Search This Blog

27.12.14

வீரமணி-மோகனா திருமணத்தில் புதுமை - தாம்பூலத்திற்குப் பதில் புத்தகம்

தாம்பூலத்திற்குப் பதில் புத்தகம் (வீரமணி-மோகனா திருமணத்தில் புதுமை)

    தாம்பூலத்திற்குப் பதில் புத்தகம் (வீரமணி-மோகனா திருமணத்தில் புதுமை)

    - தந்தை பெரியார்

    தந்தை பெரியார் அன்னை  மணியம்மையார் ஆகியோருடன் கி.வீரமணி & மோகனா.
    தந்தை பெரியார் அன்னை  மணியம்மையார் ஆகியோருடன் கி.வீரமணி & மோகனா.

    பேரன்புமிக்க தாய்மார்களே! பெரியோர்களே! நண்பர்களே! இன்றைய தினம் மணமக்களாகிய செல்வர்கள் வீரமணி-மோகனா ஆகியோர்களது வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்தை முன்னிட்டு இங்கே கூடியிருக்கின்றோம்.

    மணமகன் வீரமணி அவர்களை உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அவர் இளம் வயது முதலே நம்முடைய கழகப் பற்று, கொள்கைப் பற்று ஆகியவைகளில் ஈடுபட்டு மிகவும் உழைத்துக் கொண்டு வருபவர்.

    செல்வி மோகனா அவர்களைப் பற்றி விளக்கினால் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். மோகனா அம்மை நண்பர் சிதம்பரம்- ரெங்கம்மாள் ஆகியோர்களுடைய அருமை மகள்.
    நண்பர் சிதம்பரம்-ரெங்கம்மாள் ஆகியோர் நமது திருச்சி நகரம் தேவதானத்தில் சுமார் 24, 25 ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு மணம் செய்து கொண்டவர்கள். நண்பர் சிதம்பரம் காரைக்குடியை அடுத்த கோட்டையூரிலே பெரிய செல்வந்தர். தன வைசியர் குலம் என்று சொல்லுகின்ற நாட்டுக்கோட்டைச் செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
    ரெங்கம்மையார் திருவண்ணாமலை ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கலப்பு மணம் என்பதோடு மறுமணம் என்பதையும் சேர்த்து 25 ஆண்டுகளுக்கு முன்பாக மணம் செய்து கொண்டவர்கள்.
    அவர்களுடைய மூத்த மகன் மலேசியாவிலே பெரிய தொழில் செய்து கொண்டிருக்கின்றார். இதிலே வேடிக்கையான ஒரு சங்கதியைச் சொல்லவேண்டுமானால், வேடிக்கைதான் அது மற்றபடி இலட்சியமாகச் சிந்திக்கக் கூடியது அல்ல. இவர்களுடைய இந்தத் திருமணம் 4 குழந்தைகளைப் பெற்று, நல்ல வயதுக்கு வந்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்ற பொழுது, ஒரு விவகாரத்திலே இந்தத் திருமணம் செல்லாது என்று உயர் நீதிமன்றத்திலே தீர்ப்பு வழங்கினார்கள்! அதனாலே அவர்களுக்கு ஒரு பாதகமும் இல்லை. அதை அவர்கள் இலட்சியம் செய்யவும் இல்லை. அது பாட்டுக்கு அது இருந்தது. இது பாட்டுக்கு இது நடந்து கொண்டிருந்தது. சுயமரியாதைத் திருமணம், செல்லாது என்று சொன்ன காரணம் ரொம்ப வேடிக்கையானது. சுயமரியாதைத் திருமணம் சாஸ்திரப்படியும் நடக்கவில்லை; சட்டப்படியும் நடக்கவில்லை; ஒரு வரைமுறைப்படியும் நடக்கவில்லை; ஆனதினாலே, இது செல்லாது! என்று சொன்னார்கள்.

    திருமணத்தில் என்ன முக்கியமான காரியங்கள் நடக்க வேண்டுமோ, அது நடந்துதான் இருந்தது. திருமணத்தில் என்ன நடக்க வேண்டுமென்று இருக்கின்றதோ, அதற்கு மாறான விரோதமான காரியங்கள்தான் நடந்திருக்கின்றன.

    இன்ன மாதிரி இருக்க வேண்டும். இன்ன முனிவர் சொல்ல வேண்டும். அந்தச் சுலோகங்-களை எல்லாம் அந்த ஜட்ஜ்மென்ட்டிலே எடுத்துப் போட்டிருக்கின்றார்கள். ஆகவே அந்த மாதிரியான ஒரு நிலைமை இருந்தாலும் அவர்கள் இன்பத்திலே, செல்வத்திலே, எல்லாவற்றிலுமே மிக்க திருப்திகரமாகவே நடந்து வந்திருக்கின்றார்கள்.

    அவர்களுடைய திருமணம் எப்படி அந்தக் காலத்திலே ஒரு கலப்பு மணமாக நடைபெற்றதோ அதே மாதிரியாகவே தம்முடைய பெண்ணுக்கும் கலப்பு மணமாகவே நடத்த வேண்டுமென்று ஆசைப்பட்டு அவர்கள் தெரிவித்தார்கள்.
    அவர்களுக்குத் திருமணமாகி 25 வருடங்கள் ஆகியிருந்த போதிலும் கூட அன்றைய காலத்திலிருந்தே அவர்களை எனக்குத் தெரியும்.

    காரைக்குடியில் நடைபெற்ற ஒரு மகாநாட்டிற்கு அய்யா சிதம்பரம் அவர்கள்தான் வரவேற்புக் கழகத் தலைவர்  ஆர்.கே.சண்முகம் அவர்கள் அப்பொழுது தலைமை வகித்தார். 1930க்கு முன்னாலே உள்ள காலம் அது. அந்த மகாநாட்டிலேயிலிருந்து கொள்கைப் பிடிப்போடு இருந்தார்கள். அதனால்தான் கலப்பு மணம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்கள். பற்றுதல் என்றால் பிடிவாதமான பற்றுதலுடன் அந்தக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்தார்கள். இந்த மாதிரியாகவே கலப்பு மணம் நடத்த வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது போலவே அவர்கள் கேட்டார்கள்.
    அப்பொழுது வீரமணி அவர்கள் என் ஞாபகத்திற்கு வந்தார். தனக்கு ஒரு திருமணம் ஆகப்போகின்றது என்று வீரமணி நினைக்கவே இல்லை. அந்த மாதிரி இருக்கும்பொழுது வீரமணி அவர்களிடத்திலே திடீர் என்று இந்த சங்கதியைச் சொன்னேன். வீரமணி திடுக்கென்று கேள்விப்பட்டவுடன் பதில் சொல்லாமல் இருந்தார்.

    நான் சொன்னேன். அய்யா, உங்களுக்கு நல்ல வாய்ப்பு என்று நினைக்கிறேன். வசதி உள்ள இடம். அதற்கு வீரமணி பதில் சொன்னார். வசதி இருக்கிறதோ இல்லையோ, அதைப் பற்றி எனக்குக் கவலையே இல்லை. இப்படியே சொன்னார். அய்யா சொல்லுகிறீர்கள் அம்மா சொல்லுகிறீர்கள் என்பதற்காக நீங்கள் என்ன சொன்னாலும் கேட்பேன் என்று சொன்னார். சரி, அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். அப்பொழுது அய்யா சிதம்பரம் அவர்கள் ஊரில் இல்லை. மலேயாவில் இருக்கின்றார். ரெங்கம்மையார் சொன்னார்கள். நீங்கள் சொன்னால் ஒத்துக்கொள்வார் பரவாயில்லை என்று சொன்னார்கள். ஒரு வழியாக வீரமணி அவர்கள் ஒப்புதல் கொடுத்தார்கள் என்று தெரிந்த உடனே அம்மையார் அவர்கள் அவரது கணவரிடத்திலே இதைத் தெரியப்படுத்தினார்கள். உடனே கப்பலில் ஏறி வந்தார்கள். அவசரமாக முடிவுகளை எல்லாம் எடுத்தார்கள்.

    திருமணத்தைக் கூடுமானவரை சுருக்கமாக நடத்த வேண்டும் என்பது என்னுடைய ஆசை இல்லை. என்னுடைய சுபாவம் அப்படி! எந்தக் காரியமாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் சுருக்கமாகத்தான் நடத்த வேண்டும் என்பது என்னுடைய சுபாவம். அந்த முறையில் நடத்த வேண்டுமென்றுதான் நான் ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. தள்ளமுடியாத நிலையில் கொஞ்சம் நீண்டு விட்டது. எனக்குக் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும் நல்லபடியாகத் திருப்தியாக முடிந்தது.
    ஒருத்தருக்குத் திருப்தி இல்லாவிட்டாலும் இன்னொருத்தருக்காவது திருப்தி இருக்கின்றதே என்று சொன்னால் வரவு செலவு சரியாகப் போய்விட்டது என்று அர்த்தம். நாம் ஒரு கமிட்டி போட்டால், மகாநாடு போட்டால் எப்படி நடக்குமோ அப்படித்தான். வேறே ஒன்றும் அதிசயமானது ஒன்றும் இல்லை.
    நம்முடைய கழகத் தோழர்கள் அடிக்கடி சந்திக்க என்ன இருக்கின்றது? வழி வேறு இருக்கின்றதா? ஒன்றும் கிடையாது. தேர்த் திருவிழாவிற்குப் போவதில்லை. மகாநாட்டில் தான் சந்திப்போம்.

    மகாநாடு நடத்த வேண்டும் என்று யாராவது கேட்டால் மகாநாடு நடத்தி, அதிலே என்ன பேசி, அதிலே என்ன தீர்மானம் போடுகிறோமோ, அவைகளைப் பத்தாயிரம் பேர் - இலட்சம் பேர் கூடும்படியான கூட்டங்களில் பேசிக் கொண்டே-யிருக்கின்-றோம். மகாநாடு கூட்டினாலே 4,000, 5,000 பேர் வந்தாலே அதிகம். 10,000 பேர் 20,000 பேர் வரவேண்டுமென்றால் நான்கு வருடம், அய்ந்து வருடத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும். மகாநாட்டிலே இயக்கக் காரியமாக, இயக்கக்காரர்களைச் சந்திக்கும் ஒரு வாய்ப்பு. அதுதான் உண்மையிலேயே முக்கியம். அந்த முறையிலேயே இயக்கத் தோழர்களை எல்லாம் சந்திக்கும்படியான ஒரு வாய்ப்பு. அன்பர்களையும், நமது மரியாதைக்குள்ளவர்களையும் சந்திக்க ஒரு நல்ல வாய்ப்பு என்கிற முறையிலே கொஞ்சம் தாராளமாக இதை நடத்துகின்றோம். இதை எல்லாம் பார்ப்பதற்கு ரொம்ப மகிழ்ச்சி.

    இந்தத் திருமணத்திலே ஒரு சின்ன புதிய முறையைப் புகுத்தியிருக்கின்றேன். திருமணத்திற்கு வந்தவர்களை எல்லாம் பாராட்டித் தாம்பூலம் கொடுப்பது முறை. தாம்பூலத்திலே வெற்றிலை பாக்கு விலை ஒரு அணாவுக்குக் குறையாது. சின்னத் தேங்காயாக இருந்தாலும் 2 அணா விலை இருக்கும் பழம் கொடுப்பார்கள். இப்பொழுது ஏறக்குறைய பெரிய மனிதர்கள் எல்லாம் மலைப்பழம் கொடுப்பது வசதியாகப் போய்விட்டது. ஆக 2 பழம் எடுத்துக் கொண்டால் ஒன்றரை அணா. அதுவும் எல்லாவற்றையும் சேர்த்துச் செய்தால் நான்கரை அணா ஆகின்றது.

    அதுவும் நண்பர் சிதம்பரம் அவர்கள் செட்டியார் என்கிற முறையிலே செய்வார்களே-யானால் ஒரு வெற்றிலை பாக்கு தாம்பூலத்திற்கு மூன்று ரூபாய் இருக்கும்; இரண்டு ரூபாய்க்குக் குறையாது. ஆப்பிள் இரண்டு, மூன்று போடுவார்கள்.  வெற்றிலை ஒரு வாரத்திற்கு ஆகிறாற்போலப் போடுவார்கள். ஆக இரண்டு, மூன்று ரூபாய்க்கு ஆகும். வாங்கிட்டுப் போகிறவர்களும் ஒரு ரூபாய், ஒன்றரை ரூபாய்க்கு விற்று விடுவார்கள்.  அந்த மாதிரி எல்லாம் இல்லாமல் நாமும் ஏதாவது கொடுத்த மாதிரி இருக்கட்டும். அதுவும் ஏதாவது பயன்படுகிற மாதிரி இருக்க வேண்டும் என்கிற முறையிலே ஒரு எண்ணம் தோன்றியது. கழக சம்பந்தமான ஏதாவது ஒரு புத்தகம் அந்த விலைகளுக்குள்ளேயே கணக்குப் பார்த்து ஆளுக்கு ஒன்று கொடுக்கலாமா என்று ஒரு எண்ணம் தோன்றியது.

    வீரமணியே சொன்னார். அய்யா எத்தனையோ திருமணத்திற்குத் தலைமை வகித்துச் சிறப்புரை எல்லாம் ஆற்றியிருக்-கிறீர்கள். இது திருமண சம்பந்தமாக இருக்கின்றது. அந்தப் பேச்சுகளில் பத்து, இருபது பேச்சுகளைப் புத்தகமாகப் போட்டுவிட்டு, அதற்குப் பெயரை வேண்டுமானால் வாழ்க்கைத் துணை நலம் என்ற தலைப்புப் போட்டுப் புத்தகமாகக் கொடுக்கலாம் என்று சொன்னார்.

    கோவிலுக்குப் போகிறவர்கள் எப்படிச் சர்க்கரையை எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்களோ அது மாதிரிதான் இது. மற்றபடி திருமணம் சாதாரணமானது தான். பகலிலே ஒன்றும் விருந்தில்லை. திருமணத்திற்கு வந்தவர்கள் அவரவர்கள், ஆங்காங்கே சாப்பிட்டுக் கொண்டார்கள். ராத்திரிக்கு ஏதோ விருந்து ஏற்பாடு பண்ணுகிறோம்.

    சிதம்பரம் அவர்களும், ரெங்கம்மாள் அவர்களும் இயக்கத்திற்குத் தொண்டாற்றுமாறு பாடுபட வேண்டும். அவர்கள் பெண்ணைக் கொடுத்ததன் மூலம் நம்முடைய இயக்கத்திற்குப் பயன்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
    அதே மாதிரிதான் வீரமணி அவர்களும் நமது இயக்கத்திற்குப் பயன்படும்படியான முறையிலே தொண்டாற்ற வேண்டும். ஒற்றுமையாகத் துணையாக இருந்தால் நல்லது என்று ஆசைப்படுகின்றோம்.

    மற்றப்படி இந்த அறிமுகப் பேச்சோடு மணமக்களுக்கு இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்தங்களை எடுத்துச் சொல்லி, அதை நிறைவேற்ற உங்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்த விழாவை இப்பொழுது நடத்திக் கொள்கிறார்கள். அதற்குப் பிறகு மணமக்களை வாழ்த்திப் பல அறிஞர்கள் பேசுவார்கள்.

    நண்பர் உயர்திரு பாரதிதாசன் அவர்கள், சேர்மன் இரத்தினசாமி (பிள்ளை) அவர்கள், உயர்திரு சண்முகநாதன் அவர்கள், சுப்பையா அவர்கள், நரசிம்மன் அவர்கள், முத்துக் கண்ணப்பர் அவர்கள், வெள்ளையன் அவர்கள் இன்னும் பல அறிஞர்கள் பேசுவார்கள். பொறுமையாக இருந்து கேளுங்கள்.

    மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்தத்தை எடுத்துச் சொல்லி இந்த நிகழ்ச்சியின் அறிகுறியாக மணமகளுடைய உருவம் பொறித்த மோதிரத்தை மணமகள் மணமகனுக்கு அணிவிப்பார். மணமகன் உருவம் பொறித்த மோதிரத்தை மணமகன் மணமகளுக்கு அணிவிப்பார். நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது என்று உங்கள் சார்பாகக் கேட்டுக் கொண்டு மணமக்கள் இப்பொழுது உறுதிமொழி கூறுவார்கள்.
    -------------------நூல்: தென்னாட்டுத் திருநாள் -- “உண்மை”  நவம்பர் 1-15 2014

    இதுதான் வால்மீகி இராமாயணம் - 48

    இதுதான் வால்மீகி இராமாயணம்
    இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.


    பன்னிரெண்டாம் அத்தியாயம் 

    தூதர்கள் வருவதற்கு முந்திய நாளிரவில் பரதன் தன் தசரதனுடைய இறப்பை அறிவிக்கும் சில தீயகனாக்களைக் கண்டு வருந்தியிருந்தான். அப்போது அயோத்தியிலிருந்து வந்த தூதர்கள் கேகய மன்னனையும், அவன் மகன் யுதாசித்தையும் கண்டு, பரதனையடைந்து வசிட்டனும் மந்திரிகளும் அவனை உடனே அழைத்துவரக் கூறியதைப் புகன்றனர். தன்னைப் பெற்றோர் முதலிய எல்லாருடைய நலத்தையும் பரதன் வினாவ, அவர்கள் ஆமென்று கூறி அவசரப்படுத்தினர். பரதன் தன் கனாவாலும், தூதர்கள் அவசரத்தாலும் மனங்கலங்கி விடைபெற்றுப் புறப்பட்டான். அவன் ஏழு நாள்கள் இரவுபகலாகச் சென்று எட்டாவது நாள் காலையில் அயோத்தியில் நுழைந்தான். நகரம் பொலி வழிந்திருப்பதைக் கண்டு அவன் மனம் வருந்தித் தன்னை விரைவில் வரவழைத்ததால் ஏதோ தீமை நிகழ்ந்திருக்க வேண்டுமெனத் தேரோட்டியிடம் கூறிக் கொண்டு அரண்மனையையடைந்தான். அவன் தசரத னிருக்கு மிடத்தில் அவனைக் காணாமல் கைகேயி, வீடுபோய் அவளை வினாவக் கைகேயி, தசரதன் இறந்ததைக் கூறினாள். உடனே பரதன் கீழே விழுந்து நெடுநேரம் அழுது கடைசியாக என் தந்தை யாது கூறினார்? என வினவினான். கைகேயி, இராமா, சீதா என்று கூவி அவர் உயிரை விட்டார். இராமன் சீதை இலக்கு வருடனே அயோத்திக்குத் திரும்பும்போது பார்ப்பவர்களே பயன் பெற்றோர் என்று கூறியிறந்தார் எனப் புகன்றாள். பரதன், இராமனெங்கே என்று கேட்க, அவள், இராமன் சீதையுடனும் இலக்குவனுடனும் காடேகினான் என்றாள். இதைக்கேட்ட பரதன் தன் அண்ணனுடைய ஒழுக்கத்திற் சந்தேகப்பட்டு வாட்டமடைந்தவனாய் எந்தப் பிராமணனது பொருளையாவது இராமன் பறித்தனனோ? பெண்களைக் கற்பழித்தானோ? பார்ப்பனனைக் கொன்றவனைப் போல இராமனை ஏன் காட்டிற்குத் துரத்திவிட்டார்கள்? என்று வினவினான். கைகேயி நடந்த வரலாற்றைக் கூறி அவனை முடிசூட்டிக்கொள்ளச் சொன்னாள். நடந்ததையறிந்த பரதன், தீயவளே! உன்னால் முறைமை அழிந்தது நான் இராமனை இப்போதே அழைத்து, வந்து முடிசூட்டுவேன். உன் மனப்படி நடவேன் என்று கடிந்துரைத்தான். அவன் மறுபடியும், நீ பெண்ணா, பேயா? இவ்விதமான கொடிய தீமை செய்தாயே? கோசலைக்குப் பிள்ளையைப் பிரிந்து பொறுக்க முடியாத துன்பத்தை உண்டுபண்ணி விட்டாய். உன் உயிரைக் கழுத்திற்கயிறிட்டாவது விட்டுவிடு என்று சீறினான். அப்போது சுமந்திரன் முதலிய அமைச்சர்கள் வந்தனர். அவர்களை நோக்கி அவன், நான் ஒரு பாவமும் அறியேன். என்னை இவள் கெடுத்துவிட்டாள் என்று கதறினான். இச்சத்தத்தைக் கேட்ட கோசலை சுமித்திரையுடன் பரதனைப் பார்க்கவந்தாள். பரதனும் சத்துருக்கனுடன் அவளைப் பார்க்கப் போய் வழியில் கண்டு பணிந்தான். கோசலை, பலநாளாக நினைத்திருந்த உன் எண்ணம் ஈடேறியது. கைகேயியும் பல சூழ்ச்சிகள் செய்து இந்நாட்டை உன்வசமாக்கினாள். இனி எதிரற்று ஆள்க. என் மகனைக் காட்டிற்கனுப்பியதால், அவள் என்ன பெற்றாள்? உன்னைப் பிரேதக்கிரியைகள் செய்யாமல் தசரதர் தடுத்திருக்கிறார். அவருடைய பிரேதத்தை எடுத்துக்கொண்டு இராமனிடம் போகிறேன். என்னை இராமனிடம் கொண்டுபோய் விடு என்று கொடிய சொற்களால் நிந்தித்தாள். பரதன் தன்மனம் துடித்து, அம்மா! எனக்கொன்றும் தெரியாது. நான் மனமாரக் குற்றம் செய்தால் எள்ளன்னம், பாயசம், ஆட்டின் மாமிசம் இவற்றைத் தேவதைகளுக்கும், தென்புலத்தாருக்கும் விருந்தினர்க்கும் ஊட்டாமல் எவன் உண்கிறானோ, அவனடையும் தீயகதியை நானடைவேன் என்று இவ்வாறு பல வஞ்சினம் கூறி அவளைத் தேற்றினான். கோசலை அவனை வாழ்த்திப் புலம்பினாள்.

    வசிட்டன் தசரதனுடைய பிணத்தை விரைவிற் கொளுத்துமாறு ஏவ, பரதன் வருந்தி எண்ணெயிற்கிடந்த சவத்தை எடுத்துக் கொண்டுபோய்ச் சரயூ நதிக்கரையை யடைந்தான். அரசனுடைய மனைவிமார் தத்தம் ஊர்தி களிலேறி வந்தனர். பின் மனைவியரும், பிள்ளைகளும் கட்டையிற்கிடந்த சவத்தைச் சுற்றிவந்தனர். பரதன் எரி மூட்டினான். பின் அரசனுடைய மனைவியர் முதலிய எல்லோரும் ஊருக்குத் திரும்பினர். பத்து நாள்கள் கழிந்து பதினோராம் நாளில் புண்ணியாக வாசனம் நடந்தது. பன்னிரண்டாவது நாள் மாசிகம் முதலிய கிரியைகள் நடந்தன. தசரதனுக்குத் திருப்தியுண்டாவதற்குப் பரதன் பிராமணர்களுக்கு வேண்டுவன தந்தான். பதின்மூன்றாவது நாள் காலையில், சஞ்சயனம் செய்யப்பரதன் சுடு காட்டுக்குப்போய்த் தசரதனுடைய எலும்புகளையும். சாம்ப லையும் கண்டு புலம்பி, வசிட்டன் ஏவலால் அவற்றுக்குச் செய்ய வேண்டிய கிரியைகளைச் செய்து முடித்தான்.

    அரண்மனை வந்தவுடன் சத்துருக்கன், அண்ணா! இராமனாவது அபவாதத்திற்குப் பயந்து காடேகினான். இலக்குவன் ஏன் மன்னனைக் கண்டித்து இராமனுக்கு முடிசூட்டியிருக்கக் கூடாது? என்று கூறினான். அப்போது கூனி அங்கேவரச் சத்துருக்கன் அவளைத் தரையில் தள்ளி அங்குமிங்கும் இழுத்துதைத்தான். அப்போது அவளை விடுவிக்கவந்த கைகேயியையும் அவன் நிந்தித்தான். பரதன் உடனே சத்துருக்கனைக் கண்டித்தான். மறுபடியும் சத்துருக்கன் உதைத்துத்தள்ள கைகால்கள் முறிந்து கீழே விழுந்த கூனி புலம்பினாள். கைகேயி அவளைத் தேற்றினாள்.
    ஊரார் கூடிப் பரதனுக்கு முடி சூட்ட வேண்ட, அவன் மறுத்து இராமனை அழைத்துவரத்துணிந்து கங்கைக் கரைவரை வழியுண்டாக்கினான். வசிட்டன், குறுநிலை மன்னர், அமைசசர் முதலிய அனைவரையும் சபைகூட்டிப் பரதனை எதிர் கொண்டழைத்து அரசாட்சியை ஏற்றுக் கொள்ளக் கூறினான். பரதன் அதைத் தீயசொல் என்று கருதியதால் வசிட்டனை நிந்தித்துச் சுமந்திரனை நோக்கிச் சேனைகளைப் புறப்படக் கட்டளையிட ஆணைதந்தான், எல்லோரும் புறப்பட்டனர். பரதன் தேரேறினான். கைகேயியும், சுமித்திரையும், சோசலையும் புறப்பட்டனர். எல்லோரும் கங்கையையடைந்து தங்கினர். இவ்வர லாற்றை ஆராய்வோம்.
                                             ---------------------"விடுதலை” 23-12-2014

    Read more: http://viduthalai.in/page-3/93339.html#ixzz3MjKyKCvk

    ************************************************************************************

    இதுதான் வால்மீகி இராமாயணம்
    இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.


    அயோத்தியா காண்டம்

    பன்னிரெண்டாம் அத்தியாயம் வசிட்டன் தசரதனுடைய பிணத்தை விரைவிற் கொளுத்துமாறு ஏவ, பரதன் வருந்தி எண்ணெயிற்கிடந்த சவத்தை எடுத்துக் கொண்டுபோய்ச் சரயூ நதிக்கரையை யடைந்தான். அரசனுடைய மனைவிமார் தத்தம் ஊர்தி களிலேறி வந்தனர். பின் மனைவியரும், பிள்ளைகளும் கட்டையிற்கிடந்த சவத்தைச் சுற்றிவந்தனர். பரதன் எரி மூட்டினான். பின் அரசனுடைய மனைவியர் முதலிய எல்லோரும் ஊருக்குத் திரும்பினர். பத்து நாள்கள் கழிந்து பதினோராம் நாளில் புண்ணியாக வாசனம் நடந்தது. பன்னிரண்டாவது நாள் மாசிகம் முதலிய கிரியைகள் நடந்தன. தசரதனுக்குத் திருப்தியுண்டாவதற்குப் பரதன் பிராமணர்களுக்கு வேண்டுவன தந்தான். பதின்மூன்றாவது நாள் காலையில், சஞ்சயனம் செய்யப்பரதன் சுடு காட்டுக்குப் போய்த் தசரதனுடைய எலும்புகளையும். சாம்பலையும் கண்டு புலம்பி, வசிட்டன் ஏவலால் அவற்றுக்குச் செய்ய வேண்டிய கிரியைகளைச் செய்து முடித்தான்.


    அரண்மனை வந்தவுடன் சத்துருக்கன், அண்ணா! இராமனாவது அபவாதத்திற்குப் பயந்து காடேகினான். இலக்குவன் ஏன் மன்னனைக் கண்டித்து இராமனுக்கு முடிசூட்டியிருக்கக் கூடாது? என்று கூறினான். அப்போது கூனி அங்கேவரச் சத்துருக்கன் அவளைத் தரையில் தள்ளி அங்குமிங்கும் இழுத்துதைத்தான். அப்போது அவளை விடுவிக்கவந்த கைகேயியையும் அவன் நிந்தித்தான். பரதன் உடனே சத்துருக்கனைக் கண்டித்தான். மறுபடியும் சத்துருக்கன் உதைத்துத்தள்ள கைகால்கள் முறிந்து கீழே விழுந்த கூனி புலம்பினாள். கைகேயி அவளைத் தேற்றினாள்.
    ஊரார் கூடிப் பரதனுக்கு முடி சூட்ட வேண்ட, அவன் மறுத்து இராமனை அழைத்துவரத்துணிந்து கங்கைக் கரைவரை வழியுண்டாக்கினான். வசிட்டன், குறுநிலை மன்னர், அமைசசர் முதலிய அனைவரையும் சபைகூட்டிப் பரதனை எதிர் கொண்டழைத்து அரசாட்சியை ஏற்றுக் கொள்ளக் கூறினான். பரதன் அதைத் தீயசொல் என்று கருதியதால் வசிட்டனை நிந்தித்துச் சுமந்திரனை நோக்கிச் சேனைகளைப் புறப்படக் கட்டளையிட ஆணைதந்தான், எல்லோரும் புறப்பட்டனர். பரதன் தேரேறினான். கைகேயியும், சுமித்திரையும், சோசலையும் புறப்பட்டனர். எல்லோரும் கங்கையையடைந்து தங்கினர். இவ்வர லாற்றை ஆராய்வோம்.


    பரதனிடம் தசரதன் இறந்ததைக் கூறாதிருக்குமாறு அவனை அழைத்துவரச் சென்றோரிடம் வசிட்டன் கட்டளையிடுகிறான். இதனால் தன் தந்தை முதலியோர் நலன் கேட்ட பரதனிடம் அவர்கள் பொய்புகல நேர்ந்தது. வசிட்டன்  அவ்வாறு உண்மையைக் கூறாதிருக்க ஆணை தந்த உண்மை. கேகய மன்னனுக்குத் தெரிந்திருந்தால், இராமனுக்கு முடிசூட்ட முயன்றமைக்கு வசிட்டன் முதலியோர் உடந்தையாயிருந்ததை அவன் அறிந்து அவர்களை நிந்திப்பான்.

                 ----------------------------தொடரும்...”விடுதலை” 26-12-2014

    26.12.14

    யார் இந்த மண்ணுருண்டை மாளவியா?இவருக்குப் பாரதரத்னா விருது கொடுக்கலாமா?


    யார் இந்த மண்ணுருண்டை மாளவியா?
    வருணாசிரமவாதி - மதமாற்றத்தை ஊக்குவித்தவர்
    காந்தியைக் கொன்ற இந்து மகா சபையைத் தோற்றுவித்தவர்!
    இவருக்குப் பாரத ரத்னா விருது கொடுக்கலாமா? தமிழர் தலைவர் ஆசிரியர் எழுப்பும் அடிப்படையான கேள்வி

    தமிழர் தலைவர்

    இந்து  மத வருணாசிரமவாதி - காந்தியைப் படுகொலை செய்த இந்து மகாசபையைத் தோற்றுவித்த - ஒரு சனாதனவாதிக்குப் பாரத ரத்னா  விருது கொடுக்கப்படலாமா என்ற அடிப்படை வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:


    இந்திய அரசின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா விருது வழமையாக குடிஅரசு நாளான - ஜனவரி 26இல் தான் - முதல் நாள் இரவு அறிவிப்பார்கள்.

    ஆனால் இம்முறை - பிரதமர் மோடி அரசால், மாற்றப்பட்டு, வாஜ்பாயின் 90ஆவது பிறந்த நாளில் அவருக்கு வழங்கப்பட அறிவிக்கப்பட்டுள்ளது.
    (அவர் நீண்ட காலம் உடல் நலக் குறைவுடன் உள்ளதாக செய்திகள் வரும் நிலையில் அவர் உடல் நலம்தேற - மனிதநேய அடிப்படையில் வாழ்த்துகிறோம் - அவருக்கு வழங்கியது  எந்த அளவுக்குச் சரி என்பதை ஒருபுறம் நாம் ஒதுக்கி வைக்கவே விரும்புகிறோம்).


    அவருடன் இணைந்து மற்றொருவருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்தான் பண்டிட் மதன்மோகன் மாளவியா; இவர் உத்தரப்பிரதேச காசிப் பகுதியைச் சார்ந்த உயர்ஜாதி  பார்ப்பனர் (வாஜ்பேயும் உயர்ஜாதி பார்ப்பனர்தான் - வாஜ்பேயம் என்ற யாகத்தை நடத்த உரிமை பெற்ற உயர் ஜாதியின் உயர் பரிஷத் இந்து சனாதன மதப்படி)


    யார் இந்த மாளவியா?

    இன்றைய தலைமுறையினரில் பலருக்கு பண்டித மதன் மோகன் மாளவியா யார் என்றே தெரிந்திருக்காது. தெரிய வாய்ப்பில்லை.


    இவரது 152ஆவது பிறந்த நாளையொட்டி இவருக்கு மோடியின் ஆர்.எஸ்.எஸ். அரசால் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் பேரன் கூறுகிறார்!
    19ஆம் நூற்றாண்டில் பிறந்த ஒருவருக்கு 21ஆம் நூற்றாண்டில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது!


    இவர் ”ஹிந்து மஹாசபா” என்ற சனாதன மதத்தைப் பரப்ப, பாதுகாக்கவே ஒரு அமைப்பை 1915இல் நிறுவியவர்.


    RSS  என்ற அமைப்புக்கு முன்னோடி இந்த ஹிந்து மகாசபை - அதன் பெயர் பச்சையாக, வெளிப்படையாகத் தெரிவதை - மறைத்து, ஏதோ சேவைக்காகவே தோற்று விக்கப்பட்ட தேசீய அமைப்பு என்ற ஒரு உருமாற்றத்தை புனே சித்பவன் - பிரிவு பார்ப்பனர் டாக்டர் ஹெட் கேவாரால், ஹிந்து மஹாசபை தோற்றுவிக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1925இல் ஆர்.எஸ்.எஸ். உண்டாக்கப்பட்டது. அதே நோக்கத்தோடு!


    எந்தெந்த அமைப்புகளுடன் தொடர்பு?

    பண்டித மதன்மோகன் மாளவியா என்ற ஹிந்து சனாதனி - கீழ்க்கண்ட அமைப்புகளுடன் அதிக தொடர்பு கொண்டவர்.

    அ) பிரக்ய ஹிந்து சமாஜ்.

    ஆ) பாரத் தர்ம மகாமண்டல்.

    இ) சனாதன தர்ம மஹாசபா போன்ற மத அமைப்பு களுடன் இணைந்து, வேத வைதிக சனாதனத்தைப் புகுத்துவதை தமது வாழ்நாள் பணியாகச் செய்தவர்
    .
    மண்ணுருண்டை மாளவியா!
    மண்ணுருண்டை மாளவியா!


    இவரது சனாதன உணர்வு எவ்வளவு தீவிரம் என்றால் இவர் லண்டனில் நடந்த வட்ட மேஜை மாநாட்டில் (1930) கலந்து கொள்ளச் சென்ற போது, ஓர் சனாதன ஹிந்து - கடல் கடக்கக் கூடாது என்ற வேத அய்தீகத்திற்கு மாற்று கண்டுபிடித்து (!) - ஒரு பிடிமண்ணை எடுத்து உருண்டை யாக்கி, அதை எடுத்துக் கொண்டே சென்று வெளி நாட்டில் தங்கினால், சொந்த மண்ணிலேயே இருப்பதாக அர்த்தம் என்று வியாக்கியானம்  கூறிக் கொண்டு, கப்பலில் மண் உருண்டையுடன் சென்றவர். எனவே இவரை அக்காலத்தில் மேடைகளில் பேசும்போது மண்ணுருண்டை மாளவியா என்ற அழைப்பது வழக்கம்.

    (பிரதமர் மோடி வெளிநாடு செல்லும் போது மாளவி யாவைப் பின்பற்றுவதில்லை!)

    இந்நாட்டின் பாரத ரத்னமாகிய (?) இவரின் மிகப் பெரிய சாதனை - காசி ஹிந்து பல்கலைக் கழகத்தை நிறுவியது.

    பல்கலைக் கழகம் நிறுவியது எல்லோருக்கும் கல்வி தர என்றால், அதற்கு ஏன் ஹிந்து பல்கலைக் கழகம் என்று பெயர் இட வேண்டும்?

    இதன் விளைவாக அதே உ.பி.யில் அலிகார் என்ற இடத்தில் இஸ்லாமியர்களுக்காகப்  பல்கலைக் கழகம் ஒன்றும் ஏற்பட்டது!

    நம் மக்களின் ஒருமைப்பாடு பட்டபாடு இது!

    கல்விகூட மதக் கண்ணோட்டத்துடன் என்பதே இந்த நாட்டின் தனிச் சிறப்பு!

    பச்சை வர்ணாசிரமவாதி

    ஹிந்து மதத்தின் மிக முக்கிய உயிர் நாடியான சனாதன தர்மத்தின் முக்கிய கூறான வர்ணாஸ்ரம தர்மம் அதாவது ஜாதி அமைப்பு ஒழியக் கூடாது; நிலைத்து நிற்க வேண்டும் என்று 1929 மே முதல் வாரத்தில் சென்னைக்கு வந்தும், அதன்பின் திருவிதாங்கூர், கொச்சி பகுதிகளிலும் சென்று தீவிரமான சனாதனக் கருத்துக்களை பரப்பியவர்

    சென்னையில் 1929 மே முதல் வாரத்தில் வந்து பேசிய பண்டித மதன்மோகன் மாளவியா.

    சாதியை ஒரு போதும் ஒழிக்க முடியாது என்றார்!

    1. ஜாதி தர்மம் என்பது ஹிந்து தர்மம் பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையிலேயே கூறும் தர்மம்!

    2. தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் என்ற ஒரு இயக்கம், இந்த வேண்டாத வேலையில் - ஜாதி ஒழிப்பில் ஈடுபடுகிறது; அதனை முளையிலேயே இங்குள்ளவர்கள் கிள்ளி எறிய வேண்டும்.

    (இன்று சுயமரியாதை இயக்கம் உலகம் முழுவதும் பரவியுள்ள 89 ஆண்டு கால இயக்கம் என்பது கல் போன்ற உண்மை).

    3. கோயில்களில் எல்லா  இடங்களிலும் நுழைய வேண்டும் என்று கூறுவது தவறு, எதனால் பிரச்சினை களும், போராட்டங்களும் ஏற்படுகின்றன என்றால், யார் யார் (எந்தெந்த ஜாதிக்காரர்) எங்கெங்கே, எதுவரை செல்லலாம் என்று நன்கு விளம்பரப்படுத்தி, அறிவிப்புச் செய்யாத தாலேயே ஏற்பட்ட தீய விளைவு அது என்று கூறி, ஜாதிமுறைகளை நியாயப்படுத்தினார்.

    4. குழந்தை மணம் (பால்ய விவாஹம்) தடை பற்றி விவாதம் எழுந்தபோது, குழந்தை மணம் தேவை என்று அழுத்தந் திருத்தமாகக் கூறி வாதாடியவர் பண்டித மதன்மோகன் மாளவியா.

    சென்னையில் அவர் பேசியது என்ன?

    இவரை 1929 மே முதல் வாரம் (8.5.1929) கோட்டயத்தில் நடந்த S.N.D.P.  யோகம் என்ற சிறீ நாராயணகுரு தர்ம பரிபாலன சபையார் நடத்திய மாநாட்டிற்கு அழைத்துப் பேச சொன்னபோது, அவர் ஜாதியை ஒழிக்க முடியாது; அது வீண் வேலை, தீண்டாமைக்கு ஹிந்து சாஸ்திரங்களில் இடமில்லை என்று கூறியதோடு, கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் தாய் மதமான ஹிந்து மதத்திற்குத் திரும்ப சுத்தி மூலம் அழைத்து வர வேண்டும்; வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று பேசியபோது அங்கே கூடியிருந்தோர் பொறுமை இழந்து, எதிர்க் கேள்வி கேட்டனர்!


    அவர்கள் ஹிந்து மதத்திற்குத் திரும்பினால் எந்த ஜாதியில் அவர்கள் வைக்கப்படுவார்கள் என்ற கேள்விகள் கேட்டபோது, மாளவியா பதில் அளிப்பதைத் தவிர்த்தார்! கீதை சொல்லும் குணகர்மப்படிசிறந்தவர்களை உயர் ஜாதியில்  வைப்பார்களா என்று கேட்டனர்.


    வைதீக சனாதனிகளும் இவரது குறிப்பிட்ட அளவு தீண்டாமை எதிர்ப்புப் பேச்சைக் கூட ஏற்காமல், எதிர்த் தனர்.


    சென்னையில் திரும்பி வந்துபேசும் போது, மதராஸ் சாஸ்திரிகள் ஆன பார்ப்பனர்களிடம் வேதத்தில் தீண்டாமைக்கான சுலோகங்கள் இல்லை என்று கூறி மாளவியா சில சுலோகங்களையும் கூறினார். மதராஸ் சாஸ்திரிகளோ அதை மறுத்து எங்களிடம் ஆதாரம் உண்டு. வேதம் சனாதன மதம் தீண்டாமையைக் கூறியுள்ளது என்று பதில் கூறினர்.


    ஆதாரம் காட்ட  முடியுமா உங்களால் என்று இந்த பார்ப்பனர்களை அவர் கேட்க, அவர்கள் அச்சிட்ட சமஸ்கிருத வேத சாஸ்திர புத்தகங்களைக் கொண்டு வந்து காட்ட, இவர் வேறு வழியின்றி, அடுத்து எப்படியிருந்தாலும் இப்படிப்பட்ட மக்களிடம் பரிதாபம் காட்ட வேண்டாமா? என்று அய்யோபாவம் ஆர்கியுமெண்டைப் பேசி, பின் வாங்கினார்.


    5. சமஸ்கிருதத்தைப் பொது மொழியாக்கு வதற்குப் பதிலாக ஹிந் தியை பொது மொழியாக வைக்க வேண்டும் என்று (ஒரு தந்திரமாக) பேசியவர்.
    மேற்காட்டிய அத் துணையும் அந்தக் கால 1929 ஆங்கில நாளேடு களில் வந்துள்ளன - குடிஅரசு - ஸிமீஸ்ஷீறீ ஏடு களில் இவரது பேச்சுக்களையும் - கருத்துக்களையும் மறுத்து பல கட்டுரைகள் வெளி வந்து விளாசித் தள்ளியுள்ளனர்  ஆதாரப் பூர்வமாக! ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியே எதிர்க்கிறார்


    உ.பி.யைச் சேர்ந்த உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற பார்ப்பன நீதிபதியே இன்று அவரது கருத்தாக (இணையத்தில்) வாஜ்பேயிக்கும், மதன்மோகன் மாளவியாவுக்கும் பாரத ரத்னா; விருது அறிவித்தது எவ்வகையிலும் ஏற்கக் கூடியது அல்ல என்று அறிக்கை விடுத்துள்ளார்! எனவே


    1. இரு விருதுகளும், இரு பார்ப்பன பெரு மக்களுக்கு,

    2. ஜாதி வர்ண தர்ம காப்பாளர்களுக்கு,

    3. சனாதனப் பாதுகாவலர்களுக்கு,

    4. மக்களின் ஒருமைப்பாட்டை உடைத்து - மத அடிப்படையில், ஜாதி அடிப்படையில், அவர்களை வைத்திருப்பது நீடித்து நிலைத்து இருப்பதற்கு.

    5. மதமாற்றங்களுக்கு முன்னோடித்தனத்தின் சன்மானம் - இத்தியாதி! இத்தியாதி.


    காந்தியைக் கொன்றவன் ஆர்.எஸ்.எஸ்.காரரான நாதுராம் கோட்சே என்றால், கோட்சே ஆர்.எஸ்.எஸ். அல்ல, அவர் இந்து மஹா சபையைச் சேர்ந்தவர் என்று வெகு சாமர்த்தியமாக பிஜேபிகாரர்களும், ஆர்.எஸ்.எஸ். காரர்களும் கூறுவதுண்டு.

    அப்படியே பார்த்தாலும் காந்தியாரைப் படுகொலை செய்த ஹிந்து மஹா சபையைத் தோற்றுவித்த மதன்மோகன் மாளவியாவுக்குப் பாரத ரத்னா விருது கொடுக்கலாமா? படுகொலைக்குப் பரிசு பாரத ரத்னாவா?


    மோடியின் ஆர்.எஸ்.எஸ். அரசின் ஆறு மாத நிறைவு எத்தனை சாதனைகளைக் குவிக்கிறது -  பார்த்தீர்களா? புரிந்து கொள்ளுங்கள்!

    இளைஞர்களே உண்மையை உணர்வீர்!

    இளைஞர்களே, இளைய தலைமுறையாக பழைய வரலாற்றுச் சுவடுகளை உற்று நோக்கி உண்மையை உணருங்கள்!

    ஏமாந்தவர்களாக இனியும் இரோம் என்று விழிப்புற்று எழுக! எழுகவே!!


    -------------------------------கி. வீரமணி   தலைவர்,    திராவிடர் கழகம் சென்னை 
    26-12-2014

    பெரியார் என்பவர் உலகத்திலேயே ஒரு பெரியார்தான்

    கழகத்திற்குக் கிடைத்திட்ட அற்புதமான படைத் தளபதி அறிவுக்கரசு

    தனியாக நின்று யாரும் சாதித்திட முடியாது!
    கழகத்திற்குக் கிடைத்திட்ட அற்புதமான படைத் தளபதி அறிவுக்கரசு
    செயலவைத் தலைவரின் பவள விழாவில் தமிழர் தலைவர் படப்பிடிப்பு
    கடலூர், டிச. 16- கழகத்திற்குக் கிடைத்திட்ட அற்புதமான படைத் தளபதி கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு என்று பாராட்டினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

    8.11.2014 அன்று கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் பவழ விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

    அவரது உரை வருமாறு:

    மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெளியீட்டுச் செயலாளராக இருக்கக்கூடிய வந்தியத்தேவன் அவர்கள் நம் இயக்கத்தால் உருவாக்கப்பட்டவர். இன்னும் இயக்கத்தோடு இணைந்திருக்கக்கூடிய ஒரு அரசியல்வாதியாக இருக்கிறார். அப்படிப்பட்ட அவருக்கு இன்றைக்கு 60 ஆம் ஆண்டு பிறந்த நாள் என்பதை அறிந்தோம். அவருக்கும் இந்த விழாவில், நம் மகிழ்ச்சியை, நம் அன்பை எல்லோருடைய கைதட்டல்மூலமாக, அவர் பல்லாண்டு காலம் வாழவேண்டும் என்ற அந்த மகிழ்ச்சியோடு சிறப்பாக கைதட்டலாம்.

    இணையவேண்டியவர்கள் எப்பொழுதும் இணைந்திருக் கிறோம் என்பதற்கு இது அடையாளம்; அதில் யாருக்கும் எந்தவிதமான கூச்சமும் தேவையில்லை. இவர்கள் கொள்கை உறவுக்காரர்கள்.

    கொள்கையைப் பொறுத்தவர்கள் தியாகத்தை செய்வார்கள்!

    அதுபோலவே, நம்முடைய நெருங்கிய உறவுக்காரர்கள் என்று சொன்னார்கள், தனசேகர் அவர்கள் இல்லாமல் எங்கள் குடும்பத்து திருமண விழாக்களே கூட கிடையாது. அந்த வகை யில், அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும், கொள்கை ரீதியாகவும் நாம் இப்பொழுது நெருங்கி இருக்கக் கூடியவர்கள். மதவாதம் மிக வேகமாகத் தலை தூக்கிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், உறவு என்பது இருக் கிறதே, அது வெறும் குருதியைப் பொறுத்தது அல்ல; இப்பொழு தெல்லாம் கொள்கையைப் பொறுத்தது. குருதியைப் பொறுத்த வர்களிடையே அங்கே பிரிவு ஏற்படலாம்; ஆனால், கொள் கையைப் பொறுத்தவர்கள் தியாகத்தைச் செய்வார்கள்; அந்த உணர்வு இருக்கும். அந்த வகையில், அருமைத் தோழர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநிலக் குழு உறுப்பினர் தோழர் தனசேகரன் அவர்களே,

    அதுபோலவே, சிறந்த எழுத்தாளர், எல்லாத் துறைகளிலும் பல்கலை தோழராக இருக்கக்கூடிய தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தினுடைய மேனாள் மாநில துணைத் தலைவர் கவிஞர் கா.கருப்பையா அவர்களே,

    அதுபோல, தமிழ்நாடு மாநில சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் சங்கத்தின் தலைவராக - பொறுப்பாளராக இருக்கக்கூடிய கோவிந்தராசன் அவர்களே,
    இந்த நிகழ்ச்சியில் நம் அனைவரையும் வரவேற்று உரை யாற்றிய, கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவரும், பவழ விழாக் குழுவினுடைய ஒருங்கிணைப்பாளரும், அறி வுக்கரசு அவர்களுடைய மருமகனுமான நம்முடைய அருமை தோழர், அருமைத் தம்பி டாக்டர் ஜெயக்குமார் அவர்களே,

    நன்றியுரை கூற இருக்கக்கூடிய பொறியாளர், மூன்றாவது தலைமுறையைச் சார்ந்த மணிநிலவன் அவர்களே, இந்தக் குடும்பத்தைச் சார்ந்திருக்கக் கூடிய அருமைத் தோழர்களே, குடும்ப உறுப்பினர்களே, பல ஊர்களிலிருந்து, மாநிலம் முழுவதும் இருந்து இங்கே திரண்டு வந்திருக்கக்கூடிய கழகத்தினுடைய பொறுப்பாளர்களே, முக்கிய பொறுப்பாளர் கள் ஒவ்வொருவரையும் நான் குறிப்பிடவேண்டுமானால், நேரம் அதிகமாகிவிடும். ஆகவேதான், எல்லோரையும் விளித்ததாக நீங்கள் கருதவேண்டும் என்று அன்போடு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

    நான்காவது தலைமுறையைச் சார்ந்த பெரியார் பிஞ்சுகளே...

    ஏராளமாக வந்திருக்கக்கூடிய கழகத் தோழர்களே, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெருமக்களே, உறவினர் பெருமக்களே, கொள்கை உறவுகளே, அதுபோலவே, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடிய அரசு குடும்பத்தைச் சார்ந்த அரசு ஊழியர்களான அந்தக் குடும்பத்தைச் சார்ந்த அருமைத் தோழர்களே, தோழியர்களே, நண்பர்களே, நான்காவது தலை முறையைச் சார்ந்த பெரியார் பிஞ்சுகளே, உங்கள் எல்லோருக் கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தக் கூட்டத்தைப் பார்த்த நேரத்தில், நான் கொஞ்சம் முன்யோசனை இல்லாமல் நடந்துகொண்டோமே என்ற ஒரு உறுத்தல் எனக்கு இருந்தது.கொஞ்சம் முன் யோசனை இல்லாமல் நான் பல விஷயங்களை நான் திட்டமிட்டாலும்கூட, இதில் தவறிவிட்டோமே என்றுதான் நான் இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றபொழுது, ஒரு பக்கத்தில் மற்றவர்களுடைய பாராட்டுரைகளையெல்லாம் கேட்டு பெருமிதப்பட்டுக் கொண்டே, இந்த சிந்தனையும் என்னுள் ஓடிக்கொண்டே இருந்தது. அது என்னவென்று சொன்னால், அடுத்த மாதம் 7 ஆம் தேதியன்று சேலத்தில் திராவிடர் கழகத்தினுடைய மாநிலப் பொதுக்குழுவைக் கூட்டுமாறு, துணைத் தலைவர், தலைமைக் கழகப் பொறுப்பாளரான கழகப் பொதுச் செயலா ளர் இவர்களிடத்தில் எல்லாம் நான் வெளிநாட்டிலிருந்து வந்ததும், கலந்துபேசி, அங்கிருப்பவர்களைத் தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்திருக்கிறோம். அந்தச் செய்தியும் விடு தலையில் வந்திருக்கிறது.


    ஆனால், இங்கே வந்து பார்த்தபொழுது, மாநிலத்தினுடைய பல்வேறு பகுதிகளிலிருந்து இவ்வளவு தோழர்கள் வந்திருக் கிறார்களே, இங்கேயே  பொதுக்குழுவை நாம் ஏற்பாடு செய் திருந்தால், செலவு எவ்வளவு மிச்சமாகியிருக்கும் என்ற சிந் தனைதான் என்னை முன்யோசனை இல்லாமல் நடந்து கொண்டோமே என்று உறுத்தியது. செலவு என்று சொல் கிறபொழுது,  சாப்பாட்டு செலவும் எங்களுக்கு மிச்சமாகும். அது இந்தக் குழுவின் செலவிலேயே போய்விடும். அதைவிட முக்கியம், வந்திருக்கின்ற உங்களுக்கு இரண்டு செலவுகள் ஏற்பாடு. செலவு என்று சொல்லும்பொழுது இந்தச் செலவை மட்டும் நான் சொல்லவில்லை. அந்த அளவிற்கு தோழர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், நம்முடைய செயல வைத் தலைவர் அறிவுக்கரசு அவர்களுடைய தொண்டு எப் படிப்பட்ட தாக்கத்தை கழகத் தோழர்களிடத்தில் உருவாக்கி இருக்கிறது என்பதற்கு, இந்த மாபெரும் அரங்கம்தான்  அதற்கு நல்ல எடுத்துக்காட்டு.
    அவர், மிகச் சிறப்பான வகையில் உருவாகிக்கொண்டு, இயக்கத்திற்குப் பயன்படுகிறார்.  தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு, தன் குடும்பம் என்ற சின்னதோர் கடுகு உள்ளம் இல்லாமல், தொல்லுலக மக்களெல்லாம் நம்முடைய மக்கள் என்று நினைப்பதுதான் இயக்கப் பணி, பொதுப் பணி, பொதுத் தொண்டு. தந்தை பெரியார் அவர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்த மிகப்பெரிய பாடங்களிலேயே தலையாய பாடம், இதற்கு முன்பாக இருந்தவர்கள் இரண்டு அறங்களைத்தான் சொல்லிக் கொடுத்தார்கள். இல்லறத்தை விட்டால், துறவறம். இல்லறத் தைத் தொடங்கும்பொழுதுகூட ஆரிய முறைகளில், காசிக்குப் போ, சந்நியாசியாகப் போ என்று, அதேதான் நம்முடைய ஒழுக்கத்திற்கு மாறான ஒரு கலாச்சாரத்தை அவர்கள்  புகுத்திய நேரத்தில் சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால், இல்லறம் - துறவறம் என்றுதான் சொன்னார்கள்.

    எல்லா வகையிலும் புதிய வழியைக் காட்டிய, புதிய ஒளியைக் காட்டிய, பகுத்தறிவுப் பகலவனான தந்தை பெரியார் அவர்கள், நமக்கு மிக அற்புதமான ஒரு வழியைச் சொன்னார் கள். இல்லறத்தில் இருந்துகொண்டே நீ செய்யவேண்டிய அறம் ஒன்று உண்டு. அதுதான் தொண்டறம் என்று அழகாகச் சொன்னார்கள். அந்தத் தொண்டறம் என்பது சமுதாயத்திற்கு நாம் பயன் படவேண்டும். நம்முடைய வாழ்வு என்பது, நமக் காக மட்டுமல்ல, அழகாக தந்தை பெரியார் சொன்னார், மனி தன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை. எவ்வளவு அழகான சொற்கள்; எவ்வளவு ஆழமான சொற்கள், அறிவுரைகள். இதனை எண்ணிப்பார்க்கவேண்டும்.
    அந்த வகையில், மனித சமுதாயத்தில், சுயநலம் அவரவர் களுக்கு உண்டு என்று சொன்னாலும்கூட, அதை ஒரு கட்டுக் குள்ளே வைத்துவிட்டு, பாடுபட வேண்டும் என்பது அடையாளம்.

    மகிழ்ச்சியோடு செய்யுங்கள் என்றேன்
    அந்த வகையிலே, எளிய முறையில் அறிவுக்கரசு அவர் களுக்கு ஏன் பவழ விழா? அதை பெரிதாக நடத்தவேண்டும் என்று அவருடைய மருமகன் ஜெயக்குமார் வந்து கேட்ட நேரத்தில், மகிழ்ச்சியோடு செய்யுங்கள் என்று நான் சொன்னேன். அதற்காகவே நான் என்னுடைய பயணங்களைக் கூட வெளியில் குறைத்துக் கொண்டு, இந்த நிகழ்ச்சிக்கு முதலாவ தாக வந்து நிற்கிறேன்.

    உங்களோடு இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறேன் என்று சொன்னால், இந்தப் பணி என்பது இருக்கிறதே, வேறு யாரும் எளிதில் செய்ய முன்வராத பணியாகும்.
    தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள், நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி, மானமும், அறிவும் உள்ள மக்களாக, என்னுடைய மக்களை ஆக்கவேண்டும்; உலக மக்கள்போல் என்னுடைய மக்களும் வரவேண்டும்; என்னுடைய சமுதாய மக்கள் வரவேண்டும். அதை மற்றவர்கள் செய்ய முன்வராத காரணத்தினாலே, நான் இந்தத் தொண்டை என் தோள்மீது போட்டுக்கொண்டு செய்கிறேன் என்று சொன்னார். அந்தப் பணியை தொடருவதுதான் பெரியார் தொண்டர்களாக இருக்கக்கூடிய நம்முடைய தலையாய கடமையாகும்.

    அந்தப் பணியை, அன்னை மணியம்மையார் அவர்கள், பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு தொடர்ந்து செய்து, அய்யா அவர்களை 95 ஆண்டுகாலம் வாழ வைத்து, அவர் தந்த இயக்கத்தை மேலும் அய்ந்தாண்டு காலம் பாதுகாத்து, நம்மிடம் ஒப்படைத்துவிட்டு, நூற்றாண்டு விழாவினை நாம் நடத்தக்கூடிய அளவிற்கு வந்த அந்த காலகட்டத்தில், என்னைப் போன்ற சாதாரணமானவர்கள், மாணவப் பருவந்தொட்டு, வினா தெரிந்த காலம் என்று சொல்வார்களே, அதுபோல, இந்த நகரத்தில், நான் ஒரு அரைக்கால் சட்டைவாசியாக இருந்து, மேஜைமீது நிறுத்தி, ஆசிரியர் திராவிடமணி அவர்களால் பக்குவப்படுத்தப்பட்டு, உரையாற்றிய அந்தக் காலத்திலிருந்து இன்றுவரையில் உங்களோடு பழகிக் கொண்டிருக்கக் கூடிய ஒருவனாக, இந்தக் கொள்கையைத் தவிர வேறு கொள்கை இல்லை என்று  சொல்லக்கூடிய அளவிற்கு, அறியாதவனாக, வேறு கொள்கை என்னால் ஏற்க முடியாததாக இருக்கிறது என்ற மனிதநேய அடிப்படையிலேயே, சிறந்த ஒரு சுயமரியாதை வாழ்வை தேர்ந்தெடுக்கின்ற நேரத்தில், தனியாக  என்னைப் போன்றவர்கள் செய்திட முடியாது.


    ஓர் அற்புதமான ஒரு படைத்தளபதிதான் இன்றைய பவழ விழா நாயகர்

    பெரியார் என்பவர் உலகத்திலேயே ஒரு பெரியார்தான். ஒரு புத்தரைப் போல; ஒரு வள்ளுவரைப் போல. மற்றவர்கள் அந்த முயற்சியைத் தொடரவேண்டும். அவர்கள் தந்த தத்துவத்தை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதுதான் நம்முடைய பணி. எப்பொழுதுமே அவர்கள் தந்த தத்துவங்கள், அவர்களாலே பரப்பப்பட்டது என்று சொல்ல முடியாது; அவர் களுடைய தொண்டர்களாலே, அவர்களுடைய தோழர்களா லேதான் பரப்பப்பட்டது. அந்தப் பணி நம்முடைய கடமை என்று நினைக்கின்ற நேரத்தில்தான், எங்களுக்கு அற்புதமான ஆயுதங்களைப் போல, படை வீரர்களை போல பயன்பட்டார் கள், கிடைத்திருக்கிறார்கள் என்றால், அதிலே ஓர் அற்புதமான ஒரு படைத் தளபதிதான் இன்றைய பவழ விழா நாயகர் பெருமைக்குரிய மானமிகு அறிவுக்கரசு அவர்கள்.

    எனவேதான், அறிவுக்கரசு அவர்களைத் தட்டிக் கொடுக்க வேண்டும்; பாராட்டவேண்டும்; உற்சாகப்படுத்தவேண்டும். அதுமட்டுமல்ல, அறிவுக்கரசு அவர்கள், நீண்ட காலம் வருவாய்த் துறையில் இருந்துவிட்ட காரணத்தினால், நான் உரிமை எடுத்துக்கொண்டு சொல்வேன், வருவாய்த் துறை நண்பர்கள் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது; அவர்கள் கொஞ்சம் அதிகாரம் செய்தே பழக்கப்பட்டவர்கள். காரணம் என்னவென்று சொன்னால், ஏற்கெனவே அதிகாரத்திற்கு அவர்கள் கீழே இருந்தபொழுது கட்டுப்பட்டு, அவர்கள் மேலே வந்தபொழுது, அந்தக் கோபத்தோடு மற்றவர்களிடம் அதே அதிகாரத்தை செலுத்துவார்கள். தாய்மார்களுக்குப் புரிகின்ற ஒரு உதாரணத்தைச் சொல்லவேண்டுமானால், மருமகளை மாமியாரை எந்த அளவிற்கு நடத்துவார்; பழைய காலத்தில், இந்தக் காலத்தில் நடக்காது, அது வேறு செய்தி. பழைய காலத்தில் எப்படி நடத்துவார் என்று தெளிவாகத் தெரியும். ஏனம்மா, உன் மருமகளிடம் இப்படி நடந்துகொள்கிறீர்கள் என்று கேட்டால், என்னுடைய மாமியார் என்னை இப்படித் தான் நடத்தினார் என்று சொல்வது அவர்களுடைய பழைய காலத்து வாடிக்கை.


    நீங்கள் கழகத்துக்காரர், கருப்புச்சட்டைக்காரர் மட்டும்தான்
    அதுபோலத்தான், வருவாய்த் துறையில் இருக்கக்கூடிய வர்களும். இவர்களை அவர்கள் சொன்னார்கள் அல்லவா; நாங்கள் எல்லாம் அடிமைகளாக இருந்தோம். இங்கே உரை யாற்றிய வருவாய்த் துறை அதிகாரி உரையாற்றும்பொழுது சொன்னார், அவர்கள் அப்படி அதிகாரத்திற்குக் கீழ்பட்டு நடந்து நடந்து, அவர்கள் மேலே வரும்பொழுது, அவர்கள் எவ் வெப்பொழுதெல்லாம் தங்களை மற்றவர்கள் அழுத்தினார் களோ, அந்தக் கோபம், அவர்களைப் பழிவாங்கவேண்டும் என்று நினைப்பது, அந்த அதிகாரத்தைச் செலுத்துவார்கள்.

    எனவேதான், அவரை நான் பொறுப்பிற்குப் போட்ட நேரத்தில் எல்லாம், கழகத்திற்கு வந்து அவர் பணிகள் செய்த நேரத்தில் எல்லாம், ஒவ்வொரு முறையும், கழகத்தினுடைய பொதுக்குழுவிலும் சரி, தலைமைச் செயற்குழுவிலும் சரி, நாங்கள் கூடும்பொழுது, அவருக்கு மட்டும் கொஞ்சம் தனியாக எடுத்துக்கொண்டு, அறிவுக்கரசு அவர்களே, நீங்கள் இப்பொழுது அதிகாரி இல்லை. நீங்கள் கழகத்துக்காரர், கறுப்புச் சட்டைக்காரர் மட்டும்தான். ஆகவே, அதை அடிக்கடி நாங்கள் நினைவூட்டிக் கொண்டிருக்கிறோம். எனவே, நம்முடைய தோழர்களிடத்திலே நீங்கள் பழகுகின்ற நேரத்தில், வெறும் தோழமை உணர்வு மட்டும்தான் இருக்கவேண்டுமே தவிர, வேறு இருக்கக்கூடாது என்போம்.

    அறிவுக்கரசு அவர்களுக்கு, எங்களைப் போல் பெரியார் அவர்களிடம் நெருங்கிப் பார்த்திருக்கக் கூடிய வாய்ப்பில்லை; நெருங்கிய எங்களோடு பழகியிருக்கிறார். ஆனால், அதேநேரத்தில், அய்யாவிடத்தில் பார்க்கின்றபொழுது, பல நேரங்களில் எங்களின் கண்களில் நீர் கசிந்து கொண்டிருக்கும். அவ்வளவு பெரிய அளவிற்கு அய்யா அவர்களுடைய பொது வாழ்க்கையினுடைய பயணம். மிகக் காரமாக இருக்கும்; மற்றவர்களால் வாயில் வைக்க முடியாது. ஆனால், தந்தை பெரியார் அவர்கள், பரிமாறிக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியாமல், குவளையில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரில், அது மீனாக இருக்கலாம்; இறைச்சியாக இருக்கலாம்; காய் கறிகளாகக் கூட இருக்கலாம். அதை அய்யா அவர்கள் அந்தக் குவளை நீரில் நொடிப்பொழுதில் கழுவிவிட்டு, சாப்பிடுவார்; அதனைக் கீழே போடமாட்டார்; வீணாக்கமாட்டார்.

    விருந்து படைத்தவர்கள் அய்யாவிடம் கேட்பார்கள், அய்யா எங்கள் வீட்டு சாப்பாடு எப்படி இருந்தது என்று கேட்பார்கள். உடனே  அய்யா அவர்கள், ரொம்ப அருமையாக இருந்ததுங்க; ரொம்ப அருமையாக இருந்ததுங்க என்று சொல்வார்கள். நாங்கள் எல்லாம், எவ்வளவு பெரிய தொந்தரவு; நமக்குப் பரவாயில்லை; அய்யாவினுடைய வயது என்ன? அவருடைய ஜீரண சக்தி எப்படிப்பட்டது என்றெல்லாம் நினைப்போம். அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். விருந்து முடிந்து வந்தவுடன், அதற்குரிய மருந்து என்ன வென்று, அதைச் சாப்பிடுவார். பல நேரங்களில் கடுமையான அவதியைக்கூட பட்டிருக்கிறார்கள்.

    அறிவுக்கரசு அவர்களுக்கு அந்த வாய்ப்புகள் அதிகம் இல்லை
    என்றாலும், விருந்தளித்தவர்களின் முகம் அங்கு கோணக்கூடாது; அவர்கள் அன்போடு கொடுப்பதை, நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர்கள் சொல்லிச் சொல்லி, அதையெல்லாம் நேரில் பார்த்துப் பார்த்து, பழக்கப்பட்டவர்கள் நாங்கள். ஆகவேதான், எங்களுக்கு அது சாதாரணம். ஆனால், அறிவுக்கரசு அவர்களுக்கு அந்த வாய்ப்புகள் அதிகம் இல்லை. அந்தத் துறையிலேயே நீண்ட காலமாக இருந்துவிட்ட காரணத் தினால், அவர்கள் இப்பொழுது இங்கே வருகிறபொழுது சொன்னார், இந்தப் பவழ விழாவில் ஒரு பெரிய லாபம் என்ன வென்றால், அவர் பெயராலே  எண்டோமென்ட் வைக்கப் பட்டது என்பது அல்ல; எப்பொழுது சொன்னாலும்  வைப் பார்கள்; நாங்கள் வைப்போம். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில், வாய்ப்பிருந்தால், டாக்ட்ரேட் வரக்கூடிய வாய்ப்புகளைப் பெறலாம். நிச்சயமாக வருவார், அதற்குண் டான ஆற்றல், அறிவு, திறமை, தெளிவு எல்லாமும் உண்டு.
    அதைவிட இன்றைக்கு நம் அனைவரின் முன்னிலையிலும் ஒரு உறுதிமொழியை சொல்லியிருக்கிறார். நான் என்னை மாற்றிக் கொள்ளப் போகிறேன். இதைவிட பெரிய பவழ விழா விளைவு வேறு எதுவும் கிடையாது.

    நம்மைவிட, குடும்பத்துப் பிள்ளைகள், அவருடைய செல்வங்கள் இருக்கிறார்களே, பெயரப் பிள்ளைகள், அவருடைய மருமகப் பிள்ளைகள்; மலர் போட்டுக்கூட, அவருடைய மருமகனை வறுத்தெடுத்திருக் கிறார் என்பதை நான் கேள்விப்பட்டேன். ஏனென்றால், பல நேரங்களில் என்ன நடக்கிறது என்று எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளக்கூடிய இடத்தில் இருக்கக்கூடியவன் நான்.

    அவருக்கு மனதில் ஒரு விகற்பம் கிடையாது; உணர்ச்சி வந்தால், அதனை அடக்கிவிடமாட்டார்; உடனடியாக அதனை அப்படியே காட்டுவார். சிறுபிள்ளைகள் சில நேரங்களில் பிடிவாதமாக இருப்பதைப்போல, அவர் கோபித்துக்கொண்டு கூட்டத்திற்கு வரமாட்டேன்; நான் போகிறேன் என்று சொல்வார். அதை அனுபவித்தவர்கள் இங்கே இருக்கிறார்கள். தனித்தனியே சொல்லச் சொன்னால் நிறைய சொல்வார்கள். அப்பொழுது நான் இருந்தால் கூப்பிட்டு கண்டிப்பேன், உரிமையோடு. ஏனென்றால், அவரை பாராட்ட எவ்வளவு உரிமை உண்டோ, அதைவிட அதிகமான உரிமை அவரைக் கண்டிக்கவும் எங்களுக்கு உண்டு என்று சொல்லக்கூடிய அளவில், இந்த மலரில் நான் எழுதிக் கொடுத்த கட்டுரையில் கூட, கடைசியாக அதைத்தான் இந்தத் தம்பியிடத்தில் எழுதி யிருக்கிறேன். இன்றைக்கு எழுதிய வாழ்வியல் சிந்தனையில் கூட ஒரு வரியைப் பயன்படுத்தியிருக்கிறேன். இந்தக் கோபக் கார தம்பி என்று. அதற்கு நல்ல விளைவு ஏற்பட்டிருக்கிறது. நான் தொடர்ந்து சொல்லியது வீண் போகவில்லை. அது கட்டாந்தரையில் விதைத்த விதையாக இல்லாமல், நல்ல பக்குவப்படுத்தப்பட்ட மனதில் பதிந்த கருத்தாக அது அமைந்த காரணத்தினால்தான், அவர் மிகத் தெளிவாக சொன்னார், இனிமேல் நான் கோபத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டு, அடியோடு விட்டுவிடுவேன் என்று ஓர் உறுதிமொழியை இந்த அறிவார்ந்த அவை முன்னால் சொல்லியிருக்கிறார். இதை நாம் ஏற்றுக்கொள்வோம். ஆனால், தயக்கத்தோடு ஏற்றுக்கொள்வோம். அவர் குறைத்துக் கொள்வார் என்பதிலே எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அடியோடு மாறிவிடுவார் என்று சொல்வதிலே எனக்கு நம்பிக்கையில்லை. என்னுடைய நம்பிக்கையைப் பொய்யாக்க வேண்டியது அவருடைய கடமையாகும். அதுதான் மிக முக்கியம். நான் அதில் தோற்றுவிட்டேன் என்று நினைப்பதில்லை. நான் பல நேரங்களில் இயக்கத் தோழர் களிடம் தோற்பதைத்தான் விரும்புகிறேனே தவிர, நான் இயக்கத் தோழர்களிடத்தில் வெற்றி பெறவேண்டும் என்று நினைப்பதில்லை.

    ஏனென்றால், நம்முடைய வாழ்க்கையில், நம்முடைய தோழர்கள் மத்தியில் வெற்றி - தோல்வி என்பதற்குத் தனிப் பொருளே கிடையாது. அதைத்தான் நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். எனவே, அந்த வகையில் மிகச் சிறப்பான ஓர் அற்புதமான விழாவை இந்த விழாவை ஏற்பாடு செய்த நம்முடைய நண்பர்கள், குறிப்பாக நம்முடைய ஜெயக்குமார் அவர்கள் எடுத்திருக்கின்ற முயற்சி கொஞ்ச நஞ்சம் அல்ல. இயக்கத் தோழர்கள் ஏராளமாக ஒத்துழைத்திருக்கிறார்கள். மலர் மிகவும் கம்பீரமான மலராக இருக்கிறது. அந்த மலரின் அட்டைப் படம் இருக்கிறதே, மீசையின் சிறப்பு எவ்வளவு என்றெல்லாம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். யாராவது, எங்கள் இரண்டு பேரை நிறுத்தி வைத்துப்பார்த்தால், யார், யாருக்குத் தம்பி என்று அய்யம் வரக்கூடிய அளவிற்கு இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அவர் எல்லா வகையிலும் மிகச் சிறப்பாக வளர்ந்து, இன்னும்  இந்த இயக்கத்திற்குப் பயன்படவேண்டும். அதுதான் மிக முக்கியம். நாம் பாராட்டுவது எதற்கு? பாராட்டு வெறும் புகழ்மாலைக்காக அல்ல; அவர் பயன்படவேண்டும் என்பதற்கு ஒரு அச்சாரம் கொடுக்கிறோம். பணி ஒப்பந்தத்தை நாம் புதுப்பித்துக் கொள்கிறோம். இன்னும் பணி செய்யவேண்டும்; நம் இறுதி மூச்சு இருக்கின்ற வரை பணி செய்யவேண்டும் என்பதுதான் மிக முக்கியம்.

    நிறைய பேசலாம் அவரைப்பற்றி; மலரில் வந்திருக்கிறது; தோழர்கள் இங்கே உரையாற்றினார்கள். அவர் மற்றவர்களுக்கு மனிதநேயத்தோடு உதவியிருக்கிறார். நான் வாழ்வியல் சிந்தனையில் இரண்டு, மூன்று செய்திகளை மட்டும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

    ஒன்று, கொள்கை ரீதியாக, ஒரு அரசு ஊழியனாக இருந்தால் பயப்படவேண்டிய அவசியமில்லை. வந்திருக்கின்ற தோழர்களுக்கு, இந்த அரங்கத்திற்காக மட்டும் பேசவில்லை.

    ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு; to speak for vigar audience என்று சொல்வார்கள். வந்தவர்களுக்கு மட்டுமல்ல, வராதவர்களுக்கும் சேர்த்து; இந்த உரை வெளியில் போகும். அப்பொழுது மற்றவர்களும் அதைத் தெரிந்து கொள்ளக்கூடிய அளவிலே இருக்கவேண்டும். அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. யாருக்கு நேர்மையும், யாருக்கு கொள்கையும் இருக்கிறதோ, அவர்கள் ஒருபோதும் கோழைகளாக இருக்கவேண்டிய அவசியமே கிடையாது. அரசு ஊழியர்கள் என்பதற்காக, அவர்கள் தங்களுடைய மனிதத் தன்மையை, தங்களுடைய நேர்மையை, கொள்கையை அவர்கள் விட்டுக் கொடுக்கவேண்டும் என்கிற அவசியமே கிடையாது. கறுப்புச் சட்டையைப்பற்றி அவர்கள் சொன்ன பொழுது, ஓர் உதாரணத்தைச் சொன்னார்கள். கறுப்புச் சட்டையை ஏன் அணிந்துகொண்டு போகக்கூடாது; கறுப்புச் சட்டை அணியக்கூடாது என்று எங்கே விதி இருக்கிறது?
    இதற்கெல்லாம் ஒரு வேடிக்கையாக சொல்கிறேன், நாங்கள் எல்லாம் மிசா காலத்தில் சிறையில் இருந்தபொழுது, பொறியா ளர் குமாரசாமி என்பவர், மிகப்பெரிய ஜீனியஸ் அவர். மிகப் பெரிய கெட்டிக்காரர், திறமைசாலி. நம்முடைய நாவலருக்கு உறவினர்; அதைவிட திராவிடர் கழக உணர்வாளர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களிடத்தில் எல்லாம் மிகப்பெரிய அளவிற்கு ஈடுபாடு உள்ளவர்கள் .

    ஆயிரம் கோடிக்கு உன்னிடத்தில் திட்டம் இருக்கிறதா? என்று பக்தவத்சலம் கேட்டார்
    கிண்டி பொறியியல் கல்லூரியில், முதலாமாண்டு படித்தபொழுதே, நான்காவது ஆண்டுக்கான கணக்குகளைப் போட்டுக் கொடுப்பார் என்ற பெருமிதமானவர். அவ்வளவுக் கெட்டிக்காரர். ஆயிரம் கோடி கொடுத்தால், திராவிட நாடு பிரச்சினையை நான் ஒத்தி வைக்கிறேன் என்று அண்ணா அவர்கள் சொன்னபொழுது, ஆயிரம் கோடிக்கு உன்னிடத் தில் திட்டம் இருக்கிறதா? என்று பக்தவத்சலம் கேட்டார்.

    இது பழைய வரலாறு. ஆயிரம் கோடிக்கு உன்னால் திட்டம் கொடுக்க முடியுமா? என்று கேட்டார். அப்பொழுது குமாரசாமி அவர்கள் உதவிப் பொறியாளர், இயக்கக் கொள்கை உறுதி படைத்தவர். பக்தவச் சலத்திற்கே நேரே கடிதம் எழுதிவிட்டார். ஆயிரம் கோடிக்கு திட்டம் கொடுத்து, அண்ணாவின்மூலம் அனுப்புகிறேன் என்று கேட்டார். அதற்காக அவரிடம் விளக்கம் கேட்டார்கள்; அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை.
    அப்படிப்பட்டவர் நெருக்கடி காலத்தில், இவரைப் போலவேதான், மற்றவர்கள் சொன்னார்கள் அல்லவா, கடவுள் இல்லை, பத்திரிகையை நிறுத்து இதுபோன்று எல்லாம் சொன்ன நேரத்தில், இரண்டு ஆலோசகர் இருந்தார்கள், தவே என்ற குஜ ராத்திப் பார்ப்பனர் ஒருவர். சுப்பிரமணியம் என்ற தமிழ்நாட்டுப் பார்ப்பனர் ஒருவர். அவர்கள்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். நாங்கள் எல்லாம் மிசாவில் சிறைச்சாலையில் இருந்தோம். எப்படி நடத்தப்பட்டோம் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை.
    அப்படிப்பட்ட நேரத்தில், அவரை விசாரிப்பதற்காக அழைத்திருந்தார்கள். இவர் கறுப்புச் சட்டையை அணிந்து கொண்டு, தலைமைச் செயலகத்திலுள்ள அவருடைய அறைக் குச் சென்றார். வழியில் நண்பர்கள் எல்லாம் பார்த்துவிட்டு, அவரைத் தடுத்து, என்னய்யா, இப்பொழுது பார்த்து கறுப்புச் சட்டையை அணிந்துகொண்டு செல்கிறாயே? என்று.

    அவர் எப்பொழுதும் மிகவும் நகைச்சுவையாக பேசுவார். கறுப்புச் சட்டை போடக்கூடாது என்று அரசாங்கக் கோடில் எந்த இடத்தில் இருக்கிறது. அதை சொல்லட்டும், நான் பதில் சொல்கிறேன். என்னய்யா பதில் சொல்வாய் என்று கேட்டார் அருகிலிருந்தவர். நான் கோபமாக ஒன்றும் சொல்லமாட்டேன். நிதானமாக, சார், நான் மனைவிக்கு மிகவும் கட்டுப்பட்டவன். என் மனைவிக்கு கறுப்பு கலர்தான் பிடிக்கும். என்னைக்கு எந்தக் கலரில் சட்டை அணியச் சொல்கிறாரோ, அந்தக் கலரில்தான் சட்டை போடுவேன். இன்றைக்கு கறுப்புச் சட்டையைப் போடச் சொன்னார், அதனால் கறுப்புச் சட்டை அணிந்து வந்திருக் கிறேன் என்று சொல்வேன் என்று சொன்னார்.
             ----------------------(தொடரும்) 16-12-2014
    Read more: http://viduthalai.in/page-4/92925.html#ixzz3M4NEeQYT
    **********************************************************************************
    அறிவுக்கரசு போன்றவர்களின் பணி அதிகமாகத் தேவைப்படுகிறது

    நம்முடைய காலத்தின் எதிரிகள் நாணயமற்றவர்கள் அறிவுக்கரசு போன்றவர்களின் பணி அதிகமாகத் தேவைப்படுகிறது
    செயலவைத் தலைவரின் பவள விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

    கடலூர், டிச. 17- பெரியார் காலத்தில் இருந்தவர்கள் நாணய மானவர்கள். இப்பொழுது அப்படியில்லை, இந்த நிலையில் தம்பி அறிவுக்கரசு போன்றவர்களின் பணி அதிகம் தேவைப் படும் நேரம் இது என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

    8.11.2014 அன்று கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் பவழ விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


    அவரது உரையின் நேற்றையத் தொடச்சி வருமாறு:


    அது வேறு வகை; ஆனாலும், கொள்கையிலே தெளி வாக இருந்து, கறுப்புச் சட்டை அணிந்தால் தவறு என்ன என்று கேட்டார் அல்லவா. யாருக்குத் தொல்லை என்று சொன்னால், ஒரு கொள்கையும் இல்லாதவர்களுக்கு ஒரு தொல்லையும் இல்லை, அரசாங்க ஊழியர்களாக இருந்தாலும். கொள்கையில் மிகத் தீவிரமாக இருக்கிறவர்களுக்கும் தொல்லை வராது.
    இரண்டுக்கும் நடுவில், இந்த அரைகுறையாக இருக்கிறார் பாருங்கள்; வழவழா கொழகொழா என்று, பட்டும் படாமல், எல்லோரையும் ஏமாற்றவேண்டும் என்று நினைப்பது; முன்னே நாய்க்கர் குதிரை; பின்னே ராவுத்தர் குதிரை என்று பழமொழி சொல்வதுபோல் காட்டவேண்டும் என்று நினைப்பவர்களுக் குத்தான் தொல்லை வரும். ஓடுகிறவர்களைக் கண்டால்தான் துரத்துகின்றவர்களுக்கு லாபம்; ஆனால், ஓடுகிறவர் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தால், துரத்துகிறவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.

    ஆகவே, அரசு ஊழியர்களே, அறிவுக்கரசு அவர்கள் எழுதிய இந்தப் புத்தகத்தை நீங்கள் ஆவணமாகக் கொள்ளுங் கள். அதனை ஒரு கையேடு போல் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிக்கல் வந்தால், நேர்மையாக அதனை எதிர்கொள்ளுங் கள். எந்த நேரத்திலும் அவர் பொய் சொன்னது கிடையாது. எந்த நேரத்திலும் துணிச்சலாக உண்மையைச் சொல்லுங்கள். ஆகவே, அதற்காக நான் எதை வேண்டுமானாலும் பயன் படுத்துவேன் என்று சொல்லுங்கள்.

    இது நம்முடைய தலைவர்  அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் கற்றுக்கொடுத்தது.


    தந்தை பெரியாரின் நாணயம்!


    வெங்கட்ட நாயக்கர் மண்டி என்று அவருடைய தந்தை பெயரில் மஞ்சள் வியாபாரம் ஈரோட்டில் நடைபெற்ற அந்தக் காலகட்டத்தில், இவருக்கு மாற்றி விடுகிறார்கள். இவர் துடிப் பான இளைஞர் என்பதனால், பள்ளிக்கூடத்திற்கே அதிகம் செல்லாதவர் என்கிற காரணத்தினாலும், வியாபாரத்தையே நன்றாகப் பழகிக் கொண்டவர் என்கிற காரணத்தினால், இவர் நாணயமான வியாபாரத்தை எல்லோரிடத்திலும் செய்து கொண்டிருந்தார். மண்டி அவர் தந்தையார் பெயரில் இருந்தது; பிறகுதான் ராமசாமி நாயக்கர் மண்டி என்று மாறியது. அவருடைய தந்தையார் கையெழுத்தை, வியாபாரத்திற்காக போடுவது என்பது அப்போது சர்வசாதாரணமானது. அப்பொழுது பெரியார் அவர்கள் தந்தையார் கையெழுத்தைப் போட்டுவிட்டார். இவரைப் பிடிக்காதவர்கள் அரசாங்கத்திற்கு புகார்க் கடிதம் அனுப்பி விட்டார்கள். போர்ஜரி என்று புகார் செய்திருந்தனர்.


    பிரிட்டிஷார் அரசாங்கம் அப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருந்தது. போர்ஜரி என்பது பெரிய கிரிமினல் குற்றமாகும். பலரும், உங்களுடைய பையன் நிச்சயமாக சிறைச்சாலைக்குச் செல்வான் என்று பெரியாருடைய தந்தையாரிடம் சொல்லி பயப்படுத்தி விட்டார்கள்.


    சிறைச்சாலைக்குச் செல்வது என்பது அந்தக் காலகட்டத்தில் பெரிய அவமானமாகக் கருதக்கூடிய பருவம். அந்தக் காலகட்டத்தில் பெரியாரை இதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கவலைப்பட்ட அவர் தந்தை, ஒரு பிரபல அய்யங்கார் வக்கீலை வைத்து, பெரியார் சிறைச்சாலைக்குச் செல்லாமல் தடுக்கவேண்டும் என்று நினைத்த நேரத்தில்,
    பெரியார் அவர்கள் இதனைப்பற்றி கவலைப்படாமல், இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்பொழுதே, தன்னுடைய கட்டிலில் படுத்துக்கொள்ளாமல், கீழே படுத்து உறங்கினார். ஏன் என்று கேட்டதற்கு, சிறைச்சாலைக்குச் சென்றால், நான் கீழேதானே படுக்கவேண்டும்; அதை இப்பொழுதிருந்தே பழகிக் கொள்கிறேன் என்றார்!


    அந்த வழக்கிற்காக பிரபலமான வழக்குரைஞரை  பெரியாருடைய தந்தையார் அமர்த்தினார். அந்த வழக்குரைஞர் தந்தை பெரியாரிடம், அந்தக் கையெழுத்தை நீங்கள் போடவில்லை என்று சொல்லி விடுங்கள். அது போதும் உங்களை நான் காப்பாற்றிவிடுவேன், என்னுடைய வாதத் திறமையாமல் என்று சொல்கிறார்.


    எந்தவிதமான தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன்


    அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நேரத்தில்,  தந்தை பெரியார் அவர்கள் எனக்காக வழக்குரைஞர் வாதாடவேண் டாம்; நீங்கள் கேள்வி கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன் என்று வெள்ளைக்கார நீதிபதியிடம் சொல்கிறார்.


    கையெழுத்தை நீங்கள் போட்டீர்களா? என்று நீதிபதி கேட்டவுடன்.
    ஆமாம், நான்தான் போட்டேன். எங்கள் அப்பா  கையெழுத்தை நான் போடவில்லை என்று மறுக்கமாட்டேன். இது வழமையாக நடப்பதுதான். எல்லா வியாபாரத்திலும் நடப்பதுதான். அதனால் யாருக்கும் எந்தவிதமான நட்டமும் இல்லை. மண்டி அவருடைய பெயரில் இருந்ததால், வரவு - செலவிற்காக அதனை நான் செய்தேன். தவறு செய்ய வேண்டிய கெட்ட எண்ணம் எனக்கு எதுவும் கிடையாது. நான் போட்ட கையெழுத்தை நான் மறுக்க மாட்டேன். எந்தவிதமான தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னார்.


    அந்த வெள்ளைக்கார நீதிபதி வியந்து சொன்னார், இவரால் எந்தவிதமான நட்டமும், இந்தக் கையெழுத்தினால் இல்லை. தவறான நோக்கத்துடனோ, சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யவேண்டிய வகையிலோ இல்லை. ஆகவே, இவரை விடுதலை செய்கிறேன் என்று சொல்லி தீர்ப்பளித்தார்.


    இது நம்முடைய தலைவர் நமக்குக் காட்டிய வெளிச்சம்.


    எங்களுடைய தலைவருடைய கட்டளை, அதனால் கொளுத்தினேன். தண்டனை என்ன கொடுத்தாலும் பரவாயில்லை
    ஆகவேதான், அவர் பல நேரங்களில் இக்கட்டான நிலையி லிருந்து வெளியே வந்திருக்கிறார்; அதையே எழுதியிருக்கிறார். எங்களுடைய தோழர்களுக்குக்கூட நாங்கள் அதைத்தான் சொல்வோம். நீ குற்றம் செய்தாயா? என்றால், ஆம், குற்றம் செய்தோம் என்று ஒப்புக்கொள்ளவேண்டும்.நான் மனதார குற்றம் என்று நினைத்துக்கொண்டு செய்யவில்லை. போராட்டம் என்று சொன்னால், தந்தை பெரியார் அவர்கள் என்ன அறிக்கை விடுவார் என்றால், இதைக் கொளுத்தி னாயா? ஆம் கொளுத்தினேன். எங்களுடைய தலைவருடைய கட்டளை, அதனால் கொளுத்தினேன். தண்டனை என்ன கொடுத்தாலும் பரவாயில்லை; அதுமட்டுமல்ல, குற்றம் செய் தால், அந்தக் குற்றத்திற்கு வேறு வியாக்கியானம் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது. அது நம்முடைய தலைவர் காட்டிய பண்பாடு மட்டுமல்ல, இந்த இனத்தின் பண்பாடும்கூட அதுதான்.

    எற்றென்றி ரங்கவ செய்யற்க செய்வானேகில்
    மற்றன்ன செய்யாமை நன்று!


    இதுதான் திருக்குறளுடைய பண்பாடு. திருக்குறள் மொழி. தவறு செய்யாதே, தவறு செய்தால், தண்டனையை அனு பவிக்கவேண்டுமானால், அதற்குத் தயாராக இரு. அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்காதே! அதுதான் மிக முக்கியம்.


    அப்படித் தயாராகும்போது, அதனுடைய விளைவுகளை நாம் ஏற்கக்கூடிய அறிவு நேர்மை இருக்கிறது பாருங்கள் - மிஸீமீறீறீமீநீணீறீ பிஷீஸீமீஹ்  இந்த அறிவு நேர்மைதான் சுய மரியாதைக்காரர்களுடைய சொத்திலேயே தலைசிறந்த சொத் தாகும். அதனை யாரும் மறந்துவிட முடியாது.


    எனக்கு ஒரு பெருமை என்னவென்றால்...

    அந்த வகையில், அரசு ஊழியராக இருந்து ஓர் எளிய எழுத்தராக உள்ளே நுழைந்து, கடைசியில், மாவட்ட ஆட்சியராகக்கூட சில நேரங்களில் பொறுப்பு வகித்திருக்கிறார் நம்முடைய அறிவுக்கரசு அவர்கள்.  அப்படிப்பட்ட அளவிற்கு அவர் உயரும்பொழுது, எனக்கு ஒரு பெருமை என்ன வென்றால், அவரை பணிக்கு அனுப்பியபொழுதும் நான் இருந்தேன்; வருவாய்த் துறைக்குச் சென்று, பிறகு திரும்பி வரு வாய் என்று சொல்லி, திரும்பி வரும்பொழுதும் அழைப்பதற்கு புதுக்கோட்டைக்குச் சென்று, கறுப்புச்சட்டையைக் கொடுத்து வந்தேன். இந்தச் சட்டையை சில நேரங்களில் பயன்படுத்துங் கள்; சில நேரங்களில் பயன்படுத்தாதீர்கள் என்று அவருக்குச் சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லியிருக்கிறோம்.


    எனவேதான், ஒரு அற்புதமான விழா இந்த விழா என்று சொன்னால், இது அவருக்காக அல்ல; ஒரு கொள்கையைப் பின்பற்றுகிறவர்கள், அந்தக் கொள்கைக்காக தான் தன்னல மறுப்பை செய்வதற்குத் தயாராக இருக்கின்றபொழுது, நேர்மை யாக நடக்கின்றபொழுது, அந்தக் கொள்கைக்கு மரியாதை; அதைச் சார்ந்த இயக்கத்திற்கு மரியாதை; அவரை ஆளாக்கிய தலைமைக்கு மரியாதை என்பதை எடுத்துச் சொல்வதாகத் தான் விழா இருக்கிறது.

    இப்பொழுதெல்லாம் நூறாண்டு வாழ்வது ஒன்றும் கஷ்டமில்லை


    ஆகவே, அறிவுக்கரசு அவர்கள் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டு, அதற்குமேலே வாழவேண்டும். ஏனென்றால், இப் பொழுதெல்லாம் நூறாண்டு வாழ்வது ஒன்றும் கஷ்டமில்லை. காரணம், எல்லா உடல் உறுப்புகளையெல்லாம் மாற்றிக் கொண்டே இருக்கிறார்களே!
    பகவான் செயல், பகவான் செயல் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால், யாரும் பகவான் செயல் என்று சொல்லிக்கொண்டு, டாக்டரிடம் செல்லாமல் இல்லை.

    சங்கராச்சாரியாருக்குக்கூட ஸ்கேன் இயந்திரம் கொண்டு தான் உடலைப் பரிசோதனை செய்கிறார்கள்.


    ஆகவே, இப்பொழுதெல்லாம் மருத்துவத் துறை, அறி வியல் துறை வளர்ந்துகொண்டிருக்கிறது. ஆகவே, இப் பொழுதெல்லாம் இதயத்தையே மாற்றுகிறார்கள். எந்தப் பாகம் பழுதடைகிறதோ, அந்தப் பாகத்தை மாற்றுகிறார்கள்.


    ஓய்வு என்பது, அரசு பணிக்குத்தானே தவிர, தொண்டறத்திற்கு ஓய்வே கிடையாது


    எனவே, நீண்ட காலம் வாழுங்கள் என்று சொன்னால் மட்டும் போதாது; நீண்ட காலம் நல்ல உடல்நலத்தோடு வாழுங்கள். நல்ல உடல்நலத்தோடு வாழ்வது என்பது இருக் கிறதே, கட்டுப்பாடான வாழ்க்கை என்பது மட்டுமல்ல, இங்கே ஓய்வு பெற்ற நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன். ஓய்வு பெற்றுவிட்டோம் என்று வீட்டி லேயே இருந்தால், நமக்கு முதுமை அதிகமாகிக்கொண்டே இருக்கும். ஓய்வு என்பது, அரசு பணிக்குத்தானே தவிர, தொண் டறத்திற்கு ஓய்வே கிடையாது. அதைத்தான் அறிவுக்கரசு அவர்கள் மீசை  தெளிவாகத் தெரிவிக்கிறது. அதுதான் மிக முக்கியம்.

    அவருடைய கம்பீரம் மிகத் தெளிவாக இருக்கிறது. அவருடைய அழுத்தம் திருத்தமான உரைகள், எழுத்துகள் அதுதான் மிக முக்கியம்.


    ஓய்வு பெற்ற நண்பர்களுக்கும் நான் சொல்கிறேன், இங்கே நம்முடைய துணைத் தலைவர் சொல்லியதைப்போல, குழந் தையைக் கொண்டு போய் விடுவது; மிகவும் ஜாக்கிரதையாக இருக்கிறேன்; கீழே விழுந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறேன் என்றெல்லாம் நினைக்கவேண்டும். விழுந்தால், எழுந்து கொள்ளலாம்; அதையும் மீறி நமக்கு ஏதாவது ஊனம் ஏற் பட்டால், மருத்துவமனைகள் இருக்கிறது. உடனே அங்கே சென்று சரி செய்துகொள்ளலாம். இப்பொழுதுதான் எல்லா துறைகளிலும் வசதி இருக்கிறதே.


    எனவே, முதலில் துணிச்சலை இழக்காதீர்கள்; அந்தத் துணிச்சல் எப்பொழுது வரும் என்றால், பெரியாரை நீங்கள் துணைக் கொள்கின்ற நேரத்தில், உங்களுக்கு எல்லாத் துறை களிலும் துணிச்சல் வரும்.
    இங்கே நம்முடைய புகழேந்தி அவர்கள் கேட்டார், உங் களுக்கெல்லாம் வயது அதிகமானது போலவே தெரிய வில்லையே! என்று.
    வயது குறைவானவர்களைப் பாராட்டி பாராட்டி, நம்முடைய வயதைக் குறைத்துக் கொள்ளவேண்டும்!


    எப்படித் தெரியும்? நாங்கள் இளமையானவர்கள். நாங்கள் வயதானவர்கள் என்று எப்படி எங்களால் ஒப்புக்கொள்ள முடியும். எங்கள் தலைவருக்கு 95 வயது; இப்பொழுது கலைஞருக்கு 91 வயது; பேராசிரியருக்கு 92 வயது; எனக்கு இன்னும் அதைவிட வயது குறைச்சல்தானே. அப்பொழுது நான் இளைஞன் இல்லையா!  என்னைவிட அறிவுக்கரசு அவர்களுக்கு வயது குறைவு அல்லவா! இந்த விழாவிற்கு ஏன் வருகிறோம்? நம்மைவிட வயது குறைவானவர்களைப் பாராட்டி பாராட்டி, நம்முடைய வயதைக் குறைத்துக் கொள்ளவேண்டும், அதுதான் மிக முக்கியம்.


    ஆகவே, அந்த வகையில், இன்றைக்கு ஒரு அற்புதமான ஒரு விழாவாகும். அதேநேரத்தில்,  அறிவுக்கரசு போன்றவர்கள் மற்ற நம்முடைய தோழர்களுடைய பணி இன்னும் அதிகமாகத் தேவைப்படுகின்ற காலகட்டம் இது.

    பெரியாருடைய காலத்தில் இருந்த எதிரிகள் நாணயமான எதிரிகள்; ஆனால், நம்முடைய காலத்தில் இருக்கின்ற எதிரிகள் நாணயமான எதிரிகளல்ல; சூழ்ச்சி மிகுந்த எதிரிகள். அதுதான் மிக முக்கியம். எவ்வளவு சூழ்ச்சி என்கிறீர்கள்; எதையெல்லாம் நாம் செய்தோமோ, இன்றைக்கு அதையெல்லாம் புதிதாக எடுத்துக்கொண்டு வருகிறார்கள். நம்மாள்கள் சுலபமாக ஏமாந்து போகிறார்கள்; குடுகுடுப்பையைக் காட்டினால் ஏமாறு கிற குழந்தைகள்போல. மயக்க பிஸ்கட்டை காட்டி ஏமாற்றுவது போல, இன்றைக்கு தமிழக மக்கள் ஏமாந்துகொண்டிருக்கிறார்கள்.
    வடக்கே இருந்து அதற்காகத்தானே வருகிறார்கள். இங்கே உரையாற்றிய தோழர் தனசேகரன் அவர்கள் சொன்னாரே, இன்றைக்கு நம் முன்னால், மதச்சார்பின்மை, ஜாதி ஒழிப்பு, சமதர்மம், சமூகநீதி இவை அத்தனைக்கும் மிகப்பெரிய அளவில் கேடு சூழ்கிறதே!


    இன்று காலையில் ஒரு செய்தி நாளேடுகளில் வெளி வந்துள்ளதே, எவ்வளவு சந்தோசமாக அந்தச் செய்தியை பார்ப்பன ஏடுகள் வெளியிட்டிருக்கிறதே!
    ஜாதி அடிப்படையில் இனிமேல் கணக்கெடுப்பு கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு என்று போட்டிருக்கிறார்கள். தீர்ப்பா அது? இடைக்கால தடையை நீக்கியிருக்கிறார்கள். அறிவு இருக்கிறவர்களுக்குத் தெரியவேண்டாமா? இடைக்கால தடை வேறு! இன்ட்ரீம் ஸ்டே! வழக்குரைஞர்கள் இங்கே இருக்கிறார்கள்.


    நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கக்கூடிய நிலை இருந்ததா, 30 நாள்களுக்கு முன்பு!

    ஒரு வழக்கில் இடைக்கால தடை; வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. உச்சநீதிமன்றத்தில் இடைக்கால தடை வந்தது என்று சொன்னால், நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும். எல்லா தீர்ப்புக்கும், அதேமாதிரி அந்தத் தீர்ப்பை வரவேற்று இருக்கிறீர்களா? நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கக் கூடிய நிலை இருந்ததா, 30 நாள்களுக்கு முன்பு.


    ஒடுக்கப்பட்ட சமுதாயம் இன்றைக்குத் தலைநிமிர்ந்து வருகிறது. அதில் என்ன தவறு இருக்கிறது.


    மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்பொழுது, நம்மாள்களில் இளைஞர்களுக்கே தெரியாது. ஏங்க, ஜாதி கூடாது என்று சொல்லும்பொழுது, பிறகு ஏன் நாம் ஜாதியைப் போட வேண்டும் என்று சொன்னால், பிற்படுத்தப்பட்டவன், தாழ்த்தப் பட்டவன், பழங்குடியினர் இவர்களை அடையாளம் காண வேண்டுமானால், எப்படி அடையாளம் காண முடியும்.

    பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால், இந்த இயக்கம் மட்டும் இல்லையானால்...

    நீதிமன்றத்திற்குச் சென்று, 69 சதவிகித இட ஒதுக்கீட்டினை நிலைநாட்டினோம். இன்றைக்கு நம் பிள்ளைகளில் நிறைய பேர் முத்தன் மகன் முனியன், சுப்பன் மகன் குப்பன் இவர்கள் அத் தனை பேரும் ஆஸ்திரேலியாவில், நியூசிலாந்தில், அமெரிக் காவில், பின்லாந்தில் இன்னும் மற்ற மற்ற நாடுகளில் இருக் கிறார்கள் என்றால், இவையெல்லாம் சத்ய சாய்பாபா கைகளைத் தூக்கியதால், பொத்தென்று கீழே விழுந்த விஷயமா? வேறு ஏதாவது அற்புதம் நிகழ்ந்ததா? அது எப்படி நிகழ்ந்தது?
    பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால், இந்த இயக்கம் மட்டும் இல்லையானால், கறுப்புச் சட்டைக்காரனுடைய தியாகம் மட்டும் இல்லையானால், குலக்கல்வித் திட்டம் நீடித்திருக்குமானால், இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் யாராவது பொறியாளர்களாக, மருத்துவர்களாக, மற்ற மற்ற துறைகளில் வந்திருக்க முடியுமா?


    சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டும்தான் மருத்துவர்களாக முடியும் என்கிற நிலை இருந்ததே, நீதிக்கட்சி அதனை எதிர்த்து தொடர்ந்து போராடி, சுப்பராயலு ரெட்டியார் அவர்களுடைய காலகட்டம் முடிந்து பெரியார் அவர்கள் சொல்லி, நம்முடைய ஊரைச் சார்ந்த முதன் முதலாக  நீதிக்கட்சியினுடைய ஒரு பிரதமர் அன்றைக்கு முதல்வர் என்று அழைப்பதில்லை, பிரதமர் என்றுதான் அழைப்பார்கள்.  பனகல் அரசர் வந்த நேரத்தில்தான், மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு சமஸ் கிருதம் தெரிந்திருக்கவேண்டும் என்ற நிலையை ஒழித்தார்கள்.


    இன்றைக்குள்ள எத்தனை மருத்துவர்களுக்கு இந்த பழைய வரலாறு தெரியும். இந்த இயக்கம் பாடுபட்டதினால்தான் அந்தக் கதவு திறந்தது என்று தெரியுமா?


    எந்தெந்த ஜாதிக்கு எவ்வளவு சதவிகித இட ஒதுக்கீடு?


    இன்றைக்கு அது வளர்ந்து, 69 சதவிகித இட ஒதுக்கீட்டினை காப்பாற்றினால், நீதிமன்றத்தில் கேட்கிறார்கள், 69 சதவிகி தத்தை நீங்கள் எப்படி வைத்தீர்கள்? கணக்கு வைத்திருக்கிறீர் களா? எந்தெந்த ஜாதிக்கு எவ்வளவு சதவிகித இட ஒதுக்கீடு? கொடுப்பீர்கள்.


    ஏற்கெனவே கணக்கெடுப்பில் ஜாதி அடிப்படையை கடைப்பிடிக்கவில்லை. கொள்கை ரீதியாக நாம் போராடி ஒரு முடிவெடுத்தோம். எப்படி அம்மை நோய்க்கு, அம்மைக் கிருமியைச் செலுத்தியே, அந்த அம்மையை ஒழிப்பதுபோல, உள்ளே இருக்கிற நோய்க் கிருமியை வைத்தே அதை ஒழிப்பது மாதிரி அந்தப் பணியை செய்திருக்கிறோம். இதை விளக்கு வதற்கு ஒரு அறிவு தேவை. புரிந்துகொள்வதற்கு அதைவிட அதிகம் அறிவு தேவை.
    ஆகவே, அதனை எடுத்துச் சொல்கின்ற நேரத்தில், உச்சநீதிமன்றத்தில் கேட்கிறார்கள், எப்படி நீங்கள் இவ்வளவு தூரத்திற்கு வந்தீர்கள் என்று? கணக்குப் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்கிறார்கள்.


    எல்லாக் கட்சித் தலைவர்களும் சேர்ந்து ஒரு கொள்கை முடிவு எடுத்தார்கள்
    உடனே, நாடாளுமன்றத்தில் எல்லாக் கட்சித் தலைவர் களும் சேர்ந்து, பி.ஜே.பி. உள்பட கொள்கை முடிவு எடுத்தார் கள். அந்தக் கொள்கை முடிவு என்ன தெரியுமா? ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை! எதற்காக? ஜாதியை நிலைநாட்டுவ தற்காக அல்ல.

    ஜாதியைப் பார்க்காமல் இருப்பீர்களா நீங்கள்? இந்தக் கணக்கெடுப்பின்மூலமாகத்தான் ஜாதி உண்டாயிற்றா? வைதீகன் முதுகில் பூணூல் இருக்கிறது; என் முதுகு வெறும் முதுகாக இருக்கிறது. அப்புறம் எப்படி இரண்டு முதுகும் ஒன்றாக இருக்க முடியும்?


    நீங்கள்தான் வித்தியாசப்படுத்துகிறீர்கள் என்று சொன்னார் ஒரு பார்ப்பன வழக்குரைஞர், திருச்சியில் ஒரு வழக்கிற்காக நீதிமன்றத்திற்குச் சென்றிருந்த பொழுது, பேச்சுவாக்கில்.


    சோ என்னை பேட்டி கண்டபொழுது ஒருமுறை சொன்னார், நமக்குள் ஏன் வித்தியாசப்படுத்துகிறீர்கள் என்று.


    இல்லீங்க, நீங்க முதலில் சட்டையைக் கழற்றுங்கள் என்று சொன்னேன்.
    என்னய்யா, சொல்கிறீர்கள் என்று கேட்டார்.


    சண்டை போடுவதற்கு அல்ல; இரண்டு பேரும் சட்டையைக் கழற்றுவோம். இரண்டு பேருடைய முதுகையும் பார்ப்போம். என் முதுகுபோல உங்கள் முதுகு இருக்கிறதா என்று பார்ப்போம். எதற்காக உங்கள் முதுகில் நூல் தொங்குகிறது? என்னுடைய முதுகு ஏன் வெறும் முதுகாக இருக்கிறது. எதற்காக நூலை போட்டுக் கொண்டீர்கள்?

    சங்கராச்சாரியார் ஒப்புக்கொள்வாரா?


    பகவான் உண்டாக்கினான் என்றால், அவன் உண்டாக்கும்பொழுதே, மூக்கை வைத்தான், காதை வைத்தான், நூலையும் சேர்த்து வைத்திருப்பான் அல்லவா? அப்படி இல்லாமல், நீங்கள் மட்டும் தனியா ஆவணி அவிட்டம் - பூணூல் விழா நடத்துகிறீர்கள் என்று கேட்டேன்.


    உடனே அவர், ஏங்க, நீங்களும் பூணூல் போட்டுக் கொள்ளுங்களேன் என்றார்.
    நான் பூணூல் போடுவதைப்பற்றி நீங்கள் சொன்னால் மட்டும் போதாது, சங்கராச்சாரியார் ஒப்புக்கொள்வாரா? என்று கேளுங்கள் என்றேன்.


    எல்லாருக்கும் பூணூல் போட்டுக்கொண்டால் வசதிதானே என்றார்.


    நான் உடனே, அது மிகவும் கஷ்டம்; நூல் விலை ஏறிப் போய்விடும் என்றேன்.


    3 பேர் பூணூல்களை கழற்றி வைத்துவிட்டால்...

    97 பேர் உங்களைப் பார்த்து பூணூல் போடுவதைவிட, 3 பேர் பூணூல்களை கழற்றி வைத்துவிட்டால், நம் முதுகெல்லாம் ஒரே முதுகாக மாறிவிடும் அல்லவா என்றேன்.


    அதற்கு அவர் பதில் சொல்லவில்லை. அடுத்த கேள்விக்குச் சென்றுவிட்டார்.
    எதற்காக இதனை எடுத்துச் சொல்கிறேன் என்று சொன்னால், இன்றைக்குக் காலையில் பார்ப்பனப் பத்திரிகைகள் மகிழ்ச்சியாக செய்தி போடுகிறார்கள். ஜாதிவாரி கணக்கெடுப்புப்பற்றி தீர்ப்பு என்று.
    ஜாதியை நாம்தான் உண்டாக்கியதுபோல; வாரந்தோறும் வருகின்ற அந்த நாளிதழ்களில் வருகின்ற செய்தியைப் பாருங்கள்; மணமகள், மணமகன் தேவை பகுதியில் என்ன போடுகிறார்கள் என்று.


    கவுரவக் கொலை


    இப்பொழுது புதிதாக ஒரு வார்த்தையைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் கவுரவக் கொலை என்று.  கொலையிலேயே கவுரவக் கொலை. தன் ஜாதியில் காதல் செய்யாமல், வேறு ஜாதியில் காதல் செய்தால் கவுரவக் கொலையாம். கொலையிலே புதுக்கொலையாம் கவுரவக் கொலையாம். இவனுடைய கவுரவம் ஜாதியில்தான் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கிறதா? நன்றாக நினைத்துப் பாருங்கள் நீங்கள்.


    ஜாதியை ஒழிக்கின்ற நாம், ஜாதியை அடையாளப் படுத்தவேண்டும்; எதற்காக, சமூகநீதிக்காக மட்டும் என்று நாம் தெளிவாகச் சொல்கிறோம்.
    ஜாதியை அடையாளப்படுத்தினால்தானே, காலங்காலமாக பிற்படுத்தப்பட்டு, தாழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு இருந்தவர் களுக்குத் தெரியும். தாழ்த்தப்பட்டவன் அதைவிட முக்கியமாக சக்கிலியர், அருந்ததியர் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டை கொடுக்கவேண்டும் என்றால், அந்தப் பிரிவை பிரித்துப் பார்த்தால்தானே இட ஒதுக்கீட்டை கொடுக்க முடியும். இல்லையென்றால், இட ஒதுக்கீட்டை எப்படி கொடுக்க முடியும்?
    கால் எலும்பு உடைந்துவிட்டது; அதைக் கண்டுபிடிப்பதற்காக எக்ஸ்ரே எடுக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்; அநியாயம், அநியாயம் உடைந்துபோன எலும்பை பிரச்சாரம் செய் கிறார்களே என்று சொன்னால், என்ன அர்த்தம்?


    சமூகநீதிப் போராளிகள் களத்தில் தேவைப்படுகிறார்கள்
    ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது, உடைந்த பாகத்திற்கு எக்ஸ்ரே எடுப்பதுபோன்று தேவை. அது சிகிச்சைக்காக செய்யப்படுகிறதே தவிர, வேறு ஒன்றும் இல்லை. அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

     இவையெல்லாவற்றையும் எடுத்துச் சொல்வதற்கு அறிவுக்கரசுகள் தேவைப்படுகிறார்கள். இவையெல்லாவற்றையும் எடுத்துச் சொல்வதற்கு கறுப்புச் சட்டைகள் தேவைப்படுகிறார்கள். இவையெல்லாவற்றையும் எடுத்துச் சொல்வதற்கு சமூகநீதிப் போராளிகள் களத்தில் தேவைப்படுகிறார்கள்.


    இப்பொழுது புதிது புதிதாக கொண்டு வருகிறார்கள். திடீரென்று ராஜேந்திர சோழன்மீது பக்தி வந்துவிட்டது வடக்கே இருந்து வந்தவர்களுக்கு. ஆர்.எஸ்.எஸ்சுக்கு. ராஜேந்திர சோழனின் ஆயிரமாமாண்டு விழாவினை கொண்டாடுங்கள் என்று. ஏன்? நம்மூரில் உள்ள கோவிலில் பார்ப்பானுக்கு மட்டும் பணி கொடுத்ததால், அவனைக் கொண்டாடச் சொல்கிறார்கள்.


    பெரியார் தந்த புத்தி இருப்பதால், ஒருபோதும் நாங்கள் ஏமாறமாட்டோம்


    கடாரத்தை வென்றான் என்று வெளியில் சொன்னவுடன், நம்மாள் உடனே புரியாமல், நம் சோழனை ஆர்.எஸ்.எஸ்.காரர்களே பாராட்டச் சொல்லிவிட்டார்கள் என்று ஏமாறுவதா? எங்கள் சொந்த புத்தி இருந்தால் நாங்கள் ஏமாந்து போவோம்; பெரியார் தந்த புத்தி இருப்பதால், ஒருபோதும் நாங்கள் ஏமாறமாட்டோம். இந்த இயக்கம் அந்தப் பணியை செய்யும்.
    கடாரத்தை வென்றான், கங்கையைக் கொண்டு வந்து கங்கைகொண்ட சோழபுரத்தை அமைத்தான் அந்தப் பெருமைக்காக நாங்கள் பாராட்டுகிறோம் என்று சொல்லி ஏமாற்றினால், அதைவிட கனகவிசயர் தலையில், கல்லைத் தூக்கிக் கொண்டு வந்தானே, சேரன் செங்குட்டுவன் அவனுக்கு அல்லவா விழா எடுக்கவேண்டும்? ஆர்.எஸ்.எஸ். அவனுக்கு விழா எடுக்கத் தயாரா?
    அதுமட்டுமல்ல, நெடுஞ்சேரலாதன், நேரே இமயத்தில் கொடி பதித்தான் என்று இருக்கிறதே, அவனுக்கு விழா எடுக்கத் தயாரா?


    இவர்களுக்கெல்லாம் விழா எடுக்காமல், ஏன் ராஜேந்திர சோழனுக்கு மட்டும் விழா எடுக்கிறார்கள். காரணம் என்ன? அவன்தான் கோவில் கட்டிக்கொடுத்து, பார்ப்பான் கொள்ளை அடிப்பதற்கு வசதி செய்து கொடுத்தான்.
    இதைத்தானே பெரியார் சொன்னார், பெரியாருடைய கண் ணாடியைப் போட்டுப் பார்த்தால்தான், அது நுண்ணாடிக்குமேல் சக்தி வாய்ந்தது; ஆகவேதான், கிருமிகள் எங்கே நெளிகின்றன என்று தெரியும்.
    எனவே, இந்த இயக்கம் தேவை! இந்த இயக்கம் சிறப்பாக இருப்பதற்கு, அறிவுக்கரசு போன்ற ஆயிரம் ஆயிரம் தளபதிகள் தேவை.


    தன்னை மாற்றிக் கொள்வது மட்டுமல்ல, சமுதாயத்தை மாற்றுவதற்கும்...


    எனவே, இந்த விழா அவருக்காக மட்டுமல்ல; இந்தக் கொள்கைக்கு ஏற்பட்ட சவால்களைச் சந்திக்கின்ற அறைகூவல்களைச் சந்திக்கக்கூடிய - அவைகளைத் தாண்டி, ஆயிரம் எதிர்ப்புகள் இருந்தாலும், தடைகள் ஆயிரம் இருந்தாலும், அதைத் தாண்டி வெற்றி பெறுவோம் என்று காட்டக்கூடிய தடந்தோள்கள் உண்டு என்று சொல்லக்கூடிய ஒரு அற்புதமான பாசறை வீரர்களுடைய அறிவிப்பு இந்த நிகழ்ச்சி என்று கூறிக்கொண்டு, வந்திருக்கின்ற அனைவருக்கும் நன்றி என்று சொல்லி, அறிவுக்கரசு அவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றுவார் என்று நினைக்கின்றேன். எனவே, தன்னை மாற்றிக் கொள்வது மட்டுமல்ல, சமுதாயத்தை மாற்றுவதற்கும் அவர் தன்னுடைய பணியை தொடர் பணியாகச் செய்யவேண்டும். நாமெல்லாம் ஒத்துழைப்புக் கொடுப்போம் என்று சொல்லி, இப்பொழுது இருப்பதைப் போன்ற மிகப்பெரிய அறைகூவல் எப்பொழுதும் கிடையாது

    இயக்கத் தோழர்களே, இளைஞர்களை உற்பத்தி செய்யுங்கள்; இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். இப்பொழுது இருப்பதைப் போன்ற மிகப்பெரிய அறைகூவல் எப்பொழுதும் கிடையாது. எனவே, மிகப்பெரிய திருப்பத்தில் நாம் இருக்கிறோம். இந்தக் காலகட்டத்தில், இந்தக் கொள்கைக்கு ஏற்பட்டிருக்கின்ற மிகப்பெரிய சோதனைகளை நாம் சந்தித்தாகவேண்டும் என்று சொல்லி வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்!
    வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!


    - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.


                                         --------------------------------"விடுதலை” 17-12-2014

    Read more: http://viduthalai.in/page-4/93006.html#ixzz3M9plSCpj

    25.12.14

    வாஜ்பேயிக்குப் பாரத ரத்னா பட்டமா?நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது?



    டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினம் என்பது உலகம் அறிந்த ஒன்று; அந்த நாளில் வாஜ்பேயி பிறந்த நாள், மதன்மோகன் மாளவியா பிறந்த நாள் என்று கூறி பள்ளிகளில் போட்டி நடத்துவதாக அறிவித்ததே அசல் குறும்புத்தனமும், விஷமத்தனமும் ஆகும்.

    இந்த இருவரும் யார்? அடிப்படையில் இந்துத்துவா வாதிகள் தானே! அப்படி இருக்கும் பொழுது இவர்களின் பிறந்த நாளில் அரசு அறிக்கை பூர்வமாக அறிவித்துப் போட்டிகள் நடத்துவதே அடிப்படையில் தவறாகும்.
    இன்னும் ஒருபடி சென்று வாஜ்பேயிக்குப் பாரத ரத்னா அளிப்பதை அவரின் பிறந்த நாளான டிசம்பர் 25இல் அறிவிக்கப் போவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

    பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக அமைக்கப்பட்ட லிபரான் ஆணையத்தின் குற்றவாளிகள் பட்டியலில் வாஜ்பேயும் சேர்க்கப்பட்டுள்ளார் என்கிறபோது, எப்படி மிகப் பெரிய விருதுகளுக்கு பரிந்துரை செய்ய முடியும்? இது சட்ட விரோதமான அடிப்படைத் தவறான குற்றம் அல்லவா!


    பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் லக்னோவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இதே அடல் பிஹாரி வாஜ்பேயி என்ன பேசினார்?


    நாளை அயோத்தியில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கூரிய கற்களின்மீது அமர்ந்து கொண்டு பக்திப் பாடல்களைப் பாட முடியாது. 
    மண்ணைச் சமன்படுத்தி அமர்வதற்கு ஏற்றபடி சமன் செய்ய வேண்டும் என்று பேசிடவில்லையா? இதன் பொருள் என்ன என்று தெரிந்து கொள்வதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது. பாபர் மசூதி இடித்துத் தரை மட்டமாக்கிச் சமன்படுத்துவதைத்தான் - அதற்கு முதல் நாள் இப்படிப் பேசுகிறார் என்றால் - இவர் எப்படிப்பட்ட பெரிய மனிதர் என்பதைத் தெரிந்து கொள்ளலாமே! 

    இதுபற்றி அவுட் லுக் ஏடு அவரையே பேட்டி கண்டு கேட்டபோது லக்னோவில் நான் அவ்வாறு பேசியது உண்மைதான்; அது நகைச் சுவைக்காகக் கூறப்பட்டது என்று வாஜ்பேயி சொல்ல வில்லையா?


    இன்னொரு மதக்காரர்களின் வழி பாட்டு நிலையத்தை அடித்து நொறுக்குவதை ஜாடையாகப் பேசுவது நகைச் சுவைத் துணுக்கா? அப்படி என்றால் இந்தப் பெரிய மனிதனின் உள்ளம் எவ்வளவுக் குரூரமானது!

    குஜராத்தில் நரேந்திரமோடி முதல் அமைச்சராக விருந்த போது அரச பயங்கரவாதமாக சிறுபான்மை யினரை வேட்டையாடியபோது அன்றையக் குடியரசுத் தலைவர்  கே.ஆர். நாராயணன் அவர்கள் பிரதமர் வாஜ் பாயைத் தொடர்பு கொண்டு, குஜராத்துக்கு இராணுவத்தை அனுப்பி, கலவரத்தைத் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நிலையிலும், வாஜ்பேயி சற்றும் பொருட்படுத்த வில்லை; அசைந்து கொடுக்கவில்லை என்பதிலிருந்து அவர்தம் ராஜதர்மம் எத்தனைக் கேரட் என்பது சோகையாக வெளுத்துவிடவில்லையா?


    அடிப்படையில் அவரும் இந்துத்துவா வெறியில் யாருக்கும் சளைத்தவரல்ல என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக்  கூறிக் கொண்டே போகலாம்.


    பிரதமராக இருந்த நிலையில், அமெரிக்காவுக்குப் பயணம் செய்த  அடல் பிஹாரி வாஜ்பேயி அங்கு ஸ்டேட்டன் தீவில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநாட்டில் பேசியது நினைவில் இருக்கிறதா?


    ஆர்.எஸ்.எஸில்  இருப்பதற்கு நான் பெருமைப்படு கிறேன். இப்பொழுது எங்கள் ஆட்சிக்குப் பெரும்பான் மையில்லை, பெரும்பான்மையிருந்தால் கண்டிப்பாக அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயிலைக் கட்டுவோம் என்று பேசினாரா இல்லையா?


    இத்தகைய ஒருவருக்குத்தான் பாரத ரத்னா பட்டமா? நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? மேலும் அவர் அடிப்படை இந்துத்துவாவாதி என்று உறுதிபடுத்துவதற்கு அவர்களின் அதிகாரப் பூர்வ ஏடான ஆர்கனைசரில் (7.5.1995) அவர் எழுதிய கட்டுரை ஒன்றே சரியான - கெட்டியான சாட்சியமாகும்.


    ஆர்.எஸ்.எஸ். என் ஆன்மா என்பது அக்கட்டு ரையின் தலைப்பாகும்.


    முஸ்லீம்களை வழிக்குக் கொண்டுவர மூன்று வழி களை அதில் கூறுகின்றார். 

    1) இந்துக்களை அணி திரட்ட வேண்டும் (Organising)

    2) முஸ்லீம்களை உட்கொள்ளுவது (Assimilation) இதன் பொருள்: முஸ்லிம்களுக்கென்று உள்ள அடை யாளத்தை அழித்து அவர்களை இந்துமயமாக்குதல்.


    3) முஸ்லிம்களை உட்கொள்ளுவது என்றால் - அதனைச் செயல்படுத்த மூன்று வழிகளை அக்கட்டுரை யில் குறிப்பிட்டுள்ளார்.


    1) முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால் இந்நாட்டு குடி மக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும். அதாவது விரட்டி விட வேண்டும்.


    2) முஸ்லிம்களை நமது வழிக்கு கொண்டு வர சலுகைகள், இலஞ்சங்கள் தருதல் - இது காங்கிரஸின் அணுகுமுறை


    3) முஸ்லிம்களை நமக்கு ஏற்றவாறு மாற்றி நம்முள் உட்கொள்ளுதல். இம்மூன்று வழிகளில் மூன்றாவதுதான் நம் வழி என்று எழுதியுள்ளார் வாஜ்பேயி.


    இது எவ்வளவு பெரிய ஆணவமும், அச்சுறுத்தலும்  - அடக்கு முறையும் மதச் சார்பின்மைக்கு விரோதமும் ஆகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.


    குஜராத்தில் டாங்கல் மாவட்டத்தில் கிறித்தவர்களுக்கு எதிராக முதல் அமைச்சர் நரேந்திரமோடி ஆட்சியின் போது கலவரம் தூண்டப்பட்டது; வழிபாட்டு நிலையங் களை நொறுக்கித் தள்ளினார்கள்  - எரித்தனர்!   அந்தக் கால கட்டத்தில் அங்குப் பார்வையிடச் சென்ற பிரதமர் வாஜ்பேயி திருவாய் மலர்ந்தது என்ன தெரியுமா?


    மத மாற்றம்பற்றி தேசிய விவாதம் தேவை! என்றாரே பார்க்கலாம்; எரியும் எண்ணெயில் நெய்யைக் கொட்டுவது என்பார்களே, அது இதுதான் இன்னும் இவரைப்பற்றி எழுதிட வண்டி வண்டியாக வண்ட வாளங்கள் ஏராளமாக உள்ளன.  இத்தகு ஒருவருக்குப் பாரத ரத்னா பட்டமா? இதனை எப்படி அனுமதிக்க முடியும்? இத்தகைய மத அடிப்படைவாதியின் பிறந்த நாளை கல்விநிறுவனங்களில் கொண்டாட அனுமதிக் கலாமா? என்பது முக்கியமான கேள்வியாகும்.


    சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்றால் வாஜ் பேயி மாத்திரம் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா?


    கூட்டத்தோடு கோவிந்தா போடாமல் சரியாகச் சிந்திக்க மக்கள் தயாரானால் தான் சட்ட விரோத, நியாய விரோத செயல்கள் தடைப்படும் - எச்சரிக்கை!

                          ----------------------------”விடுதலை” தலையங்கம் 22-12- 2014