Pages

14.8.12

வகுப்புரிமை நாள் வரலாறு



-
                                                           வகுப்புரிமை நாள்
இந்நாள் வகுப்புரிமை நாள் (1950) என்று தந்தை பெரியார் அவர்களால் அறிவிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகழ் பூத்த பொன்னாள்!

நீதிக்கட்சி -காங்கிரசுக்குள்ளே இருந்து கொண்டே சமூக நீதிக்கான தந்தை பெரியார் அவர்களின் போர்க்குரல், நீதிக் கட்சி ஆட்சியின் சாதனை என்னும் தொடக்கத்தில் இருந்து 69 விழுக்காட்டை தமிழ்நாட்டு மக்கள் (தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற் படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் அனுபவிக்கும் வாய்ப்பு) அனுபவித்து வருகிறார்கள்.


இந்தியா முழுமையும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்திய அரசுத் துறைகளிலும் 27 விழுக்காடு அனுபவித்துக் கொண்டி ருக்கிறார்களே - அவர்கள் அத்தனைப் பேர்களும் சமூக நீதிச் சிந்தனையாளர்களும் கவனமுடன் கவனித்து இந்நாளில் ஒரு நிமிடமாவது எண்ணிப் பார்த்து, நன்றிக் கண்ணீர் உகுத்து, மேற் கொண்டு செல்ல வேண்டிய பாதையைப் பற்றிப் பகுத்தறி வுடன் சிந்திக்க வேண்டிய நாள் இந்நாள்.

1921 இல் நீதிக் கட்சியில் தொடக்கம் கொடுக்கப் பட்டு 1928 இல் டாக்டர் சுப்பராயன் தலைமையிலான நீதிக் கட்சி ஆதரவு அமைச்சரவையில் அமைச்சராக இருந்த எஸ். முத்தையா (முதலியார்) அவர்களால் பத்திரப் பதிவுத் துறையில் செயல்படுத்தப்பட் டது). GO/MS/NO1880 Education Dated:15.9.1928).

1950 வரை இடையில் சில விகிதாசார மாற்றங்களுடன் சென்னை மாநிலத்தில் நடைமுறையில் இருந்து வந்த இந்த வகுப்பு வாரி ஆணை - சுதந்திர இந்தியாவின் அர சியல் சட்டத்துக்கு முரணா னது என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றம், டில்லி உச்ச நீதிமன்றத்தின் பார்ப்பன ஆதிக்க நீதிபதிகளால் செல்லுபடியற்றது என்று ஆக்கப்பட்டுவிட்டது.

தமிழ்நாட்டில் நடை முறையில் இருந்து வந்த இந்த ஆணையை எதிர்த்துப் பார்ப்பனர்களால் தொடுக்கப் பட்ட வழக்குக்கு ஆஜரானவர் யார் தெரியுமா? இந்திய அரசமைப்புச் சட்ட வரைவு குழு உறுப்பினராக இருந்த அனந்தசயனம் அய்யங்கார் என்பதை கவனத்தில் கொள்க!


இந்தக் கொடுமையை எதிர்த்துத்தான் தந்தை பெரியார் தலைமையில் தமிழ் மக்கள் பூகம்பப் பூமியாய், எரிமலைக் கூடமாய் எழுந்து நின்று முதன் முதலாக இட ஒதுக்கீட்டுக்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தச் செய்தது.

இந்நாளை (ஆகஸ்ட் 14) வகுப்புரிமை நாளாகக் கடைப்பிடிக்குமாறு அறிவித்தார் தந்தை பெரியார்(1950). உரிமை  மறுக்கப்பட்ட மக்கள் எல்லாம் இன்று உரிமை பெற்று, வலிமை-வளமை பெற்றுள்ளனர் என்றால் , அவற்றுக்கெல்லாம் அடிப்படை இந்த வகுப்புரிமைத் தத்துவம்தான்! நன்றியோடு நினைவு கூர்வோமாக! 


             ----------------- மயிலாடன் அவர்கள் 14-8-2012 “விடுதலை”யில் எழுதிய கட்டுரை

20 comments:

  1. தடைகள் பலவற்றைக் கண்டு வெற்றி கண்ட டெசோ மாநாடு அடுத்த கட்டப் பணிகளை செயல்படுத்த முனைவோம்! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை



    சென்னையில் டெசோ சார்பில் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் அடுத்தக் கட்ட பணிகளில் ஈடுபட வேண்டும் - ஈடுபடுவோம் என்று திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


    ReplyDelete
  2. கடந்த 12ஆம் தேதி (12.8.2012) ஞாயிறு அன்று காலை டெசோ அமைப்பின் (தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பு) சார்பில் ஏற்பாடு செய்பயப்பட்டிருந்த ஆய்வரங்கம் திட்டமிட்டபடி காலை 10 மணியளவில் சென்னை தியாகராயர் நகர் ஓட்டல் அக்கார்டில் (ழடிவநட ஹஉஉடிசன)-ல் மிகவும் சிறப்பான முறையில் 3 மணி நேரத்திற்கு மேல் நல்லதோர் கலந்துரையாடலை உள்ளடக்கி, மாலை நடக்கவிருந்த ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களைப்பற்றி ஆழமாக விவாதித்து அருமையாக 14 தீர்மானங்களை வடித்தெடுத்தது.

    ஆய்வரங்கம்

    ஆய்வரங்கத்தின் தலைவராக டெசோவின் தலைவர் தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் பொறுப்பேற்று, நோக்கங்களை விளக்கியும், பற்பல உலக நாடுகள், பிற மாநிலங்களிலிருந்து வந்துள்ள பல தேசீயக் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் ஆகியவர்களை வரவேற்றும் சிறப்பான வகையில் கருத்தாழம் மிக்கதோர் உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தினார். தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் மானமிகு டி.ஆர். பாலு அவர்கள் இணைப்புரைகளை அவ்வப்போது வழங்கினார்.

    பல்வேறு ஆக்க பூர்வ யோசனைகளை ஆய்வரங்கம் ஏற்று 14 தீர்மானங்கள் வடிவமைக்கப்பட்டன.

    இறுதியில் அனைவருக்கும் நன்றி கூறும் பொறுப் பினை என்னிடம் அளித்ததிற்கேற்ப நன்றியுரையாற்றி, சுமார் 1.30 மணி அளவில் முடிவுற்று, அனைவருக்கும் மதிய விருந்து அங்கேயே அளிக்கப்பட்டது.

    இம்மாநாடு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஊடகங் களை ஆக்கிரமித்து தமது விருப்பங்களை ஆசைகளை யெல்லாம் செய்திகளாகவும், செய்திக் கட்டுரைகளாகவும் திரித்து எழுதும் ஊடகத் துறையான இராமன் அணி (வீடணன் அனுமார்கள் சுக்ரீவன்கள் இதில் அடக்கம் ஆகும்) இந்த மாநாடு நடக்கவே நடக்காது; அவர் வர மாட்டார், இவர் வர மாட்டார் என்றெல்லாம் கதை யளந்தே கயிறு திரிக்கும் பணிகளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகச் செய்தே வந்தது.

    மாநாட்டைத் தடை செய்ய முயற்சி

    மாநாடு நடைபெறுவதற்கு இரண்டு நாள்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பு அ.தி.மு.க. அரசில் சென்னை மாநகராட்சிக்கான வழக்குரைஞராக இருந்த ஒரு நபர் மூலம் பொது நல வழக்குப் போடப்பட்டு மாநாட்டை தடை செய்ய வேண்டுமென்று பிரார்த் தித்துக் கொண்டனர்.

    தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் அவர்களும் அதனை ஆதரித்து, மாநாட்டிற்கு அனுமதி அளிக்கக் கூடாது; லட்சம் பேருக்கு மேல் வர இருக்கின்றனர். மருத்துவமனை பக்கத்தில் உள்ளது. சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளன என்றெல்லாம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு மூத்த நீதிபதிகளைக் கொண்ட அமர்வு முன் வாதாடினார். அனுமதிகேட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தென் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ. அன்பழகன் சார்பில் மூத்த வழக்குரைஞர் வில்சன், சரவணன் போன்றவர்கள் வாதாடினர்.


    ReplyDelete
  3. இறுதியில் நீதிபதிகள் இடைக்கால ஆணையாக சென்னை நகர காவல்துறை ஆணையர் பல்வேறு சூழ்நிலைகளை ஆய்வு செய்து இம்மாநாட் டிற்கான அனுமதி தருவதுபற்றி முடிவு எடுக்கலாம்; காவல்துறையின் அதிகார உரிமையை இந்த நீதிமன்றம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்றனர்.

    இரவு 2 மணிக்கு முடிவு செய்து காலை 4.30 மணிக்கு மாநாட் டிற்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடத்த அனுமதி இல்லை; தடை என்றெல்லாம் ஏதேதோ விசித்திர காரணங் களை உள்ளடக்கி (11 காரணங் கள்!) அனுமதி மறுப்பு ஆணை யினை வழங்கினர். புதிய நீதிபதி அவசர வழக் காக எடுத்துக் கொள்ள திமுக சார்பில் கோரியதன் அடிப் படையில் தலைமை நீதிபதி ஆணை பிறப்பித்தார். அந்த நீதிபதி சில சட்டப் பிரச்சினைகளை விவாதித்து, தம்மால் வழக்கை எடுத்துக் கொண்டு ஆணை பிறப்பிக்க இயலாது என்று கூறி ஆணை பிறப்பிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார்.

    டெசோவின் தலைவரும் தடைக் கற்கள் உண்டடென் றாலும் தாங்கும் தடந்தோள்கள் உண்டு என்ற புரட்சிக் கவிஞரின் வரிகளை நினைவூட்டி, மாநாடு எப்படியும் நடந்தே தீரும் என்று செய்தியாளர் கேட்ட கேள்வி களுக்குப் பதில் கூறினர்.

    (11.8.2012) சனி இரவு விடுத்த அறிக்கையில் நாளை மாலை மாநாடு அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெறும். தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 20 முதல் 30 வரை நடைபெறும் என்று அறிவித்தார்.

    ReplyDelete
  4. மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் இல்லத்தில் அவசர வழக்காக மேற்கொண்டு விசாரணை நடத்திடக் கோரி தி.மு.க. வழக்குரைஞர்கள் வேண்டுகோள் விடுத்ததை ஏற்று, ஞாயிறு காலை 11 மணிக்கு ஏற்கெனவே விசாரித்த இரு நீதிபதிகளின் அமர்வே விசாரித்து ஆணை பிறப்பிக்க உத்தரவிட்டார் தலைமை நீதிபதி.

    ReplyDelete

  5. தடைக்குத் தடை!

    ஆய்வரங்கம் திட்டமிட்டபடி துவங்கி நடந்தது; அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்திலும் நடந்திட ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தன. அமர்வு நீதிபதிகள் இருவரும் அரசு வழக்குரைஞரின் வாதத்தை ஏற்காது, தடை ஆணையை ரத்து செய்து, குறிப்பிட்ட இடத்திலேயே நடத்திக் கொள்ளலாம் - சில நிபந் தனைகளுக்கு உட்பட்டு என்று ஞாயிறு பிற்பகல் 1 மணியளவில் தீர்ப்புத் தந்தனர்.

    ஆய்வரங்கத்திற்கு இச்செய்தி 1.30 மணிக்குக் கிடைத்தது - மாநாடு ஏற்கெனவே அறிவித்த இடத்திலே (ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்) முன்பே விளம்பரப்படுத்திய படியே கட்டுப்பாட்டுடன் நடைபெறும் என்று மீண்டும் அறிவிக்கப்பட்டது.

    அதுபோலவே கலந்து கொண்ட மக்கள் வெள்ளம் கட்டுப்பாடு காத்தது! கண்ணியம் பொங்க கடமையாற்றி வரலாறு படைத்தது. ஆனால் வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரிய செய்தி என்னவென்றால், அவ்வளவு பெரும் மக்கள் கூடும் இடத்தில் காவல்துறையினர் தலைகளை தேடித் தேடிப் பார்க்க வேண்டியிருந்தது. (அதுவும் ஒரு வகையில் இந்த மக்கள் கூட்டத்தின் கட்டுப்பாட்டிற்கு காவல்துறையினர் தேவையில்லை என்று நினைத்து கடமையாற்றத் தவறினர் போலும்!)

    வெளிநாடுகளிலிருந்து பல பிரமுகர்கள் (VVIP) வந்து செல்லும் ஒரு மாபெரும் சர்வதேச ரீதியான மாநாட்டிற்கு காவலர் தம் கடமையைச் செய்ய வேண்டியது இன்றிய மையாதது அல்லவா?

    இராஜாவை மிஞ்சும் இராஜ விசுவாசிகள்

    இப்படியா இராஜாவை மிஞ்சும் இராஜவிசுவா சத்தைக் காட்டுவது? வழக்கு நீதிமன்றங்களில் நீண்டு கொண்டே இருக்கும்போதுகூட காவல்துறை மாநாட்டு விளம்பரப் பேனர்களையெல்லாம் அகற்றும் பணிகளை வேகமாகச் செய்ததே, ஒரு வகையில் நீதிமன்ற அவ மதிப்புக் குற்றம் ஆகாதா எனும் நெறியைக்கூட எண்ணிடவில்லை அவர்கள்!

    ஆனால் இவைதான் மாநாட்டிற்கு நல்ல பரபரப்பு விளம்பரம் தேடித் தந்தன!

    ReplyDelete
  6. வழமைக்கு மாறாக மாநாட்டிற்கு வர வேண்டாம்; அங்கிருந்தே கலைஞர் தொலைக்காட்சியில் நேரடி அலை வரிசைக் காட்சியைக் காணுங்கள் என்று மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் இயக்கத் தோழர்களுக்கு கூறி, மக்களின் வருகையை கட்டுப்படுத்தியாக வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இது ஒரு புதுமை அல்லவா? மாநாடு ஞாயிறு மாலை 5 மணிக்குத் தொடங்கி, இரவு 10 மணி வரை மாநாட்டுத் தலைவர் கலைஞர் நிறைவுரையுடன் முடிந்தது. ஒரு சிறு சலசலப்பு, கூச்சல், குழப்பம் ஏதும் நடக்கவில்லை (இது சில பார்ப்பன ஊடகங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருக்கக் கூடும்).

    இரு நன்மைகள்!

    தமிழக அரசு சார்பில் மாநாட்டுக்குத் தடை விதித்தது இரு நன்மைகளை ஏற்படுத்தின.

    1. இந்த மாநாடு சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆவணப் பதிவுகளில் விரிவாக இடம் பெற்ற அருமையான வாய்ப்பை அதிமுக அரசு ஏற்படுத்தியது.
    (உச்சநீதிமன்றத்திற்குச் சென்று மாநாட்டைத் தடை செய்ய மேற்கொண்ட முயற்சிக்கும் மாநாட்டின் சார்பில் நமது நன்றி!)

    2. ஈழத் தமிழர்களுக்காக, கண்ணீர் விடுபவர்களில் ஒப்பனைக் கண்ணீர் - நீலிக் கண்ணீர் எது? உண்மைக் கண்ணீர் எது? என்பது உலகத்தாருக்குப் புரிய வைத்து விட்டது. தெளிவுள்ளோர் தெரிந்து கொண்டு விடுவதற்கு அரிய வாய்ப்பு இதன் மூலம் கிடைத்தது! வந்த அத்துணை உலக நாடுகளின் பிரதிநிதிகள் தேசியக் கட்சிகளான தேசீய மாநாட்டுக் கட்சி (N.C) காஷ்மீர் பரூக் அப்துல்லா தலைமையில் இயங்கும் கட்சி, சரத் பவாரின் தேசீயவாதக் கட்சி (N.C.P.) (மகாராஷ் டிராவினை தலைமையிடமாகக் கொண்டது). இராம் விலாஸ் பஸ்வான் அவர்களின் லோக் ஜனசக்தி கட்சி (பீகார்) இப்படி பலரும், வெளிநாட்டினரும் இலங்கை அரசின் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாது கலந்து கொண்ட சிங்கள இனத் தலைவர் மனிதநேயர் நவ சம சமாஜ கட்சி எம்.பி. விக்ரம பாஹு கருண ரத்னே, ஆம்நெஸ்டி இண்டர்நேஷனல் சார்பில் கலந்துகொண்ட ஆனந்த் குருசாமி, நைஜிரியா, துருக்கி, மொராக்கோ, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா முதலிய பற்பல நாடுகளின் பேராளர்களுக்கு நமது ஆழ்ந்த நன்றி உரியதாகும். 89 வயதிலும்கூட தொடர் தொல்லைகளைத் தாங்கி, இறுதி வெற்றிதான் முக்கியம் எனும் தன்மையில் மனம் தளராது முயற்சித்து வெற்றி கண்ட மானமிகு கலைஞர் அவர்களுக்கு நன்றி! நன்றி!!

    ஆக்கபூர்வமான தீர்மானங்கள் உலக அரங்கில் அய்.நா. முதல் பற்பல நாடுகள், ஜன சமூக அமைப்புகள், இந்திய அரசின் செயல்பாட்டை விரைவுபடுத்திடும் பணிகளை எல்லாம் இனி செய்ய வேண்டும்.

    ஒத்த கருத்துள்ள அனைவரும் ஒன்றுபட்டு நிற்காவிட்டாலும்கூட தனித் தலைமையோடும், ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்குப் பாடுபட உறுதியோடு முயற்சிக்க வேண்டும். வீண் விமர்சனங்களில் பொது எதிரியான ஹிட்லரிசத்தின் தர்பாரில் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர்கள் முள்வேலிக்குள்ளாகியுள்ளவர்களை மீட்டெ டுத்து மான வாழ்வு, உரிமை வாழ்வு வாழ வகை செய்ய வாரீர்! வாரீர்!!

    அனைவருக்கும் நன்றி! நன்றி!!

    சென்னை
    14.8.2012

    கி.வீரமணி
    தலைவர்
    திராவிடர் கழகம்

    ReplyDelete
  7. செய்தி: 50 ஆயிரம் பேர் ராயப்பேட்டையில் திரண்டிருந்தால் சென்னை போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஸ்தம்பித்து இருக் கும். - தினமலர்

    சிந்தனை: மயிலை கபாலீஸ்வரர் கோயில் அறுபத்துமூவர் விழா, தேர் ஓட்டம் நடக்கும்பொழுது பக்தர்கள் கூடும் கூட்டத் தால் சென்னை சிக்கி என்னவாகி இருக்குமோ?

    ReplyDelete
  8. செய்தி: டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் மீது மத்திய அரசு நட வடிக்கை எடுக்காவிட்டால் கருணாநிதி என்ன செய்யப் போகிறார்? - தோழர் தா. பாண்டியன்

    சிந்தனை: பரவா யில்லை தீர்மானங்கள்மீது குறை சொல்ல முடிய வில்லை. அதுவரை மாநாட்டுக்கு வெற்றிதான்; அகில இந்தியக் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும்கூட இந்திய அரசுக்கு அழுத் தம் கொடுக்க செய்ய தோழர் தா.பா. முன்வரு வாரா என்று தெரிய வில்லை.

    ReplyDelete
  9. செய்தி: மனிதக் கழிவு களை மனிதனே அகற்றும் முறையை ஒழிக்க கடும் விதிமுறைகளுடன் கூடிய சட்டம் வருகிறது. - முகுல் வாஸ்னிக் மத்திய சமூகநீதித்துறை அமைச்சர்

    சிந்தனை: இது மாதிரி தொழில்களைப் பார்ப் பனர்கள் செய்வதாக இருந் திருந்தால், சட்டம் எப்பொ ழுதோ வந்திருக்காதா!

    ReplyDelete
  10. செய்தி: பாகிஸ் தானில் துன்புறும் இந் துக்கள் இந்தியாவுக்குள் வருவதற்காக எல்லைப் பகுதிகளை இந்தியா திறந்து விட வேண்டும். - பா.ஜ.க. எம்.பி.க்கள்

    சிந்தனை: பாபர் மசூதி இடிக்கப்பட்ட பொழுதும் குஜராத்தில் சிறுபான்மை மக்கள் வேட்டையாடப்பட்ட பொழுதும் இந்தப் புத்தி எங்கே போச்சோ?

    ReplyDelete
  11. செய்தி: இன்றைய நவீன உலகிற்கு ஏற்றாற் போல அறிவியல் தொழில் நுட்ப முறையில் வேதங்கள் பதிவு செய்யப்பட்டுப் பாது காக்கப்பட வேண்டும். - சிருங்கேரி சங்கராச்சாரியார்

    சிந்தனை: மிலேச் சர்கள் கண்டுபிடித்த நவீனக் கருவிகளைக் கொண்டு வேதங்களைப் பாதுகாப்பது ஆகம விதி களுக்கு உகந்தது தானா? அப்படியே வேதங்கள் பாதுகாக்கப்படுவது எதற் காக? பிராமணன் - சூத்திரன் பேதங்கள் பாதுகாக்கப்படத்தானே!

    சும்மா ஆடுமா அவா ளின் குடுமி? 14-8-2012

    ReplyDelete
  12. இந்தியா கொடுக்க வேண்டிய அழுத்தம்

    டெசோ சார்பில் சென்னையில் நடத்தப்பெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பதினான்கு தீர்மானங்களும் காலத்தாற் நிறைவேற்றப்பட்டவை - முத்தாய்ப் பானவை!

    ஈழத் தமிழர் வரலாற்று ஓட்டத்தில் டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் அடிக்கடி மேற்கோள் காட்டப்படத் தகுந்தவையாகும்.

    முதல் இரண்டு தீர்மானங்களும், ஈழத்தில் தமிழர்கள் படுகொலை (Genocide) செய்யப் படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்ததாகும். அங்கே இனப்படுகொலை நடந்தது என்பதை அய்.நா.வால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட குழு அறிக்கை கொடுத்தாகிவிட்டது.

    அதனடிப்படையில் அய்.நா.வின் மனித உரிமைக் குழுவில் பெரும்பாலான நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எதுவும் இல்லை. (ஜெனீவாவில் நடக்க இருந்த மனித உரிமைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழ் ஆர்வலர்கள் இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்த அடியாட்களால் தாக்கப்பட்டனர் என்பது எத்தகைய கேவலம்!)

    இத்தகு சூழ்நிலையில்தான் டெசோ சார்பில் கூட்டப்பட்ட மாநாட்டில் ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசு நடவடிக்கைகளை உறுதியுடன் மேற்கொள்கிறதா என்பதைக் கண்காணிப்பதற்கு அய்.நா.வின் மனித உரிமை ஆணையம் ஒரு மேற்பார்வைக் குழுவை நியமித்திட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    ஜெனீவாவில் மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு அளித்துள்ள நாடுகளுக்கு அடிப்படையான கடமை உணர்ச்சி ஒன்று இருக்கிறது. அத்தீர்மானம் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக வற்றிப் போய்விடாமல், உயிர்த் துடிப்புடன் செயல்படுத்தப்படுவதற்கான முயற்சிகளை உந்துதலைக் கொடுக்க வேண்டாமா? ஜெனீவா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த இந்தியாவுக்கு இதில் கூடுதல் பொறுப்பு இருக்கவில்லையா?
    இந்தியாவுக்கு இருக்கும் கடமையினை டெசோ மாநாட்டுத் தீர்மானம் நன்றாக வலியுறுத்தியுள்ளது.

    இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்திய போருக்குப் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் அங்கு நடைபெற்றுள்ள மறுவாழ்வுத் திட்டங்களைப் பார்வையிட இந்தியாவின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் (பா.ஜ.க.) தலைமையில் 12 பேர் கொண்ட குழு அதிபர் ராஜபக்சே உட்பட பலரையும் சந்தித்தது.

    தமிழர்களுக்கு ஓரளவுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்க வழிவகுக்கும் 13 ஆவது சாசன ஒப்பந்தம், 1987 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் பற்றியெல்லாம் பேசப்பட்டதாகவும், அவற்றை நிறைவேற்ற இலங்கை அதிபர் ராஜபக்சே ஒப்புக் கொண்டதாகவும் குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார். ஆனால் அவ்வாறு தாம் உறுதியளித்ததாக இந்தியக் குழுவிடம் கூறவேயில்லை என்று கூறிவிட்டாரே அந்தச் சத்தியப் புத்திரர் ராஜபக்சே!

    இந்தியாவின் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் தலைமையில் அந்தக் குழு சென்றிருந் தாலும் அது இந்திய அரசாங்கத்தின் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டதுதான். அந்தக் குழுவையே அவமதிக்கும் வகையில் இப்படி அந்நாட்டு அதிபர் நடந்து கொண்டிருக்கிறாரே - இது குறித்துக் கூட இந்திய அரசு விளக்கம் கேட்டிருக்க வேண்டாமா?

    சர்வதேச நாடுகளின் அழுத்தங்களைக் கூட அலட்சியப்படுத்தும் போக்கில் நடந்து கொண்டு வருகிற இலங்கை இனவாத பாசிச அரசை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து, உரிய தண்டனையை அளிக்காவிட்டால், உலகின் பல பகுதிகளிலும் பல ராஜபக்சேக்கள் தோன்றுவது தவிர்க்கப்பட முடியாததாகும்.

    தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களுக்கு ஆதரவாக வெள்ளை அரசுக்குப் பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வரவேண்டும் என்று அய்.நா.வில் தீர்மானத்தை முன்மொழிந்த இந்திய அரசு, நமது தொப்புள் கொடி உறவு உள்ள ஈழத் தமிழர்கள் விடயத்தில் மட்டும் ஏன் அது போன்ற முயற்சியில் ஈடுபடக்கூடாது? டெசோ மாநாட்டில் இந்த அழுத்தம் கலந்த உணர்வு தலை தூக்கி நின்றது என்பது சுட்டிக் காட்டத் தகுந்ததாகும்.14-8-2012

    ReplyDelete
  13. டவுட் தனபாலு

    லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் : இலங்கைத் தமிழர்கள் பிரச்னையை, வட மாநிலத்தவர்கள் அறிந்துகொள்ளவே இல்லை. ஈழத்தமிழர் என்றால் விடுதலைப் புலிகள்; பயங்கரவாதிகள் என்றே கருதி வருகின்றனர்.

    எனவே, ஈழத் தமிழர்களின் உண்மை நிலையை விளக்க, வடமாநிலம் முழுவதும் கூட்டங்களை டெசோ அமைப்பு நடத்த வேண்டும்.

    டவுன் தனபாலு: சுத்தம்...! உள்ளூர் ராயப்பேட்டையில, ஒரு மாநாட்டை நடத்தி முடிக்கிறதுக்குள்ள தி.மு.க.வினருக்கு நாக்கு தள்ளி போயிடுச்சு... இதுல, வடமாநிலங்களுக்கும் வந்து, உங்க வீரத்தைக் காட்டுங்க கைப்புள்ள...ன்னு, வெத்தலை, பாக்கு வைக்குறீங்களே...!

    தினமலர்: 14.8.2012

    யாருக்கு நாக்குத் தள்ளிப் போச்சு என்பது ஊருக்கும், உலகுக்கும் தெரிந்த விஷயம்! என்னென்ன ஜகதலப்பிரதாபம் எல்லாம் செய்து பார்த்தும் கடைசியில் மூக்குடைபட்டு பார்ப்பனக் கூட்டத்தின் வயிறு வெடிச்சுப் போச்சே - என்ன பதில்?

    ReplyDelete
  14. டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் திருப்தியளிக்கின்றன இலங்கைச் சேர்ந்த விக்ரமபாகு கருணாரத்ன

    சென்னை, ஆக. 14-சென்னையில் நடந்த டெசோ மாநாட்டின் தீர்மானம் திருப்தி அளிப்பதாக இலங்கையை சேர்ந்த நவ சம சமாஜ கட்சி தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

    இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி:

    இலங்கையில் ராஜபக்சே அரசு, ஈழ தமிழர்களிடம் உள்ள நிலத்தை பறித்து சிங்களருக்கு கொடுப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு எங்கள் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இலங்கை அரசு, நிலத்தை சிங்களர்களுக்கும் கொடுக்காமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்குகிறது.

    இதனால் ஈழத் தமிழர்களின் உரிமைகள், இடங்கள் பறிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மறைமுக ஆதரவை இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கைக்கு கொடுத்து வருகின்றன. இந்தியா விற்கும் சீனாவிற்கும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற ஜி 20 உறுப்பு நாடுகள் கூட்டாக ஒப்பந்த அடிப்படையில் இலங்கைக்கு ஆதரவாக செயல்படுகின்றன.

    இலங்கையில் நடந்த போர் தொடர்பாக விசாரணை நடத்த போரிலிருந்து பாடம் கற்றல் மற்றும் மறுவாழ்விற்கான ஆணையம் (எல்எல் ஆர்சி) அமைக்கப்பட்டது. இதில் உண்மையான தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த ஆணையத்தின் மூலம் தீர்விற்கான தொடக்கத்தை ஏற்படுத்த முடியும்.

    சென்னையில் திமுக சார்பில் நடந்த டெசோ மாநாட்டில் நான் பங்கேற்க பல தடைகள் வந்தன. தடைகளை மீறி மாநாட்டில் பங்கேற்றேன். மாநாட்டில் பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதுடன் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் திருப்திகரமாக இருந்தது. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் இன்றும் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இங்கு நடப்பது மக்களாட்சியல்ல. ராணுவ ஆட்சி. இதனால் தமிழர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இலங்கை அரசு பொருளாதாரத்தில் வீழ்ச்சிய டைந்துள்ளது. இன்டர்ஷேனல் கண்காணிப்பு நிதி ஆணையம் மற்றும் உலக வங்கியும் தான் அதை காப்பாற்றி வருகின்றன. பொருளாதார வீழ்ச்சியால் சிங்களர்களும் பாதிக்கப்பட் டுள்ளனர். இன்னும் தனி ஈழம் தொடர்பாக தமிழ் மக்களிடையே போராட் டம் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    ReplyDelete
  15. ஈழத்தமிழர்கள் தியாகம் செய்தது போரிலே ஈழத்தமிழர்களுக்காக நாமும் தியாகம் செய்ய வேண்டும் - இனமானப் பேராசிரியர் உரை



    சென்னை, ஆக. 14 - ஈழத்துத் தமிழனுடைய தியாகம் மட்டும் தியாகமாகக் கருதி விட்டு விடாமல் நாமும் தியாகம் செய்வோம் என்று குறிப்பிட்டார் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன்.

    12.8.2012 ஞாயிறு மாலை சென்னையில் டெசோ சார்பில் நடத்தப்பட்ட ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் உரை யாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

    சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட் டில் தி.மு.கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

    இந்த ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு தலைப்பிலேயே ஒரு விளக்கம் பெற்ற மாநாடாக; ஈழத் தமிழர் வாழ்வுரிமையே பாதிக்கப் படுகின்ற ஒரு நிலை, நடமாட முடியாத ஒரு நிலை, குடும்பம் நடத்த முடியாத ஒரு நிலை, தொழில் நடத்த முடியாத ஒரு நிலை, மூச்சுக் காற்று போய் வருவதுகூட சந்தேகமாக இருக்கக்கூடிய அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிற ஒரு நிலை.

    இந்த நிலையில் நல்ல வேளையாக நமக்கு ஒரு நல்ல வாய்ப்பாக நாம் இந்த பிரச்சினையை எடுத்து வாதாடி நியாயத்தைப் பெற முடியாவிட்டாலும் கூட அங்கே நடக்கிற அக்கிரமத்தை தடுக்க முடியும் என்று நம்பக்கூடிய அளவிற்கு ஒரு நிலை அய்க்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமை ஆணையம் நிறைவேற்றிய தீர்மானத்தால் (ஜெனிவா தீர்மானம்) நமக்கு வாய்த்தது.

    அந்த தீர்மானத்தை இந்திய அரசு மனதார ஆதரித்து வெற்றி பெறச் செய்யவேண்டும். இந்தியா அந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டவர் நம்முடைய கலைஞர் அவர்கள். இந்திய அரசு அந்த அடிப்படையில் தான் தீர்மானத்தை ஆதரித்தது. நமக்கு முதன் முதலாக ஈழத் தமிழர்களுக்காக இந்திய அரசு இணங்கி வரச் செய்கிற காரியத்தில் நாம் பெற்ற பெரிய வெற்றி அது.

    ஈழத் தமிழர்களுக்காக பல காரியங்களை ஏற்கனவே செய்ததாக இந்திய அரசு சொன்னாலும், அதை நாம் வரவேற்கத்தக்கதாக நினைத்தாலும் அவைகள் எல்லாம் நிறைவேற்றப்படவில்லை. ஏமாற்றப்பட்டுவிட்டது. சிங்கள அரசு ஈழத் தமிழர்களுக்காக கிடைக்க வேண்டிய உதவியை வழங்க முன்வரவில்லை.

    அது நம்மை வஞ்சித்துவிட்டது. அதை யெல்லாம் எடுத்துச் சொல்லி, இந்திய அரசை செயல்பட வைக்க, அவர்களுடைய கடமையை வலியுறுத்த, இந்த டெசோ மாநாடு நிச்சயமாக கலைஞருக்கு மிகப்பெரிய வலிமையாக, பலமாக அமையும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். கலைஞருடைய குரல் இந்த டெசோ மாநாட்டின் தீர்மானமாக அந்த குரல் எழுகிறபோது மத்திய அரசு அதை புறக்கணிக்க முடியாது. இங்கே பல தலைவர்கள், பன்னாட்டு பிரதிநிதிகள் பேசுகிற போது இந்திய அரசை வலியுறுத்தவேண்டும் என்று பேசினார்கள். அந்த வலியுறுத்தக்கூடிய கடமையை தொடர முடியும் என்று நான் நம்புகிறேன்.

    தமிழனுடைய உணர்வு, ஈழத் தமிழனைப் பற்றிய நம்முடைய உணர்வு- கலைஞருடைய பேச்சைப் போல், எழுத்தைப்போல் எழுச்சி உள்ளதாக இருக்கிறது. ஆனால் ஈழத் தமிழனுடைய நிலை, உடல்நிலையோ எழுந்து நிற்க முடியாதவனாக, தூக்கிவிட வேண்டியவனாக, கை கொடுக்கப்பட வேண்டியவனாக, காப்பாற்றப்பட வேண்டியவனாக ஆகியிருக்கிறான்.

    நான்கூட 30 ஆண்டுகளுக்கு முன்பாக பேசுகிற போது - அறிஞர் அண்ணா தலைமையிலே இந்த இயக்கம் இருக்கிறபோது திராவிட நாடு பிரிவினைக்காக பேசுகிறபோது எவ்வளவோ வாதாடியிருக்கிறேன். பல்கலைக் கழகத்திலேயே வாதாடியிருக்கிறேன். நம்முடைய மாநாடுகளிலே கூட பேசியிருக்கிறேன். ஆனால் இன்றைக்கு அந்தப் பேச்சை என்னால் பேச முடியாது. பேசுவதற்கு அவசியமில்லை.

    அந்தக் காரணங் கள்கூட இருக் கின்றன. அந்தக் காரணங்களைத் தனித் தனியாகதான் எடுத்து வைக்க முடியுமே தவிர நாங்கள் எல்லாம் திராவிடர்கள். தந்தை பெரியார் வழி வந்தவர்கள். அண்ணாவால் வளர்க்கப்பட்டவர்கள். எங்களு டைய வீரம் - சேரன் செங்குட்டுவனைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். எங்களுடைய தியாகம் - தாளமுத்து நடராசனைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று இன்றைக்கு நான் பேசினால் இந்த நேரத்தில் இந்தப் பேச்சு தேவைதானா என்றுதான் எவரும் எண்ணு வார்கள். தமிழனை உயிரோடு வதைப்பதை தடுக்க வேண்டும்


    ReplyDelete
  16. எனவே, நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, ஈழத் தமிழர்களை முதலில் பாதுகாக்க வேண்டும். அங்கே இருக்கிற தமிழனை உயிரோடு வதைக்காமல் தடுக்க வேண்டும். குடியிருப்பவனை குடியிருக்கும் இடத்தை விட்டு அகற்றப்படாமல் தடுக்கப்பட வேண்டும். நம்முடைய தமிழன் வீடுகளையே சிங்களன் ஆக்கிரமிக்கிறான் என்றால் அதற்குமேல் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. இன்னும் சொல்லப் போனால் பல்லாயிரம் விதவைகள் ஈழத்திலே வேதனைப்படுகிறார் கள். போரின் விளை வாக 90 ஆயிரம் தமிழ் விதவைகள் இருக்கிறார்கள்.

    அவர்கள் வாழ்வதற்கு என்ன வழி? இங்கே பேசிய நண்பர் ஒருவர்கூட அதை சொன்னார். அவர்கள் எல்லாம் விபச்சாரத்திலே கட்டாயமாக ஈடுபடுத்தக் கூடிய அளவிற்கு அங்கே ஒரு நிலை என்று சொன்னார். நான் இன்னும்கூட கேள்விப்பட்டேன். தமிழ் விந்துக்கு பிறக்கின்றவர்கள் இருந்தால்தானே நாளைக்கு தமிழன் என்று பேசுவான். இனி தமிழன் என்ற பிறப்பே இருக்கக்கூடாது என்கிற அந்த வன்நெஞ்சம், அந்த கல்நெஞ்சம், அந்தப் பகை, அந்தக் கொடுமை, அந்த அக்கிரமம் என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.


    ReplyDelete
  17. இந்தக் கொடுமைகளை முதலில் தடுத்து நிறுத்த வேண்டுமானால் நமக்கு அங்கே ஒரு அடிப்படை யான நியாயம் கிடைக்க வழி இருக்க வேண்டும். அந்த வழிக்கு அய்க்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைக் குழு நிறைவேற்றி இருக்கிற தீர்மானம். சிங்கள அரசு போரின் பேரால் தொடர்ந்து செய்த கொடுமைகள் - போர்க் களத்திலே இல்லாதவர்களுக் கெல்லாம் இழைத்த கொடுமைகள் - குடியேற்று வதாக சொல்லிக் கொண்டு போய் அழிக்கப்பட்ட கொடுமைகள் - தமிழனுடைய எண்ணிக்கையை ஆண்டுக்காண்டு குறைக்க வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட கொடுமைகள் - இந்தக் கொடுமை களை நிறுத்தத்தான் உலக நாடுகளுடைய ஆதரவு எல்லாம் வேண்டும்.

    அய்க்கிய நாடுகள் தந்த தீர்மானத்தை வைத்து உலகத்தாரின் கவனத்தை ஈர்க்கவேண்டும். நம்முடைய பலத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குப் பின்னர் நியாயங்களை தேடுகிறபோது, நியாயத்தை நிலை நாட்டுகிற நிலை வரும்போது அதைத் தொடர்ந்து ஈழத்து மக்களுடைய முழு உரிமைக்காக, முழு தகுதிக்காக, குடியுரிமை என்பது வெறும் வாழ்வுரிமையாக இல்லாமல் உண்மையான குடியுரிமையாக ஆவதற் காக அடுத்த கட்ட நடவடிக்கை யாக - நம்முடைய கலைஞர் அவர்களே சொன்னது போல - என்னு டைய வாழ்நாளுடைய இறுதிக் கடமை யாக நான் கருதக்கூடியது.

    நான் மறைவதற்கு முன்னால் நிறைவேற்ற வேண்டிய கடமை என்று கருதுவது என்று அவர் சொன்னது போல - அந்தக் கடமையை நிறை வேற்றுவதற்கு ஒரு காலம் வரலாம்! அது வருகிற வரைக் கும் பொறுமையும் வேண்டும்! அது வருகிற வரையில் நாம் தொடர்ந்து போராட வேண்டும்! ஈழத்து தமிழனு டைய தியாகம் மட்டும் தியாகமாக கருதிவிட்டுவிடாமல் அவர் களுக்காக நாமும் தியாகம் செய்வோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நாம் தயாராக வேண்டும்!

    இலங்கை தமிழர்களுக்கும் நமக்கும் தொப்புள் கொடி உறவு

    என்னுடைய அன்புக்குரிய முரசொலிமாறன் அவர்கள் நமக்கும் இலங்கையில் உள்ள தமிழர்களுக் கும் இடையிலே உள்ள உறவு தொப்புள்கொடி உறவு என்றார். இதைவிட அழுத்தமாக நெருக்கமாக இரத்த கலப்போடு நாம் மறக்கமுடியாத ஒரு உறவு வேறு இருக்கமுடியாது. தொப்புள்கொடி உறவை விட உயர்ந்த உறவு ஒன்று வேறு எதுவும் இருக்கமுடியாது.

    அதை மறப்பவன் மனிதனே அல்ல. இந்த தொப்புள் கொடி உறவு திராவிட இன உறவு, தமிழ் உறவு, வரலாற்று உணர்வு சங்க காலத்திற்கு முன்னாலே இருந்த ஈழத்து உணர்வு, தாளகட்டு ஆட்டம், கடாரத்து பொருள்கள் - இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு மியான் மர் என்று அழைக்கப்படுகின்ற அந்த கடாரத்தி லிருந்து வந்த பொருள்கள் இவைகள் எல்லாம் அந்த நீண்ட காலத் தொடர்பின் மூலம் நம்மை நம்மு டைய உடன்பிறப்புகள் என்று அறியப்படு கிறார்கள்.

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு - என்று முழங்குகிற போது; நம்முடைய தமிழை உச்சரிக்கின்றவனை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதற்கு இந்த டெசோ மாநாடு வழி வகுக்குமென்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அப்படி வழி செய்வதற்கு கலைஞர் அவர்கள் ஆற்றவேண்டிய உரை மிகவும் அவசியமானது.

    நீங்கள் அனைவரும் கேட்கவேண்டிய உரையாக அந்த உரை இருப்ப தால் நான் அந்த நேரத்தை எடுத்துக் கொள் ளாமல் டெசோ மாநாடு வெற்றி பெற்றிருக்கிறது. அதுவும் தமிழகத்தினுடைய ஆளுங்கட்சியான, ஆதரவோடு(?) (சிரிப்பு) வெற்றி பெற்றிருக்கிறது.

    -இவ்வாறு பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார்.

    ReplyDelete
  18. யார் இந்த சிருங்கேரி சங்கராச்சாரியார்கள்?

    இந்தியாவின் தென்கோடியில் கருநாடக மாநிலத்தின் சிக்மகளூர் மாவட்டத்தில் சிருங்கேரி சங்கராச்சாரியார் மடம் ஒன்றுள்ளது. ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடங்களுள் இதுவும் ஒன்று. (காஞ்சி மடம் இந்தப் பட்டியலில் வராது.)

    இந்தச் சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியார் ஸ்ரீபாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகளாம். சென்னையில் டேரா போட்டுள்ளார். (மயிலாப்பூர் சுதர்மா இல்லத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுசரித்துக் கொண்டு வழக்கம் போல இருக்காளாம்.)

    19.8.2012 கல்கி அட்டைப்படம் போட்டு ஆராதித்து சாங்கோபாங்கமாகப் பேட்டி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

    தமது குருநாதரான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தர் பற்றி சும்மா விளாசித் தள்ளி இருக்கிறார். அந்தக்குருநாதர் எப்படிப்பவட்டவர் தெரியுமா? ‘The Hindu Ideal’ எனும் நூலை சிருங்கேரி மடம் வெளியிட்டுள்ளது. அதன் 23 ஆம் பக்கம் இவ்வாறு கூறுகிறது:

    ‘The Panchama asked to be at a distance because of the inborn impurity of his body. Any amount of washing of the body with the best available soaps and any clothing and decoration of it in the best uptodate style cannot remove from it its inlaid flith that has originated from the deep rooted contamination of filthy inheredity. ’

    என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

    உலகத்தில் உள்ள எந்த உயர்ந்த சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினாலும், நவீன ஆடை அணிமணிகளால் அலங்கரித்தாலும் கூட பஞ்சமர்கள் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது படிந்த அந்தத் தீட்டு - அழுக்கு பரம்பரைப் பரம்பரையாக ஆழமாக வேர் பிடித்து அவர்களின் பிறப்பிலேயே தொடர்ந்து வந்துள்ளதால் இதனை நீக்கவே முடியாது என்று சொன்னவர்தான் - இல்லை, இல்லை - திருவாய் மலர்ந்தருளியவர்தான் இவரின் குருநாதர்.

    இந்த மனிதகுல விரோதிகள் இவர்கள்! சகமனிதனைப் பிறப்பின் அடிப்படையில் வெறுக்கக் கூடிய மனிதநேயமற்ற வகையில் மனித உருவில் நடமாடும் பேர்வழிகள்தான் ஆச்சாரியார்களாம் - ஜகத்குருக்களாம்- ஸ்ரீலஸ்ரீகளாம்.

    நியாயமாக தீண்டாமையைப் பச்சையாகப் பேசும் இந்த வர்ணாசிரம விரியன்கள், பிணையில் வெளியில் வர முடியாத குற்றத்தின் கீழ் வெஞ்சிறையில் தள்ளப்பட வேண்டியவர்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் துணிச்சலாக அதனைச் செய்யத்தானே வேண்டும்? நம் அரசுகளுக்கு ஏது அந்த முதுகெலும்பு?

    குறிப்பு: காஞ்சி சங்கர மடத்துக்கும், சிருங்கேரி சங்கர மடத்துக்கும் ஆகாது - அந்த அளவுக்கு ஜென்மப் பகை என்பது வேறு விஷயம்! 15-8-2012

    ReplyDelete
  19. செய்தியும் சிந்தனையும்

    சமபந்தி!

    செய்தி: ஆகஸ்டு 15 சுதந்திர நாளையொட்டி கோயில்களில் சம்பந்தி விருந்து.

    சிந்தனை: நாள் தோறும் உணவு விடுதி களிலும் அதுதான் நடந்து கொண்டு வருகிறது. கோயிலுக்குள் இன்னும் சில இடங்களில் தாழ்த்தப் பட்டோர் நுழைய முடிய வில்லை; கோயில் கரு வறைக்குள் ஒரு ஜாதி மட்டும் தான் நுழைய முடியும். அங்கெல்லாம் சம்பந்தி நடப்பது எப்பொழுது?

    16-8-2012

    ReplyDelete
  20. எதிரியைப் பார்!

    சென்னையில் டெசோ சார்பில் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடுபற்றி இன எதிரிகள் இல்லாததும் பொல்லாததுமான விஷமச் செய்திகளைப் பரப்பும் வேலையில் மும்முரமாக இறங்கினர்.

    மாநாட்டின் நோக்கம் குறித்து டெசோ தலைவர் கலைஞர் அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத் துருவில், தனியீழம் தொடர்பான தீர்மானம் மாநாட் டில் நிறைவேற்றப்படாது என்று சொன்னதுதான் தாமதம் - டெசோ என்று பெயர் வைத்துக் கொண்டு தனியீழம் கேட்கும் தீர்மானம் மாநாட்டில் இடம் பெறாது என்றால் என்ன பொருள் என்று வீராதி வீரர்கள் போலே தோளைக் குலுக்கினார்கள்.

    இதில் வேடிக்கை என்னவென்றால், டெசோவை இரண்டாவது முறை புதுப்பித்த போது தனியீழம் கேட்கும் அதன் குறிக்கோளை வரவேற்றார்களா என்றால், அதுதான் இல்லை.

    அப்பொழுதும் ஏறுமாறான விமர்சனங்களில்தான் ஈடுபட்டனர். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை மய்யப்படுத்தி அவர் எது செய்தாலும் அதனைக் கொச்சைப்படுத்துவது என்ற திசையில் எழுதி வந்தனர்.

    மாநாடு நடக்காது; தடை செய்யப்பட்டு விடும் என்றனர். அதற்கான முயற்சிகளில் பலரும் ஈடுபட்டனர் என்பதும் உண்மைதான். டெசோ அமைப்பில் பதற்றப்படாத, பக்குவமான முயற்சி களினால், எதிர்ப்பாளர்களின் முகங்களில் கரி தடவப்பட்டு, டெசோ மாநாடு வெகு சிறப்பாகவே அறிவிக்கப்பட்ட இடத்திலேயே அட்டியின்றி நடைபெற்றது.

    சில பல காரணங்களால் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த தலைவர்கள் வரவில்லை என்றாலும் உலகம் தழுவிய அளவில் பேராளர்கள் பங்கு கொண்டனர்.

    சிங்களவரான - இடதுசாரி எண்ணம் கொண்ட டாக்டர் விக்ரம பாகுகர்ண ரத்தினே அவர்களே கலந்து கொண்டு ராஜபக்சேயின் பாசிச நடவடிக்கைகளின் முகத்திரையைக் கிழித்துக் காட்டினார். மிக அருமையான தீர்மானம் 14 - ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின்மீது குறை சொல்ல முடியாத நிலையில் தினமலர் போன்ற பார்ப்பன ஊடகங்கள் சம்பிரதாயமான முறையில் மாநாடு நடைபெற்றது என்று தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொண்டுள்ளன.

    இந்த மாநாடு வெற்றியா, தோல்வியா என்னும் அளவுகோல் எங்கே இருக்கிறது தெரியுமா? நமது எதிரிகளிடத்தில் தான் இருக்கிறது.

    ஈழத்திலிருந்து மாநாட்டுக்குச் செல்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் இலங்கை அரசால் கண்காணிக்கப்படுவார்கள் என்று அச்சுறுத்தும் வகையில் இலங்கை அரசு கருத்துத் தெரிவித் திருந்தது. (அதனைக் கண்டித்துக்கூட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்).

    இலங்கை அதிபர் ராஜபக்சே டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் பற்றி தெரிவித்துள்ள கருத்தும் டெசோவின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாகும்.

    இதன் மூலம் டெசோ நடத்தும் மாநாடு இலங்கை அரசுக்கு எதிரானது என்பது வெளிப்படையாகி விட்டதா - இல்லையா?

    மாநாடு முடிந்த நிலையில்கூட இலங்கையில் உள்ள சிங்களவர் அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ன கருத்துக் கூறியுள்ளது?

    டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்திய மத்திய அரசின் கூட்டணிக் கட்சியாக தி.மு.க. இருப்பதால், மகிந்த ராஜபக்சே அரசு இந்த விவகாரத்தை சிறியதாகக் கருதக் கூடாது.

    டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள்மீது கூடுதல் கவனம் செலுத்தி நாட்டுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் அரசு செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டும். தமிழர்கள் தங்களுக்குத் தேவையான வகையில் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அய்.நா.வில் இந்தியா தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் எனக் கூறப்படுவது கிட்டத்தட்ட தனியீழத்தை உருவாக்கும் முயற்சியாகவே அதனைப் பார்க்க வேண்டும் என்று அந்த அமைப்புக் கூறியுள்ளதே!

    எதிரிகள் நம்மைச் சரியாகப் புரிந்து கொண் டுள்ளனர். ஆனால் இங்குள்ளவர்களோ டெசோ மாநாடு தோல்வி என்கின்றனர். இவர்களை எது கொண்டு சாற்றுவதோ! 16-8-2012

    ReplyDelete