Search This Blog

20.12.12

புளுகுணிப் பூணூல்களே, புரியாதோ நோக்கு?


தந்தை பெரியார் அவர்களை நாக்கில் நரம்பின்றி, வாக்கில் நாணயமின்றி எழுதித் தாக்குவதையே வாடிக்கையாக வைத்துள்ள சோவின் துக்ளக் ஏடு (இது கல்கி குழுமத்தால் - கூட்டத்தால் வெளியிடப்படும் ஏடு என்பதுகூட பலருக்குத் தெரியாது) யாரையாவது ஒரு அரைவேக்காடு எழுத்தாளரை விட்டு எழுதி காசாக்கிக் கொண்டு திரிகிறது.

முன்பெல்லாம் இப்படி எழுதுவதற்கு யோசிப்பார்கள்; இப்போது ஒரு தனி தைரியமும், ஆணவமும் ஏற்பட்டுள்ளன. அதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உண்டு.

1) தங்கள் இனத்தின் ஏகபோக ஆட்சி இங்கே நடக்கிறது;  என்ற திமிர்வாத மனப்பான்மை. (இது அந்த ஆட்சிக்கே ஆபத்தாக முடியப் போகிறது என்பது போகப் போகப் புரியும்).

2) தமிழர்களில் சில பதவி தேடிகளும், நாற்காலிக்காக எதையும் தியாகம் செய்யும் வீடண சுக்ரீவர் அனுமார் கூட்டமும் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கூறி அக்கிரகார ஏடுகளின் சடகோபத்தை, சாங்கோ பாங்கமாகி, விரும்பி  சரணாகதி அடைவதுமாக இருப்பது!

ஆனால் இவை மணல் வீடுகளைப் போல் சரியப் போவது உறுதி. இறுதியில் சிரிப்போர் திராவிடர் இயக்கத்தவர். இடையில் சிரித்து, கடைசியில் அழுபவர்கள் அதன் எதிரிகள்.

சென்ற வாரமும், இந்த வாரமும் அக்கிரகாரத்தின் ஏவுகணையான அப்பு ஒன்று எழுதுகிறது!

தமிழ்ப் பேச ஆரம்பித்தால் அதற்காக பிராயச்சித்தம் செய்து கொள்வார்கள் பிராமணர்கள் என்ற கூற்று உண்மையல்ல என்று எழுதுகிறாரே,
அத்தகைய கோயபெல்ஸ்களுக்கு நாம் ஆதாரபூர்வமாக மறுப்புரை தருகிறோம்.

இன்றும் உடுமலைப்பேட்டையில் வாழுபவர் பிரபல வரலாற்றுப் பேரா சிரியரான 98 வயது நிறைந்த  டாக்டர் என். சுப்ரமணியன் அவர் கள்; இவர்  பேராசிரியர்களின் பேராசிரியர் என்ற பெருமை பெற்றவர்.

தனித் தன்மையான சிந்தனையாளர், அவர் இன்றும் இடையறாமல் எழுதிக் கொண்டே இருக்கும் இணையற்ற சிந்தனையாளர்.

பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய தன் வரலாற்றில் குறிப்பிட் டுள்ள தகவல்:   

அவர் காரைக் குடியில் இருந்தபோது தமிழாசிரியரான அவரது தந்தையார் வித்துவான் பலராம அய்யர் அவர்கள் (இவர் பழைய சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரருக்கு ஆசிரியர்)  அவரிடம் படித்தவர் - விழுப்புரத்தில் இருந்தவர்.

சுவாமிகள் வந்து ஒரு வாரத்திற்கு மேலாக அங்குத் தங்கியிருந்தாராயினும், தலைமை யாசிரியர் உட்படப் பல பிரமுகர்கள் சுவாமிகளைப் போய்ப் பார்த்து ஆசி பெற்று வந்தனராயினும், எந்தையார் மட்டும் போகாமலே இருந்தார்.
தாங்கள் போகும்போது இவரையும் உடன் அழைத்துச் செல்ல விரும்பிய சிலருக்கு ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி அனுப்பி விட்டார்.

தமிழ்ப் பண்டிதர் மாசிலாமணி தேசிகர் எனக்கு 12.7.1960இல் எழுதிய ஒரு விரிவான கடிதத்தில் இதைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டு மேலும் கீழ்க் கண்டவாறு எழுதுகிறார்.

சுவாமி கள் ந.ப. (ந. பலராமன், சுப்ரமணியம் அவர்களின் தந்தையார்  தமிழா சிரியர்) அவர்களிடம் பயின்ற பழக்கத்தால் வலுவிலே அழைத்துப் பார்த்தார்கள். ந.ப. அவர்கள் சுவாமிகளிடம் செல்லவில்லை. யான் ஒரு சமயம் தனித்து ஏன் மறுக்கிறீர்கள்? என்று கேட்டேன்.

அதற்கு ந.ப. அவர்கள் மறைக்காமல் சொன்னதாவது: தமிழ் நாட்டில் தமிழ் மக்களாலே பாராட்டப்படும் பீடத்தினர்.

அப்படியிருந்தும் பூஜைக்குச் செல்ல நீராடிய பிறகு வடமொழியிலேதான் பேசுவார்களாம். தமிழிலே பேசினால் ஆச்சாரக் குறைவு என்று கருது கிறார்கள். பூஜை முடிந்து போஜனம் ஆனபின் தான் தமிழிலேயே பேசுவார்களாம். ஆதலால்  அரிய தமிழை அநாதரவு செய்கிறவர்களை ஏன் பார்த்தல் வேண்டும்? என் றார்கள்.

இத்தகவலை பேராசிரியர் டாக்டர் என். சுப்ரமணியம் அவர்கள் என் வாழ்க்கை வரலாறு நூலில் (பக்கம் 83-84) எழுதியுள்ளார்!

இவர் இன்னமும் உடுமலைப் பேட்டையில் வாழ்ந்து கொண் டுள்ளார்.
தந்தை பெரியார் கூறிய கருத்து முன்னாளில் எப்படி தமிழை நடத்தினார்கள் என்று கூறியதின் உண்மையே தவிர வேறென்ன?

தமிழை நீச்சப் பாஷை என்று ஒதுக்கி வைத்து, கோயில்களில் திருவாசகத்தையோ, தேவாரத்தையோ ஓதாமல், திருப்பாவை, திருவெம்பாவைகளுக்கு இடமின்றிச் செய்து, சமஸ்கிருத மந்திரங்களில் தான்வழிபாடு, பூஜை புனஸ்காரம் நடத்த வேண்டும் என்று இன்றும் நடைமுறையில் கடைப்பிடிப்பது பொய்யா?

எந்தப் பார்ப்பனராவது - எவ்வளவு சீர்திருத்தம் - லவுகீகம் பேசினாலும்கூட, தங்கள் திருமணச் சடங்கில் தமிழை, தமிழரைப் பயன் படுத்தி நடத்திக் கொண்டதுண்டா?

கலைஞர் கருணாநிதி அவர்கள் குடும்பத் திருமணம் ஒன்றில் வாழ்த்த சோவை அழைத்தபோது, அவர் பேசி, சமஸ்கிருத சுலோகத்தோடு, அப்பேச்சை முடித்தது இக்கட்டுரையாளரால் மறுக்க முடியுமா? அந்த மனப்பான்மைக்கு என்ன அடையாளம்?

முன்பு திருவையாறு தியாகப் பிரம்ம உற்சவத்தில், தியாகய்யர் அஞ்சலியில் பாட்டுப் பாடிய தண்ட பாணி தேசிகர் சித்தி விநாயகனே என்ற பக்தித் தமிழ்ப் பாட்டுப்பாடி மேடையை அசுத்தப்படுத்தி தீட்டாக்கி விட்டார் என்றுகூறி, அடுத்துப் பாட வந்த பார்ப்பன சங்கீத வித்துவான் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் மேடையை சாணம் போட்டு மெழுகி சுத்தம் செய்த பிறகே பாடுவேன் என்று அடம் பிடித்ததை மறுக்க முடியுமா?  இதுபற்றி குடிஅரசில் (9.2.1946) தீட்டாயிடுத்து என்று கலைஞர் எழுதியதுண்டே!

முதன்முதலாக பழைய தமிழ் ஏடுகளை - தமிழ் இலக்கியங்களைத் திரட்டியவர் உ.வே.சாமி நாதய்யர் என்பதேகூட சரியான தகவல் அல்ல.
அதற்குப் பலகாலம் முன்பே தமிழறிஞர் தாமோதரனார் இந்த அரும்பணியை முன்னோடியாக இருந்து துவக்கியவர் என்பது மறைக்கப்பட்ட வரலாறாக ஆகி விட்டதே!

குருவாக இருந்தவருக்கு மரியாதை செலுத்திய பிறகும் சாப்பாடு என்பதற்குப் பதிலாக போஜனம் என்று சொல்லப் படாதோ என்று கேட்டவர்தானே இந்த தமிழ்த் தாத்தா! புரியாதோ நோக்கு?


  -------------------------- ஊசி மிளகாய்- 20-12-2012 “விடுதலை”யில் எழுதிய கட்டுரை

19.12.12

பெரியாரின் இறுதிக் குரலைச் செவிமடுங்கள்!

தந்தை பெரியார் பேசுகிறார்!

இன்றுதான் (1973) தந்தை பெரியார் அவர்கள் மரண சாசனமாக தன் உரையை சென்னை தியாகராயர் நகரில் இறுதியாக நிகழ்த்திய நாள்.
அந்த உரையில் அனேகமாக அத்தனைக் கருத்துகளையும் தொலைநோக்கோடு எடுத்துக் கூறியுள்ளார்.

1. நமது கலைஞர் கருணாநிதி அவர்கள் கல்லுதான் - யார் வேண்டுமானாலும் பூசை செய்யலாம் என்று எல்லோருக்கும் அனுமதி கொடுத்தார். பார்ப்பான் கோர்ட் சுப்ரீம் கோர்ட் என்றால், அதிலே தமிழனுக்கு இடமே இல்லை. போனாலும் அவனுடைய அடிமைதான் போவான். அவன் சாஸ்திரத்தைப் பார்த்துதான் தீர்ப்பு சொல்வான் என்று சொன்னாரே!

அதுதானே இதுவரை நடந்திருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றம் இருமுறை சட்டம் செய் தும், அது செயல்பாட்டுக்கு வர முடியாத அளவுக்கு இந்து லா முட்டுக்கட்டை போட்டு வருகிறதே!

இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த செல்வி ஜெயலலிதாவை முதலமைச்சராகக் கொண்ட அமைச்சரவை இந்தப் பிரச்சினையில் ஆர்வம் காட்டிய நிலையில், 2011 மே மாதத்தில் ஆட் சிக்கு வந்த செல்வி ஜெயலலிதா அம்மையார் இதுவரை இப்படி ஒரு பிரச்சினை இருப்பதையே கண்டுகொள்ளவில்லையே!

பலமுறை தீர்மானம் போட்டு கழகம் வலியுறுத்தியும், அது குறித்து எந்தவிதக் கருத்தினையும் எடுத்து வைக்காதது - ஏன்?

2. அரசியல் ரீதியாகவும் ஒரு கருத்தைத் தெளிவுபடுத்தினார்.
எல்லாக் கட்சிக்காரனும் ஒன்று சேர்ந்து இன்றைக்கு இருக்கிற ஆட்சியை (கலைஞர் தலைமையிலான ஆட்சியை) ஒழிக்கவேண் டும் என்கிறான். ஒழித்தால் ஒழித்துவிட்டுப் போகட்டும். எனக்கு ஒன்றும் கவலை இல்லை. அப்புறம் என்ன இன்றைக்குத் திருட்டுத்தனமாக மறைவாகப் பேசுகிறப் பேச்சை வெளிப்படையாகப் பேசுவான்; பேசுகிறவனைப் பார்ப்பான் மாலை போட்டு வரவேற்பான்  என்றார் தந்தை பெரியார் தம் இறுதி உரையில்.
இன்றைய அரசியல் நடப்பை, ஆட்சி முறையை - அதற்கு ஆதரவு காட்டும் பார்ப் பனர்களின் போக்கைக் கொஞ்சம் அசை போட்டுப் பார்த்தால் தந்தை பெரியார் அவர் களின் தொலைநோக்கு எவ்வளவு துல்லிய மானது என்பது எளிதில் விளங்குமே!

3. ஜாதி ஏன் இன்னும் இருக்கவேண்டும் என்ற வினாவையும் தொடுத்தார் தந்தை பெரியார்.

ஓர் அரசாங்கம் நடக்கவேண்டுமானால், அரசியல் சட்டம் வேண்டும் - ஒத்துக் கொள் கிறேன். அரசாங்கம் இருக்கவேண்டும் என்ப தற்காக சூத்திரன் இருக்கவேண்டுமா? மனிதன்தானே இருக்கவேண்டும் என்று தனது இறுதி உரையிலே தந்தை பெரியார் வினா எழுப்பினார்.

மனிதன் இருக்கவேண்டும் - ஜாதி இருந் தால் அங்கு மனிதன் - மனிதம் இருக்காது! மாறாக மற்ற மனிதனை வெறுப்பாகத்தான் பார்ப்பான் - சகோதரத்துவம் அங்கு முளைக்காது.

இந்த உண்மைக்கு வெகுதூரம் சென்று ஆய்வு செய்யவேண்டாம்; கடந்த நவம்பர் 7 இல் தருமபுரி மாவட்டத்தில் என்ன நடந்தது?

தாழ்த்தப்பட்ட மனிதனை மனிதனாக, சகோதரனாகப் பார்த்தால் மூன்று கிராமங்கள் எரிக்கப்பட்டு இருக்குமா?

எரிக்கப்பட்டதற்குப் பிறகும், அதற்கு வருந்தாமல், அந்தக் கொடுமைக்கு மேலும் உரம் ஊட்டும் வகையில் நடந்துகொள் வார்களா? தூபம் போடுவார்களா?
இந்தியாவின் ஏற்றத் தாழ்வில் முதல் இடத்தில் இருப்பது வர்க்கப் பேதத்தைவிட வர்ணபேதமே!
எனவே, முற்போக்காளர்களே தந்தை பெரியார் அவர்களின் இறுதிக் குரலைச் செவி மடுங்கள்! அதை நோக்கிச் செயல்படுங்கள்! செயல்படுங்கள்!! 

                       ------------------------"விடுதலை” தலையங்கம் 19-12-2012

18.12.12

தருமபுரி சாம்பல்களும் தருமமிகு ஊடகங்களும்

தருமபுரி சாம்பல்களும் தருமமிகு ஊடகங்களும்

(நம் நாட்டில் ஜனநாயகத்தின் 4ஆவது தூண் எப்படி வருண அரசியலின் வார்ப்படங்களாகவும் மனுதர்ம வாரிசுகளாகவும் உள்ளன என்பதை மிக அருமையாக விளக்கியுள்ளார் தீக்கதிர் நாளேட் டின் துணையாசிரியர் அ. குமரேசன் அவர்கள். உண்மைகளை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டும் கட்டுரை - படியுங்கள் - சிந்தியுங்கள்.
- ஆசிரியர்)

தருமபுரியில் என்ன நடந்தது என்பதை விடவும் அதற்கு முன்பும் பின்பும் இந்த தர்மமிகு நாட்டில் என்ன நடந்தது, என்ன நடந்து கொண் டிருக்கிறது என்பது முக்கியம்.

ஒரு காலகட்டத்தில் இங்கே பிராமணிய எதிர்ப்பை மையமாக வைத்து திராவிட இயக்கமாக ஓர் அரசியல் அணித் திரட்சி வேலை நடந்தது. பிற்காலத்தில் அதன் வெளிச்சத்தில் ஆட்சியதிகாரத்திற்கே வந்தவர்களது கூச்சமற்ற சமரசங்களில் விமர்சனங்கள் இருக்கலாம் - ஆனால், அப்படி யொரு இயக்கத் திற்கான தேவை இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு, அனைத்து சாதியி னரும் அர்ச்சகராவதற்கான சட்டம், ஆலயங்களில் தமிழ் அர்ச்சனை, தேவதாசி முறை ஒழிப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பெண்களுக்கான சில பாதுகாப்புச் சட்டங்கள் இவையெல் லாம் நடைமுறையாகியிருப்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

இன்று, தலித் மக்களுக்கு எதிராகப் பிற்படுத்தப்பட்டோரையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரையும் - சுருக்க மாகச் சொல்வதானால் பிராமணர் அல்லாதாரை - அரசியலாகத் திரட்டுகிற வேலை நடக்கிறது. தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், கூலிங் கிளாஸ் அணிந்து பிறசாதிப் பெண் களை மயக்குகிறார்கள் என்று சொல்லி பெண்களை அவமானப்படுத்துகிற கூச்சமற்ற வெறியூட்டல்கள் நடக் கின்றன. முந்தைய இயக்கம் ஒரு வரலாற்றுத் தேவை என் றால், இன்று நடப்பது வரலாற்றுச் சக்கரத்தைக் கடந்த காலத்திற்குத் திருப்புகிற ஆதிக்க சாதிய அயோக்கியத்தனம்.
முற்போக்காளர்களும் ஜனநாயக வாதிகளும் கவலைப்பட வேண்டிய விசயம் - பொது எதிரிகளான ஆளும் வர்க்கத்தினரையும் நாட்டைக் காட் டிக்கொடுக்கும் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடுவதற்காக ஒன்று பட வேண்டிய உழைப்பாளி மக்களை இது கூறுபோடுகிறது. ஒரு பகுதி பாட்டாளி தனது சமூகம் யாரோலோ மிதி படுவதை விடவும், தன் காலில் மிதிபடு வதற்கு இன்னொரு சமூகம் இருப்பதில் மனநிறைவு கொள்கிற, பாட்டாளிவர்க்கக் குணத்திற்கே நேர் மாறான சிறுமைத்தனத்தைக் கெட்டிப்படுத்தும் கைங்கர்யம் இது.

கள்ளச் சிரிப்பு சிரிக்கிறான் மனு.

அந்தச் சிரிப்பு இந்தியாவின் ஊடகக் களத்திலும் ஊடுருவி ஒலிக் கிறது, தலித் மக்கள் மீது தாக்குதல் நடக்கிறபோது, ஒன்று காவல் துறையோ மற்ற அரசு இயந்திரங்களோ அசைவதில்லை. அப்படியே நட வடிக்கை எடுத்தாலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில்லை. கல்வி உள்ளிட்ட அரசுத்துறைகளில் தலித்துகளுக்கான இடங்கள் நிரப்பப்படுவதில்லை. இதற் கெல்லாம் காரணம், காவல்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங் களின் உயர் அதிகார நாற்காலிகளில் தலித்து கள் கிட்டத்தட்ட அறவே இல்லை என்கிற அளவுக்கு மிகக்குறைவானவர்களே இருப்பதுதான்.
அதே நிலைமைதான் ஊடகங்களி லும். இந்தியாவின் பெரும் வர்த்தக ஊட கங்களின் செய்தித் தயாரிப்பு அறைகளில் - 1992ல் ஒரு தலித் கூட இருக்கவில்லை. இன்று 2012ல் அதே நிலை - கிட்டத்தட்ட ஒரு தலித் கூட இல்லை என்ற நிலைமை தான்.  இந்த ஆய்வை நடத்தியவர் - கென்னத் ஜே. கூப்பர் என்ற ஒரு அமெரிக்க-ஆப்பிரிக்கர். 2006ல் நடத்தப்பட்ட அவரது ஆய்வின் படி, இந்திய ஊடகங்களில் முடிவெடுக்கும் இடங்களில் - குறிப்பாகப் பெரும் தனியார் ஊடகங்களில். இருக்கும் 300 முக்கிய ஊடகவியலாளர்களில் ஒருவர் கூட தலித் இல்லை. பழங்குடியினரும் இல்லை. தொலைக் காட்சிகளின் தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்போரில் ஒருவர்கூட தலித், பழங்குடியினர் இல்லை. இன்றைய நிலைமையில் எங்காவது ஓரிருவர் இருக்கக்கூடும்.

பிறகு எப்படி இந்த பெரிய ஊடகங் களில் தலித் மக்களின் உண்மை நில வரங்கள் வெளிவரும்? தமிழ் சினிமா விலும் இதே நிலை தான்.
எனக்குத் தெரிந்து தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு கதாநாயக நடிகர் விக்ரம். அது பொதுவாக யாருக்கும் தெரியாது - ராம நாதபுரம் மாவட்ட ஆதிக்கசாதியினரைத் தவிர. அவரது தெய்வத்திருமகன் படத்தின் பெயரை அவர்கள் எதிர்த்த தற்கு முக்கிய காரணம் அவர் பிறப்பால் ஒரு தலித் என்பதே.
ஏன் - இசைஞானி இளையராஜாவை இங்குள்ள சில பெரிய பத்திரிகை நிறுவனங்கள் எப்போது அங்கீகரித்து அட்டைப்படம் போட்டார்கள் என்றால், அவர் மேல்தட்டினரின் ரசனைக்கேற்ற ஜனனீ ஜனனீ என்ற பாட்டுக்கு இசையமைத்த பிறகுதான்.

அமெரிக்காவில் உள்ள அமெரிக்க ஸ்பானியர்கள், அமெரிக்க ஆப்பிரிக்கர் கள் அந் நாட்டு ஊடகங்களில் இல்லாத நிலை உள்ளது.
அதன் விளைவு, இந்த மக்கள் பற்றி இதர மக்களிடையே பரவியிருக்கும் 

கருத்து: இவர்கள் வெளியே பயணிப்பதே இல்லை. முறை யாகச் சாப்பிடுவதில்லை. முறையான திருமண உறவு கிடையாது...
இதே போன்ற மனநிலை இங்கேயும். தங்களது பெண்ணுக்கு வேறு சாதிகளில் கூட மாப்பிள்ளை பார்க்க முன்வந்த பெற்றோர், அந்த சாதி மட்டும் வேண்டாம் என்று என்னிடம் சொன்னார்கள். ஏன் வேண்டாம் என்று கேட்டபோது, அவங்க திருந்தவே மாட்டாங்க, என்றனர். எந்த வகையில அவர்கள் கெட்டுப்போயிருக் கிறார்கள், திருந்துவதற்கு, என்று நான் விடாமல் கேட்டபோது, மாப்பிள்ளை தேடும் விசயத்தை என்னோடு பேசுவ தில்லை என்று முடிவெடுத்தார்கள்.
இந்த மனநிலையை இறுகிப்போக வைப்பதில் ஊடகங்களின் பங்களிப்பு அல்லது பங்களிப்பின்மை முக்கிய பங் காற்றுகிறது. தலித் இயக்கங்கள் நடத்தும் ஏடுகள், தலித் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கும் இயக்க ஏடுகள் தவிர்த்து, பெரும் வர்த்தக (கார்ப்பரேட்) ஊடகங்களின் ஆசிரியர் குழுக்களில் தலித் எழுத்தாளர்கள் கிடையாது.

தில்லியின் மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகக் கல்லூரியின் (யுசிஎம்எஸ்) தலித் மாணவர்கள் 1995ல் ஒரு தொடர் போராட்டம் நடத்தினர். கல்லூரியில் பயிலும் பிற சாதி மாணவர்கள் தங்களை இழிவுபடுத்துகிறார்கள், உணவகத்தில் அவர்கள் வரும் நேரத்தில் இவர்கள் சாப்பிட அனுமதிப்பதில்லை, சாதிப்பெயர் சொல்லித் திட்டுகிறார்கள் என்பது அவர்களது புகார்கள். அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு முடிவு அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தோர் கலவரத்தில் இறங்கியபோது, அதை ஏதோ சத்திய ஆவேசப் போராட்டம் போல தினமும் செய்தி வெளியிட்ட ஏடுகள், தலித் மாணவர்களின் இந்தப் போராட்டத்தைக் கண்டுகொள்ளவே இல்லை.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் பரவட்டும் என இந்த நெருப்பைப் பரப்புக என்ற தலைப்பில் தலையங்கம் எழுதிய பத்திரிகையாளர் உண்டு. அவருக்கு வாஜ்பாய் அரசில் அமைச்சர் பதவியும் கிடைத்தது. இட ஒதுக்கீட்டையே குழிதோண்டிப் புதைப்ப தற்கான பொதுத்துறை கைகழுவல் துறை ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அது அவரிடம் ஒப்படைக்கப்பட்டது!
உயர்கல்வியில் இட ஒதுக்கீடு முடிவு அறிவிக்கப்பட்டபோது, எருமை மாட்டின் மீது செல்கிற சிறுவனுக்கு அமைச்சர் டாக்டர் பட்டம் தருவது போன்ற கார்ட்டூன் வெளியிட்டது ஒரு பெரிய ஆங்கில நாளேடு.
தமிழகத்திலேயேகூட, சென்னை யில் சட்டக்கல்லூரி வளாகத்தில் பிற் படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை தலித் மாணவர்கள் தாக்கிய நிகழ்வை (அந்த வன் முறையை நியாயப்படுத்துவதற்கில்லை என்பது வேறு விவகாரம்) நேரடி ஒளிபரப்பாகவும், மறு மறு மறு ஒளி பரப்பாகவும் பரப்பிய தமிழகப் பெருந் தொலைக்காட்சி நிறுவனங்கள், பரமக்குடி, தருமபுரி, கடலூர் உள்பட தலித் மக்கள் தாக்கப்பட்ட கொடுமை குறித்து அந்த அளவுக்கு முக்கியத் துவம் கொடுக்க வில்லையே?
தருமபுரியில் நடந்தது திட்டமிட்ட தாக்குதல்தான் என்பதற்கு சுயசாட் சியமாக சில தலைவர்கள் பேட்டியளித் திருக்கிறார்கள். பொருள்கள்தானே அழிக்கப்பட்டன, யாருடைய உட லுக்கோ உயிருக்கோ இன்னல் ஏற் படுத்தவில்லையே என்கிறார் இன் னொருவர். மேல் சாதிக்கு சமமான நிலை வர வேண்டுமானால், தங்களின் விந்து மேல் சாதிப் பெண்களின் உட லுக்குள் சென்றாக வேண்டும் என்று தலித் இளைஞர்கள் நினைக்கிறார்கள் என்று காதல் உறவுகளைக் கொச்சைப் படுத்தி தனது சமூகத்தினருக்கான தலைமைப்பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முயல்கிறார் மற்றொருவர். இப்படிப்பட்டவர்களை அழுத்தமாகக் கண்டிக்க எந்தப் பெரிய ஊடகம் முன்வந்தது? தீக்கதிர் எழுதியது.

உத்தப்புரம் பிரச்சனையில், சுவரை எழுப்பியவர்களின் துயரத்தைத்தான் நம் ஊடகங்கள் பெரிதுபடுத்தின என்பதை மறக்க முடியுமா? இன்று அங்கே இரு தரப்பு மக்களும் இயல்பாக இணைந்து வாழ்கிறார்கள். இந்த இணக்கத்தை ஏற்படுத்தியது மார்க் சிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை முன்னணி யும்தான் என்று பாராட்டு கிறார் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு. ஏன் பெரிய ஊடகங்கள் ஒரு வரிச் செய்தியாகவாவது வெளியிடவில்லை?
ஊடகங்களின் இந்தத் தொடர்ச்  சியான அணுகுமுறைக்குக் காரணம், அவர்களுக்குள்ளேயும் மனுவாதம் ஊறிப்போயிருக்கிறது. வர்க்க அரசியல் போலவே ஆழமான வர்ண அரசியல் என்பதை மறுக்க முடியுமா? நடுநிலை என்பது அவர்கள் போட்டுக் கொண்டி ருக்கிற ஒப்பனை என்பதை மறக்க வேண்டுமா?

இதன் விளைவு என்ன?

தலித் மக்களின் அவலங்கள் வெளியே தெரியாது. அதை தீவிரவாத சக்திகள், குறுங் குழுவாத கும்பல்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. தலித் மக்களுக்கு எதிரான சிந்தனைகள் தொடர்கின்றன. இட ஒதுக்கீடு எதிர்ப்புக் கொந்தளிப்புகள் அவ்வப் போது கிளப்பிவிடப்படுகின்றன. அரசமைப்பு சாசனத்தின் சமத்து வம், சகோரதத்துவம் என்ற லட்சியங்கள் எள்ள லுக்கு உள்ளாக்கப்படுகின்றன. சமூகப் பன்முகத்தன்மை மறுக்கப் படுவதால் மேலோங்குகிறது ஒற்றைப் பண்பாட்டு ஆதிக்கம். உலக அரங்கில் குனிந்த இந்தியாவின் தலை நிமிரவே முடியாமல் போகிறது.

மனு வாதத்தின் மறு அவதாரமான ஊடகங்கள்!

                    --------------------------நன்றி: தீக்கதிர் வண்ணக்கதிர் - 16.12.2012


17.12.12

ஆலமரத்துக்கும், ஆண் குழந்தைக்கும் என்ன சம்பந்தம்?

ஆலமரத்துக்கும், ஆண் குழந்தைக்கும் என்ன சம்பந்தம்?

இது என்ன குருட் டுத்தனமான கேள்வி. சம் பந்தா சம்பந்தம் இல்லாத கேள்வி என்று எடுத்த எடுப்பிலேயே கேட்க தோன்றும்.

ஆனால் சம்பந்தம் இருக்கிறது என்று கூறி அந்த ஆலமரத்தையே வெட்டி இருக்கிறார்கள் என்றால் யாரும் எளிதில் நம்ப  மாட்டார்கள்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே தானத்தம்பாளையத்தில் தான் இந்த அநியாயம்  நடந்திருக்கிறது.

இந்த ஊரில் 35 குடும்பங்கள் உள்ளன; ஆனால் ஆண் வாரிசு கிடையாதாம். 50 ஆண்டுகளுக்கு முன் சின்னப்பன் கவுண்டர் என்பவருக்குத் திருமணம் நடந் தது. ஆண் வாரிசு இல்லை; இரண்டாவது கல்யாணமும் செய்தார்; அதிலும் பலன் கிட்ட வில்லை.

அவ்வளவுதான் யாரோ ஒரு கிறுக்கன் சொன்னானாம்; ஊருக்குள் ஆலமரம்  வைத்தால் ஆண் வாரிசு பாக்கியம் கிட்டும் என்று சொல்ல, சின்னப்பக் கவுண்டர் ஆலங்கன்று வைத்து மரத்தை உண்டாக்கினார்.

மூன்றாவது கல்யாணம் செய்தார் ஆண் குழந்தை பிறந்ததாம். பிறகு யாருக்கும் ஆண் குழந்தையே இல்லையாம். ஊருக்குள் இன் னொரு ஜோசியக்காரன்  ஒன்றைக் கொளுத்திப் போட்டானாம். ஆல் தழைத்தால் ஆண் வாரிசு தரிக்காது என்றானாம் - அந்த (ஆல)மர மடையன்!
உடனே ஊர்கூடி ஆல மரத்தை மொட்டையடித் தனர் - வேரில் ஆசிடும் ஊற்றினர்.

விடயம் வட்டாட்சியருக்குத் தெரியவே. பறந்து வந்தார் அந்தவூருக்கு. ஆலமரத்தை வெட்டியது சட்ட விரோதம் என்றுகூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு சோதிடன் ஆண் வாரிசுக்கு ஆலமரம் வேண்டும் என்றான். இன்னொரு சோதிடனோ ஆல் தழைத்தால் ஆண் வாரிசு தழைக்காது என்றான்.
யார் சொல்லுவது உண்மை? அப்பனும்  -பிள்ளையும், கழுதையைச் சந்தைக்குக் கொண்டு சென்ற கதையாக அல்லவா இருக்கிறது.
ஆல மரத்தை வெட் டினால் அதிகாரிகள் வருவார்கள் என்று  எந்த சோதிடனும் சொல்லவில்லையே! குழந்தை பிறப்பு ஆண் - பெண் பிறப்பு என்பதற்கு மருத்துவ ரீதியாக பல காரணங்கள் உண்டே! இந்த மூடத் தனத்தை எதிர்த்து எழுத நம்மை விட்டால் யார் இருக்கின்றனர்?


                  ----------------------- மயிலாடன் அவர்கள் 17-12-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

16.12.12

பார்ப்பனர்களின் சிந்தனைக்கு!-தந்தை பெரியார்



கூழுக்குப் போட உப்பு இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்! பாலுக்குச் சர்க்கரை இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! காலுக்குச் (நடப்பதற்கு) செருப்பு இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! பல்லக்குக்கு (உட்காருவதற்கு) பட்டு மெத்தை இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்! கூழுக்கு உப்பு, பாலுக்குச் சர்க்கரை இரண்டும் நாக்கு ருசிக்காகத்தான்! காலுக்குச் செருப்பு, பல்லக்குக்குப் பட்டு மெத்தை இரண்டும் அங்கங்களின் நலத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான்! 

ஆனால், கூழுக்கு உப்பு, காலுக்குச் செருப்பு வேண்டுமென்கிற கவலை வேறு! பாலுக்குச் சர்க்கரை, பல்லக் குக்குப் பட்டுமெத்தை வேண்டுமென்கிற கவலைவேறு! முந்தியது, குறைந்த பட்சமான கூழைக்குடித்தாவது உயிர் வாழவேண்டுமே என்கிற முயற்சி; இறக்கும் வரையிலும் இடையறா துழைக்க எவ்வித இடையூறும் வந்து விடக்கூடாதே என்கிற முன்னெச்சரிக்கை! பிந்தியது, உயர்ந்த பட்சமாய், உணவுக்கு மேற்பட்டதாய், மேனி மினு மினுப்பை வேண்டி மேலான நறுமணத் தோடு தீஞ்சுவையையுடைய பாலுக்கு, மற்றொரு சுவையையும் ஊட்டி மகிழ்ச்சி யோடு பருகவேண்டும் என்கிற முயற்சி; தனக்காக நாலுபேர் நடந்து சுமக்க, தான் நடக்காமலே ஏறிச்சவாரி செய் தாலும், உட்கார்ந்து செல்லும் போது உடலுக்கு வாட்டம் வந்து விடுமே என்கிற முன்னெச்சரிக்கை!  

கவலை, எச்சரிக்கை என்கிற பெயரளவில், இரண்டும் ஒன்றாகச் சொல்லப்படுவதாக இருந்தாலும், இந்த இரண்டு வகையாரின் கவலையும், எச்சரிக்கையும் வெவ்வேறு நிலையில் பிறந்தவை! வேறுவேறான போக்கில் வளர்பவை! முந்தியது, ஏமாறியதால். பிந்தியது, ஏமாற்றியதால், அந்த வகை யில் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடை யவை! இந்த இருவகையான நிலையும் இப்போதைய நிலைமைகள் அல்ல.

 பழங்காலத் தமிழ் நாட்டில் நெடுங் காலமாகப் பரிகாரஞ் செய்யப்படாமல் வளர்ந்து வந்த நிலைமைகள்! பின்பு இவ்விரண்டு போக்கும், அதனதன் வழியிலே, போதிய வளர்ச்சியடைந்து விட்ட நிலைமைகள்!  அதாவது கூழுக்கு உப்பு இல்லையே என்கிற நிலைமை வளர்ந்து, வளர்ந்து கூழே இல்லையே என்கிற நிலைமை! பாலுக்கு சர்க்கரை இல்லையே என்கிற நிலைமை வளர்ந்து, வளர்ந்து பல சுவை சேர்த்துப் பருகிய பாலுக்குப்பின், அது ஜீரணிக்க முடியவில்லையே என்கிற நிலைமை! ஒரு வகையில் இறக்கம்! மற்றொரு வகையில் ஏற்றம்!

இந்த இறக்கமும் ஏற்றமும் ஏன்? இவ்விரண்டையும் சமநிலைப்படுத்தும் வழி என்ன? என்கிற சிந்தனையில், இந்த ஏற்ற இறக்கத்தை அரசியல் துறையில் உத்தியோக விஷயங்களில் சமனிலைப்படுத்த முயன்ற முயற்சிதான் அந்த நாள் ஜஸ்டிஸ் கட்சி!

பல ஜாதிகள், பல வகுப்புகள் உள்ள இந்த நாட்டில், ஏகபோகமாய் ஒரு வகுப் பாரே உத்தியோகங்களில் ஆதிக்கஞ் செலுத்துவது உதவாது, ஒழிக்கப்பட வேண்டியது - எல்லா வகுப்பினரும் இடம் பெறவேண்டும் என்று இதமாக, நீதியைக் காட்டிக் கேட்டபோது புளியேப் பக்காரர்கள் செய்த புன்முறுவலினால் - பொச்சாப்புரைகளால் - திமிர் வாதத்தினால் விளைந்த வளர்ச்சி தான் இன்றையத் திராவிடர் கழகம்!

அறிவுத் துறையின் அதிபதிகள் என்று கூறிக் கொண்டு, அரசியல் உத்தியோக விஷயங்களில் நூற்றுக்கு நூறு தாங்களே இருப்பது சரியல்ல என்பதை, அந்த நாளில் நம் பார்ப்பனத் தோழர்கள் உணர்ந்து, ஏதோ மற்றவர் களும் இடம் பெறட்டுமே என்றெண்ணி இருப்பார்களே ஆனால் மற்றவர்களின் உரிமையை நாம் வஞ்சித்தாலும் வஞ்சனை யில் ஒரு நேர்மையைக் காட்டுவோம் என்று கருதியிருப்பார்களே ஆனால், நிச்சயமான முடிவு நீதிக்கட்சியே தோன்றியிருக்காது! 

அந்த வஞ்சனையில் வளர்ச்சியில்லா விட்டால், உத்தியோகங்களில் ஏதோ ஒரு பங்கு என்று கேட்ட நீதிக்கட்சி ஒழிந்து, உத்தியோகத்தில் மட்டுமல்ல, உலக வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் - ஊராட்சியின் முழுப்பகுதியிலும், எங் களுக்குப் பங்கு அல்ல, உரிமையுண்டு என்று முழங்கும் திராவிடர் கழகம் ஆகியிருக்க முடியாது! இவ்வுண்மையை நமது பார்ப்பனத் தோழர்கள் எண்ணிப் பார்க்கத் தவறுவது - வஞ்சனையை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு போவது நன்மையைத் தரக்கூடியது தானா? இதை எண்ண வேண்டியவர்கள் அவர்கள்!

அடுத்துக் கெடுப்பது! அணைத்துக் கொல்லுவது! காட்டிக் கொடுப்பது! கழுத்தை அறுப்பது! இதுதான் பார்ப்பனியத்தின் பரம்பரைப் போர் முறை என்பதைச் சுயமரியாதை உணர்ச்சியுடைய ஒவ்வொரு திராவி டரும், ஏன்? வரலாறு அறிந்த ஒவ்வொரு வரும் நன்கு அறிவர். இப்போக்கைப் பார்ப்பனியம் இன்னும் கைவிட்டு விடவில்லை என்பதைத்தான் இன்றைக்கும் பார்க்கின்றோம். இந்த நயவஞ்சக நடத்தை இனியும் வேண்டியதுதானா? இதை எண்ண வேண்டியவர்களும் அவர்கள்தான்! திராவிடர் கழகம் வகுப்புத் துவேஷத்தை வளர்ப்பது; திராவிடர் கழகத்தைத் தீர்த்துக்கட்டுக!! இது! ஒருபுறம் மத்திய ஏகாதிபத்திய யூனியனுக்குப் பார்ப் பனர்கள் செய்யும் வேண்டுகோள்! மற்றொருபுறம் மாகாணப் பார்ப்பன அடிமை சர்க்காருக்குச் செய்யும் கட்டளை! எங்கள் மீதுள்ள குறைகளைப் பற்றியே கூறிக்கொண்டிராதீர்கள்! உங்களுடைய பல திட்டங்களும் நாங்கள் உவந்து ஏற்றுக்கொள்ளக் கூடியன! அப்படியிருக்க, நீங்கள் கூறும் நாட்டு நலனுக்கு நாமெல் லோரும் சேர்ந்து ஏன் பாடுபடக் கூடாது! யோசியுங்கள்! இது, நம் கழகத்திற்கு, கழக தந்தை பெரியாருக்கு பார்ப்பனர் களால் செய்யப்படும் வேண்டுகோள்! இந்த இருவேறு முயற்சி, பார்ப்பனர்களின் நல்லெண்ணத்தை - நன்னடத்தையைக் காட்டுவதா? நயவஞ்சகத்தைப் படம் பிடித்துக் காட்டுவதா? சிந்திக்க வேண்டியவர்கள் அவர்கள்தான்! 

தோளோடு தோளிணைத்து நாட்டுக் குத் தொண்டாற்றுவோம் என்று நமக்குக் கூறும் நம் அருமைப் பார்ப்பனர்கள், இந்தமாதம் 19ஆம் தேதிதான் சேலத்தில் பார்ப்பன மாநாட்டைக் கூட்டியிருக் கிறார்கள். அப்போது பல தீர்மானங் களையும் செய்திருக்கிறார்கள். செய்யப்பட் டிருப்பதாய்ப் பார்ப்பனப் பத்திரிகைகள் கூறும் தீர்மானங்களிலிருந்து, பரம்பரை நரிக்குணத்தை எப்படிப் பாதுகாப்பது என்கிற ஒரு வழியில் தான் அந்தமாநாடு கவலைப்பட்டிருக்கிறது என்று சொல்லலாமே தவிர, நமக்கு அவர்கள் விடுக்கும் வேண்டுகோளுக்கு ஒத்ததாய் - மனிதப் பண்பைக் காட்டுவதாய் - நீதியையோ நேர்மையையோ விரும்புவ தாய் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. 

நாட்டு மக்களை இழிவு செய்வதாய், நாலாஞ் ஜாதி, அய்ந்தாம் ஜாதி என்று கூறி மனித உரிமையைச் சூறையாடும் வேதம், வளர்ந்து தழைத்தோங்க வேண் டும்! இது ஒரு தீர்மானம். மற்ற வகுப்பு மாணவர்கள் எக்கேடுகெட்டாலும் எங் களுக்கு கவலையில்லை; எங்கள் வகுப்பு மாணவர்கள் எல்லோருமே உயர்ந்த படிப்புப் படித்தாக வேண்டும். இதற்குத் தடையாய் இருப்பதைத் தகர்த்தெறிய வேண்டுமென்று கூறுவது ஒரு தீர்மானம். இப்படி நாங்கள் ஒரு பட்சமாய், எங்கள் நலனுக்கே அஸ்திவாரம் போட்டு வேலை செய்தாலும், எங்களைப் பற்றி யாரும் துவேஷங் கொள்ளக்கூடாது. எங்கள் மீது நாட்டோர் நல்லெண்ணங் கொள்ளச் செய்ய வேண்டியது இன்றைய மாகாண சர்க்காரின் முதல் வேலை என்கிற மற்றொரு தீர்மானம்.

இன்றைய மாகாண சர்க்காரில் பெரும்பாலோர் சூத்திரர்களாய் இருப்ப தினால்தான், பார்ப்பனர்களின் தனி வளர்ச்சிக்குப் பாதகமாய் இருக்கிறது. மாகாண சர்க்காரை ஆட்டிவைத்து அவர்களைக் கொண்டே முதலில் நம் எதிரிகளை அழித்தொழித்து, பிறகு அவர்களையும் ஒழித்துக்கட்டி, நமது நலத்தை நாம் பேணுவதென்றால், மத்திய சர்க்காரைப் பலப்படுத்துவதும், மத்திய சர்க்கார் செயலை விளம்பரப்படுத்துவதும், மத்திய சர்க்கார் பிடிப்பில் இந்நாட்டை நிலை நிறுத்துவதும் தான் நாம் செய்ய வேண்டிய திருப்பணி என்று கூறுவது இன்னொரு தீர்மானம்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பார்ப்பனோத்தமர்களின் பேச்சுக்கள் என்று, பார்ப்பனப் பத்திரிகைகள் வெளியிட்டிருக்கும் பேச்சுகளைப் பார்த்தாலும், தாங்கள் வேறானவர்கள், உயர்ந்தவர்கள் என்கிற திமிரையும், யார் எதனால், எப்படி அழிந்தாலும் இனநலம் செழித்து வளர வேண்டும் என்கிற சுயஜாதி வெறியையும், எவ்வளவு அயோக்கியத் தனம் செய்தாலும் எங்கள் மீது துவேஷம் கொள்ளாதீர்கள் என்கிற இதோபதேசத்தையும், எங்கள் இன நன்மைக்காக இந்த நாட்டை எவனுக்கும் காட்டிக் கொடுக்கத் தயங்கமாட்டோம் என்கிற கயமைக் குணத்தையும்தான் கண்டுகொள்ள வேண்டியதாயிருக்கிறது.

மாநாட்டுக்குப் பிறகு, அடுத்த படியாக, மாகாணத்திற்கு வந்திருக்கும் ஏகாதிபத் தியப் பட்டேலிடம் இவர்கள் காவடி தூக்கி இருக்கிறார்கள் என்பதைப் பட்டேல் பிரபு அவர்கள் பேச்சுகளி லிருந்து தெரிகிறது. பார்ப்பனியத்தின் அழிவு வேலைகளைப் பகிரங்கப்படுத்தி, நச்சுக் கிருமிகளால் நாசமாகாதீர் என்று நாட்டோரை எச்சரிக்கும் ஒரே ஒரு விடுதலையை ஒழித்து விட வேண்டுமென்கிற ரூபத்தில், நம்மை அண்டவரும் பார்ப்பனர்களின் காவடி ஆட்டம் நடந்திருக்கிறது. சென்னை சத்தியமூர்த்திக்குப் போட்டியாகப் பாம்பே சத்தியமூர்த்தி என்பதாகக் காங்கிரஸ்காரர்களால் புகழப்படுபவர் நம் பட்டேல் பெரு மான் அவர்கள். இந்தப் பெருமான் தான், சுரண்டும் கூட்டத்திற்குப் பாதுகாப்பாக, சுரண்டும் கும்பலின் பிரதிநிதியாக பவநகரை நமக்கு அருளியவர். இவரின் இப்போதையக் குணாதிசயங்கள் வேறு என்று கூறப்பட்டாலும், ஒரு ஏகாதிபத்திய வெறியைக்காட்டத் தவறவில்லை இவரின் சென்னைப் பேச்சுக்கள்! இத் தகைய குணாளர் சட்டத்தைக் காற்றில் பறக்கவிட்டு, நியாயத்தை உதறித்தள்ளி, நீதியைக் குழிதோண்டிப் புதைப்பீர்! என்பதாக பார்ப்பனிய அடிமை சர்க் காரான, மாகாண மந்திரிசபையின ருக்கு உபதேசம் புரிவாரானால் அது ஆச்சரியப்பட வேண்டியதல்ல. விடிந் தால் தெரிகிறது, வெள்ளை முட்டையா? கருப்பு முட்டையா என்கிற சங்கதி!
ஆனால், பார்ப்பனர்கள் பரம்பரை யாகவே நாம் இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும் என்று துணிந்து திட்டம் போட்டுச் செயல் செய்கிறார் களே, இதைக் கண்டு நாம் உண்மை யாகவே பச்சாதாபப் படுகிறோம்! பார்ப் பனர்களின் திட்டத்தால் - சூழ்ச்சியால் இன்று அவர்களின் எண்ணம் - திராவிடர் கழகம் ஒழிய வேண்டுமென் கிற விருப்பம் நிறைவேறலாம்; நிறைவேற்றியும் விடலாம்.

ஆனால், பின் விளைவு என்ன? அரசாங்க உத்தியோகத்தில் பங்கு கேட்ட நீதிக்கட்சியை, அய்ம்பதாயிரம் அடிகீழ் புதைக்கப்பட்டதாக அகமகிழ்ந் தனர் முன்பு! அந்தப் புதைகுழியிலிருந்து பெரும்பூதம் தோன்றிவிட்டதே; பங் கல்ல, உரிமை என்கிறதே! உத்தியோகத் திலல்ல, ஊராளும் ஆட்சியில் என்கிறதே! என்று இப்போது ஓலமிடு கின்றனர்! இதை ஒழித்துக் கட்டுவது எப்படி? இதற்குச் சமாதி எழுப்புவது எப்படி? என்று சதித்திட்டமிடுகின்றனர் இன்று! திட்டத்தின் வெற்றிக்குப் பின் சிந்தை பூரிக்கலாம், உண்மைதான்! ஆனால் சமாதியிலிருந்து மற்றொன்று தோன்றுமே; அது அன்பை அடிப் படையாகக் கொண்டு திராவிடர் கழகத்தைப்போல அகிம்சை வழியில் நில்லா திருக்குமானால், அதைத்தாங்கி நிற்கும் பார்ப்பனர்களின் எதிர்காலம் என்னவாகும்? இதை எண்ண வேண் டியவர்களும் அவர்கள்தான்!

             ---------------------- தந்தை பெரியார் - "குடிஅரசு" - தலையங்கம் - 26.02.1949