மணமகள் பாடினியின் கொள்ளு தாத்தா மணிப்பிள்ளை ஒரு முரட்டுச் சுயமரியாதைக்காரர்
குடும்பமே கொள்கைக் குடும்பம்! மணமக்கள் சிக்கனமாகவும், பகுத்தறிவு நெறியிலும் வாழவேண்டும்
செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு இல்லத் திருமண விழாவில் தமிழர் தலைவர் உரை
கல்லக்குறிச்சி, நவ. 26- கழகச் செயலவைத்
தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் பெயர்த்தியின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த
விழாவிற்குத் தலைமை வகித்த திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்
மணமக்கள் சிக்கனமாகவும், பகுத்தறிவு நெறியிலும் வாழவேண்டும் என்று கேட்டுக்
கொண்டார்.
9.11.2014 அன்று கழக செயலவைத் தலைவர்
சு.அறிவுக் கரசு அவர்களின் பெயரத்தி பாடினி - பிரபாகரன் ஆகி யோரின்
வாழ்க்கை இணையேற்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
அன்புச்செல்வர்கள் இராமதாஸ் - பொன்னெழில்
ஆகியோரின் அன்பு மகள் இரா.பாடினி பி.இ., எம்.பி.ஏ., அவர்களுக்கும், அதேபோல,
எம்.என்.குப்பம் அருமை அய்யா கண்ணப்பன் - சரசுவதி ஆகியோருடைய செல்வன்
பிரபாகரன் பி.இ., எம்.பி.ஏ., ஆகியோருக்கும் நடைபெறக் கூடிய இந்த வாழ்க்கை
இணையேற்பு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குவதில், நடத்தி வைப்பதில்
எல்லையற்ற மகிழ்ச்சியை நான் அடைகிறேன்.
ஒரு முரட்டு சுயமரியாதைக்காரர்
காரணம், இந்தக் குடும்பம் என்பது
அறிவுக்கரசு அவர்கள் இங்கே குறிப்பிட்டதைப்போல, முழுக்க முழுக்க கடலூரில்
என்னுடைய இளமைக் காலம் முதற்கொண்டு, அவருடைய தந்தையாரும், நானும் மிக
நெருக்கமாக இருந் தவர்கள். சுயமரியாதைச் சுடரொளியாக இருக்கக்கூடிய
மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக் கக்கூடிய, உணர்வுகளில்
உறைந்திருக்கக்கூடிய, மணிப் பிள்ளை என்று அந்த வட்டாரத்தில் அழைப்பார்கள்,
வயதானவர்களுக்கு மட்டும்தான் தெரியும், அவருடைய தந்தையார் ஒரு முரட்டு
சுயமரியாதைக்காரர். அவரிடத்தில் யாரும் பேசுவதற்குக்கூட தயங்குவார்கள்,
வேறு வகையான நிலையில் அல்ல, அவ்வளவு வாதப் பூர்வமாக, விவாதப் பிரதிவாதங்களை
எடுத்து வைத்து, பெரியாருடைய கொள் கையை, ஒரு மணித்துளி கிடைத்தால்கூட,
அவர்களோடு உரையாடி, அவர்களைத் தன்வயப்படுத்து வார்கள்.
எங்கே இவருடைய கருத்துகளைக் கேட்டால்,
நாம் மாறிவிடப் போகிறோமோ என்று அஞ்சித்தான், அவரைப் பார்த்தவுடனே, பல பேர்
ஓடி ஒளிந்து கொள்வார்கள். இன்றைய இளைய தலைமுறைகளுக்கெல்லாம், அவரு டைய
தாத்தாவின் அப்பாவைப்பற்றி, கொள்ளுத்தாத்தா வைப்பற்றி நாங்கள்
சொன்னால்தான், இவர்களுக்கேகூட தெரியும். அவ்வளவு தெளிவான, அத்தனை ஆண்டுகால
மாக இருக்கக்கூடிய, அவ்வளவு நெருக்கமான குடும்பம்.
இன்னுங்கேட்டால், மணமகளின் தாத்தாவாக, இன்
றைக்கு நம்மையெல்லாம் வரவேற்று இருக்கக்கூடிய, நேற்று பவழ விழா
கண்டிருக்கக்கூடிய அருமைச் சகோதரர் தம்பி அறிவுக்கரசு அவர்கள், ஒரு இளைஞனாக
இருந்த காலத்திலிருந்து, இன்றுவரையில், நான்தான் அவர்களுக்கு ஒரு
பாதுகாவலன் என்பது மட்டுமல்ல, மிகப்பெரிய அள வில், எல்லா வகையிலும்,
அவர்களுடைய வாழ்க்கையில், இந்தக் குடும்பத்தினுடைய வாழ்க்கையில், இந்தப்
பிள் ளைகளுடைய வளர்ச்சியில், மிகுந்த அக்கறையும், கவலையும் கொண்டவனாவேன்.
எனவே, இந்த மணவிழாவினை நடத்தி வைப்பதில்,
இது ஒன்றாவது தலைமுறை, இரண்டாவது தலைமுறை, மூன்றா வது தலைமுறையை எல்லாம்
தாண்டி, நான்காவது தலை முறை என்று வரக்கூடிய அந்த வாய்ப்பை இன்றைக்குப்
பெற்று, அந்த நான்காவது தலைமுறையிலும் கொள்கை தேயவில்லை. கொள்கை
வளர்ந்துகொண்டிருக்கிறது. கொள்கையிலே ஒத்துழைக்கக்கூடிய அருமையான சம்பந்
தக்காரர்கள் அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது, மிகப்பெரிய ஒரு வாய்ப்பு. எனவே,
முதற்கண் யாரையாவது நாம் பாராட்டவேண்டுமானால், மணமகனுடைய பெற்றோர்
கண்ணப்பன் - சரசுவதி அவர்களையும், அவர்களுடைய உற்றார், உறவினர்களைத்தான்
பாராட்டவேண்டும் இயக் கத்தின் சார்பிலே, காரணம், இந்தக் குடும்பத்தில்
நாங்கள் வந்து மணவிழாக்களை நடத்தி வைப்பது என்பது இவர் களைப்
பொறுத்தவரையில் சாதாரணம்; அதற்கு மாறாக நடந்தால்தான், அதிசயம். ஆனால்,
அவர்களைப் பொறுத்த வரையில், அவர்கள் மிகுந்த தாராள உள்ளத்தோடு,
பெருமிதத்தோடு இந்த மணமுறைக்கு ஒப்புக்கொண்டு, எல்லாவற்றையும் ஒதுக்கி
வைத்துவிட்டு, இந்தப் பிள்ளைகளின் மகிழ்ச்சிதான் மிக முக்கியம் என்பதற்கு
முன்னுரிமை கொடுத்தவர்கள், ஒரு எடுத்துக்காட்டான தாய் - தந்தையர்கள் என்பதை
மிகுந்த மகிழ்ச்சியோடு, மற்றவர்களுக்கு நாம் சொல்லியாகவேண்டும்.
நமக்கெல்லாம் படிப்பு வராது என்று ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவர்கள் நாம்
இங்கே, மிக அற்புதமாக சொன்னார்,
அறிவுக்கரசு அவர் கள். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண் டவர்.
இதைவிட பொருத்தமான மணமக்களை நாம் வேறு எங்கும் பார்க்க முடியாது. மணமகள்
பாடினி; அவர் பொறியாளர் - மேலாண்மை படிப்புத் துறையில் எம்.பி.ஏ. என்று
சொல்லக்கூடிய அந்தப் படிப்பு மிக சிறப்பு. ஒரு காலத்தில், நமக்கெல்லாம்
படிப்பு வராது என்று ஒடுக்கப் பட்ட சமுதாயத்தவர்கள் நாம். ஆனால்,
இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் மணிமணியாகப் படிக்கிறார்கள். எல்லா ஆற்றலும்
பெற்றவர்களாக இருக்கிறார்கள். மணமக்கள் இருவரையும் பார்த்தீர்களேயானால்,
வங்கியில் அதிகாரிகளாக இருக்கிறார்கள். மணமகன் பிரபாகரன் ஆனாலும், மணமகள்
எங்கள் பேத்தி பாடினி அவர்களா னாலும், அவர்கள் இருவருமே வங்கி அதிகாரிகள்.
இந்த அளவிற்கு அவர்களைப் படிக்க வைத்து அவர் களை சிறப்பான அளவிற்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.
இந்தப் பகுதிக்கு வருகிறபொழுது, இது
புதுச்சேரி மாநிலத்தை தாண்டி, தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு கிராமப்
பகுதிதான். ஆனால், வளர்ந்துகொண்டிருக்கின்ற ஒரு பகுதி. நான் இந்தப்
பகுதிக்கு இப்பொழுதுதான் முதன்முறை யாக வருகிறேன். உங்களையெல்லாம்
சந்திக்கக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.
இப்படிப்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய
இந்தக் குடும்பத்தில், தன்னுடைய மகனை, இந்த அளவிற்கு அவர்கள்
ஆளாக்கியிருக்கிறார்கள் என்று சொன்னால், இதைவிட பெருமைமிக்க நல்ல குடும்பம்
வேறு இருக்க முடியாது என்பதுதான் பாராட்டத்தகுந்த ஒன்றாகும்.
நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்;
நம் முடைய அறிவுக்கரசு அவர்கள் சொன்னார்கள், மணமக் கள் இருவரும்
படிக்கும்பொழுதே, ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, மிகப்பெரிய அளவிற்கு, கற்பனையான ஒன்று, நீண்ட காலமாக,
ஆரியத்தினுடைய வருகையினால், நம் மூளை யில் விலங்கு போடப்பட்டது. அந்த
விலங்கிலே இன்றைக் கும் நம்மைத் தாழ்த்திக் கொண்டிருப்பது, இந்த ஜாதி
விலங்குதான். மிக முக்கியமானது.
துக்ககரமான கடிதங்கள் என்றாலே, மூலையில் கறுப்பு மையைத் தடவி வைத்திருப்பார்கள்
நான் இங்கே வருவதற்கு முன்புகூட,
தொலைக்காட்சி யில் செய்தி முடிந்து, கல்யாண மாலை என்ற ஒரு நிகழ்ச்சி
ஞாயிற்றுக்கிழமையில் ஒரு பார்ப்பன நண்பர் அந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.
அந்த நிகழ்ச்சியில், படிப்பு இவ்வளவு படித்திருக்கிறார் என்று மற்ற
விவரங்களையும் போட்டுத்தான் நடத்துகிறார்.
ஒரு காலத்தில் நமக்கெல்லாம் படிப்பு வராது
என்று சொன்னார்கள். பொறியியல் படிப்பை நாமெல்லாம் முன் பெல்லாம் படிக்க
முடியாது. இன்றைக்கு உள்ள இளைஞர் களுக்கெல்லாம் பழைய
காலத்தைப்பற்றியெல்லாம் தெரியாது. இவர்கள் எல்லாம் இப்பொழுது சிமெண்ட்
சாலையில் பயணிப்பவர்கள்.
கைநாட்டுப் பேர்வழிகள் எல்லாம் இருந்த
காலம் ஒன்று உண்டு; அதுமட்டுமல்ல, கடிதங்கள் போட்டால், துக்ககர மான
கடிதங்கள் என்றாலே, மூலையில் கறுப்பு மையைத் தடவி வைத்திருப்பார்கள்.
வயதானவர்களுக்கு இந்த விஷயம் தெரியும். இது எதற்காக என்று பல பேருக்குத்
தெரியாது. அப்பொழுதெல்லாம் நம் சமுதாய மக்களுக்கு எழுதப் படிக்கவே
தெரியாது. பெரிய மிராசுதாரராக இருப்பவர், வில் வண்டியில் போய் இறங்குவார்.
ஆனால், சொத்து வாங்கும்பொழுது, பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று,
கையெழுத்துப் போடச் சொன்னால், அந்த மிராசு தாரர் சிரிப்பார். பிறகு, அந்தப்
பதிவாளர் புரிந்துகொண்டு, அந்த மிராசுதாரரும் கட்டை விரலை உயர்த்திக்
காட்டுவார். இப்பொழுதுதான் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த ரப்பர் ஸ்டாம்பு
பேடு உண்டு. ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், கட்டை வண்டி
மையைத்தான் கட்டை விரலில் தடவுவார்கள். பதிவாளர் அந்தக் கட்டை விரலை
உருட்டி, கையொப்பம் வாங்குவார்.
உங்களை சங்கடப்படுத்துவது என்னுடைய கருத்தல்ல!
இப்படி இருந்த சமுதாயம்தான் நம்முடைய
சமுதாயம். இந்த சமுதாயத்தில்தான், இன்றைக்கு எங்கள் பிள்ளைகள் மிக உயர்ந்த
படிப்பை படித்திருக்கிறார்கள். இவர்கள் பொறியாளர்கள் படிப்பு படித்தது
எப்படியென்றால், தாய்மார்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன், இது நீங்கள்
சரசுவதி பூஜை கொண்டாடியதினால் வந்தது இல்லை. உங்களை சங்கடப்படுத்துவது
என்னுடைய கருத்தல்ல. நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
இந்த சமயத்தில் மணமக்களுக்கு அறிவுரை
சொல்வது முக்கியமல்ல; மணமக்கள் இருவரும் விஷயம் அறிந்தவர் கள்; ஒருவரை
ஒருவர் புரிந்துகொண்டவர்கள். இந்த மண விழாவிற்கு வந்திருக்கின்ற
தாய்மார்களாகிய உங்களுக்குத் தான் தேவை. ஏனென்றால், இவ்வளவு தாய்மார்கள்
நாங்கள் பொதுக்கூட்டம் போட்டால்கூட வரமாட்டீர்கள்; ஆகை யால், உங்களை
சுலபமாக அனுப்புவதாக இல்லை. உங் களுக்கு இந்தக் கருத்துகளைச்
சொல்லவேண்டும்; அதனை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். எங்களைப் பார்த்தவு
டன், ஏதோ சொல்கிறார்களே, என்று யாரும் பயப்படக் கூடாது.
எப்படி நம் பிள்ளைகளால் படிக்க முடிந்தது?
பெரியார் பாடுபட்டார்; பெரியார் கேட்டார்; ஏனய்யா, நம் பிள்ளைகள்
படிக்கக்கூடாதா? என்று கேட்டார். அதனுடைய விளைவு என்ன? நம்முடைய தாத்தா
காலத்தில் கைநாட்டுப் பேர் வழிகள் நாம். அதனால்தான் துக்கரமான விஷயத்திற்கு
கடிதாசியின் மூலையில் கறுப்பு மையைத் தடவி வைத்திருந்தார்கள். ஏனென்றால்,
அவர்களுக்குப் படிக்கத் தெரியாது; அப்படி கடிதாசியின் மூலையில் மை
தடவியிருந்தால், இரண்டு மைல், மூன்று மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு
வாத்தியாரிடம் சென்றுதான் அந்தக் கடிதாசியைக் காட்டுவார்கள். அவர்தான் அந்த
ஊரிலேயே படித்திருப்பார். அய்யா, ஏதோ துக்ககரமான செய்தி வந்திருக்கிறது;
உடனே படித்துச் சொல்லுங்கள் என்று சொல்வார்கள். அவரும் அவரும் அந்தக்
கடிதாசியில் உள்ளவற்றைப் படித்துக் காட்டுவார்.
தந்தை பெரியாரும், இந்த இயக்கமும் செய்த மகத்தான கொடை
இன்றைக்கு அதற்கெல்லாம் அவசியமே கிடையாது;
அந்த அளவிற்கு இவ்வளவு பெரிய மாறுதல்கள் ஏற் பட்டிருக்கிறது. பெண்களுடைய
படிப்பு சதவிகிதம் இருக்கிறது பாருங்கள், நம் நாட்டில் இன்றைக்கு
மிகப்பெரிய அளவிற்கு, எல்லா தகுதிகளும் வாய்ந்தவர்களாக பெண் கள்
இருக்கிறார்கள்.
பெண்களுக்குச் சம உரிமை; பெண்களுக்குச்
சொத் துரிமை; பெண்களுக்குப் படிப்பு உரிமை; பெண்களுக்கு வாய்ப்பு இவை
அத்தனையும் தந்தை பெரியாரும், இந்த இயக்கமும் செய்த மகத்தான கொடையாகும்.
அதனை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும். அருமைத் தாய்மார்கள்
சிந்தித்துப் பார்க்கவேண்டும். இந்த மண்ட பத்தைப் பாருங்கள்; ஒரு மாநாடு
போல் போடப்பட்டிருக் கின்ற அத்தனை நாற்காலிகளும் நிறைந்திருக்கிறது.
ஏனென்றால், இது செல்வாக்குள்ள குடும்பம்; அவர்கள்பால் அன்புள்ளவர்கள்
அத்தனைப் பேரும் இங்கே வந்திருக் கிறீர்கள்.
இவ்வளவு தாய்மார்களுக்கு விளங்கும்படியாக
நான் சொல்கிறேன். ஏனென்றால், இது நம்ம குடும்பம்; அதனால் உரிமை
எடுத்துக்கொண்டு தாராளமாகச் சொல்கிறேன்.
இந்தப் பக்கம் பாருங்கள்; அங்கேயும்
பாருங்கள்; ஆண்கள் எல்லாம் நின்றுகொண்டிருக்கிறார்கள். நம் முடைய
தாய்மார்கள் எல்லாம் வசதியாக நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருக்கிறீர்கள்.
கூச்சப்படாமல் அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள். பாராட்டுகிறேன்.
--------------------(தொடரும்)--”விடுதலை” 26-11-2014
Read more:
http://viduthalai.in/page-4/91847.html#ixzz3KAlLavLD
******************************************************************************************
ஜாதிக்கு என்று ஏதேனும் அடையாளங்கள் உண்டா?
ரத்தத்தில் அய்யங்கார் ரத்தம் ஆதிதிராவிடர் ரத்தம் என்ற பிரிவு உண்டா?
பாடினி-பிரபாகரன் திருமண விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
கல்லக்குறிச்சி, நவ. 27- ஜாதிக்கு என்று
ஏதேனும் அடையாளங்கள் உண்டா? என்றும் ரத்தத்தில் அய்யங்கார் ரத்தம்,
ஆதிதிராவிடர் ரத்தம் என்ற பிரிவு உண்டா? என்றும் கேள்வி எழுப்பினார்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
9.11.2014 அன்று கழக செயலவைத் தலைவர்
சு.அறிவுக்கரசு அவர்களின் பெயர்த்தி பாடினி - பிரபாகரன் ஆகியோரின்
இணையேற்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
யாருக்கு முன்னுரிமை கொடுப்பது? ஆண்களுக்கா? பெண்களுக்கா?
ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, இதுபோன்ற
ஒரு கிராமத்தில், ஆண்கள் எல்லாம் நின்று கொண்டிருக்க, பெண்கள் தைரியமாக
நாற்காலியில் உட்காரக்கூடிய சூழ்நிலை இருந்திருக்கிறதா? என்று கேட்டால்,
கிடையவே கிடையாது!
ஒரு அம்மணியைக் கேட்டால், அவர்
பளிச்சென்று சொல்வார், இது என்னங்க, இதைப் போய் பெரிய விஷய மாகப்
பேசுகிறீங்க, நாங்கள் முன்னதாகவே வந்துவிட்டோம்; அதனால் அமர்ந்துவிட்டோம்;
அவர்கள் தாமதமாக வந்தார்கள், இடமின்மையால், நின்றுகொண்டிருக்கிறார்கள்.
இன்னுங்கேட்டால், குறைவாக நாற்காலிகள்
போடப் பட்டு இருந்தால், யாருக்கு முன்னுரிமை கொடுப்பது? ஆண்களுக்கா?
பெண்களுக்கா? என்று கேட்டால்கூட, பெண்களாகிய தாய்மார்களாகிய
உங்களுக்குத்தான் நாற் காலிக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் - நியாயப்படி!
பெண்களுக்குத்தான் முதலில் முன்னுரிமை கொடுக்கவேண்டும்!
ஏனென்று கேட்டால், ஆண்கள்
அணிந்திருக்கக்கூடிய உடைகளை மதிப்புப் போட்டால், சில ஆயிரம்தான் இருக்கும்;
ஆனால், தாய்மார்கள் உடுத்திருக்கக்கூடிய பட்டுப்புடவை என்ன விலை
இருக்கும்? நீங்கள் அணிந்திருக்கக்கூடிய நகைகளின் மதிப்பு என்னவாக
இருக்கும்? எனவே, நாற்காலியில் உட்காரக்கூடியவர் களுக்கு முன்னுரிமை
கொடுக்கவேண்டும் என்றால், பெண்களுக்குத்தான் முதலில் முன்னுரிமை கொடுக்க
வேண்டும். அதில் ஒன்றும் சந்தேகமேயில்லை.
அப்படி இருந்தும், நாற்காலி காலியாக இருந்தாலும், நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாற்காலியில் உட்காரக்கூடிய துணிச்சல் பெண்களுக்கு இல்லை.
இப்பொழுது அப்படியில்லை. நாற்காலியில்
பெண்கள் உட்கார்ந்து விட்டால், அந்த நாற்காலி மற்றவர்களுக்கு சுலபமாகக்
கிடைக்குமா? என்று சந்தேகம் வரக்கூடிய அளவிற்கு வந்தாயிற்று.
இந்த மாறுதல்கள் எல்லாம் எப்படி வந்தன? நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம்தான் சாதித்தது!
பெரியார் கேட்டார், ஆணும் - பெண்ணும்
சமமாக இருக்கவேண்டும். இரண்டு கைகளுக்கும் சமபலம் இருக்கவேண்டும்; இரண்டு
கண்களுக்கும் சம பார்வை இருக்கவேண்டும்; இரண்டு காதுகளும் சரியாகக் கேட்க
வேண்டும்; இரண்டு கால்களும் சரியாக இயங்கவேண்டும். ஒரு கால், ஒரு கை
இயங்கினால், அதற்குப் பெயர் பக்கவாதம் என்று பெயர்.
அதுபோல், ஆண் - பெண் இந்த சமுதாயத்தில்
இரண்டு பேர்களும் சரி சமமானவர்கள். இரண்டு பேர்களுக்கும் வாய்ப்பு
கொடுக்கவேண்டும். ஆனால், மனுதர்மம் என்ற ஆரிய தர்மம், பார்ப்பன தர்மம் இந்த
நாட்டில் உள்ளே புகுந்ததினால் என்ன நடந்தது என்றால், எந்தக் காலத்திலும்
பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கக்கூடாது என்று ஒரு தர்மம் ஏற்பட்டது.
சுயமரியாதை இயக்கம், திராவிடஇயக்கம்தான் அதனை உடைத்தது. பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள்தான் இதற்கு முன்னோடியாக இருந்தார்கள்.
ஆகவே, இன்றைக்கு அதனுடைய விளைவுதான்;
அந்தத் தொண்டினுடைய கனிந்த கனிகள்தான் இவர்கள் எல்லாம் இன்றைக்குப் பிடித்த
மணமக்களாக இருக் கிறார்கள்.
ஆகவே, இந்த அற்புதமான வாய்ப்பில் உங்களை
யெல்லாம் இந்தச் சந்திப்பதில், இந்தக் கருத்துகளை எடுத்துச் சொல்வதில்
மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பாராட்டு கிறேன்.
அடுத்தபடியாக, திருமணம் - வாழ்க்கை
இணையேற்பு விழா. ஒருவர் எஜமானர் அல்ல; மற்றொருவர் அடிமை அல்ல. இரண்டு
பேரும் நண்பர்கள். அவர்கள் சொன்னது போல், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்
போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. வாழ்க்கையில்
நண்பர்களாக இருந்துகொண்டு, ஒருவருக் கொருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தால்
நல்லது.
நான் ஏன் மணமகனுடைய பெற்றோரை, அந்தக்
குடும்பத்தினரை வெகுவாகப் பாராட்டுகிறேன் என்றால், ஜாதி என்பதற்கு ஒன்றும்
அடையாளம் கிடையாது; அது இடையில் ஏற்பட்ட ஒரு கற்பனை. ஆதியில் ஜாதி
கிடையாது. வள்ளுவருடைய குறள் என்ன?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
அதுமட்டுமல்ல,
நமக்கு அனைத்துயிரும் ஒன்று என்று எண்ணித்தான் நம்முடைய சமுதாயம் வாழ்ந்திருக்கிறது.
யாதும் ஊரே! யாவரும் கேளிர்!
எல்லாமே நமக்கு ஊர்தான்; எல்லாருமே நமக்குச் சொந்தம்தான். யாரும் வித்தியாசமானவர்கள் இல்லை என்று வாழ்ந்தவன்தான் தமிழன்.
எப்படி ஜாதி நுழைந்தது? ஜாதிக்கு என்ன அடையாளம்?
அவனுக்கு அவ்வளவு பெரிய விரிந்த
மனப்பான்மை, பரந்த மனப்பான்மை இருந்த இடத்தில் எப்படி ஜாதி நுழைந்தது? அந்த
ஜாதிக்கு என்ன அடையாளம்? என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
ஒரு உதாரணம் சொன்னால், உங்களுக்கு நன்றாக விளங்கும்.
அறிவியல் ரீதியாக ஜாதிக்கு ஆதாரம் உண்டா?
தேர்தல் நேரங்களில் ஜாதி பயன்படுகிறது; மற்ற மற்ற இடங்களில் ஜாதி
பயன்படுகிறது. ஆனால், அறிவியல் ரீதியாக, கற்பனை என்று சொன்னாலும், அதன்
காரணமாக படிக்காதவர்களாக, உத்தியோகம் மறுக்கப்பட்டவர்களாக, சமூகநீதி
மறுக்கப்பட்டவர்களாக இருந்ததினால்தான், நாம் அந்த அடிப்படையை சொல்கிறோம்.
ஜாதி என்பது கற்பனை; ஆதாரமில்லாதது
ஆனால், அதேநேரத்தில் நீங்கள் நன்றாக
எண்ணிப் பாருங்கள்; அண்மைக்காலத்தில், ஒரு நல்ல மனிதநேயம் நம் நாட்டில்
எத்தனையோ சங்கடங்கள் இருந்தாலும் வளர்ந்துகொண்டிருக்கிறது.
அந்த உதாரணத்தை உங்களுக்குச் சொன்னால், ஜாதி என்பது கற்பனை; ஆதாரமில்லாதது என்பது நன்றாக விளங்கும்.
அது என்னவென்றால்,
விபத்து நடக்கின்ற நேரத்தில், ஒரு
சிலருக்கு மூளைச் சாவு ஏற்படுகிறது. அவர்கள் எல்லாம் கட்சிக்காரர்களாக
இருக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது; பகுத்தறி வாளர்களாக
இருக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது. மனிதநேய சிந்தனையாளர்களாக
இருந்தால் போதும்.
மூளைச்சாவு அடைந்தவரின் பெற்றோர்களிடம், மருத்துவர்கள் சொல்கிறார்கள், என்ன செய்யப் போகிறீர் கள் என்று?
உடல் உறுப்புக் கொடை
அந்தப் பெற்றோர்கள் சொல்கிறார்கள்,
எங்களுடைய மகனின் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்குப் பயன்படட்டும்; அவன்
உயிரோடு இல்லை என்பது எங்களுக்கு இழப்பு தான். இருந்தாலும், அவன்
உறுப்புகளாவது மற்றவர்களுக் குப் பயன்படட்டும். ஆகவே, அவனுடைய உறுப்புகளை
மற்றவர்களுக்குக் கொடையாக அளிக்க சம்மதிக்கின்றோம் என்று சொல்கிறார்கள்.
உடல் உறுப்புக் கொடை என்பதிருக்கிறதே, இப் பொழுது பெரிய அளவில் மனிதநேயத்தோடு வளர்ந்து கொண்டிருக்கிறது.
அண்மையில் ஒரு செய்தியை நீங்கள்
பார்த்திருப் பீர்கள்; ஏனென்றால், தொலைக்காட்சி, பத்திரிகைகளைப்
படிப்பவர்கள் நிறைய இங்கே இருக்கிறீர்கள். அந்த செய்தி என்ன செய்தி
என்றால், பெங்களூருவில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயத்தை எடுத்து,
விமானம் மூலமாக சென்னைக்குக் கொண்டு வருகிறார்கள். காவல்துறை யினரின்
உதவியால், போக்குவரத்திற்கு இடையூறின்றி, விமான நிலையத்திலிருந்து சென்னை
அடையாறு மருத் துவமனைக்கு வருகிறது. அங்கே இதயம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு,
குறிப்பிட்ட நேரத்திற்குள் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து,
அவருக்குப் புது வாழ்வு கொடுக்கிறார்கள்.
அதேபோல, கண் கொடை அளிக்கிறார்கள்;
குருதிக் கொடை அளிக்கிறார்கள். தலைவர்கள் பிறந்த நாளில், நம்முடைய
இளைஞர்கள் குருதிக் கொடை அளிக்கிறார் கள். நீங்கள் நன்றாக சிந்தித்துப்
பார்க்கவேண்டும். அங்கே எங்காவது ஜாதிக்கு இடம் உண்டா? ஜாதி என்பது கற்பனை
என்பது நிரூபணமாகிறது அல்லவா!
நீங்கள் என்ன ஜாதி என்று கேட்டால்,
நம்மாள் உடனே பதில் சொல்வான். சரி, உங்களுடைய குருதிப் பிரிவு என்னவென்று
கேட்டால், தெரியாது என்று சொல்வான். பல பேருக்கு அவர்களுடைய குருதிப்
பிரிவு என்னவென்று தெரியாது.
ஒவ்வொருவருக்கும் தங்களுடைய குருதிப் பிரிவு தெரிந்திருக்கவேண்டும்
எதைத் தெரிந்துகொள்ளவேண்டுமோ அதைத்
தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். குருதிப் பிரிவை முதலில் தெரிந்து
வைத்திருக்கவேண்டும். ஏனென்றால், நமக்கு ரத்தம் வேண்டும் என்றாலும்,
குருதிப் பிரிவு தெரிந்திருக்கவேண்டும்; அவசரத்திற்கு நாம் ரத்தம்
கொடுக்கவேண்டும் என்றாலும், நம்முடைய குருதிப் பிரிவைத் தெரிந்து
வைத்துக்கொள்ளவேண்டும்.
அதனால், பெரியார் மணியம்மை பல்கலைக்
கழகத்தில், மாணவர்கள் யார் சேர்ந்தாலும், முதலில் நாங்கள் செய்வது,
அவர்களுடைய குருதிப் பிரிவு என்ன? என்று கேட்டு, அதனைப் பதிவு செய்து ஒரு
அடையாள அட்டையைக் கொடுப்போம்.
ஆனால், இங்கே அமர்ந்திருப்பவர்களில் பல
பேருக்கு தங்களுடைய குருதிப் பிரிவு தெரியாது. ஆனால், ஜாதியைப்பற்றி
கேளுங்கள், நான் செட்டியாருங்க; என்ன செட்டியார் என்று கேட்பான்;
செட்டியாரில் பல பிரிவு இருக்கும்; பிரிவுக்குள் பிரிவு என்று அது
நீண்டுகொண்டே போகும். ஆகவே, ஜாதிக்கு எங்கேயாவது அடையாளம் இருக்கிறதா?
கிடையவே கிடையாது!
உதாரணத்திற்கு, ஒரு அய்யங்கார் அடிபட்டு
விட்டார். அடிபட்ட அய்யங்காருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்; ரத்தம்
தேவைப்படுகிறது. அய்யங்காரிடம் டாக்டர் சொல்கிறார், உங்களுடைய ரத்த வகை ஏ1
பாசிட்டிவ். உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் இரண்டு
பாட்டில் ரத்தம் தேவைப்படும் என்று. அதற்காக விளம்பரம் கொடுத்துள்ளோம்
என்று சொல்கிறார்.
டாக்டரிடம் அய்யங்கார் சொல்கிறார், நான்
தான் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று சொல்லிவிட்டேனே, இன்னும் ஏன்
காலதாமதம் செய்கிறீர்கள்? என்று கேட்கிறார்.
உடனே டாக்டர் அய்யங்காரிடம் சொல்கிறார்,
நாம் விளம்பரம் கொடுத்ததைப் பார்த்து ஒரு இளைஞர் உங்களுக்கு ரத்தம் கொடுக்க
முன் வந்திருக்கிறார். அந்த ரத்தத்தை உங்களுக்குச் செலுத்தினால் அறுவை
சிகிச்சை செய்யலாம் என்று சொல்கிறார்.
அய்யங்காரோ, அப்புறம் என்ன டாக்டர் உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டியதுதானே என்கிறார்.
டாக்டர் அய்யங்காரிடம், நீங்களோ
அய்யங்கார், ரத்தம் கொடுக்க வந்துள்ள இளைஞரோ ஆதிதிராவிடர். அவர்களைத்
தொட்டாலே நீங்கள் குளிக்கவேண்டும் என்று சொல்வீர்களே, அவருடைய ரத்தத்தை
உங்களு டைய உடம்பில் ஏற்றவேண்டும் என்றால், உங்களுடைய அனுமதி வேண்டும்
அல்லவா? நாளைக்கு நீங்க விஷயம் தெரிந்ததும், என்னைக் கண்டிக்கமாட்டீர்களா?
என்று சொல்கிறார்.
பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாயிற்று!
இப்படி டாக்டர் சொன்னால், அந்த பேஷன்ட்டான
அய்யங்கார் என்ன சொல்வார், அய்யய்யோ அவருடைய ரத்தம் வேண்டவே வேண்டாம்;
நான் செத்தாலும் பரவாயில்லை என்று சொல்வாரா?
என்ன டாக்டர் நீங்க, நான் பெரியார்
கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாயிற்று! என்ன நீங்க இன்னும் தயக்கம்
காட்டுகிறீர்கள்? உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்; அந்தத்
தாழ்த்தப்பட்டவருடைய ரத்தத்தை எனக்குச் செலுத்துங்கள் என்பார்.
அப்படியென்றால், இவரைக் காப்பாற்றுவதற்கு,
தாழ்த்தப்பட்டவருடைய ரத்தம் தேவை; இந்த சமுதாயம் வளர்வதற்கு
தாழ்த்தப்பட்டவர்களுடைய உழைப்பு தேவை. ஆனால், ஜாதி இருக்கவேண்டும் என்று
சொன்னால், இது செயற்கையானது அல்லவா? இது உள்ளே புகுத்தப்பட்டது அல்லவா?
இயற்கையானது அல்ல என்பதுதானே உண்மை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
செட்டியார் ரத்தம் செட்டியாருக்கு இல்லை;
வன்னியர் ரத்தம் வன்னியருக்கு இல்லை; முதலியார் ரத்தம் முதலியா ருக்கு
இல்லை; நாடார் ரத்தம் நாடாருக்கு இல்லை.
ஆகவேதான், நன்றாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஜாதி என்பது கற்பனை; எனவே, இதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
இங்கே மணமக்கள் இரண்டு பேரும் மிகவும்
மகிழ்ச்சியாக அதனைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பிரபாகரன் - பாடினி ஆகிய
இருவருக்கும் ஏற்பட்டிருக் கின்ற மிகத்தெளிவான இந்த வாய்ப்பைப்
புரிந்துகொள்ள வேண்டும்.
எனவேதான், இந்தக் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டு, இந்த மணமக்கள் அருமையான ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, புரிந்துணர்வோடு வாழவேண்டும்
ஆகவேதான், இந்த நிலையில், இவர்கள் இந்த
ஏற்பாட்டினை செய்தது, பாராட்டத்தக்கது என்று சொல்லி, இந்த மணமக்கள்
இருவருமே சிறப்பாக வாழவேண்டும், சிக்கனமாக வாழவேண்டும், மற்றவர்களுக்கு
எடுத்துக் காட்டாக வாழவேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லி,
மணமக்கள் மற்றவர்களுக்கு
எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்லி, சிறப்பான
வகையில் இவர்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொள்வதற்கு, ஒருவருக்கொருவர்
விட்டுக் கொடுத்து, புரிந்துணர்வோடு வாழவேண்டும் என்று சொல்லி,
இந்த மணமுறையைப் புகுத்தியவர் அறிவாசான்
தலைவர் தந்தை பெரியார்; இம்மணமுறைக்குச் சட்ட வடிவம் கொடுத்தவர் பேரறிஞர்
அண்ணா அவர்கள். ஆகவே, அந்த இருபெரும் தலைவர்களுடைய தொண் டுக்கு வீரவணக்கம்
செலுத்தி இந்த மணவிழாவினை நடத்தி வைக்கிறேன்.
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
----------------------”விடுதலை” 27-11-2014