Search This Blog

1.10.09

பெரியாரை சனி பகவான் ஏன் பிடிக்க முன்வரவில்லை?



சனி

சனி என்பது ஒரு கோள் என்று தெரிந்திருந்தும், அதனை சனீஸ்வர பகவானாக்கி, அதன் வாலைப் பிடித்துத் தொங்கும் இந்தப் பத்திரிகையாளர்களை நினைத்தால் ஒரே குமட்டலாக இருக்கிறது.

ஒரு வார இதழ் சற்றும் வெட்கம் இல்லாமல் ஒரு கரடியை அவிழ்த்துவிடுகிறது.

ஒருவன் சனியின் பிடியிலிருந்து விடுபட்டு நல்ல கதி அடைவான் என விதியிருந்தால் அவன் தன்னுடைய தெய்வ பலத்தினாலேயோ, மூதாதையரின் புண்ணியத்தினாலேயோ, அவனையும் அறியாமல் ஏதாவது ஒரு வகையில் இங்கு வந்து என்னை தரிசிப்பது மட்டுமின்றி, உன்னையும் வழிபடுவான்!

இது ஈஸ்வரனாகிய ஸ்ரீவாஞ்சி நாதர் சனி பகவானுக்கு அருளிய அருள்வாக்கு என்று எழுதுகிறது இந்த வார இதழ்.

அது உண்மையாக இருந்தால் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எத்தனையோ பேர் இலட்சக்கணக்கில் இருக்கிறார்களே அவர்களில் ஒரே ஒருவரையாவது சனி பகவான் பிடித்ததில்லையா? அப்படிப் பிடித்திருந்தால் அதில் ஒருவராவது சனீஸ்வர பகவானை வழிபடச் சென்று இருக்கவேண்டுமே!

அதுவும் நாத்திகத் தலைவரான தந்தை பெரியாரை சனி பகவான் ஏன் பிடிக்க முன்வரவில்லை? அந்தப் பகுத்தறிவுப் பகலவன் முன் சனீஸ்வர பகவான் பொசுங்கி விடுவான் என்ற பயமா?

சனீஸ்வர பகவான் கோயிலுக்குப் போகாதவர்கள், பக்தர்களில்கூட எத்தனையோ பேர்கள் இருக்கத்தானே செய்வார்கள்? ஸ்ரீ வாஞ்சி நாதக் கடவுள் சொன்னபடி அவர்கள் எல்லாம் சனீஸ்வரன் கோயிலுக்குச் செல்லவில்லையே

புளுகுவதிலும் அளவு வேண்டாமா?

சனி என்ற கிரகம் தோன்றியது எப்போது?

சனீஸ்வரன் கோயில் தோன்றியது எப்போது?

யாரைப் பார்த்து யார் காப்பி அடித்தார்கள்? சிந்திக்கவேண்டாமா?

திருநள்ளாறில் மட்டுமல்ல, தேனி மாவட்டம் குச்சனூரில் சனி பகவானுக்கென்று தனிக் கோயில் உண்டாம். இது சுயம்புவாம் அதாவது தானாகத் தோன்றியதாம் (என்னே புரூடா!).

இந்தக் கோயிலின் ஸ்தல விருட்சத்தில் தொட்டில் கட்டி ஆட்டினால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்குமாம்.

திருநள்ளாறில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு இந்த அற்புதங்கள் கூறப்படவில்லை; ஆனால், குச்சனூர் சனீஸ்வரனுக்கு இந்த அற்புதங்கள் கூறப்படுகின்றன.

ஒரே பகவானிடமே இப்படி ஒரு மித்திரபேதம் ஏன்? புரியவில்லையா? எல்லாமே தொழில் போட்டிதான்!

---------- மயிலாடன் அவர்கள் 1-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: