Pages

13.10.22

இனியாவது தீபாவளி கொண்டாடாதீர்கள் - பெரியார்


 தீபாவளி இரகசியம்




வழக்கம்போல் பஞ்சாங்கத்தில் தீபாவளி வரப்போகிறது. சுமார் 20 வருட காலமாகத் தீபாவளியைப் பற்றித் திராவிட மக்களுக்கு விளக்கிக் கொண்டு வந்திருக்கிறோம்.

திராவிட நாடு தனி சுதந்திர நாடாக ஆக்கப்பட்டு திராவிடர்கள் சமயம் எது?

அவர்கள் சரித்திரம் என்ன? அவர்கள் மனிதத் தன்மை பெறுவதற்கு ஏற்றவண்ணம் நடத்தப்படுவதற்கு வகுக்கப்பட வேண்டிய முறை என்ன? என்பவைகளை அரசியல் சட்ட மூலமாகவும், பள்ளிப் பாட மூலமாகவும் ஏற்பாடு செய்து அமல் நடத்துகிற வரையிலும் திராவிடர்கள் தம்மை இழிவுபடுத்தி நிரந்தரமாய் அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் தன்மைலிருந்து மீட்கப்பட முடியாது என்பதோடு திராவிடர்கள் தம்மைத் தாமே இழி மக்களாக ஆக்கிக் கொண்டு தங்கள் பின் சந்ததிகளையும் இழிதன்மையில் இருந்து மீளாமல் இருக்கத்தக்க காரியங்களைச் செய்து கொண்டுதான் இருப்பார்கள்.

 

இன்று திராவிடர்களின் சமயம் அதாவது மதம் என்பது பெயரளவில் இந்து மதம் என்று சொல்லப்பட்டாலும், அதற்கு எவ்வித பொருளும், ஆதாரமும் இல்லை என்றாலும் உண்மையில் திராவிடர்கள் மதம் என்பது ஆரியப் புராண மதமேயாகும். கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் முதலாகிய இந்துக்கள் அல்லாத மற்ற வேறு எந்தச் சமயக்காரர்களுக்கும் மதங்கள் உண்டு என்றால் அவைகள் பைபிள் மதம் (அதாவது சத்திய வேதம் மதம்) குர்ரான் மதம் (திருக்குர்ரான்படி நடக்கும் மதம்) என்றெல்லாம் பெரிதும் சொல்லப்படுமே ஒழிய வேறு விதமாய் இருப்பதில்லை. ஆனால் திராவிடர்கள் தம்மை இந்து மதஸ்தர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், அப்படிச் சொல்லிக் கொள்ளுகிறவர்கள் அத்தனை பேர்களும் ஆரியப் புராண மதக்காரர்களாகத்தான் இருந்தும், நடந்தும் வருகிறார்களே தவிர தங்களுக்கு என்று வேதமோ சாஸ்திரமோ இல்லாதவர்களாகவே இருந்து வருகிறார்கள்.

திராவிடர்களுக்கு வேதம் கிடையாது. இருப்பதாகச் சொல்லப்படுமானால் அது திராவிடர்களுக்கு சம்பந்தப்பட்டதல்லவென்றும், திராவிடர்கள் பார்க்கவோ தெரிந்து கொள்ளவோ கூடியது அல்ல என்றும்தான் சொல்லப்படுமே ஒழிய திராவிடர்களுக்குரிய வேதம் கிடையாது. திராவிட வேதம் என்று எதையாவது சொல்லப்படுமானால், அது திராவிடர்கள் பின்பற்றுகிற _ நடத்தப்படுகிற தன்மைக்கும், நடப்புக்கும் கட்டுப்பட்டதுமல்ல; பின்பற்றச் செய்வதுமல்ல.

திராவிடர்களுக்கு ஏதாவது சாஸ்திரங்கள் இருக்குமானால் அவை திராவிடர்கள் இன்ன மாதிரியாய் நடத்தப்பட வேண்டியவர்கள் என்றும், நடத்தப்பட வேண்டும் என்றும், திராவிடரல்லாத மற்றவர்களுக்கு அதிகாரம் அளிப்பதும், ஆக்கினை இடச் செய்வதுமான சாஸ்திரங்களே ஒழிய திராவிடர்கள் தாமாகவே நடந்து கொள்ளுவதற்கு ஏற்றதான சாஸ்திரங்கள் அல்ல. ஆகவே, திராவிடர்களாகிய நாம் சமயம் வேதம் சாஸ்திரம் ஆகிய எவையுமில்லாத ஒரு நிபந்தனையற்ற- திக்கற்ற அடிமைச் சமுதாயமாக இருந்து வருகிற ஒரு இழிவான, தாக்கப்பட்ட சமுதாயஸ்தர்களே யாவோம். இந்தப்படியான இழிவை நிலை நிறுத்தவும், திராவிடர்கள் தாங்களே அந்த இழிவைச் சிறிது நேரமாகிலும் இறக்கி வைக்காமல் சதா சுமந்து கொண்டே இருக்கச் செய்வதற்குமாக ஆரியர்களால் (எதிரிகளால்) ஏற்படுத்தப்பட்ட புராணங்களைப் பின்பற்றி நடப்பவர்களாக, இருப்பவர்களாகவே இருந்து வருகிறோம்.

இனி புராணங்களின் கருத்து என்ன என்று பார்ப்போம்

திராவிடர் ஆரியர் என்கின்றதான (தேவர்கள் அசுரர்கள் என்கின்ற) இரு இனங்களைக் குறிப்பிடுவதும், திராவிடர்களை (அசுரர்களை) ஆரியர்கள் (தேவர்கள்) இழிவுபடுத்தி, அடிமைப்படுத்திக் கீழ்மைப்படுத்திக் கொண்டதாகக் கற்பனை செய்யப்பட்ட கற்பனைச் சித்திரங்கள் அல்லாமல் மற்றபடி புராணங்களைப் பற்றிச்சொல்லவோ அதைப் பின்பற்றவோ புராணங்களில் என்ன இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா?

தேவர்களை அசுரர்கள் தொல்லைப்படுத்தினார்கள். சிவன், விஷ்ணு என்கின்ற கடவுள்கள் தோன்றி அசுரர்களை வெற்றிகொண்டு, தேவர்களுக்கு அடிமையாக்கிக் கொடுத்து, தேவர்களைக் காப்பாற்றினார்கள் என்கின்றதாகவேயில்லாமல் மற்றப்படியான மனிதர்களுக்கு வேண்டியதான அறிவோ, ஒழுக்கமோ, நீதியோ, நாணயமோ எந்தப் புராணங்களிலாவது கடுகளவு காண முடிகிறதா?

அப்படிப்பட்ட புராணங்களில் காணப்படும் நடப்புகளைக் கொண்டாடுவதும் அவைகளில் சொல்லப்பட்டபடி நடப்பதும்தான் இன்று திராவிடர்களின் சமயமாக, நடப்பாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டவே இவ்வளவு சொன்னோம்.

இப்படியாகச் சொல்லப்படுபவைகளுக்கு ஓர் உதாரணம்தான் திராவிட மக்கள் தீபாவளி கொண்டாடுவது என்கின்றோம். இதை 20 வருடங்களுக்கு மேலாகச் சொல்லி வருகிறோம் என்பதை மேலே கூறினோம். அப்படி இருந்தும் இன்னமும் திராவிடர்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்பதைக் கருதியே இனியாவது கொண்டாடாதீர்கள் என்று வேண்டிக் கொள்ளுவதற்கு ஆகவே இந்த ஆண்டும் சொல்லுகிறோம்.

தீபாவளி என்பது என்ன? என்று பாருங்கள். திராவிடர் நாட்டில் பிராக் சோதிட புரி (வங்காளத்துக்கு பக்கத்தில் இருந்ததாம்) என்ற ஒரு நகரம் இருந்ததாம். அந்த நகரத்தை நரகாசுரன் என்று ஒரு அரசன் ஆண்டானாம். அவன் யார் என்றால் ஒரு பன்றி பூமியைப் புணர்ந்து பூமியைக் கர்ப்பமாக்கி, அந்தப் பூமியால் பெறப்பட்ட ஒரு அசுரனாம். அந்தப் பன்றி யார் என்றால், மகாவிஷ்ணு பன்றியாக அவதாரமெடுத்த பன்றியாம். இந்தப் பன்றிக்குப் பிறந்தவன் என்பதாக அந்த அரசனுக்கு ஒரு இழிவைக் கற்பிக்கத்தான் இந்தக் கதையைக் கற்பித்து புராணங்களில் ஒட்டவைத்திருக்க வேண்டுமே அன்றி மற்றபடி கடவுள் மலம் தின்னும் பன்றி உருவெடுத்ததும் அந்தப் பன்றி நிலத்தை (தரையை பூமியை)ப் புணருவது என்பதும் அந்த நிலம் கர்ப்பமாகிப் பிள்ளையைப் பெற்றது என்பதும் எப்படி அப்படியே நம்பக் கூடியனவாக இருக்க முடியும்?

ஆகவே இதன் இரகசியம் என்ன என்றால் திராவிட நாட்டு எல்லையில் பிறந்தவர்கள் அத்தனை பேரும் இழி மக்கள் என்பதைக் குறிப்பதற்காக அந்த நாட்டு மக்களாகிய திராவிட இனத்தினரைப் பன்றிக்குப் பிறந்தவர்கள் என்று ஆதாரத்தை ஏற்படுத்தினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அரசன் தேவர்களைத் (ஆரியர்களை) தொல்லைப்படுத்தினான் என்பதாகச் சொல்லி அவன் மீது பழியேற்படுத்தி அவனை விஷ்ணு கொன்றார் என்றும் அக்கொலைக்கு விஷ்ணுவின் மனைவி சத்தியபாமை உதவி செய்தாள் என்றும் என்ன என்னமோ ஆபாசக் கதைகள் கட்டி இருக்கிறார்கள். அதிலும் அந்த விஷ்ணு என்பவர் கிருஷ்ணன் என்கிற ஒரு மனிதன்தானாம். அந்த மனிதன் இலட்சக்கணக்கான பெண்களை மணந்தவனாம். பல இலட்சக்கணக்கான பெண்களைப் புணர்ந்தவனாம். நரகாசுரனைக் கொன்று அவனுடைய 10 பெண்களையும் மணந்தவனாம். இன்னமும் இப்படிப்பட்ட ஆபாசங்கள் ஒரு வண்டிக்கு மேல் ஏற்றும்படியான சேதிகளைத்தான் இந்தப் புராணங்கள் கொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட புராணங்களைச் சமய ஆதாரங்கள் என்று ஏற்றுக் கொண்டு, அதில் வரும் சம்பவங்களைப் பின்பற்றுவது புண்ணிய காரியமென்று கருதிக் கொண்டு அப்படிப்பட்ட நரகாசுரன் கொல்லப்பட்டதற்கு மகிழ்ச்சி அடைந்து கொண்டாடுவது தான் நமது தீபாவளிப் பண்டிகை என்றால் இந்தக் கதை எப்படி இருந்தாலும் இந்தக் கொண்டாட்டம் (தீபாவளி) நாம் கொண்டாடுவது நமக்கு (திராவிடனுக்கு) மானமும், அறிவும் உடைமையாகுமா? என்று கேட்கிறோம்.

ஆகையால் தீபாவளியைத் திராவிடர்களாகிய நாம் வெறுக்கும் தினமாகக் கருதி, திராவிடத் தோழர்கள் அன்றைய தினம் பழைய கருப்பு உடைகளை, சட்டைகளை அணிந்து துக்கம் கொண்டாடும் பாவனையாய் இந்த இழிவு, பித்தலாட்டம், புராண ஆபாசங்கள் ஒழிய வேண்டும் என்கின்ற ஒலியுடன் ஊர்வலம் வந்து இந்தக் கதையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி உண்மை உணரும்படி செய்ய வேண்டியது கடமையாகும். மற்றபடி அன்று எண்ணெய் முழுக்கு, புதுவேஷ்டி அணிதல், வீட்டில் பலகாரம் செய்து சாப்பிடுதல் முதலியவை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.

தீபாவளி கொண்டாட வேண்டாம். அது திராவிடனை இழிவுபடுத்தி மூடனாக்கும் ஆரிய சூழ்ச்சி என்பதை மக்கள் உணரும்படி துண்டு நோட்டீசு எழுதுதல் மூலம் மக்களுக்கு விளக்க வேண்டும். இதைப் பெரிதும் கருப்புச் சட்டைத் தொண்டர்கள் செய்யவேண்டும். இப்போதிருந்தே பொதுக் கூட்டங்கள் மூலம் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் அரசியல் பேச்சு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் முதலிய கட்சிப் பேச்சு சிறிதும் பேசக் கூடாது. தீபாவளி கொண்டாடாதவர்கள் தங்கள் பெயர்களை எழுதி அனுப்பச் செய்ய வேண்டும் என்பவைகளைக் கவனிக்க வேண்டுகிறோம். 

குறிப்பு:- ஆங்காங்குள்ள திராவிடப் புலவர்களைக் கொண்டு தீபாவளிக் கதையைத் தெரிந்து கொள்ளலாம்.

                       ------------------– தந்தைபெரியார் - ‘குடிஅரசு’ – தலையங்கம் – 12.10.1946

No comments:

Post a Comment