Pages

23.8.12

ஈழத் தமிழர்களாக இருந்தாலும், தமிழக மீனவர்களாக இருந்தாலும்...


காவிரி நீர், முல்லைப் பெரியாறு, சேது சமுத்திரத் திட்டம்,  பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இவற்றை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஆகஸ்டு 31ஆம் தேதி ஆர்ப்பாட்டம்! தமிழர் தலைவர் அறிவிப்பு



நான்கு முக்கியப் பிரச்சினைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 31ஆம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 

 இலங்கை சிங்கள அரசு, ஈழத் தமிழர்களை மட்டும் தான் வேட்டையாடுகிறது - படுகொலை செய்கிறது என்று சொல்ல முடியாது - இந்தியாவில் - தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களையும் படுகொலை செய்து கொடுந் தாக்குதலை அன்றாடம் தொடுத்து வருகிறது.

ஈழத் தமிழர்களாக இருந்தாலும், தமிழக மீனவர்களாக இருந்தாலும்...

ஆக ஈழத் தமிழர்களாக இருந்தாலும் சரி, தமிழகத் தமிழர்களாக இருந்தாலும் சரி - அவர்கள் படுகொலை செய்யப்பட்டால் இந்திய அரசு கண்டு கொள்ளாது என்ற எண்ணம், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மத்தியில் எழுந்து நிற்கிறது. இது அலட்சியப்படுத்தப்படக் கூடியதும் அல்ல. கவலைப்பட்டால் போதாது; காரியமற்ற வேண்டும்.

1983 முதல் தொடர் தாக்குதல்கள்!

1983 முதல் 2012 முடிய கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 572, காயம்பட்டவர்கள் 1200,, அழிக்கப்பட்ட படகுகள் 300, சேதப்பட்ட படகுகள் 600. இழப்பினைப் பொருளாதாரக் கணக்கில் சொல்ல வேண்டும் என்றால் ரூ.25,522 கோடியாகும்.

அவ்வப்போது தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பொழுதெல்லாம், தமிழ்நாடு அரசு, இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதும்; இந்தியாவின் பிரதமரோ இலங்கை அரசுக்குத் தன் கவலையை (ஊடிஉநச)  தெரிவித்துக் கொள்வார். இவையெல்லாம் சம்பிரதாயங்களாகிவிட்டன; கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய்விட்டன.

முன்னாள் ஆலோசகர் கூறியது என்ன?

இந்தியத் தேசிய பாதுகாப்புக் குழுவின் முன்னாள் ஆலோசகரான சூரிய நாராயணன் கூறிய தகவலும், கருத்தும் கவனிக்கத் தக்கவையாகும்.

உலகம் முழுவதும் உள்ள மீனவர்கள் கடல் எல்லைகளைப் பற்றியெல்லாம் சிந்திப்பதே இல்லை, கவலைப்படுவதும் இல்லை. இலங்கை மீனவர்கள் மாலத்தீவு, இந்தியா எல்லைக்குள் வந்து மீன்பிடித் தொழிலைச் செய்கின்றனர். இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடல் பரப்புக் குள்ளும்  செல்கின்றனர். வங்கதேச மீனவர்களும் மியான்மா கடல் பரப்புக்குள் நுழைகின்றனர். பன்னாட்டுக் கடல் எல்லைகளுக்கான அய்.நா. சட்டத்தில் 73 மற்றும் 145 ஆவது பிரிவுகள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதைக் கிரிமினல் குற்றமாகக் கொள்வதில்லை என்று குறிப்பிட் டுள்ளாரே - இவற்றை எல்லாம் இந்திய அரசு அதன் சட்டத்துறை கவனத்தில் கொள்ளாதது ஏன்?

இந்திய அரசே பொறுப்பு

தமிழ்நாட்டுக்குக் சொந்தமான கச்சத்தீவை, தன்னிச்சையாக இலங்கை அரசுக்குத் தூக்கிக் கொடுத்த இந்திய அரசே தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

கச்சத் தீவுதானே பிரச்சினை? அதனை மீண்டும் பெறுவதைத்தவிர வேறு வழியேயில்லை. திராவிடர் கழகம் நடத்திய மாநாடும் - தொடுத்த வழக்கும்

தமிழக மீனவர்கள் பாதுகாப்பு மற்றும் கச்சத்தீவு மீட்பு மாநாட்டினை இராமேசுவரத்தில் திராவிடர் கழகம் நடத்தியது. (26.7.1997)

முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசு, பழ. நெடுமாறன், மருத்துவர் ச. இராமதாசு போன்றவர்கள் எல்லாம் பங்கு கொண்டனரே - அம்மாநாட்டின் தீர்மானப் படி திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் என்ற முறையில் கச்சத் தீவு உரிமை - தமிழக மீனவர் பாதுகாப்புக்கோரி தாக்கல் செய்த ரிட் மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு (29.7.1997) இன்றுவரை நிலுவையில் உள்ளது.

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை அரசின் கண் மூடித்தாக்குதல்கள் விஷயத்தில் இனி பொறுமைக்கு இடமேயில்லை; ஒட்டு மொத்த தமிழ்நாடும் கிளர்ந்து எழுந்தே தீர வேண்டும்.

காவிரிநீர், முல்லைப் பெரியாறு பிரச்சினைகள்

2) அதுபோலவே தமிழ்நாட்டுக்குச் சொந்தமான காவிரி நீர்ப் பிரச்சினை.

தமிழ்நாட்டுக்கு சட்டப்படி, நியாயப்படி கொடுக்க வேண்டிய தண்ணீரைக் கொடுப்பதில் கருநாடக அரசு சட்ட விரோதமாக, நியாய விரோதமாக நடந்து வருகிறது.

நடுவர் நீதிமன்றம் சொன்னாலும், உச்சநீதிமன்றம் கட்டளை பிறப்பித்தாலும் அவற்றைச் சற்றும் பொருட் படுத்தாத நிலையில் கருநாடக அரசு (எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஒரே நிலைதான்!) நடந்து கொண்டு வருகிறது. காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவராகப் பிரதமர் இருந்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லாதது - பிரச்சினையைத் தட்டிக் கழிப்பது ஆகாதா?

அந்த அமைப்பினையும் மாற்றி அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

முல்லைப் பெரியாறு நீர்ப் பிரச்சினையிலும் கருநாடகத்தைப் பின்பற்றிதான் கேரள அரசும் நடந்து கொண்டு வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை முடக்கும் தனி சட்டங்களை இயற்றும் அளவுக்கு அம்மாநிலங்கள் தலை கனத்து நிற்கின்றன.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்னாயிற்று?

3) சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டம், அய்க்கிய முற்போக்கு ஆட்சி அதனைச் செயல்படுத்த முற்பட்டு, பல நூறு கோடி ரூபாய் செலவு செய்து முக்கால்வாசிப் பணிகள் முடிவுற்ற நிலையில், ராமன் என்ற புராண கற்பனைப் பாத்திரத்தை முன்னிறுத்தி, மதவாதத்தைக் கொண்டு வந்து திணித்து, அரசமைப்புச் சட்டம் வலியுறுத்திய  விஞ்ஞான மனம்பான்மைக்கு முரணாக முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென் பகுதியின் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்படுகின்றன.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவுபடுத்தி, திட்டத்தை உடனடியாகச் செயல் படுத்திட மத்திய அரசு முன் வர வேண்டும்

பதவி உயர்விலும் இடஒதுக்கீடு

4) மத்திய அரசு துறைகளில் பதவி உயர்வில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. உச்சநீதிமன்றத்தின் ஒரு ஆணையால் (1992) அதற்குக் குந்தகம் ஏற்பட்ட நிலையில், புதிய சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, மீண்டும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டுக் கதவு திறக்கப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் இயற்றப்பட்ட ஆணை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் மீண்டும் இந்தப் பிரச்சினையில் முட்டுக்கட்டை போட்டுள்ளது. இந்தத் தடை உரிய சட்டத் திருத்தத்தின் மூலம் தகர்க்கப்பட வேண்டும்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு..
அதுபோலவே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டுக்கான சட்டத் திருத்தமும் கொண்டு வரப்பட வேண் டியது மிகவும் அவசியமாகும்.

மத்தியில் சமூக நலத் துறை அமைச்சராக அன்று இருந்த மாண்புமிகு சீத் தாராம் கேசரி அவர்களால் நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டு அறிவிக் கப்பட்டதுதான் இது.

எனவே தாழ்த்தப்பட் டோருக்கும், பிற்படுத்தப்பட் டோருக்கும் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டுக்கு வழி செய்யும் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

நான்கு பிரச்சினைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம்!

1) தமிழக மீனவர்கள் பிரச்சினை

2) காவிரி நீர், முல்லைப் பெரியாறு நீர்ப் பிரச்சினை

3) சேது சமுத்திரக் காலவாய்த் திட்டம் நிறைவேற்றம்.

4)    பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோருக்கு இடஒதுக்கீடு.

இந்த நான்கையும் வலியுறுத்தி வரும் 31.8.2012 வெள்ளியன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங் களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். திருச்சியில் நான் பங்கு கொள்வேன். கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்திட ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமை களை மீட்டெடுக்கும் நமது பணி, வெற்றியின் இலக்கை எட்டும் வரை தொடரும்! தொடரும்!!

ஆயத்தமாவீர் தோழர்களே, தோழியர்களே!



சென்னை                   
23.8.2012

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

குறிப்பு: 31.8.2012 அன்று மாலை 5 மணிக்கு திருச்சியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர்  தலைமை ஏற்பார்.

2 comments:

  1. நாடாளுமன்றம் நடக்கவா - முடக்கவா?

    நாடாளுமன்றம் நடைபெறுவதற்கு நாள் ஒன்றுக்கு ஆகும் செலவு ரூ.1.7 கோடி! நாள் ஒன்றுக்கு இவ்வளவு செலவழித்து நடத்தப் படும் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் அன்றாடம் முடக்குவது நியாயமான செயலா?
    நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை பொது மக்கள் தேர்ந்தெடுப்பது - தங்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசுவ தற்காகத் தானே தவிர, பாமரத்தனமான கூச்சல் போடுவதற்கோ, அவையை நடத்தவிடாமல் தடுப்பதற்கோ அல்ல.

    எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பேசித் தீர்க்க வாய்ப்புள்ள இடம்தானே நாடாளு மன்றம்? அப்படி இருக்கும்போது அங்கு விவாதங்களை நடத்த அனுமதிக்காதது ஏன்? நிலக்கரிச் சுரங்கங்களை தனியார் நிறுவ னங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி எதிர்க்கட்சியான பி.ஜே.பி., பிரதமர் பதவி விலக வேண்டும், அதுவரை நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்பது எந்த வகையில் ஜனநாயக ரீதியான செயல்பாடாகும்.

    குற்றச்சாற்றை அவையில் வையுங்கள். அவற்றிற்குப் பதில் சொல்லவும், விவாதம் நடத்தவும் தயார் என்று ஆளும் காங்கிரஸ் தரப்பில் சொன்ன பிறகு அந்தச் சவாலை ஏற்றுக் கொள்ள பி.ஜே.பி.க்கு என்ன தயக்கம்?

    தங்கள் கையில் சரக்கு இருக்குமானால் அதனை நாடாளுமன்றத்தில் வைத்து ஆளும் கட்சியைத் திணற அடிக்க வேண்டியதுதானே?

    அவையில் நடக்கும் அமளிகளை தொலைக் காட்சி மூலம் மக்கள் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்.

    எதற்கெடுத்தாலும் பதவி விலகச் சொல் லுவதுதான் எதிர்க்கட்சியின் பாணியா? பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் பொழுது குற்றச்சாற்றுகள் அவையில் வைக்கப்பட்ட தில்லையா? அப்பொழுதெல்லாம் எத்தனை முறை பதவி விலகினார்கள்?

    பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக இருந்த எல்.கே. அத்வானி தானே உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் இருந்தார்!

    அந்தக் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்ற முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி போன்றோர் அமைச்சர் பதவிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருந்தனரே தவிர, பதவியைத் தூக்கி எறியவில்லையே

    அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த வழக்கிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முயன்றவர்தானே உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி?

    இவற்றை எல்லாம் மக்கள் மறந்து இருப் பார்கள் என்ற தைரியத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்களா?

    சபாநாயகர் ஆசனத்தில் இருந்து எழுந்து நின்றால், உறுப்பினர்கள் இருக்கைகளில் அமர வேண்டும் என்ற அவை மரபைக்கூடப் பின் பற்றாத இவர்கள் எப்படி நாடாளுமன்ற நெறிமுறைகளை மதிப்பவர்கள் ஆவார்கள்?

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி களே சட்டத்திற்குப் புறம்பாக, அவை மரபு களுக்கு மாறாக நடந்து கொண்டால் வாக் களித்த பொது மக்கள் எப்படி நடந்துகொள் வார்கள்? வழி காட்ட வேண்டியவர்கள் வழி தவறலாமா? வாக்காளர்கள் மத்தியிலும் விழிப் புணர்ச்சி ஏற்பட்டாக வேண்டும். தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் இந்த வகையில் வினாவும் எழுப்ப வேண்டும்.23-8-2012

    ReplyDelete
  2. ஆகஸ்டு 25 அழைக்கிறது!
    எழுத்துரு அளவு
    அய்யாவின் பொற்கரத்தால்
    ஆசனத்தில்
    அமரவைக்கப்பட்ட ஆசிரியர்!

    அரை நூற்றாண்டாய்
    அந்த ஆசனத்திற்குப்
    பெருமை சேர்த்த பெட்டகம்! ஆயிரம் காலத்து ஆரியத்தின் அதிகாரத்தை ஆழப் புதைத்த அறிவுப் புத்தகம்.



    ஜாதியின் வேரை
    சாத்திரத்தின் ஊரை
    இதிகாசத்தின் காட்டை
    இவற்றிற்கெல்லாம் அப்பனான கடவுள் எனும்
    அப்பட்டமான பொய்யை -

    அமுக்கிக் கட்டி
    பெரியார் தந்த
    பேனா எனும்
    பட்டாக் கத்தியால்
    பதம் பார்த்த பகுத்தறிவு இயக்கத்தின்
    பண்பட்ட பேரொளி!

    பேனாவா அது? பெரும் படைக்கலன்!
    பெண்ணடிமைக்
    காரிருளைக்
    கிழித்த கத்தி!
    சமூக நீதிச் சக்கரத்தைச்
    சுழலவிட்ட சுக்கான்!



    பேனாவா அது?
    பெரும்படைக்கலன்!
    தமிழர்களை
    தமிழ்நாட்டை
    வஞ்சிக்கும் வால்களை
    ஒட்ட நறுக்கும் கொடுவாள்!

    ஈழத் தமிழர்களை
    ஏற்றுவிக்கும் ஏணி!
    ஈனத் தமிழர்களை
    மானக் கயிற்றால் கட்டி
    மனமாற்றம் செய்யும்
    மடைமாற்றக் கருவி!

    முற்போக்குத்
    திசைகாட்டும்
    முழு நிலவு!
    பிற்போக்கு
    நோய்களுக்குப்
    பிடரியில் அடி கொடுக்கும்
    பெரும் சாட்டை!

    எண்பதில் அய்ம்பதா!
    இதழ் உலகில்
    இந்தச் சாதனை
    இவருக்கு மட்டுமே!

    அதனால்தான்
    ஆசிரியர் என்றால்
    விடுதலை ஆசிரியரை
    மட்டுமே குறிக்கும்
    ஒட்டு மொத்த முகவரி!

    அறிவுலக ஆசான் பள்ளியில்
    ஆசிரியர் பயிற்சி பெற்று
    அரை நூற்றாண்டாய்
    பாடம் நடத்தும் தலைவருக்கு
    நாளை மறுநாள் (25-8-2012)
    நறுமண விழா -
    நம் பெரியார் திடலில்
    தலைநகராம் சென்னையில்



    முரசைப் பேனாவாக்கி
    முழங்கும் முத்தமிழ் அறிஞர்
    கலைஞர் எனும் காலக் கதிர்
    கட்டியணைத்துப் பாராட்டும்,
    கற்கண்டாம் தம் இளவலை!
    மூத்த நீதியரசர்களின்
    முத்திரை பதிப்புகள்!
    ஊடக வானில்
    மின்னும்
    நம்மின உறவுகளின் நாக்கு நடனங்கள்!

    இவற்றைக் காணாமல்
    இருப்போமோ வீட்டில்?
    எழுக! வருக!
    இன்பம் பருக!

    - கவிஞர் கலி.பூங்குன்றன் 23-8-2012

    ReplyDelete