Search This Blog

4.7.08

அறிவாளிகள் விஞ்ஞானிகள் நாத்திகர்களே! -அன்னை தெரசாவுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?









நீங்கள் என்னதான் கரடியாகக் கத்தினாலும், கடவுள் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தாலும், மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தாலும் நாட்டில் கோயில்கள் பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன. பக்தி வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டுதானிருக்கின்றது என்று நம்மைப் பார்த்து ஏகடியம் செய்பவர்கள் நாட்டில் உண்டு.

படித்த பாமரர்கள், படிக்காத பாமரர்கள் எனப்படும் இருவகையினரிடமும் பக்தி இருக்கிறது. கடவுள் நம்பிக்கையும் நிரம்ப உண்டு என்றாலும் அதனை வைத்து ஒரு முடிவுக்கு வருவது பாமரத்தனமே!

விஞ்ஞானிகள் அறிவாளிகள், சிந்தனையாளர்கள் மத்தியில் கடவுளுக்கு உள்ள இடம் எது? மதத்திற்குரிய மதிப்பீடு என்ன என்பதுதான் முக்கியம்.

``அறிவாளிகளுக்கு இறை நம்பிக்கை குறைவு என்ற தலைப்பில் `தினமணி ஏட்டில் வெளிவந்த செய்தி இதோ:

அறிவாளிகளுக்கு இறை நம்பிக்கை குறைவு!

சாதாரண மக்களுடன் ஒப்பிடுகையில் அறிவாளிகளுக்கு இறை நம்பிக்கை குறைவாகவுள்ளதாக, லண்டன் அல்ஸ்டெர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் தாங்கள் நடத்திய ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் அறிஞர்களுக்கு இறை நம்பிக்கை மிக மிகக் குறைவு. தாங்கள் புத்திக் கூர்மையோடு திகழ்வதற்கு தங்களது திறனே காரணம்; இதற்கு வேறு காரணம் எதுவும் இல்லை என்றே பெரும்பாலான பிரிட்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர். இறை நம்பிக்கை: பிரிட்டனில் ஆரம்பக் கல்வி பயில்பவர்கள் மத்தியில் இறை நம்பிக்கை அதிகம் உள்ளது. அவர்கள் வளர்ந்து அறிவு முதிர்ச்சி பெறப் பெற அவர்கள் மத்தியில் இறை நம்பிக்கை மெதுவாகக் குறைய ஆரம்பித்து விடுகிறது. அந்தவகையில் 20-ஆம் நூற்றாண்டில் 137 வளரும் நாடுகளில் மக்கள் மத்தியில் சமய நம்பிக்கை குறைந்து வருகிறது. மக்கள் அறிவாளிகளாக மாறிவருவதே இதற்குக் காரணம். பிரிட்டனில் 3.3 சதவீதம் பேர்தான் இறை நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தனர். 68.5 சதவீதம் பேர் தங்கள் மீதான நம்பிக்கை தவிர்த்து வேறெந்த நம்பிக்கையும் இல்லை என தெரிவித்ததாக, இந்த ஆராய்ச்சிக் குழுவில் இடம்பெற்ற பேராசிரியர் ரிச்சர்டு லைன் தெரிவித்தார். (தினமணி 13.6.2008, பக்கம்:10)"

20-ஆம்நூற்றாண்டில் வளர்ந்து வரும் 137 நாடுகளில் சமய நம்பிக்கை குறைந்து வருவதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

`இந்து ஏடும் (16.9.2005) ஒரு கணிப்பினை மூன்று ஆண்டுகளுக்குமுன் வெளியிட்டது.
நீங்கள் எந்த அளவிற்கு மத நம்பிக்கை கொண்டுள்ளீர்கள் என்ற வினாவுக்கு ஓரளவுக்கு என்று 49 விழுக்காட்டினரும், எனக்கு மதப்பற்று அறவேயில்லை என்று கறாராகக் கூறியவர்கள் 14 விழுக்காட்டினரும், அதிகப் பற்றுக் கொண்டுள்ளேன் என்று 45 விழுக்காட்டினரும் கூறினர்
என்று `இந்து வெளியிட்டது.

கோயிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவீர்களா என்ற வினாவுக்கு வாரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை யில் செல்லுவோம் என்று 31 விழுக்காட்டினரும், வாரம் ஒரு முறை செல்லுவோர் என்று 38 விழுக்காட்டினரும் மாதத்திற்கு ஒருமுறை போவோம் என்று 18 விழுக்காட்டினரும் இரு வாரத்திற்கு ஒரு முறை செல்லுவேன் 4 விழுக்காட்டினரும் கருத்துக் கூறினார்கள்.

இன்றைய நாள்களில் இளைஞர்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதா என்ற கேள்விக்கு `ஆம், உண்டு என்று 45 விழுக்காடு மக்களும், அதிகமானவர்களுக்கு உண்டு என்று 34 விழுக்காட்டினரும், மிகச் சிலருக்கே உண்டு என்று 21 விழுக்காட்டினரும் கருத்துக் கூறினர்.
18 வயது முதல் 45 வயது வரை உள்ள இருபாலரையும் சேர்த்து 220 பேர்களிடம் கேட் கப்பட்ட கேள்விகளுக்குக் கிடைத்த விடையே இது என்று `இந்து கூறுகிறது.

கடவுள் நம்பிக்கையின் ஆணிவேர், மத நம்பிக்கையின் அடித்தளம் இற்று வீழ ஆரம் பித்துவிட்டது; நொறுங்கத் தொடங்கியிருக்கிறது என்பது காமாலைக் கண்ணர்களைத் தவிர பொது நிலையில் நின்று சிந்திப்பவர்களுக்கு விளங்காமற்போகாது.

அமெரிக்காவின் 'Nature' என்கிற விஞ்ஞான இதழில் வெளிவந்த தகவல் ஒன்றினை `ராணி வார இதழ் வெளியிட்டு இருந்தது.

கடவுள் நம்பிக்கையற்ற விஞ்ஞானிகள் பற்றிய தகவல் அது:
1914-இல் 72 விழுக்காடு
1993-இல் -85 விழுக்காடு
1999-இல் 90 விழுக்காடு
(`ராணி 11.7.1999)


விஞ்ஞானிகளில் கடவுள் நம்பிக்கை மற்றவர்களின் விழுக்காடு இது:
பிரிட்டனில்
UNI செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி ஒன்று இதோ:

பிரிட்டன் பாதிரியார்கள் 10-இல் ஒருவர்தான் ஆதாம், ஏவாளை நம்புகின்றனர்!
27.12.1999 நாளிட்ட (மாலை 5.15 மணி) UNI செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு கூறுவதாவது:

லண்டன் (ராய்ட்டர்ஸ்) டிசம்பர் 27 (1999) பிரிட்டீஷ் தேவாலய தலைவர்கள் பத்தில் ஒருவர்தான் ஆதாம், ஏவாளை நம்புகின்றனர் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகின்றது.
பி.பி.சி. ரேடியோ நடத்திய வாக்கெடுப்பில் பங்கேற்ற ஆங்கிலிகன், மெதாடிஸ்ட்டு, கத்தோலிக்கத் தலைவர்கள் 103 பேர்களில் மூவர் மட்டுமே உலகினை ஆறு நாள்களில் இறைவன் படைத்தான் என்னும் படைப்புப் பற்றிய கருத்தை நம்புவதாகக் கூறினார்கள்.
அவர்களிடம் ஆதாம், ஏவாள் என்போர் உண்மையில் இருந்தார்கள் என்று நம்புகிறீர் களா என்று கருத்துக் கேட்கப்பட்டபோது 13 சர்ச் தலைவர்கள் மட்டுமே ஆமாம் என்று ஒப்புக் கொண்டனர். அவர்களில் நான்கில் ஒருவர் கன்னிப் பிறப்பை நம்பவில்லை என்றும் சொன்னார்கள்.

அமெரிக்காவின் நிலை

அமெரிக்கர்களில் மத நம்பிக்கை மறைந்து வருகிறது; இளைய தலைமுறையினர் மதம்மாறுகின்றனர்!
இது தொடர்பாக சமீபத்தில் நடத்திய சர்வேயில் கிடைத்த தகவல்கள்: அமெரிக்காவில் மதப்பிடிப்பு வேகமாக குறைந்து வருகிறது. தங்கள் பிள்ளைகள் மத நம்பிக்கை இல்லாமல் இருப்பதையோ, மதம் மாறுவதையோ 25 சதவிகித பெற்றோர் அனுமதிக் கின்றனர். அமெரிக்காவில் கத்தோலிக்க, பிராட்டஸ்டன்ட் உட்பட்ட கிறிஸ்வர்கள் மற்றும் யூத மதத்தினரும் மதப்பிடிப்புகளை இழந்து வருகின்றனர். மொத்தத்தில் 44 சதவிகிதம் பேர், மத நம்பிக்கை இல்லாமலோ, மதம் மாறியோ இருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.
இளைய தலை முறையினரில் பெரும்பாலோர், மதம் சம்பந்தப்பட்ட நம்பிக்கைகளிலும் விழிப்புணர்வுடன் கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிட்டனர்; அவர்களுக்குத் தெளிவான விளக்கம் கிடைக்காததால், அவர்களின் நம்பிக்கை மாறுகிறது என்றும் கூறுகின்றனர். இது தொடர்பாக, ஆன்லைன்' மூலம், 35 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அவர்கள் அளித்த பதிலில் இருந்து, கத்தோலிக்க பிரிவில் தான் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மத நம்பிக்கை இல்லாதவர்கள் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் 35 வயதில் உள்ளவர்களில் மத நம்பிக்கை உள்ளவர்கள் வெகு குறைவாகி விடுவர் என்று கணிக்கப்படுகிறது. அமெரிக்காவை பொறுத்தவரை, மதத்துக்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால், கல்வியுடன் மதத்துக்குத் தொடர்பில்லை; அதுபோல, சாப்ட்வேர் உட்பட, திறமை சார்ந்த பணியாளர்களிடையே மதத்துக்கு தொடர்பில்லை. அதனால் தான் மத நம்பிக்கை, மதப்பிடிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
அமெரிக்கர்களில் 8 சதவிகிதம் பேர், அவர்கள் சார்ந்த மதத்தின் மீது எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் உள்ளனர்; அதற்காக மதம் மாறவில்லை. வாழ்க்கைக்கு மதம் சார்ந்து இருக்கலாம்; ஆனால், அன்றாட வாழ்க்கைக்கு முக்கியமில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். (தினமலர் 6.3.2008 பக்கம்-16)

சோதிடத்தில் நம்பிக்கையில்லை

அறிவியலின் முன் ஜோதிடம் நிற்காது. அடிப்படையற்றது; மிகுந்த மடமை நிறைந்தது சோதிடமே என்று 19 நோபல் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர் அந்தப் பட்டியல் இதோ:
1. ஹேன்ஸ் ஏ. பெத்தே, இயல்பியல் எமிரடஸ் பேராசிரியர், காரனல்
2. சர். பிரான்சிஸ் கிரிக், மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், கேம்ப்ரிட்ஜ், இங்கிலாந்து
3. சர் ஜான் எக்கிள்ஸ், மதிப்பிற்குரிய உடலியல் உயிரியல் பேராசிரியர், பபல்லோவில் உள்ள சுனி
4. ஜெரார்ட் ஹெர்ஸ் பெர்க், மதிப்பிற்குரிய ஆய்வு விஞ்ஞானி, கனடா தேசிய ஆய்வுக் கவுன்சில்.
5. வாசிலி லெனோ டிப், பொருளியல் பேராசிரியர், ஹார்வர்ட் பல்கலைக் கழகம்.
6. கோனார்ட் லோதென்ஸ், பல்கலைக் கழகப் பேராசிரியர், ஆஸ்திரிய அறிவியல் அகாடமி
7. ஆன்ட்ரி எம். லோப், கவுரவ பேராசிரியர், பாஸ்டர் நிறுவனம், பாரிஸ்
8. சர் பீடர் மெடாவர், மருத்துவ ஆலோசனைக் கவுன்சில், மிடில்செக்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து.
9. ராபர்ட் எஸ். முல்லிகன், மதிப்பிற்குரிய வேதியியல் பேராசிரியர், சிகாகோ பல்கலைக் கழகம்
10. லைனஸ் சி. பாலிங், வேதியியல் பேராசிரியர், ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம்.
11. எட்வர்ட் எம் புர்சல், ஜெரார்டு கேடு பல்கலைக் கழகப் பேராசிரியர், ஹார்வர்டு பல்கலைக் கழகம்
12. பால் ஏ. சாமுவேல்சன் பொருளாதாரப் பேராசிரியர், எம்.அய்.டி.,
13. ஜூலியான் சுவிங்கர், இயற்பியல் பேராசிரியர், கலிபோர்னியா பல்கலைக் கழகம், லாஸ் ஏஞ்செல்ஸ்
14. கிளென். டிஸ்டீல் பெர்க், பல்கலைக் கழகப் பேராசிரியர், கலிபோர்னியா பல்கலைக் கழகம், பெர்க்லி
15. ஜே. டின்பெர்கன், எமிரடஸ் பேராசிரியர், நாட்டர்டேம்.
16. என்.டின்பெர்கன், மிருகங்களின் பழக்கம் பற்றிய எமிரடஸ் பேராசிரியர், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம்.
17. ஹெரால்டு சி.உரே. எமிரடஸ் பேராசிரியர், கலிபோர்னியா பல்கலைக் கழகம், சான்டியாகோ
18. ஜார்ஜ் வால்டு, உயிரியல் பேராசிரியர், ஹார்வர்டு பல்கலைக் கழகம்.
19. எஸ். சந்திரசேகரன், பேராசிரியர், சிகாகோ பல்கலைக் கழகம்.
மற்றும் 167 முன்னணி விஞ்ஞானிகள்
(1975 செப்டம்பர்- அக்டோபர் இதழ் `தி ஹுமனிஸ்ட் அமெரிக்க இதழில் வெளியானது)

ஜோதிடம் முற்றிலும் மடமையானது

உலகின் பத்து பேரறிவாளர்களைக் கூட்டி அவர்களிடம், தற்போதுள்ள மிகுந்த மடமை நிறைந்தது எது எனக் காணக் கேட்டால், ஜோதிடரை விட மோசமான முட்டாளைக் காண அவர்களால் இயலாது.

டேவிட் ஹில்பெர்டின் கருத்து (உலகின் மாபெரும் கணிதவியலாளர்களில் ஒருவர் இவர்)
நன்றி: `தி ஹுமனிஸ்ட் செப்டம்பர் / அக்டோபர் 1975)

அன்னை தெரசாவின் நிலை என்ன?

அன்னை தெரசாபற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கத்தோலிக்கரான அவரின் சமூக அறத்தொண்டினைப் போற்றும் வகையில் நோபல் பரிசும் அளித்து கவுரவிக் கப்பட்டார். அவரே கடவுள் நம்பிக்கையற்ற வராகத் திகழ்ந்தார் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து `தி இந்து ஏடு (30.11.2002) விரிவான செய்தி ஒன்றினை வெளியிட்டது. அதன் விவரம் இதோ:

கடவுள்பற்றிய நம்பிக்கையில் அன்னை தெரசாவுக்கு அய்யப்பாடு இருந்தது என்பது உள்ளிட்ட கடிதங்கள் கொண்ட நூல் ஒன்று வெளிவர உள்ளது.

அய்ந்தாண்டுகளுக்கு முன்பு அன்னை தெரசா மறைவுற்றார். அவரைத் தூய துறவி யாக்குவதில் போப் பாண்டவர் விரைந்து செயல் படுகிறார். இந்நிலையில், அன்னை தெரசா அய்ம்பதாண்டுக் காலம் நம்பிக்கை நெருக்கடியில் உழன்றார் எனும் செய்தி வெளியாகி யிருக்கிறது.
கன்னியாக வாழ்ந்த வரும், சமாதானத் திற்கான நோபல் பரிசு பெற்றவருமான அன்னை தெரசா, தமது மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவராக அறிமுகமாகியிருந்தார். ஆனால், அவருடைய மடல்களும், நாள் குறிப்புகளும் அவரைப்பற்றிய முற்றிலும் மாறான ஒரு படப்பிடிப்பைத் தருகின்றன.

இப்பொழுது தெரிய வந்துள்ள உண்மையை உள்ளடக்கும் பொருட்டு, அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாறுகள் மாற்றியெழுதப்பட வேண்டியிருக்கும் என 2002 நவம்பர் 28-இல் வியாழனன்று ரோம் நகரில் கூறினார். இதற்குமுன்பு வெளிவராத செய்திகள் இத்தாலியில் ஒரு நூலாக வெளியிடப்பட இருக்கின்றன. கொல்கத்தாவில், தமது 87-ஆவது வயதில் அந்த அம்மையார் மறைந்த பின்பு கத்தோலிக்க அதிகாரிகள் அந்தச் செய்திகளைத் திரட்டினர்.
கொல்கத்தாவில் ஏழைகளிடையே அன்னை தெரசா பல ஆண்டுகள் பாடுபட்டார். 1958-இல் அவர் இவ்வாறு எழுதினார்:

`பல துயரங்களை மறைக்கும் ஒரு பெரிய திரையாக என்னுடைய புன்னகை விளங்குகிறது. நான் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பதால், என்னுடைய மத நம்பிக்கை எதிர்காலத்தைப்பற்றிய என் நம்பிக்கை, என்னுடைய அன்பு ஆகியவை நிரம்பி வழிவதாகவும், கடவுளுடன் எனக்கு இருக்கும் நெருக்கமும், அவருடைய விருப்பத்துடன் ஒன்றியிருப்பதும் என்னுடைய உள்ளத்தில் நிறைந்திருப்பதாகவும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையை அறியார்.

வேல்ஸ் இளவரசி டயானாவினால் பெரிய அளவில் மெச்சப்பட்ட அன்னை தெரசா, தமது மற்றுமொரு மடலில் இவ்வாறு எழுதினார்:

``இறை (நம்பிக்கை)யை இழந்து பரிசோதனை செய்யும் காரணத்தால் நரகத்தில் தள்ளப் படுவோர் முடிவற்ற காலம் தண்டனைக்குள்ளாகித் துயர்ப்படுகிறார்கள். என்னுடைய சொந்த உள்ளத்தில் (`ஆன்மாவில்) இந்த இறை (நம்பிக்கை) இழப்பின் பயங்கரத் துன்பத்தை உணர்கிறேன். கடவுள் என்னை விரும்பவில்லை என உணர்கிறேன். கடவுள், கடவுளே அல்லர் என்றும், உண்மையில் அவர் இல்லை என்றும் உணர்கிறேன்.

ரோம் நகரத்தில் மிகப் பெருவாரியாகப் படிக்கப்படும் நாளிதழ் `இல்மெஸ் ஸக்கரோ என்பது. அவ்விதழ் இவ்வாறு குறிப்பிடுகிறது:

``உண்மையான அன்னை தெரசா, ஓராண்டுக் காலம் அகப்பார்வைகள் (உள்ளக் காட்சிகள்) கண்டவராகவும், அடுத்த அய்ம்பதாண்டுகள் - தாம் சாகும் வரை அய்யப்பாடுகள் கொண்ட வராகவும் வாழ்ந்தார். கொல்கத்தாவில் வசதி மிகுந்த பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய அவர், அகப் பார்வைகள் (உள்ளக் காட்சிகள்) கண்ட பின்பு, அப்பணியில் இருந்து விலகிக் கொண்டு, இந்தியாவின் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என முடிவு செய்த பின்புதான் அவருடைய அய்யப்பாடுகள் கொண்ட வாழ்வு தொடங்கிற்று.

கத்தோலிக்க மதத்தவர்களுக்குத் தலைமையிடமாக இருப்பது வாடிகன். அங்கு செயல் பாட்டில் உள்ள விதியின்படி, இறந்து விட்ட ஒருவரை தூய துறவி என அறிவிப்பதற்கான புலனாய்வு, அவர் இறந்து அய்ந்தாண்டு களுக்குப் பிறகு தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அய்ந்தாண்டுகள் முடிவதற்கு முன்பே புலனாய்வு தொடங்கலாம் என அன்னை தெரசா விஷயத்தில் விதியைப் போப்பாண்டவர் தளர்த்தினார். நினைவு படுத்தக் கூடிய அண்மைக் கால வரலாற்றில் இந்த விதி தளர்த்தப்படுவது இதுவே முதன் முறையாகும்.

``அன்னை தெரசாவின் ரகசியம் எனும் பொருளமைந்த தலைப்பில் அவருடைய சொந்த வரைவுகள் (எழுத்துகள்) டிசம்பர் மாதத்தில் நூலாக வெளியிடப்படுகின்றன.

உலகத் கத்தோலிக்க மதத்தின் தலைவரும், வாடிகன் நகரின் ஆட்சியாளருமான போப் ஜான்பால் 1996-ஆம் ஆண்டில் ஓர் உண்மையை ஒப்புக் கொண்டார்.
புதிய அறிவு பரிணாம வளர்ச்சித் தத்துவத் தினை அங்கீகரிக்கச் செய்கிறது. டார்வின் கொள்கையைப் பள்ளியில் போதிக்க வேண்டும் என்று கூறினார் என்ற தகவலை வெளியிட்டதும் `தி இந்து ஏடுதான் (20.10.1996)

19-ஆம் நூற்றாண்டில் பிறந்த டார்வின் சார்லஸ் ராபர்ட் (1809-82) என்பவரின் பரிணாமக் கொள்கையை எந்த கத்தோலிக்க மதம் எதிர்த்து, அவருக்குத் தண்டனை வழங்கியதோ அதே கத்தோலிக்க மதத்தின் உலகக் குரு தவறை உணர்ந்து, பகுத்தறிவின் பக்கம் உள்ள நியாயத்தை ஒப்புக் கொண்டார்.

உலகம் உருண்டை என்று சொன்ன விஞ்ஞானி கலிலியோவின் விஞ்ஞான உண்மையை கத்தோலிக்க மதபீடம் கடுமை யாக எதிர்த்தது; கடுந்தண்டனையும் விதித்தது.
360 ஆண்டுகளுக்குப்பின் இதே போப் ஜான்பால், கலிலியோவின் கண்டுபிடிப்பினை ஏற்றுக் கொண்டார். உலகம் உருண்டை என்பது எப்படி உண்மையோ, கடவுள் இல்லை - இல்லவே இல்லை என்பதும் உண்மை என்பதற்கான ஆதாரமும், சிந்தனை உறுதிகளும் உலகப் பந்தில் மேம்பட்டு வருகின்றன.

கடவுள் மறுப்பு என்பதைக் காரணியாகக் கொண்டு மக்கள் சமூகத்தின் ஒப்புரவு நிலைக்குக் ஓயாது உழைத்த தந்தை பெரியாரின் கொள்கைகள் நாளும் வெற்றி முகம் காட்டி வீறுநடை போடுகின்றன! நாளை உலகம் - பெரியார் தம் பகுத்தறிவுச் சிந்தனையின் வார்ப்பாக அமையும் என்பதை அறிவு ரீதியாகக் கணிக்கலாம்.

----------------- கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் "உண்மை" 1-15 ஜூலை 2008 இதழில் எழுதிய கட்டுரை

2 comments:

Thamizhan said...

பிள்ளையார் சுழி போட்டுத்தான் (ஓலைச் சுவடி பதமாக இருக்கிறதா என்று பார்த்தது)எழுதுவேன் என்றவர்கள் இன்று இணையத்திலே நன்றாகத் தானே எழுதுகிறார்கள்.
அனுமாருக்கு மாலையிட்டவர்கள் இன்று கருத்தறிப்பு வல்லுனர்களிடந்தானே போகிறார்கள்.
காஞ்சி மஹாப் பெரியவருக்காக ஒரு பெரிய மருத்துவ நிலையம் போல அனைத்தையும் கொண்டு வந்து சேர்த்தார்களே?சூடம் கொளுத்தியதுடன் விட வேண்டியது தானே.

அறிவு வந்து கொண்டிருக்கிறது,இன்னும் மனத் திடந்தான் தன்னம்பிக்கையாக வரவேண்டும்.அப்புறம் மதத் தலைவர்கள் மற்றவர்களைப் போல ஒழுங்காக உழைத்துச் சாப்பிடுவார்கள்.

பொலி காளைகளாகப் பொறுக்கிகளாக அலையும் சாமியார்க்கூட்டமே உலகெங்கும் வேலை செய்யும் மனிதக் கூட்டத்தில் சேர்ந்து விடும்.

tamiloviya said...

தங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி. தொடர்ந்து கருத்து தெரிவிக்கவும்.