Search This Blog

27.5.10

கம்பனுக்குக் காவடியா? எச்சரிக்கை! எச்சரிக்கை!!



கம்பனுக்கு இப்பொழுது என்ன கிராக்கி? மதுரை வட்டாரத்தில் கம்பனைக் காவடியாக்கித் தூக்கி ஆட்டம் போடும் ஒரு வேலை கிளம்பியிருக்கிறது. சென்னையில் கம்பன் பேரால் கழகம் வைத்து கம்பனைச் சீராட்டும் வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டுள்ளது.

திராவிடர் இயக்கம் கிளம்பி கம்பனை காட்டிக் கொடுக்கும் தமிழன் என்று அம்பலப் படுத்தியது. இரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோம சுந்தர பாரதியார் போன்ற விளம்பரம் பெற்ற தமிழ் அறிஞர்களுடன் திராவிடர் கழகத் தளபதியாக அன்று போர்க்கோலம் பூண்டிருந்த அறிஞர் அண்ணா அவர்கள் விவாதப் போர் நடத்தி, எதிர்வரிசையில் நின்றவர்கள் தோற்றேன்! தோற்றேன்! தோற்றேன்! என்று ஒப்புக் கொள்ளும் வகையில் இனமான உணர்வைக் கட்டிக் காத்தார் தமது வழிகாட்டியான தலைவர் தந்தை பெரியார் அவர்களின் செறிவோடு!

அண்ணாவின் தீ பரவட்டும் என்ற அந்தவுரை பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவி இளைஞர்கள் மத்தியில் தமிழன் என்ற இறுமாப்புப் பீறிட்டுக் கிளம்பியதுண்டு.

கம்ப இராமாயணம் ஆனாலும் சரி, அதன் மூல நூலான வால்மீகி இராமாயணமானாலும் சரி, மக்கள் மத்தியில் தோலுரித்துத் தொங்க விடப்பட்டது. சென்னை போன்ற பெரிய நகரங்களில் கூட, பார்ப்பனர்களின் ஆதார நூல்களைக் கொண்டே தந்தை பெரியார் விளக்கிக் கூறி, பாமர மக்கள் முதற்கொண்டு, பட்டதாரிகள் வரை அறியும் வகையில் இராமாயணம், பாரதம் போன்ற இதிகாச நூல்களைப் பரிகாசத்திற்குரிய இடத்தில் ஒதுக்கித் தள்ளினார்.

ஒரு சமயம் தஞ்சாவூரில் ஒரு வாலிபர் சங்கக் கூட்டத்துக்குத் தந்தை பெரியார் தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில் பேசிய தமிழன்பர் ஒருவர் பெரியார் இராமாயணத்தைக் குறை கூறுவது தவறு என்றும், கலை உணர்ச்சிக்காகவும், அதனைப் போற்றவேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய தந்தை பெரியார் அளித்த பதில் மிகவும் முக்கியமானது. நான் கலை உணர்ச்சியையும், தமிழ் உணர்ச்சியையும் வேண்டாம் என்று கூறவில்லை. தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்) இருந்தால், தங்கக் கிண்ணம் என்பதற்காக அமேத்தியத்தைப் புசிக்க முடியுமா? அதுபோல், கம்ப ராமாயணப் பாட்டுகள் சிறந்தவைதான். அவற்றில் உள்ள மூடநம்பிக்கைக்கும், தமிழர் இழிவுக்கும், ஆரியர் உயர்வுக்கும் ஆதாரமானவற்றை வைத்துக் கொண்டு எப்படி அவற்றைப் பாராட்ட முடியும்? என்று பதிலடி கொடுத்தார் பகுத்தறிவுப் பகலவன்.

இதே கருத்தை அறிஞர் அண்ணாவும் விவாதப் போரில் விண்டுரைத்தார்.

இன்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட கம்ப இராமாயணத்தையே மக்கள் பெரிதும் அறிவர்; போற்றுவர். அதற்குக் காரணம் அதிலே உள்ள ஆரிய நெறி, தமிழ் மக்களை அடிமைப்படுத்தியதுதான். கம்ப இராமாயணத்திலே, சங்க நூல்களிலே காணப்படும் அணிகளும், அலங்காரங்களும், உவமைகளும் நிரம்ப உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. குறள் நன்றாக நுழைக்கப்பட்டு இருக்கிறது. கம்ப இராமாயணம் கவிச்சுவை என்று எதைப் பண்டிதர்கள் எடுத்துரைக்கிறார்களோ, அவை கம்பனின் சொந்தச் சரக்குமல்ல; சங்க நூற்கள் தந்த சுவை! அந்த மூலத்தை இழக்கும்படி நாங்கள் சொல்லவில்லை. அந்தச் சுவையை ஓர் ஆரியரின் கற்பனைக்குப் பயன்படுத்தியதால், அந்தக் கற்பனையின் விளைவு கேடு தருவதால், அந்த ஏடு வேண்டாம் என்று கூறுகிறோம்.

காடேக இராமன் கிளம்பும் போது உடன் வரப் புறப்பட்ட சீதையுடன் வாதிடுகையில் சீதை கூறும் மொழியின் தன்மையும், இலக்குவன், கைகேயியை நிந்திக்கும் பகுதியையும், சீதையை இராவணன் எடுத்துச் சென்ற விதத்தையும் வால்மீகி கூறி உள்ளபடியே கம்பர் எழுதியிருப்பின், அந்த ஆரியப் பாத்திரங்களின் ஆபாச குணங்கள் கிடந்ததை தமிழர் கண்டு அவர்களைத் தெய்வங்கள் என்று போற்றும் கீழ் நிலைக்கு வந்திருக்கமாட்டார்கள். ஆனால், கம்பரோ, ஆரிய இராமனைக் குற்றம் குறையற்ற சற்புத்திரனாக்கி, வழிபாட்டிற்குரிய தெய்வமாக்கிவிட்டார் (தீ பரவட்டும்) என்று ஆரிய அடிமையாக இராமாயணம் எழுதிய கம்பனை கண் எதிரே கொண்டு வந்து நிறுத்தினார் அறிஞர் அண்ணா.

அயோத்தி ராமன் பிரச்சினையெல்லாம் தமிழ் மண்ணில் எடுபடாததற்குக் காரணம் தந்தை பெரியார் கண்ட திராவிட இயக்கமே.

மறுபடியும் கம்ப இராமாயணப் பட்டிமன்றங்களையும் மாநாடுகளையும், கருத்தரங்குகளையும் ஆழ்வார்களான தமிழர்கள் நடத்திட முனைவார்களேயானால் அவர்களை நேருக்கு நேர் சந்திக்க திராவிடர் கழகம் தயார்! தயார்!!

காலமெல்லாம் கம்பனை இழித்துப் பேசியதால்தான் சென்னைக் கடற்கரையில் கம்பன் காலடியில் அண்ணா உறங்குகிறார் (அண்ணா சதுக்கத்தில் நுழைவு வாயிலில் கம்பர் சிலை) என்று பேசிய சாலமன்கள் கம்பனைத் தூக்கிக் கொண்டு வந்து தமிழன் தலையில் கட்டி, தமிழர்களை விபீடணர்களாக ஆக்குவதில் ருசி காண்கின்றார்கள் போலும்.

கம்பனையும், அவன் கால் வருடும் கூட்டத்தையும் வீதிக்கு வீதி தோல் உரிப்போம். எச்சரிக்கை! எச்சரிக்கை!!


--------------------- "விடுதலை” தலையங்கம் 27-5-2010

6 comments:

அப்பாதுரை said...

எழுச்சிப் பேச்சுக்களில் அடுக்கு மொழியும் அலங்காரமும் இருந்ததே தவிர, ரா.பி.சேதுப்பிள்ளை அளவுக்கு அண்ணாதுரை தமிழறிஞரல்ல. கம்பராமாயணம் கடவுள் வழிபாடோ இல்லையோ - அந்தப் பாடல்களில் இருக்கும் தமிழ்ச் சாறும் பண்பாடும் (செய்நன்றி) அண்ணாவுக்கும் திராவிடக் கழகத்துக்கும் சுட்டுப் போட்டால் கூட வராது. கம்பன் எழுத்தளவுக்கு அண்ணா எழுத்தில் தமிழ்ச் செறிவுள்ள ஒரு கவிதையை எடுத்துக் காட்டுங்கள் பார்ப்போம். கலைஞர் எழுத்தில் இருக்கும் தமிழ்ச் செறிவு கூட அண்ணா எழுத்தில் கிடையாது.

பெரியாரின் கொள்கைகளைப் பரப்பும் வழியில் செல்லாமல் எச்சரிக்கை தீவைப்பு என்று விளம்பரத்துக்காசை பட்டு நடக்கும் திராவிட இயக்கம் இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

திராவிட கழக எச்சரிக்கையை யார் மதிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? உண்மையான சீர்த்திருத்த அடிப்படையில்லாவிட்டால் அடையாளம் கண்டு கொள்வார்கள் மக்கள்.

மதிக்கத் தக்க உம் போன்றோரும் இதையே உருட்டிக் கொண்டு திரிவது வருத்தமே.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனிய பசப்புகள் மக்களிடம் எடுபடாது அப்பாத்துரையாரே

அப்பாதுரை said...

பசப்பு என்கிறீர்கள். மக்களிடம் செல்லாது என்கிறீர்கள். உண்மையாகட்டும். பார்ப்பனர் என்றில்லை எவருடைய பசப்புமே அறிவுள்ள மக்களிடம் எடுபடாது. திராவிட இயக்கத்தின் பசப்பையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்.

பசப்பு என்கிறீர்கள்: கேட்ட கேள்விக்கு விவரமாக பதில் சொல்லவில்லையே? கம்பன் எழுத்தளவுக்கு அண்ணா எழுத்தில் தமிழ்ச் செறிவுள்ள ஒரு கவிதையை எடுத்துக் காட்டுங்கள் பார்ப்போம்.

தமிழ் தமிழன் திராவிடன் பார்ப்பனன் என்று டமாரம் அடிப்பதை நிறுத்தச் சொல்லவில்லை. அதற்குப் பின்னால் அறிவைத் தொடும் ஓசைகள் இருக்கிறதா என்று பாருங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன். எழுச்சி வெறும் ஓசையினால் வருவதில்லை.

அப்பாதுரை said...

கலைஞர் எழுத்தில் இருக்கும் தமிழ்ச் செறிவு கூட அண்ணா எழுத்தில் கிடையாது என்று முதல் பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன். இம்முறை படிக்கும் பொழுது தான் தவறு புரிந்தது. கலைஞர் எழுத்திலிருக்கும் 'தமிழ்ச் செறிவு கூட' என்பதில் ஒப்பீட்டு இளப்பம் தெரிவது போல் தொனித்தாலும், என் எண்ணத்தில் இல்லை. கலைஞர் எழுத்தில் தமிழ்ச்செறிவு மிக அதிகம்.

Anonymous said...

இந்த வேகத்தை, டாஸ்மாக் கடைய அகற்றுவதற்கு காட்டலாமே... கம்பன் ஆட்டத்தை விட கொடூரமானதாச்சே. குடிச்சிட்டு ஆட்டம் போடுறது.

நம்பி said...

//karrupu said...

இந்த வேகத்தை, டாஸ்மாக் கடைய அகற்றுவதற்கு காட்டலாமே... கம்பன் ஆட்டத்தை விட கொடூரமானதாச்சே. குடிச்சிட்டு ஆட்டம் போடுறது.
May 28, 2010 9:55 PM //

சாப்ட்வேர் கம்பெனியில இருக்கறவ ரிக்ஷா இழுக்க போகலாமே...ரிக்ஷ இழுக்கறவனை தூக்கி வந்து சாப்ட்வேர் கம்பெனில உடகாரவைக்கலாமே...இல்லைண்டா ரிக்ஷ இருக்கறவ கூலியை சாப்ட்வேர் கம்பெனில வேலை பார்க்கறவனுக்கு கொடுக்கலாமே...அதுக்கு பதில் ரிக்ஷா இழுக்கறவனுக்கு சாப்ட்வேர் சம்பளத்தை கொடுக்கலாமே..இருக்கற ஸ்டார் ஒட்டலை எல்லாம் மூடலாமே...பார் எல்லாத்தையும் மூடலாமே...இது மாதிரி எல்லாம் எண்ணமே தோனாதா...? அப்படி தோனணும்....? கோட்டு சூட்டு போட்டு குடிப்பே அவன் உடம்பு வலிக்காக குடிச்சா தப்பா...எதுக்கு கள்ளசாராயத்தை உள்ளே விடறதுக்கா...? முதல்ல அவன் நிலையை மாத்து...சும்மா சும்மா மூடு மூடு...சுத்தி இருக்கறவனை பாத்தி பார்க்கறதே இல்ல...

ஒரே மாதிரி டாஸ்மார்க்கிலேயே குறியா இருக்கிறியே...பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடாகா...இங்கல்லாம் மூடிட்டாங்களா..?...புனித நகரமாம் காசியிலே கஞ்சாவை மூடிட்டாங்களா....பாங்கை மூடிட்டாங்களா...அரசாங்க கடையிலேயே பாங்க், கஞ்சாவை விக்கறாங்களே..எல்லோர் வாயிலேயும் கஞ்சா புகை தானே....என்னய்யா இது தொடர்ந்து தேய்ஞ்சு போன ரிக்கார்டு மாதிரி...

இவரு அப்படியே அரசுக்கு வேண்டிய வருமானத்தை கணக்கு வழக்கு இல்லாம ஒருபைசா வரி பாக்கியில்லாம கொண்டுவந்து கொட்டிடறது மாதிரி...எம்.ஜி.ஆர் ல முடியல, ஜெயலலிதாவில முடியல...எல்லோராலேயும் தான் முடியல....காந்தி பேரை சொல்லும் காங்கிரசாலும் முடியல...

டாஸ்மார்க்கை மூடினா நாட்டு சாராயம் குடிக்கபோறா, கள்ள சாராயம் குடிக்கப்போறான்...உனக்கு என்ன போச்சு...அரசுக்கு முக்கிய முதலாய வருமானம் போச்சு...கள்ள சாராயம் குடித்த மக்களுக்கு உயிர் போச்சு...மத்தவங்களுக்கு உடம்பில இருந்த ஒரு மயிர் போச்சு...என்ற கணக்கு தான்.

எல்லா நாட்டிலேயும் தோத்துப்போன ஒன்னுதான்...இந்த விஷயம்.