(கர்க்கரே)பெரியார், அம்பேத்கர் போன்ற பெருமக்களால் பார்ப்பனர் அல்லாதார்
மத்தியிலே எழுச்சி மூண்டுள்ளது
இதைத் திசை திருப்பவே பார்ப்பன சக்திகள் முஸ்லிம்கள் பக்கம் வெறுப்பையும், பகைமையையும் தூண்டுகின்றன
மகாராட்டிர மாநில முன்னாள் அய்.ஜி. எஸ்.எம். முஷ்ரிஃப் கர்ச்சனை
நமது மாபெரும் தலைவர்களால் பார்ப்பனர் அல்லாதார் எழுச்சி பெற்று வரும் நிலையில், அது தங்களின் ஆதிக்கத்தையும் சலுகைகளையும் பறித்துவிடும் என்று உணர்ந்த நிலையில் தான் பார்ப்பன சக்திகள் பார்ப்பனர் அல்லாத மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் முஸ்லிம்கள்மீது வெறுப்பையும் பகைமையையும் மூட்டி வருகின்றனர் என்றார் முஷ்ரிஃப்.
2010 பிப்ரவரி 2 இல், கர்க்கரேயைக் கொன்றது யார்? எனும் நூல் அறிமுக நிகழ்ச்சியில் நூலாசிரியர் எஸ்.எம்.முஷ்ரிஃப் ஆற்றிய உரையின் சுருக்கம்:
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக பெரிய கூட்டங்களைச் சமாளிக்கும் பழக்கம் எனக்குக் காவல்துறை அதிகாரி என்ற முறையில் கைவந்த ஒன்றாகும். ஆனால், இதைப் போன்ற பெரிய கூட்டங்களின் முன்னால் மேடையில் நின்று சொற்பொழிவு ஆற்றுவதற்குப் பழக்கப்படாதவன். இது எனக்குப் புதிய அனுபவம்.
நான் எழுதிய நூலின் அறிமுக நிகழ்ச்சிக்கு இவ்வளவு பேர் நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்றால், அது ராமசாமிப் பெரியாரின் தொண்டின் விளைவே ஆகும். நண்பர் வீரமணி அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயன் ஆகும்.
சமுதாயத்தில் உண்மையையும் நேர்மையையும் மதிக்காமல், அவற்றிற்கு இடம் இல்லாமல் செய்வோரை மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவதற்காக இந்நூல் எழுதப்பட்டது.
இன்டலிஜென்ஸ் பீரோ (அய்.பி.) எனும் உள்நாட்டு உளவு அறியும் துறை, இந்தியாவின் பாதுகாப்பிற்கு என அமைந்த ஒன்றாகும். ஆனால் இப்பொழுது அந்தத் துறை நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தான ஒன்றாகச் செயல்படுகிறது. தங்கள் சமுதாயத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு அய்.பி.யைப் பயன்படுத்த முனைந்துள்ள பார்ப்பனர்கள் இந்தியாவின் பாதுகாப்பை ஆபத்திற்கு உள்ளாக்குகிறார்கள்.
தகவல் தெரிவிக்காதது - ஏன்?
அமெரிக்க நாட்டின் ஏஜென்சி ஒன்றின் மூலமாக, இந்தியாவின் ரா (அயல்நாட்டு உறவுத் துறை) மற்றும் அய்.பி. (உள்நாட்டு உளவுத் துறை) ஆகியவற்றிற்குச் சில தகவல்கள் வந்தன. பயங்கரவாதிகளைக் கண்காணிக்கும் வகையில் 34 தொலைப்பேசிகளைக் கவனிக்க வேண்டும் என தகவல் கூறியது. இந்தத் தகவலை, அய்.பி., மகாராட்டிர அரசுக்கும், இந்தியக் கப்பற்படையின் மேற்குப் பிரிவுத் தலைமைக்கும் தெரிவித்திருக்கவேண்டும். அப்படிச் செய்திருந்தால், பயங்கரவாதிகள் வந்த கப்பல்கள் மும்பைக்கு வந்திருக்க முடியாது; அவர்களுடைய தாக்குதல் நடந்திருக்காது. அவ்வாறு தடுக்க முடியாமல் போனது ஏன்?
அய்.பி. எனும் உள்நாட்டு உளவுத் துறையில் ஆர்.எஸ்.எஸ்., ஆதரவாளர்களின் ஊடுருவுதல் நடந்திருக்கிறது. அவர்கள், ஹேமந்த் கர்கரேயைக் கொன்று, பார்ப்பனரின் திட்டத்தையும் காப்பாற்ற முடிவு செய்து விட்டதால், தங்களுக்கு கிடைத்த ரகசியச் செய்தியை, மகாராஷ்டிர அரசுக்கும், இந்தியக் கப்பற்படையின் மேற்குப் பிரிவுத் தலைமைக்கும் தெரிவிக்காமல் விட்டுவிட்டனர். அதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கே அது ஆபத்தாக ஆயிற்று.
மடிக்கணினியில் புதைத்திருந்த ரகசியங்கள்
கர்னல் புரோஹித், பாண்டே போன்றவர்கள் அபிநவ் பாரத் எனும் இயக்கத்தைச் சார்ந்தவர்கள். அதை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தீவிரமான பார்ப்பன வடிவம் எனலாம். அந்த அமைப்பின் மடிக்கணினியின் (லேப்டாப்) மூலம், ஹேமந்த் கர்கரே, உயர் காவல்துறை அதிகாரி என்ற முறையில் முக்கியச் சதித்திட்டத் தகவல்களைச் சேகரித்து வைத்திருந்தார். மடிக்கணினியில்இருந்த ரகசியங்களை மகாராஷ்டிரா அரசுக்குக் கர்கரே தெரிவித்தார்.
53 இடங்களில் பயிற்சி
மாலேகான் எனும் ஊரில் நடந்த குண்டுவெடிப்பில் கர்னல் புரோஹித் முதலியவர்கள் ஈடுபட்டிருந்த விவரத்தைக் கர்கரே, இந்த மடிக்கணினியில் இருந்த விவரங்கள் மூலம் அறிந்து வெளிப்படுத்தினார். அபிநவ் பாரத் எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஆரியவர்த்த இந்து ராஷ்டிரத்தை உருவாக்கத் திட்டம் தீட்டியிருந்தார்கள்.
வெடிகுண்டு செய்தல், அதைப் பயன்படுத்துதல், அவற்றைச் செய்துகாட்டல் எனும் வகையில், நாக்பூர், புனே முதலிய 53 இடங்களில் பயிற்சி அளித்தனர். அவர்கள் பெரிய அளவில் நிதி திரட்டினர், கூட்டங்கள் கூட்டித் திட்டம் தீட்டினர். இஸ்ரேல் நாட்டின் அரசு, நேபாள மன்னர் ஆகியோருடன் பேச்சுகள் நடத்தினர். ஏ.கே 47 ரகத் துப்பாக்கிகள் பெறத் திட்டம் வைத்திருந்தனர். வெளிநாட்டில் அரசு அமைப்பது என்றும் அதற்கு இஸ்ரேலின் ஆதரவு பெறுவது என்றும் முடிவு செய்தனர். இவை அனைத்தும் மடிக் கணினியில் பதிவு செய்யப்பட்டிருப்பதை ஹேமந்த் கர்கரே அறியலானார்.
ஆசை வார்த்தைகளுக்கு இணங்கவில்லை
இவ்வளவு தகவல்களை அறிந்திருந்த அவரைத் தங்களின் ஆதரவாளராக மாற்ற இந்து மதத் தீவிரவாதிகள் எவ்வளவோ ஆசை காட்டினார்கள். ஆனால் அவற்றிற்கெல்லாம் கர்கரே மசியவில்லை. இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிராக இந்து ராஷ்டிரம் அமைவதைத் தடுப்பதில் உறுதியாக இருந்து உயிர்துறந்தார். அப்படிப்பட்ட அவர், மிக உயர்ந்த விருது பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர் ஆவார்.
மராத்தி மொழி பேசிய பயங்கரவாதிகள்
மும்பையில் இருக்கும் காமா மருத்துவமனையில் நடந்த கலவரத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்குப் படையை அனுப்பக் கோரி, கர்க்கரே பலமுறை வேண்டிக்கொண்டும் பயனில்லை. ஆகையால் அவரே செல்ல நேர்ந்தது. காமா மருத்துவமனையில், கர்கரேயைச் சுட்டுக்கொன்ற பயங்கர வாதிகள் மராத்திய மொழியைப் பேசியதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. ஆகையால் பாகிஸ்தானியத் தீவிரவாதிகளாக அவர்கள் இருக்க முடியாது. தாஜ் விடுதி முதலிய இடங்களைத் தாக்கிய பயங்கரவாதிகள் 284 முறை பாகிஸ்தானுடன் தொடர்பு கொண்டிருந்தனர். ஆனால் கர்கரேயைக் கொன்றவர்களுடன் ஒரு முறைகூடத் தொடர்பு கொள்ளவில்லை. இந்தத் தகவல்களைக் கொண்டு, வெளிநாட்டில் இருந்து வந்து தாக்குதல் நடத்தியவர்கள் வேறு, கர்கரேயைக் கொன்றவர்கள் வேறு என்பதை நாம்அறிய வருகிறோம்.
இந்திய உளவுத் துறைக்குக் கிடைத்த தகவல்களை அறிந்து மகாராஷ்டிர அரசும் கப்பற்படையும் செயல்பட்டிருந்தால், வெளிநாட்டில் இருந்து வந்த பயங்கரவாதிகளை உயிருடன் பிடித்திருக்க முடியும்.
சுல்தான்கள், மற்றும் மொகலாயர்களின் ஆட்சிக் காலத்தில், முஸ்லிம் அரசுகளுக்கு எதிராகப் பார்ப்பனர்கள் கிளர்ச்சி செய்ததாக வரலாறு தெரிவிக்கவில்லை. மாறாக முஸ்லிம் மன்னர்களின் நிருவாகத்தில் பெரும் அளவில் அவர்கள் பங்கு பெற்றார்கள்.
பார்ப்பனர்கள் கலவரம் செய்வது ஏன்?
இப்பொழுது, பார்ப்பனர்கள் கலவரம் செய்வதும், இந்து ராஷ்டிரம் அமைக்க வேண்டும் என்று முயல்வதும் ஏன்? மகாத்மா ஜோதிபா, ஃபுலெ, சாகு மகராஜ், பெரியார், டாக்டர் அம்பேத்கர் முதலியவர்களின் முயற்சியால் தற்காலத்தில் பாமர மக்கள் விழிப்படைந்துள்ளனர். தங்களுடைய உரிமைக்கும் சமத்துவத்திற்கும் போராடுகின்றனர். அந்தப் போராட்டம் வெற்றிபெறும் நிலையில், பார்ப்பனர்களின் தனிச் சலுகைகளும் ஆதிக்கமும் போய்விடும். அதை அறிந்த பார்ப்பனர்கள், மக்களுடைய கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் முஸ்லிம்களின் மீது வெறுப்பையும் பகையையும் தூண்டிக் கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்திய உளவுத் துறை (அய்.பி.), முஸ்லிம்களுக்கு எதிரான சூழலை உருவாக்க விரும்புவோருக்கு உதவும் வகையில் தகவல்களை உருவாக்கி வெளியிடுகிறது.
வீரமணிக்கு நன்றி
என்னுடைய இந்த நூல் வெளியிடப்பட்ட பொழுது மும்பையில் கிடைத்த வரவேற்பை விட இங்கு இப்பொழுது கிடைக்கும் வரவேற்பு எனக்கு உற்சாகத்தை உண்டாக்குகிறது. பெரியாரின் மண்ணுக்கு வந்து ஊக்கம் பெறுகிறேன். தொடர்ந்து இந்த நூலைப் பரிந்துரைத்துவரும் வி.டி.ராஜசேகருக்கும், இவ்வளவு சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடு செய்து பெருமைப்படுத்தியுள்ள மதிப்பிற்குரிய வீரமணி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
------------------------நன்றி:-”விடுதலை” 4-2-2010
No comments:
Post a Comment