Search This Blog

25.10.13

மோடி உருவாக்கியதாகக் காட்டும் மோசடி!

சீனாவில் உள்ள பேருந்து நிலையத்தை அகமதாபாத்தில் மோடி உருவாக்கியதாகக் காட்டும் மோசடி!
மோடியின் பித்தலாட்டத்தைத் தோலுரித்துக் காட்டினார் பேராசிரியர் சுப.வீ.
 
சென்னை, அக். 24- சீனாவில் ஷாங்காங்கில் நவீன முறையில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை மோடி, குஜராத் மாநிலம், அகமதா பாத்தில் கட்டியிருப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்வதை தோலுரித்துக் காட்டினார் பேராசிரியர் சுப.வீர பாண்டியன்.

சென்னை பெரியார் திடலில் 22.10.2013 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:-

ஊரில் எல்லோரும் சட்டசபைத் தேர்தலைப் பற்றிப் பேசிக் கொண் டிருக்கும் இந்த நேரத்தில் சென்னை - பெரியார் திடலில் திராவிடர் கழகத் தின் சார்பில் ஜாதிய சக்திகள், மதவாத சக்திகளைப் பற்றிப் பேசிக் கொண் டிருக்கிறோம்.
தாழ்த்தப்பட்டவர்களை எதிர்ப் பது, காதல் திருமணத்தை எதிர்ப்பது என்பது ஜாதிய கட்சிக் கூட்டணி யின் கருத்து.

மதவாத கட்சியின் நோக்கம்

மதவாதக் கூட்டணிகளுக்கு இரு கொள்கைகள். ஒன்று சிறுபான்மை யினர் எதிர்ப்பு - இன்னொன்று மதச் சார்பின்மை எதிர்ப்பு!

நாடகக் காதல் என்ற புதுவார்த் தைகளை அறிமுகப்படுத்தியுள்ளார் கள். இளைஞர்கள் இருக்கும் வரை காதலும் இருக்கும். காதலை எதிர்க்க முடியாது. காதலை எதிர்க்கும் சினிமா கூட தமிழ்நாட்டில் ஓடுவதில்லை - திரைக்கு வந்த வேகத்தில் காணாமல் போய்விடுகிறது.

ஜப்பான் நாட்டில் காதலுக்காகவே 17 இதழ்கள் வெளிவருகின்றன.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்

அடுத்து வன்கொடுமை தடுப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற ஒன்றை ஜாதி கூட்டணிக்காரர்கள் முன் வைத்துள்ளனர்.

இந்தச் சட்டத்தை மேலும் வலு உள்ளதாக ஆக்க வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை. இந்தச் சட்டத் தின்மூலம் வெறும் 2 சதவிகிதம் பேர் தான் தண்டிக்கப்படுகின்றனர். அந்த ஓட்டை சரி செய்யப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்.

இந்தச் சட்டத்தைத் திருத்துவதோ, மாற்றுவதோ மாநில அரசின் கையில் இல்லை. மத்திய அரசுதான் அதனைச் செய்யவேண்டும். திராவிட இயக்க எதிர்ப்பை முன் வைக்கிறார்கள். திராவிடர் என்றால் - தமிழ் நாட்டில் பார்ப்பனர் எதிர்ப்பு என்பதன் குறியீடு!

யாரை ஆதரிப்பது - யாரை எதிர்ப்பது!

யார் ஆதிக்கம் செலுத்துகிறார் களோ அவர்களை எதிர்ப்பது - யார் ஒடுக்கப்பட்டு இருக்கிறார்களோ, அவர்களை ஆதரிப்பது என்பது நமது கொள்கை. முதலில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மோடி திருச்சி வந்தார். எந்தக் கொள்கையைப் பிரகடனம் செய்தார்? தி.மு.க. - அஇஅதிமுக மீது ஏன் எந்த வித விமர்சனத்தையும் அவர் வைக்க வில்லை?

மொழிவாரி மாநிலமே கூடாதாம்!

அங்கு என்னதான் பேசினார்? மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்தது தவறு என்கிறார். இந்தியா ஒரே நாடு, ஒரே பண்பாடு என்கிறார். கேரளாவிலும் வங்காளத்திலும் ஒரே பண்பாடு தான் நிலவுகிறதா?

நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், தான் எழுதிய நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. அந்தத் தன்மை, சிறப்பு அழிக்கப் பட்டால், இந்தியா முழுமையும் கல வரங்கள் நடக்கும் என்று குறிப் பிட்டுள்ளாரே!

1926இல் வங்காளத்தில் முஸ்லீம் கள் வாங்கு சத்தம் கூடாது என்று தடை போட்டதால் பெரும் கலவரம் ஏற்படவில்லையா?

மோடியை பற்றி மிகப் பெரிய அளவில் விளம்பரம் செய்யகிறார்கள். கோயபெல்ஸ் பிரச்சாரம்.

மோடி பெரிய சாதனையாளர் என்று ஒரு படத்தை வெளியிடுகிறார்கள்.
பார்ப்பதற்கு ஆச்சரியப்படும் அள வுக்கு உருவாக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் - அகமதாபாத்தில் மோடி உருவாக்கியிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

முகநூலில் நமது தம்பிகள் தேடி - அது சீனாவில். ஷாங்காங் நகரில் உள்ள பேருந்து நிலையம் என்று கண்டுபிடித்து வெளியிட்டு விட்டனர். மோடி என்றாலே மோசடி - மோடி மஸ்தான் பேர்வழி என்பதை உணர வேண்டும். இணைய தளங்களில் நம் இளை ஞர்கள் இப்பொழுதுதான் நுழைய ஆரம்பித்துள்ளன.ர் பெரியார் வலை தளம் ஒரு துவக்கத்தைக் கொடுத்தது 40 ஆயிரம் இளைஞர்கள் இப்பொழுது திமுக இணைய தளத்தில் இணைந்து உள்ளனர் என்பது நல்ல செய்தி.

பொய்யைப் பரப்பியே ஆட்சி யைப் பிடித்து விடலாம் என்று மனப் பால் குடிக்கிறார்கள்.

காவிகளின் ஜம்பம் கருஞ்சட்டைகளிடம் பலிக்காது

காவிகளின் ஜம்பம் தமிழ்நாட்டில் எடுபடாது. அவர்களைச் சந்திக்கும் சக்தி கருஞ்சட்டைப் பட்டாளத்துக் குத்தான் உண்டு.

தேநீர்க் கடையில் வேலை பார்த்து, அதற்குப் பின் சைக்கிள் கடையில் வேலை பார்த்த ஆசாமி ஒருவர். குறுக்கு வழியில் பணம் சேர்க்க பெரிய மனுசனாக ஒரு வழி சாமியார் ஆவது தான், ஆசிரமம் அமைப்பதுதான் என்று முடிவு செய்து மத்தியப் பிரதே சத்தில் ஆசிரமம் ஒன்றை ஆரம் பித்தார் ஆசாராம்.
இன்றைக்கு அவருக்கு இருக்கும் சொத்து 5000 கோடி ரூபாய்; இந்தியா முழுமையும் 426 ஆசிரமங்கள் 1400 யோகா நிலையங்கள்.

புலால் உண்டால், காமக் கிளர்ச்சி ஏற்படும் என்று கீதோபதேசம் செய் கிறார். அப்படி சொன்னவர்தான், ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறை செய்த வழக்கில் சிறைக்குள் இருக் கிறார்.

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தேவை!

மும்பையிலே நரேந்திர தபோல்கர் சமூக சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட் டுக் கொண்டிருந்தார். இரு இந்துத் துவாவாதிகள் அவரைச் சுட்டுக் கொன்று இருக்கின்றனர். அதற்குப் பின் அங்கு ஒரு சட்டம், மூடநம் பிக்கை ஒழிப்புச் சட்டம் இயற்றப் பட்டுள்ளது. 2005இல் முன்மொழியப்பட்டது.

2013இல்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுவும் ஒரு சமூக சீர்திருத்தவாதியின் உயிரை இந்துத்துவாவாதிகள் குடித்த பிறகு தான் இது நிறைவேற்றப்படு வது. இதுபோன்ற ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். எது எதற்கெல் லாமோ அவசரச் சட்டம் கொண்டு வருபவர்கள், இந்த அவசிய மான அவசரமான தேவைக்கு ஓர் அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறினார்.
                    ------------------------"”விடுதலை” 24-10-2013

24.10.13

இந்து முஸ்லீம் பற்றி பெரியார்

இந்து முஸ்லீம்

இந்த நாட்டில், இந்துக்கள், முஸ்லீம்கள் என்கின்ற இரண்டு சமூகங் களும் பெரும்பான்மையான மக்கள் எண்ணிக்கையுடைய சமூகங்களாகும். ஆனால் அவை இரண்டும் தங்கள் தங்களது நடை உடை ஆச்சாரம் அனுஷ் டானம் ஆகியவைகளில் ஒன்றுக்கொன்று நேர் விரோதமான சமூகங்கள் என்பதோடு உண்மையைப் பேச வேண்டுமானால் இவ்விரு சமூகங்களும் அரசியலிலும் மத விஷயத்திலும் ஒவ்வொருவருடைய இலக்ஷியங்க ளிலுங்கூட வேறுபட்ட தென்று சொல்லும்படியான சமூகங்களாகும்.

உதாரணமாக நடை உடை ஆசார அனுஷ்டானங்களிலுள்ள மாறு பாட்டைப் பற்றி நாம் யாருக்கும் எதுவும் எடுத்துச் சொல்ல வேண்டிய தில்லை என்று கருதினாலும், அரசியல் மத இயல் இலட்சியங்களில் இருவரும் வேறுபட்டவர்கள் என்பதில் சிலருக்காவது விவரம் தெரிய வேண்டியிருக் கலாம். ஆதலால் அதைப் பற்றிக் கவனிப்போம்.

இந்தியாவிலிருக்கும் இந்துக்களில் 1000க்கு 998 பெயர்கள் மத உணர்ச்சியின் பயனாகவே மகமதியர்களை வெறுக்கின்றார்கள் என்று சொல்லுவதிலும் அதுபோலவே இந்தியாவின் பெரும் பகுதியில் உள்ள மகமதியர்களில் 1000க்கு 999 பெயர்கள் இந்துக்கள் என்பவர்களை வெறுக் கின்றார்கள் என்பதிலும் யாருக்கும் சந்தேகமிருக்காது. இதில் ஒரு சமயம் எண்ணிக்கைகளிலும் ஏதாவது ஒரு சிறு அளவு வித்தியாசம் இருந்தால் இருக்கலாமே யொழிய ஒருவரையொருவர் வெறுக்கின்றார்கள் என்கின்ற உண்மையில் வித்தியாசம் இருக்குமென்று யாரும் சொல்லமுடியாதென்றே கூறுவோம்.

ஏனெனில் மகமதியர்களை இந்துக்கள் மிலேச்சர்கள் என்றும், முரடர் கள் என்றும் கருதும்படியாக இந்துமத ஆதாரங்களிலும் இந்தியாவின் சரித்திரங்கள் என்று சொல்லப்படுபவகைகளிலும் காணப்படுவதுடன் இன்றைய உண்மையான இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளுபவர்களால் மகமதியர்கள் தொடுவதற்கோ - உண்பவை தின்பவைகளில் கலந்து கொள்ளு வதற்கோ அருகரற்றவர்கள் என்றே கருதியிருக்கின்றார்கள் என்பதில் ஆnக்ஷபணையிருக்க முடியாது. அதுபோலவே இந்துக்களைப் பற்றியும் மகமதியர்களுக்கு தங்களது மத சம்பிரதாயப்படி இந்துக்களை இழிவாய் கருதவும் தங்களுக்கு நிரந்திர எதிரியாய்க் கருதவுமான உணர்ச்சிகள் தான் இருந்தும் வருகின்றது. இன்னும் மதக்கொள்கைகள் என்பது அந்தந்த மதக்காரர்கள் அல்லாதவர்களுக்கு உலகத்தில் இட மில்லை என்று கருதக் கூடிய அளவில் தாண்டவமாடிக் கொண்டி ருக்கின்றன.

ஆகையால் தான் இந்துக்கள் இந்தியநாடு தங்களுடையது என்ற மனப்பான்மை மீது இந்தியாவில் தாங்களே ஆதிக்கம் செலுத்த வேண்டு மென்று ஆசைப்படுகின்றார்கள் என்பதையும் அதுபோலவேதான் மகமதியர்கள் இந்தியா முழுவதும் மகமதிய இராஜ்யமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள் என்பதையும் பார்த்து வருகின்றோம். இருவருடைய மதசம்பந்தமான ஆதாரங்களும் இந்த இலட்சியத்தை வலியுறுத்துவதாகக் கொண்டதென்றே சொல்லுவோம்.

இந்திய அரசியல் தலைவர் திரு. காந்தி அவர்கள் அடிக்கடி தனது ‘சுயராஜ்யத் திட்டத்தின் கருத்து ராமராஜ்யம்’ என்று சொல்லுவதே இந்துக் களின் அரசியல் மனப்பான்மையை விளக்கக்கூடியதாகும்.

அதோடு மகமதியர்கள் மாட்டுமாமிசம் சாப்பிடுவதை இந்துக்கள் அருவறுப்பதும், இந்துக்கள் தெருவில் மேளம் அடிப்பதை மகமதியர்கள் தடை செய்வதும் போதிய உதாரணங்களாகும். ஏனெனில், இந்த இரண்டு தத்துவங்களிலும் மத உணர்ச்சியிருக்கின்றதே தவிர மற்றபடி பொது நோக்கு உணர்ச்சியில்லை என்பது விளங்கும்.

நிற்க, இந்நாட்டில் இந்துக்கள், மகமதியர்கள் என்கின்றதான பெயர் கொண்ட இரு சமூகங்களென்பதில், எண்ணிக்கையில் இந்தியாவில் மகமதியர்களைவிட இந்துக்கள் என்பவர்கள் அதிக எண்ணிக்கையுள்ளவர் களென்று சொல்லுவதானாலும் அதாவது மகமதியர்களைவிட இந்துக்கள் 3 பங்கு அதிகமான எண்ணிக்கையுடையவர்கள் என்று கணக்கு சொல்லு வதானாலும் உண்மையில் மகமதியர்களே இந்தியாவில் வலிமைபொருந்திய சமூகத்தார் என்றுதான் சொல்லவேண்டும்.

ஏனெனில் இந்துக்களின் ஜனசங்கை எவ்வளவு பெரிய எண்ணிக்கை யாயிருந்தாலும் அதில் பல பிரிவுகள் ஏற்பட்டு சின்னா பின்னப்பட்டு தங்களை ஒரு சமூகம் என்ற சொல்லிக்கொள்ளமுடியாத நிலைமையில் பிரிக்கப்பட்டுக் கிடப்பதால் மகமதியர்களே இந்துக்களை விட பெரிய சமூகமாவார்கள் என்கின்றோம்.

மேலும் இந்துக்கள் என்கின்ற கூட்டத்திலிருந்து பஞ்சமர்கள் அல்லது ஆதிதிராவிடர்கள் என்கின்ற சமூகத்தாரான 4ல் ஒரு பங்கு ஜனத்தொகைக் கொண்ட சமூகத்தை விலக்கித்தான் இந்து சமூக எண்ணிக்கை யைக் கணக்குப் போடவேண்டும். ஏனெனில் அவர்களை ஒரு வித அடிமை யாகவும் மிருக ஜீவன்களைவிட கேவலமாகவும் இந்துக்கள் கருது கிறார்கள். இதுபோலவே இந்துக்களில் மற்றும் பலசமூகங்கள் ஒன்றுக் கொன்று உயர்வு தாழ்வு என்று சொல்லிக்கொள்ளும் முறையில் சமத்துவம் பாராட்டப்பட முடியாத - ஒற்றுமை பாராட்ட முடியாத நிலைமையிலுள்ள பல பிரிவு களையும் கூர்ந்து பார்த்தால் தானாகவே மகமதிய சமூகம் தான் அதிக எண்ணிக்கையுடையது என்பதும் விளங்கும்.

அன்றியும் மகமதியர்கள் தங்களை எல்லோரும் இஸ்லாமானவர்கள் என்று சொல்லிக்கொள்வது போல் இந்துக்கள் எல்லோரும் தங்களை ஒரு கூட்டத்தில் சேர்த்துச் சொல்லிக் கொள்ள வார்த்தையே கிடையாது. ஒருவித பாவனையும் கிடையாது. தனித்தனி சமயம், ஜாதி, வகுப்பு, உட்பிரிவு ஆகியவைகளைச் சொல்லிப் பிரித்துக்காட்டிக் கொண்டே தீரவேண்டிய வர்களாய் இருக்கிறார்கள்.

வேண்டுமானால் வேறு ஒருவனை ஏமாற்றும் போதும் வேறு ஒருவனுடன் சண்டைக்குப் போகும்போதும் மாத்திரம் தான் இந்து என்றால் என்ன என்று உணர்ந்து கொள்ளமுடியாத மக்களைப்பிடித்து “நாம் எல்லோரும் இந்துக்கள்” என்று உரிமை பாராட்டுவதும், அது தீர்ந்த பிறகு அந்த மக்களையே “எட்டி நில் தொடாதே” என்பதுமான குணங்கள் இந்து சமூகத்தி லுள்ள, சகல பிரிவார்களிடமும் இருந்துவருவது வழக்கமாகயிருந்து வருகின்றது. இது பார்ப்பனனானாலும், சைவனானாலும், வைணவனானாலும், வேளாளனானாலும், “எந்த வருண”த்தானானாலும் மற்றும் யாரானாலும் இவர்களுக்கெல்லாம் இந்த உணர்ச்சி இயற்கை உணர்ச்சியாயி ருந்தே வருகிறது.

ஆகவே இத்தியாதி காரணங்களால் இந்துக்கள் என்பவர்கள் தங்களை ஒரு சமூகம் என்று சொல்லிக் கொள்ளமுடியாத நிலைமையில் வெகுகாலமாய் இருந்து வருவதும் இந்துக்கள் தவிர மற்ற சமூகங்கள் எவ்வளவு சிறியதாயிருந்தாலும் அவை ஆதிக்கத்திலிருந்து வருவது மாயிருந்து வருகிறது. மற்றும் இந்தக் காரணமேதான் இந்தியாவை வெளிநாட்டு மக்களே அதாவது “இந்துக்கள் அல்லாத சமூகமே” ஆளக் கூடியதாகவும் இருந்து வருகின்றது. ஆகவே இந்து சமூகமும் இஸ்லாம் சமூகமும் இந்தியாவில் இப்போதுள்ள ஆக்ஷியின் பயனாய் எவ்வளவு கஷ்டப்பட்டு வருவ தாயிருந்தாலும் ‘அன்னிய ஆக்ஷியை’ ஒழிக்கும் விஷயத்தில் ஒன்றை யொன்று நம்பி ஒத்து வேலை செய்யமுடியாமல் இருந்துவருவதுடன் மூன்றாவதொருவனுடைய தீர்ப்பே இவர்களது வாழ்வுக்கு வேண்டியதாய் இருக்கின்றது.

ஆதலால் புதிய அரசியல் சீர்திருத்தக் கிளர்ச்சியில் இந்து முஸ்லீம் ஒற்றுமை என்பதான முயற்சிகள் யார் யாரோலோ எவ்வளவு முயற்சிகள் செய்தும் முடிவு பெறாமல் முறிந்துபோய்விட்டது நமக்கு சிறிதும் ஆச்சரிய மாக இல்லை. இம்முயற்சியின் அஸ்திவாரமே ஒருவரையொருவர் யேய்க்கும் தத்துவத்தில் இருந்து முளைத்ததே தவிர உண்மையில் நல்ல எண்ணத்தின் மீது சிறிதும் யேற்பட்டதல்லவென்றே சொல்லுவோம். இருவருக்கும் உள்ள தகராறு என்பதே பிரதிநிதித்துவம் என்பதில் மாத்திரம்தான் இருந்து வருகின்றதேயொழிய இன்னமாதிரி சீர்திருத்தம் வேண்டும் என்பதில் இருப்பதாகக் காணவில்லை.

ஆகவே ஒருவர் கோரும் பிரதிநிதித்துவம் மற்றொருவர் கொடுக்க சம்மதிக்காததும் ஒருவர் கொடுக்கும் பிரதிநிதித்துவம் மற்றொருவருக்கு திருப்தி இல்லாததும் ஒருவரிடம் ஒருவருக்குள்ள அவநம்பிக்கையே யாகும்.

ஆதலால் இருவரும் அவநம்பிக்கைப் படுவதிலிருந்தே ஏமாற்றும் தன்மைதான் ஒற்றுமை என்கின்ற ரூபத்தில் இருந்துவருகின்றது என்பது விளங்கும். இந்த நிலையில் நாம் யார் மீதாவது அதிகமான குற்றம் சொல்ல வேண்டுமானால் இந்துக்கள் என்பவர்கள் மீதுதான் அதிக குற்றம் சொல்ல வேண்டியதாய் இருக்கின்றது. அதாவது இந்துக்கள் இடம் தான் ஏய்க்கும் எண்ணம் அதிகமாய் இருக்கின்றது என்று சொல்லுவோம். எப்படியெனில் இந்தியாவில் இந்துக்கள், மகமதியர்களை நினைப்பதைவிட இன்னும் அதிக இழிவாய்க் கருதும் 5, 6 கோடி மக்கள் தீண்டாதவர்களாய் தெருவில் நடக்கா தவர்களாய், கல்வியின்றி, நல்ல உடையின்றி, நல்ல ஆகாரமின்றி, இருக்க வீடு இன்றி, குளிக்க தண்ணீர் இன்றி, தொழில் செய்ய உரிமை இன்றி அடிமைப் படுத்திக் கொடுமைப்படுத்தி இம்சிக்கப்பட்டு வருகின்றார்கள். இவர்களைப் பற்றி எந்த இந்து தலைவருக்கும் மகாத்மாக்களுக்கும் சிறிதும்- கடுகளவும் கூட இந்த அரசியல் கிளர்ச்சி ராஜியில் - திட்டத்தில் சேர்த்துக் கொள்ள கவலையே இல்லாமல் இருந்து வருகின்றார்கள். அவர்களுடைய நிலைமையைப் பற்றிய யோக்கியமான பேச்சே இந்து தலைவர்களுடைய இலக்ஷியத்தில் கிடையவே கிடையாது. மகமதியர்களுடன் ராஜி செய்து கொள்ளவேண்டும் என்கின்ற கவலையுள்ளஅரசியல் ஸ்தாபனமானது தீண்டாதவர்களுடன் ராஜி செய்து கொள்வதைப்பற்றி இலக்ஷியப்படாமல் இருப்பதற்குக் காரணம் தீண்டாதவர்கள் பலமற்றவர்கள், அறிவற்றவர்கள் என்கின்ற எண்ணங்களை விட வேறு ஒரு காரணமு மிருக்கமுடியாது என்றே சொல்லுவோம்.

ஏனெனில் தீண்டாதவர்கள் என்பவர்களும் அரசியல் ஒற்றுமையில் தங்களுடைய அபிப்பிராயங்களைத் தெரிவித்து இருக்கிறார்கள். அதாவது இந்துக்களிடம் நம்பிக்கை இல்லை என்பதை காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அரசியலில் தங்களுக்குத் தனி பிரதிநிதித்துவம் வேண்டுமென்று கேட்டிருக் கிறார்கள். இந்திய அரசியல் ஸ்தாபனத்தில் அவர்கள் கலந்து கொள்ளா மலேயே இருந்து வருகின்றார்கள். இப்படியெல்லாம் இருந்தும் இவர்களைப் பற்றி இந்துத் தலைவர்கள் சிறிதும் இலக்ஷியமில்லாமல் இருப்பதும், மகமதியர்கள் விஷயத்தில் இவ்வளவு கவலைப்படுவதும் என்றால் இதில் ஏமாற்றும் தன்மை இல்லை என்று எப்படி சொல்லமுடியும்? அன்றியும், 5 கோடி ஜனத்தொகையுள்ள அந்த ஒரு சமூகத்திற்கு 2, 3 பேர்களே வட்ட மேஜை மகாநாட்டுக்கு பிரதிநிதிகளாய் இருக்கின்றார்கள் என்றால் இந்துக்கள் மாத்திரமல்லாமல் அரசாங்கத்தாரும் அவர்களை ஏய்த்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

இவர்கள் இப்படி ஏன் செய்கின்றார்கள் என்றால் மகமதியர்கள் ‘உதைப்பதற்கு’ தயாராய் இருக்கிறார்கள். உயிரை விடத் தயாராய் இருக்கி றார்கள். வேறு மதஸ்தனை கொன்றாலும் கொல்லுவதின் மூலம் செத்தாலும் மோக்ஷமென்று கருதி இருக்கிறார்கள். அந்த உணர்ச்சிதான் அவர்களை மனிதர்களாக வாழச்செய்கின்றது.

நமது தீண்டாதவர்கள் என்பவர்களோ காலில் விழுந்து கும்பிடுவதை- சாமி சாமி என்று கெஞ்சுவதை - உதைக்க உதைக்க உதைத்த காலுக்கு முத்தம் கொடுப்பதை ‘மோக்ஷம்’ என்று கருதுகின்றார்கள். ஆதலால், மகமதியர் களது மோக்ஷ வழியை கண்டு உலகம் நடுங்குகின்றது. தீண்டாதவர்கள் என்பவர்களின் மோக்ஷ வழியைக்கண்டு உலகம் அவர்கள் மீது ஏறி சவாரி செய்கின்றது. இந்த நிலைமையில் ஒருவருக்காவது ஒருவருக்கு உண்மை ராஜியோ, ஒற்றுமையோ, நம்பிக்கையோ எப்படி உண்டாகக் கூடும் என்பதை யோசித்தால் உண்மை விளங்கும்.

இந்த நிலைமையில் ‘சுயராஜியம்’ எப்படி சாத்தியம் என்பதை யோசித்தாலும் உண்மை விளங்கும். இந்தியாவானது சுயராஜியத்திற்கு தகுதியாய் இருந்தால் அதைப் பெறுவதினின்றும், தடுக்க இந்த உலகத்தில் யாராலும் முடியவே முடியாது. இந்து, இஸ்லாம் சமயங்களும் வருணாச்சிரம தர்மமும், தீண்டாமையும் உள்ளவரை உண்மையான விடுதலை ‘சுயராஜ்யம்’ இந்தியா ஒருநாளும் பெற முடியவே முடியாது என்பதை மனதில் வைத்து அவை ஒழியத் தகுந்த வேலை செய்வதுதான் ஒற்றுமையும் விடுதலையும் அடையும் மார்க்கமாகுமே தவிர வேறில்லை.

இன்றையத் தினம் இந்தியாவில் ஏதோ பிரமாதமாய் விடுதலைப் போர் நடப்பதாக கூறப்படுவதும் காணப்படுவதும் வெறும் புரட்டேயாகும். இது ஒரு இந்தியப் பணக்காரனும், மேல் ஜாதிக்காரனும், ஒரு புறமாகவும், வெள்ளைக்காரப் பணக்காரன் ஒரு புறமாகவும் இருந்து கொண்டு தங்கள் தங்கள் நன்மைக்கு என்று செய்து வரும் ஒரு போராட்டமேயாகும். அதாவது வெள்ளைக்காரப் பணக்காரன் தனது அரசாக்ஷி என்னும் தந்திரத்தை ஒரு ஆயுதமாகவும், இந்தியப் பணக்காரனும், மேல்ஜாதிக் காரனும் இந்திய பாமர ஜனங்களின் முட்டாள்தனத்தையும், சில மக்களின் வேலையில்லாத்தனத் தையும் வயிற்றுப் பிழைப்பையும் ஆயுதமாக வைத்துக்கொண்டு செய்யப் படும் யுத்தமேயாகும்.

யுத்த நிறுத்த ராஜியின் போதும் இதே காரணம்தான் திரு. காந்தி இந்திய வர்த்தக சங்கத்தின் கௌரவ அங்கத்தினராகவும் லார்டு இர்வின் ஐரோப்பிய வர்த்தக சங்கத்தின் கௌரவ அங்கத்தினராகவும் இருந்துதான் ராஜி பேசினார் கள். ஆகவே முறையே இருவரும் இந்திய வர்த்தகர்கள் சார்பாகவும் ஐரோப்பிய வர்த்தகர்களின் சார்பாகவுமே பேசி ராஜி செய்து கொண்டார்கள்.

ஆகவே இவை முதலாளிகளுடைய போராட்டங்கள் என்பதும் இதற்கு பாமர மக்களையும் தொழிலாளிகளையும் பலி கொடுக்கின்றார்கள் என்பதும் அரசியல் கிளர்ச்சிகளில் சிறிது கலந்து அனுபோகப்பட்டிருந் தாலும் கண்ணாடியில் பிரதி பிம்பம் தோன்றுவது போல் விளங்கும்.

இந்த யுத்தம் ஒருவாறு முடிந்தவுடன் இதே பாமர மக்களும் வயிற்றுக் கில்லாத ஆட்களும் உண்மை விடுதலைக்குப் பாடுபட திரும்பக் கூடும் என்றாலும் இப்பொழுது நடக்கும் போராட்ட முடிவு நிபந்தனையில் அப்படிப் பட்ட ஒரு யுத்தம் அதாவது உண்மை விடுதலைக்கு உரித்தான யுத்தம் மறுபடியும் ஏற்படாமல் இருக்கும்படியான பந்தோபஸ்து செய்வதும் ஒரு பெரிய காரியமாய் இருந்து வருகின்றதை உணருகின்றோம்.

அதுதான் புதிய சுயராஜ்ய திட்டம் என்பதில் உள்ளஅதாவது சமஷ்டி அரசாங்கமுறை என்று சொல்லப்படுவதான, சுதேச அரசர்களின் ஆக்ஷி யையும் இந்த சீர்திருத்தத் திட்டத்தில் சேர்த்திருப்பதும், மத நடுநிலைமையும், ஒவ்வொரு சமூகத்தினுடைய உரிமையும் காப்பாற்றுவது என்பதுமான நிபந்தனைகளுமாகும். சுதேச இராஜாக்கள் நமது ஆக்ஷியில் கலந்து கொள்வது என்பது ‘பணக்காரர்கள் காப்பாற்றப்படுவார்கள்.’ என்பதும், மத நடு நிலைமை என்பது ‘இரண்டு மதத்தின் பேராலும் பல சோம்பேறிகள் வாழலாம்’ என்பதும், ஒவ்வொரு வகுப்பு உரிமையும் காப்பாற்றப்படும் என்பது ‘பார்ப்பனர்கள் காப்பாற்றப்படுவார்கள்’ என்பதும் தானே தவிர வேறில்லை. ஆகவே இந்த சுயராஜியக் கிளர்ச்சி என்பது பணக்காரன், சோம்பேறி, பார்ப்பான் ஆகிய கூட்டம் பிழைப்பதற்கும் நிலையாய் தங்கள் நிலைமையை பந்தோபஸ்து செய்து கொள்வது என்பதற்குமே அல்லாமல் வேறு ஒன்றுமில்லை என்பதாக உறுதி கூறுவோம்.

இந்தப் போராட்டமானது முதலாளிகள் சண்டை என்பதற்கு உதாரணம் என்னவென்றால் வெளிநாட்டுச் சாமான்களை பகிஷ்கரிப்பது என்பதே யாகும். எப்படியெனில் இந்தப் பூச்சாண்டியை அரசியலில் 1907ம் வருஷம் முதலிலிருந்தே கையாளப்பட்டு வரும் தந்திரமாகும்.

இந்த பகிஷ்காரம் என்பது புரட்டு என்பதற்கு அத்தாக்ஷி வெளி நாட்டுத்துணியை பகிஷ்கரிப்பதற்காக கதரைப் பர்த்தி செய்ய ஏற்பாடு செய்திருக்கும் காரியமேயாகும். கதரில் இயந்திரம் முதலிய முதலாளியை காப்பாற்றுவதும், கூலிக்காரனை, தொழிலாளியை அடக்கி வைப்பதுமான தத்துவம் அடங்கியிருப்பது நன்றாய் விளங்கும். ஒவ்வொரு அரசியல் கிளர்ச்சியின் போது (க்ஷடிலஉடிவவ) “பாய்காட்” “பகிஷ்காரம்” என்று சொல்லிக் கொண்டு கலவரம் செய்துவிட்டு, ஏதாவது ஒரு அதிகார - உத்தியோக சௌகரியம் கிடைத்தவுடன் அந்நிய நாட்டு வியாபாரத்தை தாராளமாய் விட்டுவிட்டு எலக்ஷன்களில் போட்டிபோடுவதும் யாவரும் அறிந்த தேயாகும்.

இந்தியாவில் ஒரு பழமொழியுண்டு. அதாவது “கொட்டை நூற்று பஞ்சம் விடியுமா?” என்று சொல்லுவதுண்டு. இதன் கருத்து என்னவென்றால் நூல் நூற்பதினால் தரித்திரம் ஒழியுமா என்பதேயாகும்.

ஆகவே இன்றைய சுயராஜ்ய முயற்சிக்கும் ஏழைகள் பணக்காரர்கள் ஆவதற்கும் தொழிலாளிகள் பிழைப்பதற்கும் கள்ளுக்குடி ஒழிவதற்கும் கொட்டை நூற்க வேண்டியது (ராட்டினத்தில் நூல் நூற்கவேண்டியது) தான் முக்கிய மார்க்கமாயிருக்கின்றது என்பது எவ்வளவு தந்திரமானது என்பதை யோசித்தால் சிறிதளவு மூளையுள்ளவர்களுக்கும் தெரியாமல் போகாது.

இதுபோலவே கள்ளுக்கடை மறியல் என்பதும் எலக்ஷன் நெருங்க நெருங்க இது ஒரு எலக்ஷன் பிரசாரமாய் புறப்படுவதும், எலக்ஷன் முடிந்த வுடன் மறியல் ஒழிந்து போவதுமல்லாமல் வேறு அதில் ஏதாவது நாணய மிருக்கின்றது அல்லது இருந்தது என்றாவது யாராவது சொல்ல முடியுமா என்று யோசித்தால் அதன் புரட்டும் விளங்காமல் போகாது.

ஆகவே கதரும், மறியலும், இந்து, முஸ்லீம் ஒற்றுமை முதலிய காரியங்களாலும் ஏற்படப்போகும் பயன் என்ன என்பதை அறிவுடைய - சுயநலமற்ற மக்கள் உணர்ந்து பாமர மக்களுக்கு எடுத்துரைக்க வேணுமாய் விரும்புகின்றோம்.

இதைப்பற்றிய மற்றும் விபரங்களையும் சுதேச சமஸ்தானங்கள் என்பவைகளின் யோக்கியதைகளையும் மற்றொரு சமயம் புள்ளி விவரங் களுடன் எழுதுவோம்.

-------------------தந்தைபெரியார் - “குடி அரசு” - தலையங்கம் - 28.06.1931

23.10.13

மோடியைப் பிரதமராக்கினால்? எச்சரிக்கை! எச்சரிக்கை!!-கி.வீரமணி


சென்னையில் தமிழர் தலைவர் முழக்கம்!
சென்னை, அக்.23- குஜராத்தில் பாடத் திட்டத்தில் மனுதர்மம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மோடி இந்தியாவின் பிரதமர் ஆனால், மனுதர்மப்படி ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம்தான் வரும் என்று எச்சரித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை பெரியார் திடலில் நேற்று இரு பெரும் ஆபத்துகள் - எச்சரிக்கை! எச்சரிக்கை!! எனும் தலைப்பில், திராவிடர் கழகத்தின் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில், உரை யாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

ஜாதியின் பெயரால் கூட்டணி, மதத்தின் பெயரால் அணிவகுப்பு என்று சிலர் புறப்பட்டுள்ளனர். இவற்றை எல்லாம் எதிர்த்துதான் இந்நாட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற்றம் - வளர்ச்சி அடைந்துள்ளனர். கல்வி, உத்தியோக வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

கடந்தகால வரலாறு என்ன?

நமது கடந்தகால வரலாறு, இன்று 18 வயது நிறைந்த இளைஞர்களுக்குத் தெரியாமல் இருக்க லாம்.

இப்பொழுது நாம் பெற்றுள்ள வளர்ச்சி முன்பிருந்தே பெற்று வந்திருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது உண் மையல்ல என்பதை நாம் புரிய வைக்கவேண்டும் - பழைய வரலாற்றை எடுத்துக்கூற வேண்டும்.

கொஞ்சம் நாம் அயர்ந்தால்...

கொஞ்சம் நாம் அயர்ந்தால், ஜாதியைச் சொல்லி, மதத்தைக் காட்டி நம்மை மீண்டும் பழைய காலத் துக்கே துரத்தி விடுவார்கள்;  மீண்டும் கோவணம் கட்டிக்கொண்டுதான் கிடக்கவேண்டும்.

இந்த உண்மைகளை எடுத்துச் சொல்லி, ஏமாந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கவே இந்தச் சிறப்புக் கூட்டம். தந்தை பெரியார் கேட்டாரே - சுதந்திர நாட்டில் சூத்திரன் இருக்கலாமா? என்று கேட் டாரே - சூத்திரன் என்றால் பாரத ரத்னா பட்டமா? பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள் என்று தானே பொருள்?

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி!

அதனால் அல்லவா சூத்திரன் என்றால், ஆத்திரம் கொண்டடி என்ற முழக்கத்தை தந்தை பெரியாரும், இந்த இயக்கமும் கொடுத்தனர். இந்து மதத்தில் ஏணிப்படி ஜாதி அமைப்பு முறை.

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற உயர்வு - தாழ்வு அடுக்குமுறை - பிறப்பின் அடிப்படையில் இருக்கிறதே 5 ஆவது இடத்தில் பஞ்சமரும் - 6 ஆவது இடத்தில் எல்லா ஜாதிகளை யும் சேர்ந்த பெண்களும் இருக்கிறார்களே!

அதிகமாக ஒடுக்கப்பட்டவர்களுக்கே முன்னுரிமை!

இதில் யார் அதிகமாக ஒடுக்கப்பட்டார்களோ, உரிமைகள் மறுக்கப்பட்டனவோ, அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுதானே சமூகநீதி.

இதற்காக அரும்பாடுபட்டு, போராடி இட ஒதுக்கீட்டை வாங்கிக் கொடுத்தால், இதற்குக் காரணமான தந்தை பெரியாரையும், மறந்துவிட்டு திராவிட இயக்கத்தையும் கொச்சைப்படுத்து கிறார்கள் என்றால், தமிழ்நாட்டு மக்கள் அவர்களை அடையாளம் காணவேண்டாமா?

நூறு ஆண்டுகால சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் ஒரு தாழ்த்தப் பட்டவர் நீதிபதியாக வர முடிய வில்லையே, என்று தந்தை பெரியார் கேள்வி எழுப்பியதற்குப் பிறகுதானே முதலமைச்சர் கலைஞர் அவர்கள்  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வரதராசன் அவர்களைத் தேடிப் பிடித்து, அந்தப் பதவியில் அமர்த்தினார்.

பொது எதிரி யார்?

தாழ்த்தப்பட்ட மக்களும், பிற் படுத்தப்பட்ட மக்களும் ஒன்றி ணைந்து பொது எதிரிகளை அடை யாளம்கண்டு, இன்னும் பெறவேண் டிய உரிமைகளை ஈட்டுவதுதான் நம்முன் உள்ள பிரச்சினை.

இந்த இயக்கத்துக்கே பள்ளன் கட்சி, பறையன் கட்சி, சக்கிலியன் கட்சி என்றுதான் பெயர்.

அதை நாங்கள் இழிவாகக் கருத வில்லை; பெருமையாகத்தான் கருதினோம் - இன்றும் கருதுகிறோம்.

அடையாளம் காண்பீர்!

யாரை எதிர்த்தோம்? எப்படி உரிமைகளைப் பெற்றோம்? என்பதை யெல்லாம் மறந்துவிட்டு, பார்ப் பனர்களைச் சேர்த்துக்கொண்டு, தாழ்த்தப்பட்டவர்களை எதிர்த்து அணிதிரட்டுகிறார்கள் என்றால், அவர்களை அடையாளம் காண வேண்டாமா?

சமூகநீதிக்கு ஆதரவானவர்களா பார்ப்பனர்கள்? அவர்களைச் சேர்த் துக் கொண்டால் அதன்பின் விளைவு என்ன? இட ஒதுக்கீடே கூடாது என்ற நிலைக்குத்தானே தள்ளப் படுவீர்கள் - எச்சரிக்கை! எச் சரிக்கை!!

மதவாதக் கூட்டணி!

மற்றொரு அணி - மதவாதக் கூட் டணி - மனுவாதக் கூட்டணி புறப் பட்டுள்ளது. ஒரு வார்த்தையில் சொன்னால், மோடியின் ஆட்சியில் குஜராத்தில், மனுதர்மம் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? மோடி பிரதமரானால் ஒரு குலத்துக் கொரு நீதி, சூத்திரர்களுக்கு, பஞ்சமர் களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்குமா?
மீண்டும் குலக்கல்வித் திட்டமா?

தமிழ்நாட்டில் ராஜாஜி  குலக் கல்வித் திட்டம் எதற்குக் கொண்டு வந்தார்? பார்ப்பனர் அல்லாதார் - சூத்திரர்களின் கல்விக் கண்ணைக் குத்துவதற்காகத்தானே!

குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்த ராஜாஜி பதவியைவிட்டு ஓடும் படிச் செய்தோம் - 1952 மீண்டும் திரும்புகிறதா?

மோடி பிரதமர் ஆனால், அந்தக் குலக்கல்வித் திட்டம் வேறு பெயரில் வரும் அவ்வளவுதான்.

மோடியின் குஜராத்தில் முஸ்லிம் ஒருவர்கூட சட்டமன்ற உறுப்பினர் கிடையாது!

குஜராத் சட்டமன்றத்தில் ஒரே ஒரு முஸ் லிம்கூடக் கிடையாது என்று பெரு மையாகச் சொல்லுகிறார்களே, இது பெருமைக்கு உரியதுதானா?
உலகில் இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு இந்தியா. அம்மக்கள் இந்நாட்டு குடிமக்கள் இல்லையா?
குடிமக்கள் உரிமையும் இன்றி அவர்கள் வாழவேண்டும் - முஸ்லிம் கள், ராமனைக் கும்பிடவேண்டும்; கிறித்தவர்கள் கிருஷ்ணனைக் கும்பிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கோல்வால்கர் சொல்ல வில்லையா?

மோடியை முன்னிறுத்தியது ஆர்.எஸ்.எஸ்.தானே! மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில் நீதிமன்றம் ஒரு தீர்ப்புக் கூறியது?

பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட் டோரைக் கற்பழிக்க மாட்டார்களாம் - சொன்னது நீதிமன்றம்

பன்வாரி என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண், குழந்தைத் திருமணத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். அதற்காகப் பாடுபட்ட  அந்தப் பெண்ணை உயர்ஜாதி பார்ப் பனர்கள் பாலியல் வன்முறை செய் தனர்.
நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்ன தீர்ப்பு எழுதினார்கள் தெரியுமா? ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை பிராம ணர் எப்படி கற்பழித்திருக்க முடியும் என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்தார்களே!

கனவு காணவேண்டாம்!

ஆட்சியில் சில குறைபாடுகள் இருக்கின்றன - விலைவாசி உயர்வு என்கிற சூழ்நிலையைப் பயன்படுத்தி மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். சாமியார் கண்ட தங்கச் சுரங்கக் கனவு என்னவாயிற்று?

பன்னாட்டு முதலாளிகள் பின் பலமாக இருக்கின்றனர். உயர்ஜாதி ஊடகங்கள் பக்க பலமாக இருக் கின்றன என்ற துணிச்சல் அவர்க ளுக்கு - ஆனால், உண்மை நிலை என்ன?

காஷ்மீர், மேற்கு வங்காளம், கேரளா, எடியூரப்பா உபயத்தால் கருநாடகா - தமிழ்நாடு முதலிய இடங்களில் இவர்களால் கால் பதிக்க முடியுமா? தமிழ்நாட்டை நினைத் துத்தான் பார்க்க முடியுமா?

இந்த நிலையிலே, எப்படி ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள்? என்று கேட்டார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

கூட்டத்திற்குத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார். திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையாற்றி னார். (உரை நாளை வெளிவரும்).

தொடக்கத்தில் கழக அமைப்புச் செய லாளர் வெ. ஞான சேகரன் வரவேற் புரையாற்றினார்.

6.30 மணிக்குத் தொடங்கிய சிறப்புக் கூட்டம் 8.50 மணியளவில் நிறைவுற்றது.
கூட்டத்தில் தொடக்கத்தில் உடுமலை பேராசிரியர் என்.சுப்பிர மணியம், பகுத்தறிவாளர்  தோழர் புலவர் பா.வீரமணி அவர்களின் குடும்பத்தில் மூவர் மறைவுற்றமைக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது - அனைவரும் எழுந்து நின்று மரி யாதை செலுத்தினர்.

ஜாதி கலவரத்துக்காக ஜாதி கட்சிக் கூட்டணியா?

15 ஜாதி கட்சிகளை இணைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடிக்கப் போவதாகச் சொல்லுகிறார்கள். தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 197 ஜாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 41; ஆக மொத்தம் 238. இதில் 15 கட்சிகளை இணைத்துக்கொண்டு, அதில் பெரும்பாலும் லெட்டர் பேடு அமைப்புகள். இவற்றை இணைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் என்கிறார்கள் - எப்படி இருக்கிறது? தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக அணிதிரட்டி, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைத்து ஜாதிச் சண்டைகளை உருவாக்கி, அதன்மூலம் குளிர்காயலாம் என்று நினைக்கிறார்கள்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் மக்களை - தீண்டத்தகாதவர்கள் என்று ஊருக்கு ஒரு கோடியில் ஒதுக்கப்பட்ட மக்களை எதிர்ப்பதற்காக ஒரு கூட்டணியா?

இந்தக் கூட்டத்தின் வாயிலாக ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறோம்.
அன்று பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்று திராவிடர் கழகத்தைச் சொன்னார்களே, அந்த நிலைக்கு - அந்தப் பணியை மீண்டும் முனைப்பாக செய்வதற்குத் திராவிடர் கழகம் தயார்! தயார்!!

----------------------- சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் 22.10.2013
----------------------------------------------------------------------------------------------------------------------------
                    ---------------------"விடுதலை” 23-10-2013

இறுதிப் போராட்டத்திற்கு அழைப்பு - பெரியார்

தோழர்களே,

நாம் இதுபோது மிக்க நெருக்கடியான நிலையில் பரிதபிக்கத்தக்க விதமாய் இருக்கிறோம். நாம் இன்று நாடு முழுவதும் மிக்க உற்சாகத்தோடு நடைபெறும் தேர்தல் காரியங்களில் அடியோடு விலகி நிற்க வேண் டியவர்களாக இருக்கிறோம்.

இதைப் பல அரசியல்வாதிகள் நாம் அரசியல் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லுகிறார்கள். உண்மையாய் இருந்தாலும் இருக்கலாம்.

அரசியலை வெறுத்து இப்படி இருக்கவில்லை. இன்றைய நம் தகுதிக்கு, நிலைக்கு இதுதான் சாத்யமானதும் ஏற்றதுமானது மான காரியமாகும். நாம் கட்டுப்பாடற்றதும் நாட்டுணர்ச்சி, இன உணர்ச்சி அற்றதுமான ஒரு சமுதாய மாக ஆக்கப்பட்டு விட்டோம். தேர்தலுக்கு நின்றால் என்ன செய்வது? வெற்றி பெறுவோமா? தேர்தல் செலவுக்கு நம்மிடம் பணமிருக்கிறதா? இருக்கிறவர்கள் முன் வருகிறார்களா? அவர்கள் நம்பத்தக்கவர்களா? இவை ஒருபுறம் இருக்கட்டும்.

இன்றைய தேர்தல் ஜனநாயகமானதாக இருக்கிறதா? நாம் 100க்கு 90 பேர்களாய் இருக்கிறோம். நம்மவர்களில் 100க்கு 10 பேருக்குத் தான் ஓட்டு. அந்த 10பேர்களும் மீதி 80 பேர்களுக்குப் பிரதிநிதிகளாக இருக்கத் தகுதி அற்றவர் கள் என்பது மாத்திரமல்லாமல் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதுகூடத் தெரியாதவர்கள். பெரிதும் தங்கள் சுயநலத்துக்கு எதையும் செய்யத் தயாராய் இருந்து கொண்டு அரசியல் வாழ்வில் புகுந்தவர்கள் - புகுகிறவர்கள்.
இன்று நம்மவர்கள் என்பவர்களில் அரசியலில் புகுந்த மக்களில் 100க்கு 75பேர் எதிரிகளுக்குக் கூலியானவர்கள். மீதி 25 பேர்களில் 20 பேர்கள் தங்கள் நலனுக்கு ஆக மற்றவர்களைக் காட்டிக் கொடுத்து, அந்தக் காட்டிக் கொடுக்கும் தன்மையை படிக்கட்டாக வைத்து மேலேறி பட்டம், பதவி, பணம் தேடிக் கொண்டவர்கள். இந்த நிலையில் நாம் தேர்தலுக்கு நிற்காதது தற்கொலை என்று சொல்லப்பட்டாலும் சரி, அதைப் புத்திசாலித்தனமான தற்கொலை என்றாவது சொல்லுவேன்.

அன்றியும், நமது சர்க்கார் நடந்து கொண்ட மாதிரியானது யோக்கியனுக்கும், உண்மையான தன்மையில் மக்கள் நலம் கோருபவருக்கும் தேர்தலில் இடமில்லாத படியாக நிலைமை ஏற்பட்டுவிட்டது.

இந்தச் சர்க்காரார் யோக்கியர்களை மதிப்பது மில்லை. அன்றியும் சர்க்காரார் நாணயம், நீதி, பொதுஜன அமைதி, சமாதானம் ஆகியவைகளைக் காப்பதில் மிக்க அலட்சியம் காட்டி நாட்டில் நாணயக் கேடும் காலித்தனமும் வளரும்படி விட்டுவிட்டார்கள்.

இன்று இந்தியா கண்டம் முழுவதும், நமது நாடு முழுவதும் பித்தலாட்டமும், காலித்தனமும் தாண்டவ மாடுகின்றன. கவர்னர்கள் கவலையற்ற சுகவாசிகளாக இருக்கிறார்கள். வைசிராய் அனுபவமற்றவரும் நிருவாகத் திறமை அற்றவருமாக இருக்கிறார். ஓலைக்குடிசைகளில் தீப்பற்றிக் கொண்டு பரவுவது போல் காலித்தனங்கள் வளர்ந்து நாடு முற்றும் பரவிக் கொண்டு இருப்பதைத் தடுக்க, பரவவொட்டாமல் செய்யப் பயனளிக்கும்படியான முயற்சி சர்க்காரால் செய்யப்படவே இல்லை. நம் எதிரிகள், காலிகள் இந்த நிலையை மிகுதியும் பயன்படுத்தி நலன்பெற்று வருகிறார்கள்.

இந்த தன்மைக்கோ அல்லது இதைச் சமாளிக்கும் தன்மைக்கோ நாம் நம்மை இன்னும் தகுதி ஆக்கிக் கொள்ளவில்லை. ஆதலாலும் தேர்தலில் நாம் விலகி இருப்பது தவிர இன்று நமக்கு வேறு வகை இல்லை.

நாட்டில் 4 வருடங்களுக்கு முன் நடந்த நாச வேலைகளான தண்டவாளம் பெயர்த்தல், தந்தி அறுத்தல், கட்டடங்கள் கொளுத்தல், அதிகாரிகளைக் கொல்லுதல் ஆகிய காரியங்களிலும், சர்க்கார் யுத்த முயற்சிக்கு ஆகச் செய்யப்பட்ட காரியங்களை எதிர்த்து ஒரு கூட்டத்தார் தடை செய்த காரியங்களிலும் நாம் கலவாமல் இருந்ததும், அக்காரியங்களை எதிர்த்ததும் இன்று நமக்குத் தேர்தலில் நிற்க யோக்கியதைக் குறைவாகி விட்டதுடன், அம்மாதிரி கெட்ட காரியம் செய்தவர்களுடன் குலாவ வேண்டிய தாழ்ந்த நிலை சர்க்காரிடம் ஏற்பட்டுவிட்டதாலும், (ஓட்டர்களால்) அப்படிப்பட்டவர்களே விரும்பப்படு கிறார்கள். சர்க்காரின் இந்தத் தன்மையை நாம் வெறுக்கிறோம் என்பதற்கு ஆகவே முக்கியமாய்த் தேர்தலில் விலகி இருக்க வேண்டியவர்களாகிறோம்.

ஆகையால், நாம் தேர்தலில் விலகி இருப்பது குறித்து வருந்த வேண்டியதில்லை. எதிரிகள் பதவிக்கு வரட்டும், அவர்களைக் கொண்டு இந்தச் சர்க்கார் தங்கள் நலத்தை பெருக்கிக் கொள்ளட்டும் நமக்குக் கவலையில்லை. ஆனால் நாம் இம்மாதிரி அலட்சியப் படுத்தப்படவும், புறக்கணிக்கப்படவும், ஏமாற்றப்படவும் தகுதி உடையவர்களாகவே நாம் வாழ்நாள் முழுவதும் இருப்பதா அல்லது நாம் ஒரு கட்டுப்பாடான மான வுணர்ச்சி உள்ளவர்களான, துணிவும், வீரமும், உயிரையும் கொடுத்து நம் உரிமையைப் பெறும்படியான ஒரு மனித சமுதாயமாக ஆகி நம் எதிரிகள் செய்ததை எல்லாம் நாமும் செய்யக்கூடியவர்கள் என்பதாக ஆகி நம் நாட்டை நாம் அடைந்து மனிதத் தன்மை பெறுவதா என்பதுதான் இன்றைய நமது பிரச்சனையாகும். இதை அடைய நம்மைத் தகுதியுடையவர்களாக ஆக்கிக் கொள்ளவும் நாம் இன்று வீண் வேலையில் ஈடுபடாமல் மக்களைத் தயாராக்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறோம்.

தோழர்களே! முதலாவதாக நாம் ஒரு கட்டுப்பாட்டுக் குள் அடங்கியவர்களாக ஆகாமல் நம்மால் ஒரு காரியமுமாகாது. நமக்குப் புத்தி, பணம், சக்தி இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. சர்.ராமசாமி, சர்.சண்முகம் போன்ற டஜன் கணக்கான சர்கள், நாட்டுக்கோட்டை யார்கள், மில் முதலாளிகள், ஆயிரக்கணக்கான வேலி நிலம் கொண்ட நூற்றுக்கணக்கான மிராசுதார்கள், இராஜாக்கள், ஜமீன்தாரர்கள் ஆன கோடீவரர்கள் இல்லையா? மற்றும் நினைத்தால் தண்டவாளம் பெயர்க்க, கட்டடம் இடிக்க, கடையை மூட, பள்ளியை மறியல் செய்யச் சக்தி உள்ள நாசவேலை வீர ஆண்கள் இல்லையா? எதிரிகளுக்கு ஆதரவளித்து, அன்னக்காவடிகளையும் ஆட்சி பீடத்தில் அமர்த்தி தலைவர்களாக்கி நம்மை அடக்க கைதூக்கும் 5ஆம் படை இல்லையா? என்ன இல்லை நம்மிடம்? ஆனால் மானம், இன உணர்ச்சி, நாட்டுவுணர்ச்சி நம் சமுதாய இழிவைக் கண்டு வெட்கப்படும் தன்மை, பொது நலத்துக்கு ஆகச் சிறிதாவது தன்னலம் விட்டுப் பாடுபட வேண்டும் என்கின்ற மனிதத் தன்மை ஆகியவை இல்லை என்பது தான் நமக்கு பெருங்குறையாக இருக்கிறது.

இந்தக் குறை நமக்கு ஏற்பட்டதற்குக் காரணம் நமது மதம், நமது உயர்தரக் கல்வி நம் பண்டிதத் தன்மை என்பவை ஒருபுறமிருந்தாலும் நமக்குப் பயன்படாதவும் நம் எதிரிகளுக்கு கூலியாக, கையாளாக, ஒற்றர்களாக இருக்கத் துணிந்து, வாழ்க்கை நடத்தவும் துணிந்து நம் பிரதிநிதிகள் என்று வேஷம் போட்டு நம்மை ஏமாற்றும் ஆட்களை நாம் சரிவர வெறுப்பதில்லை. அவர்களைச் சரிவர மக்கள் உணர்ந்து வெறுக்கும்படி நாம் எடுத்துக் காட்டுவது இல்லை, அப்படிப்பட்ட ஆளுக்கொருவர் இடம் அற்ப காரணங்களுக்கு நமது மான உணர்ச்சி உள்ள மக்களும், மாணவர்களும், சலுகை காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். இது தான் நம் நாட்டில் நம்மவர்களில் இத்தனை கேடானவர்கள், பயனற்றவர்கள் இருந்து கொண்டு நம் சமுதாயத்தின் பேரால் மதிப்பும், பயனும் அடையக் காரணமாகும்.

உதாரணமாகச் சென்ற மாதம் நமது நாட்டுக்கு வந்திருந்த தோழர் காந்தியாரை அவர் நம் எதிரிகளின் கைஆள் என்று யாருக்குத் தெரியாது? அவர் எதற்கு ஆக வந்தார்? என்ன செய்தார்? என்ன சொன்னார்? எவ்வளவு லாபத்தோடு போனார்? என்பதெல்லாம் யாருக்குத் தெரியாத இரகசியம்? சொல்லுங்கள் பார்க்கலாம்.

அவரை அழைத்தவர்கள் பார்ப்பனர்கள்; அவர் இருமருங்கிலும் அர்த்தநாரி போல் ஓட்டிக்கொண்டிருந்த வர்கள் பார்ப்பனர்கள்; அவர் இறக்கப்பட்டது பார்ப்பனக் கோட்டையில்; அவர் உடலை ஒரு பார்ப்பனரிடம் சிகிச்சைக்கு விட்டுவிட்டார்; அவர் புத்தியை ஒரு பார்ப்பனரிடம் நடத்த விட்டுவிட்டார், அவர் பிரசாரம் செய்தது பார்ப்பன (இந்தி) மொழியில்; அவர் வேலை செய்தது பார்ப்பன உயர்வுக்கு ஏற்ற (இராம) பஜனை, அவர் உபதேசித்தது பார்ப்பனப் புராணம்; அவர் காட்சியளித்தது பார்ப்பன பக்த சிகாமணி (மகாத்மா)யாக; அவர் இந்தத் தமிழ்நாட்டில் நாணயமும் சக்தியும், திறமையும், தகுதியும் உடையவராக ஒருவர் இருக்கிறார் என்று எடுத்துக் காட்டியது ஒரு (ஆச்சாரிய) பார்ப்பனரை, அவரைக் கண்டு இரகசியம் பேசி அறிவுறுத்திவிட்டுப் போனவர்கள் யாவரும் பார்ப்பனர்கள்; அவரே (காந்தியாரே) நேராக இரண்டு மூன்று தடவை தேடிப்போய்ப் பேட்டி கண்டு மரியாதை செலுத்திப் பொதுமக்களுக்கும் காந்தியார் மரியாதை பெற்ற பிரம்மாண்டமான பெரிய மனிதர் என்று கருதும் படியான பெருமை கொடுக்கப்பட்டதும் ஒரு பார்ப்பன (ஸ்ரீனிவாச சாதிரியா)ருக்கு, அவர் காரியங்களில் கலந்து கொண்டது அத்தனைபேரும் பார்ப்பனர்கள், அவருக்கு ஆலாத்தி எடுத்து, குங்குமம் வைத்தது பார்ப்பனத்திகள் என்கின்ற இவைகள் யாருக்குத் தெரியாத இரகசியம் என்று கேட்கின்றேன்.

ஆனால் அவர் காலில் விழுந்தவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர் அல்லாத தமிழர்கள், அவர் காலைத்தொட்டு கும்பிட்டவர்கள் தமிழர்கள், பஜனையில் கலந்து கொண்டு சொரணை அற்றுச் சொக்கினவர்கள் தமிழர்கள், அவருக்கு மூட்டை மூட்டையாகப் பணம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றவர்கள் தமிழர்கள்; அதுவும் வெறும் தமிழர்கள் அல்ல, தமிழ் இனம் என்று சொல்லிக் கொள்ளும் நாட்டுக் கோட்டையார்கள், மில் முதலாளிகள், மிராசுதார்கள் ஆகிய தமிழர்கள். நகைகள் கழற்றிக் கொடுத்து விழுந்து கும்பிட்டு நல்வாக்குப் பெற்றவர்கள் இவர் (தமிழர்)களின் மனைவி மக்கள்மார்கள்.

இவ்வளவு மாத்திரமா, கண்ணில் படக்கூடிய தூரத்தில், காதுக்கு எட்டும் தூரத்தில்தான் நான் காத்துக்கிடந்தேன். என்னை ஏன் என்றுகூடச் சட்டை செய்யவில்லை, என் மீது என் எதிரி (பார்ப்பனர்)கள் சுமத்திய குற்றத்தை விசாரிக்கக் கூட என்னைச் சமாதானம் கேட்டுப் பார்க்கக் கூட கருணை காட்டாமல் ஒருதலைப் பட்சமாய் தண்டித்து விட்டாரே என்று அழுதவரும் (தமிழர் தலைவர், தமிழ்நாட்டு ராஷ்டிரபதி) தமிழரே ஆவார். காந்தியாரால் கெட்ட அர்த்தத்தில் படும்படியான (விஷமக்கும்பல் என்ற) கடுஞ்சொல் சொல்லப்பட்டவர்கள் தமிழர்கள், இதற்காகக் குறை இரந்து நின்றவர்கள் தமிழர்கள், ஆம் நான் அப்படித்தான் சொன்னேன், இனியும் சொல்லுவேன். இஷ்டமிருந்தால் தலைவராக இரு, இல்லாவிட்டால் போ என்று உதாசீனப்படுத்தப்பட்டவன் தமிழன்.

இவ்வளவு போதாதா காந்தியார் நம் எதிரிகள் கூலி என்பதற்கும் தமிழ் மக்கள் மானமற்றும் எதிரிகளுக்கு கையாட்களாக இருப்பதில் பெருமை கொள்ளுபவர்கள் என்பதற்கும் அத்தாட்சி என்று கேட்கிறேன்.
காங்கிரசில் இருக்கும் தமிழ் மக்களுக்குக் காங்கிரசும், காந்தியார் போலவே தமிழ் மக்களின் எதிரிகளது கையா யுதம் என்பது உண்மையிலேயே தெரியாதா என்று கேட்கிறேன்.

தமிழ்நாட்டில் தமிழன் சட்டசபை மெம்பர் ஆவதற்கோ மந்திரி ஆவதற்கோ பார்ப்பனர் கடாட்சம் இல்லாவிட்டால் பார்ப்பனர்களது அடிமையாய் இல்லாவிட்டால் முடியாது என்பது எந்தக் காங்கிர தமிழராவது தனக்குத் தெரியாது என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறேன்.

பார்ப்பனரை விரோதித்துக் கொண்டால் தம்மால் வாழ முடியாது என்பது இந்த நாட்டில் எந்த சர் தமிழராவது, கோடீசுவரர் தமிழராவது, மில் முதலாளி தமிழராவது, மிராதார் தமிழராவது, இராஜா தமிழராவது, ஜமீன்தார் தமிழராவது அறியாததா என்று கேட்கிறேன். அல்லது இவர்களில் யாராவது காந்தியாரோ, பார்ப்பனரோ, காங்கிரசோ நம் இனத்திற்கு விரோதமானதென்றும் பார்ப்பன வாழ்வுக்கு ஏற்றதென்றும் தெரியாதவர்கள் உண்டா என்று கேட்கிறேன்.
இப்படிப்பட்ட மானமற்ற இன உணர்வற்ற இழிதன்மை யில் சுயநலம் தேடுகிற மக்கள் பார்ப்பனர்களில் யாராவது இருக்கிறார்களா என்று சொல்லுங்கள் பார்க்கலாம். முசுலிம்களில் யாராவது இருக்கிறார்களா? கிறிதவர்களில் யாராவது இருக்கிறார்களா? வெள்ளையர்களில் யாராவது இருக்கிறார்களா? ஆங்கிலோ இந்தியர்களில் தானாகட்டும் யாராவது இருக்கிறார்களா?
உலகத்தில் இல்லாத இழிகுணங்கள், மானமற்ற தன்மைகள் தமிழனுக்குத் தானா, பிதுரார்ஜித சொத்தாக இருக்க வேண்டும்?

மாணவர்களே, இளைஞர்களே, இந்த இழிநிலை நீக்கப்படுவதற்கு ஆக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்; இந்த உங்கள் பிதுரார்ஜித சொத்தை தூ வென்று காரித்துப்புங்கள். இப்படிப்பட்ட உங்கள் பெற் றோர்களை மனித உருவம் தாங்கிய கீழ்த்தரப்பிராணி என்று கருதுங்கள். அவர்கள் யாராய் இருந்தாலும், சர் முதல் சாஹேப் வரை, கோடீவரர் முதல் மில்முதலாளி முதல் மிராசுதார் வரை மற்றும் எப்படிப்பட்ட பட்டம், பதவி, பணம், பெருமை, நாளைக்கு முதல் மந்திரி, கவர் னர் வைசிராய் ஆகக்கூடிய தன்மை உடையவர்களாக இருந்தாலும், வெறுத்துக் கொடும்பாவி கட்டி இழுங்கள். அவர்கள் வயிற்றில் பிறந்த இழிவுக்காக கொடும் பாவிக்கு முன் கொள்ளிச் சட்டி தூக்கிக் கொண்டு நடவுங்கள்.

நாம் யார்? நம் உண்மை சரித்திரம் எப்படிப்பட்டது? உலகில் நம் பழைய அந்தது என்ன? எதிரிக்கு ஜே போடுவது, எதிரியைக் கண்டு நடுங்கி நரித் தந்திரம் செய்வது, எதிரியைக் கைகூப்பித் தொழுது ஈன வாழ்வு வாழுவது ஆகிய குணம் தானா நமக்கு நம் கடவுள் களும் மதமும் கலை காவியங்களும் கற்பித்தது? நம் சரித்திரத்தில் இதுதானா சொல்லி இருக்கிறது? கலை இரசிகர்களே, காவிய ரசிகர்களே, பாவம் கண்டு பரவசப்படுபவர்களே, இலக்கிய இரசிகர்களே, இராம பக்தர்களே, முருக பக்தர்களே, செந்தூர் வேலன் பக்தர் களே புராண காவியங்களுக்குப் புதுப்பொருள், கருப் பொருள் நுண்பொருள் கண்டு கலை இரசத்தில் மூழ்கி, கரை காணாமல் இருக்கும் பண்டிதர்களே இவை எல்லாம் உங்களுக்கு கற்றுக் கொடுத்ததும் இவை களால் எல்லாம் உங்களுக்கு ஏற்பட்டதுமான பிரசாத பாக்கியம் இதுதானா என்று கேட்கிறேன்.

இன மானம், தன்மானத்தினும் பெரிது, உண்மையில் பெரியது. அது பட்டம் பெற்ற கல்வியிலும் பெரிது. பணம் ஊற்றுள்ள உத்தியோக தடாகத்திலும் பெரிது. பரம்பரை மகாராஜா பட்டத்திலும், சர்ரிலும் பெரிது. மணிக்கு ஒரு லட்சம் வருவாய் குவியலுக்கும் பெரிது. இதை உணர வேண்டும் என்பதுதான் தேர்தலை வெறுத்ததின் பெரு நோக்கமாகும்.

ஆகவே இனி நம் வாழ்வு, மனித வாழ்வு ஆவ தற்கு மாணவர் இளைஞர்களே நீங்கள் மனம் வைத் தால்தான் உண்டு, உங்கள் எண்ணம் இதைவிடப் படிப் பிலும், பதவியிலும் பணம் தேடுவதிலும் செல்லுமே யானால் உங்கள் பெற்றோர்கள் கொண்டாடும் மதத்தில் பார்ப்பனர்கள் உங்களை வைத்து இருக்கும் இடம் மிகமிகப் பொருத்தமானது என்றே சொல்லுவேன். ஒருபுறம் நீங்கள் அந்த இடத்தை வாயில் வெறுத்துக் கொண்டு காரியத்தில் அந்த நடத்தையைக் கட்டித் தழுவிக் கொண்டிருந்தால் அது நம் இழிநிலையை வலியுறுத்துவதேயாகும்.

தோழர்களே வாருங்கள் வெளியில்! உங்களுக்கு கல்யாணமாகி இருந்தால் உங்கள் மனைவியையும் அழையுங்கள், வராவிட்டால் விட்டொழியுங்கள்!! பிள்ளை குட்டிகள் இருந்தால் அவற்றை அனாதை ஆசிரமத்தில் கொண்டு போய் விடுங்கள், ஆச்சிரமம் இல்லாவிட்டால் மகமதிய அனாதை காப்பு இடத்திலேயோ, கிறிதவ அனாதை காப்பு இடத்தி லேயோ விட்டுவிட்டு வாருங்கள்.

உங்களுக்கு இனி காலம் இல்லை. நாளை இப்படிப்பட்ட காலம் வராது, நாள் ஆக ஆக நீங்களும் உங்கள் பெற்றோர்கள் போல ஆகி உங்களைப் போன்ற பிள்ளைகளைப் பெற்று எதிரிக்கு கையாளான, அடிமையான பிள்ளைகளைப் பெற்று விடத்தான் நேரும்.

எதிரிகளின் அரண் இப் போது கட்டப்படுகிறது. அதை முளையிலேயே இடித்துத் தள்ளத் தயாராகுங்கள், உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் செய்வது என்கின்ற அந்த ஒரு ஒப்பற்ற ஆயுதம் அணுக்குண்டையும் வெடிக் காமல் செய்துவிடும். ஆதலால் எழுங்கள் வரிந்து கட்டுங்கள் புறப்படத் தயாராகுங்கள், சங்கநாதம் ஒலிக்கப் போகிறது. என்பதாக வீர முழக்கம் செய்தார்.

------------------------------------2.3.1946இல் திருச்சி உறையூரில் நடைபெற்ற திராவிடர் கழக ஆண்டுவிழாவிலும், 3.3.1946 காலை திருச்சி சோழங்கநல்லூரில் நடைபெற்ற திருச்சி ஜில்லா மாநாட்டிலும் 3.3.1946 மாலை திருச்சி புத்தூர் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவுத் தொகுப்பு - ”குடிஅரசு” - சொற்பொழிவு - 09.03.1946

22.10.13

அரசமைப்புச் சட்டம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கக்கூறும் இலட்சணம் இதுதானா?


  • சாமியார் ஒருவர் கிளப்பிய புருடாவை நம்பி தங்கம் கிடைக்கும் என்று  பூமியைத் தோண்டும் வேலையில் ஈடுபடுவதா?
  • மத்திய அரசு இதற்குத் துணை போகலாமா?
அரசமைப்புச் சட்டம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கக்கூறும்
இலட்சணம் இதுதானா? நாடு எங்கே போகிறது?
மூடநம்பிக்கை முதுகெலும்பை முறிக்கும் தமிழர் தலைவரின் அறிக்கை
http://www.viduthalai.in/images/stories/dailymagazine/2013/mar/19/29.jpg
ஏதோ ஒரு சாமியார் பூமிக்குள் தங்கம் இருக்கிறது என்று அவிழ்த்துவிட்ட புருடாவை  நம்பி தொல்பொருள் துறை பூமியைத் தோண்டுவதும் உச்சநீதிமன்றம் இதற்குத் துணை போவதும் சரியானது தானா? அரசமைப்புச் சட்டம் கூறும், விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கக் கூறும் இலட்சணம் இதுதானா? நாடு எங்கே போகிறது? என்ற வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்; அறிக்கை வருமாறு:

அறிஞர் அண்ணா அவர்கள் தீட்டி சிறப்பான கருத்துக்களை உள்ளடக்கிய நல்ல தம்பி திரைப்படத்தில் பல்வேறு அரிய தொலைநோக்குச் சிந்தனைகளை கலைவாணர் நகைச்சுவை அரசர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களும், அவரது வாழ்விணையர் டி.ஏ. மதுரமும் சேர்ந்து கூறிடும் அறிவுரைக் காட்சிகள் ஏராளம் உண்டு.

பகுத்தறிவுப் புலவர் உடுமலை நாராயண கவி அவர்களது கருத்தமைந்த பாடல்களும் மேற்கூறிய முற்போக்குப் புரட்சிகர கருத்துக்களுக்கு வலிமை சேர்ப்பதாக அமைந்தன.
அதில் ஒரு பாடல் எட்டு, ஏழு, ஆறு, என்று தொடங்கும்; அதன் வரிகள் சிறப்பான கருத்துக்களைக் கூறும்.

பல்லவி: எட்டு... ஏழு... ஆறு... ஓர்
எட்டு... ஏழு... ஆறு... எல்லாம் தங்கம்...
ஈயாத பேரு ஏமாற்றும் தங்கம்...
சரணம்: தேசிங்குராஜன் செத்தான் - அவனது
தேசம் அழிஞ்ச பின்னாலே...
மாசில்லாத தங்கக் குவியல்
மறைஞ்சிருக்குது மண்ணாலே...
எட்டடி நீளம்.... ஏழடி அகலம்...
கட்டி கட்டியாய் தங்கப் பாளம்
வெட்டிப் பார்த்தால் புதையல் இருக்கும்
வேறெவரிடமும் சொல்லாதே!
என்று டி.ஏ. மதுரம் அம்மையார் பாடுவார்!
ஏராளமான தங்கம் தரையில் உள்ளது என்று ஒருவர் புரளி கிளப்பி, அதனை உண்மை என நம்பி, பலரும் மண்வெட்டிகளைத் தூக்கிக் கொண்டு, நிலத்தை வெட்டி, உழுது பார்த்திட கூட்டம் கூட்டமாகக் கிளம்பி விடுவர்.
அதுதான் பாட்டின் முதல் வரியாகும்; சோம்பேறிகளாக இருந்த மக்களை உசுப்பி விட்டு, தரிசாக இருந்த நிலங்களை உழுது பண்படுத்திடும் நிலையை உருவாக்குவர் என்பது அப்பாட்டின் மய்யக் கருத்தாகும்!

சாமியார் கிளப்பிய புருடா

உலகத்தின் எந்த மூலையிலும் தங்கப் புதையல் வேட்டை நடத்துவது எப்போதாவது நடப்பதுதான் என்ற போதிலும், அண்மையில் எவரோ ஒரு சாமியார் கனவில் ஒருவர் வந்தார்; புதையல் இருப்பதாகச் சொன்னார் என்று கிளப்பிய புருடாவை முன் வைத்து, உ.பி. அரசாங்கம், தொல் பொருள் துறையும் இப்படி இறங்கியிருப்பது, அப்பாவி மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே செல்வது மகா மகா வெட்கக் கேடான மூடநம்பிக்கை அல்லவா?
இந்தப் புரட்டுப் பிரச்சாரத்தை உ.பி. அரசோ, மத்திய அரசோ (தொல் பொருள் துறையினரும்) இதில் இறங்க லாமா?

உச்சநீதிமன்ற தீர்ப்பு உகந்தது தானா?

இதுபற்றி உச்சநீதிமன்ற வழக்கொன்றில், உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியிருப்பது அதைவிட வேதனையான, ஏற்க முடியாத நிலையாகும்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவு - அறிவியல் மனப்பான்மையைப் பரப்பிட வேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படைக் கடமை என்கிறபோது, அந்தப் பொறுப்பு, குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, கடமைகளை நினைவூட்ட வேண்டியது உச்சநீதிமன்றத்தின் முக்கிய கடமை அல்லவா?

அரசின் கொள்கை முடிவுகளிலும் முக்கிய வழக்கு களிலும்கூட கருத்துக் கூறி வேறு வகையான தீர்ப்புக் களை கூறும் உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு, அரசமைப்புச் சட் டத்தின் 51A(h) பிரிவுக்கு உடன் பாடானதாக நமக்கு தெரியவில்லை.

தலைக்குப்புற வீழ்ந்த நரேந்திர மோடி!

அரசியல்வாதிகள் குறிப்பாக பிரதமர் வேட்பாளராக பெரும் அளவில் ஊடகங்களாலும், பா.ஜ.க., வாலும் பெரிதாக விளம்பர வெளிச்சம் போட்டுக் காட்டப்படும் மோடி, இந்த தங்கப் புதையல் வேட்டையை சில நாள்களுக்குமுன்பு கண்டித்துப் பேசி விட்டு, இப்போது தலைக்குப்புற அந்தர் பல்டி அடித்து, அந்த சாமியாரைப் புகழ்ந்து தள்ளியிருப்பது, மோடி எப்படிப்பட்ட பேசு நா இரண் டுடைய அரசியல்வாதி என்பதை நாடு புரிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது!

மின்னணுவியல் - அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்து, செவ்வாய்க் கோளுக்கு, விண்கலத்தை, இந்தியா அனுப்பும் அளவுக்கு உள்ள நிலையில், இப்படி ஒரு தங்க வேட்டை என்று சாமியார்களை - மோசடி மன்னர்களை உயர்த்திக் காட்டுவது, அப்பாவி மக்கள் ஏமாறுவது எல்லோரையும் திருவாளர் 420 (ஏமாற்று மோசடி வேலை)  செய்ய வைப்பது விரும்பத்தக்கதா?
இந்த தங்க வேட்டைக் கனவின் கதையும், அதை ஒட்டிய நடப்பும் நம் நாட்டு அரசியலில் மூடநம்பிக்கைகள் எப்படி ஆட்சி புரிகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது; இது அண்மைக்கால விசித்திரங்களில் தலையானதாக உள்ளது!

ஒரு மத்திய அமைச்சரின் முடை நாற்றம் எடுக்கும் மூடத்தனம்!

மத்திய உணவு பதப்படுத்தும் துறையின் இணையமைச் சரான சரண்தாஸ் மகந்த என்பவரிடம் ஒரு சாது (சாமியார்) கூறினாராம்: இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி - ரூபாய் நாணய மதிப்பின் வீழ்ச்சி - நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க இந்த இடத்தில் தங்கப் புதையலைத் தோண்டினால், அரசு நிதி நெருக்கடிப் பிரச்சினை தீரக் கூடும்; என்று. உடனே இந்த அமைச்சர், பிரதமர், நிதியமைச்சர், உள்துறையமைச்சர், சுரங்கத்துறை அமைச்சர், தொல் பொருள் துறை அமைச்சர், அய்.மு. கூட்டணித் தலைவர் திருமதி சோனியாகாந்தி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி,  புவி ஆய்வுத்துறை GSI (Geologicial Servey of India) எல்லாவற்றிற்கும் எழுதிய பிறகே இது முக்கியத்துவம் பெற்று, பூமி தோண்டும் பணி துவங்கி யுள்ளது. என்றால், இதைவிட (அரசே) இப்படிப்பட்ட கேலிக் கூத்தில் ஈடுபடும் மூடத்தனத்தின் முடைநாற்றம் வேறு உண்டா?

இதைவிட, இஸ்ரேல் போன்ற நாட்டினர் பாலை வனத்தை விவசாயப் பூமியாக்கி உள்ளனரே, அந்தத் தொழில் நுட்பத்தை இறக்குமதி செய்தாலாவது பயன் அளிக்காதா?

நாடு எங்கே போகிறது?

உழைப்பைத் தொலைத்துவிட்டு, ஊர் மக்களை பேராசைப் பிடித்தவர்களாக்கி விடும் நிலையை மத்திய, மாநில அரசுகளே உருவாக்கிடலாமா? இதற்கு உச்சநீதிமன்றம் போன்ற அமைப்புகளும்கூட துணை போகலாமா? நாடு எங்கே போகிறது?

மதச்சார்பற்ற அரசு என்பதும், அறிவியல் மனப்பான்மையை பெருக்குதலும் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா?

வெட்கம்! வேதனை- தேசிய அவமானம்!

-----------------------------------------கி.வீரமணி,தலைவர், திராவிடர் கழகம் சென்னை --”விடுதலை”   22.10.2013