Pages

3.2.10

ஆர்.எஸ்.எஸின் அடாவடித்தனம்!



சென்னையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் சென்றதாகவும், அதனைத் தடை செய்து காவல்துறை கைது செய்ததாகவும் ஏடுகளில் பல பத்திகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை போன்ற இடங்களில் எந்தக் கட்சிஅமைப்பு ஊர்வலம் செல்லுவதாக இருந்தாலும், குறிப்பிட்ட பகுதியிலிருந்து (போர் நினைவுச் சின்னத்திலிருந்து, அரசினர் விருந்தினர் மாளிகைவரைதான்) செல்ல முடியும் என்கிற நடைமுறை இருந்து வருகிறது. ஆர்ப்பாட்டம், பட்டினிப்போராட்டம் போன்றவற்றை நடத்துவதாக இருந்தாலும், அதற்கென்று சில இடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதற்குக் கட்டுப்பட்டுதான் கட்சிகள் அல்லது அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

ஆர்.எஸ்.எஸ். மட்டும் நெய்யில் பொரிக்கப்பட்ட ஒன்றா? அவர்கள் மட்டும் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றி ஊர்வலம் போக எப்படி அனுமதிக்க முடியும்? அவர்களுக்கு அளிக்கப்பட்டால் மற்றவர்களும் அதே பகுதியில் பேரணி செல்ல அனுமதி கேட்கமாட்டார்களா?

தேசியம், தெய்வீகம் போன்றவற்றை வலியுறுத்தி இந்த ஊர்வலமாம்! இவர்களின் தேசியம் என்பது என்னவென்று மக்களுக்குத் தெரியாதா?

இவர்கள் சொல்லுகிற தேசியம் இந்துக் கலாச்சார தேசியம்தானே; இவர்களின் தேசிய மொழிக் கொள்கை செத்துச் சுண்ணாம்பாகிப் போன சமஸ்கிருதம்தானே!

இவர்களின் தேசியம் என்பது மாநிலங்களே தேவையில்லை; மொழி அடிப்படை-யில் மாநிலங்கள் பிரிந்திருக்கக் கூடாது. ஒரே இந்தியா என்ற அமைப்புதான் இருக்க-வேண்டும் என்ற நிலைப்பாடுதானே?

தெய்வீகத்தை வேறு வலியுறுத்துகிறார்களாம்.

தெய்வ பக்தியின் யோக்கியதைதான் காஞ்சிபுரம் மச்சேஸ்வரன் கோயில் அர்ச்சகன் தேவநாதன்மூலம் சிரிப்பாய் சிரிக்கிறதே!

தெய்வீகத்தின் யோக்கியதை எவ்வளவு மலிவாகப் போய்விட்டது பார்த்தீர்களா? தெய்வீகத்தை, கடவுள் நம்பிக்கையை மனிதர்கள் பிரச்சாரம் செய்துதான் நான்கு தெருக்களைச் சுற்றி வந்து விளம்பரம் செய்துதான் காப்பாற்றவேண்டியிருக்கிறது என்பதிலிருந்தே கடவுளின் வெத்து வேட்டுத்தன்மை புரிந்துவிடவில்லையா?

கடவுள் தன் சக்தியைத் தானே காப்பாற்றிக் கொள்ள முடியாதவரா? கடவுளின் படைப்புதான் மக்கள் என்பது உண்மையானால், தம் பிள்ளைகளுக்குக்கூட தன் சக்தியைப் புரிய வைக்க முடியாத நிலையில் உள்ளவர்தானா? சர்வசக்தி என்பதன் லட்சணம் இதுதானா?

கடவுளை காப்பாற்ற நினைப்பது என்பதேகூட கடவுள் சக்தியற்றவர்; மற்றவர்களால் காப்பாற்றப்பட வேண்டியவர் என்ற கருத்தைத்தானே வெளிப்படுத்துகிறது.

கடவுளைக் காப்பாற்ற ஒரு கூட்டம் ஏன் இப்படி துடியாய்த் துடிக்கிறது? ஆம், அந்தக் கடவுள், அது தொடர்புடைய மதமும்தானே அந்தக் கூட்டத்தின் உயர் ஜாதித் தன்மையையும் சுரண்டலையும், வயிற்றுப் பிழைப்பையும் கட்டிக் காக்கும் கருவிகள்.

கடவுள் பக்தர்களாக இருக்கக் கூடிய பார்ப்பனர் அல்லாத மக்கள் இந்தச் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டால் பார்ப்பனர்களின் பித்தலாட்டம் ஒரு நொடியில் நொறுங்கிப் போய்விடும் _ சிந்திப்பார்களா?


------------------"விடுதலை” தலையங்கம் 3-2-2010

2 comments: