Pages

28.10.22

பெண்கள் ஆண்களை ஆட்டி வைக்கின்ற நிலை வரவேண்டும் - பெரியார்

 

இயக்கச் சாதனைகள்


 
வாழ்க்கைத் துணை நிகழ்ச்சி என்பது நம்மில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த கல்யாணம், விவாகம், முகூர்த்தம், தாராமுகூர்த்தம், கன்னிகாதானம் என்னும் பெயரால் நடைபெற்று வந்ததை சுயமரியாதை இயக்கமானது மாற்றி, வாழ்க்கைத் துணை நலம் என்னும் பெயரால் நடத்திக் கொண்டு வருகிறது. இம்முறையில் நடத்த வேண்டிய அவசியம் ஏன் வந்ததென்றால், நம்மில் நீண்ட காலமாக இருந்து வருகின்ற இதுவரை நடைபெற்று வந்த முறை எதுவானாலும், அதன் தத்துவம் ஒரு பெண்ணை ஓர் ஆணுக்கு நிரந்தர அடிமையாக்குவது, சடங்குகள் செய்வதன் மூலம் மனிதர்களை மூட நம்பிக்கைக்காரர்களாக்குவதோடு, மடையர்களாக, காட்டுமிராண்டிகளாக்குவது என்பதோடு, ஜாதித் தன்மைகளில் காட்டுமிராண்டித் தன்மையைப் புகுத்தி இழி ஜாதித் தன்மையை நிலை நிறுத்துவதோடு, உயர்ஜாதித் தன்மையைப் பாதுகாப்பதாகவும், தாழ்ந்த ஜாதி என்பதை வலியுறுத்துவதான வகையிலேயே பழைய முறை வைதிக முறை, மத சம்பந்தமான முறை என்பவை இருந்ததால் இவற்றையெல்லாம் மாற்றியமைத்துப் புதிய முறை ஒன்றினைக் காண வேண்டியதாயிற்று.

 

சுயமரியாதை இயக்கமானது பழைய முறைகளை யெல்லாம் மாற்றி, அறிவிற்கும், நடப்பிற்கும், மனித்த தன்மைக்கும் ஏற்ற முறையில் இம்முறையினை ஏற்பாடு செய்திருக்கிறது. இம்முறையில் ஆணிற்குப் பெண் அடிமையல்ல என்பதோடு, ஆணும், பெண்ணும் சிநேகிதர்களாக,சம உரிமையுடையவர்களாக வாழ வேண்டும். ஒருவரை விட்டு ஒருவர் பிரிய வேண்டுமானால் சொல்லிவிட்டு பிரிந்து கொள்வதற்கு வசதியாகச் சுயமரியாதை இயக்கத்தால் இம்முறையானது தோற்றுவிக்கப்பட்டு மக்களால் கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

 

இது 1920- முதல் 48-ஆண்டுகாலமாக நடைபெற்று வருகின்றது. என்றாலும், இதுவரை இருந்த ஆட்சி பார்ப்பனர்கள் ஆட்சியாக இந்த காரணத்தால், இம்முறையில் செய்யப்படும் திருமணமானது சட்டப்படிச் செல்லுபடியாகாது என்றாக்கி வைத்திருந்தன. இப்போது அமைந்திருக்கின்ற ஆட்சியானது பகுத்தறிவாளர்கள் ஆட்சியான காரணத்தால், இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்படிச் செல்லுபடியாகும் என்று சட்டமியற்றியுள்ளார்கள். அதற்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர்களாவோம்.

 

தோழர்களே! இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் ரொம்ப அதிசயமானது என்னுடைய வாழ்நாளிலேயே 3, 4-திருமணங்கள் தான் இதுபோல் நடந்திருக்கின்றன. இது காதல் திருமணம். மணமக்கள் ஒருவரை ஒருவர் காதலித்து, காதலர்களாக, அன்பர்களாக இருந்தவர்களாவார்கள். மேல்நாடுகளில் இதுபோல் ஆறு மாதம் வரை காதலர்களாக, அன்பர்களாக இருந்து அதன் பின் திருமணம் செய்து கொள்வது சாதாரணமாக நடைபெற்று வரும் பழக்கமாகும். இத்திருமண முறையானது பெண்களுக்கு உரிமை கொடுப்பதாகும். இதுவரை இன்றும் கூட ஆண்கள் பெண்களைக் குரங்குகளை ஆட்டுவது போல் ஆட்டி வைக்கின்றார்கள். அதுமாறி, பெண்கள் ஆண்களை ஆட்டி வைக்கின்ற நிலை வரவேண்டும். இப்போதே நாம் கொடுத்த உரிமையாலும் அவர்கள் பெற்ற அறிவாலும் சில பெண்கள் தங்கள் கணவன்மார்களை ஆட்டி வைக்கின்றனர். என்றாலும் நாம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உரிமைகள் யாவையும் கொடுத்தே ஆக வேண்டும். பெண்கள் பிள்ளை பெறுவதற்கு மட்டுமே யல்ல. சமுதாயத்தில் அரைபாக வேலை அவர்களால் நடைபெற வேண்டியது. அவர்களுக்குச் சுதந்திரமில்லாததால் நடைபெறாமல் இருக்கிறது. அவர்களைப் பொது வாழ்வில் இறக்கிவிட வேண்டும். அப்போதுதான் சமுதாயம் முன்னேற்றம் அடையும்.

 

எனக்கு வயது 90. எனது இருபது வயது முதல் நான் பெருந்தனத்தில் வாழ்ந்தவன். எத்தனையோ புகார்கள், வழக்குகள் என்னிடம் வரும். என் கணவர் 5, 6-பெண்களுடன் இருக்கிறார். என்னைக் கவனிப்பது கிடையாது, என் கணவர் கொடுமைப் படுத்துகிறார் என்று பல புகார்கள் என்னிடம் வந்திருக்கின்றன. அத்தனையும் ஆண்கள் பெண்களைக் கொடுமைப்படுத்துவதாகவே இருக்கும்.

 

எங்கள் இயக்கம் தோன்றுகிற வரை பெண்களுக்குச் சொத்துரிமை கிடையாது. பெண்கள் மறுமணம் செய்து கொள்ள ஊரிமை கிடையாது. ஆண்கள் எத்தனை வைப்பாட்டி பெண்டாட்டி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சாஸ்திரமாக தர்மமாக சட்டமாக இருந்தது. இத்துறையில் மாற்றம் காண பெண்களுக்கு விடுதலை கிடைக்கப் போராட எவனுமே முன்வரவில்லை. நாங்கள் தான் இத்துறையில் இறங்கித் தொண்டாற்றினோம். முதலில் இதற்காகப் பெண்களே எங்களை எதிர்த்தார்கள். என்றாலும் எங்கள் தொண்டின் காரணமாக இன்று பெண்களுக்குத் தகப்பன் - கணவன் சொத்தில் உரிமை உண்டு. மறுமணம் செய்து கொள்ளவும், விருப்பமில்லாவிட்டால் பிரிந்து கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது ஒவ்வொரு துறையிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

 

ஜாதி மறுப்புத் திருமணம் செய்திருக்கின்றோம். பார்ப்பனப் பெண்ணுக்கும் பஞ்சமனுக்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறோம். இரண்டு குழந்தை, மூன்று குழந்தை உள்ள பெண்ணைத் திருமணம் செய்து வைத்திருக்கிறோம். ஆணுக்கு முதல் மனைவிடம் பிறந்த குழந்தைகளும் பெண்ணிற்கு முதல் கணவனுக்குப் பிறந்த குழந்தைகளும் இருக்கும் போது இருவருக்கும் திருமணம் செய்து வைத்திருக்கின்றோம். இப்படி இன்னும் பல நடத்தி வைத்திருக்கின்றோம்.

 

நாள், நட்சத்திரம், நேரம், காலம், ஜோசியம், ஜாதகம், சாமி கேட்பது என்பதெல்லாம் முட்டாள்தனமே யாகும். இவற்றால் எந்தப் பலனும் கிடையாது.

 

பெண்கள் நல்ல கல்வி பெற வேண்டும். உலக ஞானம் பெற வேண்டும். தங்கள் வாழ்க்கைக்காக ஊதியத்தைப் பெறத் தக்க ஒரு தொழில் கற்றவர்களாக இருக்க வேண்டும். பெண்களின் நிலைமை இன்றைக்குத் தனித்து வாழ முடியாது என்கின்ற நிலைதான்; அதை உடைத்தெறிய வேண்டும்.

 

மணமக்கள் வரவிற்குள் செலவிடப் பழக வேண்டும். அதிகக் குழந்தைகள் பெற்றால் அது மனிதனுக்கு மானக் கேடேயாகும். இதை உணர்ந்து அந்தக் காரியத்தில் மிக ஜாக்கிரதையாக இருக்கிற ஆணும், பெண்ணும் சுதந்திரமாக இருக்கலாம். கோயில், சினிமா ஆகியவற்றுக்குப் போவதைக் கண்டிப்பாய் நிறுத்திக் கொள்ள வேண்டும். மூட நம்பிக்கையான நம்மை இழிவுபடுத்துவதற்காக வென்று ஏற்பாடு செய்த பண்டிகைகள், விழாக்கள் என்பவற்றைக் கண்டிப்பாய்க் கொண்டாடக் கூடாது. ஒருவருக்கொருவர் நண்பர்களாக, ஒருவருக்கொருவர் சமஉரிமையோடு - மனக்குறைவு இல்லாமல் வாழ வேண்டும். இங்குக் கூடி இருக்கிற ஆசிரியர், ஆசிரியைப் பெருமக்கள் இதை நன்கு சிந்திக்க வேண்டும். உங்களால் தான் வருங்காலச் சமுதாயம் உருவாக இருக்கிறது என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

 

             -------------------- 08.12.1968 அன்று திருச்சியில் நடைபெற்ற இராசமாணிக்கம் - சிவபாக்கியம் திருமணத்தில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. ''விடுதலை'', 13.12.1968

No comments:

Post a Comment