Search This Blog

19.11.12

பெரியார் ராமசாமி நாஸ்திகன் அவரோடு சேரலாமா?

கணவர்களைத் திருத்துங்கள்

தலைவரவர்களே! தாய்மார்களே!
இத்தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட் டில் உங்கள் முன்னால் பேச சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி உண்மையிலேயே பெருமகிழ்ச்சியடைகிறேன். சமுத்திரம் போல் பெண்கள் கூடியுள்ள இக்கூட் டத்தைப் பார்க்க என் மனமே ஒருவித நிலைகொள்ளா மகிழ்ச்சியடைகிறது.

சென்னையைப் பற்றி...

இவ்வளவு பெரிய ஒரு பெண்கள் கூட்டம் சென்னையில் கூடும் என நான் நினைக்கவில்லை. சென்னையைப் பற்றி நான் சில சமயங்களில் பரிகாசமாய் நினைப்பதுண்டு. என்னவென்றால் சென்னை மூடநம்பிக்கைக்கு இருப்பிட மானது என்று நான் சொல்லுவதுண்டு. இதை நான் அடிக்கடி பத்திரிகையிலும் எழுதி வந்திருக்கிறேன். சென்னையி லுள்ள எனது சில தோழர்களுக்கு நீங்கள் மூடநம்பிக்கையை விடுங்கள். பகுத்தறிவுடன் வாழுங்கள் என்று கூறுகின்ற காலத்து அவர்கள், நீங்கள் சொல்வதெல்லாம் சரி என்றும், அவற்றை அப்படியே ஒப்புக் கொள்வதாகவும் ஆனால் தங்கள் வீட்டிலுள்ள பெண்கள் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார்களே என்றும், உங்களை இழித்துக் கூறி உங்கள் மீது பழியைப் போட்டதை நான் பலதடவை கேட்டிருக்கிறேன். ஆனதால் தான் வெளி ஜில்லாக்களைப்போல் சென்னையில் பகுத்தறிவியக்கக் கொள்கைகள் அவ்வளவு அதிகமாக பரவ வில்லையோ என்றும் கருதுவதுண்டு. ஆனால், இன்று இப்பெண்கள் மாநாட் டையும் இங்குள்ள உணர்ச்சியையும் ஊக்கத்தையும், இங்கு நடந்த உபன் யாசங்களையும் தீர்மானங்களையும் பார்க்கும்போது எனக்கு ஒரு புதிய எண்ணம் தோன்றுகிறது. அதாவது, சென்னை பெண்மக்கள் ஆண்மக்களை விட எந்த வகையிலும் பின்னடைந்தவர் களல்ல என்பதைக் காட்டுகிறது. 

ஆச்சாரியாருக்கு நன்றி

இங்கு நான் அநேக வயது சென்ற பெண்களைக் காண்கிறேன். அவர்களது ஊக்கம் எனக்குப் பெரியதொரு வெளிச்சத்தையும், தைரியத்தையும் கொடுக் கிறது. சென்னை தாய்மார்களுக்கு இப்படிப்பட்ட உணர்ச்சி ஏற்பட்டதற்கு முக்கிய ஆதாரம் எனது பழம்பெரும் தோழராகிய கனம் ஆச்சாரியாருடைய பெருங் கருணையேதான். இதற்காக அவருக்கு என் உள்ளம் நிறைந்த நன்றி செலுத்துகிறேன். பின்னும் இக்கிளர்ச் சியும் உணர்ச்சியும் மேலும் மேலும் வளர வேண்டுமானால், இன்றைய அடக்கு முறை ஆட்சியை இதுபோலவே குறைந் தது இன்னும் ஒரு வருஷத்திற்காகவது நடத்தி உதவ வேண்டுமென்று எனது அருமைத் தோழர் ஆச்சாரியாரை மற்று மொருமுறை வணக்கமாகக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

உண்மையில் இன்றைய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் பெண்கள் பிரதிநிதித்துவம் வழிந்தோடுகின்றது. அநேக பிரபல பெண்கள் கூடியிருக் கிறீர்கள். பல அருமையான தீர்மானங் களையும் செய்தீர்கள்.

சூழ்ச்சி மகாநாடு

ஆனால், நான்கு நாட்களுக்கு முன்பு உலகந்தெரியாத சில பெண்கள் கூடிக் கொண்டு இந்திய மாதர் சங்கம் என்னும் பேரால் ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டு இந்நாட்டு மக்கள் அபிப்ராயத் துக்கு நேர்மாறாக இந்தியை ஆதரித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றனர் என்பதாகத் தெரிகிறது. இதற்கு நமது எதிரிகள் பத்திரிகைகள் பிரமாதமாகப் பெருக்கி விளம்பரப் படுத்தியிருக்கின்றன. அது எதற்காகச் செய்யப்பட்டது என்றால், இம்மாநாடு கூடப்போவது தெரிந்து இம்மாநாட்டுத் தீர்மானங்கள் அரட்டை செய்யச் செய்வதற்காகவும், இங்கு செய்யப்படும் தீர்மானங்கள் சரியான பிரதிதிதித்துவம் பெற்றதல்லவென்று கருதும்படி செய்வதற்காகவும், நமது சுயமரியாதைக்குக் கேடு சூழவும் கூட்டப்பட்ட ஒரு சூழ்ச்சி மாநாடு ஆகும். நம்மிடையில் (தமிழர்களிடத்து) ஒற்றுமை இல்லாததால் அவர்கள் யாரோ அகவிலை அறியாத இரண்டு பெண் களைக் கொண்டு நம்மைக் கேலி செய் யவும், தாழ்வாக நினைக்கவும் இடம் உண்டாக்கப் பார்க்கிறார்கள்.

வடமொழிச் சார்புடையது - ஆரியக் கலைகளுக்காக இருக்கிறது என்றும், அவர்களாலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட இந்தி என்கின்ற ஒரு மொழியை நம் குழந்தைகளுக்கும் புகட்டி, நம்மக்கள்தம் மானத்தை மாசுபடுத்தும் ஒரு சூழ்ச்சியை எதிர்ப்பதற்காக நாம் இங்கு கூடினோம். நம்மில் பல கருத்துக்காரர்களிருக்கலாம். சைவ, வைணவ மதக்காரர்களிருக்க லாம். முஸ்லிம், கிறிஸ்தவர்கள் இருக் கலாம், மேல்ஜாதி கீழ்ஜாதிக்காரர்கள் என்பவர்களிருக்கலாம். எந்த மதத்தை யும், ஜாதியையும் நம்பாதவர்களுமிருக்கலாம்.

எனவே, நம்மில் ஒருவருக்கும் தீங்கு வராத நிலையில் ஒரு குறிப்பிட்ட கொள் கைக்காக நாம் ஒன்றுசேர்ந்து பாடு படவேண்டுவது இன்றியமையாததாகும். நம் தாய்மொழி மீதுள்ள பற்று காரண மாகவே நம் மானத்துக்கு ஏற்க கலைகள், உணர்ச்சிகள் காரணமாகவே நாம் இன்று ஒன்று கூடியுள்ளோம். உண்மை யிலேயே ஒருவனுக்கு நாட்டுப்பற்று உண்டானால் - மொழிப்பற்று உண்மை யில் ஏற்படுமானால் - அதனை கனம் ஆச்சாரியார் அடக்க நினைப்பாரானால் அது ஒரு நாளும் முடியாத காரியமாகும். அதற்கு மாறாக பற்றும், உணர்ச்சியும் வளரத்தான் செய்யும். மேலும், அவர் கடினமான அடக்கு முறைகளைக் கையாளுவாரானால், அதனால் தமிழர்கள் மனங்கொதிப்படையுமானால் அது எங்குபோய் நிற்கும் என்பதைச் சொல்வதற்கில்லை. அது தமிழர்களிடத் திலும் ஏன் இட்லருணர்ச்சியை உண்டாக் காது எனக் கேட்கிறேன். எதற்காக இந்த அடக்குமுறை?

பெண்கள் பாராட்டு

இன்று 400 பேர் சிறை சென்றதைப் பாராட்டி நீங்கள் தீர்மானம் நிறைவேற்றிய போது உண்மையிலேயே எனக்கு பரிகாசமாயிருந்தது. ஆண்கள் சிறை செல்வதில் அதிசயம் ஒன்றும் இல்லையே! ஆண்கள் சென்றதைப் பற்றி நீங்கள் பாராட்டிவிட்டால் நீங்கள் வீரப்பெண்மணிகள் என்று அர்த்தமா? நீங்கள் 400 பேர் சிறைசென்று அதை ஆண்கள் அல்லவா பாராட்ட வேண்டும்?  நீங்கள் ஏன் செல்லக் கூடாது? இது கனம் ஆச்சாரியார் கோயில் பிரவேச விஷயத்தில் திருவி தாங்கூர் ராஜாவைப் பாராட்டிவிட்டு, தோழர் எம்.சி.ராஜாவை ஏமாற்றிவிட்டது போலல்லவா இருக்கிறது. (சிரிப்பு) இன்று ஒரு அம்மையார் என்னிடம் வந்து, தான் சிறைக்குப் போகத் தயார் என்றார். அந்தப் பேச்சு எனக்கு மகிழ்ச்சியாயிருந்தது.

ஆனால், அது நாளைக்குத் தெரியப் போகிறது. அக்காலம் - அதாவது தமிழ்ப் பெண்களை சிறை செய்யும் காலம் வந்தால்தான் நமக்கு நன்மையுண்டாகும். மாநாட்டுத் திறப்பாளர் முற்காலப் பெண்களின் வீரத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசினார். நான்கூட அப் போது அக்காலத்தில் ஒரு பெண்ணாய்ப் பிறந்திருந்தோமா என்றுகூட நினைத்தேன். அவ்வளவு பெருமையாய்ப் பேசினார். ஆனால், பழம் பெருமைப் பேசிப் பயனென்ன? இது பார்ப்பனர் பேசுவது போல்தானே இருக்கிறது. இன்றைய பெண்களைப் பற்றியும் அவர்கள் கடமையைப் பற்றியும் பேசினால் தானே நீங்கள் உரிமை பெறலாம் - நன்மை யடையலாம். பெரியவர்கள் தேடிவைத்த சொத்தைக் கொண்டு எவ்வளவு நாளைக்குப் பிழைக்கலாம்? நமது வாழ்வுக்கு வகை என்ன? இவை கட்கெல்லாம் - பெண்கள் முன்னேற்றத் திற்கும் வீரத்திற்கும் - இம்மாநாடு ஒரு வழிகாட்டிவிட்டது.

பார்ப்பனர்கள், ஊர் பெயர் தெரியாத பெண்களைப் பிடித்து, தங்களைப் பற்றியே தங்களுக்குத் தெரியாத பெண்களைப் பிடித்தும் படம்போட்டு விளம்பரப்படுத்தி பட்டம், பதவி வாங்கிக் கொடுக்கின்றனர். உண்மையாக எத்தகைய கஷ்டங்களையும் அனுபவிக் கத் தயாராக உள்ள, நாட்டு நலனுக்குப் பாடுபடக்கூடிய பல பெண்கள் நம்மில் இருக்கின்றார்கள். ஆனால், நம் ஆண்கள் அவர்களை வெளியில் விடாது வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கின் றனர்.

நமது நண்பர்கள் கனம் ராமநாதனுக்கும், கனம் சுப்பராயனுக்கும் பல ஊர் களில் எத்தனையோ பார்ப்பனப் பெண்கள் கார் ஓட்டினர். அதற்காக எந்தப் பெண்ணை அவர்கள் தள்ளிவிட்டனர்? யார் மீது அவர்கள் குறை கூறினார்கள்? பெண்களாகிய நீங்கள் தலைநிமிர்ந்து எங்கள் உரிமையில் தலையிட்டால் நாங்கள் சும்மாயிரோம் என்றால் என்ன? இதைவிட்டு அல்லிராணி, கண்ணகி, மாதவி முதலிய நமது பாட்டிமார்களைப் பற்றிப் பெருமை பேசுவதில் என்ன பலன் இருக்கிறது? ஆணுடன், பெண்களும் ஒத்துழைத்துப் போராட முன்வரவேண்டும். போராட்டத்தில் ஆணுக்கு ஒரு வேலை பெண்ணுக்கு ஒரு வேலை என்று இல்லை. இருவரும் சமமே. ஆகவே, ஆண்களைப்போல் பெண்களும் தமிழ்ப் போராட்டத்தில் இறங்கினால் கூடிய சீக்கிரம் தமிழ்நாடு தமிழனுக்கே ஆகிவிடும்.

கணவர்களைத் திருத்துங்கள்

நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஏன் சிறையை நிரப்பக்கூடாது? சிறை என்றால் பயமா? அதற்காக யாரையாவது அடிக்கவோ வையவோ வேண்டுவ தில்லை. எந்தச் சட்டத்தையும் மீறவேண் டியதில்லை. காங்கிரஸ் பேரால் சட்டம் மீறியவர்கள் பிரதிநிதிகளாக சட்டப் பாதுகாப்பாளர்களாகி விட்டார்கள். ராஜத்துவேஷம் எனது மதம் என்றவர்கள் மகாத்மாக்களாகி விட்டார்கள். நாம் அப்படிக் கூடச் செய்ய வேண்டியதில்லை. தமிழ் வாழ்க! என்றால் சிறை பிடிப் பார்கள். இந்தி வீழ்க! தமிழ் வாழ்க! என்றால் போதும். உடனே ஆச்சாரியார், சிறைக்கு வா என அழைத்துக்கொள் வார். (கைத்தட்டல்) எனக்கு ஒரு பயம்! என்னவென்றால், எங்கே அவர் பின்வாங்கி விடுவாரோ என்று. முதலில் நான்கு பேர் போனால் பின்னால் அவர் பிடிக்கிறாரா என்று பார்த்து பிறகு 8, 10, 100, 1000 என்று போகவேண்டும். நமக்கு ஏற்படும் வேதனைக்கோ, தொல் லைக்கோ எல்லையில்லை. இந்நிலையில் நீங்கள் சொல்வதைக் கேட்காது - நாட் டுக்குப் பாடுபடாது ஆண்கள் உங்கள் கிட்ட வருவார்களானால் ரோஷம் இருக்கும் இடம் பார்த்து அவர்களைக் குத்தவேண்டும். வீட்டிற்குள்ளே அனு மதிக்கக் கூடாது. கதவை மூடிவிட வேண்டும். இதேபோல் அநேக நாடு களில் பெண்கள் தங்கள் கணவர்களை இடித்துத் திருத்தியதாகச் சரித்திரம் கூறுகின்றது. அனேக ஆண்கள் நீங்கள் சிறைக்குப் போவதைக் காண பயப்படு கிறார்களாம். அவர்களைத் திருத்த வேண்டுமானால் நீங்கள் ஏதாவதொரு ஊருக்குப் போவதாக வீட்டில் சொல்லிவிட்டு அவர்கட்குத் தெரியாது சிறைக்குப் போய்விட வேண்டும். அப்படிச் செய்தால் அவர்களும் பின்வந்து விடு வார்கள். நம்மில் ஜாதிமத உயர்வு களையும், சுயநலத்தையும், மறக்க வேண்டும்.
இங்கு ஒரு தோழர் (பெயர் கூற ஆசைப்படவில்லை), ராமசாமி நாஸ்திகன் அவரோடு சேரலாமா என்று ஒரு வரிடம் கூறினாராம். ராமசாமி எப்படிப் பட்டவனாயிருந்தாலென்ன? அவன் கூறுவது சரியா, தப்பா என்பதைத்தானே நீங்கள் ஆலோசிக்க வேண்டும். இப்பொழுது இங்கு நான் ஒரு கடை வைத்தால், நாஸ்திகன் என்று சாமான் வாங்க மாட்டீர்களா? அன்றி நான் ஏறின ரயில் வண்டியில் ஏறமாட்டீர்களா? அல்லது உங்கள் வண்டியில்தான் எனக்கு இடம் கொடுக்க மாட்டீர்களா? நான் நாஸ்திகனா அல்லவா என்று உங்களிடம் விளக்க வேண்டியதில்லை. ஏனெனில், இது சில காங்கிரஸ் பார்ப்பனர்களின் சூழ்ச்சி. அதைக் கேட்டு சில சோண கிரிகள் ஏமாறலாம்.

இழி குணமில்லை

இன்று தேசிய மகாசபை என்று கூறப்படும் காங்கிரஸ் தலைவராக, ராஷ்டிரபதி என்னும் பேரால் தோழர் ஜவகர்லால் தலைவரா யிருந்தார். அவர் தன்னை நாஸ்திகன் என்று சொல் லிக்கொள்கிற முறையில் எனக்குச் சத்தியத்தில் - கடவுள் மீது நம்பிக்கை யில்லையென்பதாகக் கூறி, கோர்ட்டில் சத்தியப் பிரமாணம் கூற மறுத்திருக் கிறார். இன்று அவருடைய வீரத்தைப் பற்றி சூரர், தீரர் என்று பாராட்டுகிறார் களே ஒழிய, எந்தப் பார்ப்பனராவது பண்டித ஜவகர்லால் நாஸ்திகர் என்பதற்காக அவரை வெறுத்தார்களா? ஆனால், எங்களிடத்து இவ்விழிகுணம் கிடையாது.

ஜஸ்டிஸ், சுயமரியாதை முதலிய கட்சிகளிருந்தாலும் நாம் என்ன செய்தால் வாழமுடியும் என்பதை யோசிக்க வேண்டும். காடு வா வா என்கிறது. எனக்கு மட்டிலும் இதி லென்ன அத்துணை அக்கறை? சென்ற 25 ஆண்டுகளாகப் பார்க்கிறேன்; பார்ப்பனர்கள் நாள்தோறும் நம்மைப் பற்றி கேவலமாக - அகங்காரமாகப் பேசுகிறார்கள் - எழுதுகிறார்கள். ஒரு குரங்குப் பத்திரிகை, தோழர் சண்முகம் செட்டியாரைப் பற்றி செக்கு போட்டு - செக்கு ஆட்டுகிற மாதிரி படம்போட்டு இழிவுபடுத்திற்று.

நம்மைக் கழுதை என்றும், நாய் என்றும் வயிற்றுச் சோற்றுக்காரர் களென்றும் கூறி வருகிறது. இதைப் பார்த்து உங்கள் ரத்தங் கொதிப்பதில்லை; கண் சிவப்பதில்லை. இந் நிலையில் வீணே தமிழ்நாடு தமிழனுக்கு என்று கூற உங்கட்கு யோக்கியதை உண்டா? தமிழ்மொழி, கலை, நாகரிகம், காப்பாற்றப்பட - நாடு வளர வேண்டுமானால் பெண்மணிகளாகிய நீங்கள் துணிந்து முன்வரவேண்டும். இதைக்கருதியே இம்மாநாட்டைக் கூட்டினீர்கள், பல தீர்மானங்கள் நிறைவேற்றினீர்கள். பெண்கள் உண்மை யில் வீரமுடையவர்கள்தான். நினைத்ததை முடிக்கும் ஆற்றலுடையவர்கள் தான் என்பதை செயலில் காட்ட வேண்டும். ஆனால், சிறைக்குச் செல்லும் ஆண்களை மட்டும் பாராட்டுவதுடன் நில்லாது, நீங்கள் செல்வதைப் பார்த்து ஆண்கள் பாராட்ட வேண்டிய நிலையை உண்டாக்க வேண்டும். இதற்குச் சிறிதும் பின்னிடலாகாது. (நீண்ட கைத்தட்டல்)

                     -----------------------13-11-1938 ஆம் தேதி அன்று சென்னையில் கூடிய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் தலைவர் ஈ.வெ.ரா. பேசியது.
குடிஅரசு - சொற்பொழிவு - 27-11-1938

18.11.12

பார்ப்பனர்களும் பாரதிராஜாக்களும்

பாரதிராஜாவா இப்படி?
புரட்சி இயக்குநர் என்று திராவிடர் கழகத்தால் புரட்சிக் கவிஞர் விழாவில் பட்டம் அளிக்கப்பட்ட பாரதிராஜா அவர்களின் பேட்டி ஒன்று (ஆனந்தவிகடன் 14.11.2012) ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. புருவத்தை நெளியவும் வைத்தது.
என்ன ஆனார் நமது பாரதிராஜா என்ற கேள்வியும் செங்குத்தாக எழுந்தது.

வைகோ ஒரு அற்புதமான பேச்சாளி, இலக்கியவாதி, அறிவாளி. அவர்கிட்ட நான் கேக்கறது ஒண்ணே ஒண்ணுதான். திராவிடம்... திராவிடம்னு பேசி தமிழ்நாட்டை அழிச்சது போதும். ஒரு தமிழனா மாறுங்க... திராவிடம்னா அதைத் திருவனந்தபுரத்துலயோ, பெங்களூருலயோ, ஹைதராபாத்லயோ நின்னு பேச வேண்டியது தானே? எதுக்கு தமிழ் நாட்டுல மட்டும் பேசறீங்க? எவனாவது ஒரு தமிழன் மற்ற மாநிலங்கள் எதையாவது ஆள முடியுமா? தமிழ்நாட்டை தமிழன்தான்யா ஆளணும்... நான் பிறந்து வளர்ந்த இந்த மண்ணுக்காகத்தான் நான் பேசறேன். வைகோ தமிழன்தானே... அப்புறம் ஏன் தன் கட்சி பேர்ல திராவிடத்தை வெச்சுக்கணும்? அதை மாத்தச் சொல்லுங்க.. திராவிடன் பிராமண எதிர்ப்புனு சொல்லி ஊரை ஏமாத்துனது போதும். பிராமணனும் தமிழன்தானே? அவன் தமிழ் தானே பேசறான்? பார்ப்பனீய எதிர்ப்புனு சொல்லி இன்னமும் ஏமாத்தாதீங்க. இதனால, கலைஞர் கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை. அவருக்கு இதுல உள்ள நியாயம் புரியும். அவர் என்னை விமர்சித்தால் விமர்சிக் கட்டும். ஆனால், நான் பின்வாங்க மாட்டேன். நான் திராவிடத்துக்கு எதிரி தான், எனக்குத் தமிழன்தான் முக்கியம்

(ஆனந்தவிகடன் 14.11.2012 பக்கம் 177-_178)

பாரதிராஜாவின் இந்தப் பேட்டிதான் ஆச்சரியத்தையும் தூண்டியது....
பொதுவாக தமிழனுக்குப் பணமும், பக்தியும் வந்தால் எதிரி கால்களைத் தேடு வான் என்று சொன்னார் தந்தை பெரியார்.

இப்பொழுது பாரதி ராஜாவுக்கு என்ன வந்தது? என்ன சேர்ந்தது என்றும் தெரியவில்லை. ஒரு நிகழ்ச்சியை நினைவூட்டினால் நமத்துப் போன பாரதிராஜா வின் சிந்தனை கொஞ்சம் சூடேற வாய்ப்புண்டு.

வேதம் புதிது என்ற மிகச் சிறப்பான படம் ஒன்றைத் தயாரித்தார் பாரதிராஜா.
ஆனால் அந்தப் படத்தை வெளியிடு வதில் தடங்கல்; படம் ஒன்றை எடுத்து உரிய காலத்தில் அதனைத் திரையிட வில்லையென்றால் தயாரிப்பாளன் நெற்றியில் நாமம்தானே.

படத்தில் பார்ப்பான் ஒருவன் பூணூலை அறுத்து எறிவது போன்ற காட்சி, ஆச்சாரமான அய்யர் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவன், தோப்பனார் இறந்த பிறகு தேவர் குடும்பத்தில் வளரும் சூழல்.

தேவர் வேடத்தில் நடித்த சத்யராஜ் சக்கைப் போடு போட்டார். நக்கல் ஏகடியம் எல்லாம் உண்டு.

பார்ப்பனர்கள் வட்டாரத்திலே சல சலப்பு! அப்பொழுது குடியரசு தலைவரோ பட்டுக்கோட்டை ஆர். வெங்கட்ராமய்யர்; முதல் அமைச்சரோ எம்.ஜி.ஆர். அவர்கள்.

முதல் அமைச்சரின் கதவைத் தட்டினார்கள். முதல் அமைச்சர் எந்தத் துருப்பைப் பயன்படுத்தினார், குடியரசு தலைவரிடம் தெரியுமா?
இந்தப் படத்தை உடனடியாகத் திரையிட அனுமதிக்காவிட்டால், பிரச் சினையை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கையிலே எடுத்துக் கொள் வதாக இருக்கிறார் என்று போட்டாரே ஒரு போடு! அப்புறம் என்ன? வேதம் புதிது திரையரங்குகளில் ஓட ஆரம்பித்து விட்டது.
 
இவை எல்லாம் மாஜி ராஜாக்களுக்கு வசதியாக மறந்து போய் விட்டதா? இப்பொழுது அவாளின் நேசமும், பாசமும் இரட்டைக் குதிரைகளாக வாசலில் வந்து நிற்கிறதா?

டி.வி. நேஷனல் புரோகிராமில் முதல் மரியாதை இடம் பெறுவதாகப் பரவலாகப் பேசப்பட்டு, பிறகு அது இடம் பெறாமல் போய் விட்டது. இதுகுறித்துப் பலர் பலவிதமாகக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். ஏன் இடம் பெறவில்லை என்பது எனக்கும் புரியாத மர்மம். டி.வி.யில் முதல் மரியாதையைப் போடப் போவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு என்னுடைய இண்டர்வூவியூ வேண்டும் என்று சொல்லி ஸ்ரீ வித்யாவைக் கொண்டு என்னை ஒரு இண்டர் வியூவும் எடுத்தார்கள். குறிப்பிடப்பிட்டிருந்த தேதியில் முதல் மரியாதை ஒளிபரப்பாகவில்லை. விசாரித்தேன். படத்தை இரண்டு மணி நேரத்திற்குக் குறைக்க வேண்டியிருப்பதாகச் சொன்னார்கள். படத்தில் நீங்கள் கை வைத்து விட வேண்டாம். நானே குறைத்துத் தருகிறேன் என்று படத்தைத் தருவித்து, நானே இரண்டு மணி நேரத்துக்கு எடிட் பண்ணிக் குறைத்துக் கொடுத்தேன். மறுபடியும் குறிப்பிட்ட தேதியில் படம் ஒளிபரப்பாகவில்லை.
என்ன காரணம் என்று கேட்டுப் பார்த்ததில், நீங்க மேலே போய் ட்ரை பண்ணுங்க சார் என்று சொன்னார்கள். இங்கே இருக்கிறவர்கள்தான் அப்படிச் சொன்னார்கள். ட்ரை பண்ணுங்கள் என்றால் எப்படி? எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னவோ லாபியாம். அப்படியெல்லாம் போக நான் விரும்பவில்லை; அது எனக்கு அவசியமும் இல்லை.

                             (தமிழ்நாடு திரைப்படப் பத்திரிக் கையாளர் சங்கத்தில் நடைபெற்ற கலந் துரையாடலில் பாரதிராஜா உதிர்த்த சில கருத்துக்கள்)
வெள்ளிமணி (தினமணி இணைப்பு) 9.1.1987 பக்கம் 2

இன்னொரு சேதியும் உண்டு.  அது என்னவாம்? பாரதிராஜா பூடக மாகச் சொன்னாரே - அந்த லாபி என்பது என்ன? சங்கராச்சாரியார் வரை வால் நீண்டு கொண்டு போகுமே - அந்த அக்ரகார லாபிபற்றி எப்படி எல்லாம் அவருக்கே உரித்தான முறையில் பற்களை நறநற என்று கடித்து இருப்பார்? - இவையெல்லாம் மறந்து போயிற்றா?

இன்றைக்குத் தமிழர்களுக்கு வந்த வாழ்வெல்லாம் தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கமும் ஊட்டி வளர்த்த பார்ப்பன எதிர்ப்புதான் என்பதை மறந்து விடலாமா?

பார்ப்பன எதிர்ப்பு என்னும் பாம்பின் நச்சுக்கடிக்கு ஆளாவது பெரியாரும் - திரா விடர் இயக்கமும்; அவற்றின் பலனைக் கூசாமல் நெளியாமல் அனுபவிப்ப வர்களோ பாரதிராஜா உள்ளிட்ட பார்ப்பனர் அல்லாதார் என்பதை மறந்து விட்டால் அதன் பொருள் பார்ப்பனப் போதை அவர்களின் தலையில் ஏறி விட்டதுதான் பழசை மறந்து விட்டதுதான்!

பாரதிராஜா என்ன சொல்லுகிறார்?

திராவிடன், பிராமணன் எதிர்ப்புனு சொல்லி ஊரை ஏமாத்தினது போதும்; பிரா மணனும் தமிழன்தானே? அவன் தமிழ்தானே பேசறான்? பார்ப்பனீய எதிர்ப்புனு சொல்லி இன்னமும் ஏமாத்தா தீங்க - என்று வரலாற்று அறிஞர் பாரதி ராஜாவே கூறி விட்டார். நம்ப வேண்டியது தான்
.
இவர் கூற்றுப்படி தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற நம்மினத் தலைவர்கள் ஏமாத்துக்காரர்கள் என்று சொல்லும் பொழுது பார்ப்பனர்களுக்குப் பால் பாயாசம் சாப்பிட்டது மாதிரி இருக்கும். இப்படி சொன்னதற்காக பாரதி ராஜாக் களுக்கு ஆழ்வார் பட்டம் கிடைத்தாலும் கிடைக்கக் கூடும்.
மலம் எடுப்பவர்களுக்கு அதன் வாடை மரத்து விட்டது போல. ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக சூத்திர இழிவில் மூழ்கிக் கிடந்தவர்களுக்கு அந்த இழிவு என்பது ருசியாகக்கூட இருக்கும்.

ஈரோட்டிலே இன்றைக்கு 73 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் யோக்கியதையை எடுத்துச் சொன்னார் தந்தை பெரியார் (11.11.1939 அன்று)
இன்று பார்ப்பன விஷ நோய் நம் நாட்டில் பெருகியதற்கும் நம் மக்கள் அதற்குப் பலியாவதற்கும் காரணம் பார்ப்பனர்கள் அல்ல; நாம்தான்; நம் முடைய அறிவீனம் என்ற அசுத்தத்தால் அந்நோய்க்கு ஆதாரமான பூச்சியை வளர்த்துக் கொண்டோம். அந்த அசுத்தம்தான் தமிழன் ஆரியப் பார்ப்பன மதத்தைத் தழுவியதாகும்.

தமிழன் என்று ஆரிய மதமாற்றம் அடைந்தானோ ஆரியனை (பார்ப் பானை) தமிழன் என்று தன்னுடைய நாட்டான் என்று கருதினானோ, அன்றே தமிழனுக்கு உள மாற்றமும் பிளேக்கும் ஏற்பட்டு விட்டன. அன்று முதலே தமிழனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் வீரமும், அறிவும், ஆற்றலும் அடியோடு அழிந்து ஆரியனுக்கு தமிழன் ஆண் பெண் அடங்கலும் உண்மை வைப்பாட்டி மக்கள் ஆக இருக்கும்படி மத ஆதாரங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆதாரங்களே தமிழனுக்கு அரசியல் சட்டமாகவும் ஆயின என்று ஈரோட்டிலே இனவுணர்வுடன் சுட்டிக் காட்டினார். ஈரோட்டு ஏந்தல் (11.11.1939).

எப்பொழுது பாரதிராஜா வாயால் பிராமணன் என்று வந்ததோ, அந்தக் கணமே தன்னை சூத்திரன் என்று ஒப்புக் கொண்டு விட்டார் என்று பொருள்.
தமிழர்களே உங்கள் சூத்திரப் பட்டம் ஒழிய பார்ப்பானைப் பிராமணன் என்று அழைக்காதே! என்று தந்தை பெரியார் அவர்கள் எச்சரித்தது என்ன விளை யாட்டா?

பார்ப்பான் தமிழ் பேசுகிறானாம் - அதனால் அவன் தமிழனாம்.
அறிஞர் அண்ணா தான் மிக அழகாகச் சொன்னார். ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி ஆங்கிலேயர்களைவிட அழகாக ஆங்கிலம் பேசுவார் -அவரை சில்வர் டங்க் சீனிவாசய்யர் என்று கூடச் சொல்லுவதுண்டு - அதற்காக அவர் என்ன ஆங்கிலேயர் ஆகி விட்டாரா? என்று கேட்டதைத்தான் மெத்த படித்த பாரதிராஜா அவர்களுக்கு நினைவூட்டு கிறோம்.

பாரதிராஜாக்களை கேட்கிறோம். நெடுஞ்செழியன் என்றும், கரிகாலன் என்றும், அறிவுடை நம்பி என்றும், அன்பழகன் என்றும், அறிவழகன் என்றும், எழிலரசன் என்றும், குலோத் துங்கன், தமிழரசன் என்றும், தமிழில் பெயர் சூட்டிக் கொண்டுள்ள ஒரே ஒரு பார்ப்பானைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
வேண்மா என்றும், தமிழ்ச்செல்வி என்றும், கலைச் செல்வி என்றும், செந்தாமரை என்றும், அன்பரசி என்றும் பெயர் சூட்டிக் கொண்டுள்ள ஒரே ஒரு பார்ப்பனப் பெண்ணை கொண்டு வந்து நிறுத்த முடியுமா?

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப் பட்டபோது தினமலர் என்ன எழுதியது தெரியுமா - பாரதிராஜா அவர்களே?

காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும். ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும் (தினமலர் வாரமலர் 13.6.2004) என்று பார்ப்பன ஏடு எழுதியதை அறிவாரா பாரதிராஜா?

பெங்களூர் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன் மூலம் கன்னடர் தமிழர் இடையே நல்லுறவு ஏற்படும் என்று எடியூரப்பா கூறியுள்ளாரே? என்பது கேள்வி.

அதற்குத் துக்ளக் பார்ப்பனனின் பதில் என்ன தெரியுமா?

நல்லுறவா? நல்ல உறவுதான். யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து அந்தச் சிலையை அவ மதிக்காமல் இருந்தால் போதுமே (துக்ளக் 18.8.2009) என்று எழுதினாரே - தெரியுமா பாரதிராஜாக்களுக்கு?

அந்தச் சிலை அவமதிக்கப்பட வேண்டும் என்ற உள்ளக் கிடக்கையைத் தானே வேறு வார்த்தைகளில் கூறியுள்ளார் சோ!

சென்னை மாநகர மேயர் வணக்கத்துக்குரிய மா. சுப்பிரமணியம் அவர்கள் சென்னை - கடை வீதிகளில் வணிக நிறுவனங்களில் விளம்பரப் பலகைகளில் தமிழ் இடம் பெற வேண்டும் என்ற ஆணை பிறப்பித்து, அவரே வீதியில் இறங்கிப் பணியாற்றிய போது அதனை மொழி நக்சலிசம் என்று சொன்ன துக்ளக் சோ ராமசாமிகள் தமிழரே என்று நம்பச் சொல்லுகிறாரா அன்புக்கும், பாராட்டுக்கும் உரிய பாரதிராஜா?

இயக்குநர் பாரதிராஜா அவர்களே! காமராசரை - ஆச்சாரியார் கறுப்புக் காக்கை என்று சொன்னது எந்த அர்த்தத்தில்? அதே காமராசரை பச்சைத் தமிழர் என்று தந்தை பெரியார் சொன்னது எந்தப் பொருளில்? இரண்டுக்கும் இடையே இழைந்தோடும் அந்த மெல்லிய இழையைக் காண ஈரோட்டுக் கண்ணாடி தேவைப்படும்.

இன்றும்கூட கோயில்களில் வழி பாட்டு உரிமை தமிழில் என்றால் எதிர்த்து நீதிமன்றம் செல்பவர்கள் யார்? அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று சட்டம் கொண்டு வந்தால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றவர்கள் - _ இப்பொழுது சென்று சட்டத்தை முடக்கியவர்கள் முப்புரிப் பார்ப்பனர்கள் என்பது பச்சைத் தமிழரான பாரதிராஜாக்கள் தெரிந்து கொள்ளா விட்டால் நாம் என்ன செய்ய முடியும்?

திராவிட இயக்கத்தைக் கொச்சைப் படுத்தும் ராஜாக்களே! பொது வீதிகளில் தாழ்த்தப்பட்டவர் நடக்கும் உரிமைக்கு வழி செய்தது யார்?

அரசு பதிவேடுகளில் சூத்திரர்கள் (பார்ப்பனர்கள் வேசி மகன் மனு தர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415) என்று இருந்ததை நீக்கியது யார்?

சென்னையில் அன்றைய மவுண்ட் ரோட்டிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில் பறையர்களும், நாய்களும், குஷ்ட ரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது என்று போர்டு வைத்திருந்தது தெரியுமா? அதனை மாற்றியது யார்?

மருத்துவக் கல்லூரிகளில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று வைத்திருந்த நிபந்தனையை தூக்கி எறிந்தது எந்தக் கட்சி ஆட்சி யில்?
பள்ளிகளில் தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்க்கா விட்டால் மானியம் கிடையாது; பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்கா விட்டால் உரிமம் ரத்து என்ற ஆணை பிறப்பித்தது திராவிடர் இயக்க ஆட்சி என்ற அரிச்சுவடியாவது தெரியுமா?

தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் கல்வி கற்க இட ஒதுக்கீடு சட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்தது எந்த அமைச்சரவை?
இன்றைக்குத் தமிழ் நாட்டில் 69 விழுக்காடு இடம் வந்தது யாராலே?
இதெல்லாம் தான் திராவிடர் இயக்கம் - அதன் தலைவர்கள் _ ஆட்சி _ மக்களை ஏமாற்றிய காரியங்களா?

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்ற தன்மான உணர்வை ஊட்டிய தந்தை பெரியார் ஏமாற்றுக்காரரா?

அடக்கம் வேண்டாமா? நாக்கு இருக்கிறது என்பதற்காக எதை வேண்டும் என்றாலும் பேசுவீர்களா?

தந்தை பெரியார் மறைந்தபோது தலையங்கம் தீட்டாத ஒரே பார்ப்பன ஏடு இந்து என்பதை அறிவீர்களா?

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அன்னை மணியம்மையார் மறைவுகளை மரணக் குறிப்பு வெளியிடும் (Obituary) பகுதியில் வெளியிட்டு அவமானப்படுத் திய இந்து வகையறாக்கள் தமிழர்கள் ஆகி விட்டார்களா?

பத்திரிகை உலகில் ஜாம்பவனாகிய சி.பா. ஆதித்தனார் இறந்ததை உள்ளே மறைவு செய்தியாக வெளியிட்ட மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவான இந்து ஏடு, அதே நாளில் மறைந்த மிருதங்க வித்வான் பாலக்காட்டு மணி அய்யர் பற்றி முதல் பக்கத்தில் வரிந்து தள்ளியிருந்தது தெரியுமா?

திராவிடர்கள் என்றாலும் தமிழர்கள் என்றாலும் எந்த வகையிலும் பொருள் வேறுபாடு கிடையாது. திராவிடர்கள் என்பது ஆரியர்கள் இயக்கத்திற்குள் உள்ளே நுழையக் கூடாது என்கிற தற்காப்பு ஏற்பாடு - எத்தனை விளக்கங் களைக் கூறி விளக்கி இருப்பவர் வெண் தாடி வேந்தரான தந்தை பெரியார்.
ஒரு குடும்பத்தில் பிறந்தவர்கள் வேறு வேறு இடங்களுக்குச் சென்று விட்டால் அவர்களின் குடும்பப் பெயரோ, பெற்றோர்களின் பெயர்களும் மாறி விடுமா?
ஆரிய ஏடுகளை படித்து விட்டு அரைகுறையாகத் தெரிந்து கொண்டு வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்திய திராவிடர் இயக்கத்தையோ, அதன் ஒப்பற்ற பெருமை மிகுந்த தலைவர்களையோ இழிவுபடுத்த வேண்டாம்!
பாரதிராஜாக்களிடம் இதனை எதிர் பார்க்கவில்லை. வருத்தம்தான்! என்ன செய்வது? தந்தை பெரியாரையும் அவர்தம் திராவிட இயக்கத்தையும் ஏமாற்றுக்காரர்கள் என்று சொன்ன பிறகு சொரணையற்றவர்களாக நாம் இருக்க முடியாதே!

பாரதிராஜாக்கள் மீண்டும் மனுதர்மத் துக்கு முத்தமிட ஆசைப்பட வேண்டாம். இனம் எது? பகை எது என்று தெரிந்து கொள்வதில்கூட தடுமாற்றமா? தமிழர் உணர்வு இதுதானா?


----------------------- மின்சாரம் அவர்கள் 17-11-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

17.11.12

ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திட இந்தியா முன்வர வேண்டும்!

ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டபோது அய்.நா.தன் கடமையைச் செய்யத் தவறிவிட்டது காலங் கடந்து அய்.நா.வும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில் அய்.நா.வுக்கு அழுத்தம் கொடுத்து, ராஜபக்சேவை
குற்றவாளிக் கூண்டில் நிறுத்திட இந்தியா முன்வர வேண்டும்!

பொது வாக்கெடுப்பையும் நடத்த வைக்க வேண்டும் டெசோவும் இந்த நேரத்தில் தன் கடமையைச் செய்யும் தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை


2009இல் ஈழத்தில் இலங்கை சிங்கள இனவாத அரசால் பல்லாயிரம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அய்.நா. அதனைத் தடுத்து நிறுத்தும் தன் கடமையைச் செய்யத் தவறி விட்டது என்று அய்.நா. பொதுச் செயலாளரே ஒப்புக் கொண்டுள்ள இந்தக் கால கட்டத்தில், இந்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் சிங்கள இராஜபக்சே அரசால் நடத்தப் பெற்ற தமிழர் இன அழிப்புப் படுகொலைகள் உச்சக் கட்டத்தில் 2009 வாக்கில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

விடுதலைப்புலிகள் ஈழத் தமிழரின் மான உரிமை மீட்பர்களாக இருந்து உயிரைக் கொடுத்து களத்தில் நின்று போராடிய நிலையில், லட்சக்கணக்கான அப்பாவி பொது மக்களான தமிழர்கள் வன்னிப் பகுதி போன்ற வைகளிலும்கூட இலங்கை அரசின் விமான குண்டு வீச்சாலும், மற்ற சிங்கள இராணுவ வன்கொடுமையாலும் பல வகையில் நாசத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள்.

90 ஆயிரம் தமிழச்சிகள் விதவைகளான கொடுமை!

கோயில்கள், பள்ளி வாசல்கள், சர்ச்சுகள் ஆகிய வற்றில் தஞ்சம் அடைந்த மக்களையும்கூட குறி வைத்து குண்டு வீசித் தமிழர்களை அழித்தனர். சுமார் 90 ஆயிரம் தமிழச்சிகள் போர்க் கொடுமையால் விதவைகளாக்கப் பட்டனர்! வன்புணர்ச்சிக்கும், மான பங்கத்திற்கும் ஆளான அவலங்கள் நம் இதயங்களில் இன்னமும் இரத்தம் வழியச் செய்கிறது.
செஞ்சிலுவைச் சங்கம் என்ற உலகப் பொது மருத்துவ அமைப்பு அதன் உதவியை அடிபட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்காமல் தடுக்கப்பட்டனர் சிங்கள இராணுவத்தால்!

அய்.நா. செய்த தவறும் - பான்-கீ-மூனின் ஒப்புதலும்

இந்தக் கால கட்டத்தில் அங்கு இருந்த அய்.நா. சபையில் அதிகாரிகள் உண்மையான நிலவரத்தைக் கூறி இந்தக் கொடுமையைத் தடுப்பதற்குக்கூட முன்வரவில்லை என்ற தகவல்கள் அண்மையில் அய்.நா. மனித உரிமை, போர்க் குற்றங்கள் பற்றி அலசி ஆராயப்படும் போது, ஓர் உள் அறிக்கையாக வெளிவந்து, அது கசிந்துள்ளது; அது உண்மைதான்; அய்.நா. தன் கடமையைச் செய்யத் தவறியது என்றும் அதனை நாம் பாடமாக எடுத்துக் கொண்டு இனி விழிப்போடு செயல்படுவோம் என்றும் அய்.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-முன் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் போன்று கூறியுள்ளது - அவரது பெருந் தன்மையையும், மனச் சாட்சியுடன் நடந்து கொள்ளும் ஒரு மாமனிதர் அவர் என்பதையும் உணர்த்துவ தாக அமைந்துள்ளது.

எழுத்தாளர் கார்டன்வைஸ்

இலங்கையில் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக அய்.நா.வின் அலுவலராக அக்கால கட்டத்தில் (வன்னிப் பேரவலம் நடைபெற்றபோது) பணியாற்றி பிறகு வெளியேறி தற்போது ஆஸ்திரேலிய தாயகத்தில் வாழும் பத்திரிகை யாளர்  - எழுத்தாளர் - கருத்தாளர் கார்டன்வைஸ் (ழுயசனந றுளைந) அவர்கள் முதன்முதலாக ஓராண்டுக்கு முன் 2011இல் எழுதிய ஆங்கில  நூல் கூந ஊயபந என்பதாகும். தமிழில் அது கூண்டு என்ற பெயரில்  இலங்கைப் போரும் விடுதலைப்புலிகளின் இறுதி நாட்களும் என்ற தலைப்பில் தமிழில் மொழியாக்கம் செய்து இரண்டு பதிப்புகள் வெளிவந்துள்ளது.
அந்நூலில் அப்பட்டமான பல உண்மைகளை அதாவது அய்.நா.வின் போர்க்கால செயலின்மை இலங்கையில் எப்படி என்பதை விளக்கியுள்ளார்கள். 2008இல் அங்கே நடந்த கொடுமைபற்றி கார்டன்வைஸ் அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

அன்று யூதர்கள் கொல்லப்பட்டது போலவே....

இறுதிக் கட்டத்தில், எவ்வளவு பேர் இறந்தனர் என்பது தெரிய வேண்டுமானால், எல்லா உண்மைகளும்  வெளிக் கொணரப்பட வேண்டுமென்றால், ஏழாண்டு களோடு நாம் நிறுத்தக் கூடாது. குறிப்பாக 1983இல், ஆயிரத்திலிருந்து மூவாயிரம் தமிழர்கள் வரை கொல்லப் பட்டனர்;   பல ஆயிரம் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
அக்கலவரங்களின்போது உடைகள் எல்லாம் களையப்பட்டு, தங்களை நோக்கிப் பாய்ந்து வரும் சிங்களக் கும்பலைப் பார்த்து நடு நடுங்கிக் கொண்டி ருக்கும் - கழுத்தில் டயர் மாட்டப்பட்டு, எப்போது அதற்குத் தீ வைக்கப்பட்டு தாங்களும் உடல் கருகி இறக்கப் போகிறோம் என்ற மரண பீதியில் இப்படிக் கொடுமையான முடிவுகளைச் சந்தித்த தமிழர் பலரது புகைப்படங்களை நாம் பார்க்க முடியும்!

கார்டன்வைஸ் மேலும் எழுதுகிறார்:

நாஜி ஜெர்மனியில் யூதர்களின் கடைகள் உடைக்கப் பட்டு, பலர் கொல்லப்பட்டு, 30,000 பேர்கள் வரை சித்ரவதை முகாம்களுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட   அக்கண் ணாடிகள் உடைந்த இரவு, கிரிஸ்டலில் நாட் எப்படி அய்ரோப்பிய வரலாற்றில் மிகக் கொடுமையான தொரு பகுதியோ, யூத  மனங்களில் ஆறாத ரணத்தை அச்சம்பவங்கள் ஏற்படுத்தினவோ, அதேபோல்தான் இலங்கைத் தமிழர் அனைவரையும் அக்கறுப்பு ஜூலை நாளும் மிக ஆழமாகப் பாதித்தது. ஜெர்மனியைப் போல், இலங்கையிலும் அரசே முன்னின்று அரங்கேற்றிய கொடுமைகள் தான் அவை. படுகொலை செய்து, சொத்துக்களை தீக்கிரையாக்கி, இனியும் அங்கு வாழ இயலாது என்ற அச்சத்தை உருவாக்கி, ஈழத் தமிழர்களை நாட்டைவிட்டே வெளியேறச் செய்த நாள், அச்சம்பவங் களின் உடன் விளைவு, சில நூறு பேர் மட்டும் இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பில், ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் இணைந்தனர்...

இதன் மூலம் தீவிரவாதம், பயங்கரவாதம் இலங்கை யில் பரவி விட்டது என கூறிய இலங்கை அரசுதான் அதனை உருவாக்கியது என்பது தெள்ளத் தெளியத் தெரியவில்லையா?

அதே ஆசிரியர் - 2008இல் போர் உச்சக் கட்டத்தில் இலங்கையில் நடந்தபோது அங்கே அய்.நா.வின் பங்களிப்பு எப்படி இருந்தது என்பதை (பக்கம் 181இல்) விவரிக்கிறார்.

கடமையைச் செய்யத் தவறிய அய்.நா.

இலங்கைச் சமூகமே அச்சத்தின் பிடியில் இருந்தது. எதிர்ப்பவர்கள் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்டார்கள். அரசை எதிர்த்து நிற்கும்  திராணியே அய்.நா. பன்னாட்டு நிறுவனத்திற்குத்தான் இருக்க முடியும்.
அப்படி இருந்தும் அய்.நா. மவுனம் சாதித்தது. தார் மீக ரீதியான தனது அதிகாரத்தைப் பயன்படுத்தத் தவறிய இலங்கை அரசின்மீது அழுத்தம் கொடுக்காம லிருந்தது. எல்லாமே குடிமை சமூகத்திற்கு, மனித உரிமை ஆர்வலர்களுக்குப் பின்னடைவுதான்

ஓராண்டுக்கு முன்னர் கார்டன்வைஸ் கூறிய தகவலை, அய்.நா. பொதுச் செயலாளர் இப்போது ஒப்புக் கொண்டு பாடமாக எடுத்துக் கொள்வதாக அறிவித் துள்ளார்!

இந்தக் கால கட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பு அய்.நா.விலும் சரி; இலங்கை அரசுக்கும் எச்சரிக்கும் வகையிலும் சரி முக்கிய பங்காற்றி, எஞ்சி இருப்பவர்களின் உரிமையை மீட்டு எடுத்து வாழ வைக்க  செயல்பட முன் வர வேண்டும்.

இந்தியா என்ன செய்ய வேண்டும்?

இலங்கை பற்றிப் பேசும்  போதும் இந்திய அரசு  கவலையளிக்கிறது, மெத்தவும் கவலை கொள்கிறது என்ற வழக்கமான வார்த்தைகளோடு நிறுத்தி விடாமல், ஆக்கப் பூர்வ விளைவுகளை ஏற்படுத்தும் வண்ணம் அழுத் தந்திருத்தத்துடன் அதனைப் போர்க் குற்றவாளியாக நிறுத்த வைக்க இந்தியா முன் வர வேண்டும். இதுவரை இந்திய அரசு செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக அது இருக்கும். ஈழத் தமிழர்கள் மத்தியிலே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, அதனை எப்படியும் செயல்படுத்துமாறு போதுமான அழுத்தத்தை அய்.நா.வுக்கு இந்தியா அந்தரங்கச் சுத்தியோடு கொடுக்க வேண்டும்.

சரியான தருணத்தில் டெசோ டெசோ சரியான நேரத்தில் துவக்கப்பட்டு, சரியான திசையில், சரியான பார்வையோடு கலைஞர்  தலைமை யில் செயல்பட்டு வருகிறது; இந்த அய்.நா. உள் அறிக்கை கண்டு டெசோ மேலும் பல முடிவுகளை எடுத்து, இந்திய அரசுக்கும், அய்.நா. மன்றத்திற்கும் இந்திய அரசு மூலம் செயல்பட விரைந்து வற்புறுத்துவோம்.

அய்.நா.வின் பார்வையில், அணுகுமுறையில் நல்ல மாற்றம் காணும் இவ்வேளையில், அமெரிக்கா போன்ற பல நாடுகள் - மெக்சிகோ போன்ற நாடுகள் வலியுறுத்தும் இவ்வேளையில், போர்க் குற்றம் புரிந்த இலங்கையை உலக நாடுகள் முன் நிறுத்தும் வேளை நெருங்கி வருகிறது!

சென்னை                                                                                            கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
16.11.2012

16.11.12

ஆம் ஆம் பொது உடமைப் பிரசாரம் நிறுத்திக்கொண்டேன்-பெரியார்

திருத்துரைப்பூண்டி தஞ்சை ஜில்லா
5 வது சுயமரியாதை மகாநாடு
ஆம் ஆம் பொது உடமைப் பிரசாரம் நிறுத்திக்கொண்டேன்
ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்துத் தீருவேன்

தோழர்களே!

சுயமரியாதை இயக்கம் மிக நெருக்கடியில் இருப்பதாகவும், சீக்கிரத்தில் செத்துப் போகும் என்றும் இங்கு சொல்லப்பட்டது.

இயக்கம் ஒன்றும் நெருக்கடியில் இல்லை என்பது என் அபிப்பிராயம். சிலருக்கு அவர்களின் சொந்த விருப்பு வெறுப்பை உத்தேசித்து அப்படித் தோன்றலாம். அதற்கு நான் காது கொடுக்க முடியாது. இந்த இயக்கம் ஆரம்பித்த காலம் முதற்கொண்டு அனேகர் தங்கள் சுயநலத்துக்கு சௌகரியமில்லாதது கண்டு இது போலவேதான் இயக்கம் நெருக்கடியில் இருக்கிறது, செத்துப்போய் விட்டது என்று சொல்லிக்கொண்டே போய்விட்டவர்களும், வெளியில் போய்விட்ட பின்பும் அவர்களால் கூடுமானவரை தொல்லைக் கொடுத்துக் கொண்டு இருந்தவர்களும் இருக்கிறவர்களும் திரும்பி வந்தவர்களும் பலர் உண்டு. அப்படிப்பட்டவர் களையும் அவர்களது விஷமங்களையும் பற்றி நான் சிறிதும் லக்ஷியம் செய்வதில்லை. அந்தப்படி நான் அலக்ஷியமாய் இருந்துவிட்டதால் இதுவரை இயக்கத்துக்கோ, எனக்கோ யாதொரு கெடுதியும் ஏற்பட்டு விடவில்லை. இயக்கம் போய்விட்டது என்று இன்னமும் சொல்லிக் கொண்டுதான் திரிகிறார்கள்.

இயக்கம் எங்கு போய் விட்டது. அவர்களை விட்டு விட்டுப் போய் விட்டது. அவ்வளவுதான்.

இப்போதும் சொல்லுகிறேன் இயக்கத்தின் மூலம் சுயநலம் அனுபவிக்கக் கருதியிருக்கும் எப்படிப்பட்டவர்களுக்கும் இயக்கத்தில் இடம் கிடைக்காது. அவர்கள் யாரானாலும் சரி, இயக்க வளர்ச்சியைவிட இயக்கத்தில் சுயநலம் கருதுபவர்களை கவனிப்பதே என் வேலை. அதனால் ஏற்படும் எதிர்ப்புகளை சமாளிக்கத் தயாராய் இருந்து கொண்டுதான் இப்படிச் சொல்லுகிறேன்.

எந்த இயக்கமும் அதிதீவிர கொள்கையில்லாததால் கெட்டுவிடாது. இயக்கத்தைத் தனிப்பட்ட மக்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாலேயே கெட்டுப் போகும். இதுவரை அநேக இயக்கம் அதனாலேயே மறைந்து போய் இருக்கிறது. மற்றபடி யாருடைய எதிர்ப்பும், யாருடைய தொல்லையும் இருந்தாலும் இயக்கம் அதன் வேலையைச் செய்துதான் தீரும். இயக்கம் நெருக்கடியில் இருப்பதாய் இங்கு வருத்தப்பட்டவர்கள் எப்படி நெருக்கடியில் இருக்கிறது, இதனால் என்ன கெட்டுப் போய் விட்டது என்று எடுத்துக் காட்டியிருந்தால் எனக்கு அவர்கள் வார்த்தையில் உள்ள உண்மை புலப்பட்டு இருக்கும்.

தோழர்கள் தண்டபாணி, கண்ணப்பர், அய்யாமுத்து, ராமநாதன், தாவுத்ஷா முதலான பலர் சுயமரியாதை இயக்கம் செத்துப் போய் விட்டது என்று சொல்லிக்கொண்டுதான் சிலர் வெளியேறியும், சிலர் தாங்கள் இன்னமும் சுயமரியாதைக்காரர்கள் என்றும் சொல்லிக்கொண்டு தொல்லை கொடுத்து வந்தார்கள்; சிலர் வருகிறார்கள். இதனால் எந்தக்கொள்கை கெட்டுவிட்டது? என்ன நடவடிக்கை நின்று விட்டது?

இந்த மகாநாடு கூட்டியது பைத்தியக்காரத்தனம் என்று மகாநாடு கூட்டிய பிரமுகர்களுக்குத் தோன்றும்படி இன்று காலை முதல் இங்கு நடவடிக்கை நடக்கிறது. இது எனக்கு முன்னமேயே தெரியும். அதனாலேயே நான் இதற்கு வரவேண்டாம் என்று கருதி கடிதம்கூட எழுதிவிட்டேன். வந்தே தீரவேண்டுமென்று தந்தியும் கடிதங்களும் வந்தன. வந்த பிறகு ஏன் வந்தேன் என்றுதான் தோன்றுகின்றது. எங்கள் பெயர்களை விளம்பரம் செய்து ஆட்களைக் கூட்டி இம்மாதிரி இயக்கம் செத்துவிட்டது என்று மாய அழுகை அழுவதே மகாநாட்டின் வேலை என்றால் இனி மகாநாடுகள் கூட்டமால் இருப்பதுகூட நலமென்றே கருதுகிறேன்.

ஏன் மாகாண மகாநாடு கூட்டவில்லை

இந்த லக்ஷணத்தில் மாகாண மகாநாடு ஏன் கூட்டவில்லை என்று என்மீது குறை கூறப்பட்டது. மகாநாடு இந்த லக்ஷணத்தில் இப்படிப்பட்ட ஆட்களை வைத்துக்கொண்டு எப்படி கூட்டமுடியும்? கூட்டுவதால் பிரயோஜனம் தான் என்ன? கூட்டாததால் என்ன கெட்டுவிடும்?

இதற்குமுன் கூட்டின 3 மகாநாடுகளும் பணக்காரர்களாலும் ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களாலும் தான் கூட்டப்பட்டது. இந்த மகாநாடும் ஒரு பணக்காரரின் பெரிய பொருளுதவியின் மீதும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களின் ஆதரவின் மீதும்தான் கூட்டப்பட்டது என்று காரியதரிசி சொன்னார். அப்படியிருக்க பணக்காரர்கள் தயவில் மகாநாடுகளைக் கூட்டி அவர்கள் நிழலில் இருந்துகொண்டு அவர்கள் சாப்பாட்டைச் சாப்பிட்டுக் கொண்டு அவர்களையே அக்கட்சியையே வைது கொண்டிருப்பதனால் மகாநாடு எப்படிக்கூட்ட முடியும்?

நாகையில் மாகாண மகாநாட்டைக் கூட்ட தோழர் காயாரோகணம் பிள்ளை அவர்கள் ஏற்றுக்கொண்டார். வேண்டிய ஏற்பாடும் செய்தார். முன் பணமும் கொடுத்தார். அப்படியிருக்க சில தோழர்கள் மகாநாட்டு நிர்வாகத்தில் சம்மந்தப்பட்டவர்களே அவரைக் கேட்காமல் மகாநாட்டுப் பந்தலில் சமதர்ம மகாநாடு கூடும் என்று பத்திரிகையில் விளம்பரம் செய்து விட்டார்கள். பிறகு பலர் அவரைக் கேட்க ஆரம்பித்த உடன் அவர் அம் முயற்சியை விட்டு விட்டதாகத் தெரிகிறது.

மற்றும் நாளையும் மகாநாடு கூட்டவேண்டுமானால் ஜஸ்டிஸ் கட்சியார் உதவியும் சில பணக்காரர்கள் உதவியும் வேண்டித்தான் இருக்கும். அப்படி இருக்க அவர்களை வைவதன் மூலம் வீரராகக் கருதி இருக்கிறவர் களின் வசவுக்குக் கட்டுப்பட்டு யார் தான் மகாநாடு கூட்டுவார்கள்? வைகின்றவர்களுக்கு யார் தான் ரயில் சார்ஜ் கொடுப்பார்கள்? என்பதை யோசித்துப் பாருங்கள். என்மீது குற்றம் சொல்லுவது யாருக்கும் எளிதுதான். ஆனால் இயக்கத்தில் வேறு எந்தத் தோழர் செய்கின்ற காரியத்தைவிட என் காரியம் என்ன குறைந்து போய் விட்டது என்று யோசித்துப் பாருங்கள்.

இயக்கம் என்றால் எவனோ ரயில் சார்ஜ் கொடுத்து, எவனோ விளம்பரம் செய்து, எவனோ கூட்டம் கூட்டி விட்டால் அதில் வந்து நின்று கொண்டு எல்லோரையும் பயங்காளி என்றும், கோழை என்றும், மந்திரிகள் மாய்கையில் மறைந்து விட்டவன் என்றும், சர்வாதிகாரி என்றும் ஒருவர் மற்றவரை வைதுவிட்டுப் போய் விடுவது அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும். என்ன குறைந்தாலும் மாதம் 200, 300 ரூபாய் இயக்கத்துக்காகச் சொந்தப் பொருப்பில் செலவு செய்கிறேன். பல தடவை 1000, 2000 மொத்தமாக செலவு செய்துவருகிறேன். மாதம் 10 பிரசங்கங்களுக்குக் குறையாமல் பெரிதும் என் சொந்தச் செலவிலேயே பல தோழர்களை அழைத்துக் கொண்டு ஊர் ஊராய் கிராமம் கிராமமாகத் திரிந்து நோயுடனும், காயலாவுடனும், டாக்டர்கள் அபிப்பிராயங்களை லக்ஷியம் செய்யாமலும் பிரசாரம் செய்கிறேன். இதற்குமேல் மற்றவர்கள் சாதிப்பதோ மற்றவர்களுக்கு உள்ள பொறுப்போ இன்னது என்று எனக்கு விளங்கவில்லை.

இந்த இயக்கம் எந்தத் தனிப்பட்ட மனிதனும் வீரனாவதற்கும், வீரசொர்க்கம் போய்ச் சேரவும் ஏற்பட்டதல்ல. எனக்கு வீர சொர்க்கத்தில் நம்பிக்கை கிடையாது. வீரனாவதிலும் பயன் உண்டு என்று நம்பிக்கை கிடையாது. காந்திக்கு மேல் ஒருவன் வீரனாகவோ, மகாத்மாவாகவோ விளம்பரம் பெற முடியாது. ஆனால் அவரால் மனித சமூகத்துக்கு ஒரு காதொடிந்த ஊசி அளவு பயனும் ஏற்படவில்லை. ஏற்படப் போவதுமில்லை. வேண்டுமானால் அவருக்கும் அவர் சந்ததிக்கும் பெரிய மதிப்பு ஏற்பட்டு விடும். கோவிலும் ஏற்படும். ஆனால் நான் அப்படிப்பட்ட புகழை விரும்பவில்லை. எனக்குப் புகழ் வேண்டியதுமில்லை. புகழ் பெறுவதற்கு எவ்வளவு அயோக்கியத்தனம் செய்ய வேண்டுமென்பது நான் நன்றாய் அறிவேன். அத்துறையிலும் நான் இருந்து பார்த்துவிட்டுத் தான் இந்த "இழிவு" பெறும் வேலைக்கு மனப்பூர்த்தியாகவே வந்தேன். ஆதலால் நான் புகழ் பெறும் மார்க்கமோ, வீரப்பட்டம் பெறும் மார்க்கமோ அறியாதவனல்ல.

காங்கிரசில் உழைத்தபோது எனக்கும், என் குடும்பத்துக்கும் தகுதிக்கு மேற்பட்ட புகழ் கிடைத்தது.

அப்போது சில பதினாயிரக்கணக்கான ரூபாயில் புகழ் சம்பாதித்தேன். இப்போது பல பதினாயிரக்கணக்கான ரூபாய் செலவும் நஷ்டமும் அடைந்து இகழ்ச்சி அடைகிறேன்.

என்னவென்றால் 1922 வருஷத்திய சகல கட்சி மகாநாட்டில் காந்தியாரின் ஒத்துழையாமையைப்பற்றிக் கவலை கொண்டு லார்ட் ஆர்டிஞ்சு காந்தியாருக்கு என்னவேண்டும் என்று கேட்கும்படி ஒரு சர்வ கட்சி மகாநாட்டை பம்பாயில் கூட்டி கேட்டு வரும்படி செய்தார். அதில் சங்கரன் நாயர் தலைமை வகித்து காந்தியாரை "உமக்கு என்ன வேண்டும்" என்று கேட்டார். அப்போது காந்தியார் எனக்கு என்னவேண்டும் என்பதை ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்மணிகளைக் கேட்டுப் பதில் சொல்லுகிறேன் என்று சொன்னார். அந்த இரண்டு பெண்மணிகள் யார், என் மனைவியும், என் தங்கையும்தான். இது 1922ம் வருஷம் ஜனவரி மாதம் 19ந் தேதியிலோ 20ந் தேதியிலோ ஹிந்து பத்திரிகையில் இருந்தது. இதை திருச்சி டாக்டர் ராஜன் கத்தரித்து எனக்கு அனுப்பினார். இதற்கு மேல் எனக்கு இன்னும் என்னவேண்டும்? அதனால் பயனில்லை என்று உணர்ந்தேதான் தேசத்துரோகி, மதத்துரோகி, நாஸ்திகள், கோழை, சர்க்கார் தாசன் என்கின்ற பட்டம் கிடைப்பதானாலும் நாம் செய்யும் வேலையில் மக்களுக்கு ஏதாவது நன்மை ஏற்படவேண்டுமென்று கருதி சில திட்டங்களைக்கொண்டு சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்து அதில் என் இஷ்டப்படி உழைத்து வருகிறேன்.

இனியும் சாகும்வரை அந்தப்படியே உழைத்து வரத்தான் செய்வேன்.

நான் பயந்துவிட்டது

நான் இப்போது சர்க்காருக்கு பயந்துவிட்டேன் என்றும், பொதுவுடமைப் பிரசாரத்தை விட்டு விட்டேன் என்றும் குறைகூறப்பட்டது. இதைப்பற்றி விஷமப் பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது.

இந்தச் சமயத்தில் எனது கருத்தை தைரியமாகவும், விளக்கமாகவும் வெளியிடுகிறேன். தயவு செய்து கவனித்துக் கேட்கவேண்டுமாய்க் கோருகிறேன்.

நான் ரஷ்யாவுக்குப் போவதற்கு முன்பே பொதுவுடைமைத் தத்துவத்தை சுயமரியாதை இயக்கத்துடன் கலந்து பேசி வந்தது உண்மைதான். ரஷ்யாவில் இருந்து வந்தவுடனும் அதை இன்னும் தீவிரமாய்ப் பிரசாரம் செய்ததும் உண்மைதான். அதோடு மாத்திரமல்லாமல் தமிழ் நாட்டில் சுமார் 150 சங்கங்கள் ஆங்காங்கு ஏற்படும்படி செய்து அவைகள் ஒரு அளவுக்கு வேலை செய்து வரும்படி செய்ததும், அவைகளுக்கு நான் சில உதவிகள் செய்து வந்ததும் உண்மைதான். ஒன்றையும் மறைக்கவில்லை. ஆனால் சர்க்காரார் பொதுவுடைமை கொள்கைகள் சட்ட விரோதமானது என்று தீர்மானித்து நமது சுயமரியாதை இயக்கத்தையே அடக்கி ஒடுக்கி ஒழித்துவிட வேண்டும் என்று கருதி இருக்கிறார்கள் என்று உணர்ந்த பிறகும், அதனால் பல கஷ்ட நஷ்டம், தொல்லை ஆகியவை ஏற்பட்ட பிறகும், காங்கிரஸ்காரர்கள் சர்க்கார் அடக்குமுறைக்கு முகம் கொடுக்க முடியாமல் அவர்கள் பின்னடைந்து விட்டதைப் பார்த்தும், நம்முடைய தோழர்கள் சிலர் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாலும், பலர் வெறும் வேஷ விளம்பரத்துக்கு அடிமைப்பட்டுவிட்டார்கள் என்பதை உணர்ந்ததாலும் எனக்கு புத்திசாலித்தனமாக சில காரியம் செய்யவேண்டியதாக ஏற்பட்டு விட்டது. அதுதான் பொதுவுடமைப் பிரசாரத்தை நிறுத்திக்கொள்ள வேண்டியது என்பதாக ஆகிவிட்டது.

அப்படி இல்லாமல் இருந்தால் சுயமரியாதை இயக்கம்கூட மறைந்து போயிருக்கும். இந்தப் பிரசாரம்கூட செய்ய முடியாமல் போயிருக்கும். எனக்கு இந்த 2, 3 வருஷத்தில் எவ்வளவு கஷ்டம் ஏற்பட்டது? தோழர் ஜீவானந்தம் எழுதிய வியாசத்தைப் பத்திரிகையில் போட்டதற்காக 2000 ரூபாய் ஜாமீன் கொடுத்தேன். கல்வியைப்பற்றி எழுதிய ஒரு கட்டுரைக்காக நானும் என் தங்கையும் சிறைப்பட்டோம். அபராதமும் கோர்ட் செலவுமாக ரூபாய் 2000க்கு மேல் செலவாகி விட்டது. தோழர் ஜீவானந்தம் அவர்களின் மற்றொரு மொழி பெயர்ப்புக்காக என் தமையனாரும் சிறைப்பட்டார். அதற்கும் ரூ.1000 வரை செலவு ஏற்பட்டது. பல புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சுயமரியாதை இயக்கப்பத்திரிகை மற்றொன்றுக்கும் ஜாமீன் கேட்கப்பட்டு நின்றுவிட்டது. இதைப்பார்த்த பல தோழர்கள் ஓடி விட்டதுடன் துரோகம் செய்யவும் ஆரம்பித்தார்கள்.

இப்பொழுதும் நான் ஒரு தினசரி நடத்த சகல ஏற்பாடுகளும் செய்து கொண்டு சர்க்காரை அனுமதி கேட்டதில் பெருவாரியான தொகை ஜாமீன் கட்ட வேண்டுமென்று உத்திரவு வந்து விட்டது. இந்த நிலையில் சுயமரியாதை இயக்கத்தை ஒழித்து விட்டு நான் மாத்திரம் வீரனாக ஆவதற்கு ஜெயிலில் போய் உட்கார்ந்து கொள்ளுவதா? அல்லது பொதுவுடமைப் பிரசாரத்தை நிறுத்தி வைத்துவிட்டு இயக்கத்தின் மற்ற திட்டங்களை நடத்துவதா என்று யோசித்துப்பாருங்கள். இதுதான் எனது உண்மை.

ஜெயிலில் எனக்கு என்ன கஷ்டம்? எ. கிளாசில் போட்டார்கள். இனியும் போடுவார்கள். 6 மாதமாவது ஜெயிலுக்குப் போனால்தான் என் உடம்பு இனியும் 2 வருஷத்திற்கு உழைக்க சௌகரியம் கொடுக்கும். நிற்க,

இயக்கத்திற்காக ஆரம்பமுதல் இந்த நிமிடம்வரை யாரிடத்திலாவது கால் அணா வசூல் செய்திருக்கிறேனா? அல்லது இயக்கத் தொண்டர்களுக்கு என் சக்தியனுசாரம் அவ்வப்போது உதவாமல் இருந்திருக்கிறேனா? என் குடும்பநிலை எவ்வளவு கஷ்ட நஷ்டத்திற்கும், கேட்டிற்கும் ஆளாகிவிட்டது உங்களுக்குத் தெரியாதா? ஆனாலும் எனது எஸ்டேட்டும் வருவாய்களும் எப்படி நாசமானாலும் அவற்றை லக்ஷியம் செய்யாமல் இயக்கத்திற்கு என்னால் கூடியதைச் செய்யாமல் இருந்ததே இல்லை. பார்ப்பனர் தொல்லையால், அரசாங்க தொல்லையால் எனது குடும்ப வருவாய் 100க்கு 25 வீதமாய் விட்டது. இப்படி எல்லாம் ஆனது ஒருபுறமிக்க,

யாரை நம்புவது?

இன்று எந்தத் தோழர்களை நம்பி நான் துணிந்து ஜெயிலுக்குப் போக முடியும்? ஒரு வருஷம் ஐரோப்பா கண்டத்திற்குப் போய் இருந்தேன். இயக்க நிர்வாக சபை அழிந்துவிட்டது. சென்ற வருஷம் 6 மாதம் ஜெயிலுக்குப் போனேன். மகாநாடு கூட்ட வேண்டியதில்லை என்று தீர்மானிக்கப்பட்டு பிரசாரம் நிறுத்தப்பட்டுவிட்டது. பொதுவுடமை என்று சொன்னவுடன் பணக்காரர்கள் பறந்துவிட்டார்கள்.

இந்த நிலையில் புத்திசாலித்தனமாய் காரியம் நடத்தாவிட்டால் இயக்கம் நடக்குமா? கடவுள் மதம் ஜாதி ஆகியவைகளால் மக்கள் அனுபவிக்கும் கொடுமையும் இழிவும் ஒழியவேண்டாமா? ஏதோ இரண்டொரு ஆட்கள் அதுவும் சுயநல விஷயமாய் அபிப்பிராயபேதம் கொண்ட ஆட்களின் விஷமப் பிரசாரத்துக்கு பயந்து கொண்டு நான் வீரனாய் விட்டால் இயக்கம் போகும் கதி என்ன? எப்படியோ போகட்டும் நம் கடமையை செய்வோம் என்பதை எல்லா சமயத்திலும் முட்டாள் தனமாய் நான் பின்பற்றுபவனல்ல ஆகின்ற அளவுக்கு காரியம் ஆகவேண்டும் என்று கருதுகிறேன். இது சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அவர்கள் இஷ்டப்படி நடக்க வழியில்லாமல் இல்லை.

இப்போதும் நம் கொள்கைகளில் சமதர்மமோ, பொதுவுடமைத் தத்துவமோ இல்லை என்று சொல்ல முடியாது. சமதர்மத்துக்கும் பொதுவுடமைக்கும் தோழர் ஜீவானந்தமும் அவர்களது தோழர்களும்தான் பாஷ்யக்காரர்கள் என்பதை நான் ஒருநாளும் ஒப்புக்கொள்ள முடியாது.

ரஷ்யப் பொதுவுடமை எனக்கு நேரிலும் தெரியும். அப்படிப் பட்டவர்கள் ஏகாதிபத்தியத்துடனும், பணக்கார ஆட்சியுடனும் ராஜி செய்து கொண்டு கூடுமான அளவுதான் சமதர்மம் நடத்துகிறார்களே தவிர யாரோ ஒருவர் கோழை என்று சொல்வாரே என்று பயந்து கொள்ளவில்லை.

இவைகளையெல்லாம் உத்தேசித்தே சுயமரியாதை இயக்கத் திட்டம் இவ்வளவுதான் என்பதாக ஒரு வருஷத்துக்கு முன்பு (10335ல்) வெளிப் படுத்திவிட்டேன். அதன் பிறகே தாராளமாய் வேலை செய்ய முடிகிறது.

இதையும் தடுத்தால்

நம் சுயமரியாதை இயக்கத்தின் இப்போதைய வேலையைக்கூட அரசாங்கத்தார் சட்டவிரோதம் என்று சொன்னால் அப்போது என்ன செய்வது என்று கேட்கிறார்கள். இதற்கு நான் தாமதமில்லாமலும் வெட்க மில்லாமலும் உடனே பதில் சொல்லுகிறேன். என்ன பதில் என்றால் உடனே இயக்கத்தை நிறுத்திவிட்டு பிறகு மேல்கொண்டு என்ன செய்வது என்று நம்பிக்கையுள்ள தோழர்களுடனும் பொறுப்புள்ள தோழர்களுடனும் கலந்து யோசிப்பேன். ஒன்றுமே செய்ய முடியாமல் போனால் அப்போது ஜெயிலுக்குப் போய் உட்கார்ந்து கொண்டு சுகமனுபவிப்பேன், வீரப்பட்டமும் பெறுவேன். சிறிது வேலை செய்ய இடமிருந்தாலும் "புகழை"யும் "வீரப்"பட்டத்தையும் தியாகம் செய்து விட்டு பயங்காளி, கோழை, அடிமை என்கின்ற பட்டங்களை மகிழ்ச்சியோடு வரவேற்று தலையில் சுமந்து கொண்டாவது வேலை செய்வேனே ஒழிய வீண் வீம்புக்கும் போலி விளம்பரத்துக்கும் இரையாக மாட்டேன். அறிவுள்ளவர்கள் சற்று யோசித்துப் பார்க்கவேண்டும்.

இந்த அரசாங்கத்தை "ஐ தீடிடூடூ ட்ஞுணஞீ ணிணூ ஞுணஞீ" என்று சொன்ன காந்தியார் கூற்று என்ன ஆயிற்று?

"நாங்கள் 35 கோடி பேர்களும் நாய்களோ, ஈனப் பன்றிகளோ" என்று சொன்ன தேசாபிமானிகள், தேசிய வீரர்கள் கதி என்ன ஆயிற்று?

ஆட்டிடையன் ஆடுகளை பட்டிக்குள் விரட்டுவது போல் இன்று காந்தியாரே "தேசிய வீரர்களை" சட்டசபைக்குள் போய் ராஜ பக்தியாயும், ராஜ விஸ்வாசமாயும், ராஜ சந்ததிகளுக்கும் ராஜாங்க சட்டங்களுக்கும் பக்தி விஸ்வாசமாய் இருப்பதாயும் சத்தியம் செய்து "மானங்கெட்டு, மரியாதை கெட்டு" திரியும்படி இப்போது விரட்டி அடிக்கவில்லையா?

அவ்வளவு கேவல நிலைக்கு நாம் இன்னும் போகவில்லை.

நமக்கு பார்ப்பான், பணக்காரன், அரசாங்கம் ஆகிய 3 எதிரிகள் உண்டு. மூன்று பேரையும் ஒரே காலத்தில் ஒழிக்கச் சட்டம் குறுக்கிடுமானால் முறையாக ஒவ்வொன்றாக ஒழிப்போம். இதற்காக நம்முடைய சுயநல வீரப்பிரதாபத்தில் கடுகளவாவது தியாகம் செய்ய வேண்டாமா? இதை உத்தேசித்தே என் தமையனாரை அரசாங்கத்தினிடம் ராஜத்துவேஷம் பரப்புவதில்லை என்று சொல்லி வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு விடுதலை அடையும்படி சொன்னேன். சர்க்காரின் நிலைமையையும் அவர்களது நடத்தையையும் சக்தியையும் யோசித்து ஒரு காரியத்தில் இறங்க வேண்டும். சர்க்கார் சக்தி லேசானதல்ல. உலகத்திலேயே சக்தியும், தந்திரமும் பொருந்திய சர்க்கார் பிரிட்டிஷ் சர்க்காராகும். மேடையில் கூப்பாடு போட நம்மை அனுமதித்து விட்டதாலேயே நாம் பெரியவர்கள் சர்க்கார் சின்னவர் என்று எண்ணிவிடக்கூடாது. எதிரியின் பலம் அறியாமல் வீரம் பேசுவது பொறுப்பை உணராததாகும். எப்பொழுது எதற்காக சர்க்காரோடு போராடுவோம் என்பது எனக்குத் தெரியும்.

காங்கிரசுக்காரர்கள் தொல்லையின் மீது சர்க்கார் கண்ணோட்டம் இருந்தபோது நம்முடைய பொதுவுடமைப் பிரசாரத்தை அவர்கள் அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். காங்கிரஸ் தங்களுடைய சட்ட மறுப்பையும், மறியலையும், எதிர்ப்பையும் விட்டுவிட்டு ராஜவிஸ்வாசப் பிரமாண சரணாகதிக்கு வந்த பின்பு நம்மீது கண் வைத்தார்கள்.

2, 3 கோடி ரூபாய் செலவு செய்து பல லக்ஷம் பேரை ஜெயிலுக்கு அனுப்பி புத்தி பெற்ற காந்தியாரையும் காங்கிரசையும் பார்த்தாவது நாம் புத்திசாலித்தனமாய் 4, 5 ஆயிரம் ரூபாய் செலவிலும், நாங்கள் எங்கள் குடும்பம் மாத்திரம் கெட்டு ஜெயிலுக்குப் போனதிலும் திருத்திக்கொள்ள முடியாவிட்டால் நாம் பைத்தியக்காரராகி விட மாட்டோமா? நம் தோழர் களின் யோக்கியதை யாருடையது எனக்குத் தெரியாது?

இயக்கத்தால் மனிதரானவர்களே தான் இன்று இயக்கத்தை செத்துப் போய் விட்டது என்கிறார்கள்.

ஜஸ்டிஸ் கட்சி

ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிப்பதால் நமது யோக்கியதை போய்விட்டது என்பவர்கள் ஜஸ்டிஸ் கட்சி இல்லாதிருந்தால் அவர்களது யோக்கியதை எப்படியிருந்திருக்கும்? அவர்களுக்கு மேடை ஏது? என்று யோசித்துப் பார்க்கட்டும்.

ஜஸ்டிஸ் கட்சி இல்லாதிருந்தால் நம் அபிப்பிராயம் தெரிவிக்க இன்று இந்த மேடை கிடைத்திருக்குமா?

பார்ப்பான் பின்னால் கொடியைப் பிடித்துக்கொண்டு வந்தே மாதர கோஷமும், காந்திக்கு ஜே கோஷமும் போட்டால் ஒழிய பலருக்கு சாப்பாட்டிற்கு ஆவது வழி கிடைத்திருக்குமா? நம்மிடம் வீரம் பேசிக் கொண்டு நம்மைக் கோழைகள் என்று சொல்லிக்கொண்டு போனவர்களின் வாழ்க்கை இன்று எப்படி நடக்கிறது.

ஜஸ்டிஸ் கட்சியார் யாரிடம் பணம் வாங்கினார்கள்? யாரை ஜெயிலுக்கு அனுப்பினார்கள்? யார் நிழலில் அவர்கள் வாழ்கிறார்கள்? எந்த கொள்கையை விட்டுக்கொடுத்தார்கள்? அவரவர்கள் பணம் செலவு செய்து எலக்ஷனில் ஜெயிக்கிறார்கள், உத்தியோகம் அனுபவிக்கிறார்கள். மற்றப்படி அக்கட்சியின் கொள்கைகளை ஆட்சேபிக்கும் வீரர்கள் என் எதிரில் வரட்டும் பதில் சொல்லத் தயாராயிருக்கிறேன்.

ஜஸ்டிஸ் கட்சி இல்லாமல் இருந்தால் சு.ம. இயக்கம் இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு வேலை செய்ய முடிந்திருக்காது. அதை ஒழித்து விட்டாலும் சுயமரியாதை இயக்கம் வேலை செய்ய இவ்வளவு வசதியும் இருக்காது. அதன் தலைவர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை.

அன்றியும் அத்தலைவர்களில் யாரும் காங்கிரஸ் தலைவர்களின் சர்வாதிகாரத் தலைவர் முதல் மற்ற எந்தத் தலைவர்கள் யோக்கியதைக்கும் இளைத்தவர்கள் அல்ல.

ஒரு அளவுக்கு அவர்கள் சமதர்ம வேலை செய்துவருகிறார்கள். நமது திட்டங்கள் சிலவற்றை ஒப்புக்கொண்டார்கள். மாமிசம் சாப்பிடுவதானால் எலும்பைக் கழுத்தில் போட்டுக்கொள்ள வேண்டுமா? என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அதுபோல் நமது சமதர்மமும், பொதுவுடமையும் போலி புலி வேஷம்போல் விளம்பரத்தில் காட்டுவதில் பயனில்லை. காரியத்தில் முறையாக நடந்து வருகிறது.

சர்க்கார் உத்திரவு மீறுவதே சமதர்மமாகி விடாது. உத்திரவு மீறினவர்களின் கதியை நாம் பார்த்துவிட்டோம்.

ஆரம்பத்தில் மேல் ஜாதி, கீழ் ஜாதி கூடாதென்று சு.ம. இயக்கம் ஆரம்பித்தோம். அதற்கு அநுகூலமாகவே ஏழை பணக்காரத்தன்மை கூடாதென்றோம். அதைத்தான் நாம் சமதர்மம், பொதுவுடமை என்றோம். சர்க்கார் பொதுவுடமை கூடாதென்றால் விட்டு விட்டு மேல் ஜாதி கீழ் ஜாதி கூடாதென்கின்ற வேலை செய்வதில் என்ன தடை இருக்கிறது.

மற்றும் மூடப்பழக்க வழக்கம் ஒழித்தல், மதத் தொல்லை ஒழித்தல் முதலிய காரியம் செய்வதற்கு மார்க்கமில்லாமல் போகவில்லை.

ஆதலால் எனது நிலை இன்னது என்பதை ஒருவாறு விளக்கி விட்டேன் என்று நினைக்கிறேன்.

------------------திருத்துறைப்பூண்டியில் 21, 22.03.1936 ஆகிய நாட்களில் நடைபெற்ற தஞ்சை மாவட்ட 5 ஆவது சுயமரியாதை மாநாட்டில் 21.03.1936 இல் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.'"குடி அரசு" சொற்பொழிவு 29.03.1936

15.11.12

பெரியார் பிறந்த மண்ணிலா இந்த ஜாதி வெறி?அரசியலுக்கு மூலதனம் ஜாதியா?


சாம்பலாக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் பகுதிகள்!

  • ஜாதி வெறியர்களின் திட்டமிட்ட தாக்குதல்

  • "Q" பிராஞ்சு போல, ஜாதி, மத மோதலைத் தடுக்க காவல்துறையில் தனிப் பிரிவு தேவை!
  • இன்னும் கூடுதலாக நிவாரணத் தொகை அளிக்கப்பட வேண்டும்
டிசம்பர் 9 அன்று தருமபுரியில் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெறும்! - ஒத்த கருத்துள்ளோர் அழைக்கப்படுவர்!
ஜாதியைச் சாய்ப்போம் - சமத்துவ சமூகம் படைப்போம்!


- நமது சிறப்புச் செய்தியாளர் -
தருமபுரி, நவ.15- ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பை முன்னெடுத்துச் சென்று ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாயத்தைப்  படைப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் அவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது
உங்களின் பரிதாப நிலையை - இங்கு ஏற்படுத்தப் பட்டுள்ள கொடுமையை, வன்கொடுமையை நேரில் பார்க்கும்பொழுது வெறும்  கண்ணீரல்ல - ரத்தக் கண்ணீர் - இதயத்திலிருந்து பீரிடுகிறது.

தந்தை பெரியார் பிறந்த மண்!

தந்தை பெரியார் பிறந்த மண்ணிலா இந்த ஜாதி வெறி?  நம்முடைய பணிகள் இன்னும் இன்னும் தீவிரப் படுத்தப்பட வேண்டும் என்ற உணர்வைப் பெறுகிறோம்.
இதுபோன்ற கேடு கெட்ட, வெட்கப் படத்தக்க வன்முறைகளால் யாரும் ஜாதியைக் காப்பாற்றிவிட முடியாது. வீடு களை எரித்து விடுவதால் ஜாதி மறுப்புத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தி விட லாம் என்று மனப்பால் குடிக்க வேண்டாம். 

இணைந்து வாழ வேண்டியவர்கள்

தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப் பட்ட மக்களும் இணைந்து வாழ வேண் டியவர்கள்; ஆண்டாண்டு காலமாக கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்கள்.
இவர்களின் ஒற்றுமை மூலமாகத்தான் நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செலுத்த முடியும்.

டாக்டர் அம்பேத்கர்  சொன்னதுபோல ஆரியம் உருவாக்கிய இந்த ஏணிப் படிக்கட்டு ஜாதி முறையின் கொடிய விளைவு இது.

தீண்டாமை - அதன் மூலவேரான ஜாதியை பூண்டோடு, வேரடி மண்ணோடு ஒழித்துக் கட்ட வேண்டும்.
பிரச்சாரம் தீவிரமாகும்!

மக்கள் மத்தியில் எங்கள் பிரச்சாரம் மிகத் தீவிரமாகும் பரப்புவோம் - பாதுகாப்போம்! என்ற முறையிலே ஜாதி - தீண்டாமை எதிர்ப்புணர்வைப் பரப்பு வோம்  முன்னெடுத்துச் செல்லுவோம்! ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்து கொண்டவர்களைப் பாதுகாப்போம் என்ற முழக்கங்கள் தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கச் செய்வோம்! இது ஒரு கட்சிப் பிரச்சினையல்ல,  ஒட்டு மொத்தமான சமூகப் பிரச்சினை.

டிசம்பர் 9 அன்று தருமபுரியில் மாநாடு!

வரும் டிசம்பர் 9 ஆம் தேதி தருமபுரியில் ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெறும். கருத்தரங்கம், பேரணியும் இடம் பெறும். மக்கள் மத்தியில் ஜாதி  ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய மாநாடாக இருக்கும். இரு குடும்பப் பிரச்சினை - இரு ஜாதி பிரச்சினையாக ஆவதா?
இரு குடும்பங்களுக்கிடையே உள்ள பிரச்சினை, இரு ஜாதிகளுக்கிடையே நடந்த மோதலாக மாற்றப்பட்டது - மன்னிக்கப்பட முடியாத ஒன்றாகும்.
ஜாதி என்பதற்கு என்ன அடையாளம் யாரேனும் சொல்ல முடியுமா? இங்கேகூட ஜாதி மறுப்புத் திருமணங்களை ஏற்கனவே செய்து கொண்டவர்கள் சிறப்பாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களே - என்ன கெட்டு விட்டது?

காதல் திருமணம் ஜாதி மறுப்புத் திருமணம் - இதனை மட்டுமே முன் னிறுத்தி நடத்தப்பட்ட வன்கொடுமையாக இதனைக் கருத முடியவில்லை.
தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறுவது - பொறுக்க முடியாத ஒன்றா?
இப்பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி, பொருளாதாரம் உட்பட சற்று முன்னேறியவர்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள் - அரசுப் பணிகளில் இருக்கிறார்கள் - பிள்ளைகள் படிக் கிறார்கள் - கல்லூரிகளிலும் படிக்கிறார் கள் என்றவுடன் - இவற்றைக் கண்டு பொறுக்க முடியாதவர்கள் திட்டமிட்டு மேற்கொண்டு இருக்கிற வன்முறை இது.

பழிக்குப் பழி என்று  வன்முறையில் இறங்கி ஆங்காங்கே ஜாதிக் கலவரங்கள் நடைபெறுவதற்கு  இடம் கொடுத்து விடக் கூடாது.

திட்டமிட்ட செயலே!
நடைபெற்று இருக்கும் சம்பவங்களைப் பார்க்கும் பொழுது, ஏதோ எதேச்சையாக நடைபெற்ற நிகழ்வாக இதனைக் கருத முடியாது.  வீடு புகுந்து பொருள்களைக் கொள்ளையடித்து அதற்குப்பின் வீடு களையும் கொளுத்தியிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் உயிர்க் கொலையும் ஏற்படவில்லை என்பது ஆறுதலான ஒன்றாகும். தாழ்த்தப்பட்ட மக்கள் சமயோசிதமாக நடந்து கொண்டதால் உயிர் தப்பியுள்ளனர்.

எனக்குள்ள ஆச்சரியம் எல்லாம் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக இரு ஜாதி இளைஞர்கள் செய்து கொண்ட ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டது தொடர்பான பிரச்சினை இந்தப் பகுதிகளில் இருந்து வந்துள்ளது. காவல்துறையின் உளவுப் பிரிவு என்ன செய்தது என்றே தெரியவில்லை.

காவல் துறையில் தனிப் பிரிவு தேவை!

காவல்துறையில் ணு பிராஞ்சு என்ற ஒன்று இருப்பதுபோல, ஜாதி, மத மோதலைத் தடுக்கும் ஒரு பிரிவு ஏற்படுத் தப்பட வேண்டும். குறிப்பாக தீண்டாமை, ஜாதி வெறி நிலவும் இடங்களைக் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும்.

குடிசை வீடுகள் பாதுகாப்பானவை என்று கருதி திமுக ஆட்சிக் காலத்தில் கல் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன; குடிசை மாற்று வாரியம் என்ற ஒரு துறையே உருவாக்கப்பட்டது.

இங்கே பார்த்தால் ஜாதி என்னும் தீ கல் வீடுகளையும் கான்கிரீட் வீடுகளை யும் கூட எரித்துப் பதம் பார்த்துள்ளது.

நிவாரணம் போதுமானதல்ல!

வீடுகளை இழந்துள்ளவர்களுக்குத் தலா ரூ.50 ஆயிரம் அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. இது போதுமானதல்ல - இந்தத் தொகை அதிகரிக்கப்பட வேண் டும்.

தொழில் ரீதியான பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கப்பட வேண்டும், குறிப் பாக படிப்புப் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் கல்வியைத் தொடர உரிய நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - எல்லாப் பணிகளும் போர்க் கால அடிப் படையில் செயல்பட வேண்டும் என்று தமிழ் நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

குற்றவாளிகள் தப்பித்திடக் கூடாது!

குற்றவாளிகள் எக்காரணத்தைக் கொண்டும் தப்பித்து விடக் கூடாது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.

ஜாதி வெறி கொண்டு தாக்குவது என்பது இதுவே கடைசியாக இருந்து தொலைய வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளில் அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இது போன்ற குற்றங்களைச் செய்வது பற்றிய எண்ணமே இனி ஏற்படக் கூடாது - அந்த அளவுக்கு அரசின் செயல்பாடுகள் தீவிரமாக அமைய வேண்டும்.
பாதிக்கப்பட்டோருக்கு கழக மகளிரணியினர் ஆறுதல்
அறிக்கை கொடுப்போம்!
இங்கு நடைபெற்ற கொடுமை - அதன் சமூகச் சூழல் - பின்னணிகள் பற்றி அறிக்கை ஒன்றைத் தயாரித்து காவல் துறை தலைமை இயக்குநரைச் சந்தித்து அளிப்போம்.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது காவல்துறை, அரசு அதிகாரிகள் மெத்தனமாக ஆமை வேகத்தில் செயல் படக் கூடாது.
தனிப் பயிற்சி தேவை!

இது போன்ற நேரங்களில் அவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்ற வகை யில் தனிப் பயிற்சி அளிக்கப்பட்டால்கூட நல்லதுதான். ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்துச் செயல்படுவோம்.

எந்த ஒரு சூழலிலும் மனதைத் தளர விடாதீர்கள் மீண்டும் எழுவோம் என்ற உணர்ச்சியைப் பெறுங்கள். எங்களால் இயன்ற உதவி எப்பொழுதும் உண்டு.
முழுமையாக எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்

தருமபுரி மாநாட்டுக்கு வாரீர்!

தருமபுரி மாநாட்டில் இவற்றின் ஒட்டு மொத்தமான எழுச்சியை, ஆக்கப்பூர்வ மான சிந்தனையை, விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

ஜாதி ஒழிந்த சமுதாயம்தான், மனிதநேயம் உள்ள  - பேதமற்ற சமுதாயம் தான் நமது ஒரே இலக்கு. தந்தை பெரியார் அவர்களின் கருத்தும் அதுதான். திராவிடர் கழகம் பாடுபடுவது அதற்காகத் தான். தருமபுரி மாநாட்டுக்கு வாருங்கள், அது மாநில மாநாடு என்று சொல்லும் அளவுக்கு எழுச்சியுடன் நடைபெறும். இளைஞர்கள், மாணவர்களே வாருங்கள்! புதிய சமுதாயம் படைப்போம் என்று கூறினார்.

அரசியலுக்கு மூலதனம் ஜாதியா?
  • ஜாதி வெறியைத் தூண்டும் வகையில் பேசாதீர்கள்!
  • ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை அச்சுறுத்தும் வகையில் வன்முறைகளைத் தூண்டும் வகையில் பேசாதீர்கள்!
  • பெரியார் அரும்பாடுபட்டு உழைத்துப் பக்குவப்படுத்தி பாடுபட்ட மண்ணை மீண்டும் பழைய நிலைக்கு விரட்டாதீர்கள்.
  • நாகரிக உலகத்தில் - புத்தம் புதிய பேதமற்ற உலகில் வாழ்வோம் வாருங்கள்!
  • அய்ந்தாண்டு பிரச்சாரம் செய்து மக்களைப் பக்குவப்படுத்தினால், இந்தப் பாழாய்ப் போன தேர்தல் வந்து ஜாதி உர்ணர்வை வளர்க்கிறதே என்று தந்தை பெரியார் கூறியதை நினைவூட்டுகிறோம். ஜாதியை அரசியல் பொருளாக - மூலதனமாக ஆக்காதீர்கள்!

    நல்ல இலட்சியங்களைக் கொள்கையாகக் கொள்ளுங்கள் நல்ல திட்டங்களை அறிவியுங்கள் அந்த அடிப்படையில் மக்களைச் சந்தியுங்கள் - கேவலம் ஜாதித் தீயை விசிறிவிட்டு தேர்தல் லாபத்தைச் சுவைக்க ஆசைப்படாதீர்கள். தமிழர்கள் என்ற உணர்வைச் சிதைப்பது ஜாதியே, மனிதன் என்ற உணர்வை உருக்குலைப்பது ஜாதியே.  உணருங்கள்! உணருங்கள்!!
- பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழர் தலைவர் (14.11.2012) 

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கப்போகிறது தருமபுரி மாநாடு

கழகத் தோழர்கள் மத்தியில் தமிழர் தலைவர்
வீடுகள் எரிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய பொருள்கள் கூட இல்லாமல் வாடிய மக்களுக்கு ஆறுதல் கூறி, பொருள்களை தமிழர்தலைவர் வழங்கினார்.
தருமபுரி, நவ.15-தருமபுரி பெரியார் மன்றத்தில்  புதனன்று (14.11.2012) மாலை - கழகத் தோழர்கள் மத்தியில் கழகத் தலைவர் உரைத்ததாவது:
இந்தச் சந்திப்பு எதிர்பாராதது. சந்திப்பு மட்டுமல்ல தருமபுரியில் டிசம்பர் 9ஆம் தேதியன்று ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாடு என்ற அறிவிப்பும் கூட எதிர்பாராததுதான்.
ஜாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் மூன்று கிராமங்களைக் கொளுத்தி இருக் கிறார்கள் - வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மனிதன் செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்று திரும்பும் இந்தக் காலகட்டத்தில் இன்னும் ஜாதியின் பெயரால் வன்கொடுமை காண்பது கண்டிக்கத் தக்கது - எந்த வகையிலும் மன்னிக்கப் பட முடியாததாகும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
ஜாதி வெறியால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்த தமிழர் தலைவருக்கு மக்கள் நன்றி செலுத்தும்  காட்சி.
அண்மைக் காலமாக பரமக்குடி, தருமபுரி, அம்பாசமுத்திரம், திருக்காட்டுப்பள்ளி என்று ஜாதிப் பாம்பு தலையை நீட்டுகிறது. இதனை வளர விடக்கூடாது.
டெங்கு காய்ச்சலை ஒரு குறிப்பிட்ட வகை கொசு பரப்புகிறது. அந்த கொசு உற்பத்தியாகும் குப்பைகளை, சாக்கடைகளை அழிப்பதுபோல, ஜாதி என்னும் நோய்க்குக் காரணமான கடவுள், மதம், சாத்திரக் குப்பைகளை மக்கள் மனதிலிருந்து அகற்ற வேண்டும். இனியும் இந்தக் கொடுமைகள் தொடரப் பட அனுமதிக்கப்படக் கூடாது.
எரிக்கப்பட்ட வீட்டின் தூண் அருகே தனது துயரத்தை தமிழர் தலைவரிடம் வெளிப்படுத்தும்  பெண்.
வாக்கு வங்கிக்காக ஜாதியைப் பயன்படுத்துவது வெட்கக் கேடானது. திராவிடர் கழகம் ஜாதி ஒழிப்பு இயக்கம். அதற்காக அரசமைப்புச் சட்டத்தையே எரித்த இயக்கம் இது. நாம் இவ்வளவுப் பேர் கூடியிருக்கிறோம் என்றால், யார் எந்த ஜாதி என்று தெரியுமா? அப்படி ஜாதி அடையாளம் தெரியாமல் இருக்கக் கூடிய தொண்டர்கள் உள்ள கழகம் நமது கழகமே! அப்படிப்பட்ட நாம் நடத்த இருக்கும் தருமபுரி மாநாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்க வேண்டும்.
இளைஞர்களுக்கு நற்செய்தி - ‘MESSAGE’ கொடுக்கும் மாநாடாக அதனை நடத்துவோம். ஜாதிக்குள் திருமணம் செய்து கொள்ளமாட்டோம் என்று இளைஞர்கள் சூளுரை எடுக்க வேண்டும். எடுக்க வைப்போம். ஜாதி ஒழிப்பும், பெண் ணடிமை ஒழிப்பும் நமது இரு கண்கள்.
ஜாதிவெறியின் கோரத்தால் பாதிக்கப் பட்ட சிறுவன் தெருவில்...
உங்களை எல்லாம் நம்பியே இந்த மாநாட்டை அறிவித்துள்ளேன். தருமபுரி, கிருட்டினகிரி, திருப்பத்தூர், சேலம் மாவட்டக் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர் கழகத் தோழர் கள் இணைந்து தருமபுரி மாநாடு என்று பேசப் படும் அளவுக்கு ஒரு திருப்புமுனை மாநாடாக நடக்க வேண்டும்.
எந்தப் பொறுப்பை ஒப்படைத்தாலும் நீங்கள் - குறிப்பாக  தருமபுரி மாவட்டத் தோழர்கள் வெற்றி கரமாக நடத்தி முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. தொடக்கவுரையாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் மாநாட்டின் அவசியம் குறித்து சிறிது நேரம் பேசினார்.
கரியாக்கப்பட்ட வீட்டின் பொருள்களை குவித்து வைத்திருப்பதை காண நெஞ்சம் பதைக்கிறது.
பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ஊமை செயராமன் வரவேற்புரையாற்றினார். தருமபுரி மாவட்ட கழகத் தலைவர் புலவர் வேட்ராயன் நன்றி கூறினார். மாவட்ட செயலாளர் சிவாஜி மாநாட்டைச் சிறப்பாக நடத்துவோம் என்று உறுதி கூறினார். வழக்குரைஞர் வீரசேகரன், கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தா.திருப்பதி,  மாவட்ட செயலாளர் கே.திராவிடமணி, சேலம் மண்டல செயலாளர் காவேரிப்பட்டணம் தியாக ராசன், வேலூர் மண்டல செயலாளர் பழ.வெங்க டாசலம், பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, அண்ணாசரவணன், மாநில மகளிர் பாசறையைச் சேர்ந்த அகிலா எழிலரசன், திருப்பத்தூர் மாவட்டக் கழக செயலாளர் இளங்கோ, தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன், தருமபுரி மாவட்ட கழகத் துணைத்தலைவர் கதிர், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கிருட்டினமூர்த்தி, சேலம் மண்டல தலைவர் பழனி. புள்ளையண்ணன்,  மேட்டூர் மாவட்டக் கழகத் தலைவர் கவிஞர் சிந்தா மணியூர் சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் கிருட்டினமூர்த்தி, பாலு ஆகியோர் வந்திருந்தனர். முன்கூட்டியே உங்களுக்கு வாழ்த்துப் பாராட்டுகள்.
வாழ்க பெரியார்!
வாழ்க பகுத்தறிவு!!
வருக தருமபுரி மாநாடு!!! பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழர் தலைவருடன் தோழர்கள்
தருமபுரி - நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம் பட்டி ஆகிய பகுதிகளில் நடந்த ஜாதி வன் கொடு மையால் தீக்கிரையாக்கப் பட்ட பகுதிகளை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பார் வையிட்டு அம்மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன் அரிசி, பாய், துணி, போர்வைக ளை வழங்கினார். இந்நிகழ்வில் தருமபுரி மாவட்ட அமைப்பாளர்  பீம.தமிழ் பிரபாகரன், மாவட்ட ப.க. அமைப்பாளர் கதிர்செந்தில், மாவட்ட துணைத் தலைவர் க.கதிர், பொதுக்குழு உறுப்பி னர்கள்: அ.தீர்த்தகிரி, விடுதலை தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் மு.சிசுபாலன், மாவட்ட மேனாள் பொறுப்பாளர்கள் மா.கிருட்டிணன், கரு.பாலன், மு.பரமசிவம், மாவட்ட ப.க. துணைச் செயலாளர் கே.ஆர்.குமார், நகர தலைவர் துரை.சித்தார்த்தன், நகரச் செயலாளர் உண்மை சரவணன், கழக இளைஞரணி தலைவர் சி.காமராஜ், செயலாளர் காரல்மார்க்ஸ் மற்றும் கழக நிருவாகிகள் வினோவடிவேல், துரைசாமி, இ.மாதம், சின்னராஜ், வினோபாஜி, காமலாபுரம் தோழர்கள் இராஜா, மாணிக்கம் பிஎஸ்.என்எல் சின்னசாமி, அமாசி, மணி, சின்னபாப்பசக்கரை, ஏங்கல்ஸ், பிரபாகரன், உதயசூரியன், மேட்டூர் மாவட்ட தலைவர் சி.எஸ்.சுப்பிரமணி.
கிருட்டினகிரி: கிருட்டினகிரி மாவட்டத்தி லிருந்து மாவட்ட தலைவர் தா.திருப்பதி, செயலாளர் கோ.திராவிடமணி, பையூர் மதிமணியன், பெரியசாமி, சுப்பிரமணியன், மூர்த்தி, பழனி சாமி, ஜீவா, வேடியப்பன், சீனிவாசன், மத்தூர் ஊற்றங்கரை யிலிருந்து மேனாள் மாவட்ட செயலாளர் பழ.பிரபு, வித்யா, மத்தூர் இரவி, ஆசிரியை இந்திராகாந்தி, ஜான்சிராணி, கலைமணி, சிவராஜ், முரு கேசன், சுகு மார், பழனி, வெங்கடாசலம், விஸ்வநாதன்.
திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் இளங்கோ, துணைச் செயலாளர் இளங்கோவன், மகளிரணி செயலாளர் கவிதா, கவிஞர் சுப்பு லட்சுமி, புலவர் அண் ணாமலை, மண்டல மாணவரணி செயலாளர் சிற்றரசு, தமிழ்ச்செல்வன், பெரியார், அசோகன், ராஜேந்திரன், பாண்டியன், பெருமாள், ஆனந்தன், திருப்பதி மற்றும் பலர் பங்கேற்றனர்.