Search This Blog

25.9.11

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! -11 பெரியார் - மணியம்மை திருமணம்

பெரியார் - மணியம்மை திருமணம்




எதை எதையோ கிறுக்கிப் பார்த்து அலுத்துப் போன ஸ்ரீமான் கே.சி.லட் சுமிநாராயணன் பெரியார் - மணியம்மை திருமணத்தை சிக்கெனப் பிடித்துக் கொண்டார்.

இதற்கான விளக்கங்கள் எல்லாம் எப்பொழுதோ கொடுக்கப்பட்டு முடிந்து போன சங்கதி; யார் குற்றம் சொன்னார்களோ அவர்களே பின்னாட்களில் உண்மையை உணர்ந்து விட்ட நிலைதான்.

தொடக்கத்தில் அதனை அதிர்ச்சியாகப் பார்த்தவர்கள், விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் கூட ஒரு செவிலியராக அன்னை மணியம்மையார் இருந்து தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் வாழ வைத்த தகை மையைக் கண்டு வாயார, நெஞ்சாரப் பாராட்டத்தான் செய்தார்களே தவிர யாரும் குற்றப் பத்திரிகை படிக்க வில்லை.

உலகியலில் கூறப்படும் சாதாரண காரணங்களை தந்தை பெரியார் மீது யாரும் திணிக்க முடியாது.

தந்தை பெரியார் அவர்களின் துணைவியார் நாகம்மையார் மறைந்த போது தந்தை பெரியார் அவர்களுக்கு வயது 54. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அந்த 54 வயதில் தந்தை பெரியார் நினைத்திருந்தால் அந்தக் குற்றச் சாற்றுக்கே கூட இடம் இல்லாமல் போயிருக்குமே. அவர்களின் வீட்டார் கூட எவ்வளவோ வலியுறுத்தியும் கூட திருமண எண்ணத்தை அய்யா கொண்டார் இல்லை.

நாகம்மையார் மறைவு கூட ஒருவகையில் நல்லது என்றுதான் கருதினார்.

எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப் போகும் அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களாக இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அம்மாளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும், துயரமாகவும் காணக் கூடியதாய் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்காது. அத்துடன் அதைக் கண்டு சகியாத முறையில் நானும் சிறிது கலங்கக் கூடும். ஆதலால் நாகம்மாள் மறைவால் எனக்கு அதிகம் சுதந்திரம் ஏற்பட்டதுடன் குடும்பத் தொல்லை ஒழிந்தது என்கிற உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது. (குடிஅரசு 14-5-1933) என்று எழுதினார் என்றால் இதனுள் அடங்கியிருக்கும் தத்துவத்தைத் தன்னலம் துறந்த பொது மனத்தினரால்தான் உணர முடியும்.

ஒரு கட்டத்தில் துணைவியர் மறைந்தது நல்லது என்ற நிலை; இன்னொரு கட்டத்தில் தனக்கு ஒரு துணைவி தேவை என்ற நிலை . . . அந்தத் துணையும் தனிப்பட்ட- தன் சுக வாழ்வுக்காக அல்ல. தான் வரித்துக் கொண்டு இருக்கிற புரட்சிகரப் பொது வாழ்வுக்கு, தனது தள்ளாமை, உடல் நோய் இடையூறாக இருக்கும் நிலையில், அதிலிருந்து விடுபடவும், தொண்டறம் புரிய சட்ட ரீதியாக அவர் மேற் கொண்டமுடிவும், துணிவும், எதிர்ப்புகளை சட்டை செய்யாத ஆளுமையும் அய்யாவை ஒரு தனித் தன்மைமே லோங்கும் வைரம் பாய்ந்த மாமனிதராகத்தான் ஜொலிக்கச் செய்கிறது.

நான் திருமணம் இல்லாமல் 16 ஆண்டுகள் இருந்துவிட்டு 17 ஆம் ஆண்டில் துணை தேடக் காரணம் என்ன வென்று ஏன் திருமணம்? என்று கேட்டவர்கள் அறிவைப் பயன்படுத்த வேண்டாமா என்ற அய்யாவின் கேள் விக்குள் எல்லாமே அடங்கி விட்டதே!

ரமணரிஷி போல தன் சொத் துக்களை ரத்த சொந்தத்துக்கா எழுதி வைத்தார்? ஒரு கழகத் தொண்டரின் மகளாகவும் கழகக் கொள்கையில் ஆழமான பற்றுக் கொண்டவராகவும் இருந்த ஒரு தொண்டரைத்தான் பெண்மணியைத்தான் தனது வாரிசாக வரித்துக் கொண்டார்.

இன்னும் சொல்லப்போனால் தந்தை பெரியார் அவர்களின் இந்த விசால மனப்போக்கில், உயர்ந்த சீலத்தில், பொது ஒழுக்கக் கண்ணோட்டத்தில் பார்ப்பதற்குக் கூட ஒரு தகுதி தேவைப்படவே செய்யும்.

ராஜாஜியைச் சந்தித்து அவர் ஆலோசனையின் படியே பெரியார் அந்தத் திருமணத்தை செய்து கொண்டார் என்பது பாமரத்தனமான பிரச்சாரமே! உண்மை என்னவென் றால் பெரியார் எதிர்பார்க்கிறபடி 30 வயது பெண் பரிபாலனம் செய்வார் என்று நம்புவதில் பயன் இல்லை என்றுதான் ராஜாஜி கடிதமே எழுதி னார். ஆனால் அதற்கு மாறாக தந்தை பெரியார் வாரிசாக அன்னை மணி யம்மையாரைக் கொண்டார். ராஜாஜியின் கணிப்பு பொய்த்தது; தந்தை பெரியார் அவர்களின் எதிர் பார்ப்பும், நம்பிக்கையும், தொலை நோக்குமே வென்றன.

ராஜாஜியின் ஆலோசனையின் பெயரில்தான் பெரியார் மணியம்மை திருமணம் நடந்தது என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. உண்மையோ வேறு விதமானது. ராஜாஜி எழுதிய அந்தக் கடிதத்தை அந்தக் கால கட்டத்தில் தந்தை பெரியார் வெளியிட்டு இருந் தால், அந்தப் பொய்ப் பிரச்சாரம் மண் மூடிப் போயிருக்கும். ஏன் பெரியார் வெளியிடவில்லை? பர்சனல் என்று தனக்கு எழுதப்பட்ட கடிதத்தை வெளியிடுவது பண்பாடல்ல என்ற உயர்ந்த பண்பாட்டை பெரியார் கடைப்பிடித்ததுதான் அதற்குக் காரணம்! இப்படி ஒரு தலைவரை வரலாறு கண்டதுண்டா? கேள்விப் பட்டதுதான் உண்டா? தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகுதான் வரலாற்றுத் தேவையின் அடிப்படையில் கழகத்தின் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார் என்பதுதான் உண்மை.

திருமண ஏற்பாட்டுக்குப் பின் 24 ஆண்டுகள் தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்தார்கள் என்றால், அந்த மாபெரும் தலைவரை வாழ வைத்து, அதன் மூலம் தமிழர் வாழ்வுக்குப் பெருந்தொண்டு செய்தவர் அன்னையார் என்பதிலும் அய்யமுண்டோ?

நாகம்மையார் மறைந்தபோது தந்தை பெரியார் எழுதியதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமானது.

எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப் போகும் அத்தியாயங்கள் சில விசேஷ சம்பவங்களாக இருக்கலாம். அவை நாகம்மையாருக்கு துக்கமாகவும், துயரமாகவும் இருக்கும் என்றாரே!

உண்மைதானே - இந்தி எதிர்ப்புப் போராட்டம், - பெல்லாரி சிறைச்சாலை - சட்ட எரிப்புப் போராட்டம், தேசிய கொடி எரிக்கும் போராட்டம் - தமிழ்நாடு நீங்கலாக தேசப்பட எரிப்புப் போராட்டம், - பிள்ளையார் உடைப் புப் போராட்டம் - ராமன் பட எரிப்புப் போராட்டம் - கோவில் கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டம் என்று அலை அலையான போராட்டங்களை அல்லவா தந்தை பெரியார் நடத்தினார்!

இந்த இடர்ப்பாடான கால கட்டத்தில் தோன்றாத் துணையாக இருந்தவர் அந்த ஈரோட்டுச் சிங்கம் எடுத்த சரியான முடிவின்படி, கணிப்பின்படி அமைந்தவர் அன்னை மணியம்மையார் அல்லவா!

தந்தை பெரியார் மனம் விட்டு எழுதினாரே!

மணியம்மையார் இயக்கத் தொண்டுக்கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு - தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உடல் நிலை எப்படியோ என் தொண்டுக்குத் தடையில்லாமல் நல்ல அளவுக்கு உதவி வந்ததால் என் உடல் பாதுகாப்பு, வீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன் (விடுதலை 15-10-1962) என்று கூறினாரே அய்யா!

என் காயலா சற்றுக் கடினமானது தான். எளிதில் குணமாகாது. அவை கரைய மாதக் கணக்கில் காலமாகும். ஒரு சமயம் ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) தேவை இருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் நான் பயப்பட வில்லை. எதற்கும் தயாராக இருக் கிறேன். மணியம்மையார் கவனிப்பும், உதவியும் அளவிடற்கரியது. - தந்தை பெரியார் 89 ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர் - 17-9-1967)

தந்தை பெரியார் மறைந்து 38 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட இந்தப் பார்ப்பனர்கள் அந்தத் திருமணத்தைக் கொச்சைப்படுத்துகிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன? அந்த அம்மா இருந்துதானே இந்தக் கிழவரை நீண்ட காலம் வாழ வைத்தார்! நம்மவா ஆதிக்கத்தை ஒழிப்பதற்கு உறு துணையாக இருந்தாரே என்கிற ஆத்திரம்தான் - இத்தனை ஆண்டுகள் ஓடிய பிறகும் கூட அவாளின் ஆத்திர நெருப்பு அணைந்து போய்விடாமைக்குக் காரணம்! இன்னும் குமுறிக் கொண்டும் திமிறிக் கொண்டும் பார்ப்பனர்கள் கிடக்கிறார்கள் என்பதை நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமே!

பெரியார் மட்டுமல்ல, பெரியார் மணியம்மையார் திருமணத்தைக் காரணம் காட்டி கழகத்தை விட்டுப் பிரிந்து தனிக் கழகம் கண்ட அண்ணா அவர்களே கூட உண்மையை உணர்ந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டாரே!

அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது, இப்போது எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை கடந்த முப்பது ஆண்டுகளாக கட்டிக் காத்து, அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சாரும் என்று அண்ணாவே சான்றளிப்புச் செய்து விட்ட பிறகு இந்த லட்சுமி நாராயணன்கள் யார்?

சோ. ராமசாமிகள் யார் குற்றங்கண்டுபிடிக்க?

அய்யா சிறையிலிருந்து 6 மாதங்களுக்குப் பிறகு விடுதலையாகிறார். ஒவ்வொரு ஊருக்கும் தோழர்கள் தந்தை பெரியார் அவர்களை அழைக்கின்றார்கள். அந்த நேரத்தில் அன்னை மணியம்மையார் வெளியிட்ட அறிக்கையை நோக்குங்கள். (விடுதலை 8.6.1958)


கூப்பிட்டால் வந்துவிடுவார்; கொடுத்தால் சாப்பிட்டுவிடுவார்! பெரியார் அவர்கள் விடுதலை ஆனவுடன் தங்கள் தங்கள் ஊருக்கு வர வேண்டும் என்பதாக ஒரு மாதமாகவே பலர் கடிதங்கள் எழுதி வழிச் செலவுக்குப் பணமும் பல பேர் அனுப்பியிருக்கிறார்கள். இந்த இரண்டு, மூன்று நாள்களாக பல தந்திகளும், செக்குகளும், டிராப்டுகளும் வந்த வண்ணமாய் இருக்கின்றன.

பெரியார் உடல் நிலையைப் பற்றி, பெரிய நோய் ஒன்றும் இல்லாவிட்டா லும் அவரது 80 வயதே அதாவது மூப்பு என்பதே ஒரு பெரிய நோய் அல்லவா? அதிலும் பெரிய டாக்டர்கள் பலர் அவர் உடல்நிலை பற்றிப் பயப்படும் படியாகக் கூறி, பெரியாரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்! இனி அவரைப் பயணம் செய்யும்படியோ, பேசும்படியோ விடாதீர்கள்! கண்டிப் பாய் விடாதீர்கள்! என்பதாக ஒரே கருத்தாய்க் கூறி வருகிறார்கள்.

பெரியார் அவர்கள் தனது மூப்பினால் வேறு எந்தக் காரியமும் செய்ய முடியாவிட்டாலும், தனது மூப்பு, பிரயாணத்திலோ - பேச்சிலோ தனக்கு முடிவு தரவாவது உதவட்டுமே என்கிறார்.

இதற்காக அவரைத் தற்கொலை செய்து கொள்ளும்படி விடலாமா? அல்லது நாமாவது அவரது முடிவை அவசரப்படுத்தலாமா?

ஆகையால் அவர் இனி அதிகப் பிரயாணம் செய்யாமலும், அதிகம் பேசாமலும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியதாகும்.

பெரியார் தமிழர்களின் பொதுச் சொத்து. பொதுச் சொத்து நாதியற்ற தாகும் என்கின்ற அறிவு மொழிப்படி அவரை விட்டுவிடாமல் எல்லோரும் தங்கள் சொந்தச் சொத்தைக் காப்பாற்றுவது போல் கவலையுடன் காப்பாற்றியாக வேண்டும்.

அரசாங்கத்தாரால் நமது மக்களுக்கு இப்போது ஏற்பட்ட அக்கிரமமான கொடுமைக்கும் கொலைக்கும் பெரியார் அவர்கள் சென்னை முதல் கன்னியா குமரி வரை எல்லா மாவட்டங்களுக்கும் சென்று மக்களைப் பாராட்டி ஆறுதல் கூறவேண்டி இருக்கிறது. மக்கள் பெரும்பாலும் எய்தவனை விட்டுவிட்டு அம்பை (வாளியை) நொந்துகொண்டிருக்கிறார்கள்! இதற்குப் பரிகாரமாகத் தவறான வழியில் செல்லத் தூண்டப்படுகிறார்கள். இத் தவறான நிலைக்கு ஆளாகாமல் மக்களை நடத்த வேண்டி இருக்கிறது. இது பெரியாரால்தான் ஆகும். மற்றவர்களுக்குப் பெரிதும் விஷயமே புரியவில்லை என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.

ஆகையால் ஒரு மாவட்டத்திற்கு ஒரு வாரத்தில் இரண்டு நாள்கள் வீதம் அழைப்பது என்கின்ற தன்மையில் அந்தந்த மாவட்டத்தார் முடிவு செய்து கொண்டு அந்தப்படி அழைத்தால், தேதி குறிப்பிடுவதை நான் கவனித்துத் தேதி கொடுக்கிறேன்.

அழைப்பைக் குறைத்தால் பெரியார் அவர்களை பத்திரிகைக்கும், நூல் களுக்கும் ஏதாவது எழுதிக் கொண் டிருக்கும்படி செய்யலாம். மாநாடுகளை மாதத்திற்கு ஒன்று நடத்தினாலே போதுமானது ஆகும். அதுவும் அனுமதி பெற்று நடத்துவது பயன்படத் தக்க தாகும்.
இதை மாவட்டத் தோழர்கள் உணர வேண்டுகிறேன்.

பெரியாருக்கு ஒரே வேளை உணவு தான், இரண்டு வேளை பால். இப்படித் தான் சிறையில் (ஆஸ்பத்திரியில்) பழக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதைக் கண்டிப்பாய் யாரும் தவறாமல் பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.

கூப்பிட்டால் வந்துவிடுவார், கொடுத்தால் சாப்பிட்டு விடுவார்.

இது இரண்டிலும் அவர் குழந் தையே ஆவார்.

ஆகையால் தோழர்கள் அருள் கூர்ந்து இதைக் கருத்தில் கொள்ளப் பணிவாய் வேண்டுகிறேன்.
------------------------ விடுதலை 8-6-1958

தந்தை பெரியார் எதிர்பார்த்ததற்கு மேலாக அல்லவா, ஒரு தாயாக இருந்து அந்தத் தந்தையை, தலைவரை தமிழ் நாட்டின் பொது வாழ்வுக்குக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறார்.

இதனைக் கொச்சைப்படுத்துபவர்கள் குணக் கேடர்களாகத்தான் இருக்க முடியும்.

தன்னைக் காண வந்த எழுத்தாள ராகிய ஒரு பெண்மணியை (அனுராதா ரமணன் - பார்ப்பனப் பெண்மணிதான்) கையைப் பிடித்து இழுத்தவர்கள்தான் அவாளுக்கு ஜெகத் குரு - காமகோடி!- பார்ப்பனர்களின் யோக்கியதைக்கு ஜெகத்குருக்கள் போதாதா?

வாலிப வயதை ஒரு சமூகத்தின் புரட்சிப் பணிக்காகத் தியாகம் செய்து, தலைவரையும் காத்து, தலைவரின் மறைவுக்குப் பிறகு - அந்தத் தலைவர் எதிர் பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் இயக்கத்தைக் கட்டிக் காத்த அந்த கண்ணியமிக்க கடமை உணர்வை, தியாக உணர்வை மதிப்பதற்கு மரியாதையான பண்பாடும் சீலமும் தேவைப்படும்.

பார்ப்பனர்களிடத்தில் அதனை எதிர்பார்க்க முடியுமா?

முடியாது என்பதற்கு அடையாளம் தான் துக்ளக்கில் திருவாளர் கே.சி. லட்சுமிநாராயண அய்யர்வாளின் எழுத்துக்கள்.

தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு அவரது நினைவு நாளை யொட்டி (25-12-1974) ராமன், லட்சுமணன், சீதை உருவங்களைக் கொளுத்தி இராவண லீலாவை நடத்திக் காட்டி, இந்தியாவே குலுங்கு மாறு இன எழுச்சிக் காவியத்தை எழுதி வரலாற்றில் கல்வெட்டாகப் பதிந்து போன அன்னையைப் பார்ப்பனர்கள் மதிப்பார்கள் என்று எதிர்பாக்க முடியாதே!

உலகிலேயே ஒரு நாத்திக இயக்கத் துக்குத் தலைமை தாங்கிய பெருமை இந்த அன்னையை மட்டும்தான் சாரும். நெருக்கடிக் காலம் என்னும் திராவகப் புயலையும் தீர மிக்க பெரியார் உணர் வால் சர்வ சாதாரணமாகச் சந்தித்த சாதனை சாதாரணமானது தானா?

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோர் மறைவிற்குப் பிறகும் கூட பார்ப்பனர்களால் அத்தலைவர்கள் ஏற்படுத்திச் சென்றுள்ள பாதிப்பிலிருந்து விடுபட முடியாமல் விட்டில் பூச்சிகளாகத் துடிக்கிறார்கள் என்பதிலிருந்தே அந்தத் தலைவர்கள் காலம் கடந்தும் வெற்றிப் பேரிகை கொட்டி வீறு நடை போட்டு வருகி றார்கள் கொள்கையாய் வாழ்கிறார்கள் என்பது விளங்கவில்லையா?

-----------------------(சந்திப்போம்)



புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் நிலைப்பாடு என்ன?

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும், பெரியாரை திராவிடர் கழகத்திலிருந்து நீக்கி வைத்து திராவிடர் கழகத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று கூறினார் என்று துக்ளக் கட்டுரை கூறுகிறது!

அப்படியெல்லாம் ஏதோ உணர்ச்சி வயப்பட்டுச் சொன்னவர்கள் எல்லாம், கடைசியில் தந்தை பெரியார் பக்கம் இருந்த நியாயத்தை உணர்ந்து பெரியார் பக்கமே நின்றனர் என்பது துக்ளக் எழுத்தாளருக்குத் தெரியுமா?

அதே புரட்சிக் கவிஞர் அன்னை மணியம்மையார்பற்றி என்ன எழுதினார்?

தாம் போகும் வழிகளை மறித்துக் கொண்டிருந்த ஒரு குன்றத்தைக் குத்தி உடைத்துக் கொண்டிருந்த இரண்டு தோள்களைக் கண்டோம். தம்மை நோக்கிச் சீறி வருகின்ற நெருப்பு மழைக்குச் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு உதடுகளைக் கண்டோம். தமிழ்நெறி காப்பேன் - தமிழரைக் காப்பேன் ஆரிய நெறியை அடியோடு மாய்ப்பேன் என்று அறையில் அல்ல மலைமேல் நின்று மெல்ல அல்ல, தொண்டை கிழிய முழக்கமிடும் ஓர் இருடியத்தால் செய்த உள்ளத்தைக் கண்டோம்.

அது மட்டுமல்ல.

குன்று உடைக்கும் தோளும், நெருப்பு மழைக்குச் சிரித்த உதடுகளும் இருடிய உள்ளமும் ஒரே இடத்தில் கண்போம். இந்த அணுகுண்டுப் பட்டறைதாம் பெரியார் என்பதும் கண்டோம்.

யாரைப் புகழ்ந்து எழுதினோம், புகழ்ந்து பாடினோம். ஆயினும் நாம் புகழ் பாட இன்னும் மேலான பொருள் வேண்டுமென்று ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு; மக்கள்மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று.

ஆயினும், காற்றிறங்கிப் பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறி யினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக் காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந் தொண்டால் முடியாது; அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது. பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை.

அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?

பெரியார் மேடைமேல் வீற்றிருப்பார். ஓர் இயக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் அழகு பெறக்கூடிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.

அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார் ஏதுங்கெட்ட வேலைக்காரிபோல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கால் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.

ஒரே ஒரு மாலையை எந் துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்ன தில்லை. எம் அன்னை யாவது முன்னே குவிந் துள்ள மாலைகளை மூட்டை கட்டுவதன்றி - அம் மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தம் தலை யில் வைத்தார் என்பதுமில்லை. - 10.4.1960 குயில் இதழ்

கோவை அய்யாமுத்து, ப. ஜீவானந்தம் அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்று ஒரு பட்டியலைக் காட்டி இவர்கள் எல்லாம் பெரியாரைக் குறை கூறினார்கள் என்று துக்ளக்கில் திருவாளர் இலட்சுமி நாராயண அய்யர் எழுதியிருந்தாலும் இவர்கள் அத்தனைப் பேர்களுமே பிற்காலத்தில் தந்தை பெரியார் அவர்களைச் சரியாகப் புரிந்து கொண்டு, கருத்துத் தெளிந்து தந்தை பெரியார் அவர்கள்பால் அன்பும் மதிப்பும் கொண்டு, அய்யாவின் ஆதரவையும் பெற்றார்கள் என்கிறபோது, துக்ளக் தூக்கிய துப்பாக்கிக்கு துக்ளக் கூட்டமே இரையானது என்பதுதான் கண்ட பலன்!

*******************************************************

அந்தப் பெண்மணி யார்?

1943-இல் நான் திருச்சூரில் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கும்பகோணத்திலிருந்து எனது நண்பர் கா.மு. ஷெரீப் அவர்கள் வந்திருந்தார்கள். கும்பகோணத்துக்கப்பால் காவேரி நதியின் மத்தியில் பெரிய விஸ்தாரமான ஒரு திட்டுப் பூமியை வாங்கி அதிலே ஆட்டுப் பண்ணையும், விவசாயப் பண்ணையும் நடத்தி வருவ தாகவும், அதை நான் காண வேண்டும் என்றும் என்னை அழைத்தார். அவரும் நானும் திருச்சூரிலிருந்து ரயிலேறிப் புறப்பட்டோம்.

ஈராட்டிலே...

ஈரோட்டிலே ரயில் மாறவேண்டும். திருச்சி செல் லும் வண்டியில் இரண்டாம் வகுப்பில் நுழைந்தோம். கீழ்த்தட்டு ஒன்றில் ஒரு ஜமுக்காளம் விரிக்கப்பட்டி ருந்தது. அருகில் ஒரு சிறிய பையன் நின்றுகொண்டி ருந்தான். அவனை விசா ரித்தபோது நாயக்கருக்காக அவன் காத்திருப்பது தெரிய வந்தது. பிளாட்பாரத்தில் காய்கறி அல்லாத சோற்றுக் கடை வைத்திருப்பவனைக் கூப்பிட்டு முதல் தரமான சாப்பாடு கொண்டு வரும்படி சொன்னேன். பிரியாணி, சாப்ஸ், ஆம்லெட், குருமா என்று அவன் தன் கடையில் உள்ளதையெல்லாம் தட்டுகளில் கொணர்ந்தான். அத்தட்டுகளை எல்லாம் ஜமுக்காளத்தின் மீது வைக்கச் சொல்லி விட்டு, நாங்கள் இருவரும் பிளாட் பாரத்தில் நாயக்கரின் வருகைக்காகக் காத்திருந்தோம்.

இதெல்லாம் என்ன?

வண்டியினுள் நுழைந்த நாயக்கர் இதெல்லாம் என்னடாவென்று அருகில் இருந்த பையனைக் கேட்டார். நான் உள்ளே நுழைந்து அவருக்கு வணக்கம் செலுத்தி, இவையெல்லாம் தங்களுக்காக வரவழைத்தேன் என்றேன்.

அய்யோ, உன் உடல்நிலை முன் போல் இல்லை. பத்திய உணவு சாப்பிட்டு வருகிறேன். இதையெல்லாம் எதற்காகக் கொண்டு வந்தீர்கள்? என்று சங்கடத் துடன் கேட்டார்.

என்ன செய்வது? நீங்கள் பிரியமாகச் சாப்பிடுவீர்கள் என்றெண்ணி ஆர்டர் கொடுத்து விட்டேன். ஓட்டல்காரனுக்குப் பணமும் கொடுத்தாகி விட்டது என்று இழுத்தேன்.

சரி சாப்பிட்டுத் தொலைக்கிறேன் என்று தட்டுகளை யெல்லாம் ஒருவாறு காலி செய்துவிட்டார். நானும் நண்பர் ஷெரீப் அவர்களும் வெளியில் நின்று கொண்டிருந்தோம். அப்போது, பின்னல் ஜடையுடன் ஒரு பெண் உள்ளே நுழைந் தாள். நான் ஒரு தப்பு செய்துவிட்டேன் என்றார் பெரியார் அப்பெண்ணிடம்.
என்ன அது?

பிரியாணி சாப்பிட்டுவிட்டேன்.

அய்யோ, ஏன் சாப்பிட்டீர்கள்?

எனது மிகப் பழைய நண்பரொருவர் பிரியத்தோடு வற்புறுத்தினார். . . தட்டமுடியவில்லை.
அவருக்கு என்ன தெரியும்?

உங்கள் நண்பருக்கு உங்கள் உடல் நிலை எப்படித் தெரியும்? நீங்கள் மறுத்திருக்க வேண்டாமா?

மேற்கண்டவாறு அப்பெண்ணும் பெரியாரும் பேசிக் கொண்டிருக்கையில், ஸ்பென்சர் சிப்பந்தி யொருவன் எங் களைக் கடந்து சென்றான். ஓடிப்போய் ஒரு சோடா கொண்டுவா என்று அவனிடம் நான் கூற, அவனும் வெகு விரையில் சோடாவும் டம்ளருமாக ஓடி வந்தான். சோடாவைத் திறந்து டம்ளரில் ஊற்றி வண்டிக்குள் இருந்த நாயக்கரிடம் கொடுக்கச் சொன்னேன்.

யாருக்கு? என்று பட்லரை விசாரித்து டம்ளரைக் கையில் வாங்கிக் கொண்டு வண்டியை விட்டுக் கீழே இறங்கி எனது பக்கத்தில் வந்து நின்றார் நாயக்கர். அப்பெண்ணும் அருகில் வந்து நின்றாள்.

பெண்ணு யாரு?

இப்பெண் யாருங்க, புதிதாய் இருக்கிறது? அவள் உங்களைப் போடும் போடு எனக்கே பயமாயிருக்கிறது! என்றேன். பெரியார் வேலூரில் ஒரு நண்பரின் மகள். ஸ்கூல் பைனல் வரை வாசித்திருக்கிறது. நமது இயக்கத்தில் அதிக பற்றுதல். எனது காரியதரிசி போல என்னுடன் இருந்து வருகிறது என்றார்.

வண்டி புறப்படும் சமயமாயிற்று. பெரியார் உள்ளே நுழைந்து படுத்துக் கொண்டார். நானும், நண்பர் ஷெரீபும் அதே பெட்டியில் ஏறிப் படுத்துக் கொண்டோம். அதிகாலைக்கு முன்னரே ரயில் திருச்சி ஜங்ஷனை அடைந்தது. நாங்கள் மூவரும் கீழே இறங்கு முன்னர், அப்பெண் எங்கள் வண்டி யின் முன்னே வந்து நின்றாள்!

என்ன மணி! நல்ல இடம் கிடைத்ததா? நன்றாகத் தூங்கினாயா?

ஓ! முதல் தரமான இடம். சர்வென்ட்ஸ் கம்பார்ட்மெண்ட் (முதல், இரண்டு வகுப்பு பிரயாணிகளின் வேலைக்காரர்களுக்கென்று அமைக்கப் பட்டிருக்கும் தனிப்பெட்டி) காலியாக இருந்தது. நன்றாகத் தூங்கினேன்.

அதுதான் பொய். இந்தப் பெண் தூங்கவே இல்லை. ஒவ்வொரு ஸ்டேஷனிலும் வண்டி நின்றதும், ஓடிவந்து உங்களை எட்டிப் பார்த்துவிட்டுப் போனது என்று ஒரு போடு போட்டார் நண்பர் ஷெரீப். இப்படியும் பூலோகத்தில் ஒரு பெண் இருப்பாளா என்று நான் மனதுக்குள் எண்ணிக் கொண்டேன். அந்தப் பெண் பிற்காலத்தில் மணியம்மையாவார்.

(கோவை அ.அய்யாமுத்து எழுதிய நான் கண்ட பெரியார் என்ற நூலிலிருந்து).

எந்த அய்யாமுத்து அவர்களை மேற்கோள் காட்டி தந்தை பெரியார் அவர்களைச் சிறுமைப்படுத்த இந்தப் பார்ப்பனக் கூட்டம் எண்ணியதோ, அதே அய்யாமுத்து அவர்களைக் கொண்டே அதனை முறியடிக்கவும் நியாயமாக நம்மால் முடியும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!.

*******************************************************

------------------ கலி.பூங்குன்றன் அவர்கள் 24-9-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

24.9.11

இராமனுக்கு சீதை தங்கை - இராவணனுக்கு சீதை மகள்-இராமனுக்கு பல பெண்டாட்டிகள்


“இராமனுக்கு சீதை தங்கை”
“இராவணனுக்கு சீதை மகள்”
“இராமனுக்கு பல பெண்டாட்டிகள்”

இராமாயணம் என்பது சூரியகுல அரசர்களின் சரித்திரங்களில் ஒன்று என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், இராமாயணம் என்னும் பெயரால் பல நூற்றுக்கணக்கான இராமாயணங்கள் இருந்ததாகவும், நூறு கோடிக் கணக்கான சுலோகங்கள் இருந்ததாகவும், அவைகள் காலப் போக்கில் பல தெய்வீகக் காரணங்களால் மறைந்து போய் விட்டன வென்றும், ஆனாலும் இப்போது 24 விதமான இராமாயணங்கள் இருப்பதாகவும், அவற்றை திரு.கோவிந்ததாஸ் அவர்கள் வட இந்தியாவிலுள்ள ஒரு மடத்தில் தாமே நேரில் பார்த்ததாகவும் தாம் எழுதிய “இந்துமதம்” என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அதை அனுசரித்தே சென்னை மைலாப்பூர் “இராமாயண விலாசம்” என்னும் கிருகத்தில் உள்ள இராமாயணப் பிரசுர கர்த்தாவாகிய திரு.சி.ஆர்.சீனிவாசய்யங்கார் பி.ஏ. என்பவரால் எழுதப்பட்டு 1928-ம் வருஷத்தில் அச்சிட்டு வெளிப்படுத்தியிருக்கும் “இதர இராமாயணங்கள்” என்னும் புஸ்தகத்தில் மேல்கண்ட விஷயங்கள் விளக்கப்பட்டு முதல் தடவையாக நான்கு இராமாயணங்கள் அதில் விவரிக்கப்பட்டு வெளியிடப் பட்டிருக்கின்றன. (அப்புஸ்தகத்தின் விலை ரூ.1)

அவையாவன :- ஜைன ராமாயணம், பௌத்த ராமாயணம், யவன ராமாயணம், கிறைஸ்த ராமாயணம் என்பவைகளாகும்.

இவற்றுள் யவன ராமாயணம், கிறைஸ்த ராமாயணம் ஆகியவைகள் பெரும்பாலும் இராமாயணக் கதையைப் போன்ற போக்கில் இருந்தாலும் கதைகளில் வரும் பெயரும் மற்ற சில்லறை விஷயங்களும் பெரிதும் மாறுபட்டு அந்தந்த பாஷைக்கு ஏற்ற பெயர்களாக இருப்பதால் அதை நாம் இதில் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு உபயோகித்துக் கொள்ள விரும்ப வில்லை. ஆனால் மற்ற இரண்டும் அதாவது ஜைன பௌத்த ராமாயணங்கள் பெரிதும் கதைப் போக்கிலும் பெயர்களிலும் எல்லாம் பொருத்தமாக இருக்கின்றன. ஆனால் சில்லறை விஷயத்தில் உண்மைகள் மாத்திரம் மாறு பட்டிருக்கின்றன. அதில் ஜைன ராமாயணம் என்பது இப்போதும் அடையாற்றுப் புத்தக சாலையில் வைக்கப்பட்டிருப்பதாக பதிப்பாசிரியரே எழுதியிருக்கின்றார். அதில் தசரதன், ராவணன் முதலியவர்களுடைய சந்ததிக்கிரமம், பிறப்பு, வளர்ப்பு முதலியவைகளும் சிறிது வித்தியாசப் பட்டாலும் மூல புருஷனாகிய தசரதனை அப்படியே ஏற்றுக் கொண்டு அவனுக்கு நான்கு மனைவிகள் என்றும் அவர்களின் பெயர்கள் 1. அபரா ஜிதை, 2. சுமத்ரை, 3.கைகேயீ, 4.சுப்ரபை என்றும் குறிப்பிட்டு விட்டு கைகேயிக்கு தசரதன் கொடுத்த இரண்டு வரத்தையும் அப்படியே குறித்திருப்பதுடன், அபராஜிதைக்கு ராமன் பிறந்ததாகவும் சுமத்திரைக்கு லக்ஷ்மணன் பிறந்ததாகவும் கையேயிக்கு பரதன் பிறந்ததாகவும் சுப்ரபைக்கு சத்துருக்னன் பிறந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இதுபோலவே சீதையை ஜனகராஜனுடைய மகள் என்றும், வில்லை வளைப்பவனுக்கு ஜனகன் சீதையைக் கொடுப்பதாக நிபந்தனை வைத்திருந்தான் என்றும், ஆகவே வில்லை வளைத்தே ராமன் சீதையை மணந்தான் என்றும், லக்ஷ்மணனுக்கு 18 பெண் சாதிகள் என்றும், பரதனுக்கு ஜனகனுடைய சகோதரரின் குமாரத்தி கொடுக்கப்பட்டாளென்றும் சொல்லப் பட்டிருக்கின்றது.

மற்ற பட்டாபிஷேகக் கதையும் வால்மீகி ராமாயணத்தைப் போலவே இருந்தாலும் சிறுசிறு மாறுதல்களுடன், தபசு செய்ததற்காக சம்பூகன் வதைக்கப்பட்டதும் குறிக்கப்பட்டிருப்பதோடு இராமனுக்கு நான்கு பெண்சாதிகள் என்றும் அவர்களின் பெயர் 1.சீதை, 2. பிரபாவதி, 3. ரதினிபா, 4. ஸ்ரீதாமா என்பவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது.

பௌத்த ராமாயணத்திலும், தசரத ராஜனுக்கு பதினாயிரம்மனைவிகள் என்றும் அவர்களில் மூத்தவளுக்கு ராமன், லக்ஷ்மணன் என்பவர்களான இரண்டு ஆணும் சீதை என்று ஒரு பெண்ணும் ஆக மூன்று குழந்தைகள் பிறந்தன என்றும், அடுத்த மனைவிக்கு பரதன் என்கின்ற ஒரு ஆண் குழந்தை மாத்திரம் பிறந்தது என்றும், அரசன் பரதனுக்கு பட்டம் கொடுப்பதாய் இளைய மனைவிக்கு வாக்குக் கொடுத்திருந்தான் என்றும், ஆனால் அரசன் அந்தப்படி செய்யாமல் ராமனுக்கு பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்தான் என்றும், இளைய மனைவி கட்டாயப் படுத்தினதால் பரதனுக்குப் பட்டம் கொடுத்துவிட்டு ராமன், லக்ஷ்மணன், சீதை ஆகிய சகோதர சகோதரிகளை பரதன் கொன்றுவிடுவான் எனப் பயந்து காட்டுக் கனுப்பிவிட்டான் என்றும் பரதன் தமயனைத் தேடி காட்டுக்குப் போய் ராமனையே பட்டத்தை ஒப்புக் கொள்ளச் சொன்னதாகவும், ராமன் தன் தகப்பனார் இறந்த பிறகுதான் நான் நாட்டுக்குத் திரும்பிவர முடியுமென்றும், அதுவரை தனது பாதரக்ஷையையும் மற்ற சகோதர சகோதரிகளையும் அனுப்பும்படி கேட்டு வாங்கி அழைத்து வந்ததாகவும், பன்னிரண்டு வருடமான பின் தசரதன் இறந்து போனதாகவும், பிறகு ராமன் அயோத்திக்கு வந்ததாகவும், வந்தவுடன் ஊர் ஜனங்கள் ராமனுடைய தங்கையாகிய சீதையை அவளது தமையனாகிய ராமனுக்குக் கலியாணம் செய்வித்து பட்டம் கட்டினதாகவும் எழுதப்பட்டிருக்கின்றது.

இவைகளை மெய்ப்பிக்க திரு. அய்யங்கார், அந்த காலத்தில் அண்ணனும், தங்கையும் கலியாணம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு என்றும் எகிப்து தேச ராஜ தர்மமே சகோதரியை மணப்பதுதான் என்றும் இதை அறிந்து தான் ரிக்வேதம் 10-வது மண்டலத்தில் 10,12 -சுலோகங்களில் சகோதரியை மணப்பது கண்டிக்கப்பட்டிருக்கின்றதென்றும், அதற்கு முன் அவ்வழக்கமிருந்து வந்ததற்கு மேலும் ஆதாரமாக சூரியனும் அக்கினியும் தங்களது தங்கைகளையே மணந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் எழுதியிருக்கின்றார்.

திரு.சி.ஆர்.சீனிவாசய்யங்கார் தாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வால்மீகி ராமாயணம் பின்பகுதிக் குறிப்பு 431-ம் பக்கத்தில், சீதை தசரதனுடைய மகள் என்றும், அவளை தசரதன் ஜனகனுக்குத் தானம் கொடுத்தார் என்றும் அவள் பூமியில் பட்டால் பூமி இழுத்துக் கொள்ளும் என்றும், ஆதலால் பூமியில் விடாமல் காப்பாற்ற வேண்டுமென்ற நிபந் தனையுடன் தசரதன் கொடுத்தான் என்றும், தசரதன் இல்லாதபோது ஒரு நாள் சீதை பூமியின் மீது நின்றுவிட்டாள் என்றும், அதனால் அவள் பூமிக்குள் மறைந்துபோய் விட்டாள் என்றும், பிறகு கொஞ்சகாலம் பொறுத்து ஜனகன் பூமியை உழும்போது சீதை பூமிக்குள்ளிருந்து கலப்பையில் தட்டுப்பட்டு ஜனகனால் எடுத்து வளர்க்கப்பட்டாள் என்றும், ஆனால் ஜனகனுக்கு அவள் தான் முன் வளர்த்து வந்த சீதை என்று தோன்றவில்லை யென்றும், ஆகவே அவளது தமையனாகிய ராமனுக்கே அவளைக் கலியாணம் செய்து கொடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுவிட்டு இந்த விஷயம் வசிஷ்ட புராணத்திலும் ஸ்கண்டோத்திர புராணத்திலும் இருப்பதாகவும் குறிப்பிட் டிருக்கின்றார்.

அன்றியும் இதே திரு.சீனிவாசய்யங்கார், “எவனொருவன் தன்னுடைய தங்கையை மணம் செய்து கொள்ளுகின்றானோ அவன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போவதால் உனக்கு மரணமுண்டு” என்று ராவணனுக்கும் ஒரு காலத்தில் நாரதர் சாபம் கொடுத்திருந்ததாகவும் அந்தச் சாபத்தின் பலனாய் ராவணனானவன் ராமன் தன் தங்கையாகிய சீதையை மனைவியாக மணந்து கொண்ட விஷயம் தெரியாமல் சீதையைத் தூக்கிக் கொண்டு போனதாகவும், அதனாலேயே ராவணன் ராமனால் கொல்லப்பட்டதாகவும், ராவணனுக்கு உண்மையில் ராமன் தன் தங்கையைக் கட்டிக் கொண்டது தெரியாதென்றும், தெரிந்திருந்தால் சீதையைத் தொட்டிருக்க மாட்டான் என்றும், இந்த உண்மைகள் பார்க்கவ புராணத்தில் இருப்பதாகவும் மேற்கண்ட 431-ம் பக்கத்திலேயே குறிப்பிட்டிருக்கின்றார்.

மற்றும் இதே திரு. சீனிவாசய்யங்கார் அதற்குக் கீழேயே சீதை ராவணன் மகள் என்றும், அவர்கள் பிறந்த கால தோஷத்தால் தகப்பனுக்கு (இராவணனுக்கு) ஆபத்து விளையும் என்று நாரதர் இராவணனுக்குச் சொன்னதாகவும், அந்தக் காரணத்தால் இராவணன் தன் மகளாகிய சீதையை ஒரு பெட்டியில் வைத்து சமுத்திரத்தில் கொண்டுபோய் எறிந்துவிட்ட தாகவும், அது ஜனகனது ராஜ்யத்தில் ஓடும் ஆற்றிலடித்துக் கொண்டு வரப்பட்டதாகவும் அதை ஜனகன் கண்டெடுத்து வளர்த்து ராமனுக்குக் கொடுத்ததாகவும், ராமனும் சீதையும் வனத்திலிருக்கும்போது ராவணன் சீதையைத் தன் மகள் என்று தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து விட்டதாகவும் குறிப்பிட்டு விட்டு இந்த உண்மை மவுட்கலிய ராமாயணத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இவைகள் உண்மையாய் இருக்கலாம் என்பதற்கு அவர் ஒரு யுக்தி காரணமும் சொல்லுகின்றார். அதாவது, “சீதையின் பிறப்பைப் பற்றியோ அவளுடைய பழைய சங்கதியைப் பற்றியோ வால்மீகர் எங்கும் ஒரு வரி கூட எழுதவில்லை. ஆதலால் இந்தக் கூற்றுகள் உண்மையாக இருக்கலாம்”என்கின்றார்.

எனவே சீதை தசரதனுக்கு மகள் என்பதற்கும் ராமனுக்குத் தங்கை என்பதற்கும் இதுவரை 4,5 - ஆதாரங்களும், ராவணனுக்கு மகள் என்பதற்கு இரண்டு ஆதாரங்களும் கிடைக்கின்றன. இன்னமும் மற்ற ராமாயணங்களில் என்னென்ன பந்துத்வங்களும் இருக்குமென்பது ஊகிக்கக் கூடவில்லை.


------------------- தந்தைபெரியார் அவர்களால் ஆனந்த விகடன் வருஷ அனுபந்தத்திற்கு எழுதியது. - “குடி அரசு” - கட்டுரை - 03.03.1929

23.9.11

மூடநம்பிக்கையும் கோயில் பாதுகாப்பும் ஒன்றா?


இரு வகையான அணுகுமுறைகள்

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் உள்ள குறிப்பிட்ட (பி-அறை) அறையைத் திறப்பது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

கடவுள் சம்பந்தப்பட்ட பிரச்சினையில்கூட மனிதர்களான நீதிபதிகள்தான் தலையிட்டு நீதி வழங்க வேண்டிய அவலம்!

குதிரைகள் வாங்க அரசன் கொடுத்த பணத்தை கொண்டு அமைச்சரான மாணிக்கவாசகர் குதிரைகள் வாங்காமல், கோயில் கட்டினான்; அமைச்சனைக் காப்பாற்ற கடவுள் நரிகளைப் பரியாக்கினான் என்றெல்லாம் புராணம் எழுதி வைத்துள்ளார்களே - இப்பொழுது அந்தக் கடவுளைப்பற்றி மனிதன் தானே தீர்ப்பு எழுத வேண்டியுள்ளது - இதுபற்றிப் பக்த சிரோன்மணிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

மன்னர் குடும்பத்தினர் பத்மநாபசாமி கோயில் அறைகளில் இருந்து நகைகளைக் களவாடிச் சென்றுள்ளனர் என்று கேளர மாநில முதல் அமைச்சர் அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.

அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தேவப்ரஸ்னம் பார்க்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட அறையைத் திறக்கக் கூடாது என்று மன்னர் சார்பில் உச்சநீதிமன்றத் தில் தெரிவிக்கப்பட்டபோது உச்சநீதிமன்றம் சரியான சாட்டையடி கொடுத்துள்ளது. குறிப்பாக நீதிபதி ஆர்.வி. இரவீந்திரன் ஒரு வினாவை எழுப்பினார்.

இவ்வழக்கு நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட வேண்டுமா? அல்லது சோதிடர்களால் முடிவு செய்யப்பட வேண்டுமா? என்ற வினாவை எழுப்பினார்.

மூடநம்பிக்கையும் கோயில் பாதுகாப்பும் ஒன்று சேர்த்து போக முடியுமா என்றும் கூறியிருக்கிறார்.

இது ஓர் அருமையான அறிவார்ந்த வினாவாகும். இந்திய அரசமைப்புச் சாசனத்தில் கூறியுள்ள அறிவியல் மற்றும் சீர்திருத்த மனப்பான்மையை மக்களிடம் வளர்க்க வேண்டும் என்ற கோட்பாட்டின்படி நீதிமன்றம் கேட்ட கேள்வியாகக்கூட எடுத்துக் கொள்ளலாம்.

இதே கண்ணோட்டம் நீதிமன்றத்திற்கு மற்ற மற்ற பிரச்சினைகளிலும் இருந்தால் இன்னும் சிறப்பாகவே இருக்கும்.

குறிப்பாக சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். 150 ஆண்டு கால தமிழ்நாட்டின் பிரச்சினை இது.

கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அதற்கான திட்டம் வகுக்கப்பட்டு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு. 60 சதவிகித பணிகள் முடிவுற்றதற்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவும், சு.சாமி என்கிற பேர் வழியும் - ராமர் பாலம் - ராமர் கட்டிய பாலம் - அது 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குரங்குகள் துணை கொண்டு ராமனால் கட்டப்பட்ட பாலம்.

அதற்கு ராமர் பாலம் - என்று பெயர் - ராமன் இந்துக்களின் கடவுள் - இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பொழுது ராமர் பாலம் இடிக்கப்பட நேரிடும்; எனவே இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதும், அதனை ஏற்றுக் கொண்டு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதிப்பதும் எந்த வகையில் அறிவியல் மனப்பான்மை?

திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயில் கருவூல அறையைத் திறக்கும் பிரச்சினையில் - தேவப்ரஸ்னம் என்று வரும்போது - சோதிட மூடநம்பிக்கைகளை எல்லாம் நீதிமன்றம் ஏற்க முடியாது என்று சொன்ன அதே உச்சநீதிமன்றம், ராமன் என்ற புராண கற்பனைக் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி, ஒரு மக்கள் நலத் திட்டத்தை முடக்குவதற்கு எப்படி ஒத்துழைப்புக் கொடுக்கிறது என்கிற கேள்வி எழாதா?

சட்டமாவது - நீதியாவது அது வியாக்யானம் செய்யும் வழக்குரைஞர்களையும், நீதிபதிகளையும் பொறுத்ததே என்று தந்தை பெரியார் சொன்னாரே - அதுதானா இது?

சேது சமுத்திரத் திட்டம் பற்றிய வழக்கு ஒருக்கால் நீதிபதி வீ.ஆர். இரவீந்திரனிடம் வந்திருந்தால் வேறு வகையான தீர்ப்பு கிடைத்திருக்கும் என்று எண்ணலாமா?

குறிப்பிட்ட நாளில் எந்த நீதிபதி அமர்கிறார் - என்று தெரிந்து அதற்கேற்றாற்போல வழக்குகளைத் தாக்கல் செய்யும் மனப்பான்மை நிலவுவது எந்த வகையில் சரியானது?

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மீதான கொலை வழக்கினை விசாரிக்க மாட்டேன்; நான் அவரது பக்தன் என்று மிக வெளிப்படையாக உச்சநீதி மன்றத்திலேயே ஒரு நீதிபதி கூறினார் என்றால், இந்நாட்டு நீதிமன்றத்தின் மீதான உயர்தர மதிப்பீடு என்னாகும்?

நீதி தேவதையின் கண்கள்தான் கட்டப்பட்டுள்ளதே - பிறகு என்ன? எந்த வழக்கு வந்தால் என்ன? நேர்மையான முறையில் தீர்ப்பு வழங்க வேண்டியதுதானே?

இந்து மனப்பான்மை என்ற ஒரு கிருமி எப்படியோ ஒரு வகையில் மக்களின் மனப்பான்மையில் ஒட்டிக் கொண்டுள்ள வரை நியாயம் நேர்மை என்பதெல்லாம் திரிபு அடைகின்றன என்பதுதான் உண்மை!

---------------”விடுதலை” 23-9-2011

தீபாவளி பண்டிகை என்றால் என்ன? எதற்காக கொண்டாடப்படுகிறது?


தீபாவளிப் பண்டிகை

இவ் வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப்போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப்போகின்றீர்கள்? "அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை" என்று சொல்லி விடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையைக் கொண்டாடப்போகின்றீர்களா? என்பது தான் "நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்" என்று கேட்பதின் தத்துவமாகும். நண்பர்களே! சிறிதும் யோசனை இன்றி யோக்கியப் பொறுப்பின்றி உண்மைத் தத்துவமின்றி சுயமரியாதை உணர்ச்சி இன்றி சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின்றீர்களேயல்லாமல் மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரசாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களேயல்லாமல் மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும், ஜீவனற்ற தன்மையான "பழய வழக்கம்" "பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம்" என்கின்றதான வியாதிக்கு இடம் கொடுத்துக் கொண்டு கட்டிப்போடப்பட்ட கைதிகளைப்போல் துடிக்கின்றீர்களே யல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவைச் சிறிதுகூட செலவழிக்க சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.
பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்தரத்தையும், சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்க தயாராயிருக்கின்றீர்கள். ஆனால் உங்கள் பகுத்தறிவைச் சிறிது கூட பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப்பன ரல்லாதார்களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராணப் புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞானமற்று மானமற்று கால்வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றேன்.

புராண கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள்; அதன் ஊழலை எடுத்துச்சொன்னால் காதுகளைப் பொத்திக்கொள்ளுகின்றீர்கள். "எல்லாருக்கும் தெரிந்தது தானே; அதையேன் அடிக்கடி கிளறுகின்றீர்கள்? இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா?" என்று கேட்கின்றீர்கள். ஆனால் காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி, மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர்களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.

பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்? எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும், நேரச்செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப்புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய் கோபிப்பதில் என்ன பிரயோஜனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச்சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? "நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்" என்றால் அதற்கு "நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்" என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?

அன்பர்களே! சமீபத்தில் வரப்போகும் தீபாவளிப்பண்டிகையை பார்ப்பனரல்லாத மக்களாகிய நீங்கள் 1000க்கு 999 பேர்களுக்கு மேலாகவே எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள். துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்து துணிவாங்குவது என்பது ஒன்று; மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுவுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்த மற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்மந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பார்ப்பனர் உள்பட பலர் இனாம் பிச்சை என்று வீடு வீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சி பணம்வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும், செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது ஐந்து; அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச்செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும் வீணாக்குவதும் ஆறு; இந்தச் செலவுகளுக்காகக் கடன் படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காக கடன்பட வேண்டியிருக்கின்றது என்பதும் பட்டாசு வெடி மருந்து ஆகியவைகளால் அபாயம் நேரிட்டு பல குழந்தைகள் சாவதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும் மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும் தீபாவளி பண்டிகை என்றால் என்ன? அது எதற்காக கொண்டாடப்படுகிறது என்கின்ற தான விஷயங்களுக்கு சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம். ஏனெனில் அது எப்படிப்பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம் இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய் யென்று ஒப்புக்கொண்டாய் விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக்கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால், அது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

தீபாவளிப்பண்டிகையின் கதையில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண்சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளையிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது அல்லது இவர்கள் சம்மந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்தமாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக்கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாதார்கள், தங்களை ஒரு பெரிய சமூகக்காரர்களென்றும் கலைகளிலும் ஞானங்களிலும் நாகரீகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தட்டிப்பேச ஆளில்லாவிடங்களில் சண்டப்பிரசண்டமாய்ப் பேசி விட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ "காளை மாடு கன்றுப் போட்டிருக்கின்றது" என்றால் உடனே "கொட்டத்தில் கட்டி பால் கறந்து கொண்டுவா" என்று பாத்திரம் எடுத்துக்கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர்களுக்குள்ளும் பாமர மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கின்றோமே ஒழிய "காளைமாடு எப்படி கன்றுப் போடும்" என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது. மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங்களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர்களை விட பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத்தனமாகவும் பட்டணங்களில் இருப்பவர்களை விட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூட சிகாமணிகளாகவும் இருந்து வருவதை பார்க்கின்றோம்.

உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூஜை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, கிர்த்திகை முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்திரங்களை விட நகரங்களில் அதிகமாகவும் மற்ற நகரங்களைவிட சென்னையில் அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான்மையோர் எதற்காக, ஏன் கொண்டாடுகின்றோம் என்பதே தெரியாதவர்களாகவேயிருக்கின்றார்கள். சாதாரணமாக மூட பக்தியாலும், குருட்டுப் பழக்கத்தினாலும் கண்மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ் நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லி விடலாம். ஏனெனில் இன்றைய தினம் சென்னையில் எங்கு போய் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத்திண்ணையிலும் சரீரமில்லாத ஒருதலை உருவத்தை மாத்திரம் வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயணக் காலக்ஷேபங்களும், பெரிய புராண திருவிளையாடல் புராணக் காலக்ஷேபங்களும் பொது ஸ்தாபனங்கள் தோறும் சதா காலக்ஷேபங்களும் நடை பெறுவதையும் இவற்றில் தமிழ் படித்த பண்டிதர்கள், ஆங்கிலம் படித்த பட்டதாரிகள், கௌரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். பார்ப்பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத்தார்கள் தான் "ஆரியர் வேறு தமிழர் வேறு" என்பாரும் "புராணங் களுக்கும் திராவிடர்களுக்கும் சம்மந்தமில்லை" என்பாரும் தீபாவளி வைணவப் பண்டிகை ஆனதால் சைவனுக்கு அதில் சம்பந்தமில்லை என்பாரும் பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு "நாங்கள் தான் பிரதிநிதிகள்" என்பாரும் மற்றும் "திராவிடர்களின் பழைய நாகரீகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டு" மென்பாரும் பெருவாரியாக இருப்பார்கள். ஆகவே இது போன்ற "படித்த" கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்மந்தமான காரியங்களை எதிர்பார்ப்பதைவிட, உலக அறிவுடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதும், பிரசாரம் செய்வதும் பயன் தரத்தக்கதாகும்.

உதாரணமாக, ராமேஸ்வர தேவஸ்தானக் கமிட்டியாரின் ஒரு ரிபோர்ட் டில் மக்கள் ராமேஸ்வரத்திற்கு முந்திய வழக்கம் போல் இப்போது யாத்திரைக்கு வருவதில்லை என்றும் அதனால் வரும்படி குறைந்து விட்ட தென்றும், அதுபோலவே திருப்பதி மகந்து அவர்களின் ஒரு வருஷாந்திர ரிப்போர்ட்டில் அவ்வருஷம் திருப்பதிக்கு யாத்திரைக்காரர்கள் மிகக் குறைந்து போய் அதனால் கோவிலுக்கு முந்திய வருஷங்களைவிட பகுதி வரும்படிகூட எதிர்பார்க்க முடியாததாய் இருப்பதாகவும் குறிப்பிடப் பட்டிருப்பதனாலும், சங்கராச்சாரியார், ஜீயர் முதலிய மடாதிபதிகள் செல்லுகின்ற பக்கங்களில் எல்லாம் முன்போல் வரவேற்பு ஆடம்பரங்களும் வரும்படியும் இல்லாமல் சீக்கிரம் சீக்கிரமாக சஞ்சாரத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்புவதிலிருந்தும் பிராமண மகாநாடுகளும் சமயப் பத்திரிகைகளும் மூட்டை கட்டப்படுவதிலிருந்தும் ஒரு விதத்தில் பாமர மக்களிடை உண்மை உணர்ச்சி பரவி இருக்கின்றதென்பதை உணர முடிந்தாலும், வழிகாட்டிகளென்றும் தலைவர்களென்றும் பொது ஜனங்களின் தர்மகர்த்தாக்களென்றும் படிப்பாளிகள் என்றும் தங்களை சொல்லிக் கொள்ளுபவர்களுள் அநேகமாக சிறிது உணர்ச்சிகூடக் காணாமலிருப்பதால் அவர்களைப்பற்றி நாம் வருந்தாமல் இருக்க முடியவில்லை.

எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகிறேன்.

அன்றியும் இத்தீபாவளிக் கதை எவ்வளவு பரிகாசத்திற்கு இடமா யிருக்கிறதென்பதையுணரும் பொருட்டு அதனையும் கீழே தருகிறேன்.

தீபாவளியின் கதைச் சுருக்கம்

ஆதிகாலத்தில் நரகாசூரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம். அவன் வராக அவதாரத் திருமாலுக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். அவன் தேவர்களை யெல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம். தேவர்கள் இதைப்பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட்டார்களாம். உடனே திருமால் நரகாசூரனைக் கொல்லுவதாக வாக்களித்தாராம். அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும் பூமி தேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்து நரகாசூரனைக் கொன்று விட்டார்களாம். நரகாசூரன் சாகும்போது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாடவேண்டுமென்று கேட்டுக் கொண்டானாம். கிருஷ்ணன் அப்படியே ஆகட்டுமென்று வாக்களித்தாராம். அதற்காகவேண்டி மக்கள் எல்லோரையும் கொண்டாடும்படி கடவுள் செய்து விட்டாராம். ஆதலால் நாம் கொண்டாடுகிறோமாம்; அல்லது கொண்டாட வேண்டுமாம். இதை நமது பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்ப்போம். முதலாவது இந்தக் கதை உண்மையாய் இருக்கமுடியுமா? "எல்லா உலகங்களையும் உண்டாக்கிய நான்முகனைப் பெற்றவரும், உலகங்களையெல்லாம் காத்து வருபவரும் தேவர்கள் தலைவருமாகிய திருமாலு"க்கும் பூமி "தேவி"க்கும் (எப்படி குழந்தை பிறக்கும்? பூமி "தேவி" என்றால் உலகம் அல்லவா? அப்படித்தான் பிறந்தவன்) அவன் எப்படி அசுரன் ஆனான்? அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படி தீய செயல்களைச் செய்தான்? அப்படித்தான் செய்தாலும் அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான்? அப்படியிருந்தாலும் தானே வந்துதான் கொல்லவேண்டுமோ? மேற்படி நரகாசுரனைக் கொன்றபோது அவன் தாயாகிய பூமிதேவியும் சத்திய பாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை! இவள்தான் உலகத்தை யெல்லாம் காப்பாற்றுகிறாளாம்! உலக மக்கள் செய்யும் பாவங்களை யெல்லாம் பொறுத்துக் கொள்ளுகின்றாளாம்! "பொறுமையில் பூமிதேவிபோல்" என்று உதாரணத்திற்குக் கூட பண்டிதரும் பாமரரும் இந்த "அம்மையாரை" உதாரணமாகக் கூறி வருகின்றனரே! இத்தகைய பூமி தேவியார் தனது மகனைக் கொல்லும்போது தானும் உடனிருக்கவேண்டுமென்று திருமாலைக் கேட்டுக் கொண்டாராம்! என்னே தாயின் கருணை!! தமிழர்களாகிய நம்மையே அசுரர்களென்றும் ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே தேவர்களென்றும் கற்பித்துக் கதை கட்டியிருக்கிற தேவஅசுரப் போராட்டத்தோடு சம்மந்தப்பட்டிருக்கிற இந்தக்கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம்! நாமே சிறந்த நாளாகக் கருதுகிறோம்! அந்தோ என் செய்வது? நம்மை ஏமாற்றி நம்மையே பழிக்கும் பார்ப்பனர் கட்டுக்கதையை உண்மையென நம்பி நாமே கொண்டாடி வீண் செலவு செய்வதென்றால் நமது சுயமரியாதையை என்னென்பது? நமது பகுத்தறிவை என்னென்று சொல்லுவது? புராணங்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மையென்று ஒப்புக்கொண்டு தமது பகுத்தறிவையிழந்து இந்தத் தீபாவளியைக் கொண்டாடும் நமது தமிழ் மக்களின் அறியாமையை என்னென்று கூறுவது? சென்றது போக, இனிமேல் கொண்டாவது தீபாவளியை அர்த்தமற்ற மூடப்பழக்கத்தை நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக்கொள்ளும் செயலைக்குறித்து ஒரு காசாவது, ஒரு நிமிஷ நேரமாவது செலவு செய்ய வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

---------------------- ஈ.வெ.ரா. - "குடி அரசு" கட்டுரை 01.11.1936

22.9.11

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரவேண்டும்-ஏன்?


கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருக!

25-9-2011 ஞாயிறு மாலை சென்னை பெரியார் திடலில், நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில், கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரக் கோரும் - வற்புறுத்தும் மாநாடு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.

நீதியரசர் ஏ.கே. ராஜன் மற்றும் கல்வியாளர்கள் இம் மாநாட்டில் பங்கு ஏற்க உள்ளனர்.

இந்தக் கால கட்டத்தில் மிகவும் முக்கியமானதும், அவசியமானதும் ஆன மாநாடு இது.

மாநிலப் பட்டியலில் இருந்து வந்த கல்வி, நெருக்கடிநிலை காலத்தில் (1976 இல்) காதும் காதும் வைத்தாற்போல மாநில அரசுகளின் கருத்துகளைப் பெறாமலேயே ஒரு சார்பாக பொதுப்பட்டியலுக்கு வலுக் கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டது.

டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அமைந்த அரசியல் சாசனக் குழு - எல்லா வகைகளிலும் விவாதித்தே கல்வி மாநிலப் பட்டியலில்தான் இருந்து தீர வேண்டும் என்று முடிவெடுத்துதான் மாநிலப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அதிகாரத்துக்கு உள்பட்ட துறைகள் 97 உள்ளன. மாநிலப் பட்டியலில் உள்ளவை 66 துறைகள். இரண்டும் இணைந்து (Concurrent List) அதிகாரம் செலுத்தும் துறைகள் 47 என்று இருக்கின்றன.

பொதுப் பட்டியலில் இருக்கக் கூடிய துறைகளில் கூட மத்திய அரசின் சட்டாம்பிள்ளைத்தனம்தான் அதிகம்.

இந்தியா என்பது ஒரு நாடல்ல; பல மாநிலங்களைக் கொண்ட ஒரு துணைக் கண்டம். பல இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட ஒரு துணைக் கண்டத்தில் ஒரே மாதிரியான கல்வி என்பது பொருந்தாத ஒன்றாகும். அதனால்தான் அது மாநிலப் பட்டியலில் வைக்கப்பட்டது.

இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன்சிங் சில நாட்களுக்கு முன் ஓர் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டார்.

கல்வித் துறையில் இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்த வழி வகுக்கும் இந்தியக் கல்வி ஆணையம் ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளிவந்த அன்றைக்கே (18-8-2011) திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அதனைக் கண்டித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.

கல்வி என்பது பல்வேறு மொழிகள், பலவகைக் கலாச்சாரங்கள், நாகரிகங்களைப் பாதுகாக்கும், இளைய தலைமுறையினருக் குச் சொல்லிக் கொடுத்து, பண்பாட்டையும், நாகரிகத்தையும், அவர்களது தனித் தன்மைகளையும் காக்கும் கருவி என்பதை மறந்து விட்டு, இப்படி ஒரு விசித்திர, விபரீத முயற்சியில் ஈடுபடுவது கருவிலேயே சிதைக்கப்பட வேண்டிய கருத்தாகும் என்று அந்த அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார். கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதால்தான் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த போது பாடத்திட்டத்தில் சோதிடத்தைத் திணித்தார்கள், வேத கணிதம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். கடவுள் வாழ்த்தாக சரஸ்வதி வந்தனா என்ற இந்து மதக் கடவுளச்சியைப் பற்றிய பாடலைப் பாட வைப்பதற்குத் திட்டமிட்டார்கள். இப்பொழுது கூட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய கபில்சிபல் என்ன சொல்லுகிறார்? இளங்கலைப் படிப்பு முதல் அனைத்துப் படிப்புக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவதுதான் தனது கனவு என்றும் தெரிவித்துள்ளார். மத்தியில் இந்தப் பொறுப்புக்கு வரும் அமைச்சர்களின் கனவுகளை எல்லாம் நிறைவேற்று வதற்கு நாட்டு மக்கள்தான் கிடைத்தார்களா? இது எவ்வளவு பெரிய விபரீத யோசனை? பொதுப் பட்டியலில் கல்வி இருப்பதால், அதற்குரிய இழப்பை ஏற்கெனவே அனுபவித்து வருகிறோம். மருத்துவக் கல்விக்கு (M.B,B.S.,) சேர்ப்பதற்காக அகில இந்திய தொகுப்புக்கு ஒவ்வொரு மாநிலமும் 15 விழுக்காடு இடங்களைக் கொடுத்து வருகிறது. முதுநிலைப் படிப்புக்கு 50 சதவிகித இடங்களைத் தாரை வார்க்கும் நிலை இருந்து வருகிறதே. மாநில அரசு கடைப்பிடிக்கும் இட ஒதுக்கீடும் பின்பற்றப்படுவதில்லை. தமிழ் நாட்டில் நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு நுழைவுத் தேர்வைத் திணிக்கிறது. இந்தத் தொல்லைகளில் இருந்து விடுபட வேண்டு மானால், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதுதான் சிறந்த வழியாகும்.

அதற்கான மாநாடுதான் வரும் ஞாயிறு அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற உள்ளது.

மாநாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறோம்.
---------------------"விடுதலை” தலையங்கம் 22-9-2011