Search This Blog

7.10.14

ஜாதி - கடவுள் - மத ஒழிப்பே எங்கள் குறி!



என்னுடைய தொண்டானது ஜாதி ஒழிப்பு 2000- ஆண்டுகளாக இந்தப் பணிக்கு யாருமே வரவில்லை. ஏன் 2500 - ஆண்டுகளுக்கு முன்பிருந்து அதாவது புத்தருக்குப் பிறகு இந்தத் துறையில் பாடுபட யாரும் வரவில்லை.

அடுத்தும் சிலர் இது பற்றி எண்ணினார்கள். ஆனால் சந்திலோ, பொந்திலோ இருந்து கொண்டு இரண்டு வார்த்தை கூறிவிட்டுச் சென்றார்களே ஒழிய, வெளியே வந்து பாடுபடவில்லை.

மற்றும் இந்த நாட்டில் தோன்றிய அவதார புருஷர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், மகான்கள், என்பவர்கள் எல்லாரும் சாதியைக் காப்பாற்றவே பாடுபட்டவர்களாக இருந்து விட்டுச் சென்றார்கள். நான் தான்- எங்கள் இயக்கம் தான் இந்தத் துறையில் பாடுபடுகின்றது. எங்களை விட விஷயம் தெரிந்தவர்கள் மேதாவிகள் இருக்கலாம் என்றாலும், "இந்தக் காரியத்தில் இறங்கினால் நமக்குப் புகழ் கிடைக்காதே, மக்கள் - உயர் சாதிக்காரர்கள் என்ன நினைப்பார்களோ" என்று எண்ணி இதில் ஈடுபடுவதில்லை.

நாங்கள் தான் இவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் இந்தத்துறையில் பாடுபடுகின்றோம். நாங்கள் ஜாதி ஒழிய வேண்டும் என்பது மட்டுமல்ல கடவுள், மதம், சாஸ்திரம், இவையும் ஒழிய வேண்டும் என்று பாடுபட்டு வருபவர்கள். ஏன், கொஞ்ச காலத்துக்கு முன்னால் வரையிலும் இருந்த அரசாங்கமும் ஒழிய வேண்டும் என பாடுபட்டு வந்திருக்கிறேன்.

எந்தக் காங்கிரஸ் ஜாதியைய் பாதுகாக்கும் ஸ்தாபனமாக விளங்கியதோ அந்தக் காங்கிரசில் இன்று தேர்தல் அறிக்கையிலேயே மூன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஜாதி ஒழிப்புப் பற்றிக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தநிலைமை எப்படி வந்தது? அரசமைப்புச் சட்டம் ஜாதியைப் பாதுகாக்கின்றது. அதை ஒரு மாத காலத்துக்குள் திருத்த வேண்டும். திருத்தாவிட்டால் அதைக் கொளுத்துவோம் என்று தஞ்சையில் கூடிய, இது போன்ற பெரிய மாநாட்டில் தீர்மானம் போட்டும் தமிழக அரசாங்கம் செவி சாய்க்காமல் அரசமைப்குச் சட்டத்தை எரித்தால் 3- ஆண்டு தண்டனை என்று சட்டம் செய்து அரசமைப்புச் சட்டத்தை எரித்தவர்ளை 6- மாதம், 9 -மாதம், ஒரு வருடம், இரண்டு வருஷம், மூன்று வருஷம் என்று தண்டித்தது. இப்படித் தண்டனை அனுபவித்து 3000-4000 பேர்கள் வெளிவந்த பிறகும், நமது பிரச்சாரத்தின் காரணமாகவும், அவர்களை மனம்மாறச் செய்து இருக்கின்றது.

நேரு, காமராசர் போன்றவர்கள் எல்லாரும் போகும் இடங்களில் எல்லாம் ஜாதி ஒழியாத சுயராஜ்ஜியம் (தனிநாடு விடுமுறை) என்ன இராஜ்ஜியம்? ஜாதி ஒழியாத ஜனநாயகம் (மக்களாட்சி) என்ன நாயகம் என்று பேசும்படியான நிலை ஏற்பட்டு உள்ளது.

இன்றைய தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சியானது ஜாதி அனுகூலமாகவே இருக்கின்றது. நாமும் இந்த ஆட்சிக்கு அனுகூலமாக இருந்து இந்த ஆட்சியே மீண்டும் ஏற்பட்டு மேலும் பல நல்ல காரியங்களைச் செய்யக் காங்கிரசுக்கே வருகிற தேர்தலில் ஓட்டு அளிக்க வேண்டும்.

நான் இப்படிக் கூறுவது காமராசரை வெற்றி பெற வைக்க வேண்டும். காங்கிரசை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக இதுவரை நடந்து வந்த நல்ல காரியங்களைக் கெடுக்கும்படியாகவும், ஜாதி ஒழிப்புக்குக் கேடு செய்பவர்களும், தமிழக ஆட்சிப் பொறுப்புக்கு வரக் கூடாதே என்பதற்காகத் தான் சொல்லுகின்றேன்.

ஆச்சாரியாரோ, அவரைச் சுற்றித் திரியும் மற்றவர்களோ பதவிக்கு வருவார்களேயானால் நாம் இன்று எந்த அளவுக்குக் கல்வியிலும், மற்ற மற்றத் துறைகளிலும் முன்னேறி இருக்கின்றோமோ அந்த அளவுக்குக் கீழுக்குப் போய் விடுவோம் என்பதற்காகவே உங்களை எச்சரிக்கிறேன். பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

நமது தொண்டு இலட்சியம் ஈடேரிப் பயன் அளிக்கத்தக்க காலத்தில் தமிழன் கைக்கு வந்துள்ள ஆட்சியைக் கை தவற விடக்கூடாது. ஆட்சி இராஜாஜி கைக்குப் போய் விடுமேயானால் மீண்டும் மனுதர்ம ஆட்சிதான் நடத்துவார். இதில் சந்தேகமே வேண்டாம். பதவிக்கு வந்த போதெல்லாம் இப்படியே செய்து இருக்கிறார்.

இன்றைக்கு நல்ல வாய்ப்பாக நல்ல முதல் அமைச்சர் (காமராசர்) நமக்குக் கிடைத்து இருக்கிறார்.

இவரை (காமராசர்) மீண்டும் ஒர் அய்ந்தாண்டுகளுக்காவது முதலமைச்சராக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் இப்படிச் செய்யாமல் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விடுவோமானால் இலேசில் நமக்கு நல்ல ஆள் சிக்க வாய்ப்பில்லை.


தோழர்களே! தமிழர்களுக்குப் பல துறைகளிலும் இருந்து வருகின்ற கேடுகளைப் போக்குவதில் காமராசருக்கு மிக்க அக்கரையுண்டு. அவரை நாம் நம்பலாம். நம்பலாம் என்பதற்கு உரைக்கல் என்னவென்றால் காமராசர் மொட்டை மரம், திருமணம் ஆகாதவர். பெண்டு பிள்ளை அற்றவர். சொத்துக்கோ, சுயநலத்துக்கோ, யாதொன்றும் பொதுநலத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் அற்றவர்.

எவன் ஒருவன் தனது பொதுத் தொண்டு மூலம் தம் சுயநலத்துக்கு வழித்தேடிக் கொள்ளாமல் பாடுபடுகின்றானோ அவனை 100-க்கு 100 -நம்பலாம்.

எவன் ஒருவன் மனைவி, மக்கள், குடும்பம், இவற்றுடன் பொது தொண்டில் ஈடுபட்டு உழைக்கின்றானோ அவனை 100- க்கு 75-பங்கு நம்புதல் கூடாது. ஏதோ 1000-க்கு ஒருவர், இருவர் இதற்கு விதிவிலக்காகவும் இருக்கக் கூடும்.

எங்கள் திராவிடர் கழகத்தில் உள்ளவர்களில் எவரும் கழகத்தின் பெயரால் வயிறு வளர்ப்பவர்கள் இல்லை. அப்படிப்பட்ட ஆட்கள் எவராவது இருந்தால் அவர்களிடத்தில் எனக்கு மதிப்புக் கம்மி தான்.

தோழர்களே! எவ்வளவோ காலத்துக்குப் பிறகு பார்ப்பனர்களின் கையில் இருந்து வந்த தமிழ்நாட்டின் ஆட்சியானது தமிழர்களின் கைக்கு வந்து இருக்கிறது. 1000 – 2000 ஆண்டு காலமாக நமக்குக் கல்வித் துறையிலும், மற்ற மற்றத் துறைகளிலும் இருந்து வந்த குறைபாடுகள் எல்லாம் இன்றைக்குத் தான் காமராசர் ஆட்சியின் பயனாக மாற ஆரம்பித்து இருக்கின்றது. இந்தத் தருணத்தில் நாம் இந்த ஆட்சியை நழுவ விட்டு விடக்கூடாது.

என்னுடைய ஆசை மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்று காமராசரே முதன் மந்திரியாக வரவேண்டும் என்பது. கட்டாயம் காங்கிரஸ் வெற்றி பெறத்தான் போகின்றது. சென்ற தேர்தலில் 150- பேர்கள் காங்கிரசுக்காரர்கள் சட்டமன்றத்துக்கு வந்தார்கள் இந்தத் தடவை 172- பேர்கள் வரவேண்டும். காமராசர் மந்திரிசபை மீண்டும் அமைய வேண்டும் என்கின்ற எனது ஆசையானது பூர்த்தியாகி விடுமானால் நான் இன்னும் வாழ்ந்தாலும் வாழ்வேன். நான் இப்படி ஆசைப்படுவது எனது சுயநலத்துக்காக அல்ல. நமது சமூதாயத்தின் நலனுக்காகவே.

என்னைப் பலர் அணுகி "என்னைத் தேர்தலில் நிறுத்தக் காமராசரிடம் கூறுங்கள்" என்று கேட்பது உண்டு. அவர்களுக்கு எல்லாம் நான் சொல்லும் பதில், காமராசர் பார்த்து யாரை நிறுத்துகிறாரோ அவரையே ஆதரித்து வெற்றி பெறச் செய்வது தான் எனது வேலையே ஒழிய, மற்றப்படி நான் இன்னாரை நிறுத்துங்கள் என்று சொல்லுவது இல்லை.


------------------------ 08.10.1961- அன்று சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா சொற்பொழிவு. -"விடுதலை", 20.10.1961