Search This Blog

20.6.12

பகுத்தறிவுவாதிக்கு எப்பற்றும் கூடாது - பெரியார்

தந்தை பெரியார் அவர்கள் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துப் பேசுகையில் குறிப்பிட்ட தாவது:-

கழகத் தொண்டு காரணமாக இந்த ஜெயங்கொண்டம் நகருக்கு வரநேர்ந்த சமயத்தில் இப்படி வரவேற்பு அளித்த பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ஜெயங் கொண்டம் நகரம் நமது கழகத்துக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாகவே ஆக்கமும், ஊக்கமும் அளித்து வரும் ஊராகும். உங்கள் வரவேற்பிதழில் தொண்டிலே சிறந்தது அறிவூட்டுதல் என்று குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.

நம்நாட்டில் எல்லா வாய்ப்பும், எல்லா வளமும் இருக்கின் றது. ஆனால், அறிவு ஒன்றுதான் இல்லை. இதனை உணர்ந்து தான் கடந்த 40 ஆண்டுகளாக பகுத்தறிவுத் தொண்டு செய்து வருகின்றேன். அப்படித் தொண்டாற்றுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் நீங்கள் வரவேற்பு அளித்து பாராட்டியுள்ளீர்கள் என்று கருதுகின்றேன்.

அறிவுத் தொண்டு செய்வது என்பது மற்ற காரியம் போல அல்ல. பகுத்தறிவுத் தொண்டு செய்கின்றவனுக்கு எந்தவிதமான பற்றும் இருத்தல் கூடாது. அறிவுப்பற்று ஒன்றுதான் இருக்க வேண்டும். அறிவுப் பற்று என்றால் அறிவு கொண்டு ஆராய்வது. ஆராய்ந்து முடிவு கட்டுவது ஆகும். ஏன் எந்தவிதமான பற்றும் கூடாது என்கின்றேன் என்றால் நீதிபதியானவருக்கு நீதிப் பற்றைத் தவிர மற்றைய பற்று இருந்தால் அவரை சறுக்கி விட்டுவிடும். அதுபோலத்தான் பகுத்தறிவுவாதிக்கு கடவுள் பற்றோ, ஜாதிப் பற்றோ இருக்கக் கூடாது. இவை காரணமாக பகுத்தறிவு ஆராய்ச்சியில் இருந்து வழுவிவிட ஏதுவாகும். இது போலத்தான் அறிவுவாதிக்கு தேசப்பற்றோ, மொழிப்பற்றோ கூட இருத்தல் கூடாது. எம் மொழி, எம் நாடு என்று ஆரம்பித்து நடுநிலைமையில் இருந்து பிறழ்ந்து விடுகின்றான்.

நமது அரசாங்கம் மேற்கொண்டு உள்ள சமதர்மத்தைப் பற்றிக் கூட நான் கூறுவது உண்டு. சமுதாயத் துறையில் சமத்துவம் வேண்டும் என்று கூறப்படுவதிலிருந்தே நம்மிடையே சமத்துவம் இல்லை. காட்டுமிராண்டிகள் பகுத்தறிவு இல்லாதவர்கள்நாம் என்பது புலனாகின்றது அல்லவா!

கடவுளை, மதத்தை, சாஸ்திரத்தை, முன்ஜென்மம், மறு ஜென்மத்தை நம்பிக் கொண்டு சமதர்மம் கொண்டு வருகின்றது. இல்லாவிட்டால் பித்தலாட்டம் என்பதுதான் பொருள்

எப்படி ஜாதி என்பது செயற்கையோ அதுபோல பொருளாதாரத்தில் பெரியவனாக இருக்கின்றதும் செயற்கையேயாகும். எவனும் பிறக்கும்போதே பூணூலுடன் பிறக்கவில்லை. அதுபோல எவனும் பிறக்கும்போதே பணத்தைக் கொண்டு வரவில்லை. எல்லாம் செயற்கையில் வந்ததுதானே? எனவே, மக்களுக்கு பகுத்தறிவுதான் லட்சியம். மாறானவைகளை எல்லாம் ஒதுக்கித் தள்ள வேண்டும். பொருளாதார சுதந்திரத்தை அறிவுப் போரால்தான் பெற முடியும். சமுதாய சுதந்திரமோ பொருளாதாரச் சுதந்திரமோ வேண்டும் என்று போராட வேண்டுமானால், பகுத்தறிவு கொண்டு போராடியாக வேண்டும். சாஸ்திர, புராணங்களை பார்த்தால் அறிவை ஆதாரமாகக் கொண்டு தர்க்கம் பண்ணுபவன் நாத்திகன். அவன் முகத்தில் விழிக்கக் கூடாது என்று எழுதி வைத்து இருக்கின்றார்கள்.

இதற்கு பயந்து கொண்டு எவரும் இந்தத் துறையில் பாடுபட வரவே இல்லை. 2,500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தன் என்ற ஒரு ஆள்தான் தோன்றினான். அவனுடைய இயற்பெயர் சித்தார்த்தன் என்பது அவன் புத்தியை ஆதாரமாகக் கொண்டு வாதம் செய்தமை காரணமாக புத்தன் என்று அழைக்கப் பட்டான். அவன் இந்த நாட்டையே அறிவு கொண்டு சிந்திக்கச் செய்து விட்டான். எப்படியோ தந்திரமாக அந்த அறிவுக் கொள்கையினை தந்திரக்காரர்கள் அழித்துப் போட்டார்கள். அறிவுப் பிரச்சாரம் என்பது எல்லாவற்றிற்கும் தாய். அதற்கு சுதந்திரம் கொடுத்து சிந்திப்பது மூலம்தான் எதையும் அடைய முடியும்.


-------------------6.7.1965 அன்று ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 6.8.1965

19.6.12

பாட்டிலில் விற்கப்படும் பசு மூத்திரத்தை குடிக்கும் முட்டாள்தனம்!


பாட்டி சொன்னால் கேட்காதவர்கள் பாட்டிலில் அச்சடித்துச் சொன்னால் கேட்கிறார்களாம்.

இது என்ன பூடகம்? வேறு ஒன்றும் இல்லை. மாட்டு மூத்திரத்தைக் கோமியம் என்று சொல்லி பாட்டிலில் அடைத்து ரூபாய் 20க்கு (200 மில்லி) விற்றுக் கொண்டு இருக்கிறார்களாம்.

திதியின் போது பார்ப்பனப் புரோகிதர்கள் பஞ்ச கவ்யம் என்ற ஒன்றைக் கொடுப்பார்கள். மாட்டு மூத்திரம், மாட்டுச் சாணம், பால், தயிர், வெண்ணெய் என்கிற பசு மாட்டின் மூலம் கிடைக்கும் அய்ந்து பொருள்களையும் கலக்கிக் கொடுப்பதுதான் பஞ்ச கவ்யம்.


பார்ப்பனப் புரோகிதன் கொடுக்கும் இந்த கோமியத்தை நம் வீட்டுப் பெரியவர்கள் தட்சணை கொடுத்து வாங்கி முடக்கு முடக்கு என்று பக்திப் பரவசத்தால் குடிப்பார்கள். அது கீழே சிந்தி விடக் கூடாதாம். அப்படி சிந்துகின்ற அந்த மாட்டு மூத்திரம் கலந்த அந்தப் பஞ்ச கவ்யத்தைக் கைகளில் பிடித்து பய பக்தியுடன் தலையிலும் தடவிக் கொள்வார்கள். பக்தியின் பெயரால் இந்த ஆபாசம் - அநாக ரிகக் கூத்து அரங்கேறுவதுண்டு.

இதுகுறித்து தந்தை பெரியார் அவர்கள் நம் மக்களுக்குப் புரியும்படி ஒன்றைச் சொல்லுவார்கள்.

அந்த மாட்டு மூத்திரம், சாணியைக் கரைத்துக் குடிக்கும்போது முகம் சுளிக்காமல் குடிக்கிறானா என்று பார்ப்பான் பார்ப்பானாம்; முகம் சுளிக்காமல் குடித்தால், பரவாயில்லை இந்த முட்டாள் பசங்களை இன்னும் ஆயிரம் வருஷங்களுக்கு மொட்டை அடிக்கலாம் - சுரண் டலாம்! என்று பார்ப்பான் முடிவுக்கு வருவான் என்று கூறிய பகுத்தறிவுப் பகலவன் பஞ்சகவ்யத்தை நம் மக்கள் குடிப்பது - நமது முட்டாள்தனத்தை அளக்கும் தர்மாமீட்டர் என்று குறிப்பிட்டாரே பார்க்கலாம்.
முட்டாள்தனம் பாட்டிலில் அடைத்து விற்கப்படுவதும், இந்த அடி முட்டாள்கள் காசு கொடுத்து அதை வாங்கிக் குடிப்பதும் எவ்வளவுக் கேவலம்!

கடைசியில் ஒரு கேள்வி (Tailpiece) பாட்டிலில் அடைத்து விற்கப்படும் அந்தப் பசு மூத்திரத்தை கிண்டி கிங் இன்ஸ்டியூட்டுக்கு அனுப்பி பரிசோதிக்கத் தயாரா? விஞ்ஞானத் துக்கு உட்படுத்தப்படாத இந்த அசிங்கத்தை ஆபத்தை அரசு எப்படி அனுமதிக்கிறது?

------------------- மயிலாடன் அவர்கள் 19-6-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

18.6.12

தமிழ் இனையப்பயிலரங்கம் ஒரு பார்வை


17-6-2012 அன்று மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் ஊரக வளர்ச்சி உராய்வு மையம் இணைந்து நடத்தும் தமிழ் இனையப்பயிலரங்கத்திற்கு செல்வதன முடிவெடுத்து திண்டுக்கல் தோழர் வழக்குரைஞர் மானமிகு சாக்ரட்டீஸ் அவர்களுடன் சரியாக காலை 9.30 மணி அளவில் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரிக்குள் சென்றபோது ப.க.தலைவர் மானமிகு நேரு அய்யா,சுப.முருகானந்தம் அய்யா,வழக்குரைஞர் கணேசன் ஆகியோருடன் குடியரசுத் தலைவரின் "செம்மொழி இளம் அறிஞர் விருது" பெற்ற புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி பேராசிரியர் முனைவர்.மு.இளங்கோவன் அய்யா அவர்களும் (நின்று கொண்டிருந்தனர்) எங்களை வரவேற்று,அறிமுகப்படலம் நடந்து கொண்டிருந்த போது மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தமிழ்துறைத் தலைவர் பேராசிரியர் அய்யா நம்.சீனிவாசன் அவர்களும் வந்து கலந்து கொண்டார்.உடனே நிகழ்ச்சி நடக்கும் கணனி அறைக்கு (computer lab) அனைவரையும் அழைத்துச் சென்று அமர வைத்து தமிழ் இனையப்பயிலரங்க தொடக்க விழாவிற்கு ஆயத்தமானார்கள். சென்னையிலிருந்து ப.க. மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களும் வந்து சேர்ந்தார். கணிசமான அளவு பங்கேற்பாளர்கள்.பயிற்சியாளர்கள் என அரங்கம் நிரம்ப ஆரம்பித்தது.


தொடக்கவிழா


பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் வா.நேரு அவர்கள் தலைமையில்,தி.க.தலமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராசா, மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி சுயநிதிப்பிரிவு இயக்குனர் இராச.கோவிந்தசாமி, தி.க.மதுரைமண்டலத் தலைவர் வே.செல்வம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.ஜெகஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேரம் 10.30 யை நெருங்கி கொண்டிருந்ததால் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் சுப.முருகானந்தம் அனைவரையும் வரவேற்று இணையம் தொடர்பான கருத்துக்களை நருக்குத் தெரித்தார் போல் எடுத்து வைத்து வரவெற்புரையை முடித்தார்.அடுத்து அறிமுகவுரையில் ப.க. மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இதர்கு முன் நடைபெற்ற இணையப்பயிலரங்கங்கள் பற்றியும்,அங்கு நடைபெற்ற சுவராசியமான நிகழ்வுகளையும் எடுத்துரைத்தார். அவரது உரையில் ”தமிழ் ஓவியா” வலைப்பூ பற்றி கூறி பாராட்டு தெரிவித்தார். அடுத்து தலைமை உரை நிகழ்த்திய பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் வா.நேரு அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது என்றும் அனைவரும் இப்பயிலரங்கத்தை நன்கு பயன்படுத்தி பெரியார் கருத்துக்களை உலகமயமாக்கும் பணியில் தங்களையும் இனைத்துக் கொள்ள வேண்டும் என்றும். பெரியாரையோ நமது இயக்கத்தையோ தவறாக விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அந்த வகையில் ”தமிழ் ஓவியா” வலைப்பூ சிறப்பாக் செயல்பட்டு வருவதையும் எடுத்துக்கூறி தமிழ் ஓவியா அவர்களுக்கு, குடியரசுத் தலைவரின் "செம்மொழி இளம் அறிஞர் விருது" பெற்ற புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி பேராசிரியர் முனைவர்.மு.இளங்கோவன் அய்யா அவர்கள் பொன்னாடை அணிவிக்க கேட்டுக் கொண்டார்.(இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை -- தமிழ் ஓவியா)


தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. விழா அரங்கம் இனி பேராசிரியர் முனைவர்.மு.இளங்கோவன் அய்யா அவர்களிடம் ஒப்படைக்கப் படுகிறது என்று கூறி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.


முதல் அமர்வு:-தமிழ் இணையம் வளர்ச்சி வரலாறு



தமிழ் இணையம் தோற்றம், வளர்ச்சி, வரலாறு, மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி?அதன் பயன்பாடுகள், வலைப்பூ உருவாக்கம் அதன் பயன்பாடுகள்,அதை எப்படிப்பயன்படுத்துவது? தமிழ் விக்கிபீடியா பற்றியும் அதனை எப்படிப்பயன்படுத்துவது? தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? யுனிக்கோடு ,எழுத்துருச் சிக்கலை தீர்ப்பது எப்படி? ஏனைய இணைய இதழ்கள், நூலகங்கள் போன்ற தலைப்புகளில் பவர் பாயிண்ட் மூலம் பாடம் நடத்தினார் பேராசிரியர் முனைவர்.மு.இளங்கோவன்.இடையிடையே ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களும் விளக்கம் அளித்தார்.


இரண்டாம் அமர்வு:-வலைப்பு உருவாக்கமும் பயன்பாடுகளும்



பங்கேற்பார்கள் அனைவரையும் (ஒருவருக்கு ஒரு கணனி என்ற அடிப்படையில்) கணனி முன் அமர வைத்து முதலில் மின்னஞ்சல் தொடங்குவது எப்படி?தொடங்கியபின் வலைப்பூ எப்படி தொடங்குவது? பின்பு அதில் தங்களது கருத்துக்கள தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? படம் இணைப்பது எப்படி? வீடியோ இணைப்பது எப்படி? திரட்டிகளில் இணைப்பது எப்படி? என்பதை பற்றி விரிவாக செயல் முறை பயிற்சி அளிக்கப்பட்டது. பல பயிற்சியாளர்கள் நன்கு கற்றுக் கொண்டனர்.


மூன்றாம் அமர்வு:- தமிழ் விக்கிபீடியா மற்றும் இணையதழ்கள்


மாணவர்கள் அதிகமாக வந்திருப்பதால் தமிழ் விக்கிபீடியா பற்றியும் அதில் எப்படி எழுதுவது என்பது பற்றியும் மீண்டும் விளக்கமாக எடுத்துரைத்தார்.அப்போது கிரந்த எழுத்துக்களை பார்ப்பனர்கள் தமிழ் எழுத்துக்களுடன் சேர்க்க இருந்த நிலையை சுட்டிக்காட்டி அதை ஆசிரியர் அய்யாவின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஒரு அறிக்கையின் மூலம் அதை தடுத்து நிறுத்தியவர் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா வீரமணி என்றும் பெருமை பொங்க குறிப்பிட்டார் பேராசிரியர் முனைவர்.மு.இளங்கோவன். ”விடுதலை”, உண்மை பெரியார் பிஞ்சு ,மாடர்ன் ரேசனலிஸ்ட் போன்ற நமது இதழ்கள்,பெரியார் இணையதளம் மற்றும்பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்கள் பற்றிய சிறப்புகளை விளக்கி அனைவரும் சிறந்த வலைப்பதிவாளர்களாக வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார் பிரின்சு என்னாரெசு பெரியார்.


நிறைவு விழா:-


பங்கேற்பாளர்கள் சார்பாக சுசீலா வேல்முருகன், கவிஞர் கோ ஆகியோர் தங்களது கருத்துக்களை எடுத்துக்கூறினர். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.ஜெகஜோதி மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் நம்.சீனிவாசன்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக, ஓய்வு பெற்ற நீதிபதி பொ.நடராசன் அய்யா அவர்கள் சிறப்புரையாற்றி பங்குபெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்கள். மதுரை புற நகர் தி.க. மாவட்டச் செயலாளர் அ.வேல்முருகன் அவர்கள் நன்றி கூறினார்.

இணையப்பயிலரங்கில் 1996 இல் எழுத்தாளர் பயிச்சிப்பட்டறையில் கலந்து கொண்ட சோழவந்தான் வழக்கறிஞர் தோழர் கணேசன், கணனி வல்லுநர் திரு முத்துக்கண்ணன், மதுரை ஹோமியோ மருத்துவர் அன்புமதி போன்ற முகநூலில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த பல தோழர்களை முகம் பார்த்து பேச வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அனைவருக்கும் நன்றி கூறி வீடு திரும்பினோம்.