Search This Blog

22.6.22

குழவிக்கல்லில் முட்டிக் கொள்வதற்கு பி.ஏ., எம்.ஏ. தேவையா?

 

பிறக்காத கடவுள்களுக்குப் பிறந்த நாள்!

 


எனக்கு இங்கு பிறந்தநாள் விழாக் கொண்டாடுகிறீர்கள். உண்மையிலேயே முதன் முதலாக பிறந்தநாள் விழாக் கொண்டாட ஆரம்பித்தது கடவுள்களுக்குத்தான். உண்மையிலேயே கடவுள்கள் அப்படிப் பிறந்தார்களா, அதற்கு ஆதாரம் உண்டா என்றால் இல்லை. வெறும் பொய்யை அடிப்படையாகக் கொண்டே கடவுள்களுக்குப் பிறந்தநாள் விழாக் கொண்டாடினார்கள்.

 

விநாயக சதுர்த்தி என்றும், இராமநவமி என்றும் கொண்டாடுகிறார்கள். இந்த நாட்களுக்கு அரசாங்கம் வேறு விடுமுறை அளிப்பது இன்னும் வெட்கக்கேடானது.

 

அரசாங்கம் பாமர மக்களின் ஒட்டுகளை நம்ப வேண்டிய அரசாங்கமானதால் இவற்றில் எல்லாம் கைவைக்க யோசிக்கிறார்கள்.

 

இந்தக் கடவுள்களுக்குப் பிறந்தநாள் விழாக்கள் இன்று நேற்றல்ல, சேரசோழபாண்டியர்கள் காலத்திலிருந்தே கொண்டாடி வருகிறார்கள்.

 

இந்த ராஜாக்கள் என்பவர்கள் அத்தனைப் பேரும் அசல் மடையர்கள். பார்ப்பான் எப்படிச் சொல்லுகிறானோ அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஆட்சி செய்வதுதான் அவர்கள் வேலை. அரசர்கள் வேலை எல்லாம் கோயில் கட்டுவது, குளம் வெட்டுவது, மனுதர்மத்தைக் காப்பாற்றுவது இவைகள் தான்.

 

மற்ற வேலைகளை எல்லாம் பார்ப்பான் பார்த்துக் கொள்வான். நாடுடைய ராஜாக்கள் யோக்கியதை எப்படி இருந்தது என்பதற்கு உதாரணம் நமது நாடகங்களில் பார்க்கலாமே. "மந்திரி, மாதம் மும்மாரி பொழிந்ததா?" என்று மந்திரியைக் கேட்டுத்தான் மழை பொழிந்ததைக் கூட அறிந்து கொண்டான். "மக்கள் எல்லாம் வர்ணாசிரம முறைப்படி வாழ்கிறார்களா?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டுத் தெரிந்து கொள்வான். இவைதான் நமது முன்னோர்களாகிய அரசர்களின் வேலையாக இருந்து வந்தது. அரசன் அப்படி இருந்ததாலே குடிகளும் மத விஷயத்தில் அப்படியே ஊறிப் போய்விட்டார்கள்.

 

நமது இயக்கம் இந்த நாட்டில் தோன்றிய காலம் வரை, ஆட்சியிலிருந்து மக்கள் வாழ்வுவரை அத்துணையும் அப்படியே மத, கடவுள் நம்பிக்கைப்படிதான் இருந்து வந்தது. இன்றைக்குத்தான் நமது இயக்கத்தின் தொண்டு காரணமாக நிலைமைகள் திருந்தி வருகின்றன.

 

நம் நாட்டுக்கோட்டைமார்கள் எல்லாம் அவர்களுடைய சொத்துக்களை அழித்தது எல்லாம் இந்தக் கோயில், மதக் காரியங்களுக்காகத்தான். அவற்றால் பலன் அடைந்தவன் எல்லாம் இந்தப் பார்ப்பனர்கள் தான். இப்போது தான் நாம் போட்ட கூப்பாட்டின் காரணமாகத் திருத்தி வருகிறார்கள். அந்த இனத்தில் ராஜா அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் தான் அதற்கு விதிவிலக்கு. அவர் மட்டும் தான் கல்விக் காரியத்திற்காக சொத்துக்களை ஏராளமாகச் செலவிட்டார்.

 

மக்களிடத்தில் கல்வி மீதும், பகுத்தறிவு மீதும் ஆர்வம் உண்டாக்கும் பணியில் ஈடுபட்டதே எங்கள் இயக்கம் தானே!

 

ஆரம்பத்தில் எங்கள் தொண்டுக்குக் கிடைத்த பரிசு எல்லாம் செருப்பு வீச்சுத்தான். அவற்றை எல்லாம் மீறித்தான் பொதுத்தொண்டு செய்து வந்தோம்.

 

நீங்கள் கேட்கலாம், கடவுள் இருக்கிறது என்பவர்களை எல்லாம் கடுமையாகப் பேசுகின்றீர்களே, இது சரியா என்று கேட்கலாம்! நியாயம்தான். அதே நேரத்தில், உங்கள் புராணங்களில் கடவுள் இல்லை என்று சொல்லுபவர்களை எவ்வளவு கேவலமாக - இழிவாக எழுதி வைத்திருக்கிறார்கள். கடவுள் இல்லை என்பவன் மனைவியை எல்லாம் கற்பழிக்க வேண்டும், தலையை வெட்ட வேண்டும் என்று எல்லாம் எழுதி வைத்துள்ளார்களே! அதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்?

 

கடவுள் இருக்கிறது என்பவனைத் தான் கேட்கின்றேன். கடவுள் இருக்கிறது என்று கருதுகிறவன் எல்லாம் மற்றவன் சொல்லி நம்புகிறானே தவிர, அவனுக்கேஅவன் சொந்தப்புத்திக்குப் பட்டு ஏற்றுக் கொண்டு இருக்கிறானா? கடவுளுக்கு ஏன் இவ்வளவு கோயில்கள், உருவங்கள்? கடவுள் அன்பே உருவானவன் என்கிறான். அவன் கையில் ஏன் அரிவாள், கொடுவாள், ஈட்டி எல்லாம்? இவை எல்லாம் கொலைக்காரன் கையில் இருக்க வேண்டிய ஆயுதங்கள் அல்லவா?

 

உருவமே இல்லாத கடவுளுக்குப் பொண்டாட்டி ஏன்? வைப்பாட்டி ஏன்? வருஷா வருஷம் கலியாணம் ஏன்? போன வருடம் பண்ணின கல்யாணம் என்ன ஆச்சு? எவன் அவளை அடித்துக் கொண்டு போனான் என்று பக்தன் சிந்திக்க வேண்டாமா? இவற்றையெல்லாம் நம்புவதால் யாருக்கு என்ன பிரயோசனம்? மனித சமுதாயத்திற்கு என்ன லாபம்? பார்ப்பான் இடுப்பில் காசு சேருவதுதான் மிச்சம்.

 

மற்ற நாட்டுக்காரன் முயற்சி எல்லாம் சந்திர மண்டலத்துக்குப் பிரயாணம் செய்கிறான். இவன் என்னடா என்றால் சாமி என்கிறான், அவனுக்கு வைப்பாட்டி என்கிறான், திதி என்கிறான். பார்ப்பான் பஞ்சகவ்யம் என்று கொடுக்கிற மாட்டு மூத்திரத்தையும், சாணியையும் கைநீட்டி வாங்கிக் குடிக்கிறான். பக்தியின் பேரில் மாட்டுச் சாணி என்ன, மனித மலத்தைக் கூடக் குடிக்கத் தயாராக இருக்கிறான்.

 

படிக்காதவன் மட்டுமல்ல, படித்தவனே மதக்கிறுக்கு பிடித்தவனாகத் தானே இருக்கிறான். இந்தக் கல்லூரிகள் எல்லாம் இருப்பதை விட இழுத்து மூடினால் கூட தேவலாம் போலிருக்கிறதே, எம்.. படித்தவன் கூட கோயில், குளம் என்று குழவிக்கல்லில் முட்டிக் கொள்கிறானே!

 

இதுதான் படித்ததற்கு அழகா? குழவிக்கல்லில் முட்டிக் கொள்வதற்கு பி.., எம்.. தேவையா? பகுத்தறிவைக் கொடுக்காத கல்வி இருப்பதை விட இல்லாமல் இருப்பதே நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தப் படிப்பு இன்றைக்கு எவ்வளவு தூரம் கொண்டு போய் விட்டிருக்கிறது என்றால் நெருப்பு வைப்பது, காலித்தனம் செய்வது என்பதில் கொண்டு போய் விட்டிருக்கிறது. இத்தகைய வெற்றுப் படிப்பை விட தொழிற்படிப்பு தேவலாம் என்று தோன்றுகிறது.

 

இன்றைய தினம் நம் மக்கள் ஏராளமாகப் படித்திருக்கிறார்கள். இந்த வளர்ச்சிக்குப் பாடுபட்டது நாங்களா, இல்லை பார்ப்பனர்களா? சமீபத்தில் இறந்து போனாரே ராஜாஜி, அவர் செய்த தொண்டு எல்லாம் பள்ளிக் கூடத்தை இழுத்து மூடியதுதானே! நாங்கள் தானே எதிர்த்தோம். ராஜாஜியை அரசியலிலிந்து விரட்டியதே நாங்கள் தானே! எதற்காக விரட்டினோம்? நம் மக்கள் கல்வியில் கையை வைக்கிறாரே என்பதால் தானே.

 

அப்படி வளர்ந்த கல்வி அறிவு வளர்ச்சிக்குப் பயன்படவில்லையென்றால் வேதனையாகத் தானே இருக்கிறது. கல்வி என்பது அறிவு வளர்ச்சியைத் தூண்டுவதற்காகத் தானே இருக்க வேண்டும்! அதை விட்டுவிட்டு கடவுள் என்றால் மதம் என்றால் அப்படியே நம்புவது என்றால் நமக்கு எதற்குக் கல்வி, அறிவு எல்லாம்?

 

அப்படித்தான் மான உணர்ச்சியோடு, அறிவு உணர்ச்சியோடு எந்தக் கடவுளைத்தான் உண்டு பண்ணினான்? காட்டுமிராண்டித்தனமானஅசிங்கமான கற்பனைகளைத்தானே கடவுள்களாக உருவாக்கி எழுதி வைத்திருக்கிறான்!

 

இந்த இராமனையே தான் எடுத்துக் கொள்ளுங்களேன். அவன் அவனுடைய அப்பனுக்கே பிறந்தவன் இல்லையே. பந்தயம் கட்டிக் கேட்கிறேன்; மறுப்பு இருந்தால் சொல்லட்டுமே! ஆபாசம், அறிவுக்குப் பொருத்தமற்ற தன்மை - இவைகள் தானே நமது கடவுள்களும், புராணங்களும் இவற்றை எடுத்துச் சொல்லும் எங்களை வெறுத்தால் போதுமா? மனிதன் எப்படி அயோக்கியன் ஆனான் என்றால் இந்தக் கடவுள், மதக் காரணங்களால் தான். சர்ச்சுக்குப் போய் மண்டியிடுவதும், பள்ளி வாசலுக்குச் சென்று தொழுவதும், கோயிலுக்குச் சென்று தோப்புக்கரணம் போடுவதும் எதற்காக? செய்த பாவங்களை மேற்கண்ட காரியங்களால் கடவுள் மன்னிப்பாரென்றால் பாவம் செய்ய யார் தான் பயப்படுவார்கள்?

 

அவனின்றிதான் ஒரணுவும் அசையாதேஅப்படி இருக்கும் போது மனிதனாக எப்படிப் பாவங்களை செய்ய முடியும்? அப்படிப் பாவங்கள் செய்தால் கடவுளும் அங்கு சம்மந்தப்பட்டிருந்தால் தானே முடியும்?

 

துலக்கனாக இருந்தாலும் சரி, கிருஸ்தவனாக இருந்தாலும் சரி, இந்துவாக இருந்தாலும் சரி கடவுள் காட்டுமிராண்டி விஷயத்தில் எல்லோரும் ஒன்றுதானே!

 

மக்களுக்கு நல்ல உணர்வு ஏற்பட்டு ஆளுக்குக் கையில் ஒரு கடப்பாறையை எடுத்துக் கொண்டு, இருக்கிற கோயிலை எல்லாம் - குழவிக்கல்லை எல்லாம் இடித்துத் தள்ளுகிற காலம் வந்தால் தானே நாடு உருப்பட முடியும். 'சாமி' என்று சொன்னால் வாயைக் கழுவவேண்டும். மதப் புரோகிதன் என்றால் அவனைப் பார்த்துப் பரிகசிக்க வேண்டும். அத்தகைய காலம் கனியும் போது தான் மனிதன் முழுமனிதனாக வளர்ந்து இருக்கிறான் என்று அர்த்தம்.

 

இந்தக் குழந்தைகளுக்கு எல்லாம் சாமி என்றால் இன்னாதென்று தெரியாமல் வளர்க்க வேண்டும். அப்படியே சொன்னாலும் சாமி என்றால் காரித் துப்பப் பழக்க வேண்டும். அப்போது தான் வருங்கால சமுதாயமாவது உருப்படும்.

 

                 ------------------ 10.01.1973- அன்று சிதம்பரம் அண்ணாமலை நகரில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையில் ஒரு பகுதி – "விடுதலை" 20.01.1973

21.6.22

பார்ப்பனர்களே! கனவு பலியாது!!

 


தந்தை பெரியார்
காந்தியாருடைய முடிவிற்குப்பின் அவருடைய பிரிவை மறப்பதற்காக என்று, இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்களின்படி பதிமூணாம் நாள் அஸ்தி கரைக்கும் சடங்கு இந்திய யூனியன் முழுவதும், எந்த அளவு இந்து மத வெறிக்கு இடம் கொடுக்க முடியுமோ, அந்த மாதிரியான நடவடிக்கைகளால் நடந்து முடிந்திருக்கிறது. காந்தியாரைப் படுகொலை செய்தவன் ஒரு பார்ப்பனன் - இந்துமத சாம்ராஜ்ய வருணாசிரம வெறியன் என்கின்ற கொடுமையை எப்படி மறைக்கிறது என்று ஏங்கிக் கொண்டிருந்த இந்த நாட்டுப் பார்ப்பனர்களும், பார்ப்பனியத்திற்கு ஒத்தாசையாக இருந்தே வயிற்றுப் பிழைப்பையும், கவுரவத்தையும் மற்ற நடவடிக்கைகளையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற நிலைக்கு வந்துவிட்ட பக்தர்கள், தொண்டர்கள், தலைவர்கள், தியாகிகள், மந்திரிகள் என்பது போல பல முத்திரைகள் குத்திக் கொண்டவர்களும், பிரபுக்கள், ஜமீன்தார்கள், கள்ள மார்க்கட் வியாபாரிகள் என்கிற பெயர்களிலிருக்கிற பகற்கொள்ளைக்காரர்களும், ஆச்சாரியர்கள், சுவாமிகள், மகந்துக்கள், என்கின்ற பெயர்களிலிருக்கிற தீவட்டிக் கொள்ளைக்காரர்களும் சேர்ந்து போட்டிப் போட்டுக் கொண்டு படிதாண்டாத பக்தர்களாக ஆகிப் பார்ப்பனிய மதத்திற்கு இப்போதைய நிலைமையில் எவ்வளவு பாதுகாப்புச் செய்ய முடியுமோ, அவ்வளவையும் செய்து விட்டார்கள். இந்த நடவடிக்கைகள் மறைந்த பெரியார் காந்தியாருக்கு மரியாதையைச் செய்வதாகும் என்று சொல்லப்படுவதை நாம் ஒப்புக் கொண்டாலும், இந்தக் காரியத்தின் ஆடம்பரங்களால் பார்ப்பனியம் எப்படி உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவி விட்டது? அதனுடைய சதிச் செயல் நிறைவேறுவதற்கு மேலும் எந்த மாதிரிக் காரியங்கள் செய்து வருகின்றது? என்பதைத்தான் இங்கு எடுத்துக்காட்டுவதற்கு ஆசைப்படுகிறோம்.
பார்ப்பனிய மதக் கொடுமையை - வஞ்சகத்தை - மானத்தை அழிக்கும் செயலை - கொள்ளையும், கொலையும் செய்யும் கொடிய போக்கினை இந்த திராவிட நாட்டில் பிறந்து மறைந்த ஒவ்வொரு அறிவாளியென்று பெயர் எடுத்தவர்களும், அந்தந்தக் காலத்தில் எந்தெந்த அளவு அவர்களால் தெரிவித்திருக்க முடியுமோ, அப்படி அப்படித் தெரிவித்துத்தான் போயிருக்கிறார்கள் என்பதையும், அவைகளெல்லாம் வெறும் பக்திக்குரிய, பூஜைக்குரிய, பாராயணத்திற்குரிய ஏட்டுச் சுரைக்காய்களாக ஆகிவிட்டன என்பதையும் அவற்றை தெரிவித்தவர்கள், சித்தர்கள், அடியார்கள், வள்ளலார்கள், மகான்கள் என்கிற பெயர்களுக் குரியவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதையும், இந்த பெரியார்களுடைய கருத்துக்கள் மக்களுக்குப் பிரயோசனப் படாமல் போவதற்குப் பார்ப்பனியம் என்னென்ன குள்ளநரிச் செயல்கள் செய்ய வேணுமோ, அதையெல்லாம் செய்து விட்டது என்பதையும் நாம் பல முறையும் விளக்கி வந்திருக்கிறோம்.
இந்தப் பார்ப்பனர்களின் மோசடித் தன்மை தொலைய வேண்டுமானால், இந்த நாட்டு மக்களை மூடப்பழக்க வழக் கங்களிலிருந்து தடுத்தாக வேண்டுமானால், மக்கள் எல்லோரும் ஒரே குலம் என்கிற நல்லுணர்ச்சியைக் கைக்கொள்ள வேண்டு மானால், உலகத்தின் மற்ற நாடுகளைப் போல் நாமும் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமானால், முதலில் மக்களுக்கிடையே பரப்பப்பட்டிருக்கும் மதவுணர்ச்சியின் வேர்களுக்கு வெந்நீரை ஊற்ற வேண்டும்; குருட்டுத்தனமான மதவுணர்ச்சியை வளர்க் கும் பண்டிகைகள் வெறுக்கப்பட வேண்டும்; அயோக்கிய செயல்களுக்கெல்லாம் வளர்ப்பு பண்ணைகளாயிருந்து, மதப் போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்கும் மடாலயங்கள் எல்லாம் மக்களின் சொத்தாக ஆக வேண் டும்; காந்தியார் சொன்னது போல் விபசார விடுதிகளாயிருக்கும் கோவில்கள் எல்லாம் கோயில் பூனைகளுக்குப் பால் பண்ணையாக இல்லாமல், மக்களுக்கு அறிவுப் பண்ணை யாக ஆக வேண்டும்; என்கிற கிளர்ச்சியை இந்த நாட்டில் கல்லெறிக்கும், சாணி வீச்சுக்கும் செருப்பு வீச்சுக்கும் இடையிலும், அக்கினித் திராவகம் வீசுதல், நெருப்பு வைத்து பந்தலை எரித்தல், சேலையையுரிந்து மானபங்கப்படுத்துதல் என்கிற காங்கிரசார் ஆட்சியில் நடந்த அக்கிரம அட்டூழிய செயல்களுக்கிடையிலும், நமது தலைவர்களும், தொண்டர்களும், தாய்மார்களும் எந்த விதமான சொந்த பிரயோஜனத்தையும் கருதாமல் விடாது செய்துவந்திருக்கிறார்கள் என்பதையும் திராவிட நாடு நன்கறியும்.
பார்ப்பனர்களின் அக்கிரமமான நடத்தையைப் பொறுக்க முடியாமல், மனிதப் பண்பின் மீது வைத்த நம்பிக்கையினால், இந்த மாதிரியான கிளர்ச்சி வலுவாக 25 வருடங்களாகவே நடந்து வந்தாலும், இந்த நாட்டு மக்களை ஏமாற்றி வாழ்வதையே தொழிலாகக் கொண்ட பார்ப்பன வர்க்கத்தின் பிரதிநிதிகளான இந்து, சுதேசமித்திரன் என்கிற விஷ ஊற்றுகளும், அவைகளின் கிளைகளான விகடன், கல்கி போன்ற விஷ சாக்கடைகளும் பாஷ்யங்கள், பட்டா பிராமன்கள், வரதாச்சாரிகள், வைத்தியநாதர்கள் என்கின்ற விஷ கொசுக்களும், பரவி, தீண்டி, கொட்டி வருகிற கொடுமைகளாலும், நம்முடைய இனத் துரோகிகளான கவிதாமணிகள், ரிப்பேர் செய்யும் பண்டிதர்கள் என்பவர்கள் அவர்களோடு கூடிக் கொண்டு அவர்கள் வீசி எறியும் எச்சிலை சுவைத்து ருசித்து, ரசித்துக் கொண்டு, முன்னோடும் பிள்ளைகளாய் இருந்து வருவதாலும், மக்களுடைய சிந்தித் துணரும் திறனை எல்லாத் துறைகளிலும் பங்கு போட்டுப் பறிமுதல் செய்துவந்த துணிவினாலும் நம்மையே நாஸ்தி கர்கள் என்றும், தேசத்துரோகிகள் என்றும், வகுப்புவாதிகள் என்றும் கூசாமல் பார்ப்பனர்கள் பட்டம் சூட்டினார்கள்.
தீவிரவாதிகள், அதி தீவிரவாதிகள் என்று அரசியலில் பெயர் எடுத்தவர்கள் எல்லாம், இந்த மதக் கொடுமையை அறிந்தும் கூட வெளியில் சொல்வதற்கு அஞ்சி வாழ்ந்த காலத்தில், மதவுணர்ச்சியைப் பெருக்குவது, வளர்ப்பது நல்ல தல்ல. மத வெறி நாட்டிற்குப் பெரிய தீமையைச் செய்யும் என்று நாம் கூறிய போது நம்மை நாஸ்திகர்கள் என்று சொன் னதற்கு ஆக நாம் பின் வாங்கவில்லை. ஏன்? எப்படியாவது உண்மை வெளிப்படத்தானே வேண்டும்? எவ்வளவு காலத் திற்குத்தான் புரட்டர்களுடைய திருகுதாளங்கள் வெற்றி யடையும்? என்று எண்ணிய உறுதியான நம்பிக்கை யினாலேயே நம் நம்பிக்கை வீண் போகவில்லை. பெரியார் காந்தியாருடைய படுகொலைக்குப் பிறகு, இந்த நாட்டிலுள்ள எல்லா பத்திரிகைகளும், ஒரே குரலாக மகாத்மாவை மத வெறி அழித்துவிட்டது. மதவெறி ஒழிக! மத வெறியே மாண்டு போ! என்று கூறுவதைக் கேட்க, அப்பாடா! இப்பொழுதாவது இந்த பத்திரிகைகளுக்கு ஞானம் வந்து விட்டதே என்று நம் கோரிக்கை வெற்றி பெற்றதை எண்ணிப் பெருமூச்சு விட்டாலும், இவர்களுக்கு இந்தப் புத்தி வருவதற்காக காந்தியாரா படுகொலையடைய வேண்டும்? என்பதையும், வந்த புத்தி நிலைத்திருந்து அதற்கான வழிகளில் ஈடுபட வேண்டாமா? என்பதையும்தான் இந்த நேரத்தில் வருத்தத்தோடு எண்ண வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.
இன்றைக்கு மதவெறி, மதவெறி என்று முழக்கமிடுகின்ற பத்திரிகைகள்,  அந்த மதவெறியை, விஷ நீரை ஊட்டு வதற்காக என்னென்ன முறைகளைக் கையாண்டன? எவ் வளவு துணிந்து அயோக்கியத்தனமாகப் பொய் புளுகுகளை மூட்டை மூட்டையாகப் பரப்பின. இதற்கு சித்திரங்கள், இசைகள், சினிமாக்கள், செய்தி தாபனங்களை எப்படி துணையாகச் சேர்த்துக் கொண்டன என்ற இவைகளை யெல்லாம் கொஞ்சமும் எண்ணிப் பாராமல் இப்போது மதவெறியே! மாண்டுபோ! என்று போடுகிற கூச்சலால் ஏற்படப்போகும் பிரயோசனமென்ன? முந்தின போக்குத் தவறான பாதை என்பதை உணராவிட்டால், இப்போது மதவெறி மதவெறி என்று சேர்ந்து கோவிந்தா போடு வதனுடைய அர்த்தமென்ன?
உண்மையாகவே மதவெறி கொடுமை யானது என்பதை இந்த நாட்டு பார்ப்பனர்கள் உணர்ந்தார்கள் என்றோ, பார்ப்பனப் பத்திரிகைகள், தேசியப் பத்திரிகைகள் தெரிந்து கொண்டு விட்டன என்றோ எவராவது சொல்ல முடியுமா? பார்ப்பனர்கள் உணரவில்லை, பார்ப்பன பத்திரிகைகள் தெரிந்துகொள்ளவில்லை என்ற நிலைமை இருந்தால் கூட பாதகமில்லை. ஒரு பக்கம் மதவெறி மதவெறி என்று கூப்பாடு போட்டுக் கொண்டே, மற்ற ஒன்பது பக்கங்களிலும் மதவெறியைப் பெருக்குவதற்கான காரியங் களையே வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் செய்கிறதென்றால் இந்த போக்குக்கு ஒரு முடிவில்லையா? ஏ! பார்ப்பனியமே! இந்த நாட்டையும் ரத்தக்கறை படிய செய்ய வேண்டும் என்பதிலே ஏன் உனக்கு இவ்வளவு ஆசை? என்பதை நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்லை.
திராவிடர் கழகம் ஒரு வகுப்பு வாத ஸ்தாபனம். பார்ப்பனர்கள் மீது துவேஷத்தைப் பரப்பி வருகிறது. அதை இந்த நேரத்திலே ஒழித்துக் கட்டவேண்டும் என்கிறது இந்து. பேஷ்! ஒரே கல்லால் இரண்டு பட்சிகளை - ஏன் - மூன்று பட்சிகளை வீழ்த்தும் திட்டம் என்று அது உள்ளம் மகிழலாம். காந்தியாரைச் சாகடித்ததற்கு ஏதோ சில பார்ப்பனர் களையாவது பலி கொடுக்க வேண்டியிருக்கிறதே. இந்த பலியினாலேயே ஏன் திராவிடர் கழகத்தையும் வீழ்த்திவிடக் கூடாது? இதுதான் பார்ப்பனர்களின் விருப்பமும், திட்டமும். இந்த செயலுக்கு ஒத்துழைப்போமா? வேண்டாமா? எந்த அளவு ஒத்துழைக்கலாம்? எப்படி இதை வைத்துக் கொண்டு பயமுறுத்தலாம்? என்கிற ஆலோசனையில் ஈடுபட்டிருக் கின்றது, இன்றைய திராவிடர்களை அதிகமாகக் கொண் டிருக்கும் நம் திராவிட நாட்டு மந்திரி சபை. மந்திரி சபை மனம் வைத்தால் ஒரு நாலெழுத்து எழுதிவிட்டால் போதுமே என்று எதிர்பார்க்கின்றார்கள் நம் அருமைப் பார்ப்பனர்கள். எதிர்பார்க்கட்டும்! திராவிடர் கழகத்தை ஒழித்து விடுவ தற்காக எழுதுகின்ற அந்த நாலு எழுத்துக்களே, மந்திரி சபையையும் கவிழ்த்து விடுவதற்குப் போதுமானது என்று எண்ணுகிறது, அவர்களின் சூழ்ச்சி படிந்த மனம். அதுதான் அவர்கள் கருதுகின்ற மூன்றாவது பட்சியாகவும் இருக்கலாம்.
நாம் பார்ப்பனர்களுக்குப் பல முறை கூறியிருக்கிறோம். இது மனு மாந்தா காலமல்ல! உங்களுடைய பேடித்தனமான, மறைந்து தாக்கும் வேலைகள் எல்லாம் திராவிட நாட்டைப் பொருத்தவரையில் பயன்படாது! உங்களுக்குச் சில விபீஷ ணர்கள் அகப்பட்டாலும் கடைசிவரைக்கும் விபீஷணர் களாயிருக்க எந்த ஒரு திராவிடனும் அகப்படமாட்டான்! அப்படி அகப்பட்டாலும் அவன் ஒரு திராவிடனாகவும், திராவிடனுக்குப் பிறந்தவனாகவும் இருக்க மாட்டான் என்றே எதிர்கால வரலாற்றிலே இடம் பெறுவான்! அப்படியே சிலர் அகப்பட்டாலும் அவர்களுடைய துணையைக் கொண்டு திராவிடர்களை அழித்து விடலாமென்று மனதினால் எண்ண வேண்டாம்! ஒவ்வொருத்தனும் ஏன் நான் தேவடியாள் பிள்ளை? ஏன் நான் நாலாம் ஜாதி? அய்ந்தாம் ஜாதி? இந்த நாட்டை என் முன்னோர்கள் ஆளவில்லையா? இப்பொழுது நான் பாடுபடவில்லையா? உழைக்கிறவன் நான், அய்க்கியம், தேசியம், மதம், கடவுள், வெங்காயம் என்கிற பெயர்களால் மேனி வாடாமல் உண்ணுகிறவன் நீயா? என்று தாழ்த்தப்பட்ட தோழர்களிலிருந்து உயர்த்தப்பட்டதாக நடித்துக் கொண்டிருக்கிற மந்திரிகள் வரை கருதிக் கொண்டிருக்கிற காலம் இது.
நீங்கள் சொல்லி வந்த தேசத் துரோகிகள் என்கிற பட்டம் இனி நாட்டில் செலவாணியாகாது என்பதைத் தெரிந்துகொண்டு, வகுப்பு வாதிகள், வகுப்பு துவேஷிகள் என்கிற பட்டத்தைத் தீவிரமாகக் கட்ட ஆரம்பித்திருக்கிறீர்கள். இது நெஞ்சறிந்த பொய் என்று உங்களுக்குத் தெரியும்! வகுப்புத் துவேஷிகள் நீங்களா? அல்லது நாங்களா? இருந்தும், இந்த அபாண் டத்தைக் கண்ணை மூடிக் கொண்டு பரப்பு கிறீர்கள்!
சொல்லுகிறவன் சொன்னாலும் கேட்பவனுக்கு புத்தி எங்கே போச்சு என்கிற பழமொழியைத் தெரிந்திருக்கும் நீங்கள் தான், அந்தப் பழமொழியை அறிந்திருக்கும் மந்திரிகளிடத்தில் தலையணை மந்திரம் செய்கிறீர்கள்! மெய்யாகவே நாங்கள் வகுப்புத் துவேஷிகள், உங்களை (பார்ப்பனர்களை) ஒழித்து விட விரும்புகிறவர்கள் என்று கருதுகிறீர்களா? அது உண்மையாக இருந்தால், உங்க ளுடைய அட்டூழியமான அநீதிகளால் எத்தனை அக்கிர காரங்கள் இதுவரை சாம்பலாகியிருக்க வேண்டும்? எத்தனை பேர்கள் நடுத்தெருக்களிலேயே நாய்களைப் போலச் சாகடிக்கப்பட்டிருக்க வேண்டும்? எத்தனை பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்? வட நாட்டிலே நடந்த மிருகச் செயல்களை நாள்தோறும் கேட்ட இந்த நாட்டில், வகுப்பு வெறி திராவிடர்களால் பரப்பப்பட்டு வருகிற நிலையிருந்திருந்தால், உண்மையாகவே பார்ப்பனன் என்று சொல்லிக் கொள்வதற்கு ஒரு புல் பூண்டு இங்கே இருக்க முடியுமா? ஏன் விபரீதமான முயற்சியில் இறங்கு கிறீர்கள்! நீங்களே பார்ப்பனன், பிராமணன், துரோகிகள் என்று சொல்லிக் கொள்வதிலே, அழைக்கப்படுவதிலே வெட்கப்பட வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர, உங்களைக் கொன்றெறிந்து விட வேண்டுமென்ற எண்ணம், அதற்கான நடவடிக்கை எங்களிடத்தில் ஒரு காலத்திலும் இருந்ததுமில்லை! இருக்கப் போவதுமில்லை! இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வதாயிருந்தால், முதலில் பார்ப்பனியத்திற்குப் பாதுகாவலாய் இருக்கும் எங்கள் தாய்களையும், தந்தைகளையும், மனைவிகளையும் கொலை செய்ய வேண்டியவர்களாவோம். ஏன்? நாங்கள் அழிய வேண்டுமென்று விரும்புவது பார்ப்பனர்கள் அல்ல. பார்ப்பனியமே.
இதற்கு மாறுபாடாக உங்களுடைய இரத்தத்தைச் சிந்தாமலே, எங்களுக்குள்ளே மோதச் செய்து எங்களை அழிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வந்திருக்கிறீர்கள்! கூடிக் கெடுப்பது, அடுத்துக் கெடுப்பது, பேசிக்கெடுப்பது என்கிற முறைகளும் அதைக் கையாளுகிற ஆண்களும், பெண்களும் என்கிற நிலையும் இனி பிரயோசனப்படாது என்ற முடிவுக்கு வந்தவர்களாய், இந்து மகா சபை என்கிற பெயரால் ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கத்தில் ஆயுதங்களைச் சேர்த்தீர்கள்! கோவில்களுக் குள்ளேயே கவாத்துப் பழகினீர்கள்! இவற்றை உங்களால் மறுக்கமுடியுமா?
மதவெறி, ஜாதிவெறி ஒழிய வேண்டும் என்பதிலே அக்கறையும், ஆசையும், உண்மையும் இருக்கிறதென்றால் என்ன செய்ய வேண்டும்?
மத சம்பந்தமான பேச்சுகளை, மதப்பெருமைகளைக் கூறுகின்ற நூல்களை, பேசுவது, எழுதுவது, வெளியிடுவது, விற்பது என்கிற உங்களுடைய போக்கை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். பாரதக் கதைகளை எழுதி எழுதிப் பாமரர்களை வஞ்சிப்பதையும், இராமாயணக் கதைகளை எழுதி, எழுதி இழிவுபடுத்தி வருவதையும், புராணங்களை எழுதி, எழுதி புல்லறிவை வளர்ப்பதையும் விட்டொழித்து விட வேண்டும். நிர்வாணப்படங்களைப் போட்டு, ஆடலழகிகளைக் காண்பித்து மக்களை ஆலயங்களுக்கு அழைக்கும் போக்குக்கு ஆதரவு அளிக்கக் கூடாது. மடச்சாமிகளைக் காட்டி மகேஸ்வரன் பெயரைச் சொல்லி மக்களை மந்தமதியினராக்குவதை விட்டொழிக்க வேண்டும். புராண நாடகங்கள், புராண சினிமாக்களை வளர்ப்பது புனிதமானது என்ற போக்கை கைவிட வேண்டும். எந்த கலைகளுமே இந்த நாட்டுப் பழங்குடி மக்களின் வாழ்வைக் கெடுக்கும் நாச கருவிகளால் கையாளப்படுவது வெறுக்கப்பட வேண்டும். ஜாதிக்கொரு நீதி என்ற இந்துலாவை எடுத்துவிட உறுதி வேண்டும். ஒத்த தகுதிக்கு எல்லா மக்களையும் கொண்டுவர முயற்சிக்க வேண்டுமே தவிர, தகுதியில்லாத பலரை ஒரு பட்டியலில் சேர்த்து, தகுதியும் திறமையும் என்று பேசுவதை மறந்துவிட வேண்டும். மத வேறுபாடுகளைக் காட்டும் மதச் சின்னங்களை அணிந்திருப்பது ஆபத்து என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். இந்த வேலையை இன்னார்தான் செய்ய வேண்டுமென்ற ஜாதிக்கட்டுப்பாட்டை இந்தநாள் வரைதான் கூறி வந்தோம், இனி அந்தப் போக்கு உதவாது என்பதை உணர வேண்டும். காந்தியாரின் மரணத்தை அறிந்து கொள்ள முடியாத ஜோதிடர் வர்க்கங் களையும், தேவ பாஷை என்கிற செப்படி வித்தை செய்து வரும் முன்ஷிகள், சாஸ்திரிகள், புரோகிதர்கள் என்கிற புரட்டர்கள் வர்க்கங்களையும், வேத பாராயணப் பெயரால் விதவிதமான வேஷம் போடுபவர்களையும் அம்பலத்தில் இழுத்து வந்து அவர்களின் அக்கிரமங்களை விளக்கிக் கூற வேண்டும். மக்களின் உழைப்பை, செல்வத்தை மதப்பெயர் கூறி எவர், எந்த முறையில் வஞ்சித்தாலும், அந்த இழிவை இன்றே ஒழிப்பதற்கு அக்கறை காட்டவேண்டும்.
இவற்றை செய்வீர்களா? இக்காரியங்களை செய்ய முன்வராமல் மேலும் மேலும் வகுப்பு வெறியையே வளர்க்கப் போகின்றீர்களா? பதில் கூற வேண்டியதில்லை. நீங்கள் இனிச் செய்து வரும் செயல்களே நாட்டில் பதில் கூறுவதாக ஆகும். ஆனால், இந்துமத சாம்ராஜ்ய கனவை - வருணாசிரம வக்கிர ஆட்சிக் கனவை - எந்தப் பெயராலும், எந்த நடவடிக்கைகளாலும் உங்களால் இந்த நாட்டில் இனி ஏற்படுத்த முடியாதென்பது மட்டும் உறுதி.


                         -------------------------------தந்தை பெரியார் 'குடிஅரசு' - தலையங்கம் - 21.02.1948

19.6.22

இதிகாசங்களும், ஒழுக்கமும்! - பெரியார்

 

இதிகாசங்களும், ஒழுக்கமும்!

 


இதிகாசங்களில் சிறந்தவையாக இராமாயணமும், பாரதமும் விளக்கப்படுகின்றன.

 

இவை பக்தியை அடிப்படையாய்க் கொண்டவையா? அல்லது மனிதன் நடந்து கொள்ள வேண்டிய நடத்தைகளை, ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டவையா? என்று சொல்ல முடியாத தன்மையில் - இரண்டிற்கும் பயன்படாத தன்மையில் தான் அமைக்கப்பட்டிருக்கின்றன.

 

இவ்விரண்டு நூல்களில் எது முந்தியது? எது பிந்தியது? என்பது விவாதத்திற்குரியதாகவே இருந்து வருகிறது. (Evolution Theory) எவாலுஷன் தியரி என்னும் வளர்ச்சிக் கொள்கைப்படி பார்ப்போமானால், பாரதக் கதை முந்தியதாகவும், இராமாயணக் கதை பிந்தியதாகவும் தான் சொல்லி ஆக வேண்டும்.

 

ஆனால் எந்தக் காரணத்தாலோ இராமாயணக் கதை முந்திய நடத்தையாகவும், பாரதக் கதை பிந்திய நடத்தையாகவும் புனையப்பட்டு விட்டது.

 

இந்தக் கட்டுரையில் அதைப்பற்றிய விவாதத்தை ஒதுக்கி வைத்து விட்டு, அந்தக் கதைகளால் ஏற்படும் பயன் என்ன என்பதைப் பற்றி ஆராயலாம் என்றே கருதி இதை எழுதுகிறேன்.

 

இதை வலியுறுத்த விஷ்ணுவுக்கு - விஷ்ணு மனிதனாகப் பிறப்பதற்குப்  பல சாபங்கள் பல சம்பவங்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன; அச்சம்பவங்கள் யாவும் ஒழுக்கம் அற்றவையாகவோ கற்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால் விஷ்ணுவுக்குக் கடவுள் தன்மையோ, இராமனுக்கு மனிதத் தன்மையோ இராமாயணத்தில் கற்பிக்கப்படவில்லை என்று உறுதியாய்க் கூறலாம். எப்படியெனில் விஷ்ணு மனிதனாகப் பிறப்பதற்கு புராணங்களில் பல காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

 

அவைகளில்,

 

ஒன்று: விஷ்ணு ஒரு கற்புள்ள அசுரப் பெண்ணைக் கற்பழித்து விட்டதால் அந்தப் பெண்ணின் சாபத்தால் மனிதாகப் பிறந்தான். (இது கந்தபுராணம் தக்க காண்டத்தில் உள்ளது)

 

மற்றொன்று: விஷ்ணு தன் மனைவியுடன் ஒரு பிரதோஷ வேளையில் சுகித்துக் கொண்டிருக்கும் போது (புணர்ந்து கொண்டிருக்கும் போது) அற்புதர்க்கன் என்னும் சிவகணங்களின் தலைவன் அங்கு சென்று, என்ன நீ இப்படி செய்கிறாய் என்று கேட்டான். அதற்கு விஷ்ணு, நீ யாரடா இப்படிக் கேட்பதற்கு? என்றான். இதை அந்த சிவகணத்தலைவன் நந்தியிடம் தெரிவித்தான். நந்தி உடனே விஷ்ணுவுக்கு, பூமியில் பிறந்து மனைவியைப் பிரிந்து தவிக்கும்படி சாபம் கொடுத்தான் (இது 'சிவ ரகசிய'த்தில் இருக்கிறது)

 

மற்றொன்று: இதுபோலவே மாலை நேரத்தில் விஷ்ணு தன் மனைவியைப் புணர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த பிருகு முனிவர் மேலும் சென்ற போதும் விஷ்ணு நீங்காமலும், முனிவரை வரவேற்காமலும் இருந்ததால் பிருகு முனிவர் சாபமிட்டார். (இதுவும் 'சிவ ரகசிய'த்தில் இருக்கிறது)

 

மற்றொன்று: ஒரு முனிவன் மனைவியை விஷ்ணு கொன்று விட்டான். அதனால் அந்த முனிவன் விஷ்ணுவுக்கு (ராமன்) தன் மனைவியை இழந்து வருந்தும்படி சாபமிட்டான். (இது இராமாயணம் உத்தரகாண்டத்திலும், ஸ்கந்த புராணம் உபதேசகாண்டத்திலும் இருக்கிறது) இந்த சாபங்கள் பலவிதமாகும். தேவர்களுக்காக அதைப் பயன்படுத்திக் கொண்டு மனிதனாகப் பிறந்தார் என்பது இராமாவதாரக் கருத்து.

 

இந்தப் பிறப்பு "தசரதனுக்குப் பிள்ளை" என்னும் பெயரில் "யாகப் புரோகிதப் பார்ப்பனருக்குத் தன் தாய் கர்ப்பமடையப் பிறந்தான்." அப்படிப் பிறப்பதிலும், பல இழிதன்மை நடப்புக்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. உலக ஷேமத்திற்காக இராமனாக விஷ்ணு வந்தான் என்றால் இப்படி ஒழுக்கக்கேடும், இழிவும், அவமானகரமானதும், அசாத்தியமானதுமான நடத்தைகள் ஏன் ஏற்பட்டிருக்க வேண்டும்?

 

இந்த மாதிரி நூல்களால் (அவதாரங்களால்) மக்களுக்கு என்ன நன்மை ஏற்படும்? மற்றும் இராமன், யாகக் கொலையைத் தடுத்த தாடகையைக் கொல்லுவது எதற்காக? இதனால் மக்களுக்கு ஏற்படும் படிப்பினை என்ன? மற்றும் இராமன் எதற்காக நாடு கடத்தப்பட்டு காட்டுக்கு போனான்? அவன் நாடு கடத்தப்பட்டதற்குக் காரணம் இராமனின் துரோகமும், இழிதன்மையுமான காரியம் தானே இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதாவது அயோத்திய அரசு தசரதனுக்குப் பின் தனக்கு இல்லை என்பதும், அது பரதனுக்கு உரித்தாக்கப்பட்டது என்பதும் இராமனுக்குத் தெரியும். அப்படி இருக்க அயோத்தியின் ஆட்சியை இவன் (இராமன்) இச்சிக்கலாமா?

 

தகப்பன் அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டாலும் அவதார புருஷனாகிய இவன் (இராமன்) தகப்பனுக்குப் புத்தி சொல்லித் திருத்த வேண்டாமா?

 

இவன் எப்படி ஆசைப்படலாம்? இந்த ஆசையில் மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன? மற்றும் அரசு கிடைக்காமல் போய்விட்டதே என்றும் விசனப்படலாமா? அதற்காக உரியவனாகிய தம்பியையும், தம்பியின் தாயையும் குறைக் கூறலாமா? வசவு மொழி கூறலாமா? இந்தச் செய்கையால் மக்களுக்கு என்ன படிப்பினை கிடைக்கும்?

 

காட்டில் வசிக்கையில் "முனிவர்களுக்கு - பிராமணர்களுக்கு எதிரானவர்களைக் கொல்லத்தான் நான் காட்டுக்கு வந்தேன்" என்று சொல்லுகிறானே, இதனால் மக்களுக்கு என்ன படிப்பினை உண்டாகும்?

 

வாலியை முதுகுப்புறம், அவனுக்குத் தெரியாமல் நின்று, அவன் வேறு ஒருவனிடம் போராடிக் கொண்டிருக்கும் போது அம்பை எய்திக் கொன்றானே, இதனால் மக்களுக்கு என்ன படிப்பினைஒழுக்கம் - வீரம் ஏற்படக்கூடும்?

 

தன் ஆட்சிக்கு உள்ள குடிமகன் ஒருவன் (சம்பூகன்) "பார்ப்பானைக் கடவுளாக வணங்காமல் கடவுளை நேரில் வணங்கிப் பயன்பெற முயற்சித்தான்" என்று அவனைத் துண்டு துண்டாக வெட்டிச் சித்தரவதை செய்தானே, இதனால் மக்களுக்கு என்ன படிப்பினை ஏற்படக்கூடும்?

 

இராமனால் கொல்லப்பட்ட ஒரு மனிதனின் தாயாரை, அவள் "தன்னைப் புணரும்படிக் கேட்டாள் - பலாத்தாரத்தில் பிரவேசித்தாள்" என்று ஒரு இராஜஸ்திரீயை மூக்கும், முலையும், காதும் அறுக்கச் செய்தானே, அதனால் மக்களுக்கு என்ன படிப்பினை ஏற்படக்கூடும்?

 

வால்மீகி இராமாயணக் கதையின் உட்கருத்துப்படி இராமன் மனைவி சீதை தானாக இராவணன் பின் சென்றிருக்க, அதை இராமனும் தெரிந்திருக்க வேண்டியவனாக இருக்க, இராவணன் மீது குற்றம் சுமத்திக் கொன்றதன் பயனாய் மக்களுக்கு என்ன ஒழுக்கம், படிப்பினை ஏற்பட முடியும்?

 

இராவணனோடு சீதை பத்து மாதம் அவன் அரண்மனையில் அந்தப்புரத்தில் இருந்தும், அவனுக்கு சீதை கர்ப்பமாகி இருந்தது தெரிந்ததும் அவளைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து பிறகு அவளைக் கண்ணைக்கட்டி ஆளில்லாத காட்டில் கொண்டு போய் விட்டுவரச் செய்ததால் மக்களுக்கு ஏற்படும் படிப்பினை என்ன?

 

கடைசியாக, இராமன் எல்லா மக்களைப் போலவே ஆற்றில் இறங்கி செத்து மேல் உலகம் போனான் என்பதனால் மக்களுக்கு ஏற்படும் படிப்பினை என்ன?

 

இவ்வளவு பயனற்றதும் கேடானதுமான கருத்தை வைத்து ஒரு கதையை அதுவும் மற்றொரு (கந்தப்புராண) கதையிலிருந்து எடுத்துக் கொண்ட கதையை கடவுளுடன் சம்பந்தப்படுத்தி, மத நூலாக்கி, இலக்கியமாக்கி, கடவுள் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தி உலக மக்களையே மடையர்களாக்கிவிட்டு அதை வேதசாரம் என்று கூறி "பக்திக்காக" – ஒழுக்கத்திற்காக மக்கள் படிக்க வேண்டுமென்றால் இது எவ்வளவு பெரிய மோசடியான காரியம் என்று சிந்திக்க வேண்டுகிறேன்.

 

மேலும் இராமன் மனிதனாகப் பிறந்தான், சீதை மனுஷியாகப் பிறந்தாள், இராமன் தம்பிமார் மனிதராகப் பிறந்தார்கள் என்று எழுதிவிட்டு, இவர்கள் 1000-வருஷம், 10.000-வருஷம் வாழ்ந்தார்கள், அரசு செலுத்தினார்கள் என்று அதில் - இராமாயணத்தில் எழுதி இருப்பது எப்படி பொருத்தமானதும் உண்மையானதுமாக இருக்க முடியும்? அறிவாளிகள் சிந்திக்க வேண்டும்.

 

               ------------------------------- 22.06.1972- "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்