Search This Blog

21.7.09

மூடநம்பிக்கையை முறியடிக்க பகுத்தறிவாளர்கள் நாளை காலை உண்ணும் விரதம்!


கிரகணத்தைக் காட்டிப் புருடாவிடும் போலி கும்பல்கள்
கிரகண நேரத்தில் மாறுதல்களை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் முடிவு
உண்பதற்கும், கிரகணத்திற்கும் தொடர்பே கிடையாது
மூடநம்பிக்கையை முறியடிக்க பகுத்தறிவாளர்கள் நாளை காலை உண்ணும் விரதம்!


நாளை சூரிய கிரகணத்தின்போது, காலை 6.30 மணிமுதல் 7 மணிக்குள்ளாக காலைச்சிற் றுண்டியை, நமது பெரியார் கல்வி நிறுவன மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், சென்னை பெரியார் திடலில் உள்ள விடுதலை குடும்பத்தினர், பகுத்தறிவாளர்கள், கழகத்தவர்கள் கூடி உண்ணும் விரதத்தை நடத்தி, உண்ணுவதற்கும், கிரகணத்திற்கும் சம்பந்தம் இல்லை என் பதை நிரூபிக்க உள்ளனர்.

21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட நேர சூரிய கிரகணம் நாளை (22.7.2009) காலை 5.28 மணிக்குத் தொடங்குகிறது. 7.20 மணிக்கு (காலை) முடிகிறது.

இந்த சூரிய கிரகணம் சுமார் 6 நிமிடம் 38 வினாடிகள் நேரத்திற்கு நீடிக்கும்.

சந்திரன் பூமி சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படுபவைதான் சூரிய, சந்திர கிரகணங்கள் என்பது அறிவியல் பாடங்களில் வகுப்பறைகளில் சொல்லிக் கொடுக்கப்பட்டு வரும் நிலையில்,

ஜோதிடச் சுரண்டல் கும்பல்கள்

இது சூரியனை ராகு, கேது பாம்புகள் விழுங்குவதால் ஏற்படுவதாகும்; இதனால் உலகுக்குக் கேடு ஏற்படும்; புயல் ஏற்படும்; சுனாமி ஏற்படும்; மக்களுக்கு அழிவு ஏற்படும் என்று புருடா விட்டு பிழைக்க, நாட்டில் பல ஜோதிடச் சுரண்டல் கும்பல்கள் கிளம்பிவிட்டன!

விஞ்ஞானச் செய்திகளை வெளியிடும் நாளேடுகள் பலவும்கூட சிறிதும் வெட்கமின்றி இந்த மூடத்தனத்தையும், நம்புங்கள் நாராயணன்கள் அறிக்கைகளை வெளியிட்டு அப்பாவி மக்களை பயமுறுத்தி வருகின்றனர்!
அறியாமையைவிட மிகப்பெரிய வியாதி மனித குலத்திற்கு வேறு கிடையாது என்றார் அமெரிக்க இங்கர்சால்!


யூகத்தின் அடிப்படையில் உருவானதே ஜோதிடவியல்


வானஇயல் (Astronomy) என்பது அறிவியல் (Science); ஜோதிடம் (Astrology) என்பது போலி விஞ்ஞானம் (Pseudo science) விஞ்ஞானம் அறிவியல் எதையும் ஆதாரம் கொண்டு நிரூபித்து, திறந்த மனத்தோடு அணுகுவது. ஜோதிடம் என்பது வெறும் மூடநம்பிக்கை. வானவியல் என்பது அறியும்முன்பே, ஆதிகாலத்து மனிதர்கள் பழக்கவழக்கம் யூகத்தினால்_ பூமி உருண்டை என்பதை அறியாத காலத்திலிருந்தே, சூரியன், சந்திரன், கிரகங்கள் என அந்தக்கால ஆதி மனிதர்கள் எதை நம்பினார்களோ அவர்களின் யூகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே ஜோதிடவியல்.

இயற்கையைக் கண்டு அஞ்சி நடுங்கிய ஆதி மனிதர்கள், காட்டுமிராண்டிப் பருவத்தில் இருந்தபோது, அவர்கள் பஞ்ச பூதங்கள் அனைத்தும் கடவுள்கள் என நம்பி, அஞ்சி, மேலே ஒரு கடவுள் இதனையெல்லாம் நடத்துநராக இருந்து உத்தரவு போட்டு நடத்துகிறார் என்று நம்பிய காலத்தில் உருவான மூட நம்பிக்கையின் தொகுப்பு.

பிறகு வந்த மனிதர்களின் சுரண்டலுக்கு இது நல்ல முதல் போடா வியாபாரமாகிவிட்டது; அவர்கள் கொள்ளை லாபக் குபேரர்கள் ஆகி, டாக்டர்கள் தருவதுபோல அவரவர்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் தரும் நிலைக்கு தொழில் வளர்ச்சி பெருகிவிட்டது!

நாளேடுகள் பலவும் இந்தக் கூட்டுக் கொள்ளையில் பங்கு பெறுவதில் யார் முந்திக் கொள்வது என்ற போட்டிப் பந்தயத்தில் சிறிதுகூட வெட்கமின்றி இறங்கி விளையாடுகின்றன!

தந்தை பெரியாரின் ஜோதிடப் புரட்டுக்கு மறுப்பில்லை

தந்தை பெரியார் அவர்கள் 80 ஆண்டுகளுக்குமுன்பே, ஜோதிடப் புரட்டுபற்றி எழுதி பரப்பினார்கள்; எந்த ஜோதிடரும் இதுவரை அதற்கு மறுப்புக் கூற முன்வரவில்லை!

டாக்டர் அப்ரகாம் டி கோவூர் என்ற பகுத்தறிவு நாத்திகப் பேராசிரியர் அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்:

வால்டேர் 32 வயது வரைதான் வாழ்வார் என்று இரண்டு பிரெஞ்சு ஜோசியர்கள் ஆருடம் கூறினர்; அதைப் பொய்யாக்கி அவர் 84 வயது வரை வாழ்ந்தார்.

நெப்டியூன், யுரேனஸ், புளுட்டோ முதலியவை ஜோதிடர்களது கட்ட வரிசையில் இடம்பெறவில்லை. காரணம், அப்போது அக்கோள்கள்பற்றி ஜோதிடம் கணித்தவர்களுக்குத் தெரியாது! என்றார்.

ராகு, கேது யார்? என்று கேட்பார்கள்

வானவெளிப் பயணம் செய்து திரும்பி, செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல ஆயுத்தமாகுவோரிடம் ராகு, கேதுவை எங்காவது சந்தித்தீர்களா? என்று கேட்டுப் பாருங்கள் அவர்கள் எல்லாம் யார் என்றுதானே கேட்பார்கள்?

சிலருக்கு சில காரியங்கள் நடந்து விடுகின்றன என்பது காக்கை உட்காரவும் பனம்பழம் விழுவது போன்ற ஒன்று; ஒன்றை ஒன்று முடிச்சுப் போட்டுப் பார்த்து நம்புதல் எவ்வளவு அறியாமையோ, அப்படித்தான் இதுவும்!

நவக்கிரகங்கள் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்களே, அதில் 5 மட்டும்தான் உண்மையான கிரகங்கள்! எஞ்சிய நான்கில், ஒன்று நட்சத்திரம்; மற்றொன்று சுற்றுக்கோள் (Satelite) மற்ற இரண்டும் இல்லாதவை! இதிலிருந்து கூட்டிப் பெருக்கி வரும் விடைகள் கண்டால் அவை எப்படி சரியாக இருக்கும்? என்று கேட்டார் டாக்டர் கோவூர்!

விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உள்ளனர்

நாளைய சூரிய கிரகணம்பற்றி ஆராய்ச்சி செய்ய உலகின் பற்பல நாடுகளிலிருந்தும் சுமார் 2 லட்சம் விஞ்ஞானிகள் பிகாரில் பாட்னா அருகில் உள்ள தமன்னா என்ற கிராமத்து அருகில்தான் மிகத் துல்லியமாக அதிகநேரம் பார்க்க முடியும் என்று கண்டறிந்து (ஆரிய பட்டா இங்கேதான் விண்வெளி ஆய்வை மேற்கொண்டார் என்றும் கூறப்படுகிறது).

நாளை கிரகணம் ஏற்படும் முன்பும், ஏற்படும்போதும், கிரகணம் ஏற்பட்டபோதும், சுற்றுச்சூழலில் எத்தகைய மாறுதல்கள் ஏற்படுகின்றன என்பதை அந்த விஞ்ஞானிகள் வானவியல் நிபுணர்கள் ஆய்வு செய்ய உள்ளனராம்!

இதுதானே சரியான அறிவியல் அணுகுமுறை? செவ்வாய் கிரகத்திற்கும், வியாழன் கிரகத்திற்கும் இடையே சுமார் 1500 சிறு கிரகங்கள் உள்ளன என்றும், சூரிய கிரகணத்தின்போது, இந்த கிரகங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவிருக்கிறார்கள்.

இதுதவிர மின்சக்தி மற்றும் புவி அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவே அங்கு சென்றுள்ளார்கள்!

உண்ணுவதற்கும், இதற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. கருவுற்றிருப்பவர்கள் கிரகணத்தைப் பார்க்கக் கூடாது என்பதும் மூடநம்பிக்கை.

21 ஆம் நூற்றாண்டிலும் இப்படி, மூட நம்பிக்கை ஏடுகள், வியாபாரிகள் மக்களை மடமைக்குள் தள்ளலாமா?

உண்ணும் விரதம்

இதனை நடைமுறையில், செயல் விளக்கமாக்க நாளை காலை 6.30 மணிமுதல் 7 மணிக்குள்ளாக காலைச் சிற்றுண்டியை, நமது பெரியார் கல்வி நிறுவன மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், சென்னை பெரியார் திடலில் உள்ள விடுதலை குடும்பத்தினர், பகுத்தறிவாளர்கள், கழகத்தவர்கள் கூடி உண்ணும் விரதத்தை நடத்திட முடிவு செய்து, ஏற்பாடுகளை மகிழ்ச்சியுடன் நமது பொறுப்பாளர்கள் ஆங்காங்கே செய்து வருகின்றனர்.

என்று மடியும் இந்த மடமையின் மோகம்?

------------------"விடுதலை" 21-7-2009

5 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//மூடநம்பிக்கையை முறியடிக்க பகுத்தறிவாளர்கள் நாளை காலை உண்ணும் விரதம்!//

நல்ல நோக்கம் தான் தமிழ் ஓவியா ஐயா,

ஆனா ஒன்னுதான் புரியல...!

விரதம் என்றால் நோன்பு அல்லது பட்டினி ஆங்கிலத்தில் பாஸ்டிங்...

உண்ணும் விரதம் என்றால் என்ன?

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

உண்ணா விரதம் என்பதற்கு எதிர்ச் சொல்லாக மக்களுக்கு புரியும் விதத்தில் சொல்லப்படும் ஒரு சொல்லாக்கம் தான் உண்ணும் விரதம் அவ்வளவே.

கோவி.கண்ணன் said...

//நமது பெரியார் கல்வி நிறுவன மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள்,//

பெரியார் கல்வி நிறுவன மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியவர்களில் பலர் பகுத்தறிவாளர்களின் அனைத்து செயல்களையும் ஏற்றுக் கொள்வதில்லை, அவர்களையும் வற்புறுத்தி உண்ணும் விரதத்தில் பங்கெடுக்கச் சொல்வது பகுத்தறிவு வாதமா ?

வால்பையன் said...

ஓசி சோறா!

முன்னாடியே தெரிஞ்சிருந்தா வந்தருப்பேனே!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உண்ணும் விரதம் எனும் சொல்லாக்கமே பகுத்தறிவிற்கும்,கொள்கைக்கும் உறவின்றி விலகிச் செல்கிறது.

இதுவும் ஒரு மூட நம்பிக்கையைப் புகுத்தும் முயற்சி என்றால் சரி என்றே சொல்வேன்.

அதனால் சொல்லாக்கத்தில் மூட நம்பிக்கைகளை முதலில் களைந்தெடுக்கலாம் என்பது எனது வெண்டுகோள்.

சரியான சொற்களை அல்லது சொற்றொடர்களை மக்க்ளுக்கு பழக்கினால் தவறா என்ன?