Search This Blog

27.5.08

ராமாயணம் என்பது சரித்திரமோ வாழ்க்கை வரலாறோ அல்ல. அது இந்து இதிகாசத்தின் ஒரு பகுதி


வராதா? வரக்கூடாதா?
கலைஞர் கடிதம்


(உடன்பிறப்பே; நீண்ட காலமாக எனக்கு ஓர் ஆசை; பிராமணர் ஒருவர் ஆசிரியராக இருக்கும் வகுப்பில், மாணவர்கள் சிலர் அவரைக் கேள்வி கேட்டு; அவர் தனது மொழியில் பதில் அளிக்கும் விதமாக; “ஒரு கேள்வி பதில் தொகுப்பு” எழுதவேண்டும் என்று! அதுதான் இது!)

மாணவன்: அய்யா! இராமர் பாலம் என்றால் என்ன? சேது கால்வாய்த் திட்டத்துக்கு அது எப்படி இடைஞ்சலாகும்?

ஆசிரியர்: இது தெரியாதோ, மண்டூ! மண்டூ! சமுத்திரத்திலே திட்டு திட்டாக மணல் மேடு உருவாகி, அது ரொம்ப நீளத்துக்கு பாலம் போல இருக்குடா மண்டு; அதைத்தான் இராமர் பாலம்னு பெரியவா சொல்றா! அந்தப் பாலம் குறுக்கே இருந்தா சேதுக் கால்வாயிலே கப்பல் எப்படி போக முடியும்? அதனாலதான் அந்த மணலை எல்லாம் அகற்றி, அப்புறம் கப்பலை விடப் போறாளாம்.

மாணவன்: அப்படின்னா . . . ராமர் பாலத்தை இடிச்சே ஆகணுமா?

ஆசிரியர்: அப்படித்தான் - மத்திய சர்க்காரும், மாநில சர்க்காரும் பொறியாளர்களும் சொல்றாங்க!

மாணவன்: ஓ! அதாவது மணல் குவிஞ்சு வரிசையா திட்டுத் திட்டா நீளமா இருக்கு - அதைப் பார்க்க பாலம் மாதிரி இருக்கு-

ஆசிரியர்: ஸ்பஷ்டமா சொன்னேடா - அதுதான் இராமர் பாலம் - சாட்சாத் இராமபிரான் கட்டின பாலம்.
மாணவன்: ஏன்சார்? அந்தப் பாலத்திலே அடிக்கல் நாட்டு விழா கல்லு - பாலத் திறப்பு விழா கல்லு எல்லாம் இப்பவும் இருக்குதா? . . . அதாவது; அனுமார் தலைமையிலே இராமன் திறந்து வச்ச பாலமா?

ஆசிரியர்: ஆமாம் - பதினேழு லட்சம் வருஷத்துக்கு முன்னாடி திறப்பு விழா நடந்த பாலம்! - முப்பத்து முக்கோடித் தேவர்களும் அந்த விழாவுக்கு வந்து மலர் மாரி பொழிந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

மாணவன்: நான் கேள்விப்பட்டேன் சார்; முப்பத்து முக்கோடித் தேவர்களும் அந்தப் பாலத்திலே ஏறி நின்று பூ மாரி பொழிஞ்ச போது - அவ்வளவு ஜனக்கூட்டத்துக்கு கனம் தாங்காம அந்தப் பாலம் இடிஞ்சு விழுந்ததாமே? ஏன் சார்; பாலம் இடிஞ்சா பக்கத்திலே புதுப்பாலம் கட்டுறாங்களே; இப்ப கூடப்பாருங்க; நம்ப சென்னை அடையாறுல; ஒரு பழைய பாலத்தை; கலைஞர் பொதுப்பணித் துறை அமைச்சரா இருந்தப்ப இடிச்சுட்டு புதுசா “திரு வி.க. பாலம்” என்ற ஒரு பாலம் கட்டியிருக்காரே?

ஆசிரியர்: டேய் - குறும்பா! குதர்க்கமெல்லாம் பேசாதே - சேது கால்வாய்த் தோண்டுறேன் - தமிழ்நாட்டை வாணிபத்திலே பொருளாதாரத்திலே வளமாக்கிறேன்னு; வீண் கதை பேசிகிட்டு; ராமனோட சாபத்துக்கு ஆளாகப் போகுது ஒரு கூட்டம்!

மாணவன்: ஆசிரியர் அய்யா; அப்படின்னா சேது திட்டம் வராதுன்னு சொல்லுங்க!

ஆசிரியர்: வராதுன்னு சொல்லலேப்பா; வரக்கூடாதுன்னு சொல்றேன் - சேலம் இரும்பாலைத் திட்டம்னா இவாளே கொண்டு வர்ரா - நெய்வேலி இரண்டாவது சுரங்கமும் இவா கோரிக்கையேதான் - தூத்துக்குடி உரத் தொழிற்சாலைக்கும் இவாளே உரிமை கொண்டாடுரா - வெளிநாட்டு முதலீடு களுக்கும் இவாளே காரணம்கிரா! செம்மொழின்னா இவாதான் - இப்ப சேது கால்வாயும் சேந்துட்டா தலை கீழா நிப்பா! கையிலே புடிக்க முடியாது. - அதனாலதான் இராமர் பாலமோ - இராவணன் பாலமோ ஏதோ ஒன்னைச் சொல்லி; தடுத்து நிறுத்தறது நம்மவா தர்மம்!

மாணவன்: ராமாயணம் என்பது உண்மையில் நடந்ததுதானே சார்?

ஆசிரியர்: ஏண்டா, அம்பீ! நம்ப இராஜாஜி எழுதிய புத்தகத்துக்கு அவரே முன்னுரை எழுதும்போது - அதாவது ராமாயணம் என்பது சரித்திரமோ வாழ்க்கை வரலாறோ அல்ல. அது இந்து இதிகாசத்தின் ஒரு பகுதி என்று சொல்லியிருக்கிறார்னு நான் போன வாரம் சொல்லிக் கொடுத்ததை மறந்துட்டியா?

மாணவன்: அய்யா; திராவிடர் கழகத்தினர் சார்பில் தயாரிக்கப்பட்ட “பெரியார்” திரைப்படத்துல கூட இதப் பற்றி ஒரு காட்சி வருது அய்யா?

ஆசிரியர்: ஆமாம், ஆமாம்! சரியாக கவனிச்சிருக்கே, ராமர் பாலம் கட்ட அணில் உதவி செய்தது, அத ராமர் பாராட்டி தடவிக் கொடுத்ததாலத்தான் அணில் முதுகிலே மூன்று கோடு இருக்கிறதா ஒரு கதை சொல்லிக்கிட்டிருந்தோம். அதைக் கெடுக்கிற மாதிரி, அந்தப் படத்துலே, சீதை முதுகிலே ராமர் கைபடவே இல்லையான்னு ஒரு கேள்வி கேட்டு எல்லோரையும் சிந்திக்க வச்சுட்டா!

மாணவன்: ராமாயணத்தைப் பத்தி நேருஜி அவர்களே கூட அவருடைய புத்தகத்திலே ஏதோ எழுதினதா சொல்வாங்களே அய்யா?

ஆசிரியர்: “ராமாயணம் என்பது ஒரு காவியமல்ல. அது திராவிடர்களுக்கும் ஆரியர்களுக்கும் இடையே நடந்த போராட்டத்தைப் பற்றி மிகைப்படுத்தி, பல அறிவிற்குப் பொருந்தாத கதைகளைப் புகுத்தி எழுதப்பட்ட ஒரு கற்பனைக் கதை” என்று நேருஜி அவர்கள் தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களிலே குறிப்பிட்டதாக அவருடைய “டி°கவரி ஆஃப் இண்டியா’’ புத்தகத்திலே இருப்பது உண்மைதான்.

மாணவன்: சார், இன்னைக்கு “தமிழ் ஓசை” பத்திரிகையிலே கூட “ராமர் பாலம்” பற்றி அ.முதுகுன்றன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறாரய்யா?

ஆசிரியர்: சமத்து, அதக் கூடப் படிச்சிருக்கியே? அந்தக் கட்டுரையாளர், “இராமர் பாலம்” என்பது மணல் கயிறு என்றே வர்ணித்திருக்கிறாரே? சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்ப வர்கள் மக்களுக்காகக் கடவுளா? கடவுளுக்காக மக்களா என்று எண்ணிப் பார்க்க வேண்டும் என்று கூட எழுதியிருக்கிறாரே! மேலும் அந்தக் கட்டுரையிலே “வேதங்களோ, உபநிஷதங்களோ இராமவதாரத்தைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. மகாவிஷ்ணு ராமனாகப் பிறந்தது உண்மை என்றால், மகாவீரரும், புத்தரும் தோன்றி நடமாடி யிருக்க முடியாது” என்றே குறிப்பிட்டிருக்காரு! நம்மவா சொல்றதுக்கு எதிர்ப்படையா வந்ததையெல்லாம் நீ படிச்சிருக்கே!

மாணவன்: அய்யா! நீங்க சொன்ன மணல் திட்டுகளைப் பற்றி நேற்று கலைஞர் கருணாநிதி எழுதுன ஒரு கேள்வி பதிலிலே கூட கடலியலாளர் ஒருவர் எழுதியதைச் சுட்டிக் காட்டி, தெற்கே உள்ள மணல் திட்டுக்களை ராமர் கட்டியிருந்தா, வடக்கே உள்ள மணல் திட்டுகளை யார் கட்டியது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அய்யா?

ஆசிரியர்: டேய்! நீ வேண்டும்னே இந்தக் கேள்வியையெல்லாம் யாரோ சொல்லிக் கேக்குறியா? முதல்லே சரித்திர ரீதியாக கேட்டே, பிறகு இதிகாச புராண ரீதியாக கேட்டே, இப்ப என்னடான்னா கடல் விஞ்ஞான ரீதியா கேக்குறியே?

மாணவன்: சார், சார், தப்பா நினைச்சுக்காதீங்க! வகுப்புல உள்ள ஒரு சில பசங்க இது போல கேக்குற கேள்விகளுக்கு என்னால பதில் சொல்ல முடியாமத்தான் உங்களைக் கேட்டு தெரிஞ்சுக்க முயற்சி செய்தேன், ஆனால் நீங்க கூட அவங்களுக்கு ஆதரவாதானே எல்லாத்தையும் சொல்றீங்க!

ஆசிரியர்: ஆமாண்டா சாமி! இன்னும் சொல்லப்போனா, நம்மவா ஆட்சியிலே, வாஜ்பாயி பிரதமரா இருந்தபோது சேது கால்வாய்த் திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறோம். அதைத்தான் நாடாளுமன்றத்திலேயே அந்தத் துறை அமைச்சர் ஆதாரபூர்வமா புட்டு புட்டு வச்சிட்டான்!

மாணவன்: சார்! சார்! அப்படின்னா ராமர் பாலம் என்கிறது ஒரு தடைக்கல்; அவ்வளவுதானா?

ஆசிரியர்: எத்தனை தடைக்கல் போட்டா என்ன! அந்த மத்ய அமைச்சர் பாலு கேக்கப் போறானா? - மகா கெட்டிக்காரனாச்சே - மறுப்புக்கு மேலே மறுப்பு சொல்லி - இந்த மாதிரி திட்டங்களையெல்லாம் சாதிக்கிறவனாச்சே . . .

மாணவன்: ஆசிரியரய்யா அப்படின்னா, நான் சொல்றதை கேளுங்க . .

ஆசிரியர்: என்ன?

மாணவன்: எப்படியும் சேது கால்வாய் வரப்போகுது - கப்பல் அந்த வழியாக போகப் போகுது - அதனால் இப்பவே அவங்களோட நாமும் சேர்ந்து கூட்டத்தோடு கோவிந்தா போட்டுட்டு போகலாமே . . .

ஆசிரியர்: ஆமாண்டா - அதுவும் சரிதான் - சேதுக்கால்வாய்த் திட்டம்; நிறைவேற்றியே தீருவாம்.

(எல்லோரும்; “நிறைவேற்றியே தீருவோம்” என்று முழக்கமிடுதல்)



அன்புள்ள
மு.க

சோவுக்குத்தான் ஏகடியம் பேச - எழுதத் தெரியுமா?


பன்றி அய்யர்!

"அவ்வப்போது "ராமன்" குடிகாரன்; வால்மீகியே சொன்னார் - ராமன் குடிகாரன் என்று; துளசிதாஸர் ராமாயணத்தில் சீதைக்கு, ராமன் சகோதரன்..." என்றெல்லாம் புரட்சிகரமான ராமாயண உபந்யாஸம் நடத்தவேண்டும்; ஹிந்து மத நம்பிக்கைகளை இழித்துப் பேசவேண்டும்" கலைஞர் இவ்வாறெல்லாம் பேசுவாராம்!

- தி.மு.க. ஆட்சியையும், கலைஞரையும் வசைபாடு வதற்கென்றே இதழ் நடத்திக் கொண்டு இருக்கிற திருவாளர் சோ ராமசாமி ஏடு தலையங்கத்தில் இவ்வாறும் ஒரு செருகல்.
(துக்ளக், 28.5.2008).

இந்தியாவிலே ஒரு இராமாயணம் இருப்பதுபோலவும், வேறு வேறு மொழிகளில் உள்ள இராமாயணங்களில் இராமனுக்கும் - சீதைக்கும் வேறு வேறு உறவுகள் இல் லாததுபோலவும், கலைஞர் ஏதோ கற்பனையில் அவ்வாறு கூறுவதுபோலவும், சோ பார்ப்பனர் சித்தரிக்க முயல்வது அவர் அணிந்துள்ள பூணூலுக்குத் தகுதியாக இருக்கலாம். ஆனால், கலைஞர் சொன்னதற்கு ஆதாரம் நிச்சயம் உண்டு. அவாள் தலைவர் ஆச்சாரியார் (சி.ஆர்.) எழுதிய சக்ரவர்த்தி திருமகனுக்கே அந்தக் காலகட்டத்திலேயே சக்ரவர்த்தியின் திருமகன் என்று முரசொலியில் ஆதாரபூர்வமாக மறுப்பு எழுதினார் கலைஞர் - பிறகு நூலாகவும் வெளி வந்துள்ளது.

(இதுவரை எந்தக் கொம்பராலும் மறுப்பு எழுதிட முடிய வில்லை).


வெகுதூரம் போவானேன்? அவாள் வட்டாரத்தைச் சேர்ந்த மனோகர் நாடகமாக நடித்த இலங் கேஸ்வரனில் கூட சீதை ராவணனின் மகள் தானே - மறுக்க முடியுமா? ராமன் குடித்த மதுவை தேன் என்று திரிபுவாதம் செய்து ராமனைக் காப்பாற்ற சோ போன்ற வக்கீல்கள் புறப்பட்டு இருக்கிறார்கள்.

புகையிலை - சுருட்டுக் குடிக்கும் பிராமணர்கள் அடுத்த பிறவியில் பன்றிகளாகப் பிறப்பார்கள் என்று பத்மபுராணம் கூறுகிறது. அப்படியென்றால், இப் பொழுது சாக்கடைகளில் படுத்துப் புரண்டு கொண்டு இருக்கும் பன்றிகள் எல்லாம் போன ஜென்மத்தில் இத்தகைய லாகிரிப் பொருள் களைப் பயன்படுத்திய பார்ப்பனர் என்று நாம் எழுதினால், அது எப்படி கேலியாகும்? இனிமேல் இந்தப் பன்றி களைப் பார்த்து வாருமய்யா, வாஞ்சி நாதப்பட்டரே! சாப்பீட்டிரா சத்திய மூர்த்தி அய்யரே? சுத்தப்படுத்தியாயிற்றா சு.சாமி குருக்களே? கோயில் பக்கம் போனீரா கோவிந்த தீட்சதரே! என்று கூறினால், அதில் என்ன தப்பு?

சோவுக்குத்தான் ஏகடியம் பேச - எழுதத் தெரியுமா?

-------------- 27-5-2008 "விடுதலை" நாளிதழில் மயிலாடன் அவர்கள் எழுதியது.

ஆத்மா நம்பிக்கை ஒழிந்தால் கடவுள் நம்பிக்கை ஒழியும்!





இயற்கையெய்தல் என்கின்றதன் தத்துவம் அதாவது மனிதனின் அவயங்கள் தத்தமது வேலைகளைச் செய்யும் சக்தியை இழப்பதோடு, மனிதனின் காற்றை உள்ளே வாங்கி வெளியே விடக்கூடிய காற்று வாங்கிப் பொறியின் இயக்கம் நின்று போய்விடுகிறபோதுதான் மனிதன் இயற்கையெய்தினான் அல்லது முடிவெய்தினான், செத்துப் போய்விட்டான் என்று சொல்லப்படுகின்றது. இது மனிதனுக்கு மட்டுமல்லாமல், மிருகங்கள் முதல் புழு, பூச்சி, கிருமி, புல் பூண்டு, தாவரங்கள் முதலியனவின் தன்மையும் இந்தப்படியேதான் இருக்கின்றன. என்னவெனில், இயற்கையெய்துதல் என்பதில் பொது விதியாக இருக்கின்றது. இயற்கையெய்துதல் என்பதன் பொருள் என்னவென்றால், காணப்படும் பொருள், ஜீவன் உள்பட எல்லாமே தோன்றுதலும், தோன்றியவை யாவும் மறைவதுமான குணத்தை இயற்கையாகக் கொண்டவவை ஆனதால் மாற்றமடைந்ததையும், மறைந்ததையும் இயற்கை எய்திற்று என்கின்றோம். மனிதன் இயற்கையெய்திய பின்னர் அவனுடைய ஆத்மா இங்கேயே உலவி வருகிறது அல்லது அவரவர்கள் செய்த வினைப்பயனின்படி பரலோகத்தில் அவையவை பெறக்கூடிய இடங்களைப் பெற்று, அதாவது மோட்ச நரகங்களை அடைந்து விடுகின்றன அல்லது பிதுர்லோகத்தில் இருக்கின்றது அல்லது மறுஜன்மம் அடைந்துவிட்டது அல்லது பிசாசாக ஆகிவிட்டது என்பதெல்லாம் அசல் முட்டாள்தனமாகும். உலகத்தில் ஏறக்குறைய எல்லா மதத்தார்களும் ஆஸ்திகர்களும், ஆத்மா என்கின்ற ஒரு வஸ்து உண்டு என்றும், அது சூட்சுமத் தன்மை, அதாவது கண்களுக்குத் தென்படாதது என்றும், மனிதன் செத்த பிறகு, மனிதன் ஆத்மாவோடு இருந்த காலத்தில் அந்த சரீரத்தால் செய்யப்பட்ட காரியங்களின் பலாபலன்களை அது அனுபவிக்கிறது என்றும் கருதுகிறார்கள்.

உலகத்திலே ஆத்மா என்கின்றதைப் பற்றி நம்பிக்கையில்லாதவர்கள் பவுத்தவர்கள்தான். அவர்கள் மதத்தில்தான் ஆத்மா என்கிற ஒன்று இல்லை. மனிதன் இறந்தால் அத்தோடு அந்த மனித சம்பந்தமான யாவும் தீர்ந்தது என்றே கருத்து இருந்து வருகிறது.

இந்த பவுத்தர்கள் இன்று உலகில் 60, 70 கோடிப் பேர்கள் இருக்கிறார்கள். ஒரு கடிகாரத்திற்கு அதன் சாவியின் அதாவது விசைத் தகட்டின் விளைவு சக்தி இருக்கும்வரையிலே கடிகாரம் இயங்குகிறது. மணி காட்டுகிறது. அந்த சாவியின் சக்தி நின்றவுடனே கடிகாரமும் நின்றுவிடுகிறது. அப்போது அந்த கடிகாரத்தின் ஆத்மா மேலே போயிற்றென்றா சொல்ல முடியும்? முடியாதே. கடிகாரத்தின் விசை தீர்ந்து அசைவு நின்றுவிட்டது என்பதுதானே உண்மை. அதுபோலத்தானே மனிதர்களின் அசைவு சக்தி, இயற்கைச் சக்தி அற்றுப் போனால், செத்துப் போனால் வெறும் பிணம் ஆகிவிட்டான் என்கிறோம்.

இந்து மதத்தில் மனிதரின் சாவைப்பற்றியும், ஆத்மாவின் தன்மையைப் பற்றியும் ஏராளமான புளுகு மூட்டை உண்டு. இவையெல்லாம் ஒரு கூட்டத்தார் நோகாமல் பாடுபடாமல் வாழ்வதற்காக, நம்முடைய முட்டாள்தனத்தையே கைமுதலாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட சங்கதிகளாகும். அதை கொஞ்சங்கூட சிந்தித்துப் பார்க்காமல், பகுத்தறிவு கொண்டு யோசித்துப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றி வருகிறார்கள்.

ஆத்மா, மோட்சம், நரகம் என்கின்ற சொற்கள் தமிழ்ச் சொற்களே அல்ல. தமிழிலும் அவற்றுக்கு ஏற்ற சொற்களே கிடையாது. சாதாரணமாக இந்து மதத்திலே ஆத்மாவைப் பற்றி பலவித கருத்துகள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று என்னவென்றால், ஒரு ஆத்மாவானது இன்னொரு உடலில் போய் ஒட்டிக்கொண்ட பிறகுதான் ஒரு உடலை விடுகிறது என்பது ஆகும். அப்படி இருக்கும்போது, இறந்தவர்களுக்கு ஆக நாம் செய்யும் திதி, திவசம், சடங்கு எதற்கு ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். இரண்டாவதாக, இறந்த பின் உடனேயே அவரவர்களின் வினைப் பயனுக்கேற்ற மாதிரியில் மறுபிறவி எடுத்து விடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. அப்படிப் பார்த்தாலும் உடனே பிறவி எடுத்து இந்த லோகத்துக்கு வந்துவிடுகின்ற ஆத்மாவுக்கு நம்முடைய திதியைக் கொண்டு என்ன பலன் ஏற்படப் போகிறது? மற்றொரு கொள்கை என்னவென்றால், செத்தவன் ஆத்மா உடனே மோட்சத்திற்கோ, நரகத்திற்கோ போய் விடுகிறது என்று சொல்லப்படுகிறது. அந்தப்படி நரகத்துக்கோ, மோட்சத்திற்கோ போய்விட்ட ஆத்மாவுக்கு நாம் செய்வது, கொடுப்பது எப்படி பயன்படும்? பார்ப்பானுக்குச் சலிக்காமல் கொடுப்பதுமாகிய காரியத்தைச் செய்தால், மேலுலகத்தில் இருக்கும், இங்கிருந்து போன உயிர்க்கு நல்ல கதி கிடைக்கும் என்றால், இங்கே இருக்கிற எல்லோரும் செய்கிற அயோக்கியத்தனங்களையெல்லாம் பித்தலாட்டங்களை எல்லாம் செய்துவிட்டு, தான் இறந்தபின் தனக்காக தானம் முதலியவை ஏராளமாக பார்ப்பானுக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டு அயோக்கியத்தனங்களை கொஞ்சங்கூட அஞ்சாமல் செய்யக்கூடும் அல்லவா? அப்படியானால், கடவுள் ஒரு ஏமாந்த முட்டாளா? நாம் இங்கே பார்ப்பானுக்கு கொட்டியழுதால் நம்முடைய பிதிர்கள் நலமுறை முடியுமா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆத்மா என்கிற நம்பிக்கை இருப்பதனால்தான் கடவுள், மோட்ச நரகம், பேய், பிசாசு முதலிய நம்பிக்கைகள் இருக்கின்றன. போகிற உலகிற்கு புண்ணியம் கொண்டு செல்லவேண்டும் என்பதற்குத்தான் மனிதன் கடவுளை வணங்குகிறான். ஆத்மா என்கிற நம்பிக்கை இருப்பதனால்தான் அந்த ஆத்மா செய்திருக்கிற காரியங்களுக்கு ஏற்ற முறையில் அவை வாழ இரு லோகங்கள் கற்பிக்கப்பட்டும், அந்தந்த ஆத்மாக்களுக்கு தீர்ப்புக் கூறும் கடவுளர்களும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆத்மா என்கிற நம்பிக்கை இல்லாவிட்டால், சாதாரணமாகவே கடவுள் நம்பிக்கை எடுபட்டுப் போய்விடும்; மன்னிப்புப் பெறலாம் என்கின்ற நம்பிக்கையும் போய்விடும். மனிதர்கள் யாவரும் யோக்கியமாய் நடப்பார்கள். எவரும் பணம் சேர்க்கமாட்டார்கள்.

------ தந்தைபெரியார் - "விடுதலை" 7.9.1950

ஆத்மா - மோட்சம் - பாவமன்னிப்பு யாவும் மதியற்ற கற்பனைகளே!


ஆத்மா என்று ஒன்று இருப்பதற்கே காரணம் இல்லை. கொஞ்சமும் பகுத்தறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமற்றதாகும். ஆத்மா என்ற சொல்லை எடுத்துக் கொண்டால் அப்படிப் பட்ட சொல் தமிழில் கிடையாது. அதற்கேற்ற சரியான பொருள் கொண்ட வார்த்தைகூட தமிழில் இல்லை. “ஆத்மா’ என்பது வடமொழிச் சொல்; வடமொழியைத் தவிர வேறு எந்த மொழியிலும் ஆத்மா என்பதற்குச் சொல்லே கிடையாது. எனவே பார்ப்பனர்களால் புகுத்தப்பட்ட சொல் என்பதற்குத் தக்க சான்றாகிவிடுகிறது.

அப்படிப்பட்ட பெயர் நம்மிடையில் புகுத்தப்பட்டதன் காரணம் அதைக் கொண்டு ஒருவிதத்தில் பார்ப்பனர் நன்மை அடைவதற்கேயாகும். எத்தனையோ முறைகளில் நம் மக்களை மடையர்களாக்கி அறிவற்றவர்களாக்கிப் பிடுங்கித் தின்னும் வழிகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால் இன்றைக்கும் எத்தனையோ முட்டாள்கள் இப்படிப் பார்ப்பனன் பேச்சைக் கேட்டுக் கருமாதி செய்கின்றனர். திவசம் செய்கின்றனர். இவற்றையெல்லாம் கொஞ்சம்கூட சிந்திப்பதே கிடையாது.

மனித வாழ்வின் பெருமை எது?

மனிதன் பொய் - புரட்டு செய்யாமல் இருக்க வேண்டியது அவசியம். மனித சமுதாயத்தில் ஒற்றுமையான வாழ்க்கை வாழ மனிதனுக்குச் சில நற்குணங்கள் தேவை தான். மற்ற ஜீவனைப் போன்று மனிதன் தனித்து வாழ முடியாதவன். சமுதாய வாழ்க்கையை அனுசரித்து வாழவேண்டியது அவசியமாகிறது. சமுதாயத்திற்குப் புறம்பாகத் தனிப்பட்ட ஒருவன் மட்டும் நடப்பானாகில் அவனை ஏனையோர் சம்மதித்து சமுதாயத்தில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஒருவன் முழு நிர்வாணமாக (அம்மணமாக) இங்கு இருப்பானாகில் அவன் நிலையைக் கண்ட மற்றவர்கள் எல்லாரும் ஒன்றுபட்டு அதைக் கண்டிப்பார்கள். திருந்தவில்லையேல் அடித்துத் துரத்துவார்கள்.

அம்மனிதன் தான் நிர்வாணமாகவே இருக்க வேண்டும் என்று விரும்புவானாகில் அவன் மனித சமுதாயத்துடன் ஒன்றுபட்டு இருக்க முடியாது. மனிதனே சஞ்சரிக்காத மறைவிடங்களில் இருக்கலாம். மனிதன் அல்லாத மற்ற ஜீவராசிகள் வாழும் காடுகளில் இருக்கலாம். எனவே மனிதன் சமுதாய வாழ்க்கையை விரும்புகிறான். அதை ஒட்டியே மனிதர்கள் யாவரும் வாழ்வது இயற்கையாகி விட்டது.

மேலும் மனிதனுடைய செய்கைகள் அத்தனையும் சமுதாய வாழ்வை அடிப்படையாகக் கொண்டனவேயாகும். அதற்கென்று தான் அவன் மேற்கொள்ளுகிற ஒவ்வொன்றும் தானாகவே போய்ச் சேருகிறது. இவனுடைய மனதுக்குள் தனக்கு என்று நினைத்துக் கொண்டு செய்தாலும் அது மற்றவர்க்கும்தான் போய்ச் சேருகிறது. சட்டி, பானை செய்கிற குயவனின் பணி சமுதாய மக்களுக்கு எல்லாம் உபயோகப்படுகிறது. வீடு கட்டுபவன் சமுதாயத்திற்குப் பயன்படுகிறான். கக்கூஸ் (மலக் கழிவு) எடுப்பவனால் சமுதாயத்திற்கு நல்ல உதவி கிடைக்கிறது. இப்படி ஒருவன் முயற்சியின் பலன் மற்றவன் அடைகிறான். பலவிதத்தில் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வதனால் மனிதர்கள் கூட்டு வாழ்க்கையைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சமுதாயத்தில் ஒருவன் பொய், புரட்டு சொல்லாமல் இருக்க வேண்டியது அவசியம். நல்லொழுக்கத்துடனும், குற்றம் ஒன்றும் செய்யாமலும் இருப்பது அவசியம். அப்படிக் குற்றம் ஏதும் செய்யாமல் இருக்கும்படி பார்க்கவே அரசன் என்ற பெயரால் ஒரு தலைவனை உண்டாக்கினார்கள். அவனுக்குச் சகல உரிமைகளையும் கொடுத்துக் குற்றம் செய்தவனைத் தண்டிக்கும்படிச் செய்தார்கள். அரசனுக்குத் தெரியாமல் செய்யும் குற்றங்களைத் தண்டிக்க யாராவது வேண்டும் என்பதற்காகக் கடவுள் என்ற சாதனத்தை உண்டாக்கினார்கள். அதனால் எந்தக் குற்றம் செய்தாலும் கடவுள் பார்த்துக் கொண்டே இருந்து தண்டிப்பார் என்று அதற்கும் கட்டுக் கதைகளை ஏற்படுத்தினர். இப்படி உண்டாக்கப்பட்டவைகளுக்கு மனிதன் அடங்கி நடந்து வந்தான்.

ஆனால், இப்போது இவை இரண்டினுடைய அயோக்கியத்தன்மைகளும் வெளிப்பட்டு அவற்றிற்குள்ள மதிப்பும் போய்விட்டது. இராஜாவைப் போ வெளியே என்றோம். இராஜாவும் தனக்கு இவ்வளவுதான் மதிப்பு; இனியும் இருப்பது சரியில்லை என்று திரும்பிப் போய்விட்டான். அது மட்டுமல்ல. இந்நாட்டிலே 600க்கு மேற்பட்ட குட்டி இராஜாக்கள் எல்லாம் மூலைக்கு மூலை இருந்தனர். அவர்களும் இப்போது சொன்னதைக் கேட்டுக் கொண்டு கொடுப்பதைக் கொடு; சோற்றுக்கு மட்டும் கொடுத்தால் போதும் என்று கெஞ்சிக் கேட்டு வாங்கும் நிலை வந்துவிட்டது. இப்படி ராஜாக்கள் எல்லாம் சாதாரண (சீட்டுக்கட்டு) இஸ்பேட் இராஜாக்களாக ஆகிவிட்டனர்.

அது மட்டுமில்லை கடவுளின் வண்டவாளம் அதற்குமேல் வெளியாகி விட்டது. கடவுளையே உருட்டித்தள்ளி உடைத்து விட்டுப் போய்விடுகிறான்! கடவுளுடைய பெண்டாட்டியை அம்மணமாக விட்டு சேலையை அவிழ்த்துக் கொண்டு போய்விடுகிறான். சாமியின் அங்கங்களையே உடைத்துவிட்டுப் போய்விடுகிறான். கடவுளையே உடைத்துச் சுக்கு நூறாக்குகின்றனர். இதுவரை எந்தச் சாமியும் ஒருவனைக் கூட வாய் திறந்து கேட்டதே இல்லை.

இப்படிச் சாமியின் யோக்கியதை வெறும் கருங்கல் என்று வெளிப்படையாகி விட்டது. சாமியின் யோக்கியதை வெளிப்பட்டது மட்டுமன்றி சாமியின் பேரைக் கூறிக் கொண்டு முதல் நம்பர் அயோக்கியன் எல்லாம் வாழ முடிகிறது. அது மட்டுமல்ல, நல்லவர்களை எல்லாம் பெரும் அயோக்கியர்களாக்குகிறது கடவுள். நல்ல காரியத்திற்கென்று உண்டாக்கப்பட்டது போய், சும்மா இருந்தாலும் பாதகம் இல்லை. அந்தக் கடவுளால் மனிதனிடம் அயோக்கியத்தனமும், பித்தலாட்டமும் தான் வளர முடிகிறது. அப்படிப்பட்ட கடவுள் நமக்கு எதற்கு? அவற்றால் மென்மேலும் கெடுதல்தான் விளையுமே அன்றி நன்மை ஒன்றும் ஏற்பட வழியே கிடையாது.

எனவே எப்படி அரசன் ஆட்சியை விட்டுப் போனது போல் கடவுள்களும் வந்த வழியே போகிறதுதான் முறையாகும். நம் முடைய நாட்டு எல்லைக்குள் ஒரு குட்டிக் கடவுள்கூட இருக்கக்கூடாது. கடவுளைக் கூறிப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஒரு பார்ப்பனக் குஞ்சுகூட இருக்கவும் கூடாது. இவை எல்லாம் நம் மக்கள் காட்டுமிராண்டிகளாக இருந்து கொண்டு எதையும் சிந்திக்கும் அறிவில்லாது இருந்த காலத்தில் தேவைப்பட்டனர். இப்போது இவை தேவையற்றவையாகும். ஆனால் இந்த 1956ஆம் ஆண்டிலும் அவைகள் இருந்து கொண்டிருக்கின்றன என்றால் அது நம்முடைய முட்டாள்தனத்தைக் குறிக்கின்றது என்றே கூற வேண்டும்.

மற்றும் மனிதன் செய்கிற பாவ புண்ணியம் என்பதைப் பற்றிச் சிந்தித்தால் அதனுடைய யோக்கியதையும் வெளிப்படும். புண்ணியம் செய்தவன்தான் மோட்சமடைய முடியும். பாவம் செய்தவன் மோட்சமடைய முடியாது. ஆனால் பார்ப்பனனுக்குத் தானதர்மம் செய்வதால் அதுவே பெரிய புண்ணியம் என்று நம்பும்படி செய்துவிட்டனர்.

இப்படி இந்து மதத்தில் மட்டும் இல்லை. கிறிஸ்தவ மதத்திலும் இருக்கிறது. பாதிரிகள் கூறுகிறபடி கேட்டால் பாவம் மறைந்து போகுமாம். அதாவது பாவ மன்னிப்புச் சீட்டு வாங்குதல் என்ற முறை ஒன்று உண்டு. அதன்படி பாதிரியிடம் அதற்கான கட்டணத்தைச் செலுத்தி பாவ மன்னிப்புச் சீட்டு வாங்கினால் பாவம் போய்விட்டதாகப் பொருள். இப்படியே பாதிரி பாமர மக்களிடம் பொருளை வாங்கிக் கொண்டு, நான் உங்கள் பாவத்தைப் போக்க மன்னிப்புச் சீட்டுக்கள் கொடுக்கின்றேன் என்று மக்களிடம் பணம் சுரண்டிக் கொண்டு வந்தான். இதனால் நாட்டில் நல்லவன்கூட அயோக்கியத்தனம் செய்துவிட்டு மன்னிப்புச் சீட்டு வாங்கினான். எந்தவிதமான அயோக்கியத்தனம் பொய், புரட்டு, கொலை பாதகம் செய்துவிட்டு சுலபமாக மன்னிப்புச் சீட்டு வாங்குவதன் மூலம் அப்படிச் செய்த பித்தலாட்டங்களின் கொடுமையெல்லாம் மறைந்து போய்விடுகின்றனவாம்! இந்தத் துணிவின் பேரில் எவனும் சர்வசாதாரணமாகக் கெட்டுப் போக முடிகிறது.

இதைக் கண்ட ஓர் ஆராய்ச்சிக்காரன் அந்தப் பாதிரிக்குப் புத்தி கற்பிக்க முற்பட்டான். அவனும் இரண்டொரு நாள் பாவமன்னிப்புச் சீட்டு வாங்கி வந்தான். வழக்கம் போல் வாங்கி வந்து ஒரு நாள் பாதிரியிடம் இதுவரை செய்த பாவத்துக்கு மட்டும்தான் மன்னிப்புச் சீட்டுக் கொடுப்பீர்களா? என்று கேட்டான். அதற்குப் பாதிரி செய்த பாவம், செய்கிற பாவம், செய்யப்போகிறபாவம் இப்படி முக்காலத்தில் செய்யப்படும் பாவம் அனைத்துக்கும் மன்னிப்புச் சீட்டுக் கொடுப்போம்; அதுவும் பாவத்தின் தரம் இவ்வளவு என்பது மட்டும் இல்லை. திருடினாலும், கொள்ளையடித்தாலும், விபச்சாரம் செய்தாலும், இன்னும் எப்படிப்பட்ட பாதகத் தொழில் செய்தாலும், அவைகள் அத்தனைக்கும் மன்னிப்புச் சீட்டு உண்டு என்றார். பாதிரிக்குக் காசு வேண்டும். இப்படிக் கூறிவிட்டான்.

அப்படியானால் நான் ஒரு இடத்தில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அப்படிக் கொள்ளையடிப்பதால் உண்டாகும் பாவத்திற்கு மன்னிப்புச் சீட்டு முன்பே கொடுக்க வேண்டுகிறேன் என்று அவன் கேட்டான். பாதிரியும் சரியென்று அதற்கென்று கட்டணத் தொகையைக் கொஞ்சம் அதிகமாகவே வாங்கிக் கொண்டு மன்னிப்புச் சீட்டு கொடுத்து விட்டான். மறுநாள் இரவு அந்த மன்னிப்புச் சீட்டுடன் பாதிரியின் வீட்டிலேயே புகுந்து கொள்ளையடிக்கச் சென்றான். பாதிரியைக் கட்டி இழுத்து உதைத்து நீ சேர்த்து வைத்த பொருளை எல்லாம் கொடு என்று கேட்டு துன்புறுத்தவும் அதற்குப் பாதிரி அடப்பாவி! மாபாதகம் செய்கிறாய்! நீ செய்யும் தொழில் மிகப் பாவம் நிறைந்தது! இதற்கு நரக வேதனை தான் அடைய வேண்டும் என்று ஏதேதோ தான் உதைப்பட்ட வேகத்தில் உளறிக் கொட்டினான். ஆனால் கொள்ளையடிக்க வந்தவன், பாதிரி சாமிகளே! நான் இதற்குமுன்பே பாவ மன்னிப்புச் சீட்டு வாங்கி வைத்திருக்கிறேன்; இதோ பாரும், என்று பாக்கெட்டில் (சட்டைப் பையில்) இருந்த சீட்டை எடுத்துக் காட்டினான்.

உடனே பாதிரி என்ன முட்டாள்தனமான காரியத்தைச் சிறிதும் யோசிக்காமல் செய்து விட்டோம்! நம்முடைய பித்தலாட்ட மூட்டையை அவிழ்த்துக் கொட்டி விட்டானே! இச்செய்தி எங்கிலும் பரவினால் நம் கதி என்ன ஆகும்? என்று பயந்து அந்தக் கொள்ளைக்காரனிடம் நீ இரவில் கொள்ளையடிக்க வந்தாய்! நான் பகலில் கொள்ளையடிக்கிறேன். இதுதான் வித்தியாசம் என்று கூறி நாம் இருவரும் நண்பர்களாக வேண்டும்; இனி நான் இத் தொழிலை விட்டு விடுகிறேன். என்னை மன்னித்துக்கொள் என்று வேண்டினானாம்.

அப்படிப் பாதிரிகளின் பித்தலாட்டம் வெளுத்தது
. அது முதல் அப்படிப்பட்ட பாவ மன்னிப்புச் சீட்டைக் கொண்டே கிருஸ்தவ மதத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. ஒருசிலர் திருந்தினார்கள். மற்றவர்கள் இன்னமும் முட்டாள்களாக இருக்கின்றனர். அதைப் போன்றுதான் இந்து மதத்தில் பாவம் செய்த மனிதனை மேல் உலகில் தண்டிக்கிறார்கள். கடவுள் செய்யும் வேலையை நம்முடைய போலீஸ்காரர்கள் (காவல்துறையினர்) செய்யும் வேலைக்கு ஒப்பிட்டுக் கூறலாம். யாராவது ஒருவன் சிறுநீர் கழிக்க உட்காருகிறான் என்பதைப் போலீஸ்காரன் பார்த்துக் கொண்டு சும்மா இருந்து விடுவான்.

உட்கார்ந்தவன் காரியத்தை முடித்துக் கொண்டு சும்மா இருந்துவிடுவான். உட்கார்ந்தவன் காரியத்தை முடித்துக் கொண்டு எழுந்திருக்கும் சமயம் பார்த்துப் போய் பிடித்துக் கொள்வான். முன்னாலேயே பிடித்துக் கொண்டால், நான் உட்காரப் போனேன்; ஆனால் சிறுநீர் கழிக்கவில்லையே என்று வழக்குப் பேசுவான் அல்லவா? அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. ஆளை வசமாகப் பிடித்துக் கொண்டால்தான் காரியத்தைச் சாதிக்கலாம் என்பதற்காக இப்படிச் செய்வதுண்டு. இவற்றுக்கெல்லாம் காரணம் ஏதாவது அன்றைக்குக் காஃபி சாப்பிட கிடைக்காதா என்பதற்கேயாகும். அதற்குக் குற்றம் செய்தவனும் கூடியவரை சமாளித்துப் பார்த்துவிட்டு வம்பில் மாட்டிக் கொள்ளாமல் இருந்தால் போதும் என்று ஒன்றுக்குப் பாதியாவது கொடுத்து விடுவான்.

இப்படி இங்கு நடக்கிறதென்றால் நம்முடைய கடவுள்களும் அப்படி இருக்கின்றன. ஒருவன் பாவம் செய்யும்போது அந்தப் பாவத்தைச் செய்யாமல் இருக்க வேண்டிய முறையில் தடுக்காமல் பாவம் செய்வதைப் பார்த்துக் கொண்டே இருந்து விட்டு அதன் பிறகு அவன் மேலோகம் சென்றவுடன் தண்டனை கொடுக்கிறதாம். பிறகு கடவுளுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? புளுகினாலும் பொருந்தப் புளுகவில்லையே என்பதைக் கண்டு பரிதாபப்படும் அளவில் தான் இருக்கிறது.

மேலும் தோழர்களே! இன்றைக்கு நீத்தார் நினைவுநாள் என்ற பெயரில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந் நிகழ்ச்சி கருமாதி என்ற பெயரால் பார்ப்பனர்களால் நடத்தப்படுகிறது. இன்றைக்குப் பெரும்பான்மையினர் அம்முறைகளைப் பின்பற்றுவது நின்று போய் விட்டது. ஒரு சிலர் மட்டும் மற்றவர்களின் முக தாட்சண்ணியத்திற்கும், மற்றவன் நம்மைப் பரிகாசம் செய்வானே என்பதற்கும், இவனுடைய தகப்பன் செத்துப் போனதற்கு இவன் என்ன செய்தான் என்று தூற்றுவார்களே என்பதற்கும் அந்நிகழ்ச்சி செய்வது உண்டு. அந்த நிகழ்ச்சி தங்கள் தரத்திற்கேற்ற பணக்காரர்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்வார்கள் மற்றும் சிலர் நூற்றுக்கணக்கில் செலவு செய்து செய்வார்கள், ஒன்றும் இல்லாதவன் மற்றவனிடம் வட்டிக்கு வாங்கியாவது செய்து விடுவான். இப்படி இது ஏன் செய்கிறோம்? செய்வதால் பலன் என்ன? செய்யா கெடுதல் என்ன? என்பதை சிந்திக்காமலே அடுத்த வீட்டுக்காரன் ஏளனம் செய்வானே என்பதற்காகிலும் செய்வது உண்டு.

இவையெல்லாம் தன் முன்னோர்களைத் திருப்திப்படுத்துவதற்கென்று எண்ணுவது மிகவும் முட்டாள்தனமாகும். அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமற்றதாகும்.

மனிதன் தன் வாழ்வில் புகழைத் தேடுவதற்கு விரும்புவது என்பது இயற்கையே ஆகும். புகழைத் தேடுவதற்கு விரும்பாதவன் ஒருவன் கூட இருக்க மாட்டான். ஒவ்வொருவனும் ஒவ்வொரு துறையில் முயற்சி செய்து புகழ் அடைய விரும்புகிறான். ஒருவன் பணக்காரன் ஆகி அதன் மூலம் தன்னை மற்றவர்கள் இலட்சாதிபதி, கோடீசுவரன் என்று புகழ வேண்டும் என்று விரும்பி வியாபாரத் துறையில் பெருக்குகிறான். உத்தியோகத்தில் உள்ளவன் தன்னைக் கலெக்டர் என்று புகழ வேண்டும். தன்னை மந்திரி என்று புகழ வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்தந்த உத்தியோகத்தை அடைய முயற்சி செய்கிறான். இப்படியே மனிதன் புகழைத் தேடிப் பலவழிகளிலும் முயற்சி செய்கிறான்.

ஆனால், மனிதன் புகழைத் தேடுகிற வழியைப் பின்பற்றுகையில் மிகவும் தவறான முறையில் பின்பற்றுகிறான். தனக்குப் புகழ் வேண்டும் என்ற எண்ணத்தின் மீது முயற்சி செய்கிறான். எப்படியோ இம் முறையை மாற்றிவிட்டனர். உண்மையில் புகழ் அடைய விரும்புகிற முறையைப் பின்பற்றாமல் மிகவும் தவறான முறையில் பின்பற்றுகிறான். இதனால் அவன் செய்த முயற்சி எல்லாம் வீணாகின்றன. இன்றைக்கு ஒருவர் தன்னுடைய வீடு என்று ஒரு வீட்டைக் கட்டினால் நாளை இவர் இறந்து போனபிறகு அது அவருடைய மகனுடைய வீடு. மகன் இறந்தவுடன் பிறகு அவனுடைய வீடு என்று அவன் பெயர் இருக்கிறது. இன்னமும் இவனுடைய காலத்திலேயேகூட இவன் கடன்பட்டு அந்த வீடு ஏலத்தில் போனால் ஏலத்தில் வாங்கியவனுக்குச் சொந்தமாகிறது. இன்றைக்கு முதலியார் வீடு நாளைக்கு ஏலம் எடுத்த சாயபுக்குச் சொந்தமாகிறது. சாயபு விற்று விட்டால் அதை நாடார் வாங்கினால் நாடாருடைய வீடு. இப்படிப் பலருக்குச் சொந்தமாகிறது.

ஆனால் மனிதன் தனக்கு என்று பெரும் பொருளைச் சேர்த்து வைத்தால் தன் பெயர் நிலைத்து நிற்காமல் மறைந்துபோய் விடுகிறது. ஆனால் மற்றவர்களின் நலனுக்கு என்று சிறிதளவு மதிப்புள்ள பொருளை விட்டுச் சென்றாலும், அது அவருடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்யும். எனவே மனிதன் தன்னலத்திற்கென்று புகழைத் தேடுவதற்குச் செய்யும் முயற்சி அத்தனையும் உண்மையில் புகழைக் கொடுப்பது இல்லை. பிறர் நலத்திற்கென்று வைத்துச் செல்லும் பொருளே அவருடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்யும்.


--------------- தந்தைபெரியார் -நூல்: மனிதவாழ்வின் பெருமை எது? பக்கம் 21 - 30

26.5.08

“என்னை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியதே பெரியார்தான்"


1949-ல் தந்தை பெரியாரை விட்டு அண்ணா பிரிந்து திராவிட முன்னேற்றக்கழகம் அமைத்தார். 1967-ல் அண்ணாவின் திராவிட முன்னேற்றக்கழகம் தமிழ் நாட்டில் ஆட்சியைப் பிடித்தது. 18 ஆண்டுகள் பிரிவு தந்தை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையில். அண்ணா முதல்வரானதும் திருச்சிராப்பள்ளி சென்று தந்தை பெரியாரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அண்ணா அங்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் அண்ணா “என்னை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியதே அவர்தான். முதல்வரானதும் நான் அவரைப் பார்க்காவிட்டால் அது மனிதப் பண்பே ஆகாது” என்றார்.


-------------------------- அண்ணா சில நினைவுகள், கவிஞர். கருணாநந்தம்.