Search This Blog

1.7.08

மணவிலக்கு பற்றி தந்தை பெரியார்



``விவாகரத்து சட்டமானால் உடனே எல்லாப் பெண்களும் தங்கள் கணவர்களைவிட்டு ஓடிப் போவார்கள் என்றும், `கற்பு நிலை அடியோடு கெட்டுப் போகுமென்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்புக்கும் அவசியத்திற்கும் ஒரு சட்டம் செய்தால் ஜனங்கள் எல்லோரும் அதே வேலையாய் இருப்பார்களென்று நியதியல்ல. அவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம்தான் ஜனங்கள் அதனைக் கையாளுவார்கள். ஏனெனில், அதனால் ஏற்படக் கூடிய கஷ்ட, நஷ்டங்களுக்குத் தாங்களே பாத்தியப்பட்டவர்கள் என்பது அனுபவத்தினால் மக்களுக்கு நாளடைவில் விளங்கிவிடும். ஆகவே `விவாகரத்து அனுமதிக்கப்படுமானால் ஏதோ வந்து விடும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருப்பது அவர்களது சுயநலத்தினால் ஏற்படக் கூடிய பயம் என்றுதான் சொல்லுவோம். விவாகரத்து சட்டமாவது பெண்கள் சமூகத்திற்கு ஒரு இன்றியமையாத பாதுகாப்புக் கருவி என்பதே நமது முடிவான அபிப்பிராயம்"

--------------- "குடிஅரசு" - 29.12.1929

தமிழும், தமிழர் முன்னேற்றமும்





தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழி வரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால், தமிழையும், மதத்தையும் பிரித்துவிடவேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.

மத சம்பந்தமற்ற ஒருவனுக்கு, தமிழில் இலக்கியம் காண்பது மிக மிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம் கூட மதத்தோடு பொருத்தப்பட்டே இருக்கிறது.

உதாரணமாக மக்கள், தேவர், நரகர் உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது?
இனிப் பள்ளிக் கூடப் பிள்ளைகளுக்குத் தமிழ் இலக்கியத்துக்குப் புத்தகங்கள் எவை? கம்பராமாயணம், பாரதம், பாகவதம், பெரிய புராணம், தேவாரம், திருவாய்மொழி போன்ற மததத்துவங்களையும், ஆரிய மத தத்துவம் என்னும் ஒரு தனிப்பட்ட வகுப்பின் உயர்வைப் போதித்து மக்களை மானமற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ்சியங்களும் அல்லாமல் வேறு இலக்கியங்கள் காணப்படுகின்றனவா? பண்டிதர்களுக்கு உலக ஞானத்தைவிடப் புராண ஞானம்தானே அதிகமாயிருக்கின்றது?

மேல்நாட்டுப் புலவர்கள் மேல்நாட்டு இலக்கியங்கள் ஆகியவைகளுக்கு இருக்கும் பெருமையும், அறிவும் நம் தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கின்றது என்று சொல்ல முடியுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இங்கிலாந்து வேண்டுமா? என்றால், இங்கிலீஷ் மகன் ஷேக்ஸ்பியர் வேண்டும் என்பானாம். தமிழன் எதைக் கேட்பது?

இந்தியா வேண்டுமா? கம்பராமாயணம் வேண்டுமா? என்றால், உண்மைத் தமிழ்மகன் என்ன சொல்லுவான்? இரண்டு சனியனும் வேண்டாம் என்றுதானே சொல்லுவான்.

மேல் நாட்டில் தான் அறிவாளிகள் உண்டு என்றும், கீழ்நாட்டில் அறிவாளிகள் இல்லை என்றும் நான் சொல்ல வரவில்லை.

மேல்நாட்டு அறிவாளிகள் தாங்கள் செய்த இலக்கியங்களை மத சம்பந்தமின்றி பெரிதும் செய்து வைத்தார்கள். அதனால் நுற்றுக்கணக்காக மேல்நாட்டு இலக்கியங்களும் பண்டிதர்களும் போற்றப்படுகிறார்கள்.

கீழ்நாட்டில் குறிப்பாக இந்தியாவில் எத்தனை இலக்கியம் உலகத்தால் மதிக்கப்படுகின்றன? எத்தனை பண்டிதர்கள் உலகத்தால் போற்றப்படுகிறார்கள்? தாகூர் அவர்கள் கவிக்கு ஆகப் போற்றப்படலாம். ஆகவே மதம், கடவுள், சம்பந்தமற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான இலக்கியம், ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும்மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக்கியம் ஆகியவைகள் மூலம்தான், ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல், அதைக் கையாளும் மக்களும் ஞானமுடையவர்களாவார்கள்.
கம்பராமாயணம் அரிய இலக்கியமாய் இருக் கிறதாகச் சொல்லுகிறார்களே இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவு தான் பட்டினி கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அதுபோல் தானே கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அதில் தமிழ் மக்களை எவ்வளவு இழிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது! தமிழரின் சரித்திரகால எதிரிகளை எவ்வளவு மேன்மையாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சுயமரியாதையை விரும்புகிறவன் எப்படி கம்பராமாயண இலக்கியத்தைப் படிப்பான். இன்று கம்பராமாயணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா என நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.


தமிழ் மொழியின் பெருமை பரமசிவனுடைய படைப்பினால் வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய மொழி என்றோ, சொல்லிவிடுவதாலும், தொண்டர் நாதனைத் தூதினிடை விடுத்ததாலும், முதலை உண்ட பாலனை அழைத்ததாலும் எலும்பைப் பெண்ணாக்கின தாலும், தமிழ் மேன்மையுற்றதாகி விடாது. இந்த ஆபாசக் கதைகள் தமிழ் வளர்ச்சியையும், மேன்மையையும் குறைக்கத்தான் பயன்படும்.

பரமசிவனுக்கு உகந்த மொழி தமிழ் என்றால் - வைணவனும், முஸ்லிமும் தமிழைப் படிப்பதே பாவமல்லவா? அன்றியும் அந்தப்படியிருந்தால் பார்ப்பான் தமிழ் மொழியைச் சூத்திர பாஷை என்றும், அதைக் காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா? என்று யோசித்துப் பாருங்கள்.
இன்று தமிழ் நாட்டில் வந்து, தமிழ் கற்று, வயிறு வளர்ப்பவர்களாகிய பார்ப்பனர்கள் தானே, இந்தி பாஷை இந்தியப் பாஷை ஆக வேண்டுமென்று முயற்சித்து வெற்றி பெற்று வருகிறார்கள்? கோர்ட் பாஷை, அரசாங்க பாஷை ஆகியவை எல்லாம் இந்திமயமாக வேண்டும் என்கிறார்களே. காரணம் கேட்டால் இந்தி பாஷையில் துளசிதாஸ் ராமாயணம் நன்றாய் விளங்கு மென்கிறார்.


தமிழ்ப் பண்டிதர்கள் பெரும்பாலோர்க்கு இதைப் பற்றி சிறிதும் கவலை இருந்தது என்று சொல்ல முடியவில்லை; தமிழ்ப்பண்டிதர்கள் இந்த அரசியல்வாதிகளின் கூச்சலுக்கும் பார்ப்பனர்கள் கோபத்துக்கும் பயந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.
பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்? பொதுப்பணம் சமஸ்கிருதத்தின் பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொது மக்களின் வரிப்பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவாவது செலவாக வேண்டும். தமிழ்மக்கள் யாரும் இதைப்பற்றிக் கவனிப்பதில்லை. தமிழ், தமிழ் என்று எங்கோ ஒரு மூலையில் சில பண்டிதர்கள்தான் சத்தம் போடுகிறார்கள். ஆனால் சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் கேபினெட் மெம்பர்கள், அய்க்கோர்ட் ஜட்ஜ்கள் முதல் எல்லாப் பார்ப்பன அதிகாரிகளும் பாடுபடுகின்றார்களே! நம்ம பெரிய அதிகாரிகளுக்கோ, பெரிய செல்வாக்கும் செல்வமும் உள்ளவர்களுக்கோ தமிழைப்பற்றி கவலையும் இல்லை. தமிழைப் பற்றி அதிகம் பேருக்கு ஒன்றும் தெரியவும் தெரியாது.

தமிழின் பரிதாப நிலைக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? தமிழ்மொழியில், ஒரு சிறு மாற்றமோ, முற்போக்கோ செய்யக்கூட ஒரு தமிழ் அபிமானியும் முயற்சிப்பதில்லை. யாராவது முயற்சித்தாலும் ஆதரவளிப்பதுமில்லை. தற்கால நிலைக்கு தமிழ் போதியதாகவும் சவுகரியமுள்ள தாகவும் ஆக்க யார் முயற்சித்தார்கள்?

மேல் நாட்டு மொழிகள் எவ்வளவு மாற்றமடைந்து வருகின்றன. எழுத்துக்களில் எவ்வளவு மாறுதல் செய்து வருகிறார்கள்! ரஷ்யாவில் சில பழைய எழுத்துக்களை எடுத்துவிட்டார்கள். புதிய எழுத்துக்கள் சேர்த்தார்கள். அமெரிக்காவில் எழுத்துக் கூட்டுவதாகிய ஸ்பெல்லிங் (Spelling) முறையை மாற்றி விட்டார்கள். துருக்கியில் துருக்கி மொழிக்கு உண்டான எழுத்துக்களையே அடியோடு எடுத்துவிட்டு ஆங்கில எழுத்துக்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். தமிழர்கள் தமிழுக்காக நமக்கு விவரம் தெரிந்த காலமாய் என்ன காரியம் செய்தார்கள்? காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது; மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும். முன்னேற்றம் என்பதே - மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடைய வனாவான்.

தமிழ் எழுத்துக்களில் ஒரு சில மாற்றம் செய்தேன். அநேக பண்டிதர்கள் எனக்கு நன்றி செலுத்தி என்னைப் பாராட்டினார்களே யல்லாமல், ஒருவராவது, அம்முயற்சிக்கு ஆதரவளித்தவர்கள் அல்ல.
இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் தகுதியற்றவன் என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன்.

ஆனால் தகுதி உள்ள வேறு எவரும் வெளிவராவிட்டால் என்செய்வது?
ஆனாலும், நான் அம்முறையிலேயே பத்திரிகைகள் நடத்துகிறேன். அம்முறையிலேயே பல புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறேன். இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கிறது, இவைகளையெல்லாம் பார்ப்பனர்களே செய்வதாகப் பாசாங்கு செய்து பார்ப்பனர்கள் தமிழின் மீது ஆதிக்கம் செலுத்தப் பார்த்தார்கள். அநேக பண்டிதர்கள் அவர்களுக்கு அதரவு அளித்தார்கள்.
எப்படி ஆனாலும் தமிழ் மொழி உணர்ச்சி தமிழ் மக்களுக்கு இன்றியமையாதது. அதன் மூலம் தமிழ்மக்கள் ஒன்று சேர வசதி உண்டு.


தீபாவளி போன்ற மூடநம்பிக்கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாசமானது மான பண்டிகைகள் கொண்டாடுவதை விட, இப்படித் தமிழ்த் திருநாள் என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும் மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாகத் திருநாள்களைப் பரப்பவேண்டும். நமது நண்பர்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதையும் இருந்தாலும், ஒரு திருநாள் வேண்டி இருக்கிறதால் - தீபாவளியும், மாரிப்பண்டிகையையும் கொண்டாட ஆசைப்படுகிறார்கள்.
இந்தப் பண்டிகையால் தமிழர் முன்னேற முடியுமா? சுயமரியாதை உணர்வுகள் வந்திருந்தால்தான் முன்னேற முடியும்.

---------------- தந்தை பெரியார் - விடுதலை 22.6.1964

வேப்ப மரத்தில் பால் வடிவது ஏன்?

நம் ஊரில் எது நடந்தாலும் 'சாமி' செயல் என்றுகூறி நம் சிந்தனைக்குத் தடை போடுவார்கள். வேப்ப மரத்தில் பால் வடிகிறது பார்த்தாயா? என்ன அற்புதம்! மாரியாத்தாள் மகிமையே மகிமை என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படி வேப்ப மரத்தில் பால் வடிவது ஏன்? அதற்கான அறிவியல் காரணம் என்ன? என்பதைப்பற்றி...

சென்னைப் பல்கலைக் கழகத் தாவரத்துறைப் பேராசிரியர் திரு. நாராயணசாமி அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்-

"வேப்பமரத்தில் இப்படி பால் வடிவதற்கு எந்தவிதமான தெய்வீகக் காரணமும் அல்ல. இந்த மரத்தில் உள்ள மாவுச் சத்தை (ஸ்டார்ச்சை) வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றுகின்றன. வேப்ப மரப் பட்டையின் அடிப்பகுதியில் புளோயம் என்ற திசு இருக்கிறது. இந்தத் திசு வழியாக சர்க்கரையாக மாற்றப்பட்ட மாவுச் சத்து வரும்போது, அது பாலாக இருக்கிறது. எல்லா வேப்பமரத்திலும் இப்படிப் பால் வருவதில்லை. இந்த மரத்தில் இந்தத் திசு பாதிக்கப்பட்ட காரணத்தால் இப்படிப் பாலாகக் கொட்டுகிறது. தேவையைவிட மரத்தில் உள்ள தண்ணீரின் அளவு அதிகமாகும்போது, பட்டையின் அடிப்பகுதியில் உள்ள திசு பாதிக்கப்பட்டு, அதன் வழியாகப் பாலாகக் கொட்டுகிறது. மரத்தில் தண்ணீரின் அளவு குறையும்போது, திசு அடைபட்டு, இனிப்புப் பால் வடிவதும் நின்று போகும்"

சிரிக்க மட்டுமல்ல. . . ! சிந்திக்கவும் .........!

வெளிநாட்டில் மார்க்ட்வெய்ன் என்ற பெரிய எழுத்தாளர் ஒருவர் இருந்தார். அவர் தன்னுடைய தோற்றம் அழகாய் இருப்பது, ஆடம்பரமாக உடைகள் அணிவது, பகட்டான நடிப்பது போன்றவை எல்லாம் இல்லாமல் எளிமையாக இருந்தவர்.

அவருடைய நாட்டில் தோற்றப் பொலிவுக்கு மிகவும் முக் கியத்துவம் கொடுத்து நடந்து கொள் வார்கள். அதிலும் உடை விஷயத்தில் கோட், சூட், டை போன்றவற்றை அணிந்து செல்வதில் மிகவும் அக்கறை காட்டுவார்கள்.

ஒரு முறை, மார்க்ட்வெய்ன் அவர்கள், தனது நண்பர் ஒருவருடைய இல்லத்திற்குச் சென்று, பேசிக் கொண்டிருந்தார். பேசி முடித்தபின் வீட்டுக்குக் கிளம்பிய பொழுது, நண்பரின் மனைவி, மார்க்ட்வெய்னிடம் வந்து, "என்ன இன்று நீங்கள் 'டை' கட்டாமல் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டீர்கள்? அதை யெல்லாம் நீங்கள் அணிவதில்லையா?" என்று கேட்டார்.

பதில் சொல்ல முடியாமல் அமைதியாக மார்க்ட்வெய்ன் வீட்டுக்கு வந்து விட்டார்.

சிறிது நேரத்தில் நண்பரின் மனைவி, வீட்டுக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவை திறந்து பார்த்தார்.

எதிரே - மார்க்ட் வெய்ன் வீட்டு வேலைக்காரர் நின்று கொண்டிருந்தார்.

நண்பரின் மனைவியிடம் அவர், "எங்கள் முதலாளி உங்கள் வீட்டுக்கு சற்று முன் வந்திருந்த போது ஏன் 'டை' கட்டாமல் வந்திருந்தார் என்று கேட்டீர்களாம். அதனால் இதை உங்களிடம் கொடுத்து, அவர் உங்கள் வீட்டில் எவ்வளவு நேரம் இருந்தாரோ அவ்வளவு நேரம் வைத்தி ருந்து பிறகு வாங்கிவரச் சொன்னார், இந்தாருங்கள்!" என்று மார்க்ட் வெய்னின் 'டை'யை மட்டும் நீட்டியபடி நின்றார்.

அழகு என்பது, உடையிலோ அழகு பொருள்களால் அலங்கரித்துக் கொள்வதிலோ இல்லை. நமது சிந்தனையிலேயும், அதை வெளிப்படுத்தும் நடத்தையிலேயும் தான் இருக்கிறது.

----------- நன்றி: "பெரியார் பிஞ்சு"

திராவிடம் என்ற சொல் தமிழ்ச் சொல்லா? -'சன் டி.வி.' இராமாயணத்தை எதிர்த்து போராட்டம்? -- கி.வீரமணி பதில்கள் - 2




குற்றாலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமில் (16-6-2008) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பயிற்சி மாணவர்களுக்கு அளித்த பதில்கள்.:

கருப்புச் சட்டை அணிவது எப்பொழுது முதல்?


மாணவர் கேள்வி: திராவிடர் கழகத்தினர் கருப்புச் சட்டை அணிவது என்பது எப்பொழுது முதல் நடைமுறைக்கு வந்தது?

தமிழர் தலைவர்: 1944-இல் திராவிடர் கழகம் உருவானது. நம்முடைய இயக்க வரலாற்றிலேயே ரொம்பத் தெளிவாக இருக்கிறது. தோழர்கள், தமிழர் தலைவர் மற்றும் இயக்க வரலாறு நூல்களை வாங்கிப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். இப்பொழுது புதிதாகப் போட்டிருக்கின்ற நூலிலிலும் இது தெளிவாக இருக்கிறது. 29-9-1949 முதல் கருப்புச் சட்டை அணியப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

கடவுளர் படங்களை அகற்ற என்ன செய்யலாம்?

மாணவர் கேள்வி: அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்கள் இருப்பதை அகற்றுவதற்கு என்ன செய்யலாம்?

தமிழர் தலைவர்: தொடர்ந்து போராடிக் கொண்டேயிருக்க வேண்டும். நாம் விடுதலையில் எழுதும்போது அரசாங்கம் புரிந்துகொள்கிறது, கேள்வி கேட்கிறது.
ஆங்காங்கே இருக்கக் கூடிய இந்துத்துவா மனப்பான்மை உள்ள சில அதிகாரிகளுடைய கோளாறுகளினாலே இது நடக்கிறது. போராடலாம். எங்கெங்கே இது ஏற்படுகிறதோ, அங்கு அவர்களுக்கு கண்டன அறிக்கை கொடுக்கலாம். அதற்கடுத்து வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் நம்முடைய வழக்கறிஞர்கள் ஏராளம் இருக்கிறார்கள். நீதிமன்றங்களுக்கே சென்று தடை ஆணையை வாங்கி அதை நிறுத்தலாமே.

நீதிமன்றங்களின் தீர்ப்புகள் இருக்கின்றன

நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் சாதகமாக இருக்கின்றன. மதுரை உயர்நீதி மன்றத் தீர்ப்புகளினாலே பல இடங்களில் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடிய, போக்குவரத் திற்கு இடைஞ்சலாக இருக்கக் கூடிய கோயில்கள் இடிக்கப் பட்டிருக்கின்றன. அதையெல்லாம் பயன்படுத்தி நாம் இடையறாமல் போராடி வெற்றிபெற வேண்டும். போராடாமல் வெற்றி பெற முடியாது.

சமஸ்கிருத மொழியில் உள்ள ஊர்ப் பெயர்கள்

மாணவர் கேள்வி: சமஸ்கிருத மொழியில் உள்ள ஊர்ப் பெயர்களை தமிழில் மாற்றுவதற்கு அரசை வற்புறுத்துவீர்களா?

தமிழர் தலைவர்: ஏற்கெனவே கொஞ்சம் கொஞ்சமாக நடந்து கொண்டுதான் வருகிறது. தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று தான் வருகின்றன. அது தொடரும்.

திராவிடம் என்ற சொல் தமிழ்ச் சொல்லா?

மாணவர் கேள்வி: திராவிடம் என்ற சொல் தமிழ்ச் சொல்லா?

தமிழர் தலைவர்: இதைப்பற்றி ரொம்பத் தெளிவாக அய்யா அவர்களே எழுதியிருக்கின்றார்கள். அது தமிழ்ச் சொல்லாக இருந்தாலும், தமிழ்ச் சொல்லாக இல்லாவிட்டாலும் தெளிவாக நம்முடைய இனத்தைக் குறிக்கக் கூடிய ஓர் ஆழமான அடை யாளச் சொல். எனவே நாம் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். காபி தமிழ்ச் சொல் இல்லை என்பதினாலே யாரும் காபி குடிக்கமாட்டோம் என்று சொல்வதில்லை.

காபி என்பது வழக்கமாகிவிட்டது

நாம் தூங்கி எழுந்திருந்தவுடன் காபியைத்தான் குடிக்கின்றோம். இல்லை, இல்லை, அது தமிழ்ச் சொல் இல்லைங்க, நான் குடிக்கமாட்டேன் என்று யாரும் சொல்லுவதில்லை.
பழக்கத்தில் வந்தாகிவிட்டது. நமக்குத் தேவை என்பதில் வந்தாகிவிட்டது. தவிர்க்கவேண்டிய இடத்தில் தவிர்ப்போம். கையாளவேண்டிய இடத்தில் தாராளமாக கையாளுவோம். அதனால் ஆராய்ச்சி இரண்டு வகையாக இருக்கிறது.
அந்த ஆராய்ச்சிக்காகவே நாம் நம்முடைய உயிரை விட வேண்டிய அவசியமில்லை. திராவிடர் என்று சொல்லுவது தமிழ்.
வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய நூலைப் பார்த்தால் தெரியும். வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? என்பதிலே ரொம்பத் தெளிவாக எழுதியிருக்கின்றார்.
பல அறிஞர்கள் எழுதியிருக்கின்றார்கள். வேறு சிலர் மாறுபட்ட கருத்தையும் சொல்லுகிறார்கள். அந்த ஆராய்ச்சியில் நாம் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. நமக்கு நடைமுறைக்கு இது பயன்படுகிறது. ஆரியத்திற்கு எதிரான இனம் திராவிடர் இனம் என்பது தெளிவாக்கப்பட்டு விட்டது. ஆகவே அதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும்.


திரிசூலத்தை முறிக்கவேண்டும்

மாணவர் கேள்வி: உலக மயமாக்கல் தனியார் மயம், தாராள மயம், இவற்றை எப்படி எதிர் கொள்வது?

தமிழர் தலைவர்:திரிசூலத்தை முறிக்கவேண்டியது அவசியம். இந்த மூன்றும் திரிசூலம் மாதிரி. இந்த கொள்கையில் ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறுவதில்லை. ஆகவே அதிலிருந்து மீட்சி தேவை என்பதால் ஒத்த கருத்துள்ள நாம் இடையறாமல் போராட்டத்தை நடத்திக் கொண்டு வருகின்றோம்.
அந்தப் போராட்டம் உலக அளவிலே வெற்றி பெறாவிட் டாலும் கூட, இன்றைக்கு வெற்றி பெறக்கூடிய ஒரு சூழல் நிச்சயமாக ஏற்படும்.
இந்த நிலையை உருவாக்கக் கூடிய துணிவு நமக்கு உண்டு. ஆகவே தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றோம். போராட்டம் இல்லாத வாழ்க்கையே இல்லையே. அந்த உணர்வை நாம் இதிலும் கடைப்பிடிக்க வேண்டும். முன் னெடுத்துச் செல்ல வேண்டும்.

'சன் டி.வி.' இராமாயணத்தை எதிர்த்து போராட்டம்?

மாணவர் கேள்வி: சன் டி.வி.யில் ஒளிபரப்பப்படும் இராமாயணத் தொடரை எதிர்த்து போராட்டம் நடத்தலாமா?

தமிழர் தலைவர்: தனிப்பட்ட முறையிலே அவர்களுக்கு பெரிய விளம்பரத்தை இதன்மூலம் நாம் கொடுக்கவேண்டிய அவசிய மில்லை.
எதோ `சன் டி.வி. மாத்திரம் இதுவரை ரொம்ப பகுத்தறிவு பிரச்சாரம் செய்த மாதிரியும், சன் டி.வி. ஒன்றுதான் இந்த மாதிரிப் பிரச்சாரம் செய்கிற மாதிரியும் நினைக்கத் தேவையில்லை. `சன் டி.வி. நாள்தோறும் ராசி பலன் நிகழ்ச்சி முதற்கொண்டு ஒலி - ஒளி பரப்பிக் கொண்டு வருகின்றது.

நமது பிரச்சாரத்தை முடுக்கிவிட வேண்டும்

ஆகவே பொதுவாக நமது பிரச்சாரத்தை இராமாயணத்தை எதிர்த்து இராமனுடைய யோக்கியதை என்ன என்பதை நமது கூட்டங்களில் எடுத்து விளக்க வேண்டும். நாம் நிறைய இராமாயண ஆராய்ச்சிப் புத்தகங்கள் போட்டிருக்கின்றோம்.

இராமன் எப்படி எப்பொழுது பிறந்தான் என்கிற விசயத்தை எடுத்து சொன்னாலே பொதுமக்கள் விளங்கிக் கொள்வார்கள். ஆகவே நாம் நம்முடையப் பிரச்சாரத்தை தொடர்ந்து முடுக்க வேண்டும். அதுதான் அதற்கு பதிலே தவிர தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு விளம்பரம் கொடுக்கிறமாதிரி அது ஆகிவிடக் கூடாது.

நம்முடைய போராட்டத்தை எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்

மாணவர் கேள்வி: அன்னை மணியம்மையார் அவர்கள் இராவண லீலாவை நடத்தினார்கள். அப்படி இப்பொழுது இயக்கம் நடத்துமா?

தமிழர் தலைவர்:அந்தக் காலகட்டம் அப்பொழுதே தேவைப் பட்டதைப் போல இன்னொரு அவசியம் வருகிறபொழுது செய்யலாம்.
ஏனென்றால் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் மாதிரி பல திட்டங்கள் இருக்கின்றன. இதிலே எதிரி ரொம்ப முட்டினான் என்றால் நிச்சயமாக அது இராவண லீலாவில்தான் முடியுமே தவிர, வேறு ஒன்றும் இல்லை.
ஆகவே அவசியம் வரும்பொழுது நாம் எதை நடத்துவது என்பதை தீர்மானிப்பதைவிட நம்முடைய எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள். ஆகவே எதிரிகள் அதிலே தீவிரம் காட்டு கின்ற நேரத்திலே நாமும் பின் வாங்காமல் செய்யலாம்.
ஆகவே அவர்கள் செய்தார்கள் என்பதற்காக இன்னும் தீவிரமாக நாம் செய்வோமே தவிர பின்வாங்க மாட்டோம். அதற்குரிய அவசியம் வரவேண்டும். போராட்டங்கள் தேடி அலைய வேண்டிய ஒன்றல்ல. போராட்டத்திற்கு அவசியம் வரும்பொழுது பின் வாங்குவது நம்முடைய பழக்கமல்ல.

- இவ்வாறு தமிழர் தலைவர் அவர்கள் விடையளித்தார்.

-----------நன்றி: "விடுதலை" 29-30-6-2008