Search This Blog

7.3.12

பகுத்தறிவே முக்கியம்! - பெரியார்

தந்தை பெரியார் அவர்கள் தமது அறிவுரையில் பெண்கள் எவ்விதத்திலும் ஆண்களுக்கு அடிமைகள் அல்ல. அவர்களும் மனித ஜீவன்கள் என்றும் அவர் களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு என்பதை எடுத்துக்காட்டவே இம்மாதிரியான திருமணமாகும். எங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் வேலை இல்லை என்றாலும் இம்மாதிரியான நிகழ்ச்சியின் காரணங் கள் தேவைகள் ஆகியவற்றை எடுத்துச் சொல்லவே யாகும்.

இந்த நாட்டில் படித்தவன் பணக்காரன் என்பவன் எல்லாம் பகுத்தறிவு பற்றி கவலைப்படாதவர்கள். படிப்பாளிகள், அறிவாளிகள் என்பவர்கள் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காகப் படித்தவர்களேயாவர். இந்த நாட்டு மக்களின் சமுதாய இழிவுகள் பற்றி அவர்களுக்குக் கவலையே இல்லை. எனவே தான் நாங்கள் தான் எங்கள் கழகந்தான் இந்தத் துறையில் ஈடுபட்டு உழைக்கின்றோம். எங்கள் கருத்தில் மக்கள் மானமற்ற வர்களாக மனிதத் தன்மையற்ற காட்டு மிராண்டிகளாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட நிலையிலுள்ள மக்களைச் சீர்திருத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கழகத்தின் குறிக்கோளாகும்.

தோழர்களே, மனிதன் என்றால் ஓர் பெண் துணையும் பெண் என்றால் ஓர் ஆண் துணையும் இருக்க வேண்டும் என்பது இயற்கை. இது மிருகங்கள், புழு பூச்சிகள், மரங்கள், பூ பிஞ்சுகள் எல்லாவற்றிலும் ஆண், பெண் இருக்கின்றன. இது இயற்கை.


இதுவரை நம்மில் ஆணும், பெண்ணும் கூடி வாழ்வதற்காக நடத்தப்பட்ட கலியாணம் என்னும் நிகழ்ச்சி மனிதத் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதை உணர்ந்தே சில மாறுதல்கள் ஏற்படுத்த இம்மாதிரி காரியம் செய்கின்றோம்.

இதுவரையில் இருந்து வந்த கருத்து ஓர் ஆணும், பெண்ணும் கூடி வாழ வேண்டும் என்ற கருத்தால் அல்ல, ஓர் ஆணுக்கு ஓர் பெண் சம்பளமில்லாத வெறும் சோற்றுக்காக வேலை செய்யும் அடிமை என்ற கருத்தில்தான் நடைபெற்று வந்திருக்கின்றன. நாங்கள்தான் இப்போது அந்தக் கருத்தை மாற்றி ஆணும், பெண்ணும் சரிசமம் உடையவர்கள் என்ற கருத்தில் மாற்றியிருக்கின்றோம். ஆண், பெண் சம உரிமையுடையவர்கள், பகுத்தறிவு உடையவர்கள், மானம் உடையவர்கள் என்பதை உணர்த்தவேயாகும். மனிதன் என்ற சொல்லே மானத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எழுந் திருக்க வேண்டும்.

கலியாணம் என்ற பெயரால் நடத்தப் பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் மனிதன் மடையனாக கீழ்ஜாதியாக, சூத்திரனாக, இழிபிறவியாக, காட்டுமிராண்டி யாக இருக்க வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாக வைத்துத்தான் நடைபெற்று வந்திருக்கின்றன. எவனுக்கு நடந்த திருமணமாக இருந்தாலும் சரி, ராஜா வாகவோ, பிரபுக்களாகவோ, படிப்பாளியாகவோ யாராய் இருந்தாலும் இந்த அடிப்படையில்தான் இருந்து வந்திருக்கின்றது. இந்த சீர்திருத்த முறையில் மடைமைக்கோ, காட்டுமிராண்டித் தனத்துக்கோ, இழிவுக்கோ வகை இல்லை. நாம் மானமற்ற இழிபிறவிகள் என்பதன் அறிகுறியாகவே பார்ப்பானை அழைத்துத் திருமணம் நடத்துவது ஆகும். நாம் கூப்பிடுவதே அவனை பெரிய ஜாதி என்ற கருத்தில்தான் ஆகும். அதன் காரணமாக அவன் உயர்ந்தவன் நம் வீட்டில் சாப்பிட மாட்டான் என்பதற்கு அறிகுறியாகவே அவனுக்கு அரிசி, பருப்பு, காய்கறி ஆகியவற்றை பச்சையாகவே மூட்டை கட்டி அவன் வீட்டில் கொண்டுபோய் வைக்கின்றோம். நாம் நம் அறிவைப் பயன்படுத்தாமல் அவன் மேல் ஜாதி என்று ஒத்துக் கொண்டு அதன்மூலம் நாம் இழிமக்கள் என்பதை ஒத்துக் கொள்கின்றோம் என்பதைவிட வேறு என்னவாக இருக்க முடியும்?

ஆதியில் பார்ப்பானைக் கூப்பிடும் பழக்கம் இல்லாதவர்கள் கூட பெருமையெனக் கருதி சமீபகாலமாக பார்ப்பானைக் கூப்பிட ஆரம்பித்து இருக்கிறான். ஆணும், பெண்ணும் திரு மணம் செய்து கொண்டு வாழும் உரிமை, சாஸ்திரத்தில் சூத்தி ரர்களாகிய நமக்கில்லை. நாளாவட்டத்தில் பார்ப்பா னுடைய முறையானது எல்லா வகுப்பாரிடையேயும் வந்துவிட்டது. இதன் காரணமாக நாம் அறிவு, மானம் இல்லாதவர்களாக, காட்டுமிராண்டிகளாக, இழி மக்களாக ஆக்கப்பட்டு விட்டோம்.
எங்களுடைய முயற்சியால் இப்படி நடைபெறும் திருமண முறையால் நாங்கள் மட்டும் பயன் அடைய வில்லை. நாங்கள் மட்டும் செய்யவில்லை - ஆனால், எங்களின் எதிரிகளான காங்கிரஸ், கண்ணீர்த்துளி, கம்யூனிஸ்டு ஆகிய கட்சிக்காரர்கள் கூட செய்து வருகின்றனர் என்று எடுத்துரைத்தார்.

மேலும் பேசுகையில், கடவுள், மதம், ஜாதி ஆகிய வை நீக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும், மணமக்கள் சிக்கனமாகவும், பகுத்தறிவுடனும் வாழ வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கி அறிவுரையாற்றினார்.

-------------------தந்தை பெரியார் -"விடுதலை" 6.9.1960

6.3.12

திராவிடர் இயக்கம் - 4


திராவிடர் இயக்கமாகிய நீதிக்கட்சி ஆட்சியில் சமுதாய மாற்றத்திற்கான பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரசாங்க உத்தரவு நெ.2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி 25 செப்டம்பர் 1924.

ஒடுக்கப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் சாலைகள், தண்ணீர் எடுக்கும் கிணறுகள் மற்றும் உள்ளவை - சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மாநிலத்திலுள்ள உள்ளூர் நிருவாகங்கள் மற்றும் தலைமை இலாகாக்களுக்கு அனுப்பப்பட்டது. உத்தரவு நெ.2660, 1924ஆம் ஆண்டு செம்டம்பர் 26ந் தேதி.

1924ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உபயோகப் படுத்தும் பொதுச் சாலைகள், கிணறுகள்பற்றியது.

திரு. ஆர். சீனிவாசன் (இரட்டைமலை).

(9) இந்தச் சட்டமன்றம் கீழ்க்கண்டவைகளை நிறைவேற்றி, அதை அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.

(எ) எந்தப் பொதுச் சாலையிலோ, தெருவிலோ அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும்,

(பி) எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவைகளாக இருந் தாலும் அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும் இவைகளிலெல்லாம் உயர்ஜாதி இந்துக் களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்பதையும் சென்னை அரசாங்கம் ஒப்புக் கொண்டு அதைத் தீர்மானமாக நிறைவேற்றி எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாகாக்களுக்கும் அனுப்பப்பட்டது.

(இது அரசாங்கத்தின் உத்தரவு - மாநில அரசு)

- பி.எல்.மூர் அரசாங்க செயலாளர் தாழ்த்தப்பட்டோரைப் பேருந்துகளில் அனுமதிக் காத கால கட்டம் ஒன்று இருந்தது. இராமநாதபுரம் மாவட்ட போர்டு தலைவராக இருந்த பட்டிவீரன்பட்டி ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் (நீதிக்கட்சி) இருந்த காலத்தில் என்ன ஆணை பிறப்பித்தார் தெரியுமா?

இந்த மாவட்டத்தில் உள்ள சில மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஆதி திராவிடர்களை தமது பேருந்துகளில் ஏற்றிக் கொண்டு போவதில்லை யென்றும், டிக்கெட்டில் ஆதி திராவிடர்களுக்கு டிக்கெட் கொடுக்கப்பட மாட்டாது என்றும் நிபந்தனை ஏற்படுத்தியிருப்பதாயும் அறிகிறோம். இவ்வழக்கம் பிரயாணிகளுக்கு இடைஞ்சல் உண்டு பண்ணத் தக்கதாகவும், மிக அக்கிரமமானதாகவும் இருக்கிறது - ஆகவே மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஏதேனும் ஒரு சமூகத்தாரை பேருந்தில் ஏற்றிச் செல்ல மறுக்கவோ டிக்கெட்டுகளில் மறுப்புவிதிகள் அச்சிடவோ செய்தால் அவர்களுடைய லைசென்சு, முன்னறிக்கை கொடாமலே ரத்து செய்யப்படுமென இதனால் எச்சரிக்கை செய்கிறோம். இந்தச் சுற்றுக் கடிதம் கிடைத்த ஒரு வாரத்துக்குள் அத்தகைய விதி நீக்கப்பட்டதா அல்லவா என்று சாம்பிள் டிக்கெட்டுடன் ரிப்போர்ட் செய்து கொள்ள வேண்டும்.
(குடிஅரசு ஈரோடு 4.5.1930 )

அந்தக் கால கட்டத்தில் இது திராவிட இயக்கத்தின் வியக்கத்தக்க, போற்றத்தக்க சாதனை யல்லவா!

உள்ளாட்சித் துறையிலோ தனியார் நிறுவனங் களாலோ நடத்தப்பட்டு வந்த எந்தக் கல்விக்கூடம் ஆதி திராவிடர் மாணவர் மாணவிகளைச் சேர்க்க மறுத்தாலும், அவைகளுக்கு மான்ய உதவி உடனே நிறுத்தப்பட வேண்டுமென்று கூறி, மான்யம் பெறுவதற்கே இதை ஒரு முன் நிபந்தனையாக ஆக்கி, மற்ற சாதியினருடன், இப்பிள்ளைகளும் இணைந்து சமமாக அமர்ந்து படிக்கச் செய்யப்பட்டது. அப்படி ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை 1936இல் 9614 என்றால், இந்த நீதிக்கட்சியின் சாதனையை தமிழ்த் தேசியவாதிகள் அலட்சியப் படுத்தப் போகிறார்களா? பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு பழி தூற்றப் போகிறார்களா? பார்ப்பனர்களின் வால் ஆடினால் இந்தத் புதிய தேசிய வாதிகளின் தலைகள் ஆடு ஆடு என்று ஆடுகின்றனவே, அந்தோ பரிதாபம்!

--------------------"விடுதலை”தலையங்கம் 6-3-2012

5.3.12

திராவிடர் இயக்கம் -3



திராவிடர் இயக்கமான நீதிக் கட்சியும் சரி, சுயமரியாதை இயக்கமும் சரி, திராவிடர் கழகமும் சரி - அரசியலில் கால்பதித்த தி.மு.க.வானாலும் சரி, சமூகத்தில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது என்பதற்கு எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.

நீதிக்கட்சி, பார்ப்பனர் அல்லாதார் கல்வி, வேலை வாய்ப்புகளில் கவனம் செலுத்தி - பார்ப்பனர் அல்லாதார் இவற்றில் உரிமைகளைப் பெற்றுத் தந்தது என்றால், சுயமரியாதை இயக்கமோ நான் ஏன் தாழ்ந்த ஜாதி? நீ எப்படி உயர் ஜாதி? நான் ஏன் உழைக்க வேண்டும்? நீ ஏன் பிழைக்க வேண்டும்? என்ற அடிப்படை வினாவை எழுப்பி ஆண்டாண்டுக் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள் மத்தியிலே தன்மானப் புயலைத் தட்டி எழுப்பியது.

இந்த ஏற்றத் தாழ்வை கடவுள்தான் படைத்தார் என்று பதில் வந்த நிலையில், அந்தக் கடவுளையே ஒரு கை பார்க்கிறேன் என்று கிளர்ந்து எழுந்தது. சாஸ்திரம் சொல்லுகிறது என்று சொன்னபோது, இந்த இயக்கத்தின் ஆசான் தந்தை பெரியார் அந்த சாஸ்திரங்களுக்கு நெருப்பு வைப்பேன் என்று சொன்னது மாத்திரமல்லாமல், அதனைச் செய்தும் காட்டினார்.

இந்(து)த மதக் கடவுள், மதம், சாஸ்திரம் சம்பிரதாயங்கள் எல்லாம் பார்ப்பான் பிழைக்கவும், அவர்களின் உயர் ஜாதித் தன்மையைக் கட்டிக் காக்கவும், பெரும்பாலான இந்நாட்டுக்குரிய மக்களைச் சுரண்டவும் கற்பிக்கப்பட்ட ஏற்பாடுகள் என்பதை மக்கள் மத்தியில் பல வகைகளிலும் பிரச்சாரம் செய்து, மக்களின் சிந்தனையில் புரட்சித் தீயை உருவாக்கினார் தந்தை பெரியார்.

எப்படி இருந்த நாடு இது? தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலேயே உணவு விடுதிகளில் எப்படி விளம்பரம் செய்து இருந்தனர்?

பஞ்சமர்களும், நாயர்களும், பெரு நோய்க்காரர் களும் நுழையக் கூடாது என்று விளம்பரப்படுத்தி யிருந்தார்களே! (குடிஅரசு 3.5.1936).

இரயில்வே உணவு விடுதிகளில்கூட பிராமணாள் சூத்திராள் என்று இடம் பிரித்து வைக்கப் பட்டு இருந்ததே!

1924இல் கோவை சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் அவர்கள் இரயில்வே உணவு விடுதிகளில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பேதம் இருக்கக் கூடாது என்று இரயில்வே ஆலோசனைக் குழுவில் தீர்மானம் கொண்டு வந்தபோது, காளிதாச அய்யர் என்ற பார்ப்பனர் பிடிவாதம் செய்து கெடுத்தார். ஆனால் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை பெரியார் அவர்கள் அந்த முயற்சியிலே ஈடுபட்டு, வெற்றியும் கண்டாரே! 27.1.1941 நாளிட்ட விடுதலையில் இந்திய கவர்ன்மென்ட் கவனிப்பார்களா? என்ற தலையங்கத்திலே பிராமணன், சூத்திரர் பேத நிலையைக் கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தார். தந்தை பெரியார் அவர்களின் அந்தத் தலையங்கத்திலே உள்ள நியாய உணர்வைக் கண்ட அரசினர் 8.2.1941 அன்று முதல் இரயில்வே உணவு விடுதியில் உள்ள பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பேத நிலையை ஒழிக்க உத்தரவிட்டிருந்தனர். ஆனால், இது இரயில்வேயில் உள்ள எல்லா உணவு விடுதிகளுக்கும் அல்லாமல் எம்.எஸ்.எம். உணவு விடுதி என்ற அளவிலே இருந்தது; ஆனால் தந்தை பெரியார் அவர்களின் தொடர் போராட்டத்தினால் 20.3.1941 முதல் எல்லா இரயில்வே விடுதிகளுக்கும் இது நடைமுறைப் படுத்தப்பட்டது. 30.3.1941-ஆம் நாளை இரயில்வே உணவு விடுதிகளில் பேதம் ஒழிந்த நாளாகக் கொண்டாடுமாறு விடுதலை ஏட்டின் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் சேலத்தில் கலந்து கொண்டனர் என்பது தெரியுமா?

திராவிடர் இயக்கத்தின் இந்த அடிப்படை வரலாறு எல்லாம் தெரிந்து கொள்ளாமல் வாய்ப் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று உளற வேண்டாம். வீண் வம்புக்கு வந்தால் அதற்கான பதிலடி கொடுக்கப்படும் - எச்சரிக்கை!

-------------------"விடுதலை” தலையங்கம் 5-3-2012

4.3.12

பகுத்தறிவுக்குப் புறம்பானவை அத்தனையும் அழிக்கப்பட வேண்டும்!


பெரியார் அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

பகுத்தறிவு மனிதனுக்கென்று இயற்கையாக அமைக்கப்பட்ட தென்றாலும், அதை மனிதன் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாது போய்விட்டது. பகுத்தறிவுக்கு மாறானவைகள் மக்களிடம் புகுத்தப்பட்டு பகுத்தறிவின் மேன்மை மறைக்கப்பட்டுப் போய்விட்டது.

மனிதனைத் தவிர, மற்ற ஜீவராசிகள் பகுத்தறிவில்லாதவை என்பதை அவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தங்கள் வாழ்வில் எல்லாத் துறைகளிலும் அப்படியே ஒருவித மாற்றமும், முன்னேற்றமும் இன்றி இருப்பதைக் கொண்டு அறிகிறோம். ஆனால், மனிதன் அப்படி இல்லை. 10, 20 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட இன்று ஒவ்வொரு துறையிலும் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளான். நாளுக்கு நாள் மனித வாழ்க்கை பகுத்தறிவைப் பயன்படுத்திக் கொண்டு முன் னேறிக் கொண்டே போகிறது. இவ்வுண்மை நம் நாட்டை விட மேல்நாடுகளில் மிக விரைவில் செல்லுகிறது. சரியான முறையில் பகுத்தறிவின் மேன்மை தெரிய பயன் படுத்தப்பட்டு வருகிறது. அந்நாடுகளில் அதற்கேற்ற வண் ணம் நாகரிக வாழ்க்கையைப் பின்பற்றி அதிசயிக்கத்தக்க அற்புதங்களும் கண்டுபிடிக்கப்படுகிறது.

ஆனால், இந்த நாட்டிலே காட்டுமிராண்டி வாழ்க்கை இன்னும் அழிந்தும் போகவில்லை. பழக்க வழக்கம், முன்னோர்கள் கூறியவை, சாஸ்திர - புராணங்கள் கூறியவை, முனிவர்கள் - ரிஷிகள் கூறியவை, கடவுள் அவதாரங்களும், கடவுள்களும் கூறியவை என்பதின் பேரால் எதையும் கண்மூடித்தனமாக ஆராய்ந்து பார்க் காமல் ஒப்புக் கொண்டு அதன்படி நடந்து வருகின்றனர். எனவே, பகுத்தறிவுக்குப் போதிய இடமின்றிப்போய் அநாகரிக வாழ்க்கை வாழுகிறார்கள். மற்ற நாடுகளைப் போன்று இங்கும் நாகரிகமும், விஞ்ஞானமும், ஆராய்ச்சியும் விளங்க வேண்டுமென்றால், பகுத்தறிவுக்குப் புறம்பானவை அத்தனையும் அழிக்கப்பட வேண்டும் என்பதாகத் தெரிவித்து இந்துக் கடவுள்களின் அநாகரிக அமைப்பு முறைகளைப் பற்றியும், கடவுள்களின் காட்டுமிராண்டி வாழ்க்கையின் கதைகளைப் பற்றியும் விளக்கினார். இறுதியில் வால்மீகி இராமாயண சம்பந்தப்பட்ட ஊழல்களையும் எடுத்துக் கூறி இரவு 10 மணி வரை பேசினார்.

------------------10.1.1956 அன்று மீனாட்சிபுரம் படிப்பக 5ஆம் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை - விடுதலை 15.1.1956

விவாகரத்து பிரச்னையா?வியாபாரத்தில் நஷ்டமா?ரொக்கமும் சொர்க்கமும் கிடைக்க வேண்டுமா?


பொது ஜனங்களே, மகா ஜனங்களே, உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் பிரச்னைகளா? கவலைப்படாதீர்கள்!

கஷ்டப்பட்டு சம்பாதிக்காதீர்கள்; முயற்சி செய்து முன்னேற நினைக்காதீர்கள்.

திட்டங்கள் தீட்டி தீர்வு காண முயற்சிக்காதீர்கள்.;

பெரிய செலவு இல்லை - மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம்.

இதோ ஒரு சுருக்கு வழி- கு(கி)றுக்கு வழி.

சொத்து வழக்கா? குடும்பத்தில் பாகப்பிரச்னையா? தம்பதிகளுக்குள் விவாக ரத்து பிரச்னையா?

இவற்றிலிருந்து விடுபட ஆஞ்சநேயரின் திருவடிகளைச் சரணடையுங்கள்.

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்யும் வெற்றிலை மாலையும் சாத்தி வழிபடுங்கள். சாதகமான தீர்ப்புக் கிடைத்த பின் வடை மாலை சாத்துவதாக வேண்டிக் கொள்ளுங்கள்.

வியாபாரத்தில் நஷ்டமா?

கவலைப்படாதீர்கள். லட்சுமி குபேரருக்கு நவ நிதிகளை வாரி வழங்கியவர் சிவ பெருமான். அவருக் குரிய பிரதோஷ நாளில் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வில்வ இலையால் அர்ச்சித்தால் தொழிலில் நல்ல இலாபம் கிடைக்கும்.

---------- தினமலர் ஆன்மீக மலர்

பரதநாட்டியம் கற்கவேண்டுமா?

பரதநாட்டியம் கற்றுக் கொள்ளவேண்டுமா? இசைக் கருவிகளை மீட்டிட ஆசையா? கல்விக் கடாட்சம் கிட்ட வேண்டுமா?

இதற்கெல்லாம் போய் அலட்டிக்கலாமா? இதோ ஓர் எளிய வழி இருக்கவே இருக் கிறது. நாம் ஏதாவது மந்திர உபதேசமோ, குரு உபதேசமோ பெறுவதென்றால் அதை மாசி மகத்தன்று வைத்துக் கொள்ள வேண்டும். மந்திரம் பளிச்சென்று சித்தியாகும். நல்ல பலனைக் கொடுக்கும்.

அதே போல புதிதாக பரதநாட்டியம், இசைக்கருவிகள், வாய்ப்பாட்டு, கணினி போன்ற கலை கல்விப் பிரிவுகளை மாசி மக நாளன்று தொடங்குவது மிகவும் விசேஷமாம். ஏனெனில் சிவபெருமானுக்கே முருகப் பெரு மான் பிரணவ உபதேசம் செய்த நன்னாள் இது.

-------------- தினகரன் ஜோதிட சிறப்பு மலர்

ரொக்கமும் சொர்க்கமும் கிடைக்க வேண்டுமா?

உங்களுக்கு சொர்க்கமும், ரொக்கமும் கிடைக்க வேண்டுமா? இதற்காக சிரமப்பட வேண்டாம்.

ஏகாதசியன்று சொர்க்க வாசலில் நுழைந்து வாருங்கள்.

- தினத்தந்தி ஜோதிடம்

கையில காசு வாயில தோசை

இவ்வளவு கு(கி)றுக்கு வழிகள், சுருக்கு வழிகள் இருக்கும் பொழுது அரசாங்கம் எதற்காக? சட்டங்கள் எதற்காக? திட்டங்கள்தான் எதற்காக?

குறிப்பு: இப்படி வெளியிடுகிற இதழ்களின் முதலாளிகளோ, கூலி எழுத்தாளர்களோ இவற்றை மட்டுமே நம்பி வேறு எதையும் செய்யாமல் பூஜிக்கிறார்களா? புத்தியைப் பயன் படுத்திப் பார்க்கவும்.

-------------- கருஞ்சட்டை 3-3-2012 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை