Search This Blog

22.4.13

மாரியம்மன் பற்றி பெரியார்



வரவேற்கின்றோம்

மக்கள் மாரியம்மன் பண்டிகையின் பேரால் காட்டுமிராண்டித்தனமாக தப்புகளைக் கொட்டிக் கொண்டும் மலைவாச லம்பாடிகள் ஆடுவதுபோன்ற ஆட்டங்களையும் ஆடிக்கொண்டும் கீழ் மக்கள் நடப்பதுபோன்ற வேஷங் களைப் போட்டுக்கொண்டும், ஆபாசமான பேச்சுகளைப் பேசிக்கொண்டும், ஆயிரக்கணக்கான ரூபாய்களை பாழாக்கிக்கொண்டும் செய்துவரும் அக்கிரமம் இந்த நாட்டில் அறியாதார் யாரும் இல்லை.

இது நாளாக நாளாக அதிகமாகின்றதே தவிர மக்களுக்கு அறிவு வந்து, இந்த பழயகால நிலைமை சிறிதாவது மாறி இருக்கின்றதென்று சொல்லுவதற்கே இல்லை.

முழுமுதற் கடவுளென்று சொல்லப்பட்ட விஷ்ணு, சிவன் என்கின்ற கடவுள்களின் “பாடல் பெற்ற ஸ்தல” உற்சவம் பூசை முதலியவைகள் எல்லாம் கூட இப்பொழுது பெரிதும் குறைந்து வருகின்றன. இந்த உற்சவ வரும்படிகளும் சரி பகுதிக்கு குறைந்தும் வருகின்றன.

ஒரே கடவுள் என்று சொல்லுகின்ற அல்லாசாமியின் உற்சவமும் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. ஆனால் இந்தமாரிகருப்பன், காத்த வராயன் என்று சொல்லப்பட்ட “கீழ்த்தர பரிவார தேவதைகள், என்று சொல்லப்படும் சாமிகளின் பக்தர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம் இப்போது அளவுகிடையாது. இந்த “தேவதைகளை” வணங்குவதும் இவைகளுக்கு உற்சவம் செய்வதும் கீழ் மக்களாயிருப்பவர்களது செய்கை என்று அனேக சைவ வைணவ பண்டிதர்கள் எழுதி இருக்கின்றார்கள். அன்றியும் மாரி என்றால் என்ன அது எப்படிப்பட்ட தெய்வம் அதன் கதை என்ன என்பது யாருக்காவது தெரியுமா? அது அறிவுள்ள மக்களால் ஒப்புக் கொள்ளக் கூடியதா? என்று பார்த்தால் அது கடைசியில் சைபராகத்தான் முடியும், இம் மாதிரி அர்த்தமற்றதும் அனாகரீகமானதும் காட்டுமிராண்டித்தனமானதுமான காரியங்களை மதத்தின் பேரால், கடவுள்களின் பேரால் சற்றும் மான வெட்க மில்லாமல் செய்து கொண்டிருக்கின்ற மக்கள் நம்மை நாஸ்திகமென்றும், மத தூஷணை என்றும், கடவுள் தூஷணை என்றும் சொல்லுவது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இந்த லட்சணத்தில் இந்த மாரியாயி என்கின்ற சாமிகள் ஒரு ஊருக்கு இரண்டு மூன்று இருந்துகொண்டு ஏககாலத்தில் உற்சவம் செய்து சிறுபிள்ளைகளின் புத்தியை மூடமாக்கி அவர்களையும் காட்டுமிராண்டிகள் போல குதிக்கும்படி செய்வது மிகவும் அக்கிரமமான காரியமாகும். இதற்கு வியாபாரிகள் என்று சொல்லப்படுவோர்கள் கடைகடைக்கு 10-ம் 5-ம் கொடுத்து இதை வளர்ப்பது என்பது அதி மூடத்தனமும் அக்கிரமுமான காரியமாகும்,

மற்றும் இப்படிப்பட்ட காரியங்கள் பொது ஜனங்கள் சுகாதாரத்திற்கு எவ்வளவு கெடுதி என்றும் கட்சிப்பிரதி கட்சிகளால் பொதுஜன அமைதிக்கு எவ்வளவு பங்கம் என்றும் நாம் எடுத்துக்காட்டவேண்டியதில்லை.

உதாரணமாக ஈரோட்டில் 3 மாரியம்மன்கள் உண்டு. இவைகள் கட்சி யில்லாமல் நடந்த காலமே அருமை. தவிர ஒவ்வொரு கோவிலும் ஊருக்குள் வீடுகளுக்கு மத்தியில் இருக்கின்றது. உற்சவ காலத்தில் இரவு எல்லாம் தப்புக்கொட்டுவது அக்கம் பக்கத்திய ஜனங்களுக்கு தூக்கம் இல்லாமல் செய்துவிடுகிறது. இவற்றுள் ஒன்று குழந்தைகள் பெண்கள் ஆஸ்பத்திரிக்குப் பக்கத்தில் இருக்கிறது. இதற்குப் பெரிய மாரியம்மன் என்று பெயர். இந்த கோவிலில் தப்பட்டை அடிப்பதால் ஆஸ்பத்திரி வியாதியஸ்தர்களுக்கு அதிக தொல்லை உண்டு. ஆதலால் இந்த வருஷம் ஆஸ்பத்திரி நிர்வாகஸ்தர் சர்க்காருக்கு விண்ணப்பம் போட்டு இரவு பத்து மணிக்கு மேல் கோவிலில் தப்புக் கொட்டக்கூடாது என்ற உத்திரவை கோவில் அதிகாரிகளுக்கு சார்வு செய்திருப்பதாய்த் தெரிகின்றது. இந்தப் பெரிய மாரி இந்த உத்திரவு போட்ட வர்களையும் கேட்டவர்களையும் என்ன செய்யுமென்பது இனிமேல் பார்க்கக் கூடிய விஷயமானாலும் இந்த உத்திரவை நாம் இப்போது மனமார வரவேற் கின்றோம்.

போலீசுக்கு ஒரு வார்த்தை

கடைசியாக போலீசுக்கு ஒரு வார்த்தை. இந்த பண்டிகையை உத்தேசித்து வாலிபர்களில் பலர் பலவித ஆபாசமான வேஷம் போட்டு பொது ஜனங்களை பணம் கொடுக்கும்படி தொந்திரவு செய்வதும் குடித்து விட்டு கண்டபடி தப்புக்கொட்டிக்கொண்டு ஆபாசமான வார்த்தைகளைப் பேசிக் கொண்டு திரிவதுமான காரியங்களை போலீசார் கவனித்து நியூ சென்சுக்கு சார்ஜ் செய்வதன் மூலம் இக்காரியங்களைச் செய்தால் அதனாலும் வாலிபர் களுக்கு பல நன்மைகள் ஏற்படும் என்றும் இப்படிச் செய்வதையும் மனமார வரவேற்போம் என்றும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

------------------------------- தந்தைபெரியார் -”குடி அரசு” - துணைத் தலையங்கம் - 02.04.1933

10 comments:

தமிழ் ஓவியா said...


என்னதான் முடிவு?


பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு நான்காவது இடம் கிடைத்திருக்கிறது. அதுவும் இந்தியாவின் தலைநகரமான புதுடில்லி என்பது இந்தப் பிரச்சினையில் முதல் இடத்தில் இருக்கிறது.

கொஞ்ச காலத்துக்கு முன் (16.12.2012) மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த மாணவி ஒருவர் பேருந்தில் பாலியல் வன்முறைக்கு உட் படுத்தப்பட்டது குறித்துப் பெரும் புயல் நாடு தழுவிய அளவில் வெடித்துக் கிளம்பியது. சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. எவ்வளவோ மருத்துவ உதவிகளை மேற்கொண்டும் பாதிக்கப்பட்ட பெண் உயிர் பிழைக்கவில்லை.

ஊடகங்கள் உறுமின - ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப் பட்டது. அவரும் பல யோசனைகளை அளித்துள்ளார்.

ஏற்கெனவே பல சட்டங்களும், விதிமுறைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

சட்டமும், நிருவாகத் துறையும் நீதிமன்றமும் எந்தக் கதியில் இயங்குகின்றன என்பதுதான் முக்கியம்; கடந்த 3 ஆண்டுகளில் 68 ஆயிரம் பாலியல் வன்முறை வழக்குகளில் 16 ஆயிரம் வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைத்திருக்கிறது.
காவல்துறையின் கட்டப் பஞ்சாயத்து காரண மாகவோ, அல்லது காவல்துறையின் கவனத்துக்கு வராமலேயோ புதைக்கப்பட்ட வழக்குகளுக்குக் கணக்கு இல்லை.

டில்லியில் கடந்த டிசம்பரில் கயவர்களால் மருத்துவக் கல்லூரி மாணவி வேட்டையாடப்பட்ட நிலையில் வெகு மக்களும் குமுறி எழுந்த நிலையில் இது போன்ற குற்றங்கள் பெருகி வருவதுதான் அதிர்ச்சிக்கு உரியதாகும். தமிழ்நாட்டில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட வன்புணர்ச்சிகள் நடந்துள்ளன. நம் நாட்டு ஊடகங்களின் ஒரு சார்புத் தன்மையால் அவை வெளிச்சத்துக்கு வராமல் போய் விட்டன. அரசாங்கமும் ஒன்றும் நடக்காதது போல காய்களை நகர்த்திக் கொண்டது.

நேற்று ஏடுகளில் வெளிவந்த இன்னொரு சேதி - இதுநாடா கடும் புலி வாழும் காடா என்று நினைக்கத் தோன்றுகிறது.

5 வயது சிறுமி புதுடில்லியில் பாலியல் வன் முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் துடியாய்த் துடிக்கிறார்; அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரான திருமதி சோனியா காந்தி வார்த்தைகள் போதாது - செயல்கள் தேவை! என்று கோபமாகச் சொன்ன தாக ஏடுகள் சொல்லுகின்றன.

அவ்வப்பொழுது இதுபோன்ற கேவலமான நிகழ்வுகள் நடப்பதும், அந்த நேரங்களில் மட்டும் வீராவேசமாகத் துள்ளிக் குதிப்பதும் பழகிவிட்ட ஒன்றாகவே ஆகி விட்டது. மக்களின் மனதும் மரத்துப் போகும் நிலைதான்.

நீதிபதி வர்மா ஆணையம் கொடுத்துள்ள அறிக்கையைக்கூட மத்திய அரசு நீர்த்துப் போகத்தான் செய்திருக்கிறது.

கீழ்நிலையில் உள்ள காவல் அல்லது ராணுவ ஊழியர் அல்லது அதிகாரி வன்புணர்வில் ஈடுபட்டால் அதற்கு அவருக்கு மேலுள்ள அதிகாரியே பொறுப் பேற்க வேண்டும் என்ற வர்மா ஆணையத்தின் அடிப்படையான பரிந்துரையையும் அரசு புறந்தள்ளி விட்டது.

நீதிபதிகள், பொது மக்கள், ஊழியர்கள் போன் றோர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க தனி அனுமதி தேவையில்லை எனும் நீதிபதி வர்மாவின் பரிந்துரைகூட ஏற்கப் படவில்லை.

பாலியல் குற்றம் செய்தவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது போன்ற சிபாரிசுகள் ஏற்கப் படவில்லை.

ஆணுக்குப் பெண் அடிமை எனும் மனப்பான்மை தகர்த்தெறியப்பட கடுமையான சட்டங்கள் தேவை. பாம்புக்கும் நோகாமல், பாம்பு அடித்த கொம்புக்கும் நோகாமல் சட்டம் செய்தால் அது நாக்கை வழித்துக் கொள்ளத்தான் பயன்படும்.

பெண்களுக்குப் போதிய கல்வி தந்து ஆட்சி அதிகாரத்தில் 50 விழுக்காடு இடம் தந்து, பெண்ணென்றால் பலகீனமானவர் என்ற நிலை மாற்றப்படுவதற்கான போதிய உடல் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படுவது போன்ற தொலை நோக்குகள் தேவை.

ஊடகங்கள் மூலம் எச்சரிக்கும் ஏற்பாடுகள் தேவை; இல்லை என்றால் அவ்வப்போது பேசப்படும் வெட்டிப் பேச்சாகவே அது முடிந்து போய்விடும்.

பெண்களும், ஆண்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்துக் கொண்டு விடாமல் வீதிக்கு வந்து போராட வேண்டும் - இது மிகவும் முக்கியம். 22-4-2013

தமிழ் ஓவியா said...


மனிதன்
எழுத்துரு அளவு Larger Font

பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

தமிழ் ஓவியா said...


மனிதன்


பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

தமிழ் ஓவியா said...


ஏப்ரல் 22: புவி தினம்


நாம் வாழும் பூமியைக் காப்பதன் முக்கியத்து வத்தை வலியுறுத்தும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியை 'புவி தினம் என அனுசரிக்கிறோம். 1969இல் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், ஜான் மெக்கன்னல் என்பவர்தான் இப்படி ஒரு தினத்தை கடைபிடிக்கவேண்டும் என்பதை முன்மொழிந்தார்.

இந்த தினத்தை 192 நாடுகள் கடைபிடிக்கப்படுகின் றன. பூமியைப் பாதுகாப்பதை நோக்கமாகக்கொண்ட இந்த தினம், சுற்றுச்சூழல் மாசு அடையாமல் காப்பது, போர், வறுமை மற்றும் அநீதிகளுக்கு எதிராகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தயும் உணர்த்துகிறது.

தமிழ் ஓவியா said...


விகடன் கச்சேரி

இந்த வார ஆனந்தவிகடன் (24.4.2013) தலையங்கமும், அதனைத் தொடர்ந்து கூட்டணி பவன் எனும் அரசியல் சிறப்புக் கட்டுரையும் அனேகமாக பார்ப்பனர்களின் மனப்பான்மையும், முதலாளித்துவ மனப் பான்மை கொண்டவர்களின் சிந்தனையும், எந்தத் திசையில் பயணிக்கின்றன என்பதற் கான கண்ணாடியாகும்.

மதச் சார்பற்றச் சிந்தனை கொண்ட ஒருவரைத் தான் பிரதமர் வேட்பாளராக எதிர் அணி தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கருத்துகளைப் பரப்பி, எதிர் அணியினரைக் குழப்பும் காங்கிரஸின் வியூகம் நமக்குப் புரியாமல் இல்லை.

இந்திய தேசத்தை வழி நடத்தக் கூடிய பிரதமர் மதச் சார்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அதே சமயம் அந்த ஒற்றைத் தகுதி மட்டுமே பிரதமர் வேட்பா ளருக்குப் போதும் என்ற பிரஸ்தாபிக்க முனையும் காங்கிரஸின் துடிப்பு வடிகட்டிய முட்டாள்தனம் என்கிறது. ஆனந்தவிகடன் தலையங்கம்.

இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும்; மதச் சார்பின்மை என்னும் பிரச்சினை ஏதோ காங்கிரஸ் சம்பந்தப்பட்டது போலவும் மற்ற வர்களுக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்பது போலவும் எழுதுவது வடிகட்டிய முட்டாள்தனம் அல்லவா!

இன்னும் சொல்லப் போனால் காங்கிரசை விட பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய அங்கமான அய்க்கிய ஜனதா தளம் அதன் சார்பில் பிகாரில் முதல் அமைச்சராக இருக்கக் கூடிய நிதிஷ்குமார்தான் மதச் சார்பின்மை என்னும் குரலை வெண்கல நாதமாக ஒலிக்கிறார்.

அந்த ஒற்றைத் தகுதி மட்டும் போதுமா என்று ஆனந்தவிகடன் எழுப்பும் வினாவில் மோடி என்னும் மிக மோசமான இந்துத்துவா வெறியரின் நச்சுக் காற்றுக் குடிகொண்டு இருக்கிறது.

குஜராத்தில் மோடி தலைமையில் நடத்தப் பட்ட சிறுபான்மையினருக்கு எதிரான நர வேட்டை - பிஜேபியின் கதா நாயகரான வாஜ்பேயியே அதிரச் செய்துவிட்டதே! இனி எந்த முகத்துடன் வெளி நாட்டுக்குச் செல் லுவேன்? என்று அவரைப் புலம்ப வைத்ததே!

ஆனந்த விகடன் மிகச் சாமர்த்தியமாக கூறும் அந்த ஒற்றைத் தகுதி என்பது மிக மிக (எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்) முக்கியமே!

காங்கிரஸின் சாதனைகளைப்பற்றி விகடன் குறை கூறியுள்ளது. காங்கிரசுக்கு வக்காலத்து வாங்குவது நமது நோக்கம் இல்லை.

அதே நேரத் தில் பொருளாதாரக் கொள்கையில் காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் என்ன பெரிய வேறுபாடு? வெளியுற வுக் கொள்கைதான் ஆகட்டும் என்ன வித்தியாசம்?

பி.ஜே,பி.யின் மதச் சார்பு தன்மைக்கு நேரிடையாக வக்காலத்து வாங்குவதில் ஜகா வாங்கும் விகடன், சாதனைகள் என்ற ஒன்றைக் காட்டித் திசை திருப்பப் பார்க்கிறது.

தலையங்கத்தை ஒட்டி எடுக்கப்பட்ட சிறப்புக் கட்டுரையின் சாராம்சம் அதிமுகமீது குற்றப் பத்திரிகை படிக்காமல், சில குறைகளைச் சொல்லு வதுபோலச் சொல்லி, அதிலிருந்து அது திருத்திக் கொண்டு செயல்படுவது நல்லது என்னும் அக்கறையுடன் நயமாக நல்லுரைகள் பரிமாறப் பட்டுள்ளன. துக்ளக் ராமசாமிகள் கடைப்பிடிக்கும் பாணி இது.

ஒரு பக்கத்தில் இந்திய முதலாளிகள் மோடி வர வேண்டும் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறார்கள்;

இன்னொரு பக்கத்தில் இந்துத்துவாவாதிகள் பிஜேபியும், அதிமுகவும் அதிகாரபீடத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசையைக் கன்னத்தில் அடக்கிக் கொண்டு எழுது கிறார்கள்.

இதுதான் நாட்டின் நிலைமை!

வெகு மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


உலகப் புத்தக நாள்


இன்று உலகப் புத்தக நாள் (1995) இதனையொட்டி சென்னை பெரியார் திடலில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா இணைந்து சென்னை புத்தகச் சங்க மத்தை இம்மாதம் 18 முதல் 27 முடிய நேர்த்தியாக நடத்திக் கொண்டு இருக்கின்றன.

இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளில் அரங்கை ஏற்படுத்திக் கொண்டு இயக்க நூல்களை விற்பனை செய்து கொண்டு இருக்கிறது என்றாலும் இயக் கமே இத்தகைய சங்கமத்தை நடத்துவது இதுவே முதல் தடவையாகும். சென்னை பெரியார் திடலில் அமைக்கப் பட்டுள்ள 68 அரங்குகளின் நேர்த்தியையும், எழிலையும் மனந்திறந்து பாராட்டுகின் றனர். ஆண்டுதோறும் இது தொடர வேண்டும் என்ற அன்பு வேண்டுகோளையும் வைத்துள்ளனர். தொடரும் என்றும் கழகத் தலைவர் உறுதிப்படுத்தியும் உள்ளார்.

வெறும் நூல்கள் விற்பனை அரங்கு மட்டுமல்ல; மாலை நேரத்தில் சிந்தனை அரங்கம் என்பது பல புதிய அறிமுகங்களின் அணி வகுப்பாக அமைந்து வருகை யாளர்களின் ஆர்வத்தை வாரி அணைத்துக் கொள் கிறது. கவினுறு கலை நிகழ்ச் சிகள் கூத்தாடுகின்றன. பொம்மலாட்டம் வீதி நாடகம், கதை சொல்லுதல், மேஜிக் காட்சிகள் என்று ஒவ்வொன் றும் கட்டம் கட்டிப் போட வேண்டிய கற்கண்டு விருந்து! காணாதார் கண்கள் இருந்து என்ன பயன்? கேட்காதார் காது களாலும் யாது பலன்? என்றே கேட்கத் தோன்றுகிறது.

ஒரு பகுத்தறிவு இயக் கத்தை உருவாக்கியதோடு அல்லாமல், நூல் வெளி யீட்டுக் கழகம் என்ற அமைப்பையும் ஏற்படுத்தி நூல்களை வெளியிட்டுக் கருத்துப் பிரச்சாரம் செய்த திலும் தந்தை பெரியார்தான் முன்னோடி!

இன்று அது மேலும் வளர்ந்து நூற்றுக்கணக் கான வெளியீடுகள் வந்து கொண்டே இருக்கின்றன.

பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து அறிவுப் பசியைத் தூண்டி விருந்தும் படைக்கிறது.

வணிக நோக்கில் அல்ல- கருத்துப் பிரச்சாரமே அதன் இலக்கு. இன்றுகூட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் நூல்கள் அளவுக்கு வேறு யாராலும் மலிவு விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படுவ தில்லை. காரணம் கருத்துப் பிரச்சார லாபமே அதன் குறிக்கோள்!

குடந்தை ஆர்.சி. வெங்கட்ராமன் எனும் இயக்க ஆர்வலர் தந்தை பெரியார் அவர்களிடத்தில் குடிஅரசு இதழுக்கு ஒரு லட்சம் சந்தா சேரும் வரை ராமாயண ஆராய்ச்சி போன்ற கட்டுரை களை நிறுத்தி வைப்பது நல்லது என்று ஆலோசனை சொன்ன நேரத்தில் நான் வருமானத்தை முன்னிட்டு பத்திரிகை நடத்தவில்லை. ஒரே ஒரு சந்தாதாரர் மட்டும் இருந்தாலும், நான் என் கொள்கையைத் தெரிவித்தே தீருவேன். இதுவரை ஆயிரக் கணக்கான ஆண்டுகள் நம் மக்கள் அறியாமையில் மூழ்கி இருந்தது போதாதா? என்று பளிச் சென்று பதில் சொன் னாரே! (விடுதலை 17.5.1959).
உலகப் புத்தக நாளில் இந்தச் சிந்தனை முக்கியம் அல்லவா!

- மயிலாடன் 23-4-2013

தமிழ் ஓவியா said...


புத்தகச் சிந்தனை
int

உலகில் நொடி ஒன்றுக்கு 16121 நூல்கள் வாங்கப்படுகின்றன.

இந்திய மொழிகளுள் முதன் முதலாக அச்சுப் புத்தகம் வெளியிடப்பட்டது தமிழில்தான். நூல்: தம்பிரான் வணக்கம்

தமிழ் ஓவியா said...


அழியாப் புகழ்


மனிதன் தோன்றியது மற்றவ னுக்கு உபகாரம் செய்ய என்று எண்ணியே செயலாற்ற வேண்டும். அப்படி நடப்பவன்தான் தனக்கு அழியாப் புகழினைச் சம்பாதித்துக் கொள்பவன் ஆவான்.
(விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


காரணம்


வடநாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்துகொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...


மதுரைக் கூத்து!


மதுரையில் நேற்று காலை 8.41 மணிக்கு சுந்தரேசுவரருக்கும், மீனாட்சிக்கும் கோலாகலமாக விவாஹ சுப முகூர்த்தம் - அதாவது திருக் கல்யாணம் நடந்ததாம். இப்படி ஒவ்வொரு ஆண்டும் இவர்களுக்குக் கல்யாணம் நடக்கிறது. இலட்சக் கணக்கான பக்தர்கள் அப்படியே வெள்ளமாய்த் திரண்டு வந்து சேவிக்கிறார்களாம்.

அப்படி சேவிக்கிற பக்தர்களில் ஒரே ஒருவராவது சிந்திக்கவேண்டாமா?

போன வருசம் இதே நாளில்தானே இதே இருவருக்கும் கல்யாணம் நடந்தது. இப்பொழுது மறுபடியும் கல்யாணம் என்றால், போன வருடம் செய்துகொண்ட கல்யாணம் என்னாச்சு என்று யோசிக்கவேண்டாமா?

பக்தர்களாகிய நாம் ஒவ்வொரு ஆண்டும் கல்யாணம் செய்துகொண்டா இருக்கிறோம்? இது என்ன கூத்தாயிருக்குது? போன வருசம் கல்யாணம் கட்டிக்கொண்ட மீனாட்சி வேறு - இந்த மீனாட்சி வேறா? என்றெல்லாம் கொஞ்சம் அசைப்போட வேண்டாமா?

மற்றொன்றையும் அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டியது. நன்றாகப் பாருங்கள். பக்தர்கள் நம்பும் அந்த மீனாட்சிக்கு சுந்தரேச ஆண் கடவுளா, மீனாட்சியாகிய பார்வதியின் கழுத்தில் தாலி கட்டுகிறார்? இல்லையே! பார்ப்பான்தானே மீனாட்சியின் கழுத்தில் தாலி கட்டுகிறான்.

எந்த ஒரு பக்தருக்கும் ஆத்திரம் பொத்துக் கொண்டு கிளம்பவில்லையே! அகிலாண்டேசுவரியின் கழுத்தில் இந்த அற்பப் பார்ப்பன அர்ச்சகனா தாலி கட்டுவது? என்ற கோபம் கிழித்துக்கொண்டு கிளம்ப வேண்டாமா? வைரத்தாலி கட்டியதால் ரோஷம் வரவில்லையா? பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்று தந்தை பெரியார் சொன்னது சரியாக அல்லவா போய்விட்டது!

தந்தை பெரியார்தான் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படிக் கேட்டார். போன வருஷம் கல்யாணம் பண்ணியதை எவன் அடித்துக்கொண்டு போனான்? என்று கேட்டாரே, அப்பொழுதுகூடப் பக்தர்களுக்குப் புத்திவரவில்லையே, வெட்கக்கேடு!

இன்னொரு படுதமாஷ். நாளை அழகர் ஆற்றில் இறங்குகிறாராம். எதற்கு? தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தைக் கண்குளிரக் காண்பதற்கு; நேற்று காலையிலேயே கல்யாணம் ஆகிவிட்டது. நாளை தான் அழகர் ஆற்றில் இறங்குகிறாராம். ஞானக் கண்ணால் தங்கையின் கல்யாணம் நடந்ததையும் அறிந்திருக்கவேண்டாமா? பாதி வழியில் தெரிந்து கோபித்துக்கொண்டு திரும்பு கிறாராம் அழகர்! இன்னொரு கேள்வியும் நியாயமாக எழவேண்டுமே!

போன வருஷம்தான் தாமதமாக வந்தார்... இருந்துவிட்டுப் போகட்டும்; இந்த ஆண்டாவது குறிப்பிட்ட நேரத்துக்குத் தங்கையின் திருக்கல் யாணத்தைக் காண விரைந்து வந்திருக்க வேண்டாமா? மனிதன் ஒருவன் தவறு செய்தால் இந்தக் கேள்வியைத்தானே கேட்பார்கள்.

ஆனால், கடவுள் செய்த காரியமாயிற்றே! அதனால்தான் பெரியவர்கள் செய்தால் பெருமாள் செய்தது மாதிரி என்ற பழமொழியும் பிறந்ததோ!

சரி, அழகருக்குக் கோபம் வந்ததே - திரும்பி எங்கு சென்றார்? தான் குடியிருக்கும் அழகர் மலைக்கா சென்றார்?

அதுதான் இல்லை, வண்டியூருக்குத் திரும்பினா ராம்; அங்கே யார் இருக்கிறார்? துலுக்கநாச்சியார் என்ற அழகரின் வைப்பாட்டி வீட்டுக்குச் செல்லுகிறாராம்.
என்ன வாந்தி வருகிறதா? நாம் எழுதுவது கடவுள் கதை - ஞாபகம் இருக்கட்டும்!

இந்து முன்னணிகாரர்கள், அழகர், துலுக்க நாச்சியார் வீட்டுக்குச் செல்லுவதுபற்றி மூச்சு விடுவதில்லையே - ஏன்? நியாயமாக அவர்கள் மறியலில் ஈடுபடவேண்டாமா?

கடவுள் என்றால் உயர்ந்தவர்; அனைத்துயிரையும் படைத்தவர் - அனைவருக்கும் தந்தை போன்றவர் என்று சொல்லிக்கொண்டு இவ்வளவு ஒழுக்கக் கேட்டையும் செய்கிறார் என்றால், இதனை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவேண்டாமா? இத் தகைய ஒழுக்கக்கேடான கோவில் விழாக்களைத் தடை செய்யவேண்டும் என்று பக்தர்கள் அரசுக்குக் கோரிக்கை வைக்கவேண்டாமா?

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றும், பரப்பியவன் அயோக்கியன் என்றும், வணங்கு கிறவன் காட்டுமிராண்டி என்றும் தந்தை பெரியார் சொன்னது தவறா? இப்பொழுது சொல்லுங்கள்! சொல்லுங்கள்!!