Search This Blog

3.7.13

கழிவிரக்கமற்றவர்கள் பார்ப்பனர்கள்!

 
உத்தரகாண்ட் பேரழிவுக்குப் பின், புண்ணிய தலங்கள் - அவற்றின் மகாத்மியங்கள்பற்றிப் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அய்யப்பாடு ஏற்படுவது இயல்பே!

எந்தக் கோவில், கடவுள் மகாசக்தி வாய்ந்தவர்கள் - அங்கு சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்று நம்பிச் சென்றார்களோ, அந்தக் கடவுள்கள் தங்களைக் காப்பாற்ற வில்லை; இயற்கைச் சீற்றத்தின் காரணமாக பல்லாயிரக் கணக்கான பக்தர்கள், குழந்தைகள், முதியவர்கள் சகிதமாகப் பரிதாபகரமாகத் துடிதுடித்து மாண்டனர் என்பதை - அவற்றைப் பார்த்த நிலையில், எப்படித்தான் எடுத்துக் கொள்வார்கள்?

இதற்குப் பெரியதோர் ஆய்வுகள் தேவைப்படாது - பிரத்தியட்சமாக நேரில்பார்த்து வந்துள்ளனர்; தப்பித்தோம், பிழைத்தோம் என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வந்துள்ளனர்.   
 
இராணுவம் என்ற ஒன்று இல்லாவிட்டால், லட்சக் கணக்காக அவ்விடங்களுக்குச் சென்றிருந்த அத்தனை மக்களும் வெள்ளத்தால் அடித்துக்கொண்டு செல்லப்பட்டு இருப்பார்கள்.

அங்கு சென்று பாதிப்புக்கு ஆளான மக்கள் மட்டுமல்லர், இந்தச் செய்திகளை ஏடுகளில் படித்தவர்கள், தொலைக் காட்சிகளில் பார்த்தவர்களும் என்னதான் நினைப்பார்கள்?

கடவுள் சக்தி என்பதெல்லாம் சுத்தப் புரட்டு; கருப்புச் சட்டைக்காரர்கள் சொல்லுவதில் அர்த்தம் இருக்கிறது என்றுதானே சாதாரணமாகவே நினைப்பார்கள்.

அந்த நிலை ஏற்பட்டுவிட்டால் கடவுள் சக்தியின்மீது நம்பிக்கை இழக்கப்பட்டால் தங்களின் ஜாதி ஆதிக் கத்துக்கும், புரோகிதச் சுரண்டலுக்கும் ஆபத்து வந்துவிடுமே என்ற அச்சம் உலுக்க உலுக்க ஏடுகள் நடத்தும் பார்ப்பனர்கள் எவ்வளவு பம்மாத்தாக, நயவஞ்சகமாக எழுதுகிறார்கள் - செய்திகளை வெளியிடுகிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.

கேதார்நாத் அழைக்கிறது எனும் தலைப்பில் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டு, நிதி திரட்டும் வேலையில் இறங்கி இருக்கும் தினமணி (2.7.2013, பக்கம் 1) எப்படி செய்தியை வெளியிடுகிறது?

கேதார்நாத் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு பகுதியாகவோ, ஒரு குறிப்பிட்ட மதத்தின் புனிதத் தலமாகவோ மட்டும் இருக்கவில்லை. சபரிமலை, வேளாங்கண்ணி போன்று அனைத்து மக்களுக்கும், அனைத்துப் பகுதியினருக்கும் நம்பிக்கையூட்டும் ஒரு புகலிடம் அது - இன்னும் சொல்வதாக இருந்தால், அது இந்தியாவின் பாரம்பரியச் சின்னம்! கலாச்சாரத்தின் அடையாளம்! என்று தினமணி எவ்வளவுத் தளுக்காக எழுதுகிறது பார்த்தீர்களா?

அது என்ன அனைத்து மதத்தினருக்கும் புகலிடம்? அந்தப் புகலிடம் பாதுகாப்பானதாக இல்லையே!

கடவுளை மய்யப்படுத்தும் அந்தப் புகலிடம் அனைத்து மதப் பக்தர்களின் உயிருக்குப் பாதுகாப்பாக இல்லையே! இதை ஒப்புக் கொள்வதற்கு, எழுதுவதற்கு என்ன தயக்கம்?

இது அறிவு நாணயமற்ற தன்மை என்பதைத் தவிர வேறு என்னவாம்? அடுத்து தினமணி எழுதுகிறது? இந்தியாவின் பாரம்பரியச் சின்னம் - கலாச்சாரத்தின் அடை யாளமாம்.

இதற்கு ஏதாவது அர்த்தம் புரிகிறதா? வெறும் வார்த்தைக் குப்பைகள் அல்லாமல் வேறு என்னவாம்?

இந்தியா என்பது எப்பொழுது வந்தது? இந்தியாவுக்கு என்று தனித்த கலாச்சாரம் என்ன? பல இனம், பல மொழி, பல பண்பாடு, பல மதங்கள், மதமற்ற தன்மைகள் என்று பிளவுபட்டுக் கிடக்கும்போது, எங்கிருந்து வந்தது கலாச்சார சின்னம்?

பாவம், உத்தரகாண்ட் இயற்கைச் சீரழிவு பார்ப்பனர்களைப் பெரிய அளவுக்குத் தாக்கி இருக்கிறது. அதனுடைய உளறல், உதறல்களாகவே இந்த எழுத்துக்கள் அமைந்துள்ளன.

தமிழர்களின் முதலீட்டில் புதிய தலைமுறை என்ற இதழ் - ஆசிரியரோ அவாள்! கடவுளைக் காப்பாற்றித் தீர வேண்டுமே எழுதுகிறார்கள் பாருங்கள் (நாள்: 4.7.2013, பக்கம் 4).

இயற்கை என்பது கடவுளின் கைவண்ணம்; தொழில் நுட்பம் என்பது மனிதனின் குழந்தை. கடவுளுக்கும், மனிதனுக்கும் இருக்கும் வித்தியாசமே இதுதான் என எழுதிக் கொண்டிருந்ததை முதுகுக்குப் பின்னிருந்து படித்துக் கொண்டிருந்த சகா உருக்குலைந்து கிடக்கும் உத்தரகாண்ட் படங்களைப் பார்த்த பின்பும்கூட இப்படிச் சொல்வீர்களா? என்றார். நான் புன்னகைத்தேன்.
இப்போதும் கடவுள் மனிதனைக் கடிந்துகொண்டி ருக்கிறார். ஆனால், கைவிட்டுவிடவில்லை என்று சொல்வேன் என்றேன்.

என்ன எழுதுகிறார்? கடவுள் மனிதனைக் கண்டிக் கிறாராம். அப்படி என்றால், அவர் கண்டிப்பு தம்மை நாடி வந்த பல்லாயிரக்கணக்கான மக்களை துடிதுடிக்க அதிர்ச்சியூட்டி சாகடிப்பதுதானா?

கடவுள் யாரைக் கண்டிக்கிறார் என்பதைவிட, தண்டிக்கிறார் - அப்பாவி பக்தர்களை - இது எந்த வகை நியாயம்?

இயற்கையை அழித்தவர்கள் எங்கோ இருக்கிறார்கள்? அவர்களுக்காக பக்தர்கள் பழிவாங்கப்படவேண்டுமா?

பழி ஓரிடம்; பாவம் மற்றோரிடம் என்பார்களே! அது இவர்களின் கடவுளுக்கும் பொருந்துமோ!

கடவுளைக் காப்பாற்றப் போய், கழிவிரக்கம் அற்ற மனிதர்கள் பார்ப்பனர்கள் என்பதை மற்றொரு முறை நிரூபித்துக்கொண்டு விட்டனர்.
                                  
-------------------------"விடுதலை” தலையங்கம் 3-7-2013

மழையை வரவழைக்க யாகமா? நிறுத்தாவிட்டால் பிரச்சாரம், அறப்போர், நீதிமன்றம் மூலம் தீர்வு


மதச் சார்பற்ற தன்மைக்கும், விஞ்ஞான மனப்பான்மையை
வளர்க்க வலியுறுத்தும் அரசியல் சட்டப் பிரிவுகளுக்கும் விரோதமே!
நிறுத்தாவிட்டால் பிரச்சாரம், அறப்போர், நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் மதச் சார்பற்ற தன்மைக்கும், விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்ற பிரிவுக்கும் விரோதமாக, தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை மழைக்காக யாகங்களை ஏற்பாடு செய்துள்ளதைக் கண்டித்தும், உடனடியாக இது நிறுத்தப்படா விட்டால் அறப்போர், பிரச்சாரம், நீதிமன்றம் ஆகிய தளங்களில் கழகத்தின் சார்பில்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

இந்த ஆண்டு, சரியான மழை - காலத்தே பெய்யும் பருவ மழை போதிய அளவு இல்லை என்பதால் வறட்சி நிலவுகிறது. வடமாநிலங்களில் அபரிமிதமான மழை, வெள்ளக்காடு - பல்லாயிரம் பேர்களைப் பலி கொள்ளும் அளவுக்கு அங்கே!

மழையை வரவழைக்க யாகமா?

இந்நிலையில், மழையை வரவழைக்க இந்து அறநிலையத் துறை தன்கீழ் உள்ள கோவில்களில் யாகம் நடத்தியும், வருண ஜெபம் நடத்தியும் சில கோயில் குளங்களில் (அங்கேயே பல குளங்கள் - தீர்த்தங்களில் தண்ணீரே இல்லை) முழங்கால் அளவு, அரை நிர்வாணக் கோலத்துடன் திடசரீரம் உள்ள பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிச் சின்னமான பூணூலைக் காட்டிக் கொண்டு, சமஸ்கிருத மொழியில் வேத மந்திரங்களை கூவிக் கொண்டு, யாகம் என்ற பெயரில் புது வருவாய்க்கு வழிதேடும் வழியை வகுத்துக் கொடுத்திருக்கிறது!
இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் மழை வேண்டி யாகம் என்றால், உலகத்தின் பகுத்தறிவுள்ள மக்கள் கை கொட்டிச் சிரிக்க மாட்டார்களா?
இந்த மூடநம்பிக்கைகளை - பக்தி வேஷம் போட்டு பரதக் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் பார்ப்பனர்களுக்கு தொழில் வளம் ஏற்படுத்த தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை துணை போவது மிக மிகக் கண்டனத்திற்குரியதாகும்!

இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்லுவது என்ன?

இந்திய அரசியல்   அமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மை (Secular) கொள்கைக்கும் 51A(h) பிரிவில் உள்ள அடிப்படை கடமைகளைப் பரப்புதல் என்ற தலைப்பில், ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை (Seientific Temper) கேள்வி கேட்கும் அறிவை மனித நேயத்தை, சீர்திருத்தத்தைப் பரப்புவது அடிப்படை கடமை என்று இருக்கும்போது,
அதை செய்யத் தவறுவதைவிட பெருங் குற்றமும் உண்டோ? அரசு துறையே அறிவியல் மனப்போக்குக்கும், சீர்திருத்தத்திற்கும் முரணாக இப்படி மழை வேண்டி யாகம் செய்ய அதன் நிதியைச் செலவிட்டு, மூடநம்பிக்கையைப் பரப்பும் மோசமான எதிர் மறை செயலில் ஈடுபடலாமா?
இதைவிட (அரசியல்) சட்ட விரோத நடவடிக்கை வேறு என்ன?
மழை வேண்டி - பருவக் காற்றுத் துவங்கும் காலத்தில் மிக சாமர்த்தியமாக யாகம் நடத்துவது வருண ஜெபம் நடத்துவது, என்பது யாரை ஏமாற்ற?
சில கேள்விகளை அத்தகைய பெரும் உலக மகா யாக அறிவாளிகளுக்கு நாம் வைக்கிறோம்.

சில கேள்விகள்
1. மழை எப்படி வருகிறது என்பது 4,5ஆவது வகுப்பு மாணவனுக்கு வகுப்பில் விஞ்ஞானம் சொல்லிக் கொடுத்துவிட்டு, இப்படி யாகம் செய்தால் அது இரட்டை வேடம்  - மோசடி அல்லவா?

2. யாகம் நடத்தும் எவராவது கையில் குடையோடு சென்றுள்ளார்களா? உத்தரவாதம் தருவார்களா?

3. மழை வேண்டி வருண ஜெபம், யாகம், பூஜை புனஸ்காரம், முழங்கால் தண்ணீரில் நின்று சமஸ்கிருத வேத மந்திரங்கள், அல்லது அமிர்தவர்ஷணி ராகம் பாடுவதாலோ! ஆனந்த பைரவி வாசிப்பதாலோ மழை வரும் என்றால், கச்சேரி மூலமே மழைப் பிரச்சினையைத் தீர்த்து விடலாமே! - எதற்காக உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் காவிரி நீருக்காக?

மழை வெள்ளத்தைத் தடுக்க யாகம் உண்டா?

உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்கள் நிவாரண உதவிகளைத் தடுக்கும் வகையில் மீண்டும் மிரட்டும் மழையைத் தடுக்க எந்த யாகம்? எந்த பூஜை? எந்த ஜெபம்? - சொல்லட்டுமே பார்க்கலாம்!

அறியாமையை விட மிகப் பெரிய நோய் மனித குலத்திற்கு வேறு இல்லை என்றார் அமெரிக்க நாட்டுப் பகுத்தறிவாளர் ராபர்ட் ஜி. இங்கர்சால்!
இந்த அறியாமையைத் தமிழக அரசே ஊக்குவிக்க லாமா? பரப்பலாமா? அதுவும் அண்ணா பெயரில் உள்ள அரசு?

இந்து அறநிலையத் துறையின் வேலை என்ன?

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை நீதிக்கட்சி ஆட்சிதான் 1924 வாக்கில் உருவாக்கியது. அதன் விவாதங்கள் சட்டமன்றத்தின் நூலகத்தில் உள்ளதை இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும், அமைச்சரும், முதல் அமைச்சரும் படிக்க வேண்டும்.

கணக்குத் தணிக்கை (Audit) தான் அதன் பிரதான நோக்கமே தவிர, பக்தி பரப்பும் இலாகாவாக இந்து அறநிலையத் துறை செயல்படுவது அச்சட்ட விரோதமே! சாயமடிப்பதோ, கும்பாபிஷேகம் செய்வதோ, தேர் இழுப்பதோ இத்துறை அதிகாரிகளின் வேலை அல்ல!

உடனடியாக நிறுத்தப்படா விட்டால்...

இப்போது மதச் சார்பின்மையைக் காற்றில் பறக்க விட்டு விட்டு, பல மாவட்டங்களில் ஆட்சியாளர்களும், (Collector), மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் களும் (போலீஸ் எஸ்.பி.க்களும்) தேருக்கு வடம் பிடிப்பது, கும்பாபிஷேகத்தில் பக்தி வேஷம் போட்டுக் காட்டிக் கொள்ளுவது, என்பது பகிரங்கமான சட்ட விரோதச் செயல்!

இது உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் அறப் போர்கள் ஒரு முனையிலும், பொது நல வழக்கு மறு முனையிலும், பிரச்சாரங்கள் மூன்றாவது முனையிலும் நடத்தப்படும் என்பதை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

------------------------------------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை   --"விடுதலை”
2.7.2013

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிவகங்கை தீர்த்தத்தில் மழை வேண்டி திங்கள்கிழமை காலை நடைபெற்ற வருணஜெபம். (தினமணி 2.7.2013)

2.7.13

மருத்துவர் பற்றாக் குறையும் தந்தை பெரியார் கூறும் தீர்வும்


இந்தியாவைப் பொறுத்தவரை மருத்துவர்கள் பற்றாக் குறை ஒரு சவாலாகவே உள்ளது. உலகளவில் ஆயிரம் பேர்களுக்கு 1.5 மருத்துவர் என்ற நிலை உள்ளது. சோமாலியாவில் 10 ஆயிரம் பேர்களுக்கு ஒருவரும், சீனாவில் 1063 பேர்களுக்கு ஒருவரும், கொரியாவில் 951 பேர்க்கு ஒருவரும், பிரேசிலில் 844 பேர்களுக்கு ஒருவரும், ஜப்பானில் 606 பேருக்கு ஒருவரும், இங்கிலாந்தில் 469 பேருக்கு ஒருவரும்; அமெரிக்காவில் 350 பேர்களுக்கு ஒருவரும் மருத்துவராகப் பணியாற்றி வருகின் றனர்.

இந்தியாவில் 1700 பேர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் இந்தத் தகவலைக் கூறியுள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தவரை 6 லட்சம் மருத்துவர்கள், 10 லட்சம் செவிலியர்கள் 2 இலட்சம் பல் மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர்.
2031ஆம் ஆண்டில்தான் இந்தியாவில் 1000 பேர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதாச்சாரம் எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்றுள்ள அளவிற்கு 35 ஆயிரம் மருத்துவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உருவாக்கப் படுகின்றனர். இதனை 50 ஆயிரமாக உயர்த்தினா லும்கூட 2031ஆம் ஆண்டில்தான் 1: 1000 என்ற நிலையை அடைய முடியும், என்று அகமதாபாத்தில் நடைபெற்ற 66ஆவது மருத்துவர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருக்கின்ற மருத்துவர்களும் நகரங்களில்  பணியாற்ற விரும்புகின்றனரே தவிர, கிராமப் புறங்களுக்குச் செல்ல விரும்புவதில்லை. குறிப்பிட்ட சில ஆண்டுகள் கிராமப்புற மருத்துவ மனைகளில் பணியாற்ற வேண்டும் என்று அரசு நிபந்தனைகள் விதித்தால் போர்க் கொடி தூக்கும் நிலைமை எல்லாம் இங்குண்டு.

இதற்கு என்னதான் தீர்வு? 2031 வரை மக்கள் காத்துக் கொண்டுதான் இருக்க வேண்டுமா? இதற்கொரு தீர்வினை தந்தை பெரியார் அவர்கள் 1967ஆம் ஆண்டிலேயே கூறியிருக்கிறார்.

கிராமங்களையும், நகரங்களையும் ஒப்பிட்டுக் கணக்குப் பார்த்தால் நகரங்களைவிட அதிகமான மக்கள், நகர மக்களுக்குப் பயன்படும்படி உழைக் கும் மக்கள், பெரும்பாலும் கிராமங்களில்தான் இருக்கின்றனர்.
இதற்குப் பரிகாரம் அதாவது நிவர்த்திமார்க்கம் கிராமங்களுக்கு டாக்டர்கள் போகும்படிச் செய்ய வேண்டும். இதற்கு எம்.பி.பி.எஸ். டாக்டர்கள் ஒருபோதும் உதவ மாட்டார்கள். அவர்களுக்கு வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ற வரும்படி கிடைக் காது எனவே எல்.எம்.பி போன்ற குறுகிய கால மருத்துவப் படிப்பை ஏற்படுத்த வேண்டும்
. (விடுதலை 10.8.1967) என்று தந்தை பெரியார் கூறியிருக்கிறார்.

தந்தை பெரியார் கூறிய ஒரு வார காலத்திற்குள்ளாகவே அப்பொழுது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவிருந்த டாக்டர் சந்திரசேகர் இதே கருத்தினைத் தெரிவித்தார் (16.8.1967) என்பது குறிப்பிடத்தக்கதாகும். ருசியாவில் குறுகிய கால மருத்துவப் பயிற்சி மருத்துவர்கள் கிராமங்களில் பணியாற்ற அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்று டாக்டர் சந்திரசேகர் கூறியது இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவூட்டத் தக்கதாகும்.

இப்படி குறுகிய கால மருத்துவப் பயிற்சி அளிப்பதால் இப்பொழுதுள்ள மருத்துவர்களுக்கு ஒன்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படப் போவதில்லை. இன்னும் மருத்துவர்கள் தேவை என்ற கட்டத்தில்தான் நாடு இருக்கிறது.

கிராமப்புறங்களில் பெரும் அவதிக்கு மக்கள் உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பிரசவத்திற்காக பல மைல் தூரம் செல்ல வேண்டிய அவல நிலை இன்றும்கூட இருக்கிறது என்பது, கசப்பான உண்மையாகும்.

இதில் குறிப்பிடத்தக்க வேதனை - மருத்துவர்கள் இந்தியாவில் பற்றாக்குறை இருக்கும் ஒரு சூழ்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் வெளிநாடு களுக்குச் செல்லுவது தடுக்கப் படுவதில்லை.

ஒவ்வொரு கல்லூரி ஆண்டிலும் இந்தியாவி லிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் டாக்டர்கள் 4400; இதனைத் தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாதது ஏன் என்று தெரியவில்லை.

இது ஒரு பக்கம் நிலை என்றால், பொது மக்கள் மத்தியில் அரசு மருத்துவமனை என்றால் இளக் காரம்தான்! பணம் அதிக செலவானாலும் தனியார் மருத்துவமனைகளை நோக்கித்தான் செல்லு கிறார்கள். இதற்கான காரணம் ஆராயப்பட்டு, குறைகள் களையப்பட வேண்டியதும் மிகவும் அவசியமாகும்.
                 --------------------------"விடுதலை” தலையங்கம்  2-7-2013

1.7.13

உலக மருத்துவர் நாளில் உரத்த சிந்தனை தேவை!


இன்று உலக மருத்துவர் நாள் என்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியச் சூழலில் இதுபற்றி சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இந்தியாவில் ஆண்களின் சராசரி வயது 68 ஆகவும், பெண்களின் சராசரி வயது 71 ஆகவும் இருந்து வருகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையைவிட இது குறிப்பிடத்தக்க வளர்ச்சிதான் என்பதில் அய்யமில்லை. ஆனாலும் உலகளவில் ஒப்பிட்டுப் பார்க்கையில் நம் வளர்ச்சி பின்னடைவில் தான் உள்ளது.

ஒரு கால கட்டத்தில் அம்மை என்றால் அது மாரியாத்தாள் கோபம் என்று மாரியம்மன் கோயிலில் கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்கள். நோயாளியின் தலை மாட்டில் மாரியம்மன் தாலாட்டு என்னும் பாட்டுப் புத்தகத்திலிருந்து பாட்டுகளைப் பாடுவார்கள்.

காலரா என்னும் நோய் கடுமையாகத் தாக்கும். அப்பொழுது காளியம்மன் கோயிலில் கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்கள்.

காரணம் அறியாமையே - மூடநம்பிக்கையே! நோய்களுக்குக் காரணம் ஒரு வகை கிருமிகள் தான் என்று அறியாத காலம்; கடவுளின் சீற்றத்தால்தான் நோய்கள் வருகின்றன, என்ற மூடநம்பிக்கையில், சிக்கிக் கிடந்தார்கள்.
இப்பொழுது அம்மைத் தடுப்பு, காலரா தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மாரியாத் தாளும் காளியாத்தாளும் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.

இன்றைக்கும்கூட இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைந்த குழந்தைகள் 44 விழுக்காடாகும். வறுமைக்கோலம் தலை விரித்தாடுகிறது என்று கூறப்படும் ஆப்பிரிக்காவில்கூட இது 25 விழுக்காடே யாகும். இந்தியாவில் ஊட்டச் சத்துக் குறைவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் குஜராத்துதான் -இந்தியாவின் சோமாலியா என்றும் அம்மாநிலத்தை வருணிக்கிறார்கள். (இந்த மாநிலத்தின் முதல் அமைச்சர்தான் இந்தியாவைக் கட்டி ஆளும் பிரதமராக வர வேண்டுமாம்; வெட்கக் கேடு!)

அய்.நா.வின் யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணம் இந்தியாவைப் பொறுத்தவரையில் உலகளவில் 49 ஆவது இடத்தில் இருக்கிறது. ஆயிரத்துக்கு 32 சிசு மரணம் இந்தியாவில் என்பது ஆரோக்கியமானதல்ல.

பெருகிவரும் மக்கள் தொகைக்கும் மருத்துவர் எண்ணிக்கைக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லை. நகரப் புறங்களைவிட கிராமப்புறங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் கிராமங்களில் முக்கியமானவை. ஆனாலும் கிராமங்கள் என்கிற காரணத்தால் அங்கு போய் பணியாற்ற மருத்துவர்கள் முன் வருவதில்லை.

இதில் வருந்தத்தக்கது என்னவென்றால் கிராமங்களில் பிறந்து வளர்ந்து பிறகு டாக்டர்கள் ஆனவர்கள்கூட கிராமங்களில் பணியாற்ற முன் வருவதில்லை
மனிதநேயமே மருத்துவம்!  என்ற குரலை பெரியார் மருத்துவ அணி முன் வைத்துள்ளது.

நேற்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் மருத்துவ அணியின் கூட்டத்தில் இந்த அமைப்புக்கான குறிக்கோள் சொல்லாக திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இவ்வாறு அறிவித்தது  பொருள் பொதிந்த ஆழமான கருத்துச் செறிந்த வாசகமாகும்.
மருத்துவம் என்பது மனிதத் தொண்டு என்ற மனிதநேயம் காய்ந்து போய், அதுவும் பணம் சம்பாதிக்கும் தொழிலைச் சார்ந்திருப்பது - மனிதம் இன்னும் வளர்ச்சி பெறவில்லை - செழுமை பெறவில்லை என்பதற்கான அடையாளமாகும்.

அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகள் வளர்ந்துவருகின்றன. அரசு மருத்துவமனையில் எல்லா வகையான வசதிகள் இருந்தும்கூட அவை முழுமையாகப் பயன்படுத்தப் படாத நிலைதான்; அரசு மருத்துவமனையில் பணி யாற்றும் மருத்துவர்களே தனிக் கடை  வைப்பதுபோல தனியாக வைத்தியம் பார்க்கிறார்கள். அங்குதான் நன்றாக பார்ப்பார்கள் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்றால் இதன் தன்மையை சமுதாய நோக்கோடு எண்ணிப் பார்க்க வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல லட்சம் ரூபாய் கொடுத்துதான் சேர்கிறார்கள். அவர்கள் மருத்துவர்களாகும்போது, தாம் போட்ட முதலுக்கு வட்டியும் இலாபமும் தேட வேண்டும் என்ற வர்த்தக மனப்பான்மை நிலவி வருகிறது.

நோய் நாடி, நோய் முதல் நாடி இதற்கொரு தீர்வு காணப்பட்டாலொழிய இத்துறையில் மாற்றத்தைக் காண்பது அரிதே!

உலக மருத்துவர் நாளில் உரத்த முறையில் இவை குறித்தெல்லாம் அரசும், மக்களும், அமைப்புகளும் மருத்துவர்களும் சிந்திப்பார்களாக!

             ---------------------------”விடுதலை” தலையங்கம் 1-7-2013

சாஸ்திரங்கள் நம்மைத் திட்டுகிற அளவு நாம் மதத்தை - கடவுளைத் திட்டவில்லையே!

சாஸ்திரங்கள் நம்மைத் திட்டுகிற அளவு நாம் மதத்தை - கடவுளைத் திட்டவில்லையே!

தலைவரவர்கள் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்குத் தகுதி இல்லை என்று குறிப்பிட் டார்கள். இதற்குத் தனித் தகுதி ஒன்றும் தேவை யில்லை. கூட்டத்தில் ஒழுங்கு முறை தவறாமல் அடக்கி ஆள வேண்டும். அது தவிர தலைமை தாங்க தகுதி தேவை இல்லை.

தலைவரவர்கள் நல்ல ஆராய்ச்சிக் கருத்துகளை எடுத்துரைத்தார்கள். முதலில் நீங்கள் பகுத்தறிவாளர் கழகம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். சிலர் சாமி இல்லாதவன் என்பார்கள். 

பகுத்தறிவாளர்களில் ஒரு பகுதியினருக்குத்தான் கடவுள் இல்லை. பகுத்தறிவு என்றால் மனிதன் ஒருவனுக்குத்தான் உண்டு. பகுத்தறிவு என்றால் எதையும் சிந்தித்து அறிவைக் கொண்டு ஆராய்ந்து ஏற்பதாகும். அறிவைப் பிரித்தவர்கள் பகுத்தறிவிற்கு ஆறாவது அறிவு என்று பிரித்திருக்கிறார்கள்.

ஒரு கடையில் போய் ஒரு பொருள் வாங்கினால் அதன் தரம், விலை, மதிப்பு யாவற்றையும் சிந்தித்து அதன் பின்தான் வாங்குகின்றோம். இப்படி ஒவ்வொரு காரியத்தையும் சிந்தித்துச் செய்கிற மனிதன் சில காரியங்களில் முன்னோர் சாஸ்திரம், புராணம், வழக்கம், கடவுள் என்று சொல்லி, சிந்திக்காமல் ஏற்றுக் கொண்டிருக்கின்றான். அதன் காரணமாக மனிதன் தன் அறிவினால் அடைய வேண்டிய அளவு பலன் அடையவில்லை.

மற்ற நாடுகளில் மனிதன் சந்திர மண்டலத்தில் கார் ஓட்டுகிறான் என்றால் அது அவனுடைய அறிவின் பலனாலேயேயாகும். இங்கு நமது மக்கள் அடிப்படையிலேயே அறிவற்றிருக்கிறார்கள். சிந்திக்காமல் எனது மதம், எனது இலக்கியம், எனது சாஸ்திரம், முன்னோர் சொன்னது என்று எதை எதையோ ஏற்றுக் கொண்டிருக்கின்றான்.

பகுத்தறிவாளர் கழகம் என்பது மிருகப் பிரயாயத் திலிருக்கிற மக்களை மனிதப் பிராயத்திற்குக் கொண்டு வருவதேயாகும். அதற்கு முன் நாம் (சுமார் 100, 150 ஆண்டுகளுக்கு முன்) கட்டை வண்டியில் பிரயாணம் சென்று கொண்டிருந்தோம். இப்போது எங்கள் முன்னோர் சென்றது, கடவுள் சென்றது, நீண்ட காலமாக இருந்து வந்தது என்பதற்காக எவரும் கட்டை வண்டியில் செல்வது கிடையாது.

மற்ற மதக்காரனை விட்டு நம் மதத்தை எடுத்துக் கொண்டால் உலக மக்களுக்கு அறிமுகமாகிற வகையில் நம்மை அவனுக்கு விளக்க வேண்டுமானால், சுருக்க மாகத் திராவிடன் என்று சொன்னாலும் இங்குள்ள முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் யாவரும் திராவிடர்களே ஆவார்கள்.

நம்மைத் தனித்துக் காட்டிக் கொள்வதற்கு என்ன இருக்கிறது? இந்து என்று சொன்னால் இந்து மதம் என்று சொன்னால் அதன் ஆதி அடிப்படை என்ன? ஒரு கிறிஸ்து வனையோ, துலுக்கனையோ கேட்டால் அவன் தன் மதத் தலைவனையும், மத நூலையும், மதம் ஏற்பட்ட காலத்தையும் கூறுகின்றான். நீ இந்து என்ற சொல்வதற்கு உனக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? உன் மதத்திற்குரிய வேத நூல் என்ன? உன் மதம் தோன்றிய காலம் என்ன என்பதற்கு எந்தப் பதிலைச் சொல்ல முடியும்?

இந்து மதம் என்பது ஒரு கற்பனையே தவிர, உண்மையில் அப்படி ஒரு மதம் இல்லை. இதைப் பற்றிக் காந்தியிடமே சொல்லி இருக்கிறேன். அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்துமதம் என்று ஒன்று இருந்தது என்பதற்கு நமது இலக்கியங்கள் எதிலும் ஆதாரம் இல்லை.

நாம் எந்தக் கடவுளையோ, மதத்தையோ, சாஸ்தி ரத்தையோ திட்டுகிறோமென்றால் அதில் நம்மைத் திட்டியிருக்கிற அளவிற்கு நாம் திட்டவில்லையே! இந்து மதப்படி எடுத்துக் கொண்டால் நீ நான்காம் ஜாதி, இழி ஜாதி சூத்திரன்தானே! பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிற முட்டாள் தானே! நீ முட்டாளாக இருப்பதால்தானே  கோயிலுக்குப் போகிறாய், முட்டாளாக இருப்பதால் தானே சாம்பலையும் மண்ணையும் பூசிக் கொள்கின் றாய். அறிவு இருந்தால் இதனைச் செய்வாயா?
கோயிலுக்குப் போகிறவன் முட்டாள் என்று சொல்கிறேன். நீயே சிந்தித்துப் பாரேன். நீ மிகச் சுத்தமாகக் குளித்து முழுகிவிட்டு பயபக்தியோடு கோயிலுக்குப் போகிறாய். அங்கு பார்ப்பான் இருந்து கொண்டு கர்ப்பக்கிரகம் இருக்கிற இடத்திற்கு நீ வரக்கூடாது; நீ சூத்திரன்; வெளியே நில்! என்கின்றான்.
அதைக்கேட்டு நீ வெளியே நின்று கன்னத் திலடித்துக் கொள்கின்றாயே தவிர, நான் ஏன் உள்ளே வரக்கூடாது என்று எவனும் கேட்பதில் லையே! இப்படிச் செய்கிறவன் முட்டாள் இல்லாமல் அறிவாளியா? என்று சிந்தியுங்கள். கோபப்படாமல் சிந்தியுங்கள். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு இனம் சூத்திரனாக - பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனாக இருந்து கொண்டிருக்கிறதென்றால் அறிவும் - சிந்தனையும் இல்லாததால் தானே!

                ---------------------------------6.12.1970 அன்று கும்பகோணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை (விடுதலை, 23.1.1971