Search This Blog

24.6.22

பெண்கள் பிள்ளை பெறும் கருவியா?

 

பெண்கள்  பிள்ளை பெறும் கருவியா?


 

முதலில் நீங்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இது மாறுதல் காலம். இதுவரை நாம் மானமற்று - இழிந்து, அடிமைகளாக, மடையர்களாக இருந்து வந்தோம். இன்று சிலரது முயற்சியால் நம்மில் சிலருக்காவது நாம் இழிஜாதியாக சூத்திரத்தன்மையாக இருக்கிறோமே என்கின்ற கவலை ஏற்பட்டிருக்கிறது.

 

நம்மில் பெரும்பாலான மக்களுக்கு இன்னும் அறிவு இல்லை. நம் பெண்கள் இன்னும் அடிமைகளாக, குட்டிப் போடும் கருவிகளாக, புருஷனுக்கு வேலைக்காரிகளாக இருக்கிறார்கள் என்பதோடு, அப்படி இருப்பதற்காகவே பெண்கள் சமுதாயமானது இருக்கிறது என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

 

உலகம் எந்த அளவுக்கு மாறுகிறது என்பது யாருக்குத் தெரியும்? உலகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் எல்லாம் விஞ்ஞானத் துறையில், அறிவு ஆராய்ச்சித்துறையில் போட்டிப் போட்டுக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கும் போது, நாம் காட்டுமிராண்களாக, பகுத்தறிவற்றவர்களாக இருக்கிறோம். நமது பொல்லாத வாய்ப்பு அயோக்கியர்களிடத்தில் பத்திரிகைகள் சிக்கிவிட்டன. நம்மை அடிமைகளாக, அறிவற்றவர்களாக ஆக்க வேண்டுமென்று கருதுகிறவர்களிடமும், அவர்களின் காலைக் கழுவித் தண்ணீர் குடிப்பவர்களிடமும் பத்திரிகைகள் சிக்கியிருப்பதால் அவை கட்டுப்பாடாக நம் அறிவை வளரவிடாமல் செய்வதோடு, முட்டாள்தனமும், மூடநம்பிக்கையும் வளர என்னென்ன செய்ய வேண்டுமோ, அவ்வளவையும் திட்டம் போட்டுச் செய்து வருகின்றனர்.

 

நம் முயற்சியும், தொண்டும் நம் ஆண்களைத் திருத்திய அளவிற்குப் பெண்களைத் திருத்தவில்லை. அதனால்தான் இந்த விளக்கும், குப்பைக் கூளங்களையும் இங்கு வைத்திருக்கின்றனர். இவை எதற்காகத் தேவை என்பது இங்குள்ள எவருக்குமே தெரியாது. நம் மக்களின் இழிவினையும், அடிமைத் தன்மையையும் நிலை நிறுத்துவதற்காகவென்று பார்ப்பானால் ஏற்பாடு செய்யப்பட்டது தான் இந்தச் சடங்கு முறைகளாகும். தமிழனுக்கு இதுபோன்ற முறையே என்றும் இருந்தது கிடையாது. இப்போது இங்கு நடைபெற்றது போன்றது தான் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பதிவுத் திருமணம் என்பதுமாகும். என்றாலும் பதிவுத் திருமணத்தில் சில தொல்லைகள் நமக்கிருப்பதால் அதை மாற்றி இருவரும் சம உரிமை உடையவர்கள் என்பதை வலியுறுத்தவே இதுபோன்ற வாழ்க்கை ஒப்பந்த விழாவாகும். சுயமரியாதைத் திருமணமாகும்.

 

இந்த முறையில் கடந்த 40-ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்று வந்ததும் கூட, செல்லுபடியற்றவையாகக் கருதப்பட்டு வந்தன. இதுவரை நமக்கிருந்த அரசு பார்ப்பன சார்புள்ள அரசாக இருந்ததாலும், இம்முறையானது சட்டப்படிச் செல்லுபடியற்றதாக இருந்தது. இப்போது அமைந்திருக்கும் ஆட்சியானது மக்களாட்சி என்பதோடு தமிழர்களின் பகுத்தறிவாளர்களின் ஆட்சியானதால், இந்த ஆட்சி சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கி இருக்கிறது. நான் அய்க்கோர்ட் ஜட்ஜ் கைலாசம் அவர்கள் மகள் திருமணத்திற்கு சென்றிருந்தேன். எனக்குப் பக்கத்திலிருந்த சீஃப் ஜஸ்டிஸ் அனந்தநாராயண அய்யர் இந்த முறைதான் சிறந்ததுங்க. என்ன காரணத்தாலோ இதுவரை இதைச் சட்டமாக்காமலிருந்திருக்கிறார்கள் என்று கூறினார்.

 

நம் புராணங்கள், இலக்கியங்களில் வரும் கதாபாத்திரங்களான சீதை, திரவுபதி, சந்திரமதி, கண்ணகி ஆகிய இவர்களின் திருமணங்கள் யாவும் பொருத்தம், நாள், நட்சத்திரம், ஜாதகம், ஜோசியம், நேரம் எல்லாம் பார்த்துத் தேவர்கள் என்பவர்களால் நடத்தப்பட்டவை தான். இதில் எவள் ஒழுங்காக வாழ்ந்தாள்? சீதை திருமணமான சில நாட்களிலேயே காட்டிற்குச் சென்று இராவணனால் தூக்கிச் செல்லப்பட்டு சினையாகத் திரும்பினாள். திரவுபதை 5-பேருக்கு வைப்பாட்டியாகத் தனது வாழ்நாளை கடத்தினாள். சந்திரமதி தன் கணவனால் அடகு வைக்கப்பட்டாள். கண்ணகி கல்யாணமான அன்றே அவள் கணவன் இன்னொருத்தியோடு சென்று வாழ்க்கை நடத்தினான். இப்படி பொருத்தம், நேரம் எல்லாம் பார்த்துச் செய்த கல்யாணங்கள் எவை வாழ்ந்தன? இந்தப் பொருத்தம் நேரம் என்பதெல்லாம் புரட்டுத்தானே தவிர இவற்றால் எந்தப் பயனும் கிடையாது.

 

நம் மக்கள் நிலை இப்போது எப்படி இருக்கிறது என்றால், சாஸ்திரம் என்று சொல்லி மனித மலத்தை எடுத்துக் கொடுத்தாலும் சாப்பிடக் கூடிய நிலையில் தான் இருக்கிறது. நம் மக்கள் பகுத்தறிவுவாதிகளாகிக் கீழ் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிற நிலை மாறி, மற்ற உலக மக்களைப் போல் வாழ வேண்டுமென்பதற்காகத் தானே நாங்கள் இதை எல்லாம் எடுத்துக் கூறுகிறோம் பாடுபடுகிறோம். மற்றப்படி இதனால் எங்களுக்கு என்ன லாபம்? அந்த அம்மாளே கையிலே தீப்பந்தம் பிடித்துக் கொண்டு பகலில் வெளியே போனால் மக்கள் என்ன நினைப்பார்கள்? அதுபோலத்தானிருக்கிறது இந்தப் பட்டப் பகலில் விளக்கை ஏற்றி வைத்திருப்பதும் என்று குறிப்பிட்டதோடு, மணமக்கள் தங்களின் வாழ்க்கையில் முட்டாள்தனமான மூடநம்பிக்கைக் கருத்துகளுக்குச் சிறிதும் இடம் கொடுக்காமல், பகுத்தறிவோடு நடந்து கொள்ள வேண்டுமென்றும், வருவாய்க்கு மேல் செலவிடக் கூடாது என்றும், அதிகமான குழந்தைகளை பெற்றுக் கொண்டு வாழ்வில் அவதிப்படக் கூடாது.

 

                 ------------------------- 05.05.1968- அன்று கந்தன் - தமிழரசி திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. 'விடுதலை', 04.06.1968

23.6.22

ஜாதிப் பித்தலாட்டம்! - பெரியார்

 

ஜாதிப் பித்தலாட்டம்!


 

ஜாதி என்பது சுத்தப் புரட்டு. அயோக்கியர்களால் கற்ப்பிக்கப்பட்டு, முட்டாள்களால் ஒப்புக் கொள்ளப்பட்டு, மானற்ற மக்களால் நடைமுறையில் பின்பற்றச் செய்யப்பட்டு வருகிறது.

 மத சம்பிரதாயப்படியாக நான்கு ஜாதிகள் சொல்லப்பட்டாலும், இவற்றுள் மூன்று ஜாதிகள் தான் பிறவியினால் இருப்பதாகச் சொல்லப்படுபவைகளாம். அவை மற்றபடி இரண்டாவது சத்திரிய, மூன்றாவது வைசிய, நான்காவது சூத்திரர்கள் எனப்படுபவையாகும். முதலாவது ஜாதி என்று சொல்லப்படும் பிராமண ஜாதி என்பது பிறவியால் ஏற்பட்டதல்ல என்பதோடு, பிறவிகளால் பிராமணன் என்பவனும் இல்லை. ஒரு மனிதன் பிராமணன் என்று சொல்லப்படுபவனுக்குப் பிறந்தவன் ஆனாலும் சூத்திரனேயாவான். அந்த சூத்திரன் என்கிற பிள்ளை உபநயனம் என்ற கருமம் செய்யப்பட்டு பூணூல் என்கின்ற முப்புரி நூல் அணியப்பட்ட பின்புதான் பிராமணன் ஆகிறான். அதனால் தான் பார்ப்பனர் தங்களை துவிஜர் என்று சொல்லிக் கொள்கிறார்கள். 'இரு பிறவியாளர்' என்று கூறுகிறார்கள்.

 அந்த அப்படிப்பட்ட இரு பிறப்பாளன் ஆன பிராமணன் என்பவனும், மற்ற ஜாதியார்களைப் போல் பிறவி காரணமாகவே எப்போதும் பிராமணனாய் இருப்பவனல்லன். அவன் பிராமணன் செய்ய வேண்டிய சில கருமங்களைச் செய்யாததால், பிராமணத் தன்மையை இழந்து விடுகிறான் என்கின்ற தத்துவப்படிப் பார்த்தால் உலகில் பிறவிப் பிராமணன் இல்லை என்பதோடு, சில கருமத்தைச் செய்யாததாலும், சில கருமத்தைச் செய்வதாலும் பிராமணன் அல்லாதவனாக, பிராமணத் தன்மையை இழந்தவன் என்பதாக, ஆகிவிடுவதால் உலகத்தில் பிராமணன் என்பவன், மத, சாஸ்திர தர்மப்படி பிராமணன் என்பதாக எவனும் இல்லை என்று உறுதியாய்ச் சொல்லலாம். அன்றியும், இந்தத் தர்மப்படி உலகில் எவனும் தன்னைப் பிராணன் என்று சொல்லிக் கொண்டாலும், அவன் கண்டிப்பாக பித்தலாட்டக்காரனேயாவான். மக்களை ஏமாற்றி வஞ்சித்துப் பிழைக்கிற அயோக்கியனே ஆவான்.

 ஏன் இதை இவ்வளவு வலியுறுத்திச் சொல்லுகிறேன் என்றால், தங்களைப் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், "உலகில் நான்கு ஜாதிகள் இருந்தாலும், மத, சாஸ்திர தர்மப்படி இரண்டு ஜாதிகள் தான் இருக்கின்றன. அதாவது பிராமணன், சூத்திரன் என்பவர்கள் தான் இருக்கிறார்கள். மற்ற இரண்டு ஜாதியான சத்திரியர், வைசியர் என்று சொல்லப்படும் இரண்டு ஜாதிகளும் கலியுகத்தில் அழிந்து விட்டது" என்று சொல்லிவிட்டார்கள். சொன்னதோடு மாத்திரமல்லாமல் அவர்கள் "சூத்திர" மக்களோடேயே சேர்ந்து விட்டார்கள். ஜாதி பிரிவு முறையில் சத்திரிய, வைசிய ஜாதி என்பதாக எந்தப் பாகுபாடும் செய்யவில்லை. ஆகவே, நான்கு ஜாதிகளில் இரண்டு ஜாதிகள் ஒழிந்துவிட்டன. அதாவது, பார்ப்பனர்களால் ஒழிக்கப்பட்டு விட்டது. மீதி உள்ள இரண்டு ஜாதிகளில், மத, சாஸ்திர தர்மப்படி பிராமணன் என்கிற ஜாதி இல்லாததினால் ஜாதி தத்துவப்படி உலகில் இந்துக்கள் என்பவர்களில் ஒரு ஜாதிதான் இருக்கிறது என்றாலும், அந்தச் சத்திரிய ஜாதியும், ஜாதி தர்மப்படி நடக்காததனால் அதுவும் (சத்திரிய ஜாதியும்) இல்லாமல் போனது என்றே சொல்ல வேண்டும்.

 

மத, சாஸ்திர, தர்ம ஆதாரம் இல்லாமல் பஞ்சமர் (சண்டாளர்) என்று பிரிவினை செய்யப்பட்ட அய்ந்தாம் ஜாதியும் இன்று ஆட்சியின் பலனாக அழிக்கப்பட்டு விட்டபடியால், தாழ்த்தப்பட்ட வகுப்பு என்று அந்தக் குறிப்பிட்ட தன்மையும் இல்லாமல் போய் மற்ற ஜாதிகளுடன் சரிசம அந்தஸ்து கொடுக்கப்பட்டு விட்டது என்றாலும், இன்று பார்ப்பனர் என்னும் வகுப்பார் தங்களைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்கிறார்களே இது பொருந்துமா? நியாயமா? என்பது சிந்திக்க வேண்டியிருக்கிறது.

 

தங்களைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்பவர்கள் வேசத்தில் காட்டிக் கொள்வதன் மூலம்தான் சொல்லிக் கொள்கிறார்களே தவிர, அதில் நாணயமோ, யோக்கியமோ இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

 

சங்கராச்சாரி என்பவரும் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொண்டு நம்மைத் தொட்டால் ஸ்நானம் செய்ய வேண்டும், பிராயச் சித்தம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார். .வே.சு.அய்யர், சி.விஜயராகவாச்சாரியார் போன்ற பார்ப்பனர் நம்மை தொட்டு விட்டால் நம்ம வீட்டில் சாப்பிட்டு விட்டால் ஸ்நானம் செய்ய வேண்டும். பிராயச் சித்தம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லி அந்தப்படி நடந்து கொண்டு வந்தார்கள். மற்றும் சி.ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி), சதாசிவம் ஆகிய பார்ப்பனர் யார் வீட்டிலும் பஞ்சமர் (சண்டாளர்), ஜாதியார் வீட்டிலும் சாப்பிடுகிறார்கள். தன் மகளைச் சூத்திரர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கிறார்கள். தானும் சூத்திர ஜாதிப் பெண், நாடகத்தில் நடித்துக் கொண்டு, "பொதுப் பெண்டிர் குலத்தை" சார்ந்து இருந்தவரை மணம் செய்து உடல் சம்பந்தம் வைத்துக் கொண்டும் இருந்து, உச்சிக்குடுமி வைத்துக் கொண்டும், பஞ்ச கச்சம் போட்டு உடை உடுத்திக் கொண்டும், தன்னைப் பிராணன் என்றே சொல்லிக் கொண்டு மற்ற பிராமணருடன் உண்பன, தின்பன, கொடுத்தல், கொள்ளல் காரியங்களையும் செய்து கொண்டு மற்ற ஜாதியாருக்கு ஆசீர்வாதம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இவை மாத்திரம் அல்லாமல், இப்படிப்பட்டவர்கள் செத்துப் போன பின்பும் அவர்கள் இதை தலைவர்கள் "பிராமண" பிரேதம் என்பதற்கு என்ன கர்மங்கள் மந்திரங்கள் உண்டோ அந்த சடங்குகளையும், அந்த ஜாதி சாஸ்திரிகளாலேயே செய்கிறார்கள்.

 

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், ஒரு மனிதன் தன்னை பிராமணன் என்றும், மற்றவர்களைத் தனக்குக் கீழ்ப்பட்ட ஜாதி, கீழான ஜாதி என்றும் சொல்லுவதற்குப் பார்ப்பனக் கூட்டத்தில் இருந்து கொண்டு மற்றவர்களை இழி ஜாதியான் என்று சொல்லிக் கொண்டு பூணூல் போட்டுக் கொண்டு இருந்தால் மாத்திரமே போதுமானதாக இருந்து வருகிறது.

 

இதில் விசேஷமான மற்றொரு காரியம் என்ன வென்றால், மது அருந்துகிறான், மாமிசம் சாப்பிடுகிறான், கூட்டிக் கொடுப்பதையே தொழிலாகக் கொள்கிறான், பேர் போன "விபசாரி"யை மனைவியாக, போகப் பெண்ணாகக் கொள்கிறான், அனுபவிக்கிறான்; இப்படிப்பட்டவன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறான். பிராமணார்த்தத்திற்குச் சென்று பயன் பெற்று வருகிறான்.

 

ஆகவே, நாட்டில் பொது மக்களை அயோக்கியர்கள், ஜாதி என்னும் பெயரால் மனதறிந்து பலர் ஏமாற்றி கீழ்மகனாக ஆக்கி சுயநலம் அனுபவித்து வருகிறார்கள்.

 

                                           ----------------------- தந்தை பெரியார்  -  ''உண்மை'', 14.01.1973