
ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத் தான் முடியுமே ஒழிய, மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ, அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. கந்தபுராணம், பெரியபுராணம், திரு விளையாடற்புராணம் முதலியவை பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லா வற்றையும் பொய்யென்று ஒப்புக் கொண்டாய் விட்டது. அப்படியிருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில், இந்தக் காலத்தில், இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வ தென்றால், அது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
தீபாவளிப் பண்டிகையின் கதையில் வரும்
பாத்திரங்கள் 3. அதாவது நரகா சூரன், கிருஷ்ணன். அவனது இரண் டாவது
பெண்ஜாதியாகிய சத்திய பாமை ஆகியவைகளாகும் எந்த மனிதனாவது கடுகளவு
மூளையிருந்தாலும், இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது,
அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது,
அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்த
மாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக்
கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம். பார்ப்பனரல்லாதார்கள், தங்களை ஒரு
பெரிய சமுகக்காரர்களென்றும், கலைகளிலும் ஞானங்களிலும், நாகரிகங்களிலும்
தேர்ச்சி பெற்றவர்கள் என்றும், தட்டிப் பேச ஆளில்லாவிடங்களில் சண்டப்
பிரசண்டமாய்ப் பேசிவிட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ காளை மாடு
கன்று போட்டிருக்கின்றது என்றால் உடனே கொட்டத்தில் கட்டி பால் கறந்து
கொண்டுவா என்று பாத்திரம் எடுத்துக் கொடுக்கும் மடையர் களாகவே இருந்து
வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர் களுக்குள்ளும், பாமர மக்கள் என்பவர்
களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கின்றோமே ஒழிய, காளைமாடு எப்படி கன்றுப்
போடும் என்று கேட்கின்ற மக்களை காண்பது என்பது அரிதாகவே இருக்கின்றன,
மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங்களிலும் கிராமாந்திரங் களில்
இருப்பவர்களைவிட, பட்டணங் களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத் தன மாகவும்,
பட்டணங்களில் இருப்பவர் களை விட சென்னை முதலான பிர தான பட்டணங்களில்
இருப்பவர்கள் பெரிதும் மூடசிகாமணிகளாகவும் இருந்து வருவதைப்
பார்க்கின்றோம். உதாரணமாக, தீபாவளி, சரஸ்வதி பூசை, தசரா, பிள்ளையார்
சதுர்த்தி, பதினெட்டு கிருத் திகை முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்திரங்களை விட நகரங்களில் அதிகமாகவும், மற்ற நகரங்களை விட சென்னையில்
அதிகமாகவும் கொண் டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில்
பெரும்பான் மையோர் எதற்காக, ஏன் கொண்டாடுகிறோம் என்பதே தெரியாதவர்களாகவே
யிருக்கின்றார்கள். சாதாரணமாக மூட பக்தியாலும், குருட்டுப் பழக்கத்தினாலும்
கண்மூடி வழக்கங்களை பின்பற்றி நடக்கும் மோச மான இடம் தமிழ்நாட்டில்
சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லையென்று சொல்லி விடலாம்.
ஏனெனில், இன்றைய தினம் சென்னையில் எங்கு
போய் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் சரீரமில்லாத ஒரு தலை
உருவத்தை மாத்திரம் வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும்,
வீடுகள் தோறும் இரவு நேரங் களில் பாரத இராமாயணக் காலட்சே பங்களும், பெரிய
புராண திருவிளையாடல் புராணக் காலட்சேபங்களும், பொது ஸ்தாபனங்கள் தோறும்
சகதா கலாட்சேபங்களும் நடைபெறுவதையும் இவற்றில் தமிழ் படித்த பண்டிதர்கள்,
ஆங்கிலம் படித்த பட்டதாரிகள், கௌ ரவப்பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள்,
பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ் தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள்,
சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக்
கொண்டிருப் பதையும் பார்க்கலாம். பார்ப்பனரல்லா தார்களில் இந்தக்
கூட்டத்தார்கள்தான் ஆரியர் வேறு, தமிழர் வேறு என்பாரும், புராணங்களுக்கும்,
திராவிடர் களுக்கும் சம்பந்தமில்லை என்பாரும், தீபாவளி வைணவப் பண்டிகை
ஆனதால் சைவனுக்கு அதில் சம்பந்தமில்லை என்பாரும், பார்ப்பனரல்லாத
சமுகத்தாருக்கு நாங்கள் தான் பிரதிநிதிகள் என்பாரும், மற்றும்
திராவிடர்களின் பழைய நாகரிகத் திற்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டும்
என்பாரும் பெரு வாரியாக இருப்பார்கள். ஆகவே, இதுபோன்ற படித்த
கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்பந்த மான காரியங்களை எதிர்பார்ப்பதை
விட, உலக அறி வுடைய, சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதும், பிரச்சாரம்
செய்வதும் பயன் தரத்தக்க தாகும்.
உதாரணமாக, ராமேஸ்வர தேவஸ்தானக்
கமிட்டியாரின் ஒரு ரிப்போர்ட்டில் மக்கள் ராமேஸ் வரத்திற்கு முந்திய
வழக்கம் போல் இப்போது யாத் திரைக்கு வருவதில்லையென்றும், அத னால் வரும்படி
குறைந்து விட்டதென் றும், அதுபோலவே திருப்பதி மகந்து அவர்களின் ஒரு
வருஷாந்திர ரிப்போர்ட் டில் அவ்வருஷம் திருப்பதிக்கு யாத் திரைக்காரர்கள்
மிகக் குறைந்துபோய், அதனால் கோவிலுக்கு முந்திய வருஷங் களைவிட பகுதி
வரும்படிகூட எதிர் பார்க்க முடியாததாய் இருப்பதாகவும்
குறிப்பிடப்பட்டிருப்பதனாலும், சங்க ராச்சாரியார், ஜீயர் முதலிய
மடாதிபதிகள் செல்லுகின்ற பக்கங்களிலெல்லாம் முன் போல் வரவேற்பு
ஆடரம்பரங்களும், வரும்படியும் இல்லாமல் சீக்கிரம் சீக்கிர மாக சஞ்சாரத்தை
முடித்துக்கொண்டு ஊர் திரும்புவதிலிருந்தும், பிராமண மகாநாடுகளும், சமய
பத்திரிகைகளும் மூட்டை கட்டப்படுவதிலிருந்தும் ஒரு விதத்தில் பாமர மக்களிடை
உண்மை உணர்ச்சி பரவி இருக்கின்றதென்பதை உணர முடிந்தாலும், வழிகாட்டி
களென்றும், தலைவர்களென்றும், பொது ஜனங்களின் தர்மகர்த்தாகளென்றும்,
படிப்பாளிகள் என்றும் தங்களை சொல்லிக் கொள்ளுபவர்களுக்குள் அநேகமாக சிறிது
உணர்ச்சி கூடக் காணாம லிருப்பதால் அவர்களைப் பற்றி நாம் வருந்தாமல் இருக்க
முடியவில்லை.
எப்படியானாலும், இந்த வருஷம் தீபாவளிப்
பண்டிகை என்பதை உண்மை யான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள்
கண்டிப்பாய் அனுசரிக் கவோ, கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகிறேன்.
அன்றியும், இத்தீபா வளிக் கதை எவ்வளவு பரிகாசத்திற்கு
இடமாயிருக்கிறதென்பதையுணரும் பொருட்டு அதனையும் கீழே தருகிறேன்.
தீபாவளியின் கதைச் சுருக்கம்
ஆதிகாலத்தில் நரகாசூரன் என்று ஒரு அசுரன்
இருந்தானாம். அவன் வராக அவதாரத் திருமாலுக்கும், பூமிக்கும் பிறந்தவனாம்.
அவன் தேவர்களையெல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம். தேவர்கள்
இதைப் பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட்டார்களாம்.
உடனே, திருமால் நரகாசூரனைக் கொல்லுவதாக
வாக்களித்தாராம். அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும், பூமிதேவி
சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்து நரகாசூரனைக் கொன்று
விட்டார்களாம். நரகாசூரன் சாகும்போது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாட
வேண்டுமென்று கேட்டுக் கொண்டா னாம். கிருஷ்ணன் அப்படியே ஆகட்டு மென்று
வாக்களித்தாராம். அதற்காக வேண்டி மக்கள் எல்லோரையும் கொண் டாடும்படி கடவுள்
செய்துவிட்டாராம். ஆதலால், நாம் கொண்டாடுகிறோமாம்; அல்லது கொண்டாட
வேண்டுமாம். இதை நமது பகுத்தறிவுக்குப் பொருத் திப் பார்ப்போம். முதலாவது
இந்தக் கதை உண்மையாய் இருக்க முடியுமா?
எல்லா உலகங்களையும் உண்டாக் கிய,
நான்முகனைப் பெற்றவரும், உல கங்களையெல்லாம் காத்துவருபவரும், தேவர்கள்
தலைவருமாகிய திருமாலுக்கும், பூமிதேவிக்கும் எப்படி குழந்தை பிறக்கும்?
பூமிதேவி என்றால் உலகம் அல்லவா? அப்படித் தான் பிறந்த அவன் எப்படி அசுரன்
ஆனான்? அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படி தீய செயல்களைச்
செய்தான்? அப்படித்தான் செய்தாலும் அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது
மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான்? அப்படியிருந்தாலும் தானே வந்துதான் கொல்ல
வேண் டுமோ?
மேற்படி நரகாசுரனைக் கொன்ற போது அதன்
தாயாகிய பூமிதேவியும் சத்தியபாமையாகப் பிறந்து உடனிருந்த தாகக் கதை
கூறுகிறது. என்னே தாயின் கருணை! இவள்தான் உலகத்தை யெல்லாம்
காப்பாற்றுகிறாளாம்! உலக மக்கள் செய்யும் பாவங்களையெல்லாம் பொறுத்துக்
கொள்ளுகின்றாளாம்! பொறுமையில் பூமிதேவிபோல் என்ற உதாரணத்திற்கு கூட
பண்டிதரும், பாமரரும் இந்த அம்மையாரை உதாரணமாகக் கூறி வருகின்றனரே! இத்தகைய
பூமிதேவியார் தனது மகனைக் கொல்லும்போது தானும் உடனிருக்க வேண்டுமென்று
திரு மாலைக் கேட்டுக் கொண்டாராம்! என்னே தாயின் கருணை!!
தமிழர்களாகிய நம்மையே அசுரர் களென்றும்,
ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே தேவர்களென்றும் கற்பித்துக் கதை
கட்டியிருக்கிற தேவ -அசுரப் போராட்டத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிற இந்தக்
கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம்! நாமே சிறந்த நாளாக
கருதுகிறோம்! அந்தோ என் செய்வது? நம்மை ஏமாற்றி நம்மையே பழிக்கும்
பார்ப்பனர் கட்டுக் கதையை உண்மையென நம்பி நாமே கொண்டாடி வீண்செலவு
செய்வதென் றால், நமது சுயமரியாதையை என்னென் பது? நமது பகுத்தறிவை
என்னவென்று சொல்லுவது?
சென்றது போக, இனிமேற் கொண் டாவது
தீபாவளியை, அர்த்தமற்ற மூடப்பழக்கத்தை, நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக்
கொள்ளும் செயலைக் குறித்து ஒரு காசாவது, ஒரு நிமிட நேரமாவது செலவு செய்ய
வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள் கிறேன்.
(நிறைவு)
-----------------------தந்தைபெரியார் -”குடிஅரசு” - கட்டுரை - 01.11.1936




