என்று இருந்த காலம் உண்டு.

அதற்கெல்லாம் போராட்டத்தை நடத்தி, சமுதாய மாற்றத்தை உண்டாக்குவதற்காக நடத்தி இன்றைக்கு மிகப்பெரிய அளவிலேகூட கிராமங் களிலே கூட எழுச்சி இருக்கிறது. ஏற்றம் இருக் கிறது. அறிவு இருக்கிறது. திறமை இருக்கிறது என்று காட்டுகின்ற வகையிலேதான் இந்த மேடை அமைந்திருக்கிறது. தொழிலதிபர்கள் ஆனாலும், கல்வி வள்ளல்கள் ஆனாலும், பெரும் மருத்து வர்கள் ஆனாலும், பல்வேறு துறையிலே இருக்கக் கூடியவர்கள் ஆனாலும், இவர்கள் எல்லாம் தங்களுடைய ஆற்றலால் மட்டும் வரவில்லை.

எனக்கு எடைக்கு எடை ரூபாய்

அடித்தளத்தில் தந்தை பெரியார் போட்டுவந்த பாதைதான் அவர்களை அங்கே அழைத்துச் சென்றது. எனவே பாதை இல்லாத ஊர்களுக் கெல்லாம் ஈரோட்டுப் பாதையை அவர்கள் தந்தார்கள்.

அதனுடைய விளைவாகத்தான் எங்களைப் போன்றவர்கள் படிக்க முடிந்தது. அந்த நன்றி உணர்ச்சி அடிப்படையிலேதான் பெரியாரின் தொண்டர்களுக்குத் தொண்டனாக நானிருக்கிறேன்.

என்னுடைய பணியை நீங்கள் பாராட்டுகின்ற வகையிலே எடைபோட்டார்கள். பல்வேறு பொருள்களை எனக்கு இதற்கு முன் எடைக்கு எடை தந்தார்கள் என்று சொன்னார்கள்.

இது எனக்காக அல்ல!

இது எனக்காக அல்ல. நான் ஒருபோதும் என்னை மதிப்பிட்டு எடை போட்டார்கள் என்று நான் நினைக்கமாட்டேன். மாறாக தந்தை பெரியார் அவர்கள் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக் கிறார்கள். அவர்கள் ஒரு போதும் மறையமாட் டார்கள். அப்படி வாழ்ந்துகொண்டிருக்கின்ற பெரியார் அவர்களின் தத்துவத்தை நாம் மேலும் பரவ வைக்க வேண்டும். அதற்கு ஆதாரமாக என்னென்ன செய்ய வேண்டும் என்று நினைத்து, அதற்கு என்னை ஒரு கருவியாக ஆக்கியி ருக்கின்றார்கள்.

நான் ஒரு கருவி, அவ்வளவுதான்!

நான் ஒரு கருவி, அவ்வளவுதானே தவிர, வேறொன்றும் கிடையாது. எனக்குத் தனிச் சிறப்புகள் இருக்கின்றன என்பதல்ல. எனக்கிருக்கிற சிறப்பெல்லாம் என்னுடைய ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் தந்த முகவரி என்பதைத் தவிர வேறு சிறப்பு இருக்கிறது என்று நான் நினைக்க மாட்டேன்.

தொண்டருக்குத் தொண்டராக...!

ஆகவே அய்யா அவர்களிடத்திலே தொண்டருக்குத் தொண்டராக இருந்தவன். அவர்கள் செய்த ஏற்பாட்டினாலே இந்தத் தொண்டை என்னாலே தொய்வின்றித் தொடர முடிகிறது. அதுவும்; என்னுடைய சுயநலம் என்று சொல்லலாம்.

எது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறதோ...

அய்யா அவர்கள் சொன்னபடி எனக்கு எது மகிழ்ச்சி அளிக்கிறதோ, எதில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி இருக்கிறதோ-எவ்வளவு துன்பங்கள்-எவ்வளவு சோகங்கள்-எவ்வளவு வேதனைகள் வந்தாலும் அந்த வேதனைகளைத் தாங்கக்கூடிய அளவிலே எது எனக்கு உதவுகிறதோ அந்தப் பணியை நான் செய்கிறேன்.

அந்தப் பணிக்காகத் தோழர்கள் பாராட்டு கிறார்கள் என்றால் அது லாபம். இந்த நேரத்திலே நான் ஒன்றை உங்களுக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும். இங்கே சாக்கோட்டை அன்பழகன் அவர்கள் சிறப்பாகச் சொன்னார்கள். அய்யா அவர்கள், 1960-லே எழுதியதைச் சொன்னார்கள்.

நீங்கள் பாராட்டக்கூடிய வகையிலே...

ஆம்! அன்றிலிருந்து இன்று வரையிலே கூட இந்தப் பணியை தொய்வில்லாமல் நீங்கள் பாராட்டக்கூடிய அளவிலே என்னால் ஓரளவுக் காவது உழைக்க முடிகிறது என்று சொன்னால் அதற்கு முதல் காரணம்-நான் சொன்னதைப் போல அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள், அன்னை மணியம்மையார் அவர்கள், என்னுடைய ஆசான்கள், என்னை வழிநடத்தக்கூடியவர்கள்- இது முதல் காரணம்.

கழகக் குடும்பத்தவர்கள் காட்டுகின்ற பேரன்பு

இரண்டாவது என்னுடைய உற்சாகம் என்பது நம்முடைய தோழர்கள், கழக குடும்பத்தவர்கள் காட்டுகின்ற பேரன்பு, அவர்கள் என்மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை.
எதை இவர்கள் சொன்னாலும் அது சரியாக இருக்கும் என்று தொழிலதிபர் கருணாநிதி அவர்கள் சொன்னார்கள்.

தலைமை என்ன சொல்லுகிறதோ...

இந்த இயக்கத்திலே தலைமை என்ன சொல்லுகிறதோ அதைக் கேட்பவர்கள்தான் இளைஞர்கள். அவர்கள் எந்த வகையிலும் அந்தக் கோட்டை மீறமாட்டார்கள். காரணம் இளைஞர்களுக்கு எதை சரியாகச் சொல்ல வேண்டுமோ அதை சொல்லுவதுதான் பெரியாரின் தத்துவம். ஆகவே அதை உணர்ந்திருக்கிறார்கள்.

எனவேதான் அதை செய்யக்கூடிய நிலையிலே நாங்கள் இருக்கிறோம்.

-----------------”விடுதலை” தொடரும் .........2-2-2011

*************************

மேலைநாட்டில் அறிவியல் சாதனங்கள் அறிவியலைப் பரப்புகின்றன. ஆனால் நமது நாட்டில் தொலைக்காட்சி போன்ற அறிவியல் சாதனங்கள் மூடநம்பிக்கைகளைப் பரப்புகின்றனவே என்று திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வேதனையுடன் கூறினார்.

உரத்தநாடுக்கு அருகில் உள்ள மேலவன்னிப் பட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 30.1.2011 அன்று ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

திருமதி மோகனா அவர்களுக்கு நன்றி!


மூன்றாவது அடித்தளத்திலே இந்தப் பணியை நான் மிக முக்கியமாக செய்து கொண்டிருப்பதற்கு இந்த நேரத்திலே நான் வெளிப்படையாக நன்றி செலுத்த வேண்டும் என்று சொன்னால் அது முழுக்க முழுக்க என்னுடைய வாழ்விணையராக வந்திருக்கின்ற திருமதி மோகனா அவர்களுக்கு என்னுடைய மகிழ்ச்சியை, நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொது வாழ்க்கையிலே இருக்கிறவர்கள் எவ்வளவு தூரம் நிம்மதியாக இருக்கமுடியும் என்று சொன்னால் எந்த அளவிற்கு அவர்களுடைய வாழ்விணையர்கள் ஒத்துழைக்க நினைக்கிறார்களோ அந்த அளவுக்குத்தான் இருக்க முடியும்.

சராசரி பெண்ணாக இருந்தால், அய்யோ, இந்தப் பணத்தை எல்லாம் இப்படி கட்சிக்குக் கொடுத்து விடுகிறாரே என்ற நினைப்பிருக்கும். ஆனால் அவர்களைப் பொறுத்தவரையிலே என்னை ஏற்றுக்கொண்ட நாளில் இருந்து இன்று வரை நாளை வரை இன்னும் கொடுத்தாலும் எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. இதற்காகத்தான் அவர் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். அவருக்காக நான் உற்சாகமாகப் பணியாற்றிக்கொண்டிருக்கின்றேன் என்று சொல்லக்கூடிய வாழ்க்கையைப் பெற்றிருக்கின்றார்கள் (கைதட்டல்). எனவே எனது தனிப்பட்ட குடும்பம் என்று சொல்லுவதிருக்கிறதே அது தனியே அடையாளப் படுத்த முடியாத இயக்கத்திலே கரைந்துவிட்ட ஒன்றாக இருக்கிறது. எனவே எனக்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

பெரும் நகரங்களில் செய்யமுடியாத ஒன்று


குறிப்பாக இந்தப் பகுதியைச் சார்ந்த தோழர்கள் பெரும் நகரங்களிலே கூட எண்ணிப்பார்க்க முடியாத ஒன்றை செய்திருக்கிறார்கள்.

நம்முடைய செயலவைத் தலைவர் ராசகிரி கோ.தங்கராசு என்ன நினைத்தாரோ, அவர் சொன்னார் - இது தொடரும் என்று சொன்னார். ஏனென்றால் ஒரு சின்ன கிராமத்திலே இப்படி செய்துவிட்டார்களே! நாமெல்லாம் பெரும் நகரத்திலே இருக்கிறோமே என்ன செய்வது என்று யோசிக்கக் கூடிய அளவுக்கு அடுத்த பிரச்சினை என்ன என்பதை கொஞ்சம் முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

உழைப்பை எடைபோட்டுத் தந்திருக்கிறார்கள்


காரணம் நம்முடைய இளைஞர்கள்- அவர் களுடைய நம்பிக்கை. நம்முடைய இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிப்பார்கள்.

நமது இளைஞர்களுக்கும் எங்களுடைய பாராட்டை, மகிழ்ச்சியை, வாழ்த்தைத் தெரிவிக்கின்றோம். எனக்கு எடைக்கு எடை பணம் கொடுத்தார்கள். நான் அதை நோட்டாகப் பார்க்கவில்லை. இந்த இளைஞர்கள் தங்களுடைய உழைப்பை அவர்கள் எடை போட்டுக்கொடுத்திருக்கின் றார்கள் (கைதட்டல்). அவர்களுடைய நம்பிக் கையை இங்கே கொடுத்திருக்கின்றார்கள். அவர்களுடைய கட்டுப்பாட்டை இன்னொரு தட்டிலே போட்டிருக்கிறார்கள்.

அந்தத் தட்டு கனமான தட்டு. நான் அதிலே இலேசானவன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உயர்ந்திருக்கிறேன் என்றுதான் நான் நினைக்கின்றேன். இரத்த பாசத்தைவிட கொள்கைப் பாசமே அதிகம்

அந்த அளவுக்கு எங்களுடைய தோழர்கள், எங்களுடைய குடும்பத் தோழர்கள் இரத்த பாசத்தை விட கொள்கை பாசத்தாலே மிக ஆழமாக இருக்கக் கூடியவர்கள். எனவே அப்படிப்பட்டவர்கள் தந்திருக்கின்ற இந்தப்பணம்-ஏற்கெனவே நண்பர்கள் சொன் னதைப் போல-பொதுச்செயலாளர்கள் சுட்டிக் காட்டியதைப் போல பேராசிரியர் அவர்கள் எடுத்துக்காட்டியதைப் போல- நிச்சயமாக இந்தப் பணம் அடுத்தபடியாக தீவிரமான மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரப் பணியை செய்யவேண்டு மானால் அது ஒரு தொலைக்காட்சியை தனியே அமைப்பதன் மூலமாகத்தான் செய்யமுடியும் என்ற கருத்து பரவலாக ஏற்பட்டிருக்கிறது.

அன்றாடம் செய்தாக வேண்டும்


இது மின்னணுவியல் காலமிது. Electronic Age என்று சொல்லக்கூடிய இந்தக் காலத்திலே இப்படி எல்லாம் குறும்படங்களைத் தயாரித்து வழங்கக் கூடிய இந்த காலகட்டத்திலே அன்றாடம் இந்தப் பணியை செய்தாக வேண்டும். இப்படி பனியிலே உங்களை உட்கார வைத்துக் கொண்டு பத்து மணிக்கு மேல் பேசுவதைவிட நீங்கள் அடுப்பங்கரையில் இருந்தபடியே தொலைக் காட்சியைப் பார்க்கலாம்.

இது சத்திய சாய்பாபா கையைத் தூக்கியவுடன் பொத்தென்று விழக்கூடியது அல்ல. அல்லது ஆதிபராசக்தியினாலே வந்தது அல்ல. அல்லது திடீரென்று முப்பத்து முக்கோடி தேவர்களாலே வந்தது அல்ல. பகுத்தறிவுவாதி கண்டுபிடித்த அறிவியல் மின்னணுவியல் சாதனை.

அந்தச் சாதனையை செய்வதற்கு...


எனவே அந்தச் சாதனையைச் செய்வதற்கு ஒரு அடித்தளமான ஒன்றை எங்கே இருந்து பெறுவது என்று நினைக்கின்ற நேரத்திலே நிச்சயமாக இந்த மேலவன்னிப்பட்டு கிராமத்தினுடைய உங்களுடைய பேராதரவு காரணமாக நீங்கள் எடைக்கு எடை கொடுத்த இந்த 8 லட்சம் ரூபாய் அதற்கு ஒரு அடித்தளமாக முக்கியக் காரணமான நிதியாக அமையும் என்பதை இந்த நேரத்திலே உங்களுடைய அனுமதியோடு தெரிவித்துக்கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றோம்.

முற்போக்கு மாநிலத்தில் மூடநம்பிக்கை


இந்தியாவில் மூடநம்பிக்கைகள் எந்த அளவுக் குப் பரவியிருக்கிறது என்பதை அருமையாக நம்முடைய பேராசிரியர் அவர்கள் இங்கே எடுத்துச் சொன்னார்கள். எங்கு பார்த்தாலும் மூடநம்பிக்கை. அதுவும் முற்போக்கு சிந்தனையைக் காட்டக்கூடிய கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் நிலை என்ன? உயர்நீதிமன்றம் சொல்லுகிறது. மகரவிளக்கு ஜோதி என்பது இது மனிதர்களால் உருவாக்கப் படுவதா? அல்லது இயற்கையிலே உருவாக்கப்படு வதா? சொல்லுங்கள் என்றுகேட்டால் இந்த வாய்ப்பை எவ்வளவு அருமையாக கம்யூனிஸ்ட் அரசாங்கம், அங்கே இருக்கிற ஒரு பொது உடைமை அரசு பயன்படுத்தியிருக்க வேண்டும்?

கலைஞர் அரசுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால்....


இதே வாய்ப்பு தமிழகத்தில் இருந்திருந்தால் கலைஞர் அரசு இந்நேரம் அதை மிகச்சிறப்பாகச் செய்யக்கூடிய அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கும். ஆனால் அவர்களுக்கு அந்தத் துணிச்சல் இல்லை. மாறாக அவர்கள் என்ன செய்தார்கள் என்று சொன்னால்-அதெல்லாம் மக்கள் நம்பிக்கை;அந்த இடத்திற்கு நாங்கள் செல்ல மாட்டோம் என்று இரண்டு தடவை சொல்லுகிறார்கள்.

முதலாளி வாழ்க!

தொழிலாளி வாழ்க!

மக்கள் நம்பிக்கை என்று சொல்லிவிட்டால் அப்புறம் என்ன முதலாளி வாழ்க! தொழிலாளி வாழ்க! என்று ஒலிமுழக்கம் போடவேண்டிய அவசியமில்லையே. அந்த மண்ணுக்கேற்ற தத்து வத்தை அவர்கள் சொல்லுவதில்லை. முற்போக்கு சிந்தனை உள்ள இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் இருக்க வேண்டிய இடம் திராவிடர் இயக்கமே தவிர, வேறு இயக்கம் அல்ல. இந்த இயக்கம் இருந்தால்தான் இந்தக் கொள்கைகளை-முற்போக்கு கொள்கைகளை, சிந்தனைகளை உருவாக்க முடியும்.

150 வருடம் தனியாரிடம் இருந்த சிதம்பரம் கோயில்


இதே சிதம்பரம் கோயில் தனியாரிடம் இருந்தது. 150 வருடமாக இருந்தது, அதை யாரும் எடுக்க முடியாது என்று சொன்னார்கள். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனால்கூட செய்ய முடியாது மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனால் கூட சிதம்பரம் கோயிலை மீட்க முடியவில்லை. ஒரே ஒருவர்தான் இதைச் செய்தார். அவர்தான் இன்றைய முதலமைச்சராக இருக்கின்ற கலைஞர் அவர்கள்.

சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வந்தது மட்டுமல்ல. நீதிமன்றத்திலே அவர் செய்தது சரி என்று அந்தத் தீர்ப்பையும் பெற்றிருக்கின்றார்கள். இது ஏதோ சிதம்பரம் என்ற ஒரு கோயிலைப் பொறுத்தது அல்ல. அது காலம் காலமாக இருந்து வந்த நிலை. அதற்கு அடித்தளம். எங்கே இருந்து கிளம்பியது? திராவிடர் இயக்கம்-இந்த இயக்கத்திலே இருந்து கிளம்பிய ஒன்று. எனவே மூடநம்பிக்கைகள் மிகப் பெரிய அளவுக்குத் திரும்புகிற பக்கமெல்லாம் இருக்கிறது. தப்பியது தெய்வாதீனமா?

செத்தது எந்த ஆதீனம்?


அய்யப்பனைப் பற்றிச் சொன்னார்கள். அய்யப்பனைப் பார்க்கச் சென்றவர்களுக்கு எவ்வளவு விபத்துகள் ஏற்படுகின்றன? பத்திரிகைக்காரர்கள் உள்பட என்ன வார்த்தைபோடுவார்கள் என்பதை அவர் சொல்லவில்லை. நான்கு பேர் இறந்ததைப் பற்றிச் சொன்னார்கள். அதில் ஒருவர் உயிர் தப்பியதைப் பற்றிச் சொல்லும் பொழுது தெய்வா தீனமாக உயிர் தப்பினார் என்று சொல்லுவார்கள்.

தப்பியது தெய்வாதீனம் என்றால்-செத்தவ னெல்லாம் மதுரை ஆதீனமா? அல்லது வேறு ஆதீனமா? அல்லது வேறு ஆதீனத்திற்குக் கணக்கு சொல்வதா? அந்த மூடநம்பிக்கைகளை இன்னும் வளர்த்துக்கொண்டிருக்கின்றவர்களா இருக்கி றார்கள்? இதை எதிர்த்து அன்றாடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். இன்றைக்கு மூடநம்பிக்கை களைப் பரப்புவதற்கு அந்த அறிவியல் சாதனங்கள் பயன்படுகின்றன. தொலைக்காட்சிகள் வந்து விட்டன.

மற்ற நாடுகளில் உள்ள அறிவியல் கருவிகள்


மற்ற நாடுகளிலே அறிவியல் கருவிகள் மூடநம்பிக்கைகளை அழிக்கும்; மூடநம்பிக்கை களை விரட்டும். ஆனால் இந்த நாட்டைப் பொறுத்தவரையிலே அறிவியல் கருவிகள் மூட நம்பிக்கைகளைப் பரப்பும்; மூடநம்பிக்கைகளை விரட்டாது; மாறாக வளர்க்கும் என்று சொல்லக் கூடிய வேதனையான, வெட்கப்படக் கூடிய சூழல் இன்றைக்கு இருக்கிறது.
மாற்று தேவை!

ஆகவேதான் அதற்கு ஒரு மாற்று தேவை. உங்களுடைய மேலவன்னிப்பட்டு இயக்க வரலாற்றிலே ஒரு மிக முக்கியமான இடத்தைப் பெறக்கூடிய வகையிலே இந்த நிதி அதற்குப் பயன் படும் என்று சொல்லிக்கொண்டு தாய்மார்கள், பெண்கள், கிராமத்துப் பெரியவர்கள், இளை ஞர்கள் இங்கு அன்பு காட்டியிருக்கின்றனர். உங்களிடத்திலே ஓர் அன்பான வேண்டுகோள். குறைந்த பட்சம் தாய்மார்கள், ஜோதிடம் பார்க்கிறோம், மாந்திரீகம் பார்க்கப்படும் என்று யாராவது கிராமங்களுக்கு வந்தால் அதற்கு நீங்கள் ஏமாறக்கூடாது.

காஞ்சிபுரம் அர்ச்சகன் தேவநாதன் லீலைகள்


தேவநாதன் என்று ஓர் அர்ச்சகன் காஞ்சிபுரம் கோயிலுக்குள்ளேயே பெண்களை எல்லாம் அசிங்கப்படுத்தி, பெண்களிடத்திலே ஆபாசமாக நடந்து, அதை படமெடுத்து 80 லட்ச ரூபாய் சம்பாதித்திருக்கின்றான் அந்த அர்ச்சகன். எடுத்த சி.டி.யை வளைகுடா நாட்டிற்கு அனுப்பி பணம் சம்பாதித்தது வரை வழக்கு நடந்து கொண்டி ருக்கிறது.

-------------------தொடரும் --------”விடுதலை” 3-2-2011

************************

மேலவன்னிப்பட்டில் தமிழர் தலைவர் விளக்க உரை

உள்ளம்தோறும் பெரியார்-இல்லம்தோறும் பெரியார்-என்ற நிலையை உருவாக்குவோம்!

உள்ளம்தோறும் பெரியார்-இல்லம்தோறும் பெரியார் என்ற நிலையை உருவாக்குவோம் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார். உரத்தநாடுக்கு அருகில் உள்ள மேலவன்னிப் பட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 30.1.2011 அன்று ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஈசுவரன் என்ற மாந்திரீகர்


பத்திரிகைகளில் வருகின்ற செய்திகளைப் படிக்கும்பொழுது நமக்கு இரத்தம் கொதிக்கிறது. ஆனால் நம்முடைய நாட்டில் சொரணை உள்ளவர்கள். ரொம்ப குறைவாக உள்ளார்கள். அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

இன்று காலையில் படித்தேன். ஈசுவரன் என்ற மாந்திரீகர் சொல்லுகிறார், பெண்கள் என்னிடம் வந்தார்கள். குறி கேட்பதற்காக, ஜோதிடம் கேட்பதற்காக வருவார்கள்.
அவர்களுடைய மன நிறையைத் தெரிந்து கொண்டு அவர்களிடம் சில கேள்விகளை நான் கேட்பேன். அதிலிருந்தே நான் புரிந்து கொள்வேன். புரிந்து கொண்டு அதற்குத் தகுந்த மாதிரி நான் சொல்லுவேன். ஏமாற்றுவேன்என்று சொல்லு கிறான்.

படுக்கை அறையில் சாமியார் உல்லாசம்


கடவுள் உனக்கு நல்ல அனுக்கிரகம் செய்யப் போகிறார் வேறுவிதமாக என்னுடைய அறையில் என்று சொல்லி படுக்கை அறையிலே பெண் களிடம் ஆபாசமாக நடந்தது மட்டுமல்ல, ஒழுக்கக் கேடாக நடத்தி அவர்களிடம் எதைப் பறிக்க கூடாதோ அதை பறித்து எல்லாவற்றையும் பண்ணியிருக்கின்றான் அந்த மாந்திரீகன்.

அவர் கெடுத்த பெண்கள் 200-க்கும் மேற்பட்ட வர்கள் 5000 பெண்கள் வந்திருக்கிறார்கள். இது பத்திரிகையில் வந்திருக்கிறது. அந்த ஈசுவரன் என்ற மாந்திரீகன் ரொம்ப சாதாரணமாகச் சொல்லு கின்றான். அவன் ஒன்றும் கவலையே படவில்லை. ஏனென்றால் இன்னமும் கிருஷ்ண பரமாத்மாவைக் கொண்டாடுகின்ற நாடு பாருங்கள், இது!

ஒரு தேவநாதனுக்கு அடுத்து இன்னொரு ஈசுவரன்


ஆகவே, இவ்வளவு அசிங்கங்கள் நடக்கின்றன்றன. ஒரு தேவநாதன் போனவுடனே இன்னொரு ஈசுவரன் வருகின்றான்.

அதில் சொல்லுகிறான்-பகவான் வருவார், பக்தி ரூபத்திலேயே வருவார். அவர் இன்னின்ன கொடுப்பார் என்று அசிங்கமான செய்திகளை எல்லாம் சொல்லியிருக்கின்றான் அந்த நபர்.


பத்திரிகைகள் அவர் சொன்னதை நாகரிகப் படுத்தி வெளியிட்டிருக்கின்றன. அந்த அளவிற்கு ஆபாசங்கள் அருவருக்கத்தக்க அளவில் இருக் கின்றன. இவை எல்லாம் அன்றாடம் நடக்கின்றன. இவ்வளவு தூரம் நடந்த பிற்பாடு நமது தாய்மார் களுக்கு ஒரு தெளிவு வரவேண்டாமா? அதிலும் ஏமாறலாமா? அதே இடத்தில் விழுவதா?

ஒரு இடத்தில் விழுந்தால் அதே இடத்தில் விழலாமா? தவத்திரு அடிகளார் சொல்லுவார்: எனக்குத் தமிழனைப் பொறுத்த வரையில் இருக்கின்ற கவலை எல்லாம் அவன் கீழே விழுவதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. கீழே விழுந்து அடிபடுகிறான் என்பதைப்பற்றிக் கூட எனக்குக் கவலை இல்லை. நேற்று விழுந்த அதே இடத்திலேயே இன்றைக்கும் விழுகிறானே அதுதான் எனக்குக் கவலை என்று.

புது இடத்தில் விழுந்தால்கூட பரவாயில்லை என்று ஒருமுறை மிகத் தெளிவாகச் சொன்னார். அது மாதிரி விழுந்த இடத்திலேயே விழக்கூடாது என்று தமிழர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும். எனவே, கிராமத்துப் பெருமக்களே உங்களுடைய பிள்ளை களை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புங்கள். குறிப்பாக பெண் குழந்தைகளை நன்றாகப் படிக்க வையுங்கள்.

பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகள்போல் கருதுங்கள்


பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைப் போல் எல்லா தகுதிகளையும் பெற்றவர்கள். அதே போல நீங்களும் வரவுக்குட்பட்டு செலவழியுங்கள். தேவையில்லாமல் பண்டிகை என்ற பெயராலே அல்லது வேறு வேறு விழாக்கள் என்ற பெயராலே, கும்பாபிஷேகம் என்ற பெயராலே நீங்கள் கோயில்களுக்குச் சென்று செலவு செய்யாதீர்கள் ஊரில் பள்ளிக் கூடங்கள் உருவாக ஒத்துழைப்பு கொடுங்கள். பள்ளிக் கூடங்களை உருவாக்குங்கள். அரசு ஏராளமாகத் தந்திருக்கிறது.

முதல் தலைமுறைக்கு கல்விக் கட்டணம் இல்லை


ஒரு காலத்திலே நமக்கு படிப்பு வாய்ப்பு கிடையாது. ஆனால் இன்றைக்கு கலைஞர் அரசு ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறையினராக படிக்க வந்தவர்களைப் பார்த்து அவர்களுக்குக் கல்விக் கட்டணம் என்ற செலவு கூட இல்லாமல் ஆக்கியிருக்கிறது.

சேரன், சோழன், பாண்டியன் காலம்


இதுவரை சேரன் காலம், சோழன் காலம், பாண்டியன் காலம், பல்லவன் காலமென்று எந்த அரசன் காலத்திலும் இல்லாத ஒரு மகத்தான கல்விப் புரட்சி-காமராசர் காலத்தில் தொடங்கிய அந்தக் கல்விப் புரட்சி திராவிடர் இயக்கத்தினுடைய ஆட்சியிலே அண்ணா அவர்களுடைய காலத்திலே தொடங்கியது என்று சொன்னாலும்கூட, தொடர்ந்து இன்றைக்கு மிகப் பெரிய அளவிலே வந்திருக்கிறது. வளர்ந்திருக்கிறது.

உங்கள் பிள்ளைகளைப் படிக்க வையுங்கள்!


எனவே, உங்கள் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வையுங்கள். எங்கு பார்த்தாலும் இப்பொழுது கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள். எனவே, பிள்ளை களைப் படிக்க வைப்பது மட்டும் போதாது. படித்தவர்கள், பகுத்தறிவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

பகுத்தறிவைப் பெறுவது இங்கு மட்டுமே!


படிப்பறிவை கல்விக் கூடங்களிலே பெறலாம். பகுத்தறிவை இது போன்ற படிப்பகங்களிலே பெறலாம். ஏனென்றால் பகுத்தறிவுதான் ரொம்ப மிக முக்கியம். அந்தப் பகுத்தறிவோடு ஒரு மனிதன் சிந்தித்து வளர்ந்தால் எப்படி இருப்பார்கள்? நம்முடைய கருணாநிதி அவர்களைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். அவர்கள் எப்படி உழைப் பால் உயர்ந்திருக்கிறார்கள் என்று பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். அது மாதிரி புதிய சிந்தனையோடு, புதுப் புது உத்திகளோடு பல்வேறு பணிகளை செய்யக் கூடிய வாய்ப்பை இந்த வட்டாரத்திலே நீங்கள் பெறலாம். ஆகவே உங்களுடைய அன்பான ஒத்துழைப்புக்கு, இந்த இயக்கத்தின் மீது நீங்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு எங்களுடைய இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நீண்ட ஆவணப் படம்


அதே நேரத்திலே உரத்தநாடு என்ற பெரியார் நாடு எத்தனையோ செய்திருக்கிறது. அவர்கள் கேட் டார்கள் ஒரு நீண்ட ஆவணப்படத்தை இங்கே காட்டியிருக்கின்றார்கள். அதற்கு முன்னாலே கிளை எப்பொழுது வந்தது என்றால், திராவிடர் கழகமாக இருந்த நேரத்திலே-இயக்கம் ஒன்றாக இருந்த நேரத்திலேயே திராவிடர் கழகம் உரத்தநாடு பகுதியிலே ரொம்ப பலமாக இருந்த பகுதி.

ஒழுக்கம் - நாணயம் முக்கியம்


தோழர் சீத்தா போன்றவர்கள், தோழர் மதிவாணன் போன்றவர்கள் இப்படி எத்தனையோ பேர் இந்த வட்டாரத்திலே இருக்கிறார்கள். பெற்றோர்களும் தங்களுடைய இளைஞர்களை மகிழ்ச்சியோடு திராவிடர் கழகத்திற்கு அனுப்பு கிறார்கள். இந்த இயக்கத்திலே கட்டுப்பாடு அதிகம். ஒழுக்கம் இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு இங்கு இடமில்லை. ஒழுக்கத்தோடுதான் இளைஞர்கள் இருக்க வேண்டும். செம்மையான வாழ்க்கை வாழ வேண்டும்.

நாணயமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற இயக்கம் இந்த இயக்கம். ஆகவே பெற்றோர்கள் பார்க்கிறார்கள். இந்த இயக்கத்திலே நம்முடைய பையன்கள் இருந்தால் நிம்மதியாக இருக்கலாம். அவர்களுக்கு வேறு கெட்ட பழக்க வழக்கங்கள் எதுவுமே இருக்காது என்று கருதுகிறார்கள்.

உள்ளந்தோறும்-இல்லந்தோறும் பெரியார்


இதைவிட பெரியார் நமக்களித்த செல்வம் வேறு கிடையாது. எனவே, உள்ளந்தோறும் பெரியார்- இல்லந்தோறும் பெரியார் என்பதை உருவாக்க வேண்டும் அதற்கு நீங்கள் அளித்த இந்த அன் பளிப்பு, நீங்கள் என்னை தராசிலே உட்கார வைத்து எடை போட்டுப் பார்த்த அந்த அன்பு அத்தனையையும் நீங்கள் வழங்கியிருக்கின்றீர்கள்.

அது பயன்படும், பயன்படும் என்று கூறி வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, படிப்பகத்தை யும், நூலகத்தையும் நன்கு பயன்படுத்துங்கள் என்று கூறி, மீண்டும் தோழர்கள் ரஞ்சித்குமார், தமிழ்ச் செல்வன், இவர்களை ஊக்கப்படுத்திய ஜெயக்குமார், அதே போல மற்ற அத்துணை நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியை, பாராட்டை, மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தி விடை பெறுகின்றேன்.

-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.

----------------------- “விடுதலை” 4-2-2011


0 comments: