Search This Blog

7.2.08

தீச்சட்டி

வினா: தீச்சட்டி எடுத்தலை அறிவியல் மூலம் விளக்கமுடியுமா?

விடை:
முடியும்.சட்டியின் அடியில் வெப்பம் கடத்தாப் பொருள்களைப் போட்டு அதன் மேல் நெருப்பினை எரியச்செய்து சட்டியைத் தூக்கினால் சட்டி பொறுக்க முடியாத அளவுக்கு சுடாது.மேலும் தீச்சட்டி ஏந்துபவர்கள் சட்டியை அடிக்கடி அடுத்த கைக்கு மாற்றிக்கொள்வார்கள்.மண்பானைக்குள் நெருப்பைப்போட்டு தீச்சட்டி எடுக்கும் பக்தர்கள் உலோகத்தால் ஆன(செம்பு,எவர்சில்வர்)குடத்தில் நெருப்பைப் போட்டோ அல்லது சுடு தண்ணீரை ஊற்றியோ கையில் ஏந்தி வர இயலாது.

4.2.08

பெரியாரா? பாரதியாரா?

கேள்வி:பெண்ணடிமைத்தனம் தீர களத்தில் இறங்கிய பெரியாரைப் பாராட்டாமல் பாடல் எழுதிய பாரதியாரைத் தானே வெகுமக்கள் பாராட்டுகின்றனர்?

தி.க.தலைவர் கி.வீரமணி அவர்களின் பதில்:
நம்மை நீண்ட நாளாக உறுத்தும் பிரச்சனை இது.பெண்ணுரிமைக்கே ஏதோ சுப்ரமணிய பாரதியார் தான்"அத்தாரிட்டி" மாதிரி, "பாரதி கண்ட புதுமைப்பெண் " என்றெல்லாம் முற்போக்குச் சிந்தனை உள்ளவர்கள் கூட"ஒரு வழிப்பார்வையாளராக" இருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும்.

பெரியார் கண்ட "புரட்சிப்பெண்ணுக்கும்", பாரதி கண்ட "புதுமைப்பெண்ணுக்கும்" மிகுந்த வேறுபாடு உண்டு.எங்கும் மேற் சொன்ன சொற்றடர்கள் விவாதப் பொருளாய் பரவிவிடல் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும்.இன்னும் சில "அறிஞர்கள்" பெரியாருக்கு முன்பே பாரதி பெண்ணுரிமை பற்றி பேசினார் என்று காலக்கணக்கினை மட்டும் காட்டி மறைமுகமாக பெரியாரைப் பின்னுக்கு தள்ளிவிட முயலுகின்றனர். காலமா முக்கியம்?கனபரிமாணம்,பெண்ணுரிமை பற்றிய பேச்சு மட்டுமா? கொள்கை,திட்டம்,இயக்கம்-இந்த அடிப்படை தேர்வில் "பாரதி" மதிப்பெண் பெற முடியாதே!
-------"விடுதலை"-ஞாயிறுமலர்- 23-4-2000
----------------- நூல்: "அறிந்து கொள்வீர் புரிந்து கொள்வீர்"

3.2.08

பகுத்தறிவுவாதியின் கொள்கை

பேய் இருக்கிறது என்பது எவ்வளவு பொய் சங்கதியோ அவ்வளவு பொய் சங்கதி கடவுள் இருக்கிறது என்பதும் தேவர்கள் என்பதும் பெரும் பொய்யேயாகும். மேல் உலகம் என்பதும் மகா மகா பொய்யேயாகும். ஏனெனில் இந்த உலகத்தில் இருந்து ஆகாய மார்க்கத்தில் சுமார் மூன்று கோடி மைல் தூரத்தில் சூரியன் இருக்கிறது. அதுவரை தூரதிருஷ்டிக் கண்ணாடியால் ஆகாயம் பார்க்கப்பட்டாகி விட்டது. எங்கேயும் உஷ்ணம் தவிர எந்த உலகமும் தென்படவில்லை. இது வான சாஸ்திரிகள் கண்டுபிடித்த செய்தி. இராட்சதர் என்பதும் சுத்தப் பொய். ஏனென்றால் இராட்சதர், அசுரர் என்போர் எல்லாம் இந்த பூமியில் இருந்ததாகத்தான் சொல்லப்படுகிறது. இதற்கு பாட்டி கதைகளை, புராணங்களைத் தவிர எந்த ஆதாரமும் இன்னமும் இல்லை. இவர்கள் கடவுள்களுக்கு எதிரிகளுக்கு இருந்து கொல்லப்பட்டார்கள் என்றால் `கடவுளுக்கு' எதிரி இருக்க முடியுமா? ஜோசியம் என்பதும் பெரும் பொய், வெறும் ஏமாற்றுதலே ஆகும்.இராகு, காலம், குளிகை, எமகண்டம், நல்ல நேரம், கெட்ட நேரம் எல்லாம் பொய், பட்சி சாஸ்திரமும் பச்சைப் பொய்; நட்சத்திரப்பலன், கிரகப் பலன், வாரப் பலன், மாதப்பலன், வருடப்பலன் என்பவை யாவும் பொய். பல்லி விஷம் பலன், கனவு காணும் பலன், தும்மல் பலன் எல்லாம் பொய், கழுதை கத்துதல், ஆந்தை அலறுதல், காக்கை கரைதல், நாய் ஊளையிடுதல் ஆகியவற்றிற்கு பலன் என்பதெல்லாம் பொய். மந்திரம், மந்திரத்தால் அற்புதம் செய்தல் முதலிய எல்லாம் சுத்த பித்தலாட்டம் பொய். ``தெரியாத புரியாத கடவுளை மனிதன் நம்பித்தான் ஆக வேண்டும்'' என்பதான கட்டாயம் ஏற்பட்டு, மனிதன் நம்ப ஆரம்பித்ததன் பலனே இவ்வளவு பொய்களையும் மனிதன் நம்ப வேண்டியவனாகி விட்டான். நம்பினதன் பலனாக பலன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலைப்படாமல் அவற்றிற்குத் தன்னைச் சரிப்படுத்திக் கொள்ளுகிறான். பஞ்சேந்திரியங்களுக்குத் தட்டுப்படாத விஷயம், பொருள், நடப்பு எதுவானாலும் அது பொய். இதுதான் பகுத்தறிவுவாதியின் கொள்கை.

--------------தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்
"விடுதலை" 9.2.1970

1.2.08

பெரியார் திடலில் மதக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது ஏன்?

பெரியார் திடலில் மத கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுவது முரண்பாடாக இருக்கிறதே?

பெரியாருக்கு கிறிஸ்தவர்கள் மெமோரியல் ஹாலில் இடம் கொடுக்க மறுத்தார்கள். அதன் பிறகுதான் அய்யா, இங்கு மன்றத்தை துவங்கினார். அப்போதிலிருந்தே இங்கு மதக்கூட்டங்கள் நடந்து வருகிறது. அய்யா சொன்னது என்னவென்றால், என்னை திட்டுகிறவர்கள் என்றால் கூட கருத்து மாறுபாடு பார்க்காமல் இந்த மன்றத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான். கீதையின் மறுபக்கம் நூலை ஒரு அய்யர் கேட்டால் கொடுக்க மாட்டோமா? வியாபாரம் என்று வந்த பிறகு யார் கேட்டாலும் கொடுக்க வேண்டியதுதான். விடுதலை பேப்பரில் நாங்கள் மத பிரச்சாரம் செய்யவில்லையே? பெரியார் திடலில் இருக்கக்கூடிய ஒரு அம்சம் இந்த பொது மன்றம். மதக்கூட்டங்களுக்கு தொடர்ந்து இனிமேலும் கொடுப்போம். இதில் மனித நேயம் இருக்கிறது. எல்லாவற்றையும் விட பெரியாரின் ஆணை இது.
----தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் "தமிழ் சினிமா" இணைய தளத்திற்கு அளித்த நேர்காணலிலிருந்து.

கிருஸ்ணபகவானுக்கு புத்தி உண்டா?

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்துவிட்டது.அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக்கதை சொல்லுகிறது. குசேலர் பெண் சாதி குறைந்தது வருடத்திற்கு ஒரு பிள்ளையாகப்பெற்று இருந்தாலும் கைகுழந்தைக்கு ஒரு வருடமாவது இருக்குமானால், மூத்த பிள்ளைக்கு 27 -வது வருடமாவது இருக்கும் 20 வயசுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள் இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசு கூட சம்பாதிக்காத சோம்பேறிகளாகவா இருந்திருப்பார்கள்? 20 வருடத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு பிச்சைக்குப் போகக் குசேலருக்கு வெட்கமிருந்திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஸ்ணபகவானுக்காவது "என்ன பெரிய வயது வந்த பிள்ளைகளை தடிப்பயல்களாட்டமாய் வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே,வெட்கமாக இல்லையா?" என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா?


--------------தந்தைபெரியார் - "84 ஆம் ஆண்டு பெரியார் பிறந்த நாள் மலர்" பக்கம் 43

---------நன்றி: www.jaathiolippu.blogspot.com