Search This Blog

15.10.15

சட்டசபைத் தேர்தலில் சுயமரியாதைக்காரர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?-பெரியார்

நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?

வரப்போகும் இந்திய சட்டசபைத் தேர்தலில் சுயமரியாதைக் காரர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும், மேலால் நடக்க வேண்டிய பிரசாரங் களைப் பற்றியும் எனக்குப் பல கடிதங்களும், கேள்விகளும் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றுள் தோழர் ஊ.னு. நாயகம் அவர்களுடைய கடிதம் முக்கியமானது.

சுயமரி யாதைக்காரர்களுக்குத் தேர்தல் விஷயத்தில் இன்ன கட்சியைத் தான் ஆதரிப்பது என்கின்ற எவ்வித நிபந்தனை இதுவரை ஏற்படவில்லை என்பது யாவரும் அறிந்ததே. தேர்தல் களில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கின்ற தன்மை மாத்திரம் தான் இதுவரை சு-ம. காரர்கள் கவனித்து வருகிறார்கள்.
சுய மரியாதைக்காரர்கள் ஏதாவது ஒரு கட்சியை ஆதரிப்பது என்கின்ற நிலை ஏற்பட வேண்டுமானால் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் என்கின்ற கொள்கைக்கு பாதகமல்லாமல் நமது குறைந்த பட்சக் கொள்கையை ஒப்புக் கொள்ளக் கூடிய கட்சியைத்தான் ஆதரிக்க வேண்டி வரும்.
ஜஸ்டிஸ் கட்சியோ பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளப் போகின்றது. அதற்கு ஏற்றாற்போல் சுயமரியாதைக்காரர் பலருக்கும் காங்கிரசில் சேரலாமா என்கின்ற எண்ணம் இருந்து வருகின்றது. சுயமரியாதைக்காரர்களுக்கு ஜஸ்டிஸ் கட்சியானது பார்ப்பனர் களையும் சேர்த்துக் கொண்டு, வகுப்புவாரி பிரதிநிதி திட்டக் கொள்கையையும் அது வழவழா செய்துவிட்டு,
பார்ப்பனரல்லாத தொழிலாளிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் ஆகிய ஏழை மக்கள் விஷயத்தில் தக்க மாறுதலுக்கு ஏற்பாடு செய்து அவர்களை முன்னுக்குக் கொண்டு வரத்தக்க கொள்கையும், திட்டமும் கொண்டதாக இல்லையானால் சுயமரியதைக்காரர்களில் பலர் காங்கிரசில் சேர்வதை நாம் ஆட்சேபிக்க முடியாது.
காங்கிரஸ் பார்ப்பனர் ஆதிக்க தாபனம் என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால் ஜஸ்டிஸ் கட்சி இன்று பணக்காரர்கள் ஆதிக்க தாபனம் என்று சொல்லத்தக்க நிலையில் இருப்பதை யாராவது மறுக்க முடியுமா?  என்று கேட்கிறோம். புழுத்ததின் மீது நாய் விட்டை இட்டது என்பதுபோல், ஜஸ்டிஸ் கட்சி இந் நிலைமையில் பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்ளுவது என்கின்ற முடிவுக்கு வந்து விட்டால் பிறகு காங்கிரசுக் கும், இதற்கும் என்ன வித்தியாசம் என்பது நமக்கு விளங்கவில்லை?
ஜஸ்டிஸ் கட்சி, பார்ப்பனர்களை வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளட்டும், என்றாலும் அதன் பிறகு செய்யப்போகும் காரியம் என்ன என்பதை மக்களுக்கு விளக்க வேண்டாமா?  என்று தான் கேட்கின்றோம். சமுதாய விஷயத்தில் காங்கிரஸ் பெரிதும் பிற்போக்கான புத்தியுடையது என்பதையும், வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்திற்கு முட்டுக்கட்டை போடு கின்றது என்பதையும், பார்ப்பன ஆதிக்கத்தைத் தான் சுயராஜ்ஜியம் என்று சொல்லப்படுகின்றது என்பதை யும் நாம் ஒப்புக் கொள்ளுகிறோம்.
அதுபோலவே ஜஸ்டிஸ் கட்சியும் உண்மையான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு இடையூறாகிக் கொண்டு வருவதுடன் சமுதாய விஷயத்திலும் பொருளாதாரத் துறையிலும் மிகவும் பிற்போக்கான தன்மையில் போய்க் கொண்டிருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
காங்கிரஸ் ஸ்தாபனங்களில் பார்ப்பனர் எண்ணிக்கை அதிகமாய் இருப்பது போலவே, ஜஸ்டிஸ் ஸ்தாபனங்களில் பணக்காரர்களுடைய எண்ணிக் கையே அதிகமாய் இருக்கின்றது. காங்கிரசில் எப்படிப் பார்ப்பனக் கூலிகளே பெரிதும் பார்ப்பனரல்லாதாராய் விளங்குகின்றார்களோ,
அது போலவே பணக்காரர்களின் கூலிகளும் பெரிதும் ஏழை மக்க ளாகவும், தாழ்த்தப்பட்ட மக்களாகவும் விளங்குகின்றார்களே ஒழிய, உண்மையான ஏழைகள், தொழிலாளிகள், தாழ்த்தப்பட்டவர்கள் என்பவர் களுக்கு அதில் இடமில்லாமல் செய்யப்பட்டு வருகிறது.
சுயமரியாதை இயக்கம் உண்மையான சமத்துவ நோக்கம் கொண்டது என்று ஒரு நடு நிலைமை நியாயாதிபதியின் தீர்ப்பைப் பெற வேண்டுமானால், இன்றைய ஜஸ்டிஸ் கட்சியையும் காங்கிரசையும் ஒன்றுபோல இல்லாவிட்டாலும் ஒன்றுக்கொன்று பிரமாத வித்தியாசம் கொண்டதல்ல என்றுதான் கருதியாக வேண்டும் என்கின்ற நிலைமை ஏற்பட்டு விட்டது.
சுயமரியாதை இயக்கமானது காங்கிரசினால் அதன் முழு பலத்தோடு எதிர்க்கப்பட்டு வந்தது உண்மை என்றாலும், அதனால் யாதொரு கெடுதியும் சு.ம. இயக்கத்திற்கு ஏற்பட்டுவிடவில்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
அதோடு சுயமரியாதை இயக்கம் காங்கிரசையும் அதன் தலைவர்களையும் சிறிதும் தயவு தாட்சண்யமின்றி சமய சந்தர்ப்பமின்றியும் நண்பர் நண்பரல்லா தவர்கள் என்பதையும் கவனியாமல் வெளியாக்கியும் எதிர்த்தும் வந்திருக்கின்றது.
ஆனால் சுயமரியாதை இயக்கம் ஜஸ்டிஸ் கட்சியைச் சமய சந்தர்ப்பமில்லாமல் ஆதரித்தும், நல்லவர் யார், கெட்டவர் யார்?  பொது நலத்தலைவர் யார்? சுய நலத் தலைவர் யார் என்பதைக் கவனிக்காமலும் எல்லாச் சமயத்திலும் அவர்களது எல்லாக் காரியத்தையும் ஆதரித்து வந்திருக்கிறது.
இவற்றின் பயன் என்னவாய் முடிந்தது என்றால், காங்கிரசினால் சுயமரியாதை இயக்கத்திற்கு எவ்விதக் கெடுதலும் செய்ய முடியவில்லை என்பதோடு காங்கிர காரருக்குச் சுயமரியாதை இயக்கத்தைத் தழுவ வேண்டும் என்கின்ற எண்ணம் சில காங்கிர காரர்களிடமாவது வந்து இருக்கிறது.
ஜஸ்டிஸ் கட்சிக்கோ பல நன்மைகள் செய்யக் கூடிய சந்தர்ப்பமிருந்தும் அது சுயமரியாதை இயக்கத்துக்கு யாதொரு நன்மையும் செய்யவில்லை என்பதோடு, சுயமரியாதை இயக்கத்தை ஒடுக்க ஜஸ்டிஸ் கட்சியார் முயற்சிக் கிறார்கள் என்று பொது ஜனங்கள் நினைக்க வேண்டிய அளவுக்கும் தைரியமாய் நடந்து கொண்டதான பலன் தான் ஏற்பட்டது என்பதை வருத்தத்தோடு தெரிவிக்க வேண்டி இருக்கிறது.
எப்படி இருந்தபோதிலும் சுயமரியாதைக்காரர்கள் சமுக வாழ்வு விஷயத்திலும், பொருளாதார விஷயத்திலும் தாழ்த்தப்பட்டு ஜீவனத்துக்குக் கஷ்டப்படும் - இழி மக்களாய் கருதப்படும் பார்ப்ப னரல்லாதார் முன்னேற்ற விஷயத்தைத் தங்களது முக்கிய நோக்கங் களில் ஒன்றாய்க் கொண்டிருப்பதை மாற்றிக் கொள்ள முடியாது.
சுயமரியதைக்காரர்கள் பொருளாதார விஷயத்தையே முக்கியமாய் கருதுவதா அல்லது ஜாதி, மத மூடநம்பிக்கை ஆகியவைகளின் கொடுமைகளிலிருந்து மக்களை விடுவிக்கும் வேலையையே முக்கியமாய்க் கருதுவதா என்பதை இப்போது ஒரு முக்கியப் பிரச்சினையாக சில சு.ம. தோழர்கள் கிளப்பி விட்டிருக் கிறார்கள். இதைச் சீக்கிரத்தில் முடிவு கட்டித்தான் தீரவேண்டும்.
சமுதாய விஷயத்திலேயே உழைப்பதென்றாலும் ஜாதி, மத மூட நம்பிக்கை விஷயத்தில் உழைப்பதானாலும் பொருளாதாரப் பிரச்சினை அதிலிருந்து விலகியதாகாது. எவ்விதப் பிரச்சாரமும், சட்டத்திற்கும், சமாதான தன்மைக்கும் கட்டுப்பட்டு செய்வ தென்பதுதான் சுயமரியாதைக்காரர்கள் கொள்கை என்பதை நாம் மறுபடியும் ஒருதரம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.
ஆனால் சட்டத்திற்கு உட்பட்டு செய்யப்படும் பிரச்சாரம் என்பதில் ஜாதிமத பொருளாதார மூட நம்பிக்கைகளை ஒழித்தலும், உயர்வு தாழ்வை அகற்றலுமான கொள்கை சேர்ந்ததல்ல என்று அரசாங்கத்தார் கருதுவார்களானால் அது விஷயத்திலும் நாம் சுயமரியாதைக்காரர் சீக்கிரத்தில் ஒரு முடிவு செய்துகொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம்.
எனவே இந்த விஷயங்கள் எல்லாம் சமீபத்தில் நடைபெறப் போகும் ஜஸ்டிஸ் கட்சி மகாநாடும், காங்கிரஸ் மகாநாடும், மாகாண மகாநாடும் நடந்த உடன் சுய மரியாதை மகாநாடோ, அல்லது சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள் மகாநாடோ ஒன்று கூட்டி அதில் முடிவு செய்து கொள்ள வேண்டியவர்களாயிருப்பதால் அது வரையில் எல்லாத் துறையிலும் நம்தோழர்கள் பொறுத்து இருக்க வேண்டும் என்றும், அதை எதிர்பார்த்தே நானும் பொறுத்து இருக்கிறேன் என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
சுயமரியாதைச் சங்கத்தலைவர்கள் என்கின்ற முறையில் தோழர் சு.மு. சண்முகம் அவர்களது அபிப்பிராயமும் இதில் கலந்திருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
-----------------------தந்தைபெரியார் - ”பகுத்தறிவு” - தலையங்கம் - 16.09.1934

14.10.15

பார்ப்பனருக்கு பத்திரிக்கைகளே வலிமை தரும் ஆயுதங்கள்!-பெரியார்


பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே!

நான் இந்த ஊருக்கு (மதுக்கூர்) வந்து பல ஆண்டுகள் ஆகின்றன் இந்த ஊரில் கழகம் சரிவர இயங்கவில்லை என்று விசுவநாதன் (பட்டுக் கோட்டை) கூறினார். இருந்து இருக்கலாம். இங்கு திராவிடர் கழகம் முயற்சி எடுத்துக் கொண்டாலும், மக்கள் ஆதரவு அவ்வளவாக ஏற்படுவது இல்லை. காரணம் கழகக் கொள்கைகள் அவ்வளவு கசப்பானவை. "எங்களுடைய செய்திகளை இந்த நாட்டுப் பத்திரிகைகள் சரிவர வெளி இடுவதுமில்லை என்றார்" சி.என். விசுவநாதன். இவர் பட்டுக்கோட்டையில் இருந்தார். தி.க. மாநில அமைப்பாளர் அது உண்மைதான்.

இந்த நாட்டுப் பத்திரிக்கைகளை நான் என்றைக்குமே மதித்தது இல்லை. எவனாக இருந்தாலும் அயோக்கியன் என்றே எண்ணிக் கொண்டும், சொல்லிக் கொண்டும் வருபவன். பத்திரிகைக்காரர்களின் தயவு இன்றி அவர்களை எதிர்த்துக் கொண்டு இயக்கம் நடத்துவதும் அதில் மிஞ்சியதும் நாங்கள் தான். மற்றக் கட்சிக்காரன்கள் எல்லாரும் பத்திரிக்கைக்காரன் தயவைச் சம்பாதிப்பதில் பெரிதும் ஈடுபடுவார்கள். காந்தியே பத்திரிக்கைக்காரனிடம் கெஞ்சியது எனக்குத் தெரியும்.

அன்று காங்கிரசிலே இரு பிரிவு. காந்தி ஒரு பக்கம் - திலகர் ஒரு பக்கம். சென்னையில் உள்ள பார்ப்பனப் பத்திரிகைகள் எல்லாம் காந்தியை எதிர்க்க ஆரம்பித்தன. திலகர் செத்த பிறகு கூட காந்தியை எதிர்த்துக் கொண்டே வந்தார்கள். இந்த இரு கட்சிகளில் சென்னையில் ஒரு கட்சிக்கு இராஜாஜி தலைவர்; மற்றொரு கட்சிக்கு கஸ்தூரி ரெங்க அய்யங்கார் தலைவர்!

கஸ்தூரி ரெங்க அய்யங்கார் முதலிய பார்ப்பனர்களுக்கு இராஜாஜியைப் பிடிக்காது. அந்தக் கோபத்தில் காந்தியையே தாக்க ஆரம்பித்து விட்டனர். 'இந்து' பத்திரிகை போன்றது காந்திக்கு விரோதமாக இருந்தது கண்டு காந்தியே பயந்து கஸ்தூரி ரெங்க அய்யரையே அணுகிக் கேட்க வேண்டியதாகி விட்டது. நான் காந்தி சீடனாக இருந்த காரணத்தினால் இவை எல்லாம் நன்கு தெரியும். நான் மட்டும் காங்கிரசில் இருந்த காலம் கொண்டு பத்திரிகைகளைக் கண்டித்து வருகின்றேன்.

காந்தியார் பார்ப்பனப் பத்திரிகைகளுக்குச் சரணாகதி அடைந்து அவர்களுக்கு ஆதரவாக ஓர் அறிக்கையே விட்டார். "எனக்குச் சனாதன தர்மத்தில் நம்பிக்கை உண்டு. நான் ஒரு இந்து. வருணா சிரமத்தில் நம்பிக்கை உடையவன். மோட்ச நரகத்திலும் முன்பின் ஜென்மத்திலும் (பிறப்பிலும்) நம்பிக்கை உடையவன் என்று அறிக்கை வெளியிட்டுவிட்டு கஸ்தூரி ரெங்க அய்யங்காரிடமும் தூது அனுப்பிச் சிநேகம் பண்ணிக் கொண்டார். பிறகு தான் பத்திரிக்கைகள் ஆதரிக்கத் தொடங்கின. எதற்குச் சொல்ல வந்தேன் என்றால் பத்திரிகைக்காரர்கள் இப்படி எல்லாம் ஆட்டிப்படைத்தார்கள்.

நான் மட்டும் எனது பொது வாழ்வில் இத்தனையாண்டுகளாக இவர்களைச் சட்டைப் பண்ணுவது கிடையாது. இந்தப் பத்திரிக்கைக்கார அயோக்கியர்கள் எல்லாரும் கட்டுப்பாட்டாக எங்களைப் பற்றி எல்லாம் இருட்டடிப்பு செய்வதோடு மட்டும் அல்லாமல், எங்களைப் பற்றிக் கட்டுப்பாட்டாகவும், தவறாகவும், புளுகிக் கொண்டும் வருகின்றனர். ஒருத்தன் புளுகினால் எல்லோரும் ஒரே மாதிரியாகவே புளுகுவான்.

தோழர்களே! நான் தான் இவர்களை வன்மையாகக் கண்டித்து வருபவன் என்றேன். வன்மையாக என்றால் மிகவும் கடுமையான சொற்களைப் பயன்படுத்திக் கண்டித்து வருகின்றேன். இந்தப் பத்திரிக்கைக்கார அயோக்கியர்களுக்கு மானமா? ஈனமா? எனவே சிரித்து கொண்டே போய் விடுவார்கள்.

பொப்பிலிராஜா ஜஸ்டிஸ் கட்சித் தலைவராக இருந்தாலும் கூடப் பார்ப்பனப் பத்திரிகைகளுக்குச் சலாம் போட்டுக் கொண்டு இருந்தார். கஸ்தூரி ரெங்க அய்யங்காருக்கு உடம்புக்கு அசவுக்கியம் என்றால் போய்ப் பார்த்து வருவார். இது அன்பால் அல்ல- தங்களுக்கு விரோதமாக இருக்கக் கூடாது என்ற பயத்தால் ஆகும்.

நான் மற்றக் கட்சிக்காரன் மாதிரிப் பேசிப் போட்டு தங்கள் பேச்சு பத்திரிக்கையில் வருகிறதா என்று பார்த்துக் கொண்டு இருப்பவன் அல்ல. நான் தான் தினம் தினம் 10.000- க்கணக்கான மக்களை நேரில் சந்தித்து என்னுடைய கருத்துகளை எடுத்துச் சொல்லி வருபவன் ஆயிற்றே! நான் மக்களிடம் பேசும் போது கூட, "நான் சொல்லுகின்றேன். கேட்டால் கேளுங்கள் கேட்காவிட்டால் நாசமாய் போங்கள்" என்று போகின்றவன் ஆயிற்றே! எங்களுக்குப் பத்திரிகைக்காரர்கள் தயவில் ஆகக்கூடியதும் ஒன்றும் இல்லை.

இந்த நாட்டில் மற்றக் கட்சிக்காரன்கள் எல்லோரும் சுயநலத்துக்காகக் கட்சி வைத்து இருப்பவர்கள். ஆகவே அவர்கள் இந்தப் பத்திரிகைக்காரர்களின் விளம்பரத்துக்கும், தயவுக்கும் பல்லைக் கெஞ்சுவார்கள். நாங்கள் சுயநலத்துக்காகக் கட்சி வைத்து இருக்கவில்லை. எங்கள் ஆள்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சொந்த முயற்சியால் வாழ்பவர்களே ஒழிய, பொது வாழ்வு பேரால் வாழ்பவர்கள் அல்லர்.

இப்படிப்பட்ட நாங்கள் தான் இந்த நாட்டில் எந்தக் கருத்தையும் துணிந்து எடுத்துக்கூற முடிகின்றது. இப்படிப்பட்ட நாங்களா இந்த அன்னக்காவடிப் பத்திரிக்கைகளுக்கு அஞ்சப் போகிறோம்?

இந்தப் பத்திரிக்கைத் துறை அனைத்தும் பார்ப்பான் ஆதிக்கத்தில் தான் இருந்து வந்தன. தமிழன் தலை எடுக்கவே முடியவில்லை. பார்ப்பனர் அல்லாதவர்கள் (திராவிடர்) நடத்த முன் வந்தவர்கள் எல்லாரும் ஒழிந்தே போனார்கள். ஜஸ்டிஸ் கட்சி பத்திரிகை நடத்தியது- மாதம் ரூ.5000- நஷ்டத்தில் நடத்தியது. நஷ்டத்தைச் சரிக்கட்டத் தலைவர்கள் எல்லாரும் பகிர்ந்து கொள்ளுவார்கள். கடைசியில் நஷ்டத்தை ஈடுபண்ண முடியாமல் பத்திரிக்கை ஆஃபீஸ் ஏலத்தில் போனது. நான் தான் அந்த மெஷினை (இயந்திரம்) ஏலத்தில் எடுத்தேன். அதுதான் இன்று 'விடுதலை'யில் (நாளிதழ்) ஒடுகிறது.

பத்திரிக்கைத் துறையில் பார்ப்பானுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

முதலில் "சுதேசமித்திரன்" ஒன்று தான் இருந்தது. பிறகு "தினமணி" இந்தப் பத்திரிக்கைகள் தான் நல்ல மனிதனையும் பொதுவாழ்வில் அயோக்கியனாக ஆக்க உதவி வந்தன.

காங்கிரசிலேயே - 'சுதேசமித்திரன்' போன்ற பார்ப்பனப் பத்திரிக்கையில் நம்பிக்கை இல்லாது 'தேசபக்தன்' என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தது. நானும் ரூ.1000- கொடுத்து மேலும் 1000- வசூல் பண்ணிக் கொடுத்தேன். திரு.வி. கல்யாண சுந்தர முதலியாரை ஆசிரியராகக் கொண்டு அது நடந்து வந்தது. அவருக்குச் சம்பளம் 80- ரூபாய் தான். பார்ப்பனர்கள் அதனை வளர விடவில்லை. ஒழிக்க முயன்றார்கள். கல்யாண சுந்தர முதலியாரை ஒழித்து விட்டு வ.வெ.சு. அய்யர் என்ற பார்ப்பானைக் கொண்டு வர பாடுபட்டார்கள். கடைசியில் அந்தப் பத்திரிக்கை ஒழிந்தே போயிற்று. பிறகு நானும் பத்திரிக்கை ஆரம்பித்தேன் - என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

பிறகு நமது பிரச்சாரத்தின் காரணமாக ஒரு சிலர் தலை எடுக்கும் நிலை ஏற்பட்டது. நண்பர் ஆதித்தனார் "தினத்தந்தி" பத்திரிகையை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அவரும் மிகவும் கஷ்ட நஷ்டப்பட்டார். இன்று என்ன ஆயிற்று தெரியுமா? இன்று இந்த நாட்டிலேயே அதிகம் விற்பனை ஆவது அவரது பத்திரிக்கை தான்! அது தலை எடுக்க ஆரம்பித்த பிற்பாடு - பார்ப்பனப் பத்திரிகைகளின் பல்லைப் பிடுங்கிப் போட்டது. இன்று அவருக்கு 6,7- பத்திரிக்கை (என்று) ஆகிவிட்டன. சென்னையில் ஒரு தினத்தந்தி, திருச்சியில் ஒரு தினத்தந்தி, மதுரையில் ஒரு தினத்தந்தி நடக்கின்றன. இவை அல்லாமல் 'மாலைமுரசு' என்ற பேரில் திரு நெல்வேலியில் ஒன்று கோவையில் ஒன்று நடைப்பெறுகின்றன.

இந்தப் பத்திரிக்கையில் வரும் செய்திகளை எல்லாம் நான் ஆதரிக்கிறேன் என்பது அல்ல. தினத்தந்தி மிகவும் கீழ்த்தரமான பத்திரிக்கைத் தான் என்றாலும், அது பார்ப்பானுடைய பத்திரிக்கைகளின் செல்வாக்கை அடக்கிப் போட்டதே என்று தான் ஆதரிக்கிறேன்.

எவனை எடுத்தாலும் காலையில் எழுந்திருந்த உடனே தினத்தந்தியின் முகத்தில் தான் விழிக்கின்றான். எனவே இன்று ஆதித்னாருக்கு 7- பத்திரிக்கைகள். கோவையில் இராம கிருஷ்ணன் என்ற நாயுடுவுக்கு "நவ இந்தியா" என்று, கோவையில் ஒன்றும் நடக்கின்றன. கருமுத்து தியாகராய செட்டியாருக்கு 'தழிழ் நாடு' என்ற பத்திரிக்கை மதுரையில் ஒன்றும், சென்னையில் ஒன்றும் நடைப்பெறுகின்றன. ஏ.வி.பி. ஆசைத்தம்பியின் 'தனிஅரசு' பத்திரிகையானது மதுரையில் ஒன்றும், சென்னையில் ஒன்றும் நடைப்பெறுகின்றன. அடுத்து கோசல்ராமுக்கு 'தினச்செய்தி' என்ற ஒரு பத்திரிக்கை, கண்ணீர்த் துளிகளில் கருணாநிதிக்கு ஒரு பத்திரிக்கை! அடுத்து 'நம்நாடு' என்ற ஒரு பத்திரிக்கை, சம்பத்துக் கட்சிக்கு 'விடிவெள்ளி' என்ற பத்திரிக்கை. இப்படி 20- பத்திரிக்கைகளுக்கு மேல் இன்று பார்ப்பனர் அல்லாத பத்திரிக்கைகள் ( நாளிதழ்கள்) நடக்கின்றன. இவை போடுகின்ற போட்டியில் பார்ப்பான் பத்திரிக்கைகள் இன்று ஓங்க முடியவில்லை.

இப்படிப் பார்ப்பனர் அல்லாதவர் பத்திரிகைகள் நடந்து வருகின்றன என்றாலும், இவைகளும் நம்மைப் பற்றிப் பார்ப்பானுக்குப் பயந்து நம் செய்திகளை இருட்டடிப்பு செய்வதும், கட்டுப்பாடாகத் தவறான செய்தியைப் போடுவதிலும் தான் ஈடுபட்டு வருகின்றன. நாங்கள் இவை பற்றிக் கவலைப்படுவது இல்லை.

நாங்கள் மற்றக் கட்சிக்காரன்கள் மாதிரி மக்களிடத்தில் ஓட்டுக்கோ, வேறு தயவுக்கோ, எதிர் நோக்கி இருக்காத காரணத்திலும் எங்கள் சொந்த வாழ்வில் எவனும் குற்றம் (குறை) சொல்ல முடியாத அளவு (நாங்கள்) நடந்து வருவதனாலும் எங்கள் மீது எவனும் குற்றம் சொல்ல முடியவில்லை.

மாறாக நாங்கள் தமிழ் காங்கிரசை ஆதரிக்கிறோம். காமராசரை ஆதரிக்கின்றோமே - இதனைப் பற்றி உங்களிடத்தில் தப்பான முறையில் செய்தி வெளியிட்டுக் காட்டுவான். 'நான், கழக ஆதரவாளர்கள், அனுதாபிகள் என்பவர்களை அவர்கள் வேண்டுமானால் அவர்கள் இஷ்டப்பட்டால் - காங்கிரசில் சேர்ந்து கொள்ளலாம்' என்று கூறியதை தான் திராவிடர் கழகத் தோழர்களிடையே காங்கிரசில் சேரச் சொன்னதாகப் பெரிய எழுத்தில் கட்டுப்பாடாக வெளியிட்டு உள்ளன. நம் தமிழர்கள் நடத்தும் பத்திரிகைகள் என்பவைகள் கூட உண்மைக்கு மாறாக வெளியிட்டு உள்ளன. நாங்கள் இவ்வளவு பெரிய கூட்டத்தில் எவ்வளவோ விஷயங்கள் பற்றிப் பேசுகின்றோம். இவற்றைப்பற்றி நான்கு வரி போடமாட்டான். வடநாட்டில் - பார்லிமெண்டில் ஓர் ஆள் நாங்கள் இராமனையும், சீதையையும் குறை கூறிப் பேசுவதைக் கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டித்துப் பேசியதைக் கொட்டை எழுத்துகளில் போட்டு இந்தியா எங்கும் உள்ள மக்கள் அறியும்படிச் செய்கின்றன.

ஆனால் இராமன் அயோக்கியன், சீதை விபச்சாரி என்பதற்கு நாங்கள் எடுத்துக்காட்டும் அநேக ஆதாரங்கள் பற்றி ஒரு பத்திரிக்கையில் கூடப் போடமாட்டார்கள்.

தோழர்களே! உலகத்தில் மற்ற நாட்டில் எல்லாம் அந்த நாட்டுப் பத்திரிகைகள் அந்த நாட்டு மக்களின் முன்னேற்றத்தில் - அந்த நாட்டு மக்களை அறிவாளிகள் ஆக்கவும், நல்வழிப்பத்தவும் பயன்படுகின்றன. இந்த இந்திய நாட்டுப் பத்திரிக்கைகள் தான் மனிதனை மடையனாகக் காட்டுமிராண்டிகளாக ஆக்கப் பயன்படுகின்றன. இந்த நாட்டில் பொது வாழ்வின் பேராலும் மக்கள் மத்தியிலும் பொது ஒழுக்கக் கேட்டுக்குப் பெரிதும் இந்த நாட்டுப் பத்திரிக்கைகளே பயன்படுகின்றன. இந்த நாட்டுப் பத்திரிக்கை ஸ்தாபனங்கள் எல்லாம் தேசத்துரோக ஸ்தாபனங்கள் என்று கருத வேண்டியவைகள் ஆகும்.

நான் கூறுவது உண்டு. இந்த நாட்டினைப் பிடித்துள்ள 3- பேய் அய்ந்து நோயில், இந்தப் பத்திரிக்கையும் ஒரு நோய் என்றே கூறி வந்திருக்கின்றேன்.

பார்ப்பனர்கள் பம்பாய், டெல்லி (என்று) எங்கு எடுத்துக் கொண்டாலும் பத்திரிகைத் துறையையைத் தங்கள் கையிலேயே வைத்து இருப்பதைக் காணலாம்.

பார்ப்பனர்கள் பத்திரிகை என்ற ஆயுதத்தைக் கொண்டே இந்த நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்துக் கொண்டே வந்து இருக்கின்றனர். எவனை எடுத்துக் கொண்டாலும் பொதுவாழ்வின் பேரால் ஈடுபடுபவர்கள் இவர்களுக்கு (பத்திரிக்கைகளுக்கு) அடக்கியே- அஞ்சியே வந்து இருக்கின்றனர்.

தோழர்களே! நாங்கள் காமராசரை ஆதரிப்பது பற்றி இந்தப் பத்திரிகைகள் ஆத்திரப்படுகின்றன. 'மெயில்' பத்திரிகை, "காமராசர் ஆட்சிக்கும், காங்கிரசிற்கும் நாட்டில் நல்ல செல்வாக்கு உள்ளது. ஆனால் இந்தக் காமராசரைத் திராவிடர் கழகத்துக்காரர்கள் போன்ற வகுப்புவாதிகள் ஆதரிக்கிறார்கள். இதன் காரணமாகக் காங்கிரசுக்குச் செல்வாக்கு குறையப் போகின்றது. காங்கிரசுச் செல்வாக்கு குறையப் போகின்றது. காங்கிரசு தோற்கும் நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம்? ஏன் இந்தக் காமராசர் திராவிடர் கழகத்துக்காரர்களைப் பார்த்து உங்கள் பிரச்சாரம் எங்களுக்குத் தேவை இல்லை. ஆதரிக்க வேண்டாம் என்று கூறக்கூடாது" என்று எழுதியது.

இப்படி 'மெயில்' (ஆங்கில நாளிதழ்) பத்திரிக்கை எழுதிய உடனே இந்தப் பத்திரிகையினைக் கண்டித்து ஊர்வலம் நடத்திப் பீச்சில் (சென்னை – கடற்கரையில்) பெரிய கூட்டம் போட்டோம். இந்தச் சேதி தெரிந்து எனது வீடு தேடி அதன் ஆசிரியர் வந்து, "தவறாக எழுதி விட்டோம் - இனிமேல் அப்படி எல்லாம் ஏற்படாது" என்று கேட்டுக் கொண்டார். இந்த நாட்டுப் பத்திரிகைகள் நான் காங்கிரசை ஆதரிப்பது பற்றி இப்படி ஆத்திரப்படுகின்றனவே! நான் காங்கிரசை ஆதரிப்பது பற்றி இப்படி ஆத்திரப்படுகின்றனவே! நான் காங்கிரசை ஏன் ஆதரிக்கின்றேன். காமராசர் ஆட்சியில் இன்ன இன்ன நன்மைகள் ஏற்பட்டு இருக்கின்றன என்று புள்ளி விவரங்களுடன் எடுத்துப் போட்டுப் புத்தகம் போட்டு இருக்கின்றோம். இவற்றைப் பற்றி எல்லாம் எழுதமாட்டார்கள்.

அதுபோலவே ஆச்சாரியார் ஆட்சியில் அவர் பண்ணிய கேடுகள் பற்றி எல்லாம் புள்ளி விவரங்களுடன் எடுத்துக்காட்டி எதிர்க்கின்றோம். இவற்றைப் பற்றியும் ஒருவரிகூடப் போடமாட்டார்கள்.

இந்தக் காங்கிரஸ்காரர்களுக்கும் தாங்கள் செய்த நன்மைகளை எடுத்துச் சொல்ல யோக்கியதை இல்லை. நாங்கள் இன்ன காரியம் செய்து உள்ளோம் - கல்வியில், உத்தியோகத்தில் இன்ன இன்னபடித் தமிழர்களுக்குச் செய்து இருக்கின்றோம் என்று சொல்ல முடியாது. சொன்னால் அது பார்ப்பானுக்கு விரோதமாக ஆகிவிடும். எனவே அவர்களால் எடுத்துச் சொல்ல முடியாது.

நாங்கள் தான் எடுத்துச் சொல்கின்றோம். காமராசருக்கு, 'நாம் இவ்வளவு நன்மைகளா செய்து இருக்கிறோம்? என்று அதிசயமாக இருக்கும்.

ஆச்சாரியாரின் கொடுமைகள் பற்றியும் எடுத்து நாங்கள் தான் பேசுகின்றோம். ராஜாஜிக்கும் நாங்கள் எடுத்துக் காட்டுவதில் இருந்து "நாம் இவ்வளவு கொடுமைகளா செய்து இருக்கின்றோம்" என்று வருத்தப்படுவார்.

                     -------------------------- 06.09.1961- அன்று மதுக்கூரில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. "விடுதலை", 01.10.1961

13.10.15

இந்துமத காப்புப் பிரசாரத்திலே பார்ப்பன சர்க்கார் இறங்கியிருக்கிறது!-பெரியார்


இன்றையத் தினம் நாம் ஒரு புரட்சிக் காலத்தில் வசிக்கிறோம்.

இதுநாள் வரையில் இருந்து வந்த முறைகள், அமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டுவரும் ஒரு காலத்திலே வசித்து வருகிறோம்.

இதற்கு முந்திய மக்கள் அப்படியல்ல. அவர்கள் எந்தவிதமான சலனமும் அற்று, காட்டுமிராண்டித்தனமாக எண்ணங்களில் மூழ்கி வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஏதோ நடைப்பிணங்கள் போல் தங்கள் வாழ்வை நடத்திச் சென்றுவிட்டார்கள்.

இன்றையத் தினம் எப்படியோ காலத்தின் வசதியாலோ, விஞ்ஞானத்தின் தெளிவினாலோ நம்மில் பலருக்குப் புரட்சிகரமான எண்ணங்கள் ஏற்பட்டு வருகின்றன.

நாமும் முன்மக்களைப் போலவே எதைப்பற்றியும் கவலைப்படாமல், காட்டுமிராண்டித்தனத்திலே, மவுடீகத்திலே ஆழ்ந்து, நம் நிலை இதுதான் என்று கருதிக் கொண்டிருப்போமேயானால், நமக்கு இந்த உணர்ச்சியும், கிளர்ச்சியும் ஏற்பட்டிருக்காது. இந்த அளவுக்கு வேதனை, இரத்தத் துடிப்பு இருக்காது.

புதுமையான காலத்தில் - புரட்சிகரமான காலத்தில் வாழும் மக்களாக இருப்பதாலேயே நம்முடைய நிலையைக் குறித்து நமக்கு வேதனையும், அவமானமும், ஆவேசமும் ஆக இருப்பதோடு, இப்படிப்பட்ட வாழ்வு எதற்கு ஆக வாழ வேண்டும் என்கிற உணர்ச்சிக்காரர்களாய் இருக்கிறோம். புரட்சிகரமான எண்ணங்கள் உடையவர்களாய் இருக்கிறோம்.

தோழர்களே! உயர்ந்த அறிவின் தன்மைகொண்ட கண்ணோட்டத்தில் பார்த்தால், இது ஒன்றும் பெரிய புரட்சி என்று சொல்லி விடமுடியாது. ஆனால் இதுவரை காட்டுமிராண்டிகளாய், முட்டாள்களாய், மானமற்றவர்களாய், எதைப்பற்றியும் கவலை எடுத்துக் கொள்ளாத மக்களாய் இருந்த நாட்டிலே, இவற்றிற்கெல்லாம் தலைகீழான மாற்ற உணர்ச்சிகள் எண்ணங்கள் தோன்றியிருக்கின்றன என்பதால் இது பெருத்ததொரு புரட்சியாக இருக்கிறது. அதற்கேற்றாற்போலவே இந்தப் புரட்சிக்கு வசதி செய்வதாய்க் காலமும், அதன் அடிப்படையிலே விஞ்ஞானமும் நல்லபடி வசதி செய்து தந்தது.

நமக்குச் சரித்திரம் தெரிந்த காலம் முதல் எந்தச் சரித்திரக் கதையை எடுத்துக் கொண்டாலும் அதில் சொல்லப்படுவது - ஒரு நாடு, அந்த நாட்டிற்கு அரசன் என்பது. இப்படிச் சரித்திரம் தெரிந்த காலத்திலிருந்து நமக்கு அரசர்கள் இருந்து வந்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல; சமீபகாலம் வரையிலும் நமக்குச் சக்கரவர்த்தி ஒருவர் இருந்திருக்கிறார். வெள்ளைக்கார அரசர் இந்தியாவின் சர்க்கரவர்த்தியாக (The Emperor India) இருந்து வந்திருக்கிறார்.

உலக இயற்கையே அம்மாதிரி தான் இருந்து வந்தது என்று சொல்லத்தக்க மாதிரியில், எல்லா இடங்களிலும் இருந்து வந்தது. ஆனால் இன்று உலகத்தில் கிட்டத்தட்ட எல்லா பாகங்களிலும் அரசர்கள் என்பவர்கள் ஒழிக்கப்பட்டு விட்டார்கள். சில இடங்களில் பேருக்கு ஏதோ ராஜா என்று வைத்துக் கொண்டு ஆட்சி நடக்கிறது.

தோழர்களே! கடைசியான நமக்கு இருந்த சக்ரவர்த்தியானவர் மிகவும் பலம் பொருந்திய சக்ரவர்த்தியாவார். அந்தச் சக்ரவர்த்தியின் ஆளுகைக்கு உலகத்தின் பெரும் பாகம் கட்டுப்பட்டிந்தது. அதோடுகூட படை பலமும் ஏராளம். 200-வருஷ காலமாக இந்த தேசத்திற்குச் சக்ரவர்த்தியாக இருந்திருக்கிறார்.

இப்படியாக இருந்த பலம் பொருந்தி சக்ரவர்த்தியாரும், அவரது ஆளுகையும் இன்றையத் தினம் எங்கே இருக்கிறது? இந்த நாட்டைப் பொருத்தவரையில் ஒழிந்து விடவில்லையா?

இதற்கு ஆக நாம் எத்தனை பேரைப் பலி கொடுத்தோம்? இல்லையே! ஏதோ நம்முடைய முட்டாள் தனத்தினால் நமக்கு நாமே பலியாகிக் கொண்டோமே தவிர, மற்றப்படி பலி கொடுக்கப்படவில்லை. இது எப்பேர்ப்பட்ட புரட்சி? இந்தப்பபடி பலம் மிகுந்த சர்க்கரவர்த்தியின் ஆட்சியை ஒழித்துக் கட்டியது புரட்சியில்லையென்று யாரவது சொல்ல முடியுமா? பெரிய புரட்சிதான்!

ஆனால் இத்தகைய புரட்சிக்குப் பின்னர் என்ன நிலைமை ஏற்பட்டது என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

எவ்வளவோ பலமான மிகப்பெரிய சக்ரவர்த்தியை ஒழித்தோம். ஆனால் அப்படி ஒழிந்தபின் நம்முடைய நிலைமை என்னவாயிற்று என்றால், சக்ரவர்த்திக்கு நேர்மறையான, பலமற்ற, ஒருவித சக்தியுமற்ற அன்னக்காவடி, சவுண்டிப்பார்ப்பனர்களுக்கு இன்றையத்தினம் அடிமையாகி இருக்கிறோம்.

தோழர்களே! சக்ரவர்த்தியை ஒழித்ததோடு மட்டும் நிற்கவில்லை நம்முடைய புரட்சி. நீண்ட காலமாக இந்த நாட்டில் நிலை பெற்று இருந்து வந்த அய்நூற்று சொச்சம் சுதேச சமஸ்தானத்து அரசர்களையும் ஒழித்துக்கட்டி, இன்றையத்தினம் அவர்களையெல்லாம் வெறும் பொம்மை அரசர்களாக ஆக்கி விட்டோம்.

ஆனால் இவ்வளவு பெரிய புரட்சிகரமான காரியத்தைச் சாதித்த நாம் முன்னைய சக்ரவர்த்தியைப் போல், சுதேச அரசர்களைப்போல் பலம் ஏதும் இல்லாதவர்களாய், மாறாகப் பலஹீனமானவர்களான பார்ப்பனர்களுக்கு அடிமையாக இருக்கிறோம். இது பெரிய அதிசயமல்லவா? பெரிய பெரிய ராஜாக்களை எதிர்த்து ஒழித்த வீராதி வீரர்கள் எல்லாம் சாதாரணப் பார்ப்பனருக்கு அடிமைப்பட்டிருப்பது என்பது உள்ளபடியே ஓர் அதிசயமான காரியமல்லவா?

எவ்வளவு பெரிய புரட்சியைப் பார்த்தோம்!! எவ்வளவு பெரிய அதிசயத்தைப் பார்க்கிறோம்!!

இதைப் பார்க்கிறபோது புரட்சி, அதிசய காலத்தில் நாம் இருக்கிறோம் என்று தெரிகிறதல்லவா?

சக்ரவர்த்தி - அரசர்கள் என்பவர்கள் எல்லாம் பலமிக்கவர்கள். பிரத்தியட்ச ஆதாரத்தோடு இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு இடமே இல்லாமல் சமீபத்தில் புரட்சியால் ஒழிக்கப்பட்டு விட்டனர்.

ஆனால் இப்பேர்ப்பட்ட மகத்தான, பெரிய புரட்சியைச் செய்திருக்கிற நாம் நம்முடைய சொந்த அறிவில் எவ்வளவு முட்டாள்களாய் இருக்கிறோம். அந்தப்படியான நம்முடைய முட்டாள்தனத்தை, மவுடீகமான எண்ணத்தையாவது மாற்றிக் கொள்ள வேண்டும் என்றாவது கருதுகிறோமா? இல்லையே!

மேலே சொன்ன இப்பேர்க் கொத்த புரட்சிகளால் நாம் சுத்தமாய்ப் பார்ப்பனர்களுக்கு அடிமைப்படுத்தப்படுகிறோம்.

எனவேதான், இப்பேர்ப்பட்ட புரட்சியால் அன்னக்காவடி பார்ப்பனர்களுக்கு மக்களை அடிமைப்படுத்துவது என்பது ஈனத்தனம் என்பதாகக் கருதியே, புரட்சி என்பது சகல துறையிலும், அது எந்தத் துறையானாலும் சரி, கடவுள் துறையாகட்டும், மதத்துறையாகட்டும், சாஸ்திரத் துறையாகட்டும், எல்லா துறையிலேயும் அறிவுத் துறையிலேயும் புரட்சி ஏற்பட வேண்டும் என்பதாக முயற்சி செய்கிறோம்.

அரசன் நமக்குத் தேவையில்லை. எதற்காக அரசன் என்ற ஒருவன் நம்மை ஆளவேண்டும்? என்கின்ற எண்ணம் ஏற்படுகிற போது, நமக்கு ஒரு கடவுள் மட்டும் எதற்காக இருக்க வேண்டும்? நமக்கு ஒரு கடவுள் இருக்க வேண்டும் என்பதன் தேவைதான் என்ன? என்ற எண்ணம் வரவேண்டாமா?

ஏன் இந்தப்படியான எண்ணம் வரவில்லையென்றால், ஆட்டுகிறவனிடம் சாமி மாடுகளாக நாம் இருக்கிறோம் என்பதைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம் சொல்ல முடியும்?

சாமி மாடு கோவணாண்டி, "இதோ இவர் யார் தெரியுமா? எஜமானன் தானே", என்பான். உடனே மாடும் 'ஆமாம்' என்கிற பாவனையில் தலையாட்டும். அது மாதிரிதானே இருக்கிறது நம்முடைய நிலைமையும்.

எப்படியோ, நம்மில் சிலருக்கு இந்தக் காட்டுமிராண்டித்தனங்கள், முட்டாள்தனங்கள் ஒழிய வேண்டும் என்ற உணர்ச்சியும் - புரட்சி எண்ணமும் தோன்றியிருக்கிறது - இந்த உணர்ச்சியானது அழிந்து விடக்கூடாது; கருவிலேயே சிதைந்து விடக்கூடாது. இந்த உணர்ச்சியானது அதாவது இன்றைய பேத அமைப்பு முறை, காட்டுமிராண்டித்தனமான முறைகள், முட்டாள்தனமான நினைப்புகள் - எண்ணங்கள் - நம்பிக்கைகள் ஒழிய வேண்டும் என்கிற உணர்ச்சி மேலும், மேலும் வளர வேண்டும் என்கிற கருத்தின் பேரில்தான் இம்மாதிரியான அதாவது மத ஒழிப்பு, சாஸ்திர ஒழிப்பு, கடவுள் ஒழிப்பு என்பது போன்ற காரியங்களில் நாம் பிரவேசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

நீங்கள் கவனிக்க வேண்டும்; ஏதோ ஓர் அளவுக்கு மக்களுக்கு இந்த உணர்ச்சி அதாவது இன்றைய அமைப்பு மாறுதல் கிளர்ச்சி உணர்ச்சி, புரட்சி ஏற்பட்டிருக்கிறது என்றவுடன் இந்த அரசாங்கம் நடத்துவதைப்பற்றிக் கூடக் கவலைப்படாமல், மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற இந்த மாறுதல் புரட்சி உணர்ச்சியானது ஒழியவேண்டும் என்பதற்கு ஆகவும் இனிமேல் கூட இந்த உணர்ச்சி இன்னும் பரவி விடக்கூடாதே என்பதற்கு ஆகவும், மிகமிகத் தீவிரமாக வேலை செய்ய வருகிறது. பிரசாரம் செய்துவருகிறது.

--------------------------------- 10.05.1953-அன்று நடைபெற்ற தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை. "விடுதலை", 13.05.1953

12.10.15

நம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்-பெரியார்



                                              





தோழர்களே, நமக்கு நம் சமுதாய இழிவு நீங்க வேண்டும் என்பது தான் முக்கியமே தவிர,  நம்மை யார் ஆள வேண்டும்,  ஆட்சி செலுத்த வேண்டும் என்பது முக்கிய மல்ல என்பது தான் சென்னையில், சென்ற 20-4-1969 இல் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மானங்களின் முக்கிய குறிக் கோளாகும்.

அந்நிய ஆட்சியானது எவ்வளவு நல்ல ஆட்சியாக இருந்தாலும், எவ் வளவு மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய ஆட்சியாக இருந்தாலும், இந்த ஆட்சியானது ஒழிக்கப்பட்டுத் தங்கள் ஆட்சியானது வரவேண்டும் என்பதுதான் பார்ப்பனர்களின் ஆசையாகும்.
வெள்ளைக்காரன் இந்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த போது, வெள்ளைக்காரன் ஆட்சியானது ஒழிக்கப்பட வேண்டும், சுய ஆட்சி வரவேண்டும் என்று (காங்கிரஸ் காரர்கள்) பார்ப்பனர்கள் முயன்ற போது, சத்தியமூர்த்தி அவர்களிடம் வெள்ளைக்காரர் ஆட்சியின் சிறப் பையும், சுய ஆட்சி ஏற்படுவதால் ஏற்படும் கேடுகளையும் எடுத்து விளக்கிச் சொன்னபோது, சத்திய மூர்த்தி அவர்கள் சுய ஆட்சியால் எவ்வளவு கேடு ஏற்படும் என்பது எனக்கும் தெரியும்; என்றாலும் சுய ஆட்சிதான் இந்நாட்டிற்கு வேண்டும் என்று சொன்னாரே ஒழிய, அதனால் இன்ன நன்மை என்று அவரால் சொல்ல முடியவில்லை.
பல ஆயிரக்கணக்கான ஆண்டு காலமாக இருந்து வரும் தீண்டாமை, வெள்ளையன் ஆட்சி செய்த போதும் ஒழிக்கப்படவில்லை; ஜனநாயகம், சுதந்திரம் வந்து 22 ஆண்டு கால மாகியும் இந்தத் தீண்டாமையானது ஒழிக்கப்படவில்லை என்றால், இந்த ஆட்சியில் நாம் எதற்காகத் தீண்டப் படாத மக்களாக இருந்து கொண் டிருக்க வேண்டும்? அதற்கென்ன அவசியம் என்று சிந்திக்க வேண்டு கின்றேன்.
நம் ஜனநாயகம், சுதந்திர ஆட்சி யின் மூலம் இந்தத் தீண்டாமையை ஒழிக்க முடியாது. இப்போதிருக்கின்ற இந்த அரசமைப்புச் சட்டத்தின் மூலமும் ஒழிக்க முடியாது என்பதால், அயல்நாட்டுக்காரன் ஆட்சி வந்தா வது இந்த இழிவை, தீண்டாமையை ஒழிக்க முன்வர மாட்டானா? அவனா லாவது நம் மக்களின் இழிவு தீண் டாமை ஒழிக்கப்படமாட்டாதா? என் பதால் அயல்நாட்டுக்காரன் அந் நியன் ஆட்சி அது எவனுடையதாக இருந்தாலும், நம் இழிவைப் போக்க முன் வருகின்றவனை ஆதரிப்ப தோடு அவனை வரவேற்க வேண்டி யது நம் கடமை என்கின்றோம்.
அந்நியன் ஆட்சி என்றதும் நம் மக்களுக்கு ஏதோ வேண்டாத உணவைத் தின்பது போல் இருக் கிறது.  நம் மக்கள் மீன், ஆடு, கோழி,  பன்றி இவற்றின் மாமிசங்களை உணவாக உட்கொள்ளுகின்றனர். ஆனால், மாட்டு மாமிசத்தை உட் கொள்ள மறுக்கின்றனர். மற்ற கோழி, பன்றி, மீன் ஆகிய இவற்றைப் போன்று அசிங்கமானவற்றை மாடு உண்ணவில்லை. என்றாலும், மதம் காரணமாக, மதத்திற்கு விரோதம், சாஸ்திரத்திற்கு விரோதம் என்று மாட்டு மாமிசத்தை உட்கொள்ள மறுக்கின்றார்களோ, அதுபோல இழிவு ஒழிய வேண்டும் என்று எல்லாவற்றிற்கும் ஒப்புக்கொள்கிற மக்கள்- தேசபக்தி என்கின்ற காரணத்தால், அயல் நாட்டுக்காரன் ஆட்சி என்றதும் பயப் படுகின்றனர். இத்தனை காலமாக நமக்கிருந்த தேசபக்தியால், தேசாபிமானத்தால் நம் இழிவு நீக்கப்படவில்லை; தீண் டாமை ஒழிக்கப்படவில்லை என்னும் போது, இந்த தேசபக்தியாலும், தேசாபிமானத்தாலும் நாமடைந்த பயன் மானமற்றவனாக, இழிமகனாக இருப்பது தானா? என்று சிந்திக்க வேண்டுகின்றேன்.
இந்தத் தீண்டாமையானது அறவே ஒழிய வேண்டுமானால், நமக் கிருக்கிற இந்தக் கடவுள் ஒழிக்கப்பட வேண்டும்; மதம் ஒழிக்கப்பட வேண் டும்; சாஸ்திர, சம்பிரதாயங்கள் ஒழிக் கப்பட வேண்டும்; இதிகாச, புராண தருமங்கள் ஒழிக்கப்பட வேண்டும். இவை இருக்கிற வரையிலும்,  இந்த டில்லி ஆட்சி இருக்கிற வரையிலும் தற்போதிருக்கிற இந்த அரசமைப்புச் சட்டம் இருக்கிற வரையிலும், இந்தப் பார்ப்பான் இருக்கிற வரை, பார்ப் பானின் சித்திரம் இருக்கிறவரை இந்தத் தீண்டாமையானது ஒழிக்கப் படவே முடியாது.
இன்று இங்கு இருக்கின்ற இந்த ஆட்சி நம் நாட்டு ஆட்சி; நம் தமிழர் களின் ஆட்சி. என்றாலும், இந்த ஆட்சியால் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதோடு, தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்று சட்டம் கூடச் செய்ய முடியாதே! அப்படிச் சட்டம் செய்வதற்கு இந்த மந்திரிகளுக்கு உரிமை இல்லையே? மீறிச் செய்தால் அரசமைப்புச் சட்டப்படி இந்த ஆட்சியை மாற்றக்கூடிய அதிகாரம் டில்லி யிடம் இருக்கிறதே! எனவே இந்த ஆட்சியால் இதனைச் செய்ய முடியாது.
இந்தச் சந்தர்ப்பத்தில் உங் களுக்கு ஒரு மகிழ்ச்சியான வெற்றிச் செய்தியைச் சொல்ல வேண்டும். சமீ பத்தில் நடைபெற்ற 73 நகரசபைத் தேர்தல்களில் 56 நகரசபைகளில் தி.மு. கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. மீதி 9 நகர சபைகள் அப்படியும், இப் படியுமாக இருக்கின்றன. பொது வாகப் பார்த்தால் காங்கிரஸ் மிகக் கீழ்நிலைக்கு,  இழிதன்மைக்குப் போய் விட்டது; அது மாற்றமடைய வேண்டும்.
எந்தக் கட்சி ஆட்சியில் இருக் கிறதோ, அந்தக் கட்சி நகர சபையில் வருவது தான் நல்லது; ரகளை இல் லாமல் காரியம் நடக்கும்; அப்படியில் லாமல் வேறு கட்சி நகர சபையில் வந்தால், ரகளைக்குதான் நேரம் இருக்குமே தவிர, காரியம் ஒன்றும் நடைபெறாது; எனவே நடக்க வேண் டிய முறைப்படிதான் நடந்திருக் கிறது.  என்றாலும், நம் மக்கள் ஊர் தோறும் பாராட்டுக் கூட்டம் போட்டு ஓட்டுப்போட்ட மக்களைப் பாராட்டு வதோடு, தி.மு.க., ஆட்சியைப் பாராட்ட வேண்டும்.
அத்தோடு இந்த ஆட்சியிடம் நாம் எதிர்பார்ப்பது, செய்யச் சொல்ல வேண்டியது, நம் மக்களுக்குரிய ஜாதி, மத விகிதாச்சாரப்படிப் பத விகள்,  உத்தியோகங்கள், உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதைத் தானாகும்; இவற்றை வலியுறுத்த வேண்டும்.
இந்த மந்திரி லஞ்சம் வாங்கினான்;  அந்த மந்திரி குடித்தான்;  அவன் பொம்பளையோடு போனான் என்ப தெல்லாம் சாதாரணமானது. ஜனநாய கத்தில் லஞ்சம் என்பது சாதாரணம்; இதுவரை இலஞ்சம் வாங்காமல் இருந்தவன் எவன்? பணமாக வாங்க வில்லை என்றால் ஓட்டாவது லஞ்சம் வாங்கித்தானே இருப்பான்? எனக்கு ஓட்டுப் போட்டால் இன்னது கொடுக்கின்றேன், இன்னது செய் கிறேன் என்று உத்தரவாதம் கொடுத் துத் தான் ஓட்டுப் பெற்றிருப்பான்.  பதவிக்கு வந்ததும் ஓட்டுப் போட்ட வன் தயவு வேண்டும் என்பதால், அவனுக்கு ஏதாவது வசதி செய்து கொடுத்திருப்பான். இது ஜனநாயகத் தில் சாதாரணமாக நடக்கக் கூடியதே யாகும். இதை ஒரு பெரிய குற்றமா கவோ, குறையாகவோ கருத வேண் டிய அவசியமில்லை. இந்த ஆட்சி யால் நன்மை என்ன என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.
இந்த அரசாங்கம் மக்களுடைய ஆதரவு இருக்கிறது என்று மேலே பார்க்காமல், எந்த மக்களுடைய ஆதரவு அதிகமிருக்கிறதோ, அந்த மக்களுடைய உரிமையைக் கொடுக்க முன்வர வேண்டும்; எந்த மக்கள் அதிகமாக ஓட்டுப் போட்டு வெற்றி பெறச் செய்தார்களோ,  அவர்களு டைய பங்கு விகிதாச்சாரம் கொடுக்க முன்வர வேண்டும்; சிறுபான்மை யான சைவனும், பார்ப்பானும், கிறிஸ் தவனும் தனது விகிதாச்சாரத்திற்கு மேல் அனுபவிக்கவும், ஆதரவு கொடுக்கிற பெரும்பான்மையான மக்கள் தங்கள் விகிதாச்சாரத்திற்குப் பல மடங்கு குறைவாக அனுபவிக் கவுமான நிலையை மாற்ற வேண்டும். அவரவர்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்பப் பதவி, உத்தியோகங்கள், உரி மைகள் வழங்க முன்வரவேண்டும். இது தான் யோக்கியமான ஜனநாய கப் பண்பாகும்.
நம் நாட்டிலிருக்கிற போலீஸ் வேலை அத்தனையையும் சப்-இன்ஸ்பெக்டர் வரை, ஆதிதிராவிடர் களுக்கே கொடுக்க வேண்டும். மற்ற எவனையும் அதில் உள்ளே நுழைய விடக் கூடாது. அப்படிச் செய்தால் தீண்டாமை இழிவு தானே நீக்கப் படும். உயர் சாதிக்காரன் என்பவன் தானாகவே மரியாதை கொடுக்க ஆரம்பித்து விடுவான்.
அரசாங்கம் வெற்றி பெற்றதற்கு நீதி செலுத்த வேண்டுமானால் ஓட் டளித்த மக்களுக்கு நீதி காட்ட வேண்டும். காங்கிரஸ் ஏன் தொலைந் தது? ஏன் சாகிற மாதிரி இழுத்துக் கொண்டு கிடக்கிறது என்றால், அது பதவியில் இருக்கும்போது மிக ஆண வத்தோடு, பதவி- உத்தியோகங் களை எல்லாம் தனக்கு ஓட்டளித்த பெரும் பான்மையான மக்களுக்குக் கொடுக்காமல், சிறுபான்மையான பார்ப்பான், சைவன், கிறிஸ்தவன் என்று தேடிப்பார்த்துக் கொடுத்ததா லேயே ஆகும். அத்தோடு ஓட்டுப் போட்ட பெரும்பான்மையான மக் களை மதிக்காததாலேயே ஆகும்.
இந்த ஆட்சியும்  அதுபோல் நடந்து கொள்ள முன்வந்தால்,  அதன் கதிதான் இதற்கும் ஏற்படும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டுமென்று கேட்டுக் கொள் கின்றேன்.
மற்றொரு  மகிழ்ச்சிக்குரிய சேதி என்ன வென்றால், நம் இன்றைய ஆட்சியானது சென்னை அய்க் கோர்ட்டுக்கு இப்போது ஒரு தமிழரை சீஃப் ஜட்ஜாக- பிரதம  நீதிபதியாகப் போட்டிருக்கின்றது. இது பாராட்டக் கூடியதாகும். அவர் எப்போதோ வந்திருக்க வேண்டியவர்; முன்னி ருந்த ஆட்சியினால் இவர் வேண்டு மென்றே புறக்கணிக்கப்பட்டவர் ஆவார். தமிழ்நாட்டில் அய்க்கோர்ட் ஏற்பட்டு 107 வருடங்கள் ஆகின்றன. அதற்கு இப்போதுதான் ஒரு தமிழர் சீஃப் ஜஸ்டிஸ் ஆக வரமுடிந்தது! இதுவரை இருந்தவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள். இல்லாவிட்டால் மலையாளி,  கிறிஸ்தவர், முஸ்லிம் , கன்னடக் காரர்,  ஆந்திராக்காரர் என்று இருந்தார்களே ஒழிய, தமிழர் எவரும் சீஃப் ஜஸ்டிஸாக இருந்தது கிடையாது.  நம் நாட்டிற்கு ஒரு தமிழர்-  தமிழ் நாட்டினர் அய்க் கோர்ட் தலைமை நீதிபதியானது பாராட்டுக்கு உரியதாகும்.
நம் கோர்ட்டுகளின் நீதி நிலை மிகமிக மானக்கேடானதும், கொடு மையானதுமாகும். ஒரு கேஸ் முடிய 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. என்னுடைய கேஸே 4, 5, ஏழுட்டு வருஷங்களாக முடிவு பெறாமல் நடந்து கொண்டிருக்கிறது என்றால், மற்றச் சாதாரண ஏழை, எளிய,  பாமர மக்களுடைய நிலை எப்படி இருக் கும் என்பதைச் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டில் நீதி கெட்டதற்கும், புரட்டு, பித்தாலட்டம் அதிகமான தற்கும் மக்களிடையே நாணயம், ஒழுக்கம் கெட்டதற்கும் காரணம் இந்தக் கோர்ட்டுகளே ஆகும்.

நம் கோர்ட்டுகள் குச்சுக்காரி வீடுகளை விட,  சூதாடும் இடங்களை விட மகாமோசமானவை ஆகும். இந்தக் கோர்ட்டு களில் யோக்கிய னுக்கு நீதிக்கு இடமில்லை; அவை அயோக்கியர்களுக்கே வெறும் புகலிடமாகி விட்டன.

மற்றும் இந்த நாடு 4 கோடி மக்களைக் கொண்ட, தென்மேற்கில் சுமார் 500 மைல் நீளமுள்ள நாடாகும். இப்படிப்பட்ட இந்த நாட்டிற்கு ஒரே இடத்தில் ஒரே அய்க்கோர்ட் இருப் பது, மக்களுக்குப் பெரிய அசவுகரிய மாகும்; குறைந்தது இரண்டு அய்க் கோர்ட்டுகளாவது வைக்கவேண்டும். அதாவது மற்றொரு அய்க்கோர்ட் மதுரையிலாவது, திருச்சியிலாவது, கோவையிலாவது வைக்க வேண் டும்; ஒரே ஒரு அய்க்கோர்ட் சென்னையில் மட்டும் இருப்பதால், கன்னியாகுமரியிலே இருக்கிறவன் நீதிபெற வேண்டுமானால், 450 மைல் கடந்து போக்குவரத்துக்கு 75 ரூபாய் செலவு, செய்து 2 நாள்,  4 நாள் மெனக்கெட்டுக் கொண்டு வரவேண் டியிருக்கிறது. இது ஒரு தடவை, இரண்டு தடவை அல்ல 5, 6 தடவை யாகும். இது ஏழை, எளிய, பாமர மக்களால் எப்படி இவ்வளவு தூரம் செலவு செய்து கொண்டு வர முடியும்?

வக்கீல்கள் இடித் தொல்லை,  பீசு தொல்லை, குமாஸ்தாக்கள்- அபிட விட்கள் தொல்லை வேறு; பணக்கார னுக்குக் கவலையில்லை அவனால் எவ்வளவு தூரமானாலும், செலவா னாலும் முடியும். ஏழைகளால் எப்படி முடியும்?

நமக்கு இன்னொரு கேடு என்ன வென்றால், சுப்ரீம்கோர்ட் டில்லியில் இருப்பதாகும். 2000 மைல்களுக்கு அப்பால் சென்று நீதிபெற வேண்டு மானால், அது பணக்காரன் ஒரு வனால் தான் முடியும். அதுவும் பெரிதும் அயோக்கியர்களுக்குத் தான் வசதி அளிப்பதாகும். ஏழை களால் முடியாது. எனவே பணக் காரனுக்கும், அயோக்கியனுக்கும் அனுகூலமானதாகத் தான் இருக் கிறதே ஒழிய, ஏழை, எளிய, பாமர மக்களுக்கு நீதி கிடைக்க வழி யில்லை. இதை உணர்ந்து இந்த அய்க்கோர்ட் தலைமை நீதிபதி ஏதாவது செய்வார் என்று நினைக் கின்றேன்.
இன்னொரு காரியம் என்ன செய்ய வேண்டும் என்றால், செய் வார்களோ- செய்யமாட்டார்களோ, ஆனால் செய்ய வேண்டியது அவ சியமாகும் என்பது எனது கருத்து. அதாவது ஒரு ஊருக்கு ஒரு கோர்ட் தான் இருக்க வேண்டும்.  ஒரு கோர்ட்டுக்கு மேல் ஒரு ஊரில் இருக்கக்கூடாது. எதற்காக ஒரே ஊரில் 2, 3 சப்-கோர்ட்டுகள், 2, 3 முனுசீஃப் கோர்ட்டுகள்,  அடிஷனல் கோர்ட்டுகள், சப்-கோர்ட்டுகள் என்று ஒரே ஊரில் பல கோர்ட்டுகள் இருக்க வேண்டும்? வெளியூரில் இருப்பவன் இதற்காகச் செலவு செய்து கொண்டும் மற்ற ஊருக்கு வரவேண்டும்? இவை அந்தந்த தாலூக்காக்களில் மத்திய இடங்களில் கோர்ட்டு இருந்தால், குறைந்த செலவில், எளிதான போக்குவரத்தில் நீதி கிடைக்கும். ஏழை, எளிய, பாமர மக்களுக்கும் வசதியாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட ஊரில் இருப்பதால் பணக்காரன் செலவு செய்து கொண்டு வந்து விடுகின்றான்; ஏழையால் அவ்வளவு செலவு செய்து கொண்டு வரமுடியாமல் போவதோடு, அவர் களுக்கு நீதியும் கிடைப்பதில்லை. மற்றும் ஒரு கேடு  என்னவென்றால் வெளி ஊர்களில் இருக்கும் வக்கீல் களுக்குப் பீசு கொடுப்பதோடு, அப்பீல் கோர்ட்டில் உள்ள வக்கீல் களுக்கும் பீசு கொடுக்க வேண்டியி ருக்கிறது. வெளியூர் வக்கீலுக்கு, கிடைக்க வேண்டிய பீசு, அப்பீல் கோர்ட்டு உள்ள ஊர் வக்கீல்கள் அடைகிறார்கள். இது மொபசல் வக் கீல்களுக்கு அநியாய நட்டமாகும்.
உடனுக்குடன் வழக்கு முடிவ டையாததற்கும் இது ஒரு காரண மாகும். வக்கீல்களின் சூழ்ச்சி தான் வெளி இடங்களில் கோர்ட்டுகள் ஏற்படாததற்குக் காரணமாகும்.
குறைந்தது மூன்று மாதத்திற்குள் கேசு பைசல் செய்யப்பட வேண்டு மென்று சட்டம் போட வேண்டும். அதற்கு ஏற்றப்படி விசாரணை முறை அமைக்கப்பட வேண்டும். அப்படி இல்லாததால் ஒருவன் கேஸ் போட் டால், அதை எடுக்க 2 மாதமாகிறது. பிறகு ஸ்டேட்மென்ட் இஷூ கொடுக்க 3 மாதம்; அதில் வாய்தா வேறு; இப்படி இழுத்துக் கொண்டே போவதால், இந்த முறைகள் சில வக்கீல்கள் பிழைப்பதற்கு உதவியாக இருக்கிறதே ஒழிய,  நீதி கிடைக்க வழி இல்லாமல் போகிறது. நீதி கிடைக்க நாளாவதால் மக்களுக்குக் கோர்ட்டுகளின் மீது பயமில்லாமல் போய்விடுகிறது. நீதி சீக்கிரம் கிடைத்தால்,  மனிதனுக்குப் பயம் இருக்கும். நாளாவதால் எந்தக் காரி யத்தையும் துணிந்து செய்துவிட்டு, கோர்ட்டுக்கு போ, ``கோர்ட்டில் போடு பார்த்துக் கொள்ளலாம் என் கின்றான். நீதி கிடைக்க நாளாவதால் மக்களிடையே ஒழுக்கம், நாணயம், நேர்மை என்பது இல்லாமல் போய் விடுகிறது. எந்த ஒழுக்கக்கேடான, நாணயக் கேடான, நேர்மைக் கேடான காரியத்தையும் செய்ய மனிதன் பயப்படுவது கிடையாது. இதையெல்லாம் இப்போது வந்திருக் கிற புதிய ஜட்ஜ்- பார்ப்பனரல்லாத தமிழ் ஜட்ஜ் கவனிப்பார் என்று கருதுகின்றேன்.
--------------------------------1.5.1969  அன்று சென்னை - திருவல்லிக்கேணியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

1.10.15

காந்தி பார்ப்பானுக்கு மகான்! எனக்கு அவர் சாதாரண மனிதன்!-பெரியார்

முப்பெரும் கேடுகள்!


இப்போது உள்ளபடி நானும், நீங்களும் கீழ்ஜாதி. இந்த இழிநிலை நீங்க, கிளர்ச்சி நடந்து தீரவேண்டும். ஆகவே இப்போது எனக்கு அளித்த வரவேற்பு எல்லாம் நாம் எல்லோரும் மீண்டும் சிறை செல்ல வழியனுப்பு உபசாரமே என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது! சிறை மீண்ட பெரும்பாலான நம் தோழர்களும், மீண்டும் சிறை ஏறத் தயார்! போராட்டத்துக்குத் தேதி கொடுங்கள்! என்று சொல்கிறார்கள்.

சிறை சென்றவர்களில் சில பேர் செத்தனர், இவர்களெல்லாரும் சாகாதிருந்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கா இருக்கப்போகிறார்கள்? நோயால் தூக்குப் போட்டுக் கொண்டா செத்தோம்? இல்லை! பின் எதற்காக? இலட்சியத்திற்காகச் செத்தனர். எனக்கும் உங்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும். எந்த நேரத்திலேயோ சாகும் நாம் இந்த உயர்வான இலட்சியத்துக்காகச் சாவோமே! செத்தவர்களைக் கண்டு நாம் வெட்கப்பட வேண்டும். நாமும் இலட்சியச் சாவு பெறத் துணிய வேண்டும்.

நமது இயக்கப் புத்தகங்கள் சிலவற்றை வாங்கிப் படிக்க வேண்டும். காரணம் விளங்கினால்தான் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்!

தோழர்களே! இந்த நாட்டிலே மனித சமுதாயத்துக்கு மூன்று பெரிய கேடுகள்! மக்கள் நன்மை தீமை உணர இவற்றை ஒழித்தாக வேண்டும்.

முதலாவதாக மேல்ஜாதி.... கீழ்ஜாதி; ஒருவன் பார்ப்பான், கடவுளுக்குச் சமமானவன்! அவன் சாமி! பிராமணன் என அழைக்கப்பட வேண்டும். அவன் கடவுள் இனம்! சாமிக்கும் பூணூல்! அவனுக்கும் பூணூல்! அவன் உயர்ந்தவன், நாம் தாழ்ந்தவர்கள்.

மனிதனில் எதற்கு மேல்ஜாதி... கீழ்ஜாதி? இந்தக் கொடுமை இந்த நாட்டைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலுமில்லையே!

மேல்ஜாதி என்பது பாடுடாத சோம்பேறி வாழ்வுக்கு ஏற்பட்டது. கீழ்ஜாதி அந்தச் சோம்பேறிக்கு ஆகப் பாடுபடும் ஜாதி. பாடுபட்டதைச் சோம்பேறிகள் அனுபவிக்க விட்டுவிட்டது.

இரண்டாவதாகப் பணக்காரன், ஏழை. இது எதற்காக? பணக்காரன் - ஊரார் உழைப்பை அனுபவித்து பணம் சேர்த்துக் கொள்ளையடிப்பவன்! ஏழை பாடுபட்டுப் பணக்காரனிடம் கொடுத்துவிட்டுக் கஷ்டப்படுபவன்; ஏன் இப்படி? அவசியமென்ன? பணக்காரன் மக்களுக்காக என்ன பாடுபடுகிறான்? ஏழை என்ன பாடுபடவில்லை?

மூன்றாவதாக - ஆண் எஜமானன்! பெண் அடிமை! இராஜாவின் வீட்டிலும் இராணியானாலும் சரி பெண் அடிமைதான்! சில நிர்பந்தம், அடக்குமுறை ஆண்களுக்குத்தான் சவுகரியம் அளிக்கின்றன. மிருகங்களில் கூட இருக்கலாம். அவைகளுக்குப் புத்தி இல்லை. மனிதனில் ஆண் எசமான்; பெண் அடிமை; இந்த வேறுபாடு தேவையில்லாதது. அக்கிரமமானதுங்கூட; பொருத்தமற்றது. இயற்கைக்கு விரோதமானது.

இங்கு மூன்று பேர் மேல் ஜாதி; 97-பேர் கீழ்ச்ஜாதி! அதுபோல பணக்காரன் மூன்று பேர்; ஏழை 97-பேர்; ஏன் இந்த வேறுபாடு? சிந்தித்தால் கிடைக்கும் காரணம். இந்த மூன்று தன்மைகளுக்கும், சிறுபான்மையினர் பெரும்பான்மையானவர்களைக் கஷ்டப்படுத்துகிறார்கள்.

காரணம் 1-கடவுள்; 2-மதம் - சாஸ்திரம்; 3-அரசாங்கம்.

கடவுள் பெயரால் ஏன் மேல் ஜாதி கீழ்ஜாதி என்றால் மதம் சாஸ்திரம் அப்படி. மதம் சாஸ்திரம் பாதுகாப்புக்கு அரசாங்கம் உள்ளது. ஆகவே இந்த மூன்று கேடுகளும் ஒழியவேண்டுமா? வேண்டாமா? இந்த மூன்றில் கடுகத்தனை வேர் இருக்கும் வரை நாம் கஷ்டப்பட வேண்டியதுதான். யார் இதைப் பற்றியெல்லாம் நினைக்கிறார்கள் திராவிடர் கழகத்தைத் தவிர?

திராவிடர் கழகம் என்றால் கடவுள் இல்லை, மதத்தை எதிர்க்கிறது, நேரு அரசாங்கம் ஒழிய வேண்டுமென்பது தானா? என்கின்றனர்.

பாடுபடாத சோம்பேறிக் கொள்ளைக்காரன்களுக்கு அனுமதி அளிக்க இந்த மேல் சாதி பாதுகாப்பென்றால் ஏன் இவற்றை ஒழிக்கக் கூடாது? சூழ்ச்சி சுயநலக்காரன் வாழவே இந்த ஆட்சி; இதை ஒழிக்கப் பாடுபடாவிட்டால் நமக்கும், மிருகத்துக்கும் என்ன வித்தியாசம்? இவற்றை ஒழிக்க நாம் மனிதத் தன்மையை அடைய முடியாதபடி செய்ய, இம்மூன்று தன்மைகளும் மக்களை ஏமாற்றி துப்பாக்கி, இராணுவம் பேரால் மிரட்டுகின்றன.

இதற்குக் கிளர்ச்சி என்பது சாதாரணமானது; போதாது. இரத்த ஆறு ஓட வேண்டும் நேர்மையை நிலைநாட்டச் செய்ய வேண்டும். இந்த மாதிரியான நிலை ஏன் ஏற்பட்டதென்றால் நமக்குக் கோழைத்தனம் அறிவில்லாத தன்மையால் ஏற்பட்ட குறைகள்! பின் எதற்காக இம்மாதிரி வேறுபாடுகள் இருக்க வேண்டும்? மத - சம்பிரதாயங்களால்தான் இந்த வேற்றுமைகள் ஏற்படுகின்றன. இவை ஒழிய, ஆணும், பெண்ணும் பாடுபட வேண்டும். பொதுமக்கள் ஒவ்வொருவரும் இக்காரியத்தில் இறங்க வேண்டும்.

உலகத்தில் 30-கோடி மக்களைக் கொண்ட ரஷ்யா, 65-கோடி மக்கள் உள்ள சைனாவில் கடவுள், மதமில்லை! சாஸ்திர சம்பிரதாயமில்லை! ஆண், பெண் பேதமில்லை! உத்தியோகத்தில், பட்டாளத்தில், போலீசில் இரு பிரிவினரும் சமம். அங்கு ஆண்கள் செய்யும் வேலையைப் பெண்கள் பார்க்கிறார்கள். அங்கெல்லாம் எப்படி இந்த நிலைமை வந்தது?

இராஜாவைப், பாதிரியை வெட்டி வீழ்த்தினார்கள்; கோயில்களை இடித்துத் தள்ளினார்கள்! எனவே அங்கு ஆண் எசமானுமில்லை. பெண் அடிமையுமில்லை.

இந்த நிலையிலே ஒன்று நீயா! அல்லது நானா! என்பதுதான் நமது முடிவாக இருக்க வேண்டும். இந்த இழிநிலையை நீக்க எல்லோருமே தான் சாவோமே! என்ன முழுகி விட்டது? கடவுள் அப்படிச் சொன்னார்! சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது? என்றெல்லாம் மனிதன் பயங்காளிப் பழக்க வழக்கத்தில் ஊறிப்போய்விட்டான்.

இம்மாதிரி முயற்சி, நமது கிளர்ச்சி ஜாதி ஒழியவேண்டுமென்பது. இதற்கு எவ்வளவு தூரம் போக வேண்டும்? முதலாவது ஜாதியைப் பாதுகாக்கும் கடவுளை ஒழிக்க வேண்டும்.

நாம் ஏன் 4-வது 5-வது ஜாதி? ஏன் பறையனென்றால் கடவுளையும், மதத்தையும் நம்புகிறான். இதை நம்புவனெல்லாம் ஜாதியில் பறையன், எனவே நாம் ஜாதியையும், கடவுளையும் ஒழிக்க வேண்டும். "நீ என்ன மதம்" என்று கேட்டால், "நான் அறிவு மதமென்று" சொல்ல வேண்டும். "கடவுள் இல்லை, சாஸ்திரமில்லை" என்று சொல்ல வேண்டும்; கடப்பாறையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கஷாயம் குடித்தால் போதுமா? ஏன் என்று கேட்க வேண்டாமா? மதம், கடவுள் இப்படி! இதைப் பாதுகாக்க இப்படி அரசாங்கம் ஒன்று இருக்கிறதென்றால் இதை ஒழிக்க வேண்டாமா?

காந்தி இவற்றையெல்லாம் நினைத்திருப்பாரா? இல்லையே, இதனால்தான் காந்தி பார்ப்பானுக்கு மகான்! எனக்கு அவர் சாதாரண மனிதன்! சாணியையும், கல்லையும் கடவுளாக்குபவன் மனிதனை மகாத்மா என்றால் நம்பத்தானே செய்தான்? இதை எதிர்க்க திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எவன் பாடுபட்டான்? சொல்லப் பயப்படுகிறானே? சொல்பவைனைச் சிறையில் போடுவதும், கொடுமைப்படுத்துவதுமா அரசாங்கம் என்பது? மக்களை நேர்மையாக ஆள்வதல்லவா அரசாங்கம்!

பணக்காரனைக் காப்பாற்றுவதற்குத்தான் அரசாங்கம் உள்ளது. சட்டதிட்டம் மீறினால் போலீஸ், பட்டாளம், ஜெயில் துப்பாக்கியெல்லாம்.

இந்தக் கொடுமைகளை மாற்ற வேண்டுமென்று ஒருவனும் சொல்லவில்லை. பாடுபடவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் புத்தர் சொன்னார்! சொன்னவரை ஒழித்தார்கள்! புத்த நிலையங்களைக் கொளுத்தினர். திருவள்ளுவர் இவையெல்லாம் அக்கிரமமென்றார். அவர் சொல் இன்று குப்பையில்! இராமாயணம், கீதை முதலிய கசுமாலம் (மலக்கழிவு) இம்மாகாணத்தில் முன்நிற்கின்றன. இவற்றைக் கொளுத்து என்று சொல்ல ஒருவனுமில்லை, திராவிடர் கழகத்தைத் தவிர! இவனில்லையென்றால் உங்கள் கதி இன்று எப்படி இருக்கும் என்று நினையுங்கள். வேறு எவன் இதைச் சொல்லி இருக்கிறான்?

காங்கிரஸ்காரன் அவ்வளவு பேரும் கடவுளை நம்பணும், மதத்தை நம்பணும், அதைக்காப்பாற்ற அரசாங்கம் தேவை என்பவர்கள். கடவுள், மதம் வேண்டுமென்கிற காங்கிரசை எதிர்ப்பவன், எதிர்க்கிற எதிர்க்கட்சி என்று கூறி, காங்கிரசுக்காரனுக்குப் பாதுகாப்பான சட்டசபையில், பார்லிமெண்டில் (நாடாளுமன்றத்தில்) இருந்து கொண்டு வயிறு வளர்க்கிறான். வெளியிலும் சொல்லிக் கொண்டுமிருக்கிறான். திரு. ம.பொ.சிவஞானம் நம்மை எதிர்த்துப் பார்ப்பானிடம் பொறுக்கப்போகிறார். 'நாம் தமிழர்' என்னும் கட்சிக்காரர்கள். கடவுளைச் ஜாதியைப் பற்றிப் பேசினால் வாய் சுட்டுவிடும் என்கின்றனர்! ஆனால் ஒரு காரியத்தில் - தனிநாடு தேவை என்பதில் ஒத்து வருகிறார்கள் பாடுபடுகிறார்கள்.

கண்ணீர்த்துளிகள் பார்ப்பானைப் பற்றி, கடவுளைப் பற்றி, சாமியைப்பற்றி மூச்சு விடுகிறார்களா? பார்ப்பான் தயவில் ஓட்டுப் பிச்சைப் பெற்றுப் பதவிக்குப் போக வேண்டுமென்றே கட்சி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கம்யூனிஸ்டும் அப்படியே; தலைவர்கள் பார்ப்பான்! (சிரிப்பு) அங்கு வேறு என்ன இருக்க முடியும்? மதத்தைக் காப்பாற்றணும், கட்சியைக் காப்பாற்றணும், பார்ப்பனரல்லாத பணக்காரனை மாத்திரம் ஒழிக்க வேண்டும் என்கிறான்.

காங்கிரஸ் கருதுவதோ பார்ப்பானுக்குச், ஜாதிக்குக், கடவுளுக்கு, மதத்துக்குக், காங்கிரசுக்குப் பாதுகாப்பு தந்து, பதவி ஒன்றே போதும் என்கிறது. கடவுள், சாஸ்திரம் ஒழிய வேண்டுமென்று கூற வேறு யார் இருக்கிறார்கள்? நாங்கள் இல்லாவிட்டால் பள்ளர், பறையர், சூத்திரன், பார்ப்பான் காலில் விழுவார்கள். அவன் நட்ட கல்லில் முட்டிக் கொள்வார்கள். எவனாவது இனி கடவுள் மதத்தைப் பற்றி பேசினால் ஒழிக்க வேண்டாமா?

கொள்ளையடிக்கிறார்கள், கொடுமை செய்கிறார்கள். இம்மாதிரி செய்பவர்களே கீழ்ஜாதி - அயோக்கியனென்பதானால் அது பார்ப்பானைத்தான் பெரிதும் சொல்ல வேண்டும்; நோகாமல் வஞ்சித்துச் சாப்பிடுகிறான். மனிதனுக்குத் தேவையான காரியங்களை நாம் செய்வது. அதன் பலனை நாம் அனுபவிப்பதில்லை. ஆனால் இவை ஒன்றும் செய்யாத பார்ப்பான்தான் அனுபவிக்கிறான். ஆகவே பர்ப்பான்தான் கீழ்ச்சாதியாகும். வலுத்துவன் இளைத்தவனைச் சுரண்டாமல், உதைக்காமல் பாதுகாத்தலே அரசாங்கக் கடமை. இப்போது அப்படி இல்லாமல் வலுத்தவனுக்காத்தானே அரசாங்கமிருக்கிறது! அறிவு உணர்ச்சி இருக்கிறவர்கள் கிளர்ச்சி செய்ய வேண்டிய நிலையில், நாம் அறிவிலிகள், உணர்ச்சியற்றவர்களாதலால் சும்மா இருக்கிறோம்.

புத்தி மானம் உள்ளவர்கள் கடவுள் நம்மைக் காப்பாற்றுமென்று நினைக்கலாமா?..... பார்ப்பான் மேல் ஜாதியா? அவன் கடவுள், சாஸ்திரத்தைக் காப்பாற்ற வேண்டுமா? அதற்குப் பாதுகாப்பான அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டுமா? நாம் இவைகளை முட்டாள்தனம் என்று உணர வேண்டும். சைனா, ரஷ்யா மாதிரி ஆகவேண்டும். இவற்றைச் செய்யப் பகுத்தறிவாதியாக வேண்டும்.

மொத்த உலக ஜனத்தொகை 250-கோடி. சைனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாட்டு 100-கோடி மக்களுக்கு மேல் கடவுளில்லை என்பவர்கள். அவர்கள் மற்றும் 100-கோடிக்கு மேற்பட்ட முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்குக் கடவுள் உண்டு; மதமுண்டு அவர்கள் கடவுள் எப்படி இருக்கிறதென்றார்கள்?

நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் கடவுளை? அன்பு, ஒழுக்கமான, நேர்மையான ஒரு கடவுள்; அதற்கு உருவமில்லை, அது ஒன்றும் வேண்டாத கடவுளென்கிறார்கள்.

இந்துக்களையெடுத்துக் கொள்ளுங்கள். குரங்கு, பாம்பு, கழுகு, பன்றி, குதிரை, ஆடு, மாடு, எலி, மரம், ஆறு, குளம், அசிங்கக் குட்டை எல்லாம் கடவுள். (பைத்தியக்காரனுக்கு கள் ஊத்தினது மாதிரி கடவுள்கள்)

செருப்புக் கடவுள் - கரூர் பக்கம் சக்கிலி, கதவு அளவு செருப்பு செய்து அதற்குச் சூடம் காண்பிக்கிறான்.

கடவுளுக்குப் பெண்டாட்டி, வைப்பாட்டி வேறு எந்த நாட்டுக்காரனாவது செய்கிறானா? நமதென்கிற கடவுளுருவத்தைத் துலுக்கன் உதைப்பான். பார்ப்பான் சுங்கம் வசூலிக்கவே தவிர வேறு எதற்கு? அவனுக்குக் கடவுள் பக்தி உண்டா உங்களைப் போல்? இந்த இராமன், சிவன், கிருஷ்ணன் நம் கடவுள்களா?

எல்லாம் வடநாட்டில் இருந்து பார்ப்பான் கொண்டு வந்த கடவுள்களே! இவற்றை நம் நாட்டில் கொண்டு வந்து வைத்துள்ளான். உதைத்து நம்பவைத்து, காசு பறிக்கிறான். இராமன், கிருஷ்ணன் எவனுக்கோ பிறந்து செத்தவன்களை நமக்குக் கடவுளென்றால் பிறந்தான், செத்தான் என்றால் கடவுள்களா அவன்கள்? இறப்பு, பிறப்பு இல்லாதவன் கடவுள் என்று கிறிஸ்தவர், முஸ்லிம்கள் கூறுகிறார்கள். பாகவதத்தில் கிருஷ்ணனுக்கு இலட்சம் பெண்டாட்டிகள், பல லட்சம் வைப்பாட்டிகள்! பல பெண்களை அவமானப்படுத்திக் கெடுத்தவன். அவன் படத்தை நம் பெண்கள் துடைப்பத்தால் அடித்துக் காறித்துப்ப வேண்டாமா? ஆண்களுக்குத் தான் புத்தியில்லை என்றால், பெண்களாவது நினைத்துப் பார்க்க வேண்டாமா? அவன் படத்தை வீட்டில் வைக்கலாமா?

கொலைகாரனைக், கொள்ளைக்காரனைக் கடவுளென்று அவன் அயோக்கியத்தனத்தைப் போற்றிக் கும்பிட்டால் பார்ப்பான் நம்மை சூத்திரன், பறையன், பள்ளனென்று ஏன் சொல்லமாட்டான்? இராமாயணமும், பாரதமும் மனித சமுதாயத்துக்குப் பித்தலாட்டத்துக்கு ஆதாரம். இவை கடவுள் கதைகள். இவற்றை இராசகோபலாச்சாரியும், சங்கராச்சாரியும் வானளாவப் புகழ்ந்து இவை கடவுளால் கொடுக்கப்பட்டவை என்கிறார்கள். அது அந்தச் ஜாதியின் ஒழுக்கம். திரௌபதி அய்ந்துபேர் போதாதென்று ஆறாமவனையும் காதலித்தவள்! சீதை இராவணனுடன் போனவன். அவள் "சினையானது" இலங்கையில்! இராமன் பிள்ளைத்தாய்ச்சியுடன் கூட்டி வந்தான். அகலிகை ரிஷி பெண்டாட்டி தேவகுரு பெண்டாட்டி இருவரும் (தாரை அகலிகை) விபசாரத்தனம் செய்து தடயம் கண்டுபிடித்து கேசு (வழக்கு) ருசுவாகித் தண்டனையும் ஆகியுள்ளது. இம்மாதிரி ருசுவான கேசுள்ளவர்களுக்குப் பதிவிரதைப் பட்டம் என்பது டாக்டர் இராஜனுக்கு மந்திரி வேலை கொடுத்தது போல் அல்லவா? அவர்கள் மோசமான ஜாதி. ஆனதால் அவர்களுக்கு அந்த ஒழுக்கம் பொருத்தம். நாம் அப்படி சொல்லலாமா? புத்தி மானம் இல்லாவிட்டால் இவ்வளவு அவுசாரிகளைக் (விபசாரிகளை) கும்பிட்டால் ஏன் நம்மைச் சூத்திரன் என்று கூறாமலிருப்பான்? இவற்றைக் கண்டிக்க வேண்டும். இவற்றைக் கும்பிடலாமா? இந்தப் புத்தியை நாம் மாற்ற வேண்டாமா?

கிறிஸ்தவனில் ஜாதி உயர்வு, தாழ்வு கிடையாது. முஸ்லிம்களில் பார்ப்பான், துலுக்கன், பறை துலுக்கன் இல்லை. ஒரே பைபிள்; ஒரே குர்ஆன்; ஒரே ஏசு. ஒரே நபி தலைவன். உனக்கு (திராவிடனுக்கு) யார் தலைவன்? இராசகோபாலாச்சாரி, சங்கராச்சாரி உனக்குத் தலைவனா? இப்பொழுது நடைமுறையிலுள்ள ஆண்டு எண்ணிக்கைக்கு அவர்களுக்கு ஆதாரம் உண்டு. உனது ஆண்டுக்கு ஆதாரம் ஏது? இராமாயணமா? பாகவதமா? உன்னை அதில் அரக்கன், சூத்திரன், தேவடியாள் மகன் என்கிறான் - ஏற்கலாமா நீ? அதன்படி இந்த ஆட்சிக்காரன் சட்டத்திலும் சூத்திரன் என்கிறான்.

ஆகவே தோழர்களே! முதலில் கூறிய மூன்று கேடுகளையும் ஒழிக்க வேண்டாமா?

மணியம்மை திருவண்ணாமலை பஸ்ஸில் வரும்போது நான்கு பார்ப்பனர்கள் "இந்த இராமசாமி ஆரம்பத்தில் ஈரோட்டிலிருந்து செல்லாக்காசாகி, திருச்சி வந்து, நான்கு ஏக்கர் நிலம் வாங்கிக் கொண்டு, பல லட்சம் பணம் திரட்டிக் கொண்டிருக்கிறார். நமது நேரு வந்து 4000- பேர்களை உதைத்து, ஜெயிலில் போட்டு ஒழிக்கச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதனால் ஒழித்தார்கள்" என்று பேசிக் கொண்டு வந்தார்களாம். இதிலிருந்து நம்மை ஒழித்துக்கட்டி விட்டதாக அவர்களுக்குள் எண்ணம்.

தீபாவளி பண்டிகை விமரிசையாக நடப்பதாக எண்ணி நம்மைக் கிண்டலாக 'தினமணி'க்காரன் எழுதுகிறான். இந்தக் கதைப்படி உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கடலுக்குள் ஒளிந்தானென்றும், கடவுள் பன்றி அவதாரம் எடுத்து மீட்டு, அசுரனைக் கொன்று, தேவர்களைக் காப்பாற்றினான் என்றும் கூறுகிறான். இது எப்படி என்றால் "உன் அப்பன் எங்கே என்றானாம்?" ஒருவன். "என் அப்பன் வானம் ஓட்டையாகிவிட்டது. ஆகையால் எறும்புத் தோலை உரித்து அடைக்கப் போயிருக்கிறான்" என்றானாம்! இதைப் போன்று பெரும் புளுகு அல்லவா அந்தக் கதை? அடுத்து வரும் கிளர்ச்சிக்கு அறிகுறியாக அதிகமான பேர் தமிழ்நாடு நீங்கிய இந்தியநாடு படத்தைக் கொளுத்தத் தயாராயிருக்க வேண்டும். நம் நாட்டை நாம் பார்த்துக் கொள்வோம். அவனவன் நாட்டை அவனவன் பார்த்துக் கொள்வான். அரசாங்கத்துக்கு வாய்தா கொடுப்போம். நீங்கள் நிறைய ஆதரவு தரவேண்டும்.

----------------------------- 12.11.1958-அன்று மேலவாளாடியில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. ”விடுதலை”, 07.01.1959