Search This Blog

6.2.10

மதவாதிகளே பதில் சொல்லுங்கள் ! -4




இசுலாம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட மார்க்கம் எனும் தலைப்பில் ஒரு, சிறிய வெளியீட்டைப் படிக்க நேர்ந்தது. மதமும், விஞ்ஞானமும் இறைவன் இருக்கின்றான் என்பதை நிலை நிறுத்தும் என்று அதன் மொழி பெயர்ப்பாளர் கூறியுள்ளார். இவற்றைப் படித்தவுடன், நான் ஏன் முசுலிம் அல்ல என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூலைப்படிக்கும் தேவையை ஏற்படுத்திக் கொண்டபோது, அறிவார்ந்த அந்நூலின் வாதங்களைப் பகிர்ந்து கொள்ளவே இது.

ஈரான் நாட்டின் முசுலிம் மதகுருவாக இருந்த அயொதுல்லா கொமேனியின், கோபத்திற்கு ஆளான இந்திய இசுலாமியர் சல்மான் ருஷ்டி பட்ட பாட்டினைப் பார்த்த நூலாசிரியரான முசுலிம், தன் பெயரையும் அடையாளத்தையும் மறைத்துக் கொள்வதற்காகப் புனைப் பெயரில் எழுதிய நூல் இது. இப்ன் வாரக் என்ற பெயரில் எழுதித் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்ட அதே வேளையில், உண்மைகளையும் உலகுக்கு உணர்த்தியுள்ளார். அந்த நூலின் சில பகுதிகளைத் தந்துள்ளோம்.

114 படலங்களில் (சூரா) சுமார் 80 ஆயிம் அரபி வார்த்தைகளில் எழுதப்பட்டுள்ள முசுலிம் மதநூல் குரான். இறைவன் அருளிய வார்த்தைகளைக் கொண்டது என்கிறார்கள். ஜிப்ரயீல் மூலமாக முகமது நபிக்குக் கூறப்பட்டதாம். இது போலவே, கர்த்தரால் மோசேவுக்குக் கூறப்பட்டது யூதர்களின் புனிதநூலான டோரா என்கிறார்கள். அதன்பின்னர் உருவாக்கப்பட்ட பைபிள் கர்த்தரால் கூறப்பட்டதுதான் என்கின்றனர் கிறித்துவர்கள். ஆக, நூல்களின் தோற்றுவாய், அதில் கதைக்கப்பட்டுள்ளவைகள் போன்ற அனைத்திலும் இம்மூன்று மதங்களுக்கும் ஒற்றுமை உண்டு.

இசுலாத்தில் கூடுதலாக ஒன்று குர்ஆனின் மூலப் பிரதி சொர்க்கத்தில் இருக்கிறதாம். அது தாய் நூலாம் (43.4) (எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹஃபூளில் பதிவாகி பாதுகாக்கப்பட்டதாக இருக்கிறதாம் (85.22) மிகவும் புனிதத் தன்மை வாய்ந்தது என்பதால் மற்றைய புத்தகங்களுக்குக் கீழாக வைக்கப்படக்கூடாதாம். புத்தக அடுக்கில், மேல் நூலாகவே இது வைக்கப்பட வேண்டுமாம். அதனைப் படிக்கும்போது அமைதியாக இருந்து கேட்கவேண்டுமாம். அந்தச் சமயத்தில் புகைப்பதோ, குடிப்பதோ கூடாதாம். நோய்களினின்றும் அழிவுகளினின்றும் காப்பாற்றும் தாயத்து போன்றதாம். ஷேக் நெப்ஜாவி என்பவர் ஒரு படி மேலே போய், தாம் எழுதிய பரிமளத் தோட்டம் (The Perfumed Garden) எனும் நூலில், குர்ஆன் ஓதுவதால் உடல் உறவு எண்ணம் கூடத் தள்ளிப் போகும் என்றே எழுதி விட்டார்.

அப்பேர்ப்பட்ட சிறப்புகளை (?) யுடைய இந்நூல் பொது ஆண்டு 812 இல் வார்ஷ், (மதினாவின் நஃபி மூலம்), ஆண்டு 805 இல் ஹாப்ஸ் (குஃபாவின் ஆசிம் மூலம்), ஆண்டு 860 இல் அல்துரி (பஸ்ராவின் அபு அம்ர் மூலம்) என்று மூன்று வகைகளில் உள்ளது. தற்காலத்தில், ஹாஃப்ஸ் நூல், வார்ஷ் நூல் ஆகிய இரண்டு மட்டுமே புழக்கத்தில் உள்ளன. அவற்றுள் ஹாஃப்ஸ் நூலுக்கு அதிகார பூர்வ ஒப்புதல் 1924 இல் தரப்பட்டு எகிப்து நாட்டில் புழக்கத்தில் உள்ளது. வார்ஷ் நூல் எகிப்து தவிர ஏனைய ஆப்பிரிக்க நாடுகளில் புழக்கத்தில் உள்ளது.

குர்ஆன் பற்றிய கதை ஒன்றும் உள்ளது. திருமணமானவர்கள், வேறு நபருடன் உடல் உறவு கொள்ளும் குற்றத்திற்கு 100 கசையடி கொடுக்கப்பட வேண்டும் என்கிற தண்டனை இப்போது இருக்கின்றது. ஆனால், கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை இருந்ததாகவும், அதன் அடிப்படையில் மதகுருக்கள் (கலிபா) தண்டனையை நிறைவேற்றியதாகவும் கூறுகிறார்கள். இத்தண்டனை எப்படி மாற்றம் பெற்றது என்பது விளங்கவில்லை. இதுபோல, நூறு வசனங்கள் காணாமல் போய்விட்டன என்கிறார்கள். ஷியா பிரிவு இசுலாமியரான அலிக்கு, (அரசியல் ரீதியான காரணங்களினால்) பாதகம் ஏற்படுத்துவதற்காக உதுமான் இம்மாதிரி செய்து விட்டதாகக் கூறுகிறார்கள். உண்மை என்னவோ?

இடைச்செருகல்கள் கூட இருப்பதாகக் கூறப்படுகிறதாம். அலிக்குப் பாதகமாக உதுமான் பதவிக்கு வருவதற்காகச் செய்யப்பட்டது என்று காரணம் கூறப்படுகிறதாம். இசுலாத்தின் (ஷியா) ஒரு பிரிவுக்கும் மற்றொன்றான (சன்னி) பிரிவுக்கும் ஏற்பட்ட பிளவினால் இப்படிக் கூறப்படுகிறதோ? எப்படி இருந்தாலும் ஒரு புள்ளி, கமாவைக் கூட மாற்றியமைக்க யாருக்கும் அதிகாரம் இல்லையெனும் நூலுக்கே, இந்தக் கதி என்றால் . . .

இன்னொரு கதையும் கூட உண்டு. இறை வசனங்களை எழுதுவதற்காக மதினாவில் அமர்த்தப்பட்டவர் அப்த் அல்லா சயித் அபி சார்ஹ் என்பவர். நபிகள் நாயகத்தின் சம்மதத்துடன் சில வசனங்களின் முடிவு வார்த்தைகளை மாற்றி எழுதி வந்தாராம். உதாரணமாக அல்லா, வல்லவர், அறிவுள்ளவர் என்று வருமிடத்தில் அல்லா அனைத்தும் அறிந்த அறிவுள்ளவர் என்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று அப்த் அல்லா கூறினாராம். நபி அதற்கு ஒத்துக் கொண்டாராம். இம்மாதிரி நிறைய தடவைகள் மாற்றி எழுத ஒப்புக் கொண்ட காரணத்தினால், விரக்தி அடைந்த அப்த் அல்லா, இசுலாத்தையே துறந்து விட்டாராம். கடவுளிடமிருந்து வந்த சொற்கள் என்றால், அவற்றை எப்படி நாம் மாற்றி அமைக்க முடியும் என்கிற அய்யம் ஏற்பட்டு, அந்த மதத்தை தலை முழுகிவிட்டு, மெக்கா நகரத்திற்குப் போய் குரேஷியர்களுடன் சேர்ந்து கொண்டாராம்.

வார்த்தைகளை, வசனங்களை ரத்து செய்வது எப்படி முடியும்? குர்ஆனின் மூலப் பிரதி சொர்க்கத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பது உண்மையானால், எப்படிச் சாத்தியமாகும்? முய்ர் எனும் ஆசிரியரின் கருத்துப்படி, சுமார் 200 வசனங்கள் பிற்பாடு வந்தவர்களால் ரத்து செய்யப்பட்டுள்ளனவாம். அப்படியானால், மூன்று விழுக்காடு குர்ஆன் வார்த்தைகள் தவறானவையா?

குர் ஆன் அத்தியாயம் 2 வசனம் 219 இல் மது குடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாயம் 16 வசனம் 67 இல் பேரீச்சை, திராட்சைப் பழங்களிலிருந்து மதுவையும் நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள். நிச்சயமாக இதிலும் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது என்று இருக்கிறது. முந்திய சூரா மதீனாவில் இருந்த போது கூறப்பட்டு மதுவிலக்கைக் கூறியது. பிந்திய சூரா மெக்காவில் இருந்தபோது கூறப்பட்டுத் தாராளம் காட்டுகிறது.

குர்ஆனில், ஜண், ஜிண், சைத்தான், இஃப்ரித், மரீது ஆகிய அய்ந்து உயிர்கள் பேசப்படுகின்றன. ஜண்கள், ஜிண்களாக மாறக்கூடியவை. சைத்தான் கெடுதலுக்குக் காரணமான ஆற்றல் பெற்றது. இஃப்ரித்கள் மிகவும் சக்தி வாய்ந்த கெட்ட சக்திகள். மரீது என்பவை கெட்ட சக்திகளை மிகமிகப் பெரும் அளவில் பெற்றவை. இந்த விளக்கங்களின்படி, ஜிண்களின் தலைவன் இப்லிஸ் என்பதற்கு 5 பிள்ளைகளாம். திர் (TIR) எனும் பிள்ளை இயற்கை இடர்களையும், காயங்களையும், இழப்புகளையும் ஏற்படுத்தும். அல் அவார் (Al Awar) விபச்சாரம், குடிப் பழக்கம், போன்ற கெட்ட பழக்கங்களைத் தூண்டும், சுட் (Sut) பொய்கூறச் செய்யும். டாசிம் (Dasim) கணவன் மனைவிய-ருக்குள் விரோதத்தை ஏற்படுத்தும். ஜலம்பூர் (Zalambur) போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் தலைமை தாங்குமாம். எதற்கு? இந்த ஜிண்கள் மூன்று வகையாம். ஒரு வகைக்கு இறக்கைகள் உண்டு; பறக்குமாம். மற்றொரு வகை பாம்புகளும் நாய்களும். மூன்றாம் வகை மனிதர்களைப் போலவே ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லுமாம்.

(பண்டைக்கால) கிரேக்க, ரோமானி யக் கட்டுக் கதைகளையும் விஞ்சக் கூடிய மூட நம்பிக்கைகள் அல்லவா?

சைத்தான் இசுலாத்தில் உண்டு. அசாசில் (Azazil) என்ற பெயர் கொண்ட இது, நெருப்பிலிருந்து உண்டாக்கப் பட்டதாம். மனிதன் களிமண்ணில் இருந்து படைக்கப்பட்டதாம். மனிதனைப் படைத்த கடவுள் (அல்லா)சைத்தானைப் பார்த்து, மனிதனை வணங்கும்படி சொன்னதாம். சைத்தான் மறுத்ததாம். உடனே கடவுள் சைத்தானை, ஏடன் தோட்டத்தில் இருந்து கீழே பிடித்துத் தள்ளி விட்டதாம். தன் கட்டளைக்குப் கீழ்ப்படிய மறுத்த சைத்தானை ஏன் அல்லா தீர்த்துக் கட்டியிருக்கக்கூடாது?

------------------தொடரும்


--------------------சு.அறிவுக்கரசு அவர்கள் 5-2-2010 ”விடுதலை” யில் எழுதிய கட்டுரை


3 comments:

Robin said...

பைபிளிருந்து காப்பியடித்து கொஞ்சம் கட்டுக் கதைகளையும் சேர்த்து எழுதப்பட்டதுதான் குரான்.

http://answering-islam.org/

haji mohamed said...

please visit www.onlinepj.com உங்கள் சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும்

Unknown said...

இதன் தொடுப்பு தர இயலுமா
mdsultan@eim.ae