Search This Blog

19.9.12

ராஜபக்சேஇந்திய வருகையும்!-தமிழ் இளைஞனனின் தற்கொலையும்!

சேலத்து விஜயராஜ் தீ வைப்புகள் தொடரவேண்டாம்! தற்கொலைகள் தீர்வாகாது! அனைவரும் ஒன்றுபட்டு பொது எதிரியை வீழ்த்துவோம்! தமிழர் தலைவர் விடுத்துள்ள மிக முக்கிய அறிக்கை

ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு பொது எதிரியை வீழ்த்தவேண்டுமே தவிர தற்கொலைகள் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்.நா.வால் போர்க்குற்றவாளியென குற்றம் சுமத்தப் பெற்ற இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நாளைய இந்திய வருகை, உலகத் தமிழர்கள், மனித உரிமை காப்பாளர்கள் ஆகியோரின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்.

கறைபடிந்த அத்தியாயத்தினை இந்திய அரசும், அதற்கு உடந்தையாக இருப்பதும், பா.ஜ.க. என்ற இரட்டை வேட ஆரியக் கட்சியும் (அழைப்பு விடுத்த கட்சி அவர் வருகைக்கு இப்போது அங்குள்ள பா.ஜ.க. அரசும், மத்திய பிரதேச பா.ஜ.க. முதலமைச்சரும் சிவப்பு கம்பள வரவேற்பும் தருவதும்) மத்தியில் உள்ள காங்கிரசும் சரி, பா.ஜ.க.வும், ஈழத் தமிழர் வாழ்வுரிமை பிரச்சினையில் வேடங்கட்டி ஆடுபவர்களே தவிர, உண்மையான அனுதாபம் கொண்டவர்கள் அல்லர் என்பதை அவர்கள் இதன்மூலம் பிரகடனப்படுத்துகின்றனர்!

2008 இல் சொன்ன வாக்குறுதி எங்கே?

2008 இல் தீவிரவாதத்திற்கு எதிரான எங்கள் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. விடு தலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று மார்தட்டிய பிறகும்கூட அந்நாட்டின் குடிமக்களில் நான்கில் ஒரு பங்கு தமிழர்களை - கொல்லப்பட்ட பல லட்சக்கணக்கான தமிழர் களின் எண்ணிக்கை போக, எஞ்சியவர்களை - இன்னமும் ஏன் முள்வேலிக்குள் அடைத்து வைத்து சிக்கிச் சீரழிக்கவேண்டும்?

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஏன் இன்னமும் சிங்கள இராணுவ ஆட்சியின் கீழேயே தொடரவேண்டும்?

வன்னிப் பகுதி யுத்தப் பாதுகாப்புப் பகுதி என்று மக்களுக்குக் கூறி, அவர்களை அங்கு வரவழைத்து விட்டு அவர்கள்மீதும் சிங்கள இராணுவம் குண்டுமழை பொழிந்து அழித்தும், மாண்டவர் பல்லாயிரவர் போக, எஞ்சிய தமிழர் இல்லங்கள் புதுப்புது சிங்களக் குடியேற்றங் களாக, ராஜபக்சே அரசால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் மாற்றப்படும் கொடுமை தொடர்கதையாக உள்ளது. மிகுந்த வேதனைக்குரியதல்லவா?

தற்கொலைகளில் இறங்காதீர்!

இரத்தக் கறை படிந்த இட்லரின் வாரிசு புத்த பூமிக்கு வரத் தகுதி படைத்தவரா? வரவேற்க லாமா மனித இதயம் படைத்தோர்?

தமிழர் விரோத நிலைப்பாடு - தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் குரலின் முழக்கம் ஓங்கி ஒலித்தும், இதை அலட்சியப்படுத்தி, அந்த கொடுங்கோலனை வரவேற்பதால், மனம் நொந்து, பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக்கொண்ட ஒரு தமிழ் இளைஞன் விஜயராஜ் நேற்று மரணத்தைத் தழுவிவிட்டார்!

தமிழர் காவு கொடுக்கப்படும் படலம் இங்கேயுமா தொடரவேண்டும்?

உணர்ச்சிவயப்பட்டு இளைஞர்களே இப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்கிவிடாதீர்கள்!

நாம் வாழ்ந்து, இந்த நவீன ஹிட்லர்களின் தர்பாரை முடிவுக்குக் கொணர்ந்து, தனி ஈழம் மலர நாம் உலகத்தாரிடம் நீதி கேட்டு, வெற்றி பெற்று, ஈழத் தமிழரின் வாழ்வுரிமையை நனவாக்கி அரண் அமைக்கவேண்டும்.

தற்கொலைகள், இந்தக் கொடுங்கோலர் களின் கண்களைத் திறக்காது; கருத்துகளை உருவாக்காது - தீர்வும் ஆகாது!

வீண் விமர்சனக் கச்சேரிகள் வேண்டாம்!

அவிழ்த்துக் கொட்டப்பட்ட நெல்லிக்காய் மூட்டையாய் இருக் கும் தமிழர்களின் அவல நிலை போக்கி ஒன்றுபடுத்தி நின்று, உரிமைப் போராட்ட வெற்றிக்கு உழைத்திட சூளுரைப்போம்!

பொது எதிரியை (ராஜபக் சேவை) மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு, இங்கே விமர்சனக் கச்சேரியில் ஈடுபடும் வீணானவர்களே, உங்களுக்கு விவேகம்தான் எப்போது பிறக்கும்?

நாம் எல்லோரும் தனித்தனிதானா?

புரட்சிக்கவிஞர் முன்பு கேட்டதுபோல,

எல்லோரும் அங்கே தனித்தனிதான், ஏகமனதாகி இவர் நம்மை எதிர்ப்பதெங்கே? என்ற நிலை இன்னும் எத்தனைக் காலம் தொடருவது?

நம் உணர்வுகள் ஓரணியில் திரண்டால், இராஜபக்சேக்களை வரவழைக்குமா மத்திய, மாநில அரசுகள்? (மத்திய பிரதேச பா.ஜ.க.) இனம் இனத்தோடு சேருகிறது.

நம் இனம் இன்னும் தன்முனைப்புக்குப் பலியாகும் தாழ்ந்த தமிழர் கூட்டமாகிறது!

இளைஞர்களே, உறுதியோடு எழுந்து நிற்போம்! வெல்வோம் என்ற நிலைப்பாட்டில் நில்லுங்கள்!

சேலத்து இளைஞனுக்கு வீரவணக்கம்!

வரலாறாகிவிட்ட சேலத்து தமிழ் இளைஞன் - விஜயராஜுவிற்கு வீர வணக்கம்! அவரது குடும்பத்தவருக்கு கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கல்!

அரசுகள் இவைகளுக்குப் பதில் சொல்ல காலம் விரைவில் வரும்; வந்துகொண்டுள்ளது என்பதே இத் துக்க நாளில் நமது பதிவுகள்.

சென்னை   
19.9.2012



-------------------------------கி.வீரமணி  தலைவர்,திராவிடர் கழகம்.

பார்ப்பனச் சூழ்ச்சியில் அவதரித்த பிள்ளையாரை கும்பிடப் போகிறீர்களா?

விநாயக சதுர்த்தியாம்!
பிறப்பு - இறப்பு இல்லாதவன் கடவுள் என்று சொல்லுவார்கள். இந்து மதத்திலோ கடவுளுக்குப் பிறப்பும் உண்டு, இறப்பும் உண்டு.

கடவுளுக்குப் பிறப்பை வைத்தால், அதற்கென்று ஒரு நாளை ஒதுக்கி, புரோகிதச் சுரண்டலுக்கு விரிவான ஏற்பாட்டைச் செய்துகொள்ளலாம் அல்லவா!

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கன்னி ராசியில் விருச்சிகம் லக்னத்தில் சதுர்த்தி திதியில் அவதரித்தாராம் விநாயகர். எப்படி அவதரித்தாராம்?

பார்வதி தேவியார் குளிக்கச் சென்றபோது, தன் உடலில் தேங்கிக் கிடந்த அழுக்கையெல்லாம் திரட்டி, அதை ஒரு உருவமாக்கி, காவலுக்கு வைத்தாராம். அப்பொழுது அங்கு வந்த சிவனை அந்த அழுக்குருண்டை தடுத்ததாம்; சிவனைத் தடுப்பது என்பது சாதாரணமா?

சினம் கொண்ட சிவன் சூலாயுதத்தினால் அந்த அழுக்குருண்டையின் தலையைக் கொய்தானாம். முண்டமான தன் பாலகனைப் பார்த்து பார்வதி தேவியார் வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறினாளாம்.
வடக்கே தலை வைத்துப் படுத்துக் கிடந்த ஒரு யானையின் தலையை வெட்டிக் கொண்டு வந்தனராம் கணநாதர்கள்.

சிவன் என்ன செய்தான்? அறுவை சிகிச்சை நிபுணர்போல அந்த முண்டத்தின் உடலோடு யானைத் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து கணங்களுக்குத் தலைவன் ஆக்கினானாம்.

பார்வதி உடலின் அழுக்கு என்று சொன்னால், அருவருப்பாக இருக்கிறது என்றவுடன், பார்ப்பனர்கள் என்ன வியாக்கியானம் சொன் னார்கள் தெரியுமா? பார்வதி தன் உடலில் உள்ள சக்தியையெல்லாம் திரட்டி ஒரு உருவமாக்கினாள் என்று கதை கூற ஆரம்பித்துவிட்டனர்.

காரணம், எல்லாம் தந்தை பெரியாருக்கும், திராவிடர் கழகத்திற்கும் பயந்துதான்.

இந்தப் பிள்ளையார் பிறப்புக்கு ஒரு கதையல்ல, இரு கதையல்ல, பல கதைகள் உண்டு. கதைக்குத்தான் கண் இல்லை என்று வசதியாகச் சொல்லி வைத்துவிட்டார்களே!

பகவான் விநாயகரைக் கும்பிட்டுச் சென்றால், எல்லாக் காரியமும் ஜெயம்தானாம். விக்னம் இல்லாமல் காப்பாற்றுவாராம் - அதனால்தான் அந்த அழுக்குருண்டைக்கு விக்னேஸ்வரன் என்று பெயராம்.


இந்த விநாயகன் பிரம்மச்சாரி என்று ஒரு கதை. சித்தி, புத்தி என்று இரு மனைவிமார்கள் உண்டு என்று இன்னொரு கதை. உண்மை யிலே இப்படி ஒரு கடவுள் இருந்தது என்றால், ஏனிப்படி முரண்பாடான கதைகள் - மாறுபாடான கதைகளைச் சொல்கின்றன புராணங்கள்?

கடவுள் விஷயம் என்பதால் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற துணிவில் உளறி வைத்துவிட்டனர்.

தனக்கு அம்மாவைப்போல அழகான மனைவிவேண்டும் என்று உலகிலேயே கேட்ட கயவாளி இந்த விநாயகனாகத்தான் இருப்பான்.

விநாயகர் என்று பெயர் இந்தப் பிள்ளையாருக்கு வந்ததற்கெல்லாம் ஒரு சதி - பின்னணியில் இருக்கிறது.

புத்தருக்கு விநாயகர் என்றும், சாஸ்தா என்றும் பெயருண்டு. பிற்காலத்தில் புத்தர் கோயில்களை இந்துமதவாதிகள் தங்கள் கோயில்களாக உருமாற்றி விட்டனர். புத்தருக்கு இருந்த விநாயகர் என்ற பெயரை இந்தப் பிள்ளையாருக்குச் சூட்டி, புத்த விகாரங்களை மோசடி செய்துவிட்டனர்.

இந்துக் கோயில்களாக்கிவிட்டனர். அது போலவே, புத்தருக்கு சாஸ்தா என்ற பெயருண்டு, பிற்காலத்தில் அய்யப்பனுக்கு சாஸ்தா என்ற பெயர் சூட்டி புத்த விகாரங்களை அய்யனார் - அய்யப்பன் என்ற கோயில்களாக உருமாற்றம் செய்தனர்.

இதுபற்றி ஆய்வாளர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்ட பவுத்தமும் - தமிழும் என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

இந்து மதம் பவுத்த மதத்தை அழித்துவிட்டபோதிலும், அந்த மதத்தை உண்டாக்கின புத்தரை ஒரு தெய்வமாக ஏற்றுக்கொண்டது. அஃதாவது, புத்தர் திருமாலின் அவதாரங்களில் ஒருவரென்று ஒப்புக் கொண்டு விட்டது. ஏன் ஒப்புக்கொண்டது?

புத்தரின் உருவ வழிபாடு அக்காலத்து மக்களிடையே வேரூன்றியிருந்தபடியால், பவுத்த மதத்தை அழித்துவிட்டபோதிலும், புத்தரைத் தெய்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இந்து மதத்திற்கு ஏற்பட்டதுபோலும்!

இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவ மதம் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாக ஏற்றுக்கொண்டதுபோலவே, மற்றொரு பிரிவாகிய சைவ சமயமும், புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டது. சாஸ்தா, அல்லது அய்யனார் என்னும் பெயருடன் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டு, பின்னர் முருகர் அல்லது சுப்பிரமணியரோடு புத்தரை ஒற்றுமைப்படுத்திக் கொண்டது.

புத்தருக்குத் தருமராசன் என்றும், விநாயகன் என்றும் பெயர்கள் உள்ளன. இப்பெயர்களை நிகண்டுகளிலும் காணலாம். தருமராசன் என்னும் பெயருடன் இருந்த பவுத்தக் கோயில்களைப் பிற்காலத்தில், பாரதத்தில் கூறப்படும் பஞ்சபாண்டவரைச் சேர்ந்த தருமராசன் கோயிலாக மாற்றி விட்டனர்.

அதுபோலவே, விநாயகன் என்னும் பெயருடன் இருந்த புத்தர் கோயில்களை விநாயகர் (பிள்ளை யார்) கோயிலாகவும் மாற்றி விட்டார்கள். துடித லோகத்தில் எழுந்த ருளியிருந்த அவலோகிதர் எனப்படும் போதிசத்துவர், புத்தராக மாயா தேவியின் திருவயிற்றில் வந்து அமர்ந்தபோது, வெள்ளையானைக் கன்று உருவமாக வந்தார் என்று பவுத்த நூல்கள் கூறுகின்றன.

பவுத்த மதம் செல்வாக்குக் குறைந்த பிற்காலத்தில், விநாயகர் என்னும் பெயரு டைய புத்தக் கோயில்கள் விநாயகர் (பிள்ளையார்) ஆலயங்களாக மாற்றப்பட்டன. பழைய சைவ மதத்தில் விநாயகர் வணக்கம் கிடையாதென்றும், கி.பி. 6 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு விநாயகர் வணக்கம் சைவ சமயத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதென்றும் சைவப் பெரியார் உயர்திரு மறைமலையடிகள் போன்ற அறிஞர்கள் கூறுவதும் ஈண்டு கருதத்தக்கது.
(“பவுத்தமும் - தமிழும்”, பக்கம் 77)

பக்தர்களே பார்ப்பனச் சூழ்ச்சியில் அவதரித்த இந்தப் பிள்ளையாரை கும்பிடப் போகிறீர்களா? இங்கு பக்தி என்பது பார்ப்பனர் நலம் என்பதைப் புரிந்துகொள்வீர்!
 

                     ---------------------” விடுதலை” 28-8-2012 -viduthalai/20080828/news07.

18.9.12

அழுக்குருண்டை பிள்ளை-யார்? அறிஞர்கள் கருத்து!


விநாயகர்

விநாயகர்

விநாயகர் பற்றிய வரலாற்றினை அறிவுடையோர் அருவருக்கத்தக்கதான ஒரு கதை வடிவிற் கட்டிவிட்டார்கள். யாங்ஙனமெனிற் கூறுதும்:

திருக்கயிலாயத்தில்  சிவபிரானும் அம்மையும் மகிழ்ச்சியோடு அமர்ந்திருக் கையில் கோயிலின் ஒரு பக்கத்துச் சுவரில் ஆண்-பெண் யானைகளின் வடிவங்கள் தீட்டப்பட்டிருந்தனவாம். அவற்றைப் பார்த்ததும் அவ்வியானை வடிவெடுத்து அம்மையைப் புணரவேண் டும் என்னும் காமவிருப்பம் இறைவனுக்கு உண்டாயிற்றாம். அக்குறிப்பினைத் தெரிந்து கொண்ட அம்மையார் உடனே ஒரு பெண் யானை வடிவெடுக்க, இறைவனும் ஓர் ஆண் யானை வடிவெடுத்து அவளைப் புணர்ந்தானாம். அப்புணர்ச்சி முடிவில் யானை முகமுடைய பிள்ளையார் பிறந்தானாம். இவ்வாறு கந்த புராணத்தில் கதை சொல்லப்பட்டுள்ளது.

பாருங்கள் அறிஞர்களே! உணர்ந்து பார்க்கும் எந்த உண்மைச் சைவருக்கே னும் இக்கதை அருவருப்பினையும் மானக் குறைவினையும் விளைவியாது ஒழி யுமோ? மக்களுள்ளும் இழிந்தவர் செய் யாத இக்காமச் செயலினை இறைவன் செய்தானென்பது எவ்வளவு அடாததா யிருக்கிறது? தேவ வடிவில் நின்று புணரும் இன்பத்தை விட, இழிந்த விலங்கு வடிவில் நின்று புணரும் இன்பம் சிறந்ததென்று கூற எவரேனும் ஒருப் படுவரோ? அத்தகைய இழிந்த காம இன்பத்தினை இறைவன் விரும்பினான் என்றாலும், பேரின்ப உருவாயே நிற்கும் கடவுளிலக்கணத்திற்கு எவ்வளவு மாறு பட்டதாய் - எவ்வளவு தகாததாய் - எவ் வளவு பழிக்கத்தக்கதாய் இருக்கின்றது உணர்ந்து பார்மின்!

இக்கதை விலங்கின் புணர்ச்சியைக் கண்டு வரம்பு கடந்து காமங்கொண்ட ஓர் இழிந்த ஆரியப் பார்ப்பனனால் வடமொழி யில் கட்டப்பட்டு வழக்கத்தில் வந்து விட்டது.,


பிள்ளையார் பிறப்பினைக் கூறும் கதைகள் அருவருக்கத் தக்கனவாய், கடவுளிலக்கணத்துக்குப் பெரிதும் மாறு கொண்டனவாய் நிற்கின்றன.

ஒரு காலத்தில் உமாதேவி அம்மை யாருக்கு மூத்த பிள்ளையார் ஒருவர் பிறந்தனராம். அப்பிள்ளையைக் காணும் பொருட்டுத் தேவர்கள் எல்லாரும் அங்கு வந்தனராம். வந்தவருள் சனியனெனும் தேவனும் ஒருவனாம். இச்சனியன் தான் அப்பிள்ளையைப் பார்த்தால் அதற்குத் தீது உண்டாகு மென்று நினைத்து, தலை குனிந்து அதனைப் பாராதிருக்க அவர் கருத்தறியாது, அம்மை அவன் தம் மகனைப் பாராது இகழ்ந்தனனென்ற சினங்கொள்ள அதற்கஞ்சி அவன் அப்பிள்ளையைப் பார்த்தனனாம். பார்த்த உடனே அப்பிள்ளையின் தலை எரிந்து சாம்பலாய்ப் போயிற்றாம். அய்யோ!

அதனைக் கண்டதும் என ஆற்றாமை மிகப் பெற்ற உமையம்மையார் அச்சனியன்மேல் சினங்கொள்ளல் ஆயினளாம். அது கண்ட நான்முகன் முதலான தேவர்கள் எல்லாரும் அம்மையை வேண்டி அவனை மன்னிக்கும்படி அவனுக்காகப் பரிந்து பேசினராம். அதன்மேற் சிவபிரானும் ஒரு யானையின் தலையை வெட்டிக் கொண ரும்படித் தேவர்களுக்குக் கட்டளையிட, அவர்களும் அவ்வாறே சென்று ஒரு யானையின் தலையைக் கொண்டு வர அத்தலையை அப்பிள்ளையின் முண்டத் திற் பொருத்தி அதனை உயிர் பெற்றெழச் செய்தனராம். அது முதற்றான் பிள்ளை யாருக்கு யானைமுகம் உண்டாயிற்று என்பது ஒரு கதை.

இங்ஙனமாக இக்கதை பிரமனை வர்த்த புராணத்தின்கட் சொல்லப்பட்டது. இக்கதையின் கண் உள்ள மாறுபாடு களையும், இழிவுகளையும் ஒரு சிறிது உற்று நோக்குமின்காள்! அன்பர்களே, எல்லாம் வல்ல சிவபிரானுக்கும் அம்மைக் கும் ஒரு பிள்ளை பிறந்ததென்றால், அஃது எவ்வளவு தெய்வத்தன்மையும்,  எவ்வளவு பேராற்றலும் உள்ளதா யிருக்க வேண்டும்? அத்துணைச் சிறந்த தெய்வப் பிள்ளையைச் சனியன் என்னும் ஓர் இழிந்த தேவன் நோக்கின உடனே அதன் தலை எரிந்து சாம்பலாய் போயிற் றென்றால், அப்பிள்ளை தெய்வத்தன்மை உடையதாகுமோ? கூர்ந்து பாருங்கள்! மேலும், அத் தெய்வப் பிள்ளையை விடச் சனியனன்றோ வல்லமையிற் சிறந்த பெருந்தெய்வமாய் விடுகிறான்? அதுவுமே யன்றி, முழுமுதற் கடவுளான அம்மையார் தம் பிள்ளையைப் பார்த்த சனியனின் பார்வைக் கொடுமையைத் தடை செய்ய மாட்டாமற் போயினரென்றால் அச்சனி யனல்லவோ அவர்களினும் மேலான தெய்வம் ஆகிவிடுகிறான்?


அல்லாமலும், சனியனின் பார்வையால் எரிந்து போன தம் பிள்ளையின் தலையை மீண்டும் உண்டாக்கிக் கொள்ளும் ஆற்றல் அம்மையப்பர்க்கு இல்லாது போயிற்றென்றோ சொல்லல் வேண்டும். அதுவல்லாமலும் அழகிற் சிறந்த தேவ வடிவங்களின் தலைகள் எல்லாம் இருக்க, அவை தம்மை எல்லாம் விட்டுவிட்டு அழகற்ற ஒரு யானையின் தலையை வெட்டிக் கொணர்ந்து பொருத்தினா னென்பது கடவுளின் இறைமைத் தன் மைக்கு இழுக்கன்றோ? இத்துணை மாறுபாடுகளும், இத்துணை இழிவுகளும், இத்துணை பொல்லங்குகளும் நிறைந்த இப்பொல்லாத கதையை நம்புவோனெவ னும் உண்மைச் சைவன் ஆவானோ? சொல்மின்காள்! ஆழ்ந்து பார்க்குங்கால் எல்லாத் தேவர்களிலும் மேலாகச் சனி யனைக் கொண்டாடி அவனை உயர்த்து வதற்கு விரும்பிய ஓர் ஆரியப் பார்ப் பனனே இக்கதையைக் கட்டிவிட்டு எல்லாம் வல்ல சிவபெருமானையும், உண்மையிற் சிறந்த சைவ சமயத்தையும் இழிவுபடுத்தி விட்டானென்பது

உங்களுக்குப் புலப்படவில் லையா? இவ்வாறு சைவத்துக்கும் சிவபிரான் தன் முழு முதற்றன்மைக்கும் முழுமாறான பொல்லாக் கதைகளை நம்ப வேண்டாமென்றும் எமது அறிவுரை யினைக் கண்டு குறை கூறும் குருட்டுச் சைவர்களே உண்மைச் சைவத்திற்குப் பெரும் பகைவர்கள் என்று தெரிந்து கொள்மின்காள்!

பிள்ளையார் பிறப்பு சிவமகா புராணத்தின்கண் வேறொரு வகையாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அதனையும் அதன் மாறுகோளினையும் இங்கு ஒரு சிறிது எடுத்துக் காட்டுதும்; ஒரு கால் உமையம்மையார் குளிக்கப் போயினராம். போகுமுன் தமது உடம்பிலுள்ள அழுக்கையெல்லாம் திரட்டி எடுத்து அதனைத் தமது கையாற் பிடித்து தமது குளிப்பறையின் முன் வாயிலில் வைத்து சிவபிரான் வந்தனராயின் தடை செய்க என்று கட்டளையிட்டுத் தாம் உள்ளே குளிக்கச் சென்றனராம்.


அங்ஙனம் பிடித்து வைக்கப்பட்ட அவ்வழுக்குத் திரள் உடனே உயிருள்ள பிள்ளையாராகி அக் குளியலறையின் வாயலிற் காவலாய் இருந்ததாம். சிவபெரு மான் அம்மையைத் தேடிக்கொண்டு அங்கு வந்தனராம். அவரைக் கண்டதும் அவ்வழுக்குப் பிள்ளையார் அவரை உள்ளே போகவேண்டாமெனத்  தடை செய்ய இருவருக்கும் போர் மூண்டதாம். நெடுநேரம் போராடிக் கடைசியில் சிவ பெருமான் அப்பிள்ளையாரின் தலையை வெட்டினாராம். அப்போது உள்ளிருந்து வந்த உமையம்மையார் அய்யோ! என் பிள்ளையை வெட்டிவிட்டீரே என்று கரைந்து ஆற்றாமல் அழுதனராம். அது கண்ட சிவபெருமான் தாமும் ஆற்றாதவ ராகி நம் பிள்ளை என்று அறியாமல் இவனை வெட்டிவிட்டேன். ஆயினும் நீ வருந்தாதே! இப்போதே இதனை உயிர் பெற்றெழச் செய்வம் என ஆறுதல்  மொழிந்து வடக்கு நோக்கிப் படுத்திருந்த ஒரு யானையின் தலையை வெட்டிக் கொணர்வித்து அதனை அப்பிள்ளை யாரின் உடம்பிற் பொருத்தி உயிர் பெற்றெழச் செய்தனராம்.

அடிகளாரின் ஆராய்ச்சி அன்பர்களே! இக்கதை எவ்வளவு அருவருக்கற் பாலவான மாறுபாடுகள் நிறைந்ததாய் இருக்கின்றது? எல்லாம் வல்ல இறைவியான உமைப் பிராட்டியார் வினை வயத்தால் பிறக்கும் நம் போல் ஊனுடம்பு உடையவரல்லர். அவர்தம் திருமேனி சொல்லொணா அருள்ஒளி வீசித் துலங்குவதென்று தேனோபநிடதம் நன்கெடுத்து மொழியா நிற்க, அவ்வறிவு நூலுக்கும் கடவுளிலக்கணத்துக்கும் முற்றும் மாறாக அம்மையார் திருமேனியில் அழுக்கு நிரம்பி யிருந்ததென்றும்  அவ் வழுக்கினைத் திரட்டி எடுத்து பிள்ளை யாரைச் சமைத்தனள் என்றும் கூறும் அழுக்குப் புராணம் சிவமகாபுராணமெனப் பெயர் பெறுதற்குத் தகுதியுடையதாமோ? ஆராய்ந்து கூறுமின்காள்! ஊனுடம்பு படைத்த மக்களுள்ளும் அழகும், நாகரிக மும், தூய்மையும் வாய்ந்தார் சிலரின் உடம்புகள் அழுக்கில்லாதனவாய் மினு மினுவென்று மிளிரா நிற்கத் தூய அருட்பேரொளியின் வடிவாய் விளங்கும் அம்மையின் திருமேனி அழுக்குடையதா யிருக்குமோ? சொன்மின்காள்!     மேலும் தன் மனைவியாரைத் தேடிக் கொண்டு வந்த சிவபிரான் தமக்குப் பிள்ளையென்று அறியாமல் அதன் தலையை வெட்டிவிட்டனரென்பது கடவுள் இலக்கணத்திற்கு எவ்வளவு முரண் பட்டதா யிருக்கின்றது? எல்லா உயிர்க்கும் உயிராய் அறிவுக்கு மறிவாய் எல்லா உலகங்களிலும் எல்லாக் காலங்களிலும் நிகழும் நிகழ்ச்சிகளை எல்லாம் ஒருங்கே உணரும் பெருமான் தன் பிள்ளையைத் தாமே அறியாமல் வெட்டினரென்றால் அஃது அறிவுடையோரால் ஒப்பத் தகுந்ததாகுமோ? இன்னும் பாருங்கள்! வெட்டுண்ட பிள்ளையைத் தலையும் உடம்பும் பொருத்தி உயிரோடு எழுப்ப லாகாதா? வெட்டுண்ட தலையை விடுத்து வேறொரு யானைத் தலையை வருவித்துப் பொருத்தி னனென்பது எவ்வளவு தகாத செயலாய் இருக்கின்றது?

இத்துணைத் தகாததென்பது கடவுளிலக்கணத்துக்கு அடுக்குமா? உண்மையாய் நோக்குங்கால் சிவபிரானையும், அருள் வடிவான பிராட்டியையும், ஓங்கார, ஒலி வடிவில் விளங்கும் இறைவனையும் இழித்துப் பேச விரும்பின எவனோ ஓர் ஆரியப் பார்ப்பனன் இக்கதையைச் சிவமகா புராணமென்னும் பெயராற் கட்டி விட்டனன் என்பது வெள்ளிடைமலை போல் விளங்கா நிற்கும். இப்பொல்லாத பார்ப்பன சூழ்ச்சியை ஆராய்ந்து பார்க்கும் அறிவு மதுகை இல்லாத குருட்டுச் சைவர்கள் இவ்வழுக்குப் புராணத்தைச் சிவமகா புராணமெனக் கொண்டாடிச் சைவ சமயத்துக்குக் கேடு சூழ்வது பெரிதும் வருந்தற்பாலதாயிருக்கின்றது.

                     ----------------மறைமலை அடிகள் எழுதிய - சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளி யிட்டுள்ள கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா என்னும் நூல்.

(தொகுப்பு: வய்.மு.கும்பலிங்கன், குடந்தை) 15-9-2012

விநாயகசதுர்த்தி என்றால்?கொழுக்கட்டை ஏன்?தோப்புக்கரணம் ஏன்?

சிவன் கன்னத்தில் உதித்தவனாம் வினாயகன்!




இந்த அகோர விநாயகர் விழாவிற்குப் பெயர்தான் விநாயகர் சதுர்த்தி முற்காலப் பெண்கள் இதனை விநாயக சவுத்தி - என்பர். இதற்கு வேதியப் புரோகிதர் இட்ட பெயர் சங்கட ஹரசதுர்த்தி விரதம். ஆவணி மாதம், சதுர்த்தி விரதம், ஆவணி மாதம், கிருஷ்ண பட்சம் சதுர்த்தியில் கைக்கொள்ள வேண்டியது.

பொன் முதலியவற்றால், (இப்போது களிமண்) கணேச திருவுருவம் செய்து, கலசம் வைத்து, ஆவாகித்து விநாயகர் (சக்தி), அந்தச் செம்புக்குள் புகுந்து கொள்ளச் செய்து, சந்திரனுக்கு அர்க்கியம் கொடுத்து, பூசித்து, கணேசரை நோக்கி, தமது சங்கஷ்டம் (சங்கடம் - கஷ்டங்கள்) நீக்க வேண்டி, பலகாரங்களும் மற்றும் கொழுக் கட்டை, சுண்டல், வடை, பொறி கடலை, பழம், தேங்காய் வைத்துப் பூசிப்பது.

இப்படி கந்தமூர்த்தியால் (விநாயகர் தம்பி கந்தன் அண்ணனுக்கு பிரச்சாரம்) ரிஷிகளுக்குக் கூறப்பட்டது. பின்னர் கிருஷ்ணனால் (மாமன் மருமகனுக்குப் பிரச்சாரம்) பாண்டவருக்குக் கூறப்பட்டது - இது புராண விளக்கம்.

கொழுக்கட்டை ஏன்?

விநாயகன் சிறுவனாக இருந்தபோது, சில ரிஷிகளிடம் விஷமம் செய்தானாம். அவர்கள் இவனைப் பிடித்து, தூணில் கட்டிப் போட்டனராம். பின்னர் அவர் யாரென அறிந்து, விடுவித்து மோதகம் (கொழுக்கட்டை) கொடுத்து அனுப்பின ராம். அது முதல் விநாயகருக்கு கொழுக் கட்டைப் படையல் போட்டு பூசை செய்யப்படுகிறதாம்.

யானைக்குப் பச்சரிசி, தேங்காய் வெல்லம் கலந்து உருண்டை உருண்டை யாக உருட்டி கவளம் கவளமாய் கொடுத்து, விழுங்கச் செய்வது வழக்கமாயிற்றே. இதன்படி திருகல் தேங்காய், வறுகடலைத் தூள், வெல்லக் கூட்டு (பூரணம்) வைத்து பச்சரிசி மாவுக் கொழுக்கட்டைகள் யானைத் தலைப் பிள்ளையாருக்கும் விருப்ப உணவாக்கப்பட்டதா?

இவர் பெருச்சாளியை வாகனமாகக் கொண்ட மர்மம் என்ன? யானைப் பசி என்பது அடங்காத பெருந்திண்டிப்பசி. யானை வயிற்றுப் பிள்ளையாருக்கு பெரும் திண்டி ஓயாது தேவைப்பட்டதா? இதனைச் சமாளிக்க, கள்ளக் கடத்தலில் வல்லதான பெருச்சாளியின் உதவியைத் தேடிக் கொண்டாரோ? கஜாயர் என்பதும் இவருக்குப் பட்டம் - கச்சாயம் என்ற வெல்லக் கூட்டு அரிசி மாவு பணியாரத் துக்கும் கஜாயர் என்ற பெயருக்கும் தொடர்புண்டோ?

தோப்புக்கரணம்

பிள்ளையார் முன், பக்தர்கள் எனப்படுபவர்கள் நின்று காதுகளை, கைமாறிப் பிடித்துக் கொண்டுத் தோப்புக்கரணம் போடுவதும், நெற்றியில் (தலையில்) குட்டிக் கொள்வதும் முன்னர் வழக்கம். (இப்போது மிக சொற்பமானவர்) இப்படி ஏன் செய்கிறார்கள் என்பதற்குரிய ஒரு புராணப் புனைச் சுருட்டுக் கதை -கஜமுகாசுரன் (இவனும் விநாயகருக்குப் போட்டியாக, யானை முகத்துடன் பிறந்த வனா?) இந்திரன் முதலிய தேவர்களைப் பிடித்து, தன் முன் நிற்க வைத்து, தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடச் செய்தானாம். விநாயகர் அந்த கஜமுகா சுரனை அழித்தாராம்.

இந்த அசுரன் சாகும் முன் - தன் முன் இந்திரன் முதலியவர்கள் தோப்புக்கரணம் போட்டதும், தலையில் குட்டிக் கொண் டதும் நீடிக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம். (தேவர்களுக்கு அவமான நினைவுக்குறி!) இதன்படி விநாயகர், தன்னைக் கும்பிடுபவர்கள் இப்படித் தன் முன் தோப்புக்கரணம் போடவும் தலையில் குட்டிக் கொள்ளவும் கேட்டுக் கொண்டாராம்.

இதனால் விநாயக பக்தர்களும் இப்படிச் செய்து வருகிறார்களாம். இது தோல்வி அடிமைத் தனத்தை ஒப்புக் கொள்ளும் அவமான - தண்டனையல்லவா? இதைச் செய்வதால், இதில் என்ன பக்தியும், மனிதர்களுக்குத் தொடர்பும் இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

அசுரன், இந்திராதிகளை அவமானப் படுத்த, தண்டிக்க தோப்புக்கரணம் போடச் செய்தான். மனித பக்தர்கள் இப்படித் தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக் கொண்டால், தங்களைத் தாங் களே அவமானப்படுத்திக் கொள்வதும், தண்டித்துக் கொள்வதும் ஆகாதா?

இந்திரன் முதலிய தேவர்கள் கஜமுகா சுரன் முன் இப்படிச் செய்ததை விநாயகர் முன் பக்தர்கள் என்பவர்கள் செய்வதென் றால், விநாயகரையும் அசுரனையும் ஒன்றாக் கருதுகின்றனரா?

இந்தப் பிள்ளையார் தன்னைக் கும்பிடும் மாணவர்களுக்கு முத்தமிழ் அறிவு ஊட்டுவது வெறும் கட்டுக்கதை என்பது உலகறிந்த உண்மை. இப்படித் தமிழறிவுக் குப் பதிலாக, மாணவர்களுக்கு அவமான, தண்டனை முறைதானா பிள்ளையாரால் மாணவர்களுக்குக் கிடைத்த பலன்? பிள்ளையாரிடம் தமிழ் கற்றுக் கொடுக்கக் கேட்டதற்கு, தண்டனை போலும், துவக்கப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள், மாணவர்களை இப்படிக் காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடச் செய்வது!

சதுர்த்தி என்றால்...?

சதுர்த்தி என்ற சொல்லுக்கு, அகராதிப் பொருள் - நான்காம் திதி (நாள்); திரும ணத்தில் நான்காம் நாள் அனுஷ்டிக்கும் நோன்பு.

சதுர்த்தி அறை - திருமணத்தில் நான்காம் நாள் இரவு மணமகனும் மணமகளும் கூடும் அறை.

அருள்பெற குறுக்கு வழி

கணபதி தானம் - நூறு கழஞ்சு பொன்னில் கணபதியின் திருவுருவம் விதிப்படி செய்வித்து, வித்தியேசுவரர், (படிப்புச்சாமி) திக்குப்பாலகர்கள் இவர்களுக்கு நடுவில் சிவலிங்கம் தாபித்து, பூசித்து, எட்டு குண்டம் அமைத்து, அக்கினி காரியம் செய்து (ஓமத்தீ வளர்த்து, தூபதீபம் காட்டுதல்); எழுவர் பிராமண ஸ்திரீகளை அவர்கள் புருடருடன் பூசித்து, ஆடையணி கொடுத்து, பிராமணருக்கு (பொன்சிலை) தானம் செய்வதாகும்.

(இதனால் வரவுக் கணக்கு பார்ப்பனப் பெண்களுக்கும் அவர்கள் மூலம் புருடர்களுக்கும், செலவுக் கணக்கு இப்படிப் பொன்சிலை செய்து பூசைகள் நடத்தியவர்களுக்கு)

திடீர்ப் பிள்ளையார்

கணபதிபற்றிய விஷயம் ஆரிய மத வேதங்களிலோ, தமிழகத்தில் சங்க நூல்களிலோ இல்லை.

பவுத்தாயண தர்ம சூத்திரம் போன்ற ஆரிய மொழி நூல்களில் இந்த விநாயகரை மனிதருக்கு இடையூறுகளை உண்டாக் கும் பூதம் (வேதாளம், பிரம்ம ராட்சசன், இருளன், மாடன், கருப்பன்) என்றுள்ளது. இது விளைக்கும் கேடுகளிலிருந்து தப்ப வழி சாந்தியாகம் என்றும் கூறப்பட் டுள்ளது.

விநாயகருக்கு தூமகேது என்றும் பெயர். தூமகேது நட்சத்திரம் தோன்றி னால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடு விளையும் என்பர் இந்த பவு ராணிகர்களே. இதிலிருந்து இந்த விநாயகரைக் கும்பிட்டால் - பார்த்தால் கேடு விளையும் என்று அவர்களே ஒப்புக் கொள்வதாகவில்லையா?

இவ்விதம் முதலில் விக்கினம் செய்ப வராகக் கற்பனை செய்யப்பட்ட உருவமே, பின்னர் விக்கினத்தை நீக்கும் சாமி யாகவும் அறிவிற்கும் படிப்புக்கும் ஆதிகர்த் தாவாகவும் கருதப்பட்டார். இது உறுதிப் பட்ட - பண்பட்ட அறிவாளர் செயலாகுமா?

பக்த தமிழர்கள் கடிதம் கணக்கு முதலியவை எழுதத் துவங்கினாலும் தலைப்பில் பிள்ளையார் சுழி போடுகிறார் களே - எதற்கு? எழுதுவதற்கு இந்த விநாயகர் விக்கினம் (தடை) செய்வார் - அறிவுத் தடுமாற்றத்தை உண்டாக்குவார் என்ற கற்பனை பயத்தாலா? இப்படிப் பிள்ளையார் சுழி போடாமல், பிற மதத் தினர் - இந்துக்களில் சைவர்கள் என்பவர் களிலும் கூட கோடானுகோடி பேர் கடிதங்களும், கணக்குகளும் எழுதுகிறார்களே - தப்பும் தவறும் நேரிடுகிறதே?

தோன்றிய காலம்

கணபதியின் சிற்பம் முதல் இரண்டாம் நூற்றாண்டில்தான் அரைகுறையாக உருவகப்படுத்தப்பட்டது. நான்காம் நூற்றாண்டில்தான் முழு உருவமும், உறுப்புகளும் அளித்தனர் என்பது சிற்பக் கலைஞர் கணிப்பு, பின்னர் பலவகை உருவங்களில் - உட்கார்த்திருத்தல், நடனமாடுதல், பெண்களைத் தழுவிக் கொண்டிருத்தல் முதலிய உருவங்களில் தீட்டப்பட்டன.

முதலில் வடக்கில், அய்ந்து வெவ்வேறு உருவப் பிள்ளையாக இருந்து பின்னர் அய்ந்து தலைப் பிள்ளையாராக்கப்பட்டார். கணேசனி என்ற பெண் உருவத்தோடும் (விஷ்ணு பெண்ணாகி - ரிஷிகளிடம் பிள்ளைகள் பெற்ற கதைக்கு இது திறமைப் போட்டி போலும்) சில சமயம் பைரவ அம்சத்தோடும் (பைரவன் என்று பெயருள்ள அப்பனான சிவனுக்குப் போட்டி?) பெருச்சாளி வாகனத்தின் மேல் உட்கார்ந்திராமல் மயில் (தம்பி கந்தனுக்குப் போட்டி?) தவளை, ஆமை முதலிய வாகனங்களிலும் அமர்ந்தும் உருவமாக அமைத்தனர். பிள்ளைக்கறி சமைத்து பார்ப்பனத் துறவிக்கு விருந்து வைத்த சிறுத் தொண்ட நாயனாரின் மாமியார் ஊரான திருச்செங்காட்டாங்குடி விநாயகருக்கோ, யானை முகம் நீக்கப்பட்டு மனித முகம் தரப்பட்டுள்ளது.

விநாயகர் யானைமுகம் பெற்ற கதையை நம்பாமலோ, பிற மதத்தினர் நையாண்டி செய்ததைக் கண்டோ, இப்படி மனிதமுகப் பிள்ளையார் சிலை செய்து வைத்துக் கொண்டனர் போலும்.

பெரும்குடும்பி பிரம்மச்சாரி

கணபதி நிரந்தர பிரம்மச்சாரி - தாயைப் போல அழகான பெண்ணைத் தேடியபடி, பெண்கள் தண்ணீருக்கு வரும் கிணற்று மேட்டிலும், ஆற்று மேட்டிலும் உட்கார்ந்திருக்கிறார் என்பது ஊரார் பேச்சுக்கதை. ஆனால் அவர் மடிமேல், சக்தியை அமர்த்திக் கொண்டு, வல்லப (சக்தி) கணபதியாக இருக்கிறார் என்றே அவரது அத்தியந்த பக்தி மதத்தினராக காணபதர் கூறுகிறார்.

கணபதி அறிவையும் பயனையும் தருவதால், அவருக்கு புத்தி, சித்தி என்ற தேவிகளும் க்ஷேமம், லாபம் என்று புதல்வர்களும் இருக்கிறார்கள் என்கிறது மற்றொரு புராணம், தென்னாட்டில் சித்தி - புத்தி ஆலிங்கன விநாயகருக்கு ஆலயங்கள் இருக்கின்றனவாம். இந்த கணபதி - பிள்ளையார் எல்லா இடங்களி லும் - கிணறு - குளம் - ஆற்றங்கரைகளி லும், சந்துக்கள், தெருக்கள், கோவில் முன்னணியிலும் இருப்பதால், மற்ற சாமிகளைவிட அதிகமான பூசையும் பெறுவதாக பக்தர்கள் பெருமைப்பட்டுக் கொள்வர். அர்ச்சகர் - தட்சணைத் தொல்லை இல்லாமல் இலவச தரிசன சாமி என்பதால் தாராளமாக பலர் கும்பிட வாய்க்கிறது போலும்!

இத்துடன், ஆவணி மாத வளர்பிறை நான்காம் நாள் (சதுர்த்தி) விநாயகர் (இயற்கைக்கு முரணான முறையில்) பிறந்து வைத்த நாளாகக் கொண்டு பண்டிகை நடத்துகிறார்கள். இவரை அன்று கும்பிடுகிறவர்களுக்குக் கிடைக் கும் பலன் எப்படியிருந்தாலும் இவரது அலங்கோலக் களிமண் பொம்மைகளால் களிமண் பாண்டத் தொழிலாளர்களுக்கும் கடலை, பொரி, தேங்காய், பூ வியாபாரி களுக்கும் கொழுத்த வருவாய் கிடைக் கிறது - கண் கண்ட பலன்? - அவ்வளவு தான். பூசை போட்டவர்களுக்கோ, ஆற்றில், குளத்தில் கடலில் காசைக் கரைக்கின் றனர் - மண்ணுப் பிள்ளையார்களை அவற் றில் போட்டுக் கரைத்துவிடு கிறார்கள். குழந்தைகளுக்கு கொழுக் கட்டை கடலை, பொரி, பழம் கூடுதல் வருமானம்.

பிறந்த கதைகள்! சிரிப்பானி!

ஒரு காலத்தில் சிவமூர்த்தியும் பிராட்டி யும் நந்தவனத்துச் சித்திர மண்டபத்தில் எழுதியிருந்த ஆண் - பெண் யானை களைப் பார்க்க அவற்றினின்றும் கசமுகர் தோன்றினார்.

(அபிதான சிந்தாமணி)

(கண்ணால் பார்த்தாலும் கற்றுச் சித்திரம் மனிதப் பிள்ளை பெறச் செய்யும் மாயமந்திரமா?) பிரதம மகா சிருட்டியில் சிவமூர்த்தியின் திருக்கண்டத்து உதித் தவர் பிள்ளையார்.

(அபிதான சிந்தாமணி)

                ---------------- உடுமலை சித்தன் என்கிற பி.வி. ராமசாமி  அவர்களால் “விடுதலை” யில் எழுதப்பட்ட கட்டுரை

17.9.12

தமிழ்ப் படித்தவனெல்லாம் சாமியானனே ஒழிய பகுத்தறிவுவாதியாகவில்லை!

தமிழ்ப் படித்து பகுத்தறிவாளரானவர் யார்? - தந்தை பெரியார்



முதலாவது நான் பகுத்தறிவுவவாதி. எந்த விஷயத்தையும் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவன் நான். பஞ்சேந்திரியங்களுக்கும் தெரியப்படும் விஷயங்களை நம்புவேனே தவிர, பஞ்சேந்திரியங்கட்கு புலப்படாத எதையும் நம்புவதில்லை. மற்றும் தமிழர்களுக்காக,நம் மக்களுக்காக தொண்டாற்றி வருகிறேன். தொண்டாற்றுவதில் கடவுள் பற்று, மதப் பற்று இன்றி தொண்டாற்றி வருகிறேன். அதனால்தான், உண்மையாகத் தொண்டாற்ற முடிகிறது என்று கொள்கைகளில் கருத்து வேற்றுமை உள்ளவர்கள் அநேகர் இருப்பார்கள் என்றாலும், என்னைப் பொறுத்தவரை எனது தொண்டு வீண்போக வில்லை என்று கருதித்தான் தொண்டாற்றி வருகிறேன்.

ஒரு சந்தர்ப்பத்தில் சேலம் கல்லூரியில் அப்போது இருந்த கல்லூரி முதல்வர் எனக்கு நண்பர். அவர் வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், தமிழ்ப் பற்று என்கிற காரணத்தால் என் மீது மிகவும் அன்பு கொண்டவர். அவர் பேசும்போது, அய்யா அவர்கள் நாஸ்திகர் என்றாலும், மக்களுக்காகத் தொண்டாற்றுபவர் எனக் குறிப்பிட்டார். எனக்காகப் பேசியதாக இன்னொருவர் நான் நாஸ்திகன் அல்ல என்று வாதாடினார். அன்றும் இப்படித்தான் பேசுவதற்கு எனக்கு தலைப்புக் கொடுக்கவில்லை. என்ன பேசுவது என்று தெரியாமலிருந்தபோது இந்த நாஸ்திகம் என்பதையே வைத்துப் பேசினேன்.

அதுபோல, இங்கு தலைவரவர்கள்  தனது வரவேற்புரையில், தமிழைப் பற்றி குறிப்பிட்டர். இப்போது இது பரபரப்பாக இருக்கிறது.  பலர் என்னைக் கண்டித்து கடிதங்கள் எழுதி இருக்கின்றனர். சிலர், நீ தமிழனா? என்று கூடக் கேட்டு எழுதி இருக்கிறார்கள். சிலர் எனது கொள்கையை ஆதரித்தும் கடிதங்கள் எழுதி இருக்கின்றனர். நாம் எல்லோரும் தமிழ்நாட்டில் இருக்கிறோம், நாமெல்லாம் தமிழர்கள்தான்; நான் மொழிப்படி தமிழனல்ல; கன்னடியன். எனக்கு தமிழ் தெரிந்த அளவுக்கு கன்னடம் தெரியாது. அதற்காக நான் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை.

 தமிழன் சிறப்பைச் சொல்லும்போது, அது கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ் என்கிறான். தமிழ் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வழங்கி வருகிறது என்றாலும், இன்றும் அதனைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். இதிலிருந்து அதன் தன்மையைத் தெரிந்து கொள்ளலாம்.

நான் அயல்நாடுகளையெல்லாம் சுற்றியிருக்கிறேன். அங்கெல்லாம் இங்கிலீஷைப் பாதுகாக்க வேண்டுமென்று இயக்கமோ, அதற்காக ஒரு போராட்டமோ கிடையாது. ஆனால், அந்த மொழி யாருடைய  பாதுகாப்பும் இன்றி வளர்ந்து கொண்டும், பரவிக் கொண்டும்தான் வருகின்றது.
மொழியின் உண்மைத் தத்துவத்தை உணர்ந்து மக்களிடையே எவரும் பிரச்சாரம் செய்வது கிடையாது. மொழி என்பது ஒருவர் கருத்தை மற்றவர் உணரப் பயன்படுத்தும் ஒரு சாதனமே தவிர, மற்றபடி அதற்கென்று தனிச் சிறப்புக் கிடையாது! தமிழிலிருந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு இவைகள் தோன்றின என்று சொல்லுவார்கள். ஆனால், மலையாளியோ, தெலுங்கனோ, கன்னடியனோ, துளுவனோ எவனும் இதனை ஒத்துக் கொள்வதில்லை. அந்தந்த எல்லைக்குத் தக்கபடி மாற்றமடைந்துள்ளது.
வடமொழியின் கலப்பு அதிகமாகி தமிழுக்கும், அதற்கும் சம்பந்தமில்லாமல் போய்விட்டது. வடமொழி கலப்பது ஒரு காலத்தில் நாகரிகமாகக் கருதப்பட்ட காரணத்தால் வடமொழிக் கலப்பு அதிகமாகி விட்டது. இப்படி நாகரிகம் - சந்தர்ப்பம் நடப்பு வழக்கம், காலம் இவைகளைப் பொறுத்து மொழி மாறுபட்டிருக்கிறது.

நம் நாட்டிலேகூட நாகர்கோயில்காரன் தமிழ் பேசுவதற்கும், திருநெல்வேலிக்காரன் பேசுவதற்கும் மாறுபாடு உண்டு. அது போலவே, மதுரைக்காரன் பேசுவதற்கும், திருச்சிக்காரன் பேசுவதற்கும், தஞ்சாவூர்க் காரன் பேசுவதற்கும், சேலம்காரன் பேசுவதற்கும், கோயமுத்தூர்காரன் பேசுவதற்கும், சென்னையிலுள்ள தமிழன் பேசுவதற்கும் நிறைய மாறுபாடுகள், வித்தியாசங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் விட நம்மோடு பல காலமாகப் பழகி நம்மோடு இருக்கும் பார்ப்பனர் பேசுவது தனி அலாதியாகத்தான் இருக்கிறது. தமிழ் படித்த புலவர்களே மேடையில் பேசுவது போல வீட்டில் பேசுவது கிடையாது. இப்படி இடத்திற்குத் தக்க மாதிரி, சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாதிரி பேசுகிறார்கள்.

தமிழ் பேசுவதிலேயே இலக்கணப்படி பேசுவதற்கும் சாதாரணமாகப் பேசுவதற்கும் நிறைய மாறுபாடு இருக்கலாம் என்றாலும் நான் மொழியைப் பற்றி சொல்லுவதெல்லாம் மொழியினாலே நமக்கேற்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட நன்மையென்ன? அதனால் நம் மக்கள் எந்த அளவிற்கு முன்னுக்கு வந்தார்கள்? என்பதற்குத்தான். இதைக் கேட்டால் தமிழன்பர்கள் என்ன சொல்வார்கள்? எனக்கு கடிதம் எழுதிய ஒருவர் தமிழில் பெரிய புராணம், சிலப்பதிகாரம், குறள், கம்பராமாயணம் இவைகள் எல்லாம் இருப்பது உனக்குத் தெரியுமா? என்று கேட்டிருக்கிறார். இதிலிருந்து அவர் வேறு ஒன்றுமில்லை என்பதை ஒப்புக் கொள்கிறார். இன்னொரு நண்பர் தொல்காப்பியம் என்ற நூல் இருப்பது தெரியுமா? என்று எழுதியிருக்கிறார். கம்பராமாயணம், சிலப் பதிகாரம் இதைச் சொன்னதிலிருந்தே தமிழின் தன்மையை நாம் உணர்ந்து கொள்ளலாமே!

தொல்காப்பியத்திலே தான் என்ன இருக்கிறது? அதிலும் நாலு ஜாதி; அந்த நான்கு ஜாதியில் நம்மைத் தான் கீழ் ஜாதியாகக் குறிப்பிட்டிருக்கிறது. மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்கள் கீழோர்க்கு................
என்ற பாடலைப் பார்த்தாலே போதுமே. தமிழ் ஏதோ புலவன் பிழைப்புக்குப் பயன்படுகிறதே தவிர, அதனால் நம் மக்களுக்குப் பயன் இல்லை. அதன்படி நாம் கீழ்மக்கள்தானே.

குறளை ஒரு அளவுக்கு நாம் ஏற்றுக் கொள்ளலாம். அதை பரப்பியதில் எனக்கு பெருமை பங்கு உண்டு.

குறளைப் பற்றி அவ்வளவாக மக்களுக்குத் தெரியாது இருந்தபோது குறள் மாநாடு கூட்டி, தமிழ்ப் புலவர்கள் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டி குறளைப் பற்றி மக்களுக்கு விளக்கம் செய்து குறளைப் பரப்பினேன். இந்த மாநாட்டிற்கு மறைமலை அடிகளைத் தவிர மற்ற தமிழ்ப் புலவர்கள் எல்லோரும் வந்திருந்தனர்.

நான் பேசும்போது, குறள் குற்றமற்ற நூல் என்று சொல்ல முடியாது என்றாலும், மற்ற நூல்களில் இருப்பதைவிட இதில் குறைகள் குறைவு என்று சொல்லலாம். அந்த அளவுக்குத்தான் குறளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசினேன்.

அந்த மாநாட்டிற்கு திரு.வி.க. தலைமை வகித்தார். நான் இப்படிப் பேசியதை சிலர் போய் மறைமலை அடிகளிடம் சொல்லி இருக்கிறார்கள். என்னவென்றால், அவன் குறளைத் தான் பாக்கி வைத்திருக்கிறான் என்று நினைத்தேன். அதிலேயும் கை வைக்க ஆரம்பித்து விட்டானே. இதற்கு இவர் (திரு.வி.க.) போய் தலைமை வகிக்கிறாரே என்று வேதனையோடு சொன்னார்கள்.

திரு.வி.க. அவர்களை சந்திக்க நேர்ந்தபோது, மறைமலை அடிகள், நீ என்ன குறள் மாநாட்டிற்கு தலைமை வகித்தாயாமே, அதில் பேசியதையெல்லாம் எப்படிக் கேட்டுக் கொண்டிருந்தாய்? என்று கேட்டார்.

அதற்கு திரு.வி.க., அவர் பேசியதில் தவறு ஒன்றும் இல்லை. இத்தோடு விட்டதற்கு நாம் சந்தோஷப்பட வேண்டும். அவரில்லாவிட்டால் குறள் இந்த அளவிற்கு வந்திருக்காது என்று ஏதோ சமாதானம் சொல்லி இருக்கிறார்.
பிறகு ஒரு சமயம் மறைமலை அடிகள் தனது லைப்ரரியை விற்க வேண்டுமென்று கருதி என்னை அழைத்து தனது லைப்ரரியைக் காட்டினார். குறைந்தது 20 - 30 பெரிய பெரிய கண்ணாடி பீரோக்கள் நிறைய புத்தகங்கள் இருந்தன. பீரோவின் இரு பக்கமும் கண்ணாடி கதவுகள் போட்டு புத்கங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நான் எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்துக் கொண்டு வந்து கடைசியில் அடிகளாரைப் பார்த்து, என்ன சாமி எல்லா புத்தகங்களும் இங்கிலீஷ் புத்தகங்களாகவே இருக்கின்றனவே. தமிழ்ப் புத்தகங்கள் ஒன்றுகூட காணவில்லையே என்று கேட்டேன். அதற்கு அவர்,
தமிழிலே அலமாரியிலே வைத்து பாதுகாக்கும்படியாக மக்களுக்குப் பயன்படும் படியாக என்ன இருக்கிறது? என்று சொன்னார். அதற்கு நான் சொன்னேன், சாமி எழுதிய புத்தகங்கள் இருக்குமே என்று சொன்னேன்.  அது நிறைய இருக்கிறது. இன்னும் அச்சுப் போட வேண்டியவைகளும் இருக்கின்றன என்றாலும், இதோடு அவைகள் வைக்கக் கூடியவை அல்ல என்றார். அவர்  அந்த அளவுக்கு ஒத்துக் கொண்டது எனக்கும் மகிழ்ச்சியளித்தது.

தமிழ் என்று சமயத்திலே போய் புகுந்ததோ, சமயக்காரன் எப்போது தமிழ் கதவைத் திறந்து இறந்தவனை எழுப்பியது என்று சமயத்தில் கொண்டு போய் புகுத்தினானோ, அன்றே தமிழும் முன்னேற முடியால் கெட்டுப் போய் விட்டது.

பட்டினத்தார் - தாயுமானவர் - இராமலிங்க அடிகள் எல்லாம் தமிழ் படித்து சாமியானவர்கள் தமிழ்ப் படித்தவனெல்லாம் சாமியானனே ஒழிய, எவனும் பகுத்தறிவு வாதியாகவில்லை. நமக்குத் தெரிந்து மறைமலை அடிகள் தமிழ்ப் படித்து சாமி ஆனவர்தானே. இப்போது நடந்தது சாமிசங்கரதாஸ் நூற்றாண்டு விழா. இந்த சங்கரதாஸ் என் வீட்டில் வந்து நாடகத்துக்கு பாட்டு எழுதிக் கொண்டிருந்தவர். சங்கரம் பிள்ளை என்று பெயர். பிறகு சங்கரம் பிள்ளை சங்கரதாஸ் ஆகி இன்று சாமி ஆகிவிட்டார். அதற்கு முன் தமிழ்ப் படித்தவர்கள் எல்லாம் கவியாகப் படித்தவர்கள். இப்போது போல் வசனமாகப் படித்தவர்கள் அல்ல. ஆதலால் அவர்களுக்கு கவி எழுத வந்தது. எல்லாம் குப்பை கூளங்கள்தான். கா. சுப்பிரமணிய பிள்ளை காலையில் எழுந்ததும் பட்டைப் பட்டையாக சாம்பலை அடித்துக் கொண்டு அரைமணி நேரம் தேவாரம், திருவாசகத்தை முணுமுணுத்துக் கொண்டிருப்பார். இந்த திரு.வி.க.வும் அப்படி இருந்தவர்தான். என்னோடு பலமுறை வாதிட்டு கொஞ்ச நாள் கோபமாகக் கூட இருந்து பிறகு பழக ஆரம்பித்தார். அதன்பின்தான் அவர் சாம்பல் அடிப்பதையும், தேவாரம் ஓதுவதையும் நிறுத்தினார். பிறகுதான் அவர் உண்மையாகத் தொண்டாற்ற முடிந்தது.

--------------------------29.9.1967 அன்று சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய விளக்கவுரை - "விடுதலை" 3.10.1967