Search This Blog

26.8.11

ஜாண் உயர பார்ப்பனராயிருந்தாலும்!பார்ப்பனரல்லாதார் பெரிய வித்வான்களாக இருந்தாலும்

பார்ப்பனரல்லாதார் எவ்வளவு பெரிய வித்வான்களாக இருந்தாலும்

அவர்களை மட்டம் தட்டி வந்ததை 40 வருடமாய் பார்த்திருக்கிறேன்!

பெரியார் கூறிய கருத்தை விளக்கி தமிழர் தலைவர் பேச்சு



பார்ப்பனரல்லாதார் எவ்வளவு பெரிய வித்வானாக இருந்தாலும் அவர்களை மட்டம் தட்டியே வந்ததை 40 வருடமாய் பார்த்து வருகிறேன் என்று பெரியார் கூறிய கருத்தை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரையாற்றினார்.

தந்தை பெரியாரின் கலை இலக்கியச்சிந்தனைகள் என்ற தலைப்பில் 10.8.2011 அன்று இரவு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய முதல் தொடர் சொற்பொழிவின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


நாதஸ்வரம் வாசிக்கிறவர் தோள்மீது துண்டு போட வில்லை வியர்வையைத் துடைப்பதற்காக என்று அந்த சங்கதிகளை கேள்விப்பட்டு ஊர்க் காரர்களுக்கு அழகிரியும் பதில் சொல்லுகிறார்.

தோளில் துண்டு போட்டு வாசிப்பதா?

இந்த ஊர் பெரிய மனிதர்கள் எல்லாம் தோளில் துண்டு போட்டு வாசிப்பதைப் பார்த்து சங்கடப் படுகிறார்கள். இது எங்களுடைய ஜாதி வழக்கத் திற்கே விரோதமானது என்று சொல்லுகின்றார். எத்தனை ஆண்டுகளுக்கு முன்னாலே நடைபெற்றது என்பதை எண்ணிப் பாருங்கள்.

உடனே அந்த வித்வானை பார்த்து அழகிரி சொல்லுகிறார். சிவக்கொழுந்து வாசிக்காதே. அங்கேயே நில் என்று சொல்லுகின்றார். இந்த ஊர்வலம் பெண்ணோ மாப்பிள்ளையோ அங்கு போய் சேர்ந்தால்தானே கல்யாணத் தொடர்ச்சி காரியங்கள் நடைபெறும் எனவே ஊர்வலத்தை நிறுத்து என்று பட்டுக்கோட்டை அழகிரி சொல்லுகின்றார்.

அடுத்த நாள் காலையில் திருமணம் நடக்க வேண்டும். முதல்நாள் ஊர்வலம் நின்றால் திருமணம் எப்படி நடக்கும்? நடக்காது.

ஊர்வலம் அப்படியே நிற்கிறது

பெண்ணையோ மாப்பிள்ளையையோ ஊர்வலத்தில் அழைத்து வருகிறார்கள். அந்த கச்சேரியில் தான் இவ்வளவு பெரிய பிரச்சினை. ஒரு மணி நேரத்திற்கு மேல் பிரச்சினை. ஊர்வலம் அப்படியே நிற்கிறது. இதற்கிடையில் நேராக பெரியார் அய்யா அங்கு தங்கியிருக்கின்றார். அவரிடத்திலே போய் சொல்லுகின்றார். இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்துவிட்டது என்று அய்யா அவர்களிடம் சொல்லுகின்றார். அப்படியா! விடாதீர்கள்! என்று அய்யா அவர்களும் சொல்லுகின்றார். நம்மாள்கள் எல்லாம் அவருக்கு ஆதரவுகாட்ட வேண்டும் என்று சொல் லுகின்றார்.

என்ன அநியாயம்? அவர் வியர்ப்பதைத் துடைப் பதற்காக சிறிய துண்டை வைத்திருக்கின்றார். விளக்கம் சொல்லுகின்றார். அதையும் கேட்க மாட்டேன் என்று சொன்னால் என்ன அர்த்தம்? நாங்கள் விட மாட்டோம் என்று பெரியார் சொல்லி ஆட்களை அனுப்பி விடுகின்றார்.

மதுரை சிவக்கொழுந்து

மதுரை சிவக்கொழுந்து அவர்களிடம் காசு கொடுத்தவர்கள் வாசியுங்கள் என்று சொல்லுகின்றார்கள். வாசிக்காதே என்று பட்டுக்கோட்டை அழகிரி சத்தம் கொடுக்கின்றார்.

மாப்பிள்ளையோ, பெண்ணோ தெரியவில்லை. வண்டியில் ரொம்பநேரம் உட்கார்ந்திருக்கின்றார். ஒரு மணிநேரம், ஒன்றரை மணி நேரம் ஆகி விட்டது. அவமானமாகப் போய் விட்டது. அதை எல்லாம் நீங்கள் பண்ணாதீர்கள் என்று அழகிரியிடம் சொல்லுகின்றார்கள். பிறகு பெரியாரிடம் போய் சொல்லுகிறார்கள். உங்களுடைய ஆள்தான் யாரோ ஒருவர் வந்து தகராறு பண்ணுகிறார் என்று சொன்னார்கள்.

பெரியார் சொன்னார். அழகிரியிடம் நான் தானய்யா சொல்லி அனுப்பினேன் என்று. உங்களுக்கு என்ன ஜாதிப்பற்று?

அவருடைய பாட்டும் மட்டும் தேவைப்படுகிறது

அவருடைய கச்சேரி பாட்டு மட்டும் தேவைப்படுகிறது. ஆனால் அவருடைய தன்மானத்தைப் பற்றி உங்களுக்கு கவலை இல்லையா? என்று பெரியார் கேட்டார்.


பிறகு ஊர்க்காரர்கள், ஜாதிக்காரர்கள் பார்த்தார்கள். சரிங்க நீங்கள் துண்டு போட்டுக் கொண்டே வாசியுங்கள் என்று சொன்னார். அதுதான் முதல் போராட்டம் (கைதட்டல்). அண்ணன் அழகிரி, தளபதி அழகிரியிடம் பெரியார் விசிறியைக் கொடுத்து நாதசுவரம் வாசிக்கின்ற சிவக்கொழுந்துக்கு வியர்க்காமல் இருக்க விசிறிக் கொண்டு வாருங்கள் என்று பெரியார் சொன்னார். (சிரிப்பு-கைதட்டல்).

அழகிரி பின்னால் விசிறிக்கொண்டு வருகின்றார்

நாதசுவர வித்வான் மதுரை சிவக்கொழுந்து அவர்களுக்கு பட்டுக்கோட்டை அழகிரி விசிறிக் கொண்டு வருகின்றார். (சிரிப்பு-கைதட்டல்). இது பற்றி அய்யா சொல்லுகின்றார்.


உதாரணமாக சென்ற இரண்டு, மூன்று வருஷத்திற்கு முன் நாட்டுக்கோட்டை நகரத்தில் ஒன்றான கானாடுகாத்தானுக்கு நாம் போயிருந்த காலத்தில் தென் இந்தியாவுக்கே முதன்மையான நாதசுர வித்வான் திரு.பொன்னுசாமி அவர்கள் ஒரு நாளைக்கு 500 ரூபா கொடுத்து ஒரு பிரபு வீட்டு விசேஷத்திற்கு வாத்தியத்திற்காக வரவழைக்கப்ப ட்டிருந்தார்.

மேளக்காரன் தோளில் துண்டா?

அப்படிப்பட்ட அவர் நின்று வாசிக்கும் போது தனது வேர்வையைத் துடைத்துக்கொள்ள ஒரு சிறு வெள்ளைத் துவாலை தன் தோளின் மேல் போட்டுக்கொண்டு வாசிக்கத் துவங்கினதும் அவ்வூர் பிரபுக்கள் சிலர். மேளக்காரன் தோளில் துண்டு போட்டுக்கொண்டு வாசிக்கலாமா? என்று குற்றம் சொல்லி வாசிப்பதைத் தடுத்தார்கள். அதற்கு அந்த வித்வான் பதில் சொல்ல மாட்டாமல், விழித்திருந்தார். நீங்களாக போய்விடுங்கள்

அப்போது சமீபத்தில் இருந்த நமது நண்பர் ஒருவர் அவ்வித்வானை நோக்கி நீங்கள் மேல் துவாலை எடுக்காதீர்கள். அவர்களுக்கு கேட்கப் பிரியாமில்லாவிட்டால் போய்விடட்டும். அல்லது நீங்களாவது போய்விடுங்கள் என்று சொன்னார். இதைக்கேட்ட வீட்டுக்கார பிரபு தனது விசேஷ காலத்தில் இந்தப்படி ஒரு சம்பவம் நடந்தது வாத்தியக்காரர் போய்விட்டார் என்கின்ற கெட்ட பெயர் வருமே என்று பயந்து சீக்கிரத்தில் வாசிப்பைமுடித்துக்கொண்டார்.

பெண் வித்வான்களாயிருந்தால்

இம்மாதிரியான சம்பவம் அனேக இடங்களில் இன்றும் நடக்கின்றது. பார்ப்பனரல்லாத பெண் வித்வான்களாயிருந்தால் உட்கார்ந்து பாடும்போது சபைக்கு ஒவ்வொரு மனிதன் வரும்போதும் எழுந்து எழுந்து கும்பிட்டு விட்டுத்தான் உட்கார வேண்டியிருக்கின்றது. (அப்பொழுது நிலைமை எப்படியி ருந்திருக்கிறது பாருங்கள்)

மகாராஜா, எஜமான், ஸ்வாமி

ஆண் பாட்டுக்கார வித்வான்களோ பிரபுக் களிடம் பேசும்போது இடுப்பின் மேல் வேஷ்டியை எடுத்து சுருட்டிக் கட்டிக்கொண்டும் முழங் காலுக்கு மேல் இடுப்பு வேஷ்டியக் கட்டிக் கொண்டும் இடக்கையை வல கட்கத்தில் வைத்து வலக்கையால் வாயைப் பொத்தி குனிந்து, மகா ராஜா, எஜமான், ஸ்வாமி, சமூகம் என்று மேல் மரியாதை வைத்து பேச வேண்டியிருக்கின்றது.

நீ, அவன், டேய்...!

இப் பிரபுக்களும் இவ்வித்துவான்களிடம் பேசும் போது நீ, அவன், டேய் என்கின்ற ஒருமை அடிமை முறையில் பேசுவதும் வழக்கமாயிருக்கின்றது. இதே தொழிலில் இருக்கும் பார்ப்பனர்களும் தங்கள் சகோதர தொழிலாளிகள் பார்ப்பனரல்லாதவர் களாயிருந்தால் அவர்களிடமும் இப்படியேதான் நீ, அவன், அடே என்கின்ற வரிசை வைத்துத்தான் பேசுகிறார்கள்.

ஜாண் உயர பார்ப்பனராயிருந்தாலும்!

ஒரு இரண்டு மூன்று ஜாண் உயரம் உள்ள பையனாயிருக்கும் பார்ப்பன வித்வானும் கூட எட்டரைச் சாண் இருக்கும் பார்ப்பனரல்லாத வித்வானை ஒருமையிலேயே தான் அவன், நீ அடே என்று பேசுகிறான். அந்தச் சிறு பையன் வித்துவானிடம் இந்தப் பெரிய வித்துவான்கள் பேசும் போதும் சுவாமிகள் என்றே மரியாதை வைத்து பேசுகின்றார்கள். நிற்க! நமது பிரபுக்கள் என்பவர்கள் பார்ப்பன வித்வான்களிடம் பேசும் போதெல்லாம் மரியாதையாகவே பேசுவதும் தாங்களாகவே முதலில் கும்பிடுவதும் இதற்கு பார்ப்பனர்கள் இது கையை தங்கள் இடுப்பிற்கு கீழாகக் காட்டி ஆசீர்வாதம் என்று சொல்லுவது மான காரியங்கள் தினமும் நடந்து வருகின்றன.

தாசிகளுக்குப் பின்னால் நின்று கொண்டு

ஆனால் சதுர் முதலிய கச்சேரிகளில் தாசிகளுக்குப் பின்னால் நின்றுகொண்டு அவர்களை ஆட்டுவிப்பராயிருந்தாலும் தாளம் போடுகிறவ ராயிருந்தாலும் அலலது அப்பெண்களுக்கு மாமாக்களாய்கூட இருப்பவர்களாய் இருந்தாலும் அவர்களைக் கண்டால் நமது பிரபுக்கள் கும்பிடுவதும் சுவாமிகளே என்று கூப்பிடுவதும் ஆன காரியங்கள் முக்கியமாக எல்லா கிராமாந்திரப் பிரபுக்களிடமும் இன்னமும் பார்க்கலாம்.

இவை ஒரு புறமிருக்க பார்ப்பனப் பிரபுக்கள் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கும், சடங்குகளுக்கும் மேளம் வாசிப்பதற்குத் தவிர மற்றபடி சபைக் கச்சேரிகளுக்கு பாடவோ, கதைகள் செய்யவோ கண்டிப்பாய் பார்ப்பனரல்லாதார்களை கூப்பிடு கின்ற வழக்கமே ஒரு சிறிதும் இல்லை.

அது மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாதார் பாடுவதையோ கதை செய்வதையோ புராணம் உபன்யாசம் முதலியவை செய்வதையோ பார்ப்பனர் கள் கேள்ப்பது மத சம்பரதாயப் படி தோஷம் என்றே கருதி இருக்கிறார்கள். ஏனெனில் சூத்திரன் வாக்கை கேள்க்கக் கூடாதாம் அன்றியும், பார்ப்பன பக்க வாத்தியக்காரர்களில் அனேகர் பார்ப்பனரல்லாத வித்வான்களுக்கு பக்க வாத்தியம் வாசிப்பதையும் இழிவாய்க் கருதுகிறார்கள்.

பார்ப்பனரல்லாத பக்கவாத்தியக்காரர்கள் கூட ஒரு பார்ப்பனச் சிறு வித்வானுக்கு வாசிப்பதை பெருமையாய் கருதுகிறார்களே யொழிய பார்ப்பனரல்லாத வித்வான்களுக்கு வாசிப்பதை கவுரவக் குறைவாகவே கருதுகின்றார்கள் அன்றியும் ஒரு பார்ப்பன சிறுவன் பாடினாலும் கருவிகளால் வாசித்தாலும் சுற்றிலும் பார்ப்பனர்கள் உட்கார்ந்து கொண்டு பலே, பலே, பேஷ், பேஷ் என்று கைதட்டுவதும் தலையை ஆட்டுவதும் மெய் மறந்தது போல் கண்கள் மேலே சொருகும்படி வேஷம் போடுவதும் அதை ஒன்றுக்கு இரண்டாக விளம்பரம் செய்து அவனுக்கு பிரக்யாதி சம்பாதித்துக்கொடுப்பதிலும் அதிக கவலையாய் இருக்கிறார்கள். (கைதட்டல்-சிரிப்பு).

பெரியார் எவ்வளவு அழகாக விளக்குகிறார்

(அய்யாஅவர்கள் எவ்வளவு அழகாக சொல்லுகிறார்கள். இன்றைக்கும் இது பார்ப்பனர்களிடம் நடக்கிறது. பார்ப்பனர்கள் தங்களுடைய இனத்தை உயர்த்துவதற்கு நம்மைத் தாழ்த்துவதற்கு எப்படி செய்கிறார்கள். என்பதை அய்யா அவர்கள் எவ்வளவு அழகாகப் படம் பிடிக்கிறார்கள் பாருங்கள். இதைவிட வர்ணனையை வேறு யா சொல்ல முடியும்?) அந்தக் காட்சியை அய்யா அவர்கள் நம் கண் முன்னால் கொண்டு வந்து காட்டுகிறார்கள். பாருங்கள். எப்பொழுது இதை அய்யா அவர்கள் எழுதுகிறார்? 1930இல் எழுது கிறார். எங்களை மாதிரி இருக்கிறவர்கள்.

பிறக்காத காலத்தில் இப்படிப்பட்ட ஒரு காட்சி. இன்றைக்கு இந்த நிலை மாறியிருக்கிறதென்றால், பெரியார் பிறந்திருக்காவிட்டால் என்ற கேள்வியை கேட்டுப்பாருங்கள். விடை தெரியும். (கைதட்டல்). கலையாக இருந்தாலும், இலக்கியமாக இருந்தா லும் நமக்கு இன உணர்வை ஊட்டினார்.)

கட்டைசாரீரம்-கணக்குப் போராது

ஆனால் பார்ப்பனரல்லாத வித்வான் களாயிருந்தால் அவர்கள் எவ்வளவு பெரிய வித்துவான் களாயிருந்தாலும் வேண்டுமென்றே கட்டை சாரீரம் என்பதும் கணக்குப் போராது என்பதும் மேல் ஸ்தாயில் சுகப்படாது என்பதும் மற்றும் ஏதேதோ பொருத்த மற்றவைகளைச் சொல்லி விஷமப் பிரச்சாரம் செய்வது எங்கும் வழக்கமாக இருக்கிறது.


(நம்மாட்களை எப்படி ஏமாற்றி பார்ப்பனர்கள் மட்டம் தட்டியிருக்கிறார்கள் பாருங்கள்)
இவைகளை நாம் சுமார் 40 வருஷத்திற்கு மேல்பட்ட நமது பிரத்தியட்ச அனுபவத்தில் கண்டு வந்திருக்கிறோம். (அய்யா அவர்கள் கல்லூரிக்குப் போய் படித்தவர்கள் அல்ல. பல்கலைக் கழகம் போய் படித்தவாகள் அல்ல. அவருடைய ஆராய்ச்சிக் கூடம் எங்கேயிருக்கிறது) மக்களிடம் இருக்கிறது. உலகத்தில் இருக்கிறது. அதைக் கண்டவர்தான் பெரியார்.)

40 வருடமாய் பார்த்திருக்கிறார்

40 வருடம் பார்த்திருக்கிறார் சிறிய வயதிலிருந்து பார்த்துப் பார்த்து அவருடைய மனதில் பதிந்து போயிருக்கிறது.

பெரியார்திரைப்படத்தைப் பார்த்தால் தெரியுமே. கடன் வாங்கியவனை அமீனாவுடன் சென்றது. பெரியாருடைய அப்பாவே இவரை செருப்பினால் அடிக்கிறாரே அப்பொழுதே அவருக்கு அந்த உணர்வு வந்திருக்கிறது. நாம் நியாயத்திற்காக பாடுபட்டோம். தனது தந்தையார் இவ்வளவு மோசமாக இருக்கிறாரே என்று சிந்திக்கிறார் பாருங்கள். வேறு எந்தத் தலைவரும் அனுபவங்களால் உருவாக்கப்பட்ட தலைவர் கிடையாது. (கைதட்டல்) அய்யா அவர்களுடைய சிந்தனை காலத்தை வென்றதாக இருக்கிறது அய்யா மேலும் சொல்லுகிறார்).

சங்கீத ஞானத்திற்காக அல்ல

ஆகவே நாம் சங்கீத மாநாட்டில் கலந்துகொள்ள ஆசைப்பட்டதின் முதல் காரணம் சங்கீத ஞானத்திற்கு ஆகவோ சங்கீத கலை வளர்ச்சிக்கு ஆகவோ மாத்திரம் அல்ல என்றும் மேலே கண்ட பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்னும் உயர்வு தாழ்வு விஷம் சங்கீதத்திற்குள்ளும் புகுந்து அதன் மூலம் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைக்கு விரோதமாயிருக்கும் கொடுமையை அழிப்பதற்கே ஒழியவேறில்லை என்றும் தெரிவித்துக்கொள்ளு கின்றோம்.

---------------தொடரும்.............. “விடுதலை”. 26-8-2011

0 comments: