Search This Blog

6.5.09

தொழிலாளி மகன் தொழிலாளியாக இருக்கக்கூடாது என்பது எனது இலட்சியச் சொல்!



தொழிலாளியே இருக்கக்கூடாது!


தோழர்களே! தாய்மார்களே!

என்னுடைய அனுபவத்தை உங்களுக்குச் சொல்கிறேன். இந்தத் தொழிலாளர் இயக்கங்கள் நாட்டில் ஏற்பட்ட பிறகுதான் தொழிலாளர்களின் ஒழுக்கமே கெட்டுப்போய் விட்டது. அவர்கள் ஒழுக்கம் மட்டும் அல்லாமல் முதலாளிகளின் ஒழுக்கமும் கெட்டு, அதனால் மக்களுக்குப் பெருந்தொல்லையும் ஏற்பட்டுவிட்டது. அப்படியானால், தொழிலாளர் சங்கமே கூடாது என்பதல்ல. இன்று தொழிலாளர்கள் இயக்கங்கள், தொழிலாளர்கள் கையில் இல்லை. தொழிலாளர்களாக இல்லாதவர்கள் கையில் -- அதாவது அதைக்கொண்டு வயிறு வளர்ப்பவர்கள் கையில்தான் உள்ளது. தொழிலாளர் சங்கம் ஏற்பட்ட நாள்தொட்டு, அரசியல் கட்சிக்காரர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழிற்சங்கம் என வைத்துப் பதவிப் பலன் பெற்றுப் பொறுக்கித்தின்கின்றார்கள்!

எனது 50 ஆண்டு அனுபவத்தின் பயனாகக் கூறுகின்றேன். அந்தக் காலத்தில் காங்கிரசுக்-காரர்களே (பார்ப்பனர்கள்) தொழிலாளர்களைப் பயன்படுத்திப் பிழைக்கவும், பெருமையடையவும் தொழிலாளர்களை வேட்டையாட ஆரம்பித்தார்கள். இந்த நிலை அன்னி பெசன்ட் காலத்தில்தான் முதன்முதல் ஏற்பட்டது எனலாம். மற்றும் வாடியாவுக்கு என்று ஒரு தொழிற்சங்கம்; திரு.வி.க.வுக்கு என்று ஒரு தொழிற்சங்கம்; பிறகு ரெங்கசாமி அய்யங்காருக்கு ஒன்று; சத்தியமூர்த்திக்கு ஒன்று, வரதராஜுலு (நாயுடு)வுக்கு ஒன்று என இப்படியாக ஏற்பட்டுவிட்டது.

இன்று தொழிற்சங்கம் என்றாலே, முதலாளிகளுடன் சண்டை பிடிக்கக்கூடிய ஸ்தாபனம் என்றுதான் இயங்கிக்கொண்டு வருகின்றது. இதனால் உற்பத்தி குறைகின்றது; இந்தத் தகராறு முதலாளி-தொழிலாளி இருவர்களோடு மட்டும் போகாமல் பொதுமக்களுக்குப் பாதகமாகவும் முடிகின்றது.

நல்ல தொழிலாளர் சங்கம் என்ற ஒன்று இருக்க வேண்டுமென்றால், அது முதலாளி இடத்தில் விசுவாசம்,- சொந்தப் பொறுப்புபோலக் கருதித் தொழில் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவது, முதலியவற்றைக் கொள்கைகளாகக் கொண்டிருக்க வேண்டும்.

அதுபோலவே, சிறந்த முதலாளிகள் என்பவர்களும் தொழிலாளர்களைத் தங்கள் சொந்தப் பிள்ளைகள் போல் பாவித்து அவர்கள் நன்மையில், மேம்பாட்டில் நாட்டம் செலுத்த வேண்டும்.

நான் சிறிய முதலாளியாக இருந்தவன். எங்கள் அய்யா பெரிய முதலாளி, கணக்குப் பிள்ளைக்கு ரூ.7 தான் அப்போது சம்பளம்; காரியஸ்தருக்கு 6 தான் மாதம் கொடுப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் 4, 5 பிள்ளை குட்டிகள் இருக்கும். அவர்கள் வாங்கும் சம்பளம் சாப்பாட்டிற்குத்தான்; மற்றபடி பிள்ளைகள் படிக்க, புத்தகம், துணிமணிகள், கலியாணம் எல்லாவற்றிற்கும் முதலாளிகள் தனியாகப் பணம் கொடுத்துப் பெருமையாக நடத்துவார்கள். சண்முகம் பிள்ளை என்ற என் குமாஸ்தா கலியாணத்திற்கு, சதிர்க் கச்சேரியுடன், சாரட்டில் ஊர்வலம் வைத்தேன். அவர் என் குடிஅரசு ஆபீஸிலும் 1945 வரை இருந்து, 40 வருஷம் உழைத்துச் செத்தார். விடுதலை ஆபீசு வாட்சுமேன் பழனி என்பவர் 35 வருஷமாக என்னிடம் இருக்கிறார்.


தொழிலாளர்களைக் கெடுத்தது தொழிலாளர் சங்கங்களின் - தலைவர்கள் மட்டுமல்ல; அரசாங்கமும் கெடுக்கின்றது. அவர்கள் சட்டம் எந்த நல்ல தொழிலாளியையும் கெடுத்து வருகிறது.

தொழிலாளி மகன் தொழிலாளியாக இருக்கக்கூடாது என்பது எனது இலட்சியச் சொல். கம்பாசிட்டர் மகன் கம்பாசிட்டராகவே இல்லாமல், சிறு அச்சு ஆபீஸ் வைத்து நடத்துபவராக ஆகவேண்டும்; அல்லது ஆபீஸ் மானேஜர் அல்லது குமாஸ்தாவாகவாவது ஆகவேண்டும்.

தொழிலாளி மகன் பரம்பரை பரம்பரையாகத் தொழிலாளி என்பது இல்லாமல் மறையவேண்டும். மேலும், இந்த நாட்டில் தொழிலாளியே இருக்கக்கூடாது. அப்படியானால், தொழிலாளி இல்லாவிட்டால் தொழில் எப்படி நடக்கும் என்ற கேட்கலாம். அதுபற்றி உங்களுக்கு என்ன கவலை? எப்படியாவது போகிறது; அவசியம் உள்ளவன் செய்து-கொள்கிறான். கக்கூஸ் எடுப்பவன் பரம்பரை பரம்பரையாகக் கக்கூஸ் எடுத்துக் கொண்டுதான் இருக்க வேண்டுமென்றால் என்ன நியாயம்? அவன் எடுக்கமாட்டேன் என்றால் கட்டாயப்படுத்த முடியுமா? இப்படி எடுப்பதற்கென்றே ஓர் ஜாதி இருப்பதுதான் ஜனநாயகமா? அதுபோல் தொழிலாளி என்ற ஓர் பரம்பரை இருக்கலாமா?

நான் தொழிலாளி கூடாது என்பதெல்லாம் - அவர்கள் பரம்பரையாகத் தொழிலாளிகளாக இருக்கக்கூடாது என்பதற்காகவே! தொழிலாளர்கள் தொழிலில் பங்குதாரர்கள் ஆகவேண்டும். என் கருத்து என்னவென்றால், தொழிலாளிக்கு இலாபத்தில் பங்கு கிடைக்க வகை செய்யவேண்டும்; தொழிலாளி தொழிற்சாலையில் பங்குதாரர்போல என்பதேயாகும்.

----------------சென்னை, தினத்தந்தி அலுவலகத்தில், 14.4.1959-இல் தந்தைபெரியார் அவர்கள் சொற்பொழிவு - "விடுதலை" 18.4.1959

2 comments:

Unknown said...

i always read your one.why you always against the birhamins.note bleddy fucker i am not birhamin.

தமிழ் ஓவியா said...

சூத்திரன் என்று என்னை இழிவு படுத்தியவர்கள் பார்ப்பனர்கள். அது மட்டுமல்ல பார்ப்பனர்கள் செய்யும் செய்த அக்கிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

ஒரு முறை இந்த வலைப்பூவில் உள்ள பதிவுகளை படித்து விட்டு பின்னூட்டம் இடவும்.