Search This Blog

6.1.19


மார்கழிப் பீடை
மார்கழி மாதம், பீடை மாதம்; அமங்கலமான மாதம்; ஆகையால் இந்த மாதத்தில், விடியற்காலத்தில் பஜனைகள் செய்ய வேண்டும்; கடவுள் என்பவர் மேல் தோத்திரங்கள் செய்ய வேண்டும்; காலையில் பொங்கல்கள் செய்து சாமிகளுக்குப் படைக்க வேண்டும்; நாமும் வயிறு நிரம்பச் சாப்பிட வேண்டும்; வீடுகள்தோறும் கோலம் போடவேண்டும்; வாயிற் படியில் புஷ்பங்கள் பரப்ப வேண்டும்; இரவில் தாதன் ஊர் முழுதும் சுற்றிப் பாட்டுப் பாட வேண்டும்; சேமக்கலம் கொட்டவேண்டும்; தப்புத்தட்ட வேண்டும். இப்படியெல்லாம் செய்தால்தான் பீடை நீங்கும் என்று செய்து வருகின்றனர்.
கோயில்களிலும் இந்த மார்கழி மாதத்தில் அதிகாலையிலேயே மேளதாளங்கள் முழங்குகின்றன; பூசைகள் நடைபெறுகின்றன; பொங்கல்கள் நைவேத் தியம் பண்ணப்படுகின்றன, கோயில் அர்ச்சகர்களும், வேலைக்காரர்களும் பொங்கலைப் பங்கு போட்டுக் கொள்கின்றனர். மூக்கால் மூன்று பருக்கை விழும்படி வயிற்றுக்குள் கொட்டுகின்றனர். வண்ணான் சாலைப் போல் வயிற்றைப் பெருக்க வைக்கின்றனர். பின்பு அஜீரணத்தால் அவதி அடைகின்றனர்.
வைதீகர்கள் வீடுகளில் காலையில் எழுந்தவுடன், சைவர்களாயிருந்தால், திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவை என்னும் பாடல்கள் ஓதப்படுகின்றன. வைணவர்களாயிருந்தால் நாலாயிரப் பிரபந்தத்தில் உள்ள ஆண்டாள் பாடிய திருவெம்பாவைப் பாடல்களை ஓதுகின்றனர்.
இவைமட்டும் அல்ல, மற்றொரு அதிசயமும் உண்டு. அது மிக வேடிக்கையான விஷயம். வைணவர்கள் பஜனைமடம் வைத்திருந்தால் அவர்கள் விடியற்காலை 4 மணிக்கே எழுந்திருப்பார்கள். வாலிபர்கள் மாத்திரம் அல்ல, சிறு குழந்தைகளும், வயதானவர்களும், வாலிபர்களும் விழித்துக் கொண்டு எழுவார்கள். குளிரைப் பொருட்படுத்தமாட்டார்கள்; பனியைப் பாராட்ட மாட்டார்கள்; கால்கைகள் குளிரினால் உதறும்; பற்கள் கப்பிரோட்டில் ஜட்கா வண்டி போவதுபோல் கடகட வென்று குளிரினால் ஆடும். அப்படியிருந்தும், பக்தியென்னும் முட்டாள்தனம், அவர்களை எழுப்பி விடுகிறது. இவர்களில் சிலர் குளிப்பார்கள்; குளிருக்கு அதிகமாகப் பயந்தவர்கள் கால் கைகளைச் சுத்தம் பண்ணிக் கொண்டு பட்டை நாமங்களைத் தீட்டிக் கொள்வார்கள். தாளம், மிருதங்கம், தம்பூரு அல்லது ஆர்மோனியத்தையும் தூக்கிக் கொள்வார்கள், தெருத் தெருவாக பஜனை செய்து கொண்டு வரு வார்கள். இதைப் போலவே சைவ பஜனை மடம் வைத்திருக்கின்ற ஊர்களில் சைவர்கள் விபூதியைப் பட்டையடித்துக் கொள்வார்கள். ருத்திராக்கங்களைச் சுமந்து கொள்வார்கள். தங்களுடைய முஸ்தீப்புகளுடன் பாடிக்கொண்டு புறப்பட்டு விடுவார்கள். இந்த பஜனைக் கோஷ்டியினர் அரிசிப் பிச்சை வாங்குவதும் உண்டு.
இக்காட்சிகள், நாகரிகமுள்ள நகரங்களிலும் நாட்டுப் புறங்களிலும் நடைபெறுகின்றன. இப்பொழுது இவைகள் எல்லாவிடங்களிலும் இல்லை என்றாலும் சில இடங்களில் இருக்கின்றன. எந்தக் காலத்திலும் பைத்தியக்காரர்கள் இருந்துதானே தீருவார்கள்? அதற்கு நாமென்ன செய்யலாம்? நமக்குத் தெரிந்த மருந்தைக் கொடுக்கலாம். இவ்வளவுதான் முடியும்.
இச்செயல்களால், சாதாரண மக்களின் மனத்தில் உண்டாகும், பக்தியும், விசுவாசமும் அதிகம். அவர்கள் இந்தப் பஜனைக் கோஷ்டியாரைப் பக்த சிரோன் மணிகளாகக் கும்பிடுவார்கள்! நமஸ்கரிப்பார்கள். என்ன அறிவு! எவ்வளவு கேவலம்!
இது போகட்டும், இவர்கள் காலையில் எழுந்து தண்ணீரில் விழட்டும்; சன்னிபிறந்து சாகட்டும்; விடியற்காலத்தில் பொங்கல் சோற்றையும், பலகாரங்களையும் உண்ணட்டும்; அஜீரணத்திற்கு உள்ளாகட்டும்; காலரா நோய்க்கு ஆளாகட்டும்; பிறருக்கும் அந்நோயைப் பரவ வைக்கட்டும்; எந்தச் சந்தியிலாவது போகட்டும்; அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. இதன் மூலமாக மக்கள் மனத்தில் முட்டாள்தனத்தை ஊட்டுகிறார்களே என்றுதான் கவலைப்படுகிறோம்.
மார்கழி மாதச் சனியன் இவ்வளவோடு விட்டதா! இல்லை! இல்லை! திருவிழாவுக்காக, வைகுண்ட ஏகாதசிக்காக, ஆருத்திரா தரிசனத்திற்காக, சீரங்கத் திற்கு ஓடச்செய்கிறது, சிதம்பரத்திற்கு ஓடச் செய்கிறது. குளிர்காலத்தில் - பனிக்காலத்தில் - காலராக் காலத்தில் எவ்வளவு தொல்லை! எவ்வளவு அலைச்சல்! எவ் வளவு பணச்செலவு! எவ்வளவு மூட நம்பிக்கை! எவ்வளவு முட்டாள்தனம்!
எதற்காகச் சீரங்கப் பயணம், எதற்காகச் சிதம்பர யாத்திரை! எல்லாம் மோட்சம் பெறத்தான்; மோட்சத் திற்கு இவ்வளவு கஷ்டம் ஏன்? மோட்சம் என்றால் சாவு என்றுதானே அர்த்தம்! இதற்கு ஒரு சாண் கயிறு கிடைக்கவில்லையா? அல்லது நமது அழகர் சொல்லுவது போல அரையணாவுக்குக் கவுரி பாஷாணம் கிடைக்கவில்லையா? இதுவும் இல்லா விட்டால், ரயில் தண்டவாளத்தில் போய்ப் படுத்துக் கொள்வதுதானே! இந்த மாதிரி சுகாதாரமற்ற பருவ காலத்தில் யாத்திரை செய்வதால் என்ன பலன் கிடைக்கிறது! பணம் செலவாகிறது; உடல் நலம் குன்றுகிறது, காலம் வீணாகிறது, தொற்று வியாதிகள் வருகின்றன; இவைதானே லாபம்! வேறென்ன? அறிவிருந்தால் ஆலோசித்துக் கொள்ளுங்கள்.
இம்மாதிரியான துன்பங்கள் ஏன் வருகின்றன? காரணம் என்ன? யோசித்துப் பார்த்தீர்களா? நீங்கள் யோசிக்காவிட்டாலும் நான் யோசித்துப் பார்த்தேன், சொல்லுகிறேன். மதம் என்னும் மடத்தனம், பக்தி என்னும் முட்டாள்தனம், மோட்சம் என்னும் கிறுக்கு, முன்னோர் வழக்கம் என்னும் மயக்கம், இவைகளால் தான் நாம் கெட்டலைகிறோம்! சீரழிகிறோம்! நான் சொல்லுவதைப் பற்றி திடீரென்று கோபித்துக் கொள்ள வேண்டாம். புத்தியைக் கொஞ்சம் செலவழியுங்கள்! மூளையைக் கொஞ்சம் உருகச் செய்யுங்கள்! விளங்கும்.
மார்கழி மாதத்தில் மேற்படி காரியங்களைச் செய்வதால் சந்தோஷமாகக் காலம் போக்குகிறோம் என்று சொல்ல வரலாம். சந்தோஷமாகக் காலம் போக்க இதுதானா வழி! முட்டாள்தனத்தையும், குருட்டு நம்பிக்கையையும் உண்டாக்கக் கூடிய செயல்களைப் புரிந்துதானா சந்தோஷப்பட வேண்டும்? சந்தோஷப்படுவதற்கு வேறு அறிவு வளர்ச்சியோடு கூடிய வழிகள் இல்லையா?
மார்கழி மாதக் கடைசியில், தை மாத முதலில் பொங்கல் பண்டிகையொன்று! அதற்கு எவ்வளவு தொல்லை! மனிதனுக்கு மாத்திரமா பொங்கல்! பொங்கல் நாலு நாள். பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகையாம்! பொங்கலாம்! மாட்டுப் பொங்கலாம்! கன்னிப் பொங்கலாம்! இந்தப் பொங்கல்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களை என்ன சொல்லுவது? புதுஉடைகள் வாங்கி அணிந்து கொள்வார்கள் பலர்! சம்பந்தி வீடுகளுக்கு வரிசை அனுப்புவார்கள் பலர்! இவைகளில் ஆகும் செலவு அளவு கடந்தவை. வரிசை கொடுக்கும் வகையில் ஒருவர்க்கொருவர் சொந்தக்காரர்களுக்கு ஏற்படும் மனவருத்தங்கள் பல. எங்கும் படையல், சர்க்கரைப் பொங்கல் வேறு வெண் பொங்கல் வேறு.
ஏழைகள் குடும்பங்களில் இந்தப் பொங்கல் சோறுகளை இரண்டு மூன்று தினங்களுக்கு வைத்துக்கொண்டு தின்று வியாதியடைவது வேறு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வண்ணான், அம்பட்டன், தோட்டி, வேலைக்காரன் வீடுகள் தோறும் சோற்றுப் பிச்சைக்காக அலையும் பரிதாபமான காட்சி வேறு; இவ்வாறு பல வகையில் பொங்கல் பண்டிகை தொல்லைகளை உண்டாக்கி விடுகிறது. போதும் போதாமைக்கு ஆஸ்பத்திரிகளில் மருந்துச் செலவு அதிகம். டாக்டர்களுக்குத் தொல்லை. அட அப்பா! எவ்வளவு தொல்லை! பாழும் பொங்கல் பண்ணுவதைப் பாருங்கள்!
மார்கழி மாதச் சனியன் இம்மாதிரி பல வகையில் மக்களை அல்லோல கல்லோலப் படுத்தி விடுகின்றது, படுத்தி விட்டது; என்ன பரிதாபம்! நமது மக்கள் மூடத்தனத்தால், குருட்டுத்தனத்தால் எவ்வளவு துன்பத்திற்கு ஆளாகின்றனர். எல்லாவற்றையும் யோசித்துப் பாருங்கள். இவை பயனில்லாத காரியங்கள்; வீணான காரியங்கள் என்று விளங்காமல் போகாது. இவைகளை நடத்தாவிட்டால் என்ன முழுகிப் போய்விடும். பூமி நடுக்கம் உண்டாகி நாம் பாதாளத்திற்குப் போய்விடுவோமா? கடல் புரண்டு வந்துவிடுமா? ஒன்றுமில்லையே. அப்படியிருந்தும் ஏன் பண்டிகைகளென்றும், விரதங்களென்றும் திரு நாட்களென்றும் அலைகின்றீர்கள். அந்நியர்கள், நாகரிமுடையவர்கள் நகைக்க இடம் கொடுக்க வேண்டாம். பயனுள்ள காரியங்களைச் செய்யுங்கள்! அறிவோடு செய்யுங்கள்! நாம் மற்ற நாட்டினரைப் போலப் பெருமையடையலாம்! சுதந்திரமடையலாம்! செல்வமடையலாம்! சமத்துவமடையலாம்! இது உறுதி! உண்மை! நிச்சயமாக நம்புங்கள்! நம்பாவிட்டால் எக்கேடு கெட்டாவது போங்கள்! மேலே சொல்லிய நமது விரதங்களையும், நமது பக்திகளையும், நமது பஜனைகளையும், நமது பண்டிகைகளையும், பிறர் பார்த்தால் சிரிக்க மாட்டார்களா? நாமே நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வரவில்லையா? கேலிக்கு இடமாகத் தோன்ற வில்லையா? வைதீகக் கண்ணுக்குப் பரிசுத்தமாகத் தோன்றலாம்! உண்மையாகத் தோன்றலாம்! தெய்வீகமாகத் தோன்றலாம்! அதைப் பற்றிக் கவலை இல்லை. நாகரிகக் கண்ணால் பாருங்கள்! அறிவுக் கண்ணால் பாருங்கள்! உண்மை விளங்கும். நான் பொய் சொல்லவில்லை; உண்மையாகச் சொல்கிறேன். உறுதியாகச் சொல்கின்றேன்; நான் ஒரு ஸ்க்குரூலூஸ் என்று அலட்சியம் செய்ய வேண்டாம். வந்தனம், பிறகு சந்திக்கிறேன்.


                ----------------------- குடிஅரசு, 27-12-1931இல் ஸ்க்குரூலூஸ்

2.1.19

எந்தத் தனிப்பட்ட பார்ப்பனர் மீதும் விரோதம் கிடையாது - பெரியார்


தந்தை பெரியார்
எங்களைப் பார்ப்பனத் துவேஷிகள் (வெறுப்பாளர்கள்) என்று சொல்கிறார்கள், "எவனோ பண்ணினான்; பார்ப்பானை ஏன் திட்ட வேண்டும்?" என்ற சிலர் கேட்கிறார்கள். எவனோ பண்ணினால் இவன் ஏன் பூணூல் போட்டுக் கொள்கிறான்? ஏன் தன்னைப் பிராமணன் என்று  சொல்லிக் கொள்கிறான்? ஏன் உச்சிக்குடுமி வைத்துக் கொள்கிறான்? ஏன் அக்கிரகாரத்தில் தனியாக வாழ்கிறான்? அவனுடைய  பெண்டாட்டி மட்டும் ஏன் தனியான வகையில் புடைவை கட்டிக் கொள்ளவேண்டும்? இந்த மாதிரியெல்லாம் ஏன் அவன் தன்னைத் தனியாகப் பிரித்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள வேண்டும்? 'யாரோ பண்ணியதற்குப் பார்ப்பானை ஏன் குறை சொல்ல வேண்டும்?' என்று சட்ட சபையில் சிலர் பேசுகிறார்கள். எவனோ பண்ணியிருந்தால் இந்தப் பார்ப்பான் ஏன் அவனைப் பின்பற்ற வேண்டும்? அவன் சொன்னபடி ஏன் நடக்க வேண்டும்? இவன் தானே நம்மைச் சூத்திரன் என்று சொல்கிறான்?
எவனோ உழைக்க இவன் அள்ளிக் கொட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதான் சமுதாய அமைப்பு, சாஸ்திரம், புராணம், சட்டம் என்றால், நாம் எப்படிச் சும்மா இருக்க முடியும்? இந்த நிலைமையை மாற்றத்தானே நாம் பாடுபடுகிறோம். மற்றப்படி எனக்கு எந்தத் தனிப்பட்ட பார்ப்பனர் மீதும் விரோதம் (பகைமை) கிடையாது.
சாதிக்கு ஆதாரமாக என்னென்ன இருக்கின்றனவோ அவையெல்லாம் ஒழிந்தால்தான் சாதி ஒழியும். அவற்றி லெல்லாம் கைவைக்கக்கூடாது. என்றால் எப்படி ஒழியும்? கெட்ட துஷ்ட ஜந்துக்கள் ஒரு இடத்தில் இருந்தால் அவைகளை ஒவ்வொன்றாகச் சுட்டுக் கொண்டிருந்தால் ஆகுமா? துஷ்ட ஜந்துக்கள் இருக்க எவை காரணமாக இருக்கின்றனவோ அந்தக் கல், மண், முள், காடு எல்லா வற்றையும் நெருப்பு வைத்து ஒழித்து சமமாக்கினால்தானே அங்கிருக்கும் தேள், பாம்பு, கரடி, புலி எல்லாம் ஒழியும்? அந்த மாதிரிதானே சாதிக்கு ஆதாரமாக யார் யார் இருக் கிறார்களோ, என்னென்ன இருக்கின்றனவோ அவைகள் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்கிறோம்.
'மதத்தில் பிரவேசிக்கமாட்டோம்; சாதி முறையைப் பழக்க வழக்கங்களைக் காப்பாற்றுவோம்; இவை தனிப்பட்ட உரிமைகள்; இந்த உரிமைகள் பாதுகாக்கப்படும்' என்று அழுத்தமாகச் சட்டம் செய்து வைத்துக் கொண்டார்கள்.
கடவுள் சாதியை உண்டாக்கினார் என்றால் கடவுளை உடை, கொளுத்து என்று சொல்லிப் பிள்ளையாரை உடைத்தோம்! இராமனைக் கொளுத்தினோம்.
சட்டத்தில் சாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது. அந்தப் பாதுகாப்பு நீக்கப்பட வேண்டும்.
இல்லையென்றால் அதற்கான விளக்கமோ சாதிக்குப் பாதுகாப்பான பகுதிகளை நீக்குவதற்கு உறுதிமொழியோ அரசாங்கத்திடமிருந்து வரவேண்டும். இல்லையென்றால் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்துவோம். என்று 3ஆம் தேதி  (1957 - நவம்பர்) கூடிய தஞ்சாவூர் மாநாட்டில் தீர் மானம் போட்டு 15 நாள் வாய்தா (காலக்கெடு) கொடுத்தோம்.
இன்றோடு அந்த வாய்தா தீர்ந்து போய்விட்டது. நாம் கொடுத்த 15 நாள்களில் என்ன செய்தார்கள் தெரியுமா? சாதியைக் காப்பாற்ற பாதுகாப்பு செய்து கொண்டார்கள்!
இந்தச் சட்டம் சாதியைக் காப்பாற்றுகிறது; ஆகவே இதை நெருப்பு வைத்துக் கொளுத்தப் போகிறோம் என்று சொல்கிறோம்; இல்லை நெருப்பு வைக்கக்கூடாது  என்றால் அந்த மாதிரி சாதிக்குப் பாதுகாப்பு சட்டத்தில் இல்லை என்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்; அல்லது இருந் தால் சட்டத்தைத் திருத்துகிறேன் என்று சொல்ல வேண்டும்.
நீ சாதியைக் காப்பாற்றித்தான் தீருவேன் என்கிறாய். சாதியைக் காப்பாற்றும் சட்டத்தைக் கொளுத்துபவர்களுக்கும்
3 ஆண்டு சிறை என்று சட்டம் கொண்டு வந்து விட்டாய்; இந்தச் சட்டத்திற்குப் பயந்து கொண்டு கொளுத்தா விட் டால் நாளைக்கு நம்மைச் சூத்திரன் என்றே கூப்பிடுவான்!
சட்டத்தில் ஏதாவது குறையிருந்தால் அதனை முறைப்படி திருத்தலாம் என்று மந்திரி சொல்கிறார். அரச மைப்புச் சட்டத்தை வகுத்த பார்ப்பனர்கள், நம்முடைய மக்கள் என்றென்றைக்கும் அடிமையாய் இருப்பதற்கான சட்டம் வகுத்துக் கொண்டார்கள் அதை எளிதில் மாற்ற முடியாதபடி பாதுகாத்துக் கொண்டிருக் கிறார்கள். ஆகவே தான் கொளுத்துகிறோம். கொளுத்துவது அவசியமில்லை என்று சொன்னால் சட்டம் இந்த வகையில் செய்ய முடியுமென்று சொல்லட்டுமே?
இப்போது சாதியைக் காப்பாற்ற சட்டம் எழுதிவைத்துக் கொண்டுள்ளான். இன்னும் கொஞ்ச நாள் போனால் - நாங்கள் ஒழிந்தால் அவனவன் சாதி முறைப்படி வாழ வேண்டுமென்று கொண்டு வந்து விடுவான்!
நம் கண்முன்னாலேயே ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்தாரே? பாதி நேரம் குலத்தொழில் படிக்காத பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்காதே என்று உத்தரவு போட்டாரே? இது ஒரு வருடம் நடந்ததே! இத் தனைக்கும் அன்று எதிர்க்கட்சி மெஜாரிட்டி. (பெரும் பான்மை) ஒன்றும் அசைக்க முடியவில்லையே! கத்தியை எடு என்று சொன்னவுடன் ஓடினார். பிறகு காமராசர் வந்தார் குலக்கல்வித்திட்டத்தை எடுத்தார்.
நாளையதினம் காமராசர் ஒழிந்து இந்த நிலைமை திரும்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அந்த மாதிரியான சட்டமும், அமைப்பும், வாய்ப்பும் அவர்களுக்கு இருக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் நாம் உயிருக்குப் பயந்து கொண்டுதானே வாழவேண்டியிருக்கிறது? இன் னமும் புதிது புதிதாக அதிகாரங்களையெல்லாம் அவன் (பார்ப்பான்) அதிகமாக்கிக் கொண்டு இருக்கிறான். இந்த நிலைமையில் நாம் சும்மா இருந்தால் எல்லாவற்றையும் நாம் ஒப்புக் கொண்டுள்ளோம் என்று அவன் மேலும் மேலும் நம்மை அழுத்துகிறான்!
சட்டத்தைக் கொளுத்துகிறோம் என்று சொன்னால் மேலே இருப்பவர்கள் கவனிக்க வேண்டும். ஏன் இவ்வாறு இவன் சொல்கிறான்? ஏன் இப்படிச் செய்கிறான் என்பதைக் கவனிக்க வேண்டும்; சும்மா பிடித்து அடை என்றால் அடைத்து விடுகிறார்கள். அதனால் எரிந்து கரியாகிய சட்டம் எரியாததாக ஆகிவிடுமா?
1957 - நவம்பர் 3 ஆம் தேதி தஞ்சாவூரிலே மாநாடு நடைபெற்றது உங்களுக்கெல்லாம் தெரியும். 6 ஆம் தேதி என்னைப் பிடித்து திருச்சி, குளித்தலை, பசுபதி பாளையம் ஆகிய மூன்று ஊர்களில் பேசிய பேச்சுக்களை வைத்து என்மீது கேசு (வழக்கு) போட்டிருக்கிறார்கள்.
சட்டசபையில் மந்திரியே சொல்லியிருக்கிறார் "ராமசாமி சொல்வது எல்லாம் சட்டத்துக்கு உட்பட்டே இருக்கின்றன" என்று; "இல்லை இல்லை, கொல்லு! குத்து! என்று பேசி யிருக்கிறார்" என்று பத்திரிகைக்காரர்கள் எல்லாம் கூப்பாடு போட்டார்கள்; "அப்படியானால் அவர் பேசியபேச்சுக்களை எழுதிய ரிப்போர்ட் களைக் கொண்டு வாருங்கள்" என்று பத்திரிகைக் காரர்களை மந்திரி கேட்டார்; இந்தப் பத்திரிகைக்காரர்கள் ஒருவரும் போகவில்லை.
நம் கண்முன்னாலேயே ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்தாரே? பாதி நேரம் குலத்தொழில் படிக்காத பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்காதே என்று உத்தரவு போட்டாரே? இது ஒரு வருடம் நடந்ததே! இத்தனைக்கும் அன்று எதிர்க்கட்சி மெஜாரிட்டி. (பெரும்பான்மை) ஒன்றும் அசைக்க முடியவில்லையே! கத்தியை எடு என்று சொன்னவுடன் ஓடினார். பிறகு காமராசர் வந்தார் குலக்கல்வித்திட்டத்தை எடுத்தார். நாளையதினம் காமராசர் ஒழிந்து இந்த நிலைமை திரும்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அந்த மாதிரியான சட்டமும், அமைப்பும், வாய்ப்பும் அவர்களுக்கு இருக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் நாம் உயிருக்குப் பயந்து கொண்டுதானே வாழவேண்டியிருக்கிறது? இன்னமும் புதிது புதிதாக அதிகாரங்களையெல்லாம் அவன் (பார்ப்பான்) அதிகமாக்கிக் கொண்டு இருக்கிறான். இந்த நிலைமையில் நாம் சும்மா இருந்தால் எல்லாவற்றையும் நாம் ஒப்புக் கொண்டுள்ளோம் என்று அவன் மேலும் மேலும் நம்மை அழுத்துகிறான்!
சட்டசபையில் மந்திரி சொல்கிறார் நம்முடைய நடவடிக்கைகள் சட்டத்துக்கு உட்பட்டே இருக்கின்றன என்று; இதை இந்தியா முழுவதிலும் உள்ள பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.
பிறகு இந்தப் பார்ப்பனர்கள் மேலிடத்தில் போய் ரகளை (கலகம்) செய்திருக்கின்றனர்; அதன் பின்னர் மேலிடத்தி லிருந்து உத்தரவு வந்திருக்கிறது!  மேலிடத்தாருக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதற்காக இப்போது கேசு (வழக்கு) எடுத்து இருக்கிறார்கள்; மேலிடத்து உத்தரவுக்காக நம்மீது நடவடிக்கை எடுப்பதனால் நமக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?
முன்பு கொடி கொளுத்துகிறேன் என்ற சமயத்தில் சட்டம் செய்ய முடியாது என்று சொன்னவர்கள் இப்போது சட்டம் செய்திருக்கிறார்கள். அவனுக்குத் தமிழ்நாடு சட்ட சபையிலே சட்டம் செய்திருக்கிறார்கள். அவனுக்கு நாடாளுமன்றத்திலே சட்டம் செய்ய வெட்கம்; உலக மெல்லாம் தெரிந்துபோகுமே. தமிழ்நாட்டில் காந்தி  சிலையை உடைக்கிறார்கள்; அரசமைப்புச் சட்டத்தைக்  கொடியைக் கொளுத்துகிறார்கள். அரசமைப்புச் சட்டத்தை எரிக்கிறார்கள் என்பது.
சட்டசபையிலே, என்மீது நடவடிக்கை எடுக்க சட்டமில்லை என்று சொன்ன விஷயத்திற்கே இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்; எது எப்படியிருப்பினும் கோர்ட்டில் (நீதிமன்றத்தில்) இருக்கும் வழக்கைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. அதற்காக வேறு நடவடிக்கை வந்துவிடுமே என்பதற்காக அல்ல; மனப்பூர்த்தியாகவே சொல்கிறேன்.
இந்த அரசமைப்புச் சட்டத்தில் சாதிக்கும், மதத்திற்கும் அவனவனுக்குண்டான பழக்க வழக்கங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மத சுதந்திரம் கொடுத்திருக்கின்றான். மாகாண அரசாங்கமே இதில் பிரவேசிக்க முடியாது. இந்து மதம் உள்ளவரையில் நாங்கள் சூத்திரர்கள்தான் - அடிமைகள்தான்; ஆகவே இந்த உரிமை கொடுத்துள்ள அரசமைப்புச் சட்டம் ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும்.
இந்த நிலைமைக்கு வந்ததற்கே காரணம் ஒரு ஓட்டலில் "பிராமணாள்" என்று போட்டுள்ள போர்டை (பெயர்ப் பலகையை) எடுக்க மறுத்தான். அந்த ஓட்டல் (உணவகம்) முன்மறியல் செய்து 800 பேர்வரை சிறைக்குச் சென்றி ருக்கின்றனர். நம்முடைய சர்க்கார் (அரசு) ஏதும் செய்ய முடியாமல் விழிக்கிறார்கள். மேலே சொல்லிச் செய்யக் கூடாதா என்றால் அவனுக்கு மத சுதந்திரம் கொடுத் துள்ளோமே என்கிறான். ஏதோ ஓர் அளவுக்குச் செய்ய வேண்டும் என்றால் செய்யலாம். நாம் இங்கே மறியல் செய்கிறோம்; அங்கே கேரள ஆட்சியில் சாதிச்சொல் போடக்கூடாது என்று மிரட்டியிருக்கிறான்.
நாங்கள் தொடர்ந்து மறியல் செய்து கொண்டிருக்கிறோம். மேலும் மேலும் தொடர்ந்து செய்து கொண்டிந்தால் அதனால் ஏதாவது பயன் ஏற்படும் என்றால் செய்து கொண்டிருக்கலாம். நிலைமை மாறவில்லை. ஆகவே அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தப் போகிறோம். இதில் வெற்றிபெறாவிட்டால் காந்தி சிலையை உடைக்கப் போகிறோம்.
26ஆம் தேதி கிளர்ச்சியில்
நீதிமன்றத்தில் கூற வேண்டியது
நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப் பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப் படவுமில்லை; அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.
ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக்கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்த பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்துகொள்ள விரும்பவில்லை. நான் எதிர்வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன்.
பெரியார் அறிக்கை ('விடுதலை' 23-11-1957)
நேற்று சட்டசபையிலேயே கேட்டிருக்கிறார்கள் "ஜவகர் லால் நேரு, ராஜேந்திரபிரசாத் இவர்களுக்குக் கொடும்பாவி கட்டி இழுத்து, இவர்களுடைய சிலையை உடைத்தால் நீ என்ன செய்வாய்?" என்று; வேண்டுமானால் அதற்குச் சட்டம் செய்; சட்டத்தினாலேயே உயிர்வாழ்! மக்களுடைய அன்பினால், திருப்தியினால் நீ (அரசாங்கம்) உயிர்வாழப் போவதில்லை. சுதந்திரம் (விடுதலை) வந்துவிட்டது என்று நீ சொல்கிறாய்; இன்னமும் நாங்கள் சூத்திரர்கள் தான்; வடநாட்டானால் கொள்ளையடிக்கப் படத்தான்  இந்தச் சுதந்திரம் என்றால், நாங்கள்  சட்டத்தைக் கொளுத்திவிட்டு அதன் விளைவை அனுபவிக்கிறோம்; எத்தனை பேரைத் தண்டிக்க முடியும்? எவ்வளவு நாளைக்குத் தண்டிக்க முடியும்?
போலீஸ்காரனுக்கு அடங்கி நட, சட்டத்திற்கு அடங்கி நட, என்று நான் சொல்கிறேன். இப்படிச் சொல்கிற என்னுடைய பேச்சைக் கூட மதிக்கவில்லையானால் என்ன பொருள்? இல்லை நான் சொல்வது பொதுமக்கள் கருத்தா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நேற்று நடந்தது தஞ்சாவூரில் மாநாடு; அதில் 2 லட்ச மக்கள் திரண்டனர். அவர்களுடைய உணர்ச்சியை நீ பார்த்திருக்க வேண்டும். இல்லை பொதுஜன வோட்டு எடு; சாதி ஒழிய வேண்டுமா வேண்டாமா என்று. ஒன்று மில்லை வெறும் அடக்குமுறை தான் என்றால் என்ன அர்த்தம்?
அடக்கு முறைச் சட்டம் செய்த பிறகு நாம் சும்மா இருந்தால் வெளியில் தலை காட்டமுடியுமா? இந்த நிலை யில் குடும்பத்துக்கு ஒருவர் சிறைக்குப்போக நாம் துணிந்து விட வேண்டியதுதானே! மூன்று வருடமா அது மூன்று நிமிடம் என்றால்தானே நாம் மனிதர்!
ஆகவே சாதிக்குப் பாதுகாப்பான அரசமைப்புச் சட்டத்தை வருகிற 26ஆம் தேதியன்று நாம் ஆயிரக் கணக்கில் கொளுத்த வேண்டும். இரகசியமாயல்ல, பகிரங்க மாகக் கொளுத்தி விட்டுப் பெயர் கேட்டால் சந்தோசமாகக் கொடுங்கள்! கோர்ட்டுக்கு (நீதிமன்றத்துக்கு) அழைத்துக் கொண்டு போனால் செல்லுங்கள்!
"இந்தச் சட்டம் சாதியைக் காப்பாற்றும் சட்டம்; இந்தப் பார்ப்பனச் சதிச்சட்டத்தை லேசில் மாற்ற முடியாது. இதற்கு எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் அறிகுறியாக இதைக் கொளுத்தினோம்" என்று சொல்லுங்கள்
முக்கியமாக உள்ள கழகத்தோழர்கள் நூற்றுக் கணக்கில் சட்டப் புத்தகம் வாங்கி ஊரில் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்; மக்கள் எல்லோரும் இதைக் கொளுத்த வேண் டும். கொளுத்திய அந்தத் துண்டு காகிதங்களையும் சாம் பலையும் ஒரு கவரில் போட்டு புக்போஸ்டில் (நூல் அஞ்சலில்) மந்திரிக்கு அனுப்ப வேண்டும்.
தைரியமுள்ளவர்கள் உங்களுடைய பெயர், விலாசம் (முகவரி) எல்லாம் அதில் போட்டு அனுப்புங்கள்.
"எங்களுடைய பிள்ளை குட்டிகளாவது சூத்திரத் தன்மையிலிருந்து விடுபட்டே ஆக வேண்டும்; அதற்காக எந்த விலை கொடுக்கவும் நாங்கள் யார் என்பதை 26ஆம் தேதியன்று நிரூபித்துக் காட்டுங்கள்!
         --------------17-11-1957 கடலூர் மஞ்சை மைதானத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு : 'விடுதலை'  22-11-1957