Search This Blog

5.2.14

ஆசிரியர் பணி தகுதித் தேர்வு நியமனம் - முதல்அமைச்சருக்கு கி.வீரமணி அவர்களின் வேண்டுகோள்


ஆசிரியர் பணி தகுதித் தேர்வு - நியமனம்
2013 ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டுமல்ல
2012இல் தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்த வேண்டும்!

தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு தமிழர் தலைவரின் வேண்டுகோள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி மதிப்பெண் குறைத்ததை வரவேற்கும் அதே நேரத்தில் 2013 ஆகஸ்டில் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் பொருந்தும் என்பது சட்டப்படி தவறு என்று சுட்டிக்காட்டியும்,  இடஒதுக்கீடு அளித்தால் தகுதி - திறமை போய் விடும் என்ற மனப்பான்மையிலிருந்து அ.தி.மு.க. அரசு  மாற வேண்டும் என்றும் எடுத்துக் கூறி திராவிடர் கழகத் தலைவர் திராவிடர்கழகத்தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக் கான தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசு சமூக நீதியைப் பின்பற்றாமல் நடந்து கொண்டதைக் கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள சமூக நீதி சக்திகள் ஒன்று திரண்டன. இதற்கான அடிப்படையைத் திராவிடர் கழகம் செய்து வந்திருக்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் நடந்துள்ள குளறுபடிகள் பற்றி முதல் அறிக்கையை விடுதலையில் வெளியிட்ட பின்புதான் (2.4.2013) பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

இது தொடர்பாக சமூக நீதிப்பாதுகாப்பு மாநாட்டை சென்னைப் பெரியார் திடலில்  திராவிடர் கழகம் நடத்தி யது. (5.7.2013) அதனைத்  தொடர்ந்து திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது (18.7.2013)

கலைஞர் அறிக்கை

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் விரிவான அறிக்கையினை வெளியிட்டார்கள் (முரசொலி 6.6.2013).

தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் பிரச்சினைப்பற்றிக் குரல் உயர்த்தினார்கள்.

55 சதவீதமாகக் குறைப்பு

இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகுதான் தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல் அமைச்சர், ஆசிரியர் தகுதித் தேர்வில்   அனைவருக்கும் தகுதி மதிப்பெண்  60 சதவீதம் என்பதைச் சற்றே தளர்த்தி, தாழ்த்தப்பட்டோர், பழங் குடியினர் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோர்க்கு 55 சதவீத மதிப்பெண், தகுதி மதிப்பெண் என்று அறிவித் துள்ளார். இதனை முதல் நிலையிலே வரவேற்கிறோம். அதே நேரத்தில் ஆந்திரா போன்ற மாநிலங்களில் தாழ்த் தப்பட்டோருக்கும் முன்னேறியோர்க்கும் இடையிலான தகுதி மதிப்பெண் 20 இருக்கும் பொழுது (ஆந்திராவில் மதிப்பெண் விகிதம்: முன்னேறியோர் 60%, பிற்படுத்தப் பட்டோர் 50%, தாழ்த்தப்பட்டோர் 40%) இந்தியாவிலேயே 69 சதவீத இடஒதுக்கீடு சட்டப்படியாகப் பின்பற்றப்படும் தமிழ்நாடு இந்தப் பிரச்சினையில் முதல் இடத்தில் நின்று எடுத்துக்காட்டாக இருப்பதற்குப் பதிலாக பின் தங்கி இருப்பது எந்த வகையில் நியாயம்? தமிழ்நாட்டைப் பாரீர் என்பதற்குப் பதிலாக ஆந்திராவைப் பாரீர் என்று சொல்லும் நிலை தமிழ்நாடு அரசுக்குப் பெருமை சேர்ப்ப தாகுமா? குறைந்தபட்சம் ஆந்திராவில் பின்பற்றப்படும் அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று முதல் அமைச்சரைச் கேட்டுக் கொள்கிறோம்.

2012ஆம் ஆண்டில் தேர்வு எழுதியவர்களுக்குப் பொருந்தாதா?

2) இரண்டாவதாக 2012 ஜூலை, 2012 அக்டோபர் மாதங்களில் இரண்டு முறை தமிழ்நாடு ஆசிரியர் தேர் வாணையத்தால் தேர்வு நடத்தப்பட்டு, பல்லாயிரக் கணக்கானவர்கள் தேர்வு  எழுதியுள்ள நிலையில், முதல் அமைச்சர் அறிவிப்பு 2013 ஆகஸ்டு மாதத்தில் நடத்தப்பட்ட தேர்வுக்குத்தான் பொருந்தும் என்பது நியாயப்படியும் தவறு, சட்டப்படியும் தவறு - தவறேயாகும்!

நீதிமன்றம் சென்றால்...

ஒரே வகையான தகுதித் தேர்வில் 2012இல் தேர்வுக்கு  ஒரு அளவுகோல்; 2013இல் தேர்வு எழுதியவருக்கு இன்னொரு அளவுகோலா? 2012இல் தேர்வு எழுதியவர்கள் நீதிமன்றம் சென்றால் முதல் அமைச்சரின் அறிவிப்பு செல்லாததாகி விடாதா? 2012இல் தேர்வு எழுதியவர் களுக்கும் 55 சதவீத அளவுகோல் பொருந்தும் என்றுதானே தீர்ப்பு வெளிவரும்.

வெயிட்டேஜ் குளறுபடி!

ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று விட்டால் அவர்கள் பணியில் அமர்த்தப்படு வார்களா என்றால் அதுதான் இல்லை. வெயிட்டேஜ் மார்க்கு என்ற ஒன்று இருக்கிறது.
இடைநிலை ஆசிரியர் +2 தேர்வில் 50 மதிப்பெண் ணுக்குக் கீழ் பெற்றால் அவர்களுக்குக் கிடைக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் பூஜ்ஜியம்தான்.
அதேபோல பட்டதாரி ஆசிரியர் 50 மதிப்பெண் ணுக்கும் கீழ் மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களுக்குக் கிடைக்கும் மதிப்பெண்ணும் பூஜ்ஜியம் தான்.
மார்க்கை வைத்து வெயிட்டேஜ் கொடுக்கும் முறை வேறு எந்த மாநிலத்திலும் கிடையவே கிடையாது.

பட்டயமும் பட்டமும் பெற்றால் போதாதா?

அடிப்படைக் கல்வி தகுதி பெற்று,  அதற்குமேல் ஆசிரியர் பணிக்கான பட்டயமும்  (Diploma) பட்டமும் (Degree) பெற்று விட்டபிறகு, அவர்கள் ஆசிரியராகப் பணியாற்ற இவ்வளவு முட்டுக்கட்டைகள் தேவையா? என்பதைப் பற்றியும் முதல் அமைச்சர் சிந்திக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

பல்நோக்கு மருத்துவமனைப் பிரச்சினை

சென்னை ஓமாந்தூரார் தோட்டத்தில் பல்நோக்குச் சிறப்பு உயர் மருத்துவமனையில் பணி நியமனம் தொடர்பான பிரச்சினையிலும் சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் நேற்று வெளியிட்ட தகவலை முதல் நிலையில் வரவேற்கிறோம். இதுகுறித்து அரசு வெளியிட்ட விளம் பரத்தில்  (MRB) இடஒதுக்கீடு அறவே கிடையாது என்று குறிப்பிட்டு இருந்ததுதான் பிரச்சினைக்கே காரணமாக அமைந்தது (27.12.2013).

அடுக்கடுக்கான கழகத்தின் நடவடிக்கைகள்

சமூகநீதிக்கு எதிரான இந்த அறிவிக்கையைக் கண்டித்து முதன் முதலாக விடுதலையில் விரிவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தோம் (31.12.2013) மற்றொரு விரிவான அறிக்கை 16.1.2014 அன்று வெளியிடப் பட்டது. தொடர்ந்து தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களும் தமிழக அரசை எச்சரித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்கள் (3.1.2014) தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழ்நாடு அரசின் விளம்பரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்!

அடுத்தடுத்த நடவடிக்கைகளில் கழகம் இறங்கியது. அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகளின் கூட்டத்தை சென்னையில் பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் கூட்டினோம் (9.1.2014). அக்கூட்டத்தில் எடுத்த முடிவின்படி 13.1.2014 அன்று  சென்னை பெரியார் திடலில் அந்த சமூகநீதிப் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் கழகம் சிறப்புப் பொதுக் கூட்டத்தை நடத்தியது. திமுக தலைவர் கலைஞர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழ் மாநில பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர், இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அரசுப் பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி, பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் வீ. இராமகிருஷ்ணன் ஆகியோர் சமூகநீதிக் குரலை ஓங்கி ஒலித்தனர். தமிழ்நாடு அரசின் சமூக நீதிக்கு எதிரான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அது தொடர்பாக தி.மு.க. மாணவர் அணி சார்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் (21.1.2014) திராவிடர் கழக மாணவரணியும் பங்கேற்றது.
இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகே தமிழ்நாடு அரசு இப்போது இறங்கி வந்திருக்கிறது.

மொத்தம் 83 பணியிடங்களில் 28 மருத்துவர் பணியிடங்களைப் பொறுத்தவரை 17 பணி இடங்களுக்குத் தகுதியான மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனுபவம் வாய்ந்தவர்கள்; 10 மருத்துவர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவர்கள் ஆவர். இந்த 17 மருத்துவர்களில் 9 பேர் பிற்படுத்தப்பட்டவர், 4 பேர் மிகவும் பிற்படுத்தப்பட் டவர்கள், 3 பேர் ஆதி திராவிடர் வகுப்பினையும், ஒருவர் இதர வகுப்பினையும் சேர்ந்தவர்கள் ஆவர். மீதமுள்ள 11 இடங்களைப் பொறுத்தவரை விண்ணப்பத்தின் அடிப்படையில் தகுதியான நபர்கள் கிடைக்காத நிலையில், அரசு மருத்துவமனைகளிலிருந்து மாற்றுப் பணி மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல் அமைச்சர் அறிவித்துள்ளார்.

12.1.2014 நாளிட்ட ஒரு நீண்ட அறிக்கையில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும்போது இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டியதில்லை என்று வக்காலத்துப் போட்டு எழுதிய அதே முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள்தான்- இப்பொழுது இடஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் நடந்திருக்கிறது என்று சொல்லும் நிலைக்கு வந்துள்ளார். தவறை உணர்ந்து திருந்தியது வரவேற்கத்தக்கதே!

இதற்காக கழகமும், சமூக நீதியாளர்களும் மேற் கொண்ட பணிகளும் அழுத்தங்களும் சாதாரணமான வையல்ல - இந்தப் பிரச்சினையில் திராவிடர் கழகத்தோடு கைகோர்த்து நின்ற அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டு மண் சமூக நீதிமண் - தந்தை பெரியார் அவர்களால் பக்குவப்படுத்தப்பட்ட மண் - இந்தத் தன்மைக்கு எதிராக யாரும் காய்களை நகர்த்த முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு கிடையாது என்ற விளம்பரத்தால்...

அதே நேரத்தில் மருத்துவர்கள் நியமனம் தொடர்பான அறிவிக்கையில் இடஒதுக்கீடு கிடையாது என்ற சட்ட விரோத நிபந்தனை இடம் பெறாமல் இருந்திருந்தால், இன்னும் அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.

தகுதி - திறமை என்பதுதான் அதிமுக அரசின் கொள்கையா?

இதில் கடைசியாக தமிழ்நாடு அரசுக்குக் கழகம் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால், சட்டப் பேர வையில் கல்வி அமைச்சர் இடஒதுக்கீடு பிரச்சினைபற்றி கேள்வி எழும்போதெல்லாம் தகுதி, திறமை என்பதுதான் அரசின் கொள்கை என்று பல முறை அறிவித்திருப்பது -  இடஒதுக்கீடு கொடுத்தால் தகுதி - திறமை பாதிக்கப்படும் என்ற கருத்தை உள்ளடக்கமாகக் கொண்டதாக இருப் பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

சமூகநீதியில் இதுதான் அதிமுக அரசின் கொள்கையா என்ற வினாவை எழுப்பிடவும் விரும்புகிறோம்.

சமூகநீதிக்கு எதிரானவர்கள் நெடுங்காலமாகக் கூறிவந்த அதே கருத்தை அண்ணாவின் பெயராலும், திராவிட என்ற பெயராலும் கட்சியும், ஆட்சியும் நடத்து பவர்கள் சொல்லுவது அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி பெற்றவர்கள் - வேலை வாய்ப்பினைப் பெற்றவர்கள் - தங்களின் மகத்தான சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இனியாவது இந்தப் போக்கை அதிமுக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
             ----------------------கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் --"விடுதலை”
சென்னை  4.2.2014

20 comments:

தமிழ் ஓவியா said...


ஆரியர்கள்தான்


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.

_ (விடுதலை, 24.2.1954)

Read more: http://viduthalai.in/page-2/74662.html#ixzz2sOeKt4Jf

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை, பிப். 4- ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வழக் குரைஞர்கள் பழனிமுத்து, ஏ.ரமேஷ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப் பதாவது:

தேசியக் கல்வி ஆணைய விதி முறைப்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் எஸ்.சி, எஸ்.டி, பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கு மதிப்பெண் சலுகை அளிக்கவேண்டும். தமிழக அரசு எந்த சலுகையும் அளிக்கவில்லை. இது சட்டவிரோதமானது. எனவே உயர் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வழக்கில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து தீர்ப்பை தள்ளி வைத்தனர். இந்த நிலையில் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகையை இடஒதுக்கீடு அடிப்படையின் கீழ் தமிழக அரசு அளித்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக் கிறது, இருந்தாலும் தேசியக் கல்வி ஆணைய விதிமுறை முழுவதுமாக அமுல்படுத்த வேண்டும் என்று வழக்குரைஞர்கள் பழனி முத்து, ரமேஷ் ஆகியோர் கூறினர்.

Read more: http://viduthalai.in/page-2/74671.html#ixzz2sOf0JiY0

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் தகுதித் தேர்வு:
முதலமைச்சர் அறிவிப்பு மனிதநேய மக்கள் கட்சி கருத்து

மனிதநேய மக்கள் கட்சி ஜே.எஸ். ரிபாயீ அவர்கள் வெளியிடும் அறிக்கை:

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை யில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானம் தொடர்பான விவாதத்தில் பங்குக் கொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா பேசுகையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் டெட் என்னும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு தேர்வில் மதிப்பெண் சலுகை அளிக்க வேண் டும் என்று 15.11.2011இல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை 181இல் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாமல் 2012, 2013 ஆண்டுகளில் டெட் தேர்வுகள் நடத்தப்பட்டன. எனவே இடஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட வேண்டும் என்று அவர் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

நேற்று (3.2.2014) தமிழக முதல மைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவித்து பேசுகையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து இடஒதுக்கீடு பிரிவினருக்கும் 5 மதிப்பெண் சலுகை அளிக்கப்படும் என்று அறிவித்துள் ளார். இதனை மாற்றி பட்டியலின மக்களுக்கு 40 மதிப்பெண்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 45 மதிப்பெண்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 மதிப்பெண்கள் என்று திருத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது. 2013 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய வர்கள் மட்டுமின்றி 2012 ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்துவதாக அறிவிக்க வேண்டும். என்று மனித நேய மக்கள் கட்சி கோருகின்றது.

Read more: http://viduthalai.in/page-2/74671.html#ixzz2sOf8XzX6

தமிழ் ஓவியா said...


ஒற்றைப் பத்தி பற்றி


ஆசிரியருக்குக் கடிதம் >>>

ஒற்றைப் பத்தி பற்றி

30.1.2014 ஆம் நாளில் கலைஞர் தொலைக்காட்சியில் நாள்தோறும் ஒளிபரப் பாகும் பேராசிரியர் சுப.வீரபண்டியன் உரையாற்றும் நிகழ்ச்சியான ஒன்றே செய் நன்றே செய் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் ஒற்றைப் பத்தி எனும் தொகுப்பு வெளியீட்டின் சிறப்புகளைப் பற்றிய 2, 3 கருத்துக்களை மேற்கோள் காட்டிப் பாராட்டினார்.

இந்திய ராணுவ தளபதி பத்மநாபன் அவர்கள் இராகுகாலம் பார்த்த நிகழ்வுக்கு கவிஞர் அவர்கள் எடுத்துக் காட்டியுரைத்த கேள்வி என்னை மிகவும் நெகிழ வைத்தது. மெல்ல எறிந்து கடிதோச்சலாக இதை கொள்ளலாம்.

அதேபோல் நாள்தோறும் விடுதலை இதழ் அஞ்சலில் வத்தவுடன் ஒற்றைப் பத்தியைப் படிக்கத் தவறுவதேயில்லை. இதே இராகு வேளை செய்தியை இந்திய நாடு சுதந்திரம் வந்த புதிதில் நேரு அவர்கள் எப்படி கையாண்டார் என்பதை நினைக்கும் போது நேரு அவர்கள் பகுத்தறிவுக் கொள்கையை பாராட்டத் தோன்றுகிறது. இந்திய நாடு முதல் முதல் தயாரித்த கப்பலின் பெயர் ஜலஉஷா என்பது அதை கடலில் மிதக்க விடும் நிகழ்ச்சி விசாகப்பட்டினம் கப்பல் தளத்தில் நேரு அவர்களால் மிதக்கவிடப்பட ஏற்பாடு. ஏற்பாட்டாளர்கள் விழாவினை துவக்காமல் மெத்தனம் காட்டுவதாக நேருவுக்கும் படுகிறது. ஏன் தாமதம் என அருகிலிருப்பவரை கேட்கிறார். அவர்கள் மெல்லிய குரலில் இராகுவேளை தீரட்டும் என்று காத்து இருக்கிறார்கள் சில நிமிடங்களில் முடிந்துவிடும் என்றார்கள். ஆனால் நேருவோ நல்ல பணிகள் செய்வதற்கு இராகு வேளை குறுக்கிடுமா னால் அந்த இராகு வேளையையே தள்ளுங்கள் என்று கூறி கப்பலை மிதக்க விடுகிறார்.

ஆனால் விண்வெளிக்கு அனுப்பும் ஏவுகணைகளை சந்திராயன் ஆகியவற்றை அனுப்ப திருப்பதி கோயிலுக்கு மட்டும் போனால் சைவர்கள் கேள்வி கேட்க கூடும் என்ற காரணத்தால் காளஹஸ்தி கோயிலுக் கும் போய் அர்ச்சனை செய்கிறார்கள்.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றால் இந்துமதச் சார்பான கோயில்களுக்கு மட்டும் ஏன் போக வேண்டும்? நாம் தர்காவுக்கும், வேளாங்கண்ணி கோவிலுக்கும் போகாதது ஏன் என்று கேள்வியும் எழுந்தால் பதில் என்னவாக இருக்கும்?.

இதுபோல் தான் அப்போது எல்லாம் பள்ளிகளிலும், அரசு நிகழ்ச்சியிலும் கடவுள் வணக்கம் என்று பாடுவார்கள். பாடுபவர் தன்னுடைய சார்பு கடவுளைப் பற்றி தான் பாடுவது வழக்கமாக இருந்த நிலை. இது பலருக்கும் சரியாகப் படாத காரணத்தால் தான். கலைஞர் அவர்கள் இறை வணக்கம் என்பதையே மாற்றி தமிழ்த் தாய் வாழ்த்து என்று நீராரும் கடலுடுத்த என்ற அற்புதமான திராவிட என்ற சொல் இடையில் வரும்படியான பாடலைத் தேர்வு செய்து ஆணை பிறப்பித்தார் ஆக மொழி வாழ்த்தலும் கூட நாட்டு வாழ்த்தான ஜனகனமன பாடலில் வரும் திராவிட என்ற சொல்லை அழுத்தம் தரும் வண் ணம் ஆணையிட்ட கலைஞரின் ஆட் சியை இந்த சந்தர்ப்பத்தில் மனதில் நினைத்து மகிழ்வுறும்போது, இன்று நடப் பதைப் பார்த்து................. - வேலை.பொற்கோவன்

Read more: http://viduthalai.in/page-2/74675.html#ixzz2sOfKK2Zi

தமிழ் ஓவியா said...

பெரியார்தானே பேனாவைக் கொடுத்து குழந்தைகளைப் படி என்று சொன்னார்


சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழர் தலைவர் உரை

சென்னை, பிப். 4- பெரியார்தானே பேனா வைக் கொடுத்து குழந்தை களைப் படி படி என்று சொன்னார் என்றார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

17.1.2014 அன்று சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் கள் உரையாற்றினார்.

அவரது நேற்றைய உரை யின் தொடர்ச்சி வருமாறு:

வெள்ளி நாக்குப் படைத்தவர்

அண்ணா அவர்கள் கேட்டார், சில்வர் டங்டு ஆரேட்டர் வெள்ளி நாக்குப் படைத்தவர். யார் என்று கேட்டால், ரைட் ஆனரபிள் சீனுவாச சாஸ்திரி. அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக இருந் தவர். பெரியார் அவர்கள், துணைவேந்தர் ஒருவரை பாராட்டவேண்டும் என்று நினைத்து, அந்தப் பாராட்டு விழாவினை மிகப் பிரம் மாதமாக நடத்தவேண்டும் என்று சொன்னார்.

அந்தத் துணைவேந் தரிடம் நான் சென்று, அய்யா சொன்னதை சொன்னேன்.

உடனே அவர், கையெ டுத்துக் கும்பிட்டு, நாயனா கிட்டே சொல்லுங்கள்; (அய்யாவை அப்படித்தான் அழைப்பார்) இப்பவே, பார்ப்பான் தொல்லை அதிகமாக இருக்கிறது. பெரியார் பாராட்டினால் எனக்கு ரொம்ப சங்கடமாக இருக்கும்; என்னை தப்பாக நினைக்கவேண்டாம்; எனக்கு பாராட்டெல்லாம் வேண்டாம் என்று சொன்னார்.

ஏனென்றால், நாங்கள் பாராட்டுகிறோம் என்று சொன்னாலே, இந்த மேடைக்கு அவர்கள் வந் தாலே அதுவே மிகப்பெரிய துணிச்சல்.

அதேபோல், பாமரன் அவர்கள், மாணவப் பரு வத்திலே எனக்கு அறிமுக மானவர் அவர்.

தமிழ்மன்றம், பு.த.பொ. கலை அறிவியல் கல்லூரி; தன்னிலை, கோயம்புத்தூர்
சிறப்பு சொற்பொழி வாளர்: கி.வீரமணி எம்.ஏ. பி.எல்., ஆசிரியர், விடுதலை
தலைமை: மன்ற செயலாளர் த.எழிற்கோ
தலைப்பு: புதியதோர் உலகம் செய்வோம்
ஜி.ஆர்.டி. பேரரங்கம், நாள்: 20.10.1981.
புல்டோசர் எழுத்தாளர்
அந்த த.எழிற்கோதான் இந்த பாமரன்.

அவர் புல்டோசர் எழுத் தாளர். சகட்டு மேனிக்கு அந்த புல்டோசரை விடு வார். பேனாவை புல்டோ சரா சில பேர் நம் இயக் கத்திலும், இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களும் பயன்படுத்துவார்கள்.

நகர தூதன் ஆசிரியர், திருமலைச்சாமி அவர்கள். அவர் கம்பீரமாக மீசை வைத்திருந்தவர். அண்ணா வுக்கு ஆகஸ்ட் 15 பற்றி பதில் எழுதினவர். அய்யா திரு மணத்திற்கு, அண்ணா எழு தியதற்குப் பதில் எழுதியவர் திருமலைச்சாமி அவர்கள்.
தாக்கப்பட்டாலும் திரு மலைசாமியின் பேனாவி னால் தாக்கப்படவேண் டும்!

திருமலைச்சாமியைப்பற்றி கல்கி எழுதுகிறார்:

குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப் படவேண்டும்; தாக்கப் பட்டாலும் திருமலைசாமி யின் பேனாவினால் தாக் கப்படவேண்டும் என்று.

அதேமாதிரி இன்றைக்குச் சொல்லவேண்டுமானால், பாமரனுடைய பேனாவி னால் தாக்கப் படவேண்டும்.

பாராட்டுகின்றவர் களைக் கண்டுதான் நாம் பயப்படவேண்டுமே தவிர, விமர்சனங்களை வெளிப் படையாகச் சொல்லும் பொழுது பயப்பட வேண் டிய அவசியமில்லை. அது நமக்கு உரம் மாதிரி.

தமிழ் ஓவியா said...

அந்தி மழை என்கிற பத்திரிகையில், அக்டோபர் மாத இதழில், பெரியாருக்கு இது புரியாமல் போயிற்றே? என்ற தொடர் கட்டுரையை பாமரன் எழுதியிருந்தார். அதனை நான் படித்தேன். அந்தக் கட்டுரை நன்றாக இருந்தது என்று சாக்ரட் டீஸ் போன்ற நண்பர்களி டம் கூறினேன்.

திராவிடர் இயக்கம் என்பது மாறவில்லை

என்னிடம் சில செய் தியாளர்கள் கேட்பார்கள்; திராவிட இயக்கம் இன் றைக்கு மாறிவிட்டதே! பெரியார் கொள்கைகளை விட்டுவிட்டதே என்று.

அதற்கு நான், திராவிட இயக்கம் என்பது எது? திராவிட முன்னேற்றக் கழ கமா? இதிலிருந்து பிரிந்து போனவர்கள், அரசியல் ரீதியாக சென்ற வர்கள்; வாக்கு வங்கிக்காக கொள் கையில் சமா தானம் செய்து கொள்வார்கள். ஆனால், நாங்கள் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல் லையே, கடவுள் இல்லை என்றால், கடவுள் இல்லை தான். ஆனால், அவர்கள் அப்படி சொல்ல முடியாது என்பதால், ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்று சொன்னார்கள்.

அய்யா கேட்டார், தேவன் வந்தால், தேவி வந்துவிடுவாள்; அப்புறம் அவர்கள் குட்டி போடு வார்கள்; இப்படியே வரிசை யாக வந்து விடுமே என்று. ஆகவே, திரா விடர் இயக்கம் என்பது மாறவில்லை. பெரி யாருடைய கொள்கை என்ன? பதவிக் குப் போகக்கூடாது.

எல்லாருக்கும் எல்லாம்; அனைவருக்கும் அனைத் தும் என்று இமையம் அவர் கள் சொன்னாரே இங்கே!

தமிழ் ஓவியா said...

அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சுயமரியாதை இயக்கம்.

இங்கே பன்னீர்செல்வம் சொன்னாரே, இணைப்பது சமூகநீதி என்று.

அன்றைக்கு ஆரம்பித்த சமூகநீதி போராட்டம், பன் னீர்செல்வம் சமூகநீதிக்காகப் போராடியவர்; இன்றைக்கும் இந்த மேடையிலும் சரி சமூகநீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால், அது காலங் காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய தேவாசுர யுத்தம்.

அசுரர்கள் சங்கம் என்று ஆரம்பிப்பேன்

நேற்றுகூட ஒரு வழக்கு ரைஞர் சொன்னார்: நீங்க சரியா வரவில்லையென்றால், நான் வக்கீல்கள் சங்கத்தை என்ன பெயரில் ஆரம்பிப் பேன் என்றால், அசுரர்கள் சங்கம் என்று ஆரம்பிப் பேன் என்று சொன்னார்.

பாமரன் அவர்கள் எழு திய கட்டுரையில், அனேக அசடுகள் திராவிட இயக்கங் கள் என்பவை எவை? திரா விட கட்சிகள் என்பவை எவை? என எதுவும் புரியா மல், எப்படிப் புலம்பித் திரிகின்றன. திராவிடர் இயக் கத்திற்கும், திராவிட கட்சி களுக்கும் இடையில், பண் பாட்டுத் தளத்தில், செயல் பாட்டுத் தளத்தில் அணுகு முறையில் உள்ள எண் ணற்ற வேறுபாடுகள் எவை, எவை என்பது குறித்து போன இதழ் கட்டுரைக்கு, எதிர்பாராத திசையில் இருந்தெல்லாம் வரவேற்பைக் கண்டு கொஞ் சம் திக்குமுக்காடித்தான் போனேன் என்று எழுது கிறார்.

திராவிடப் பண்பாடு

அவருக்கு வரவேற்பு கிடைத்தாலே திக்குமுக் காடுவதுபோல்தான். ஏனென்றால், இதுவரையில் வசவுகள்தான் கிடைத்திருக் கும். ஆக, இப்படி ஒரு நல்ல கருத்தினை, சமுதாயத்திற்குத் தேவையான கருத்தினை எழுதியிருக்கிறார். அவருக்கு எந்தவிதமான ஆசாபாசங் களும் கிடையாது. எதிர் பார்ப்புகள் இருந்தால்தானே வளையவேண்டும்; நெளிய வேண்டும் என்று சொல்வ தற்கு. அய்யா அவர்கள் எதற் கும் வளைந்துகொடுக்கவில் லையே - காரணம் என்ன? அவர் எதையும் வேண்டாம் என்கிற முடிவில்தான் இருந்தார்; அந்த முடிவினை கடைசி வரைக்கும் பின் பற்றினார் அய்யா. நாங்கள் பெரியாருடைய வாழ்நாள் மாணவர்கள்; எங்களுக்கும் அதே கொள்கைதான். எங் களுக்கு வாழ்நாளில் ஒரே பெருமை, பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண் டோம்; பெரியாருடைய கொள்கையினால் நாங்கள் செதுக்கப்பட்டோம். எத் தனை பேர் பாராட்டுகிறார் கள் என்பது முக்கியமல்ல; எத்தனை பேர் வைகிறார்கள் என்பது முக்கியமல்ல; நெஞ்சில் நினைப்பதை வெளியில் பேசுபவர் சுயமரியாதைக் காரர்; எதைப் பேசுகிறோமோ, அதைத்தான் செய்கிறோம்; எதை செய்கிறோமோ அதைத் தான் பேசுகிறோம். இந்தத் தத்துவத்தைவிட மிகச்சிறந்த வாழ்க்கை வேறு என்ன இருக்கமுடியும்? நீங்கள் நினைத்துப் பார்க்கவேண் டும். இதுதான் திராவிடப் பண்பாடு.
இறுதியாக ஒன்றை சொல்லி நிறைவு செய்ய விரும்புகிறேன்.

புரட்சிக்கவிஞர் வரிகள்

பன்னீர்செல்வம் அவர் களைப்பற்றி இங்கே அழ காக சொன்னார்கள். கடைசி யாக பன்னீர்செல்வம் அவர் கள், சிங்கத்தை நரியடிக்கும் திறனில்லை என்று சொன் னால், சிங்கம்தான் பொங் குற்றே இறந்ததென்றால், நரிமனம் பூரிக்காதோ என்று புரட்சிக்கவிஞர் எழுதினார்.

தமிழ் ஓவியா said...


இன்னொரு பாடல், தன் தோளுக்கு இட்ட மலர் தன்னை, தாளுக்கு வைத்த தலைவன் என்று புரட்சிக் கவிஞர் எழுதிவிட்டு,

ஏன் தலைவா என்று சொல்லிவிட்டால், தாழை மட்டை, முருங்கைமுலா, பேயத்தி, கொம்பெல்லாம் தான் தலைவன், தான் தலைவன் ஆடுகின்ற காலத் தில் என்று.

தந்தை பெரியார் அவர் கள் எப்பொழுதும் கலங் காதவர்; அப்பேர்ப்பட்டவர் கலங்கும்பொழுது என்ன சொல்கிறார் என்றால், பன்னீர்செல்வத்தினுடைய உழைப்பு எப்பேர்ப் பட்டது என்பதைப்பற்றி, மார்ச் 17, 1940 ஆம் ஆண்டு குடிஅரசில் எழுதியிருக்கிறார். அனுதாப உரை - இரங்கல் உரையை எழுதியிருக்கிறார். அன்னை நாகம்மையார் அவர்கள் மறைந்த பொழுது அய்யா அவர்கள் எழுதியது அற்புத மான ஒப்பிடப்பட முடியாத ஒரு இரங்கல் இலக் கியம்.

அதேமாதிரி, பன்னீர்செல் வம் அவர்களைப் பற்றி எழுதியது இருக்கிறது பாருங் கள், அது சாதாரணமான தல்ல. அதை நினைவூட்டி னாலே என்னுடைய உரையை முடிக்கலாம்.

அய்யாவின் இரங்கலறிக்கை

பன்னீர்செல்வம் வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஏன் அவருடைய 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா வினை கொண்டாடுகிறோம்? அதனால் என்ன சிறப்பு?

தமிழ் ஓவியா said...

திராவிடர் தளபதி என்றுதான் பன்னீர் செல் வம் அவர்களை அழைப்பார் கள்.

அய்யா எழுதுகிறார் பாருங்கள்:

நம் உண்மைத் தோழரும், உற்ற துணைவரும், உள்ளும் புறமும் ஒன்றாய் உள்ளவரும், தமிழர் இயக்கத்தில் உறுதி யான பற்றுக் கொண்டு, அல்லும்பகலும் உழைத்து வந்தவரும், நம்மிடத்தில் களங்கமற்ற அன்பும், பற்றுதலும், விசுவாசமும் கொண்டிருந்த வரும், நினைத்தால் திடுக்கிடும்படி எதிரிகள் நெஞ்சில் எப்பொழு தும் திகிலை உண்டாக்கிக் கொண்டிருந்தவருமான அருமைப் பன்னீர்செல்வம் அவர்களை, இன்று காலஞ் சென்ற பன்னீர்செல்வம் என்று எழுத நேரிட்டதற்கு மனம் பதைக்கிறது. நெஞ்சு திக்திக் என்று அடித்துக் கொள்கிறது. மெய் நடுங்கு கிறது. எழுதக் கை ஓட வில்லை. கண் கலங்கி மறைக்கிறது. கண்ணீர் எழுத்துக்களை அழிக்கிறது. பன்னீர்செல்வத்திற்கு பாழும் உத்தியோகம் வந்த தும் போதும், அது அவர் உயி ருக்கே உலையாய் இருந்த தும் போதும். தமிழர்களை பரிதவிக்கவிட்டுவிட்டு மறைந்துவிட்டார். இந்த உத்தியோகம் ஏன் வந்தது என்றே, ஒவ்வொரு விநாடி யும் தோன்றுகிறது. அவருக்கு அடுத்தாற்போல், யார்? யார்? என்று மனம் ஏங்குகிறது. தேடுகிறது - தேடித்தேடி ஏமாற்றம் அடைகிறது.

என் மனைவி முடி வெய்தியபோதும், நான் சிறி தும் கலங்கவில்லை; ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்க வில்லை. என் தாயார் இறந்த போதும், இயற்கை தானே, 95 வயதிற்குமேலும் மக்கள் வாழவில்லையே என்று கரு தலாமா? இது பேராசை யல்லவா என்று கருதினேன். 10 வயதிலேயே லண்டனுக்கு அனுப்பி, படிக்க வைத்த ஒரே அண்ணன் மகன், படித்து விட்டு, இந்தியா வந்து சேர்ந்து, சரியாக 20 வயதில் இறந்துபோனதற்காக பதறவில்லை; சிதறவில்லை. பன்னீர்செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகிறது. தமி ழர்களைக் காணுந்தோறும், காணுந்தோறும், தமிழர் நிலையை எண்ணுந்தோறும், எண்ணுந்தோறும் நெஞ்சம் பகீரென்றது, பகீரென்கிறது. காரணம், முன்சொல் லப்பட்ட, மனைவி, தாயார், குழந்தை ஆகியவர்கள் மறைவு என் தனிப்பட்ட சுக துக்கத்தைப் பொறுத்தது; தன்னலம் மறையும்பொ ழுது, அவர்களின் மறைவின் நிகழ்வும் மறைந்துபோகும்; பன்னீர்செல்வத்தின் மறைவு பொதுநலத்தைப் பொறுத் தது. எனவே, தமிழர்களைக் காணுந்தோறும், நினைக் குந்தோறும் பன்னீர்செல்வம் ஞாபகத்திற்கு வருகிறார். இது என்று மறைவது? இவருக்குப் பிறகு யார் என்றே திகைக்கிறது. பாழாய்ப் போன உத்தியோகம் சர்க்கரைப் பூசிய நஞ்சுருண்டை குத்திய தூண்டில் முள்ளாய் இருந்துவிட்டது; அம்முள் ளில் பட்ட மீனாக ஆகிவிட் டார் செல்வம். இனி என்ன செய்வது? தமிழர் இயக்க மானது தோன்றிய நாள் முதல் இப்படியே பல தத்து களுக்கு ஆளாகி வந்திருக் கிறது என்றாலும், நாளுக்கு நாள் முன்னேறியே வந்திருக் கின்ற அனுபவம்தான், நமக் கும், தமிழ் மக்களுக்கும் சிறிது ஆறுதல் அளிக்கும் என்று கருதுகிறேன். காலஞ் சென்ற பன்னீர்செல்வமே, காலம் சென்றுவிட்டாயா? நிஜமாகவா! கனவாகவா! தமிழர் சாந்தி பெறுவாராக!

தமிழ் ஓவியா said...

அய்யா அவர்கள், இப் படி ஒரு இரங்கலறிக் கையை தன்னுடைய வாழ்நாளில் யாருக்கும் எழுதவில்லை.

பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இதுதான் இலக்கணம். தன்னலம் என் றால் என்ன? எப்பொழுது துக்கம் இருக்கும்? பொது நலம் என்று வந்தால், அதனு டைய துக்கம் மாறாதது; தன்னலம் என்றால் மாறக் கூடியது. எவ்வளவு அழகான இலக்கணத்தை சொல்லி யிருக்கிறார் அய்யா.

எனவே, அப்படிப்பட்ட பன்னீர்செல்வம் அவர்கள், நம்முடைய இயக்கத்தில் தளபதி அழகிரி அவர்களைப் போல, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெரியார் தொண் டர். பெரியாரையே மூச்சுக் காற் றாகக் கொண்டவர்கள். பெரியார்மீது அவர்கள் காட்டிய விசுவாசம் என்பது கடைசி நிலை வரையில் இருந்தது. எனவே, அவரு டைய 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், நாம் சமூகநீதிக்காக உழைப்பதை ஒரு சூளுரையாக ஏற்றுக் கொள்வோம் என்பதுதான், அவர் விட்ட பணிகளை நாம் செய்வதற்குரிய வாய்ப்பு.

தமிழ் ஓவியா said...

அதுபோலவே, அலங்கா நல்லூர் கலைக்குழுத் தோழர்கள், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களை, ஜாதியின் பெயரை சொல்லி ஒதுக்கு கிறார்கள். அவர்களுடைய உழைப்பு அற்புதமான உழைப்பு. இங்கே கலை நிகழ்ச்சி களை அந்தப் பிள்ளைகள் என்ன அற்புதமாக, எவ்வ ளவு நேரம் இங்கே நடத்திக் காட்டினார்கள். அவர்களின் உடல்களில் வேர்வைத் துளிகள் இருந்தது. அதனை வேர்வைத் துளிகளாகப் பார்க்கவில்லை; வேர்வை முத்துக்களாகத்தான் நான் பார்க்கிறேன். ஆழ்கடலில் மூழ்கி எடுக்கும் முத்துகளை எப்படி அணிந்தால் பெருமை ஏற்படுமோ, அதேபோல் நீங்கள் தொலைத்ததை எல்லாம் நாங்கள் மூழ்கி எடுத்துக் கொண்டு வந்திருக் கிறோமே, நீங்கள் ஒடுக்கி விட்டீர்களே, இன்றைக்குப் புரிந்துகொள்ளவேண் டாமா? என்று அந்தப் பிள்ளைகள், அதுவும் பெண் பிள்ளைகள், ஆண்களுக்குச் சமமாக அல்லது மேலாக மிகப்பெரிய அளவிற்கு இங்கே கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினார்கள்.

அவர்கள் எல்லாம் என்ன படித்திருக்கிறார்கள் என்று நான் கேட்டேன்;

நா.பாரதி பி.எஸ்சி., தன லட்சுமி பி.எஸ்சி., மதுசுந்தரி பிளஸ்-_1, யமுனா பிளஸ்-_2, லீலா பிளஸ்-_1, ச.திவ்யா 9ஆம் வகுப்பு, வசந்தி 7ஆம் வகுப்பு, புனிதா 10ஆம் வகுப்பு, சவுமியா 8ஆம் வகுப்பு, தீனா 10ஆம் வகுப்பு, பாடகர் எலிசபத் வார்டு உறுப்பினர், தேவி வார்டு உறுப்பினர், சதானந் தம் தவில் கலைஞர், துணைத் தலைமை ஆசிரியர், எம். எஸ்சி., பி.எட்., மனோ கரன் ஒருங்கிணைப்பாளர்.
நம் ஆள்களுக்கு இதை விட என்ன வேண்டும்? தகுதி, திறமை என்று கேட் கிறார்கள், முட்டாள்கள். இதைவிட தகுதி யாருக் காவது உண்டா? இதை மாற்றினால் நீ தாங்குவாயா?

தூங்கும் தமிழனை பறை கொண்டு எழுப்பினோம்!

என்னுடைய தாய்மார் கள், சகோதரிகள், இளை ஞர்கள் எல்லாம் இன்றைக்கு எப்படி வளர்ந்திருக்கிறார் கள்; தூங்கும் புலியை, பறை கொண்டு எழுப்பினோம்; தூங்கும் தமிழனை பறை கொண்டு எழுப்பினோம் என்று புரட்சிக் கவிஞர் சொன்னாரே!

பறை என்றால் என்ன? நாங்கள் பெரியார் திடலில் பயிற்சி கொடுத்தோம்.

ஒரு காலத்தில் பறை இசையை சாவு மேளம் என்று சொன்னார்கள். சென்னையில் பார்த்தால், இறந்து போனவர்கள் வீட் டில் டான்ஸ் ஆடுவார்கள். வேடிக் கையான கலாச்சாரம்.

இன்றைக்கு பாருங்கள், பாடல்கள், இசை மிக அரு மையாக இருந்தது. நன்றாக அவர்கள் வளரவேண்டும், வாழ்த்துக்கள். நம்முடைய இயக்கம் அவர்களுக்கு என்ன வகையில் உதவ முடியுமோ அவ்வளவையும் செய்வோம். நமக்கு உறவு என்பது ரத்த உறவல்ல; கொள்கை உறவுதான். இது பெரியாரின் கொள்கைக் குடும்பம்.

இந்தப் பிள்ளைகள் எல்லாம் ஒரு காலத்தில் வெளியில் வர முடியாத சூழ்நிலை இருந்தது. திரை போட்டு மறைத்தார்கள். ஆனால், இன்றைக்கு அந்த நிலைமை இல்லை.

பெரியார்தானே பேனா வைக் கொடுத்து, படி என்று சொன்னார்

இங்கே உரையாற்றும் பொழுது சொன்னார்களே, எனக்கு எங்க அப்பா படிப்பை கொடுக்கவில்லை, பெரியார்தான் படிப்பை கொடுத்தார். அது, மிகவும் சரியானதுதான். அப்பா என்ன செய்திருப்பார்? சோற்று மூட்டையை கொடுத்து, ஆடு, மாடு வாங்கிக் கொடுத்து மேய்த்துக்கொண்டு இரு என்றுதானே சொல்லியிருப் பார். பெரியார் தானே பேனாவைக் கொடுத்து, படி என்று சொன்னார். எனவே, சமுதாய மாற் றம் என்பது ஒரு துளி ரத்தம் சிந்தாமல் பெரியார் அதனை சாதித் திருக்கிறார். உலகத்தில் இதற்கு நிகரான ஒரு பண் பாட்டு புரட்சி வேறு எதுவும் கிடையாது.

பெரியார் உலகம்!

ஆகவே, இந்த நிகழ்ச்சி மிக அற்புதமான ஒரு நிகழ்ச் சியாகும். உங்கள் அனைவருக் கும் நன்றியை கூறி, எங்க ளுடைய அன்பான அழைப் பினை ஏற்று, இங்கே பெரி யார் விருது பெற்றவர்களுக் கும், இந்தப் பெரியார் உரு வம் இருக்கிறது பாருங்கள், அதற்கு என்ன அடையாளம் என்றால், 40 அடி பீடம், 95 அடி உயர பெரியார் சிலை திருச்சி சிறுகனூரில் பெரி யார் உலகம் உருவாக்கப்பட இருக்கிறதே, அதன் அடை யாளமாகத்தான் அவர்கள் எல்லோருக்கும் இங்கே கொடுக்கப் பட்டது.

ஆகவே, அதனைப்பற்றி அவர்கள் எழுத வேண்டும்; மற்றவர்களுக்கும் அதனைப் பற்றி சொல்லவேண்டும். அதனுடைய அடையாளம் அவர்களுக்கும் புரியவேண் டும் என்று சொல்லி, அனை வருக்கும் நன்றி தெரிவித்து, இன்னும் கலை நிகழ்ச்சி தொடரவிருக்கின்றது; வாய்ப்பிருக்கின்ற வர்கள் இருந்து கேட்கவேண்டும் என்று சொல்லி, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தோழர்கள் அனை வருக்கும் மனமார்ந்த நன்றியை சொல்லி, பொங் கலோ பொங்கல், தமிழ் புத்தாண்டு வாழ்க, வளர்க!
நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-4/74647.html#ixzz2sOfpRaGb

தமிழ் ஓவியா said...


புறப்படுகிறார்கள் கோயபெல்சுகள் உஷார்!

இணைய தளத்தில் நரேந்திர மோடியின் செல்வாக்கை அதி கரிக்கச் செய்ய புதிய திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல்பட விருக்கின்றனர். இதற் கான ஆலோசனைக் கூட்டம் ஒன்று சென் னையில் நடத்தப்பட் டுள்ளது. தொழில் நுட்பப் பொறியாளர் கள் 350 பேர் கூட்டப் பட்டுள்ளார்கள். பி.ஜே. பி.யின் சென்னைத் தலைமை அலுவலகத் தில் இதற்காகத் தனி அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளி வந்துள்ளன.

சுருக்கமாகச் சொல் லப்போனால், புளுகு களைக் கட்டவிழ்த்து விட கோயபல்சுகள் திட்டம் தீட்டிவிட்ட னர் என்றே கருதவேண் டும்.

இதற்கு முன்பேகூட இணைய தளத்தில் மோடியுடன் தொடர்பில் உள்ளவர்கள் 19 லட்சம் என்று ஒரு கதையைக் கட்டிவிட்டனர்.

இந்தியாவின் முன் னணி செய்தித் தொலைக் காட்சி நிறுவனமான ஹெட் லைன்ஸ் டுடே - மோடியின் டுவிட்டர் சமூக வலை தளக் கணக் கில் இணைந்துள்ளவர் களில் 70 சதவிகிதப் பெயர்கள் போலியானவை என்று அம்பலப்படுத்தி விட்டதே!

2013 ஜூன் மாதத்தில் உத்தரகாண்ட் வெள்ள அபாயத்தில் சிக்கிய 15,000 குஜராத்திகளை வெள்ளத் திலிருந்து நரேந்திர மோடி காப்பாற்றிவிட் டார் என்று கிளப்பி விடவில்லையா?

இராணுவத்தினரே மீட்புப் பணியில் பெரும் இடர்ப்பாடுகளைச் சந் தித்த நிலையில், 80 இன்னோவா கார்களைப் பயன்படுத்தி 15 ஆயிரம் பேர்களை மோடி காப் பாற்றினாராம், நம்புங்கள், கேழ்வரகில் நெய் வடி கிறது!

அதிகபட்சமாகப் போனால், ஓர் இன் னோவா காரில் 7 பேர் களை ஏற்றலாம்; வேண்டு மானால், இரண்டு பேர் களை அதிகமாக ஏற்றிச் செல்லலாம். 80 கார்கள் டேராடூனிலிருந்து ஒரு தடவைக்கு 720 பேர் களைத்தான் கொண்டு செல்ல முடியும். 15 ஆயி ரம் பேர்களை மலைப் பகுதியிலிருந்து கீழே கொண்டு போகவும், வரவும் 21 தடவைகள் பயணிக்கவேண்டும்.

கேதார்நாத்திலிருந்து டேராடூன் 221 கிலோ மீட்டர் தூரமாகும். 21 முறை என்று கணக்கிடும் பொழுது ஒவ்வொரு காரும் சுமார் 9300 கிலோ மீட்டர் பயணிக்கவேண் டும், அதுவும் மலைப் பகுதிகளில்.

சராசரியாக மணிக்கு 40 கிலோ மீட்டர் என்று வைத்துக்கொண்டாலும் கூட 233 மணிநேரம் பயணம் செய்யவேண்டும்.

இந்தச் சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான அள வில் அல்லாடிக் கொண் டிருக்கும் மக்களில் குஜ ராத் மக்களை அடை யாளம் கண்டு, தேடிக் கண்டுபிடித்துப் பத்திர மாகக் கொண்டு வந்து சேர்த்தாராம், மற்ற மாநில மக்களைப் பார்த்து எப் படியோ தொலைந்து போங்கள் என்று சொல்லி அவர்களை விட்டுவிட்டு வந்துவிட்டாரா மோடி என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (23.6.2013) அம்பலப்படுத்தியதை நினைத்துப் பாருங்கள். ஒரே நாளில் 15,000 பேர் களை மீட்டதாகக் கூறு வது அண்டப் புளுகு ஆகாயப் புளுகுதானே!

இப்பொழுது இளைஞர்களை மயக்க, ஈர்க்க இணையதளத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்; அதற்காகக் கைதேர்ந்தவர்களை வலை போட்டுத் தேடிப் பிடிக்கிறார்கள்.

சீனாவில், குவாங்ஜோ என்னும் நகரில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தை குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் உள்ள தாக இணைய தளத்தில் வெளியிட்ட கோயபல்சு கள் வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட்டுவிட் டனர்!

உஷார்!! உஷார்!!

- கருஞ்சட்டை

Read more: http://viduthalai.in/e-paper/74713.html#ixzz2sUm2V3Ab

தமிழ் ஓவியா said...

காந்தியார் கொலை யுண்டதை அடுத்து அதில் ஆர்.எஸ்.எஸ் நேரடித் தொடர்பு இருப்பது நிரு பணமானது இதனை அடுத்து உள்துறை அமைச்சர் சர் தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று அறிவித்து தடை செய்த நாள், இந்நாள்! (1948)

Read more: http://viduthalai.in/e-paper/74698.html#ixzz2sUmC4RZ4

தமிழ் ஓவியா said...


ஆட்சியின் சீர்திருத்தம்



ஆட்சியின் சமுதாய சீர்திருத்தப் பணியென்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் தகுதியின்மை என்று சொல்லும்படியான எந்தத் தன்மையையும் ஒழித்து உச்சத் தகுதிக்கு அருகர்களாக ஆக்குவதையே முதல் பணியாகக் கொள்வதுதான்.

- (விடுதலை, 24.1.1969)

Read more: http://viduthalai.in/page-2/74716.html#ixzz2sUmZSjoT

தமிழ் ஓவியா said...


நாடாளுமன்றத்தை நடத்தவிடுக!


இன்று (5.2.2014) நாடாளுமன்றம் கூடுகிறது. 15 ஆவது நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டம் இது. 16 ஆவது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அடுத்து நாடாளுமன்றம் கூடும். இன்று கூடும் நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை பல முக்கிய மசோதாக்கள் நிறைவேறும் - நிறைவேறவும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்துகளை எடுத்து வைக்கவும், விவாதிக்கவும் வாய்ப்பு அளிக்கப்படவேண்டும். அதற்கு மாறாக தங்களுக்கு மாறுபாடானது என்பதற்காகவோ, உகந்ததாக இல்லை என்பதற்காகவோ நாடாளுமன்றத் தையே நடத்தவிடாமல் அமளியில் ஈடுபடுவது ஜன நாயகப் பண்பிற்கு உகந்ததல்ல. பல கூட்டத் தொடர்கள் முற்றிலும் முடக்கப்பட்ட மோசமான நிலைகள் எல்லாம் உண்டு. நாடாளுமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எடுத்துக் கூறுவதற்கான மன்றம் என்பதை மக்கள் பிரதிநிதிகள் மறந்துவிடக் கூடாது.

நாடாளுமன்றம் முடக்கப்படுவதால், பொன்னான நேரம் மட்டுமல்ல, மக்கள் பணமும் விரயமாக்கப்படுகிறது என்பதையும் புறந்தள்ளக்கூடாது. 15 ஆவது நாடாளுமன்றத்தின் இந்த இறுதிக் கூட்டத் தில் பல முக்கியமான பிரச்சினைகள் பேசப்பட்டாக வேண்டும்; முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

1. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம்

2. பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு

3. ஜெனீவாவில் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவர விருக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்பதோடு இந்தியாவே தனியொரு தீர்மானத்தை இலங்கைக்குக் கொண்டு வருவதுபற்றி முடிவு செய்தல்

4. தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற் படையால் தாக்கப்படுவதற்கு நிரந்தர முடிவு

5. கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான அடிப்படை உரிமைக்கான உத்தரவாதம்

6. தனித் தெலங்கானா பிரச்சினை

7. உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு என் பதற்கான சட்டத் திருத்தம் என்பது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

இதில் பெரும்பாலானவை பெரும்பான்மையான கட்சி களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவைதான். இதில் உடன்பாடில் லாத கட்சிகள் விவாதங்களை முன்வைத்து வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கலாமே தவிர, நாடாளுமன்றத்தையே முடக்கும் வேலையில் ஈடுபடக் கூடாது.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப் படுகின்றன. வாக்களிக்கும் வெகுமக்களும் அவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை மக்கள் பிரதிநிதிகள் மறந்துவிடக் கூடாது.

நாடாளுமன்றத்தில் எவ்வளவுதான் ரகளைகள் நடந்தாலும், பேரவைத் தலைவராக இருக்கக் கூடியவர்கள் அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதில்லை. உறுப்பினர் களை வெளியேற்றுவதில்லை; தொடர் முழுவதும் அவைக்கு வரக்கூடாது (Suspension)என்று கட்டளைகள் பிறப்பிக்கப்படுவதில்லை. இவையெல்லாம் சர்வசாதாரண மாகக் காணப்படும் ஒரு மாநில சட்டமன்றம் உண்டு என்றால், அது தமிழ்நாட்டுச் சட்டமன்றம்தான் - அதுவும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடக்கும்போதுதான்.

ஆளும் கட்சியைப்பற்றி ஒரு வார்த்தை குறை கூறினால்கூட பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு மனநிலை ஆளும் கட்சியிடம் இருப்பதை அனேகமாக நாட்டு மக்கள் பெரும்பாலும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் எடுக்கும் நடவடிக்கை அளவுக்குச் செல்லாவிட்டாலும், அளவுக்கு மீறி, அவையையே நடத்த முடியாத அளவுக்கு கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள்மீது குறைந்தபட்ச நடவடிக்கைகளையாவது எடுத்து, மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் எட்டப்பட தனது அதி காரத்தை நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் பயன்படுத்துவதுபற்றி யோசிக்கலாமே!

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் கலந்து ஆலோசித்து, அவர்கள் ஒத்துழைப்புத் தருவதாகக் கூறும் வாக்குறுதிகளை நம்பி, மக்களவைத் தலைவர் ஆசனத்தில் அமர்ந்தாலும், அமளி என்பது அரங்கேறிக் கொண்டுதானிருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் என்பவர்களிடத்திலேயே ஒழுங்கு, கட்டுப் பாடு இல்லையென்றால், பொதுமக்களிடம் அவற்றை எப்படி எதிர்ப்பார்க்க முடியும்?

Read more: http://viduthalai.in/page-2/74718.html#ixzz2sUmhswuc

தமிழ் ஓவியா said...


செய்தியாளர்களிடம் கலைஞர் திருப்பிக் கேட்ட கேள்வி



சென்னை, பிப்.5 தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை செய்தி யாளர்கள் நேற்று சந்தித்து கேள்வி கேட்ட போது, அவர்களிடம் கலைஞர் திருப்பிக் கேட்ட கேள்வி. சுவையானது. பேட்டி இதோ: கலைஞர் :- உங்களுக்கு என்ன வேண்டும்?
செய்தியாளர் :- இன்று ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பிரசாந்த் பூஷன் அவர்கள் அளித்த பேட்டி யில், காவல் துறை அதிகாரி ஜாபர் சேட் பேசிய டேப்பை வெளியிட்டிருக் கிறார். கலைஞர் தொலைக் காட்சியின் எம்.டி. சரத்கு மார் ரெட்டி, ஆவணங் களையெல்லாம் திருத்தி யிருக்கிறார் என் றெல்லாம் சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- எல்லாம் பொய்! நீங்களும் செய்தி யாளர்கள் தானே?

செய்தியாளர் :- உங்கள் மீது குற்றச்சாட்டு சொல்லி யிருக் கிறாரே?

கலைஞர் :- நீங்கள் எல்லாம் செய்தியாளர்கள் தானே? சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்று நடைபெறு கிறதே! அதிலே சம்பந்தப் பட்டவர்களிடம் சென்று நீங்கள் இவ்வாறு கேள்வி கேட்க முடியுமா? முதல் அமைச்சரைச் சென்று இதைப் போல நீங்கள் காண முடியுமா? பவானி சிங் என்ற வழக் கறிஞரே தொடர வேண்டு மென்று கேட்பது முறையா என்று யாராவது கேட்டீர்களா? அவர் குற்றவாளிக்கு எதிராக வாதாட வேண்டி யவர், ஆதரவாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே, அதைப் பற்றியெல்லாம் யாராவது கேட்டீர்களா? ஜெயா தொலைக் காட்சி செய்தியாளர் :- உங்கள் மீது ஒரு குற்றச் சாட்டு கூறும்போது, மற்ற வர்கள் மீது குற்றஞ் சாட்டுவது சரியா?

கலைஞர் :- தமிழ் நாட்டில் ஒரு சில செய்தி யாளர்கள் இப்படி நடந்து கொள்கின்ற காரணத் தினால் - அவர்களின் கலாச் சாரம் இந்த அளவிற்கு ஆகி விட்டதால் நான் இதைக் கேட்க நேர்ந்தது.

ஜெயா தொலைக் காட்சி செய்தியாளர் :- நீங்களும் ஒரு நிருபராக இருந்தவர் ஆயிற்றே, இப்படி சொல்லலாமா?

கலைஞர் :- அதனால் தான் இதுவரை உங்களை மதித்து நடந்து கொண்டு வருகிறேன். இப்போதும் மதிக்கிறேன். அதனால் தான் அங்கே நின்று கொண்டிருந்த உங்களை யெல்லாம் அருகே அழைத்துப் பேசுகிறேன்.

செய்தியாளர் :- தமிழக டி.ஜி.பி. ராமானுஜம் அவர் களின் பதவிக்காலத்தை நீட்டித்திருக்கிறார்களே, என்ன காரணம்?

கலைஞர் :- அது பற்றி எனக்குத் தெரியாது.

செய்தியாளர் :- மூன் றாவது அணியின் சார்பில் ஜெயலலிதா இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அவர் வெற்றி பெற்றால் பிரதமர் ஆவார் என்றும் சொல்லப் படுகிறதே?

கலைஞர் :- ஆனால் சந்தோஷம்!

Read more: http://viduthalai.in/page-3/74750.html#ixzz2sUn8lZvQ

தமிழ் ஓவியா said...


தினமலருக்குப் பதிலடி

சக மனிதனை தொட்டால் தீட்டு என, சொன்னவர்களும்; செருப்புப் போட்டு கீழ் ஜாதிக்காரன் நடக்கக் கூடாது என, சொன்னவர்களும்; ஆத்திகரா, நாத்திகரா? அனைவருக்கும் பொதுவானவர் கடவுள்' எனக் கூறிக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களை, கோவிலுக்குள் விடாமல் தடுத்தவர்கள், ஆத்திகரா, நாத்திகரா? கோவிலுக்குள், தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையப் போராட்டம் நடத்தியவர்கள் ஆத்திகரா, நாத்திகரா? இதிகாசம், புராணங்களை மட்டும் வைத்துக் கொண்டுள்ள தமிழை, காட்டுமிராண்டி மொழி என்றார் ஈ.வெ.ரா. பெரியார் அவர்தான் கணினியில் தமிழைப் பயன்படுத்தும் அளவுக்கு எழுத்து சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர்.

வைக்கம் போராட்டத்தை நிறுத்தி விடுங்கள் என, ஈ.வெ.ரா., பெரியாருக்கு கடிதம் எழுதியவர் காந்தியடிகள். ஆனால், அதை ஏற்காமல் போராட்டத்தைத் தொடர்ந்து, வெற்றி கண்டார் ஈ.வெ.ரா. பெரியார், 'வைக்கம்' போராட்ட வரலாறு அறிந்தவர்களுக்கு தான், இது தெரியும். நாட்டில் உள்ள அனைத்து ஜாதிகளுக்கும் இடஒதுக்கீடு இருந்தது. ஆனால், சண்பகம் துரைசாமி என்ற பார்ப்பான், தன் மகளுக்கு அனைத்து தகுதியும் இருந்தும், மருத்துவக் கல்வி சேர்க்கை கிடைக்கவில்லை என, பொய்யான வழக்கை, தொடர்ந்தார்.

இந்த வழக்கின் மூலம் தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நீக்கப்பட்டது. இதன்பின், ஈ.வெ.ரா., நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இடஒதுக்கீடு என்பது, செயினை பறித்துச் செல்லும், திருடனிடம் அதை மீட்பது போன்றது.

குறிப்பிட்ட சமூகங்களுக்குக் கல்வியும், வேலைவாய்ப்பும் பல ஆண்டுகாலம் மறுக்கப்பட்டதால், அவர்களையும், பிற சமூகத்தினரைப் போல, சமத்துவப்படுத்த இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதன்மூலம், சமூகநீதியை நிலைநாட்டி, சமூகங்களுக்கு இடையே உள்ள இழிவைப் போக்குவதே நோக்கம். இதைத் தான் ஈ.வெ.ரா. பெரியார் செய்தார்.

பாமரன், எழுத்தாளர்
(தினமலர், 5.2.2014, பக். 4)

Read more: http://viduthalai.in/page-4/74732.html#ixzz2sUoAf6sO

தமிழ் ஓவியா said...


பாம்புப் பெண்


சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்து நாட் டின் தலைநகரான பாங் காக்கில் மார்பகப் பகு திக்கு மேலே பெண் ணாகவும், கீழ்ப் பகுதி பாம்பாகவும் தோற்றமளிக் கும் விசித்திர சிறுமி வாழ்வதாகவும் அந்தப் பெண்ணைக் காண நாள் தோறும் ஆயிரக்கணக் கான மக்கள் வரிசையில் காத்திருப்பதாகவும் செய்திகள் வந்தன.

மேலும் 8 வயதான மய் லி ஃபே என்ற அந்தச் சிறுமி பிறந்த போதே அவளது உடலின் கீழ்ப் பகுதி பாம்பின் தோற்றத் துடனும், தலை முதல் மார்பகம் வரையிலான பகுதி, மனித தோற் றத்துடனும் இருந்ததாக அவருடைய பெற்றோர் கூறுகின்றனர். இதைப் போன்ற வினோதப் பிறவிகள் உல கில் தோன்றுவது மிக, மிக அரிது எனக் குறிப்பிடும் உடல் கூறியல் வல்லுநர் கள், இந்த முரண்பாடான உடல் அமைப்பை மருத்து வக் குறியீட்டின்படி, 'செர் பெண்டொசிஸ் மெலிய னார்கிஸ் அல்லது 'ஜிங் ஜிங் நோய் என்றும் இயற் கைப் படைப்பின் இந்த முரண்பாட்டினை நிவர்த் திக்க இதுவரையில் எவ் வித சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்பட வில்லை எனவும் தாய் லாந்து நாட்டின் மருத்துவ வல்லுநரான மருத்துவர் பிங்லாவ் என்பவர் கூறி யுள்ளதாகவும் கூறுகின் றனர். கதைக்கு கால் முளைத்தாகி விட்டது; இறக்கைகளும் கட்டப் பட்டு விட்டன - இனி அதனைக் காசாக்க வேண் டியதுதானே பாக்கி. ஆரம்பமாகி விட்டது - மூட நம்பிக்கை என் னும் சுரண்டல் தொழில். பாம்புப் பெண்ணான மய் லி ஃபே-வையின் உட லைத் தொட்டு, கண்களில் ஒற்றிக்கொள்ளவும் இந்து, புத்த மதத்தினர், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக் கான மக்கள் நாள்தோறும் அதிகாலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்துக் கிடக் கின்றனராம் இதனைப் பெரிதுபடுத்தி,

தாய்லாந்து தொலைக் காட்சி ஒன்று தன்னு டைய இணையதளத்தைப் பிரபலமாக்கியுள்ளது பிள்ளையார் பால் குடித்தார் என்று நம் நாட்டில் பரப்ப வில் லையா? தோற்றத்தில் அய்ந்து தலை பாம்பு போல் காய்ந்த தாவரங் கள் மீது, கடவுள் மதச் சாயம் ஏற்றி, மக்களிடம் பணம் பறிக்கலாம் என்று சாணக்கியப் பார்ப்பான் இங்கு கூறியது இப்பொ ழுது தாய்லாந்திலும் குடியேறி விட்டதோ!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/74776.html#ixzz2sdOllkgA

தமிழ் ஓவியா said...


இதோ இன்னொரு மோ(ச)டி!


ஒபாமா கூட மோடி பேச்சை கேட்கிறார்: ஃபேஸ்புக்கில் பரவும் போலி போட்டோ

அமெரிக்க அதிபர் ஒபாமா - இந்தியப் பிரத மருக்கான ஆர்.எஸ்.எஸின் சிபாரிசு தாரர் நரேந்திர மோடியின் மேடைப் பேச்சை தொலைக்காட்சி யில் கண்டு ரசிப்பது போன்று சித்தரிக்கப் பட்ட படம் வலைக்காட்சி யில் உலவ விடப்பட்டுள் ளது. (பேஸ் புக்) குஜராத் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் நவசாரி என்பவரின் பேஸ் புக்கில் இந்தப் பித்தலாட் டப் படம் பதிவு செய்யப் பட்டுள்ளது.

உண்மை என்ன தெரி யுமா? 2011இல் எகிப்து அதிபர் முபாரக்கின் உரையை டி.வி.யில் ஒபாமா பார்ப்பது போன்ற காட் சியை உல்டா பண்ணி இந்த மோசடியைச் செய் துள்ளனர்.

இதுகுறித்து நவசாரி எம்.பி.யிடம் கேட்டபோது இதற்கும் தனக்கும் சம்பந்த மில்லை என்று கழற்றிக் கொண்டார். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்பது பழமொழி.

Read more: http://viduthalai.in/page1/74781.html#ixzz2sdPd3TaD

தமிழ் ஓவியா said...


வளர முடியும்


நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.

- (விடுதலை, 20.9.1968)